இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (17) பூ நாரை
நாரை இனத்திலே பூ நாரை என ஒன்று. இதை சங்குவலை நாரை, வர்ண நாரை என்றும் அழைப்பார்கள். விஞ்ஞான
ரீதியாக இதற்களிக்கப் பட்டு உள்ள பெயர் ‘Ibis leucocephalus’ என்பதாகும். ஆங்கிலத்தில் இதனை ‘Painted stork’ என்பர்.
பூ நாரையின் பெயர்கள் எல்லாமே காரணப் பெயர்கள் தான். மஞ்சள் நிற அலகுகள், மெழுகினால் செய்தது போன்ற ஆரஞ்சு நிறத் தலை, இறக்கை களில் மயில் கழுத்தென மின்னும் கருப்புக் கோடுகள், பாலெனத் தோன்றும் வெள்ளை உடல், மார்பிலே ஒரு கருப்புப் பட்டை, இறக்கைகளின் நுனி சிறகுகளிலும், வால் சிறகுகளின் மேல் புறத்திலும் மிக சன்னமாக ஒரு ரோஜாவின் வண்ணம், சாம்பல் பூத்த ரோஜா நிறக் கால்கள் என ஒரு ஓவியன் துரிகை கொண்டு வர்ணம் தீட்டி இருப்பது போல இருப்பதால் தான் இந்தக் காரணப் பெயர்கள்.
(http://en.wikipedia.org/wiki/Image:Painted_Stork.jpg)
பூ நாரை வெளி நாட்டிலிருந்து நம் நாட்டுக்கு வலசை வரும் பறவை அல்ல. உள் நாட்டிலேயே வாழும் பறவை தான். இவை செப்டம்பர் முதல் ஜனவரி வரையிலான நாட்களில் இனப் பெருக்கம் செய்யும். இனப் பெருக்கம் செய்யும் இடங்களில் மற்ற நாட்களில் காணப் படுவதில்லை என்பதால் பலர் இதனையும் வலசை வரும் பறவைகளின் பட்டியலில் சேர்த்து விடுகின்றனர்.
பூ நாரைகள் சாலையோர மரங்களிலோ, கிராம வீடுகள் நடுவே உள்ள புளிய மரம் போன்ற மரங்களிலோ கூட்டமாக பல ஜோடி பறவைகள் கூடுகள் கட்டி, முட்டை இட்டுக் குஞ்சு பொரித்து வாழும். ஆனால் சாதாரணமாக மக்கள் இவற்றைத் துன்புறுத்துவது இல்லை. காரணம் தெரிய வேண்டுமா?
முன்னாள் முதல்வர் ப்ரகாசம் அவர்கள் ஊரான ஆந்திர மாநிலம் டங்குடூரு அருகில் உள்ள ஜருகுமல்லி என்ற கிராமத்தின் தலைவருடன் 1976ல் தெலுங்கில் நடந்த ஒரு சம்பாஷணையின் தமிழாக்கத்தைப் படியுங்கள்.
“ஏன் சார், நாம பேசறது கூடக் காதுலே விழாதபடி இப்படி கா...கா... ன்னு கூச்சல் போட்டுகிட்டு இருக்குதுங்களே இந்தப் பறவைங்க. ஒங்களுக்கெல்லாம் தொந்திரவா இல்லயா? ஊர் ஜனங்க இதுங்களெ வெரட்டறது இல்லயா?”
“தொந்திரவு என்ன சார் தொந்திரவு? இந்தப் பறவைங்க எங்க ஊருக்கு வந்திச்சுன்னா இந்த வருஷம் மழை நல்ல பேஞ்சு ஏரி குளமெல்லாம் நெறெஞ்சு வெளெச்சல் அமோகமா வரும்னு தெரிஞ்சுடும். அதுங்களெ நாங்க ஏன் சார் வெரட்டணும்?”
“சரி சத்தத்தெ உடுங்க. தரையெல்லாம் வெள்ளை அடிச்சாப்ளெ பறவை எச்சமும் மீன் துண்டுங்களுமா கெடக்குது. நாத்தம் வயத்தெக் கொமட்டி வாந்தியெடுக்க வருது. இது கஷ்டமா இல்லியா ஒங்களுக்கு?” (இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே என்மேல் ஒரு பறவையின் எச்சம் விழுகிறது)
“சார் இந்தப் பறவைங்க வயல்கள்லெ மேஞ்சுகிட்டு இருக்கும் போது போடுற எச்சமும், இங்கெ தரெலெ கெடெக்கற எச்சமும் அறெகொறெயாக் கடிச்ச மீன் துண்டுங்களும் நல்ல ஒரமாகுது. இது மட்டுமா. அப்பொப்போ ஊர் சனங்களுக்கு கருவாடும் கெடைக்குது. எப்படிங்கிறீங்களா? பறவைங்க குஞ்சுங்களுக்கு மீனெக் கொண்டு வந்து கொட்டும்போது கொஞ்சம் கீளேயும் விளும். ஊர் செனம் ஏன் சார் இதுங்களெ வெரெட்டுவாங்க?”
இப்போது புரிகிறதா பூ நாரைகள் ஜன நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களிலும் எப்படி கூடுகள் கட்டி குடும்பம் நடத்த முடிகிறது என்று?
ஜருகுமல்லியில் பூநாரையும் அதன் பூப்பந்து போன்ற குஞ்சுகளும்
பூ நாரைகளின் கூடு குச்சிகளால் ஆன சுமார் 2 – 3 அடி விட்டமுள்ள ஒரு வட்ட வடிவமான மேடை போன்றது. நடுப் பாகம் சற்றே பள்ளமாக இருக்கும். பள்ளத்தில் இலைகள் மற்றும் காய்ந்த புல், வைக்கோல் இவை இருக்கும்.
ஒவ்வொரு முறை பெரிய பறவைகள் வந்திறங்கும் போதும், குஞ்சுகள் நகரும் போதும் சில குச்சிகள் கீழே விழுந்து விடும். ஆகவே அவற்றுக்குப் பதிலாக வேறு குச்சிகளைக் கொண்டு வந்து கூட்டினை சரி செய்ய வேண்டி வரும். இந்த ரிபேர் வேலை பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு காட்சி. எப்படி என்கிறீர்களா?
கூடு ரிபேருக்குக் குச்சி வருது
கூட்டில்குஞ்சுகள் இருக்கும் போது எப்போதும் ஒரு பறவை காவல் காத்துக் கொண்டு இருக்கும் தனது இறக்கைகளை சற்றே விரித்து குடைபோல நிழல் கொடுத்துக் கொண்டு. வெளியே சென்று இரையுடன் திரும்பும் பறவை தன் அலகிலே ஒரு குச்சியையும் கொண்டு வரும்.
குச்சி கொண்டு வந்த ப்றவை தானே ரிபேர் வேலையைத் தொடங்காது. பதிலாக உட்கார்ந்திருக்கும் பறவையிடம் கொடுக்கும் ஏதோ அரச சபையிலோ அல்லது ஜனாதிபதி வீட்டிலோ ட்யூடீ மாறும் காவலர்கள் போல. அதுவரை காவல் பணியில் ஈடுபட்டிருந்த பறவை கூட்டினை சரி செய்யும். பின்னர் இருவருமாக பாசத்துடன் அலகுளால் ஒன்றை ஒன்று மாறி மாறி தட்டிக்கொள்ளும் முத்தமிடுவது மாதிரி. குஞ்சுகள் பசியில் வாயைப் பிளந்து “கவான் கவான்” என்று கத்திக் கொண்டு இருக்கும். ஆனால் சடங்குகள் பூர்த்தியாக முடியாமல் அவை கவனிக்கப் படமாட்டா.
குஞ்சுகளுக்கு இரை ஊட்டுவதும் ஒரு காணவேண்டிய காட்சி.
இரை கொண்டு வரும் பறவை ஒரே ஒரு மீனைக் கொண்டு வராது. தொண்டை, கழுத்து மற்றும் வாய் பூராவும் மீன்கள் தான். அவற்றினை ஒவ்வொன்றாகக் கக்கி குஞ்சுகளுக்குக் கொடுக்கும். அப்போது சில மீன்கள் கூட்டிற்குள்ளேயும் சில கீழேயும் விழும். அப்படி நடக்கும்போது குஞ்சுகள் இரைக்காகக் கெஞ்சினாலும் மேலும் மீனை வயிற்றிலிருந்து வெளியே கொண்டு வராமல் “அதோ பார் அங்கே ஒன்று”, என்பது போல கூட்டில் கிடக்கும் மீனைக் காட்டும். குஞ்சுகள் தானாக அதைப் பொறுக்கித் தின்ன வில்லை என்றால் பெரிய பறவை அந்த மீனைத் தானே எடுத்துக் குஞ்சுக்குக் கொடுக்கும். ஐந்தறிவே படைத்தது என்று நாம் எண்ணும் பறவைகளுக்கும்தான் எத்தனை அறிவு!
தமிழ் நாட்டில் பூ நாரையை திருநெல்வேலி ஜில்லாவின் மூன்றடைப்பு என்ற இடத்திலும், தஞ்சை ஜில்லாவின் கோடியக்கரையிலும் காணலாம்.
இயற்கையின் எழிலைக் கண்டு ரசியுங்கள். இறைவனைக் காண்பீர்கள்.
நடராஜன் கல்பட்டு
(கருப்பு வெள்ளை படங்கள் எடுத்தது நடராஜன் கல்பட்டு)
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.