கபடி வீரர் தங்க மகள் சென்னை கார்த்திகா — முனைவர் தேமொழி பஹ்ரைன் நாட்டில் நடந்த ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2025 (Asian Youth Games 2025)இல் இந்தியாவின் இளையோர் மகளிர் கபடி அணியின் சார்பாகப் பங்கேற்ற சென்னை கார்த்திகா சிறப்பாக விளையாடி இந்தியாவிற்காகத் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இத்தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காமல், வெற்றியைப் பெற்று பதக்கத்தை வென்றுள்ளது இந்திய மகளிர் அணி. இறுதிச் சுற்றில் ஈரானை 75–21 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிகண்டது. 
தொடரின் தொடக்கமாக வங்காளதேசத்திற்கு எதிராக 46–18; தாய்லாந்து அணிக்கு எதிராக 70–23; இலங்கை அணிக்கு எதிராக 73–10; ஈரான் அணிக்கு எதிராக 59–26 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்ற இந்தியா, இந்தத் தொடரில் அதிகப் புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவும் ஈரானும் தங்கப் பதக்கத்திற்கான இறுதிப்போட்டியில் மீண்டும் விளையாடின. தொடக்கத்தில் இருந்தே இந்திய அணி அசைக்க முடியாத ஒரு முன்னிலையை வகித்து,75–21 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது இந்தியா. இந்த ஆட்டத்தில் தனித்துத் தெரியுமாறு திறன் காட்டியவர்களுள் ஒருவர் 17 வயதான சென்னை கார்த்திகா. இதுதான் கார்த்திகா உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் பெற்ற முதல் பதக்கமும் கூட. இந்தியாவுக்காக விளையாடி தங்கம் வெல்ல விரும்பிய இவரது கனவு இதனால் நிறைவேறியுள்ளது. இந்திய ஆண்கள் அணியும் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியின் இறுதிப்போட்டியில் ஈரானை வென்றதால் கபடியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளது. இது இந்திய இளைஞர்களின் விளையாட்டுத் திறன் குறித்த ஒளிமயமான எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது. 
வெற்றிபெற்ற சென்னை கார்த்திகா மிக எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து பயிற்சி பெற்று இந்தியாவிற்காகப் பதக்கம் வென்று சாதனை செய்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. சென்ற 2024 ஆம் ஆண்டின் மார்ச் மாதம், பீகார் மாநிலத்தில் நடந்த இந்தியாவிற்கான மகளிர் தேசிய 33வது சப் ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் தொடரில், சென்னை கார்த்திகா தமிழ்நாடு அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்று பீகார் அணியை 33-32 புள்ளிக் கணக்கில் அப்பொழுது வென்றார். அந்த விளையாட்டுப் போட்டியிலும் இவர் விளையாட்டுத் திறமைக்காக ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
 ----------------------------------------------------------------------------------------