
‘நேதாஜி’ என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர் ஆவார். ‘இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டும், அதற்கு ஒரே வழி போர் மட்டுமே!’ என தீர்மானித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆட்சிசெய்து கொண்டிருந்த ஆங்கிலேயரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர். நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி இராணுவ ரீதியாக போராடிய மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: ஜனவரி 23, 1897
இடம்: கட்டாக், ஒரிசா மாநிலம், இந்தியா
பணி: இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர்.
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
இந்திய விடுதலை போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் நாள் இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள கட்டாக் என்ற இடத்தில் ஜானகிநாத் போஸுக்கும், பிரபாவதி தேவிக்கும் ஒன்பதாவது மகனாக, ஒரு வங்காள இந்து குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு எட்டு சகோதரர்களும் மற்றும் ஆறு சகோதரிகளும் இருந்தனர். இவருடைய தந்தை ஒரு புகழ்பெற்ற வக்கீலாகவும், தாய் ஒரு தெய்வபக்தி மிக்கவராகவும் இருந்தனர்.
ஆரம்ப வாழ்க்கை
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், தன்னுடைய ஆரம்பக் கல்வியை, கட்டாக்கிலுள்ள “பாப்டிஸ்ட் மிஷன் ஆரம்பப் பள்ளியில்” தொடங்கினார். பின்னர், 1913ல் “கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில்” தன்னுடைய உயர் கல்வியை முடித்த அவர் படிப்பில் முதல் மாணவனாகவும் விளங்கினார். சிறுவயதிலிருந்தே விவேகானந்தர் போன்றோரின் ஆன்மீகக் கொள்கைகளை ஆர்வமுடன் படித்தும் வந்தார். 1915 ஆம் ஆண்டு “கொல்கத்தா ப்ரெசிடென்ஸி கல்லூரியில்” சேர்ந்த அவர், “சி.எஃப் ஓட்டன்” என்ற ஆசிரியர், இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை சொன்னதால், ஏற்பட்ட தகராறால் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார். பின்னர், “ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில்” சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், தன்னுடைய பெற்றோர்களின் விருப்பத்திற்காக 1919 ஆம் ஆண்டு ஐ.சி.எஸ் தேர்வுக்கு படிக்க லண்டனுக்கு சென்றார். ஐ.சி.எஸ் தேர்வில் நான்காவது மாணவனாக தேர்ச்சிப்பெற்றார். 1919ல் நடந்த ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம்’, சுபாஷ் சந்திர போசை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது எனலாம். இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல் ஆங்கில அரசு, ‘ரெஜினால்ட் டையர்’ என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், வெள்ளையர் ஆட்சி மீது சுபாஷ் சந்திர போஸிற்கு வெறுப்புணர்வை அதிகரித்தது மட்டுமல்லாமல், லண்டனில் தன்னுடைய பணியை துறந்து 1921 ஆம் ஆண்டு இந்தியா திரும்பி வரவும் செய்தது.
திருமண வாழ்க்கை
பாரத நாட்டின் விடுதலைக்காக வியன்னா, செக்கோஸ்லோவேகியா, போலந்து, ஹங்கேரி, இத்தாலி, ஜெர்மனி, ஐரோப்பா, ஆஸ்திரியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்த நேதாஜி அவர்களுக்கு, ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலி என்பவரின் அறிமுகம் கிடைத்தது, இவர்களின் சந்திப்பு பிறகு காதலாக மலர்ந்து டிசம்பர் 27, 1937 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 1942 ஆம் ஆண்டு, அணிதா போஸ் என்ற மகளும் பிறந்தார்.
சுதந்திர போராட்டத்தில் நேதாஜியின் பங்கு
‘தன்னுடைய நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை செய்ய கூடாது’ எனக் கருதி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பிய சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சி.ஆர் தாசை அரசியல் குருவாக கொண்டு போராட்டத்தில் ஈடுபடவும் தொடங்கினார். 1922 ஆம் ஆண்டு வேல்ஸ் என்னும் இளவரசரை இந்தியாவிற்கு அனுப்ப பிரிட்டன் அரசு தீர்மானித்தது. இதனால் வேல்ஸ் வருகையை எதிர்த்து போராட்டங்கள் நடத்த காங்கிரஸ் முடுவுசெய்தது. “கொல்கத்தா தொண்டர் படையின்” தலைவராக பொறுப்பேற்று, தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்திய நேதாஜி மற்றும் மேலும் பல காங்கிரஸ் தொண்டர்களையும் ஆங்கில அரசு கைது செய்தது.
சட்டசபை தேர்தல்களில் இந்தியர்கள் போட்டியிட்ட சட்டசபைகளை கைப்பற்றுவதன் மூலம் இந்தியா சுதந்திரத்தை விரைவில் பெறமுடியும் என சி.ஆர் தாஸ் மற்றும் நேருவும் கருதினர். ஆனால், காந்தியும் அவருடைய ஆதரவாளர்களும் எதிர்த்தனர். இதனால் காந்திக்கும், தாசுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு கட்சியிலிருந்து பிரிந்தார் சி.ஆர் தாஸ், அவர் “சுயாட்சிக் கட்சியை” தொடங்கியது மட்டுமல்லாமல், “சுயராஜ்ஜியா” என்ற பத்திரிக்கையையும் தொடங்கி நேதாஜி தலைமையின் கீழ் பொறுப்பையும் ஒப்படைத்தார். 1928 ஆம் ஆண்டு காந்திஜியின் தலைமையில் தொடங்கிய காங்கிரஸ் மாநாட்டில் சுயாட்சிக்கு எதிர்ப்புக் காட்டிய காந்திஜியின் முடிவை, ‘தவறு’ என நேதாஜி எதிர்த்து கூறினார். இதனால் காந்திக்கும், நேதாஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிறகு, இந்திய விடுதலைக்கு ஆதரவு தேடி ஐரோப்பாவிற்கு தன்னுடைய பயணத்தை மேற்கொண்டார்.
1938 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்தெடுக்கப்பட்ட நேதாஜி அவர்கள், “நான் தீவிரவாதி தான்! எல்லாம் கிடைக்கவேண்டும் அல்லது ஒன்றுமே தேவையில்லை என்பதுதான் எனது கொள்கை” என முழங்கினார். நேதாஜி அவர்கள், தலைவரானதும் ரவீந்திரநாத் தாகூர் அழைத்து, அவருக்குப் பாராட்டுவிழா நடத்தியதோடு மட்டுமல்லாமல், ‘நேதாஜி’ (மரியாதைக்கூரிய தலைவர் என்பது பொருள்) என்ற பட்டத்தையும் அவருக்கு வழங்கினார். 1939 ஆம் ஆண்டு, இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நேதாஜி போட்டியிட்டார். போஸின் செல்வாக்கு உயர்ந்து வருவதைக் கண்ட காந்தி, அவருக்கு எதிராக நேருவையும், ராஜேந்திர பிரசாத்தையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். ஆனால், அவர்கள் போட்டியிட மறுக்கவே “பட்டாபி சீதாராமையாவை” நிறுத்தினார். ஆனால், பட்டாபி சீதாராமையா தேர்தலில் தோற்றுவிடவே, தனக்கு பெரிய இழப்பு என்று கருதிய காந்தி, உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார். இதனால், நேதாஜி அவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து தானாகவே வெளியேறினார்.
‘பிரித்தானிய அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுகிறார்’ என கூறி 1940 ஆம் ஆண்டு, ஆங்கிலேய அரசு நேதாஜியைக் கைது செய்து சிறையில் அடைத்தது. ‘இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த மும்முரமான காலகட்டம் அது, பாரத தேசத்தை ஆண்டுகொண்டிருந்த ஆங்கில அரசை எதிர்க்க இதுதான் சரியான தருணம்’ என கருதிய நேதாஜி அவர்கள், ஜனவரி 17, 1941 ஆம் ஆண்டு மாறுவேடம் அணிந்து சிறையிலிருந்து தப்பி, பெஷாவர் வழியாக காபூல் அடைந்த அவர், பின்னர் கைபர் கணவாய் வழியாக ஆப்கானிஸ்தானை அடைந்தார். ரஷ்யா வழியாக இத்தாலிக்கு செல்லவேண்டும் என நினைத்த நேதாஜி இந்துகுஷ் கணவாய் வழியாக ரஷ்யாவை அடைந்தார். எதிர்பாராத விதமாக ஹிட்லரின் அழைப்பு வரவே, அவரின் அழைப்பை ஏற்று பின்னர் ஜெர்மனியிலுள்ள மாஸ்கோவை அடைந்த அவர், இந்திய சுதந்திரத்தை பற்றி ஹிட்லரிடம் பேசி அவருடைய உதவியை நாடினார்.
சுதந்திர இந்திய ராணுவம்
1941 ஆம் ஆண்டு “சுதந்திர இந்திய மையம்” என்ற அமைப்பைத் தொடங்கிய நேதாஜி அவர்கள், சுதந்திர இந்திய வானொலியை பெர்லினில் இருந்து தொடங்கியதோடு மட்டுமல்லாமல், இந்திய விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியும் உலகப்போர் பற்றிய செய்திகளையும் இதில் ஒளிபரப்பினார். பிறகு, ஜெர்மன் அயலுறவு துறை அமைச்சர் “வான் ரிப்பன் டிராபின்” உதவியுடன் சிங்கப்பூரில் “ராஷ் பிகாரி போஸ்” தலைமையில் தொடங்கப்பட்டு செயல்படாமல் கிடந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு தீவீர பயிற்சி அளித்து அதனை தலைமையேற்றும் நடத்தினார். 1943 ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் அரசு தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர அரசின் பிரகடனத்தை வெளியிட்டார். பிறகு, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளின் ஆதரவுடன், பர்மாவில் இருந்தபடியே “இந்திய தேசிய ராணுவப்படையை” கொண்டு 1944ல் ஆங்கிலேயரை எதிர்த்தார். ஆனால் இந்திய தேசியப் படை, பல காரணங்களால் தோல்வியைத் தழுவி பின்வாங்கியது. அப்பொழுது ஆகஸ்ட் 15, 1945 ஆம் ஆண்டு நேதாஜி வானொலி மூலம் வீரர்களுக்கு “இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்துவிடாதீர்கள்! நம்பிக்கையுடன் இருங்கள், இந்தியாவை நிரந்தரமாக அடிமைத்தலத்தில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை” “ஜெய் ஹிந்த்” என உரையாற்றினார். அன்று அவர் குறிப்பிட்ட படியே சரியாக இரண்டு ஆண்டுகளில், அதாவது ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலைப் பெற்றது.
போஸ் மரணம் குறித்த சர்ச்சை
ஆகஸ்ட் 18, 1945 ஆம் ஆண்டு நேதாஜி பயணம் செய்த விமானம் பர்மோசா தீவுக்கு அருகே விபத்துக்குள்ளாகி அவர் இறந்துவிட்டார் என ஜப்பானிய வானொலி அறிவித்தது. இந்த செய்தி, இந்திய மக்களை நிலைக்குலைய செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதை பலரும் நம்பவில்லை. இறுதிவரை அவருடைய மரணம் மர்மமாகவே புதைந்துவிட்டது.
“எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரத்தை பெற்று தருகிறேன்” என கூறிய இந்திய புரட்சிநாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பாரதநாட்டை அடிமைபடுத்தி வைத்திருந்த ஆங்கிலேயரை எதிர்த்து, இராணுவ ரீதியாக போராடிய ஈடிணையற்ற மாவீரன் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்தியாவின் முதல் ராணுவத்தை கட்டமைத்து இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறிய செய்தவர். மாபெரும் சாம்ராஜ்யத்தை அசைத்துப் பார்க்கும் அவர் முயற்சி சற்று பின்னடைவை சந்தித்தாலும், அவரது வீரம் என்றென்றும் நினைவு கூறத்தக்கது. சுதந்திர இந்தியாவிற்காக தன்னையே அற்பணித்துகொண்ட நேதாஜி அவர்கள், ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சிலும் இன்றளவும் நீங்க்கா இடம் பெற்றிருக்கிறார்.

தமிழ் புராணங்கள் மற்றும் காவியக் கதைகளைப் படித்தாலோ, அல்லது வீரம் பற்றிப் பேசினாலோ, சட்டென்று நினைவுக்கு வருபவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராகக் கருதப்படுபவர், வீரபாண்டிய கட்டபொம்மன். ‘வீரபாண்டியன்’ என்றும், ‘கட்டபொம்மன்’ என்றும், ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்றும், ‘கட்டபொம்ம நாயக்கர்’ என்றும் அழைக்கப்படும் அவர், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆறு தசாப்தங்கள் முன்பே, இந்திய மண்ணில் ஆங்கிலேயர்களைத் துணிச்சலாக எதிர்த்தவர். பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சித் தலைமை உரிமையை ஏற்க மறுத்து, தனது இறுதி மூச்சு வரை, ஆங்கிலேயர்களை அசாதாரண தைரியத்தால், வீறு கொண்டு எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீர வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: ஜனவரி 3, 1760
பிறப்பிடம்: பாஞ்சாலங்குறிச்சி, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு: அக்டோபர் 16, 1799
தொழில்: மன்னர், போராட்ட வீரர்
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
பொம்மு மற்றும் ஆதி கட்டபொம்மன் வம்சாவழியில் வந்தவர்களே ஜெகவீர கட்டபொம்மன் மற்றும் ஆறுமகத்தம்மாள் தம்பதியர். ஜெகவீர கட்டபொம்மன் திக்குவிசய கட்டபொம்மன் என்றும் அழைக்கப்பட்டார். இத்தம்பதியருக்கு மகனாக ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, 1760 ஆம் ஆண்டில் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் பிறந்தார். இவரது இயற்பெயர் ‘வீரபாண்டியன்’ என்பதாகும். கட்டபொம்மன் என்பது இவரது வம்சாவழியைக் குறிக்கும் அடைமொழியாகும்.
தனிப்பட்ட வாழ்க்கை
வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள், ஐந்து குழந்தைகளுள் ஒருவராகப் பிறந்தார். அவருக்கு ஊமைத்துரை (குமாரசாமி என்றும் அழைக்கப்பட்டார்), துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். சில ஆண்டுகளுக்குப் பின்னர், கட்டபொம்மன் அவர்கள், வீரசக்கம்மாள் என்பவரை மணமுடித்தார். அவருக்கு முப்பது வயதாகும் வரை, அவரது தந்தை ஜெகவீர கட்டபொம்மன் அவர்கள், பாளையக்காரராக இருந்து வந்ததால், தந்தைக்கு உதவியாக இருந்தார், கட்ட்டபோம்மன். பின்னர், பிப்ரவரி 2 ஆம் தேதி, 1790 மாம் ஆண்டில், 47 வது பாளையக்காரராக அரியணைப் பொறுப்பை ஏற்றார். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.
ஆங்கிலேயர்களுடன் மோதல்
வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் அரியணை பொறுப்பை ஏற்ற அதே சமயத்தில், ஆங்கிலேயர்கள் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவில் தொடங்கியது. அக்கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலியிலும் உருவானது. இதனால், திருநெல்வேலியை சுற்றியுள்ள அனைத்து பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்ட ஆங்கிலேயர்கள், அதற்காக ஆங்கிலேய நிர்வாகிகளாகக் கலெக்டர்களை நியமித்தனர். இதற்கு பெரும்பாலானப் பாளையக்காரர்கள் ஒத்து வராமல், தடைக் கற்களாக இருந்ததால், அவர்களை ஒழிக்க எண்ணிய ஆங்கிலேயர்கள், பாளையக்காரர்களில் ஒருவருக்கு மற்றவர் எதிரிகளாக்கும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டனர். ஆங்கிலேயர்களுக்கு பயந்த சிலர், அவர்களுக்கு வரி செலுத்தியதால், அவர்களுக்குப் பல சலுகைகள் தந்தனர். அவர்களை எதிர்த்தவர்களுக்கு அதிக வரி விதித்து, தண்டனையும் வழங்கினர்.
பாஞ்சாலங்குறிச்சிக்கு வருவாய் அளித்து வந்த வளமான பகுதிகளான திருவைகுண்டம், ஆழ்வார்த் திருநகர் போன்றவை ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் வந்ததால், கட்டபொம்மனால் வரி செலுத்த முடியவில்லை. கப்பம் கட்ட போதிய பணம் இல்லாததால், திருநெல்வேலியை சுற்றியுள்ள பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பி, மக்களிடமிருந்து வரி வசூல் செய்தார், கட்டபொம்மன். இதனைப் பல மக்களும், பகல் கொள்ளை என்று குற்றம் சாட்டி, கட்டபொம்மனை ‘கொள்ளையர்’ என்றெல்லாம் சாடினர். அப்போது, திருநெல்வேலிப் பகுதியின் கலெக்டராக இருந்த ஜாக்சன் துறை என்பவர் கட்டபொம்மனிடம் வரி கேட்க நேரில் சென்ற போது, கோபமடைந்த கட்டபொம்மன் அவர்கள்,
“நீர் தான் ஜாக்சன் துரை என்பவரா?
“வரி, வட்டி, திறை, கித்தி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? அங்கே கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா? மாமனா? அல்லது மச்சானா? மானங்கெட்டவனே! யாரைக் கேட்கிறாய் வரி, எவரைக் கேட்கிறாய் வட்டி”. என்று பேசிய வீர வசனம் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.
போர்
வீரபாண்டிய கட்டபொம்மனது வீரமும், விவேகமும் சுற்றியுள்ள அனைத்துப் பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவி, அவர்கள் மனதிலும் வீரவித்தை விதைத்தது. ஜாக்சன் துரைக்குப் பின்னர், லூஷிங்டன் என்பவர் கலெக்டராகப் பதவியேற்றார். ஆங்கிலேய ஆதிக்கத்தில், ஆங்கிலேயர்களுக்கு பேரிடைஞ்சலாகக் கருதப்பட்ட மைசூர் மன்னரான திப்பு சுல்தான் அவர்களை மே மாதம் 1799 ஆம் ஆண்டில், பீரங்கிகுக்குப் பலி கொடுத்தப் பின்னர், ஆங்கிலேயர்களின் இலக்குக் கட்டபொம்மனாக இருந்தது. அவருக்கும் பிரித்தானிய அரசு நிர்வாகிகளுக்கும் முரண்பாடு அதிகரித்ததால், செப்டம்பர் 1 ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில், பானர்மென் என்பவர் தலைமையில் ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சியின் மீது படையெடுத்தது. போருக்கு ஆயத்தமாகாமல் இருந்த போதிலும், கட்டபொம்மன் அவர்கள், ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கடுமையாக போராடினார். இந்தப் போரில், கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதால், கட்டபொம்மன் புதுக்கோட்டை மன்னனிடம் அடைக்கலம் கோரினார். ஆங்கிலேயர்களுக்கு பயந்து, அவரைப் புதுக்கோட்டை மன்னன் காட்டி கொடுத்ததால், ஆங்கில நிர்வாகிகள் அவரைக் கைது செய்தனர்.
இறக்கும் தருவாயில் அவர் பேசிய வீர வசனங்கள்
மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளியென்கிறான் வெள்ளையன். தன் மீது சுமத்தப்பட்ட “குற்றங்களை’ கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. மேலும் கம்பீரத்தோடு “எனது தாய்மண்ணைக் காப்பதற்காக, ஆங்கிலேயர்களுக்கு எதிராக பாளையகாரர்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்” என்று முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.
தூக்கு மேடை எயரிய போதும், அவரது பேச்சில் வீரமும், தைரியமும் நிறைந்திருந்தது. இது சுற்றி நின்ற அனைவரின் மனத்திலும் பெருமிதத்தை உருவாக்கியது. தூக்குமேடை ஏறியபோது, “இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்’ என்று கட்டபொம்மன் மனம் நொந்து கூறினார்.
இறப்பு
வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள், ஆங்கிலேயேத் தளபதி பேனர்மேன் உத்தரவின் படி, அக்டோபர் 19ஆம் தேதி, 1799ஆம் ஆண்டில் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம்
வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீரம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்திருந்ததால், அவரது வாழ்க்கை வரலாறை, பலரும் நாடகங்களாகவும், திரைப்படமாகவும் எடுத்தனர். பி.ஆர். பந்துலு அவர்கள் 1959 ஆம் ஆண்டில், சிவாஜி கணேசனை வீரபாண்டிய கட்டபொம்மனாக நடிக்க வைத்தார். இப்படத்தை சக்தி டி.கே. கிருஷ்ணசுவாமி அவர்கள் எழுதினார். சிவாஜி அவர்களின் தோற்றமும், நடையும், குரலும், கம்பீரமும், வீரபாண்டிய கட்டபொம்மனை அப்படியே பிரதிபலித்திருக்கும். வீரபாண்டிய கட்டபொம்மன் என்றால், பலருக்கும் சிவாஜி கணேசன் அவர்களே நிவைக்கு வருவார். அந்த அளவிற்கு, அந்தக் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருப்பார். சிவாஜியின் நடிப்பைப் பிறரும் விதமாக, எகிப்து பட விழாவில், அவருக்கு ‘சர்வதேச விருது’ கிடைத்தது.
மரியாதைகளும், நினைவுச்சின்னங்களும்
ஆங்கிலேயர் ஆட்சியின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடந்த உணர்வு பூர்வமான சுதந்திர போராட்டத்தில் உண்மையான முதல் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவருடைய வீரத்தையும், தியாகத்தையும் யாராலும் மறக்க முடியாது. ஆகவே அவருடைய நினைவை போற்றும் வகையில் பல நினைவுச்சின்னங்களை இந்திய அரசு எழுப்பி வருகிறது.

தீரன் சின்னமலை, பூலித்தேவன், கட்டபொம்மன், மற்றும் மருது சகோதரர்கள், போன்றவர்கள் வீரம் விளைந்த நம் தமிழ் மண்ணில் பிறந்து, நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் வாழ்வையும், வசந்தத்தையும் தியாகம் செய்த மாமனிதர்கள். ‘தீர்த்தகிரி கவுண்டர்’ என்றும், ‘தீர்த்தகிரி சர்க்கரை’ என்றும் அழைக்கப்படும் தீரன் சின்னமலை அவர்கள், வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்து, தனது இறுதி மூச்சு வரை அடிபணியாமல், அவர்களை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்தவர். பல்வேறு போர்க் கலைகளைக் கற்றுத் தேர்ந்து, துணிச்சலான போர் யுக்திகளைத் தனது படைகளுக்குக் கற்றுத் தந்து, இந்திய விடுதலைப் போரில் பங்கேற்று, ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டு, அவர்களின் கிழக்கிந்திய கம்பெனியை கருவறுக்க எண்ணினார். ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவை மீட்க மைசூர் மன்னன் திப்பு சுல்தான் உடன் இணைந்து, ஆங்கிலேயர்களை எதிர்த்த அவர் மூன்று முறை வெற்றியும் கண்டார். கொங்கு மண்ணில் பிறந்து, வீரத்திற்கு அடையாளமாக விளங்கி, தான் மறைந்தாலும் தனது புகழ் எப்போதும் நிலைத்திருக்குமாறு செய்த தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் ஆங்கிலேயர்களைத் எதிர்த்த போர்கள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: ஏப்ரல் 17, 1756
பிறப்பிடம்: மேலப்பாளையம், ஈரோடு, தமிழ்நாடு
இறப்பு: ஜூலை 31, 1805
பணி: கொங்கு தலைவர், பாளையக்காரர் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர்
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
தீரன் சின்னமலை அவர்கள், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கயம் அருகிலுள்ள மேலப்பாளையம் என்னும் ஊரில் ரத்னசாமி கவுண்டர் மற்றும் பெரியாத்தா தமபதியருக்கு மகனாக ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி, 1756 ஆம் ஆண்டில் பிறந்தார். அவருக்குப் பெற்றோரிட்ட பெயர் தீர்த்தகிரி கவுண்டர்.
ஆரம்பகால வாழ்க்கை
பழைய கோட்டைப் பட்டக்காரர்கள் புலவர்களை ஆதரித்து, அவர்கள் வாயடைக்கும் அளவிற்கு அவர்களின் கவி மற்றும் புலமைக்காக அவர்களுக்குப் பரிசில் வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். தீர்த்தகிரி கவுண்டர் அவர்கள், அவர்களின் மரபு வந்ததால், அவர் இளம்பருவத்திலே ‘தீர்த்தகிரிச் சர்க்கரை’ என்றும் அழைக்கப்பட்டார். மேலும் அவர், தனது இளம் வயதிலேயே போர்க்கலைகளான வாள்பயிற்சி, வில்பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம், தடிவரிசை, போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்து, இளம் வீரராக உருவெடுத்தார். பல தற்காப்புகலைகள் அறிந்திருந்தாலும், அவர் அக்கலைகளைத் தன் நண்பர்களுக்கும் கற்றுக் கொடுத்து, சிறந்த போர்ப்பயிற்சி அளித்து, அவரது தலைமையில் இளம்வயதிலேயே ஓர் படையைத் திரட்டினார்.
தீரன் சின்னமலை பெயர் காரணம்
தீர்த்தகிரி கவுண்டர் அவர்களின் பிறப்பிடமான கொங்கு நாடு மைசூர் மன்னர் ஆட்சியில் இருந்ததால், அந்நாட்டின் வரிப்பணம், அவரது அண்டைய நாடான சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு எடுத்துச் செல்லப்படும். ஒருநாள், தனது நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி, அவ்வரிப்பணத்தைப் பிடுங்கி, ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்தார். இதைத் தடுத்த தண்டல்காரர்கள் கேட்ட போது, “சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாக மைசூர் மன்னர் ஹைதரலியிடம் சொல்” என்று சொல்லி அனுப்பினார். அன்று முதல், அவர் ‘தீரன் சின்னமலை’ என்று அழைக்கப்பட்டார்.
திப்பு சுல்தானுடன் கூட்டணி
தீரன் சின்னமலை வளர வளர நாட்டில், ஆங்கிலேயர்களின் ஆதிக்கமும் வளர்ந்தது. இதை சிறிதளவும் விரும்பாத சின்னமலை, அவர்களைக் கடுமையாக எதிர்த்தார். அச்சமயத்தில், அதாவது டிசம்பர் மாதம் 7ஆம் தேதி, 1782 ஆம் ஆண்டில் மைசூர் மன்னர் மரணமடைந்ததால், அவரது மகனான திப்பு சுல்தான் அவர்களை ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அவரும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை வேரோடு வெட்ட எண்ணினார். இதுவே, அவர்களுக்கும் சாதகமாக அமைந்தது. ஆகவே, அவரது நண்பர்களோடு அவர் ஒரு பெரும் படையைத் திரட்டி, மைசூர் மன்னர் திப்பு சுல்தானுடன் கைக்கோர்க்க முற்பட்டார். ஏற்கனவே, திப்புவின் தந்தையை ஒருமுறை எதிர்த்த நிகழ்வையும், அவரது வீரத்தையும் பற்றி அறிந்த திப்பு சுல்தான், அவருடன் கூட்டணி அமைத்தார். அவர்களின் கூட்டணி, சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போன்ற இடங்களில், ஆங்கிலேயர்களை எதிர்த்து நடந்த மூன்று மைசூர் போர்களில் ஆங்கிலேயர்களின் படைகளுக்குப் பெரும் சேதம் விளைவித்து, வெற்றிவாகை சூடியது.
நான்காம் மைசூர் போர்
மூன்று மைசூர் போர்களிலும், திப்புசுல்தான் – தீரன் சின்னமலை கூட்டணி வெற்றியடைந்ததைக் கண்டு வெகுண்டெழுந்த ஆங்கிலேயர்கள், பல புதிய போர் யுக்திகளைக் கையாளத் திட்டம் தீட்டினர். இதனால், திப்பு சுல்தான், மாவீரன் நெப்போலியனிடம், நான்காம் மைசூர் போரில் தங்களுக்கு உதவிப் புரியக் கோரி, தூது அனுப்பினார். என்னதான் நெப்போலியன் உதவிப் புரிந்தாலும், தங்களது படைகளோடு துணிச்சலுடனும், வீரத்துடனும் திப்புவும், சின்னமலையும் அயராது போரிட்டனர். துரத்ருஷ்டவசமாக, கன்னட நாட்டின் போர்வாளும், மைசூர் மன்னருமான திப்பு சுல்தான் அவர்கள், நான்காம் மைசூர் போரில், மே மாதம் 4 ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில் போர்க்களத்திலே வீரமரணமடைந்தார்.
சின்னமலையின் பிற வெற்றிகள்
திப்பு சுல்தான் அவர்களின் வீரமரணத்திற்குப் பின்னர், கொங்கு நாட்டில் உள்ள ஓடாநிலை என்னும் ஊரில் தங்கியிருந்தார். திப்புவின் மரணத்திற்குப் பழிதீர்க்கும் வண்ணமாக, அவருக்கு சொந்தமான சிவன்மலை – பட்டாலிக் காட்டில் தனது வீரர்களுக்குப் பயிற்சி அளித்து, பிரெஞ்சுக்காரர்கள் உதவியோடு பீரங்கிகள் போன்ற போர் ஆயுதங்களையும் தயாரித்தார். பின்னர், கி.பி 1799ல் தனது படைகளைப் பெருக்கும் விதமாக, திப்புவிடம் பணிபுரிந்த முக்கியமான சிறந்த போர்வீரர்களான தூண்டாஜிவாக், அப்பாச்சி போன்றோரை தனது படையில் சேர்த்ததோடு மட்டுமல்லாமல், தன்னை ஒரு பாளையக்காரராக அறிவித்து, அண்டைய நாட்டில் உள்ள பாளையக்காரர்கள் அனைவரையும் ஒன்று திரட்டினார். லெஃப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க எண்ணிய அவர், ஜூன் மாதம் 3 ஆம் தேதி, 1800 ஆம் ஆண்டில், கோவைக்கோட்டையைத் தகர்க்கத் திட்டமிட்டார். சரியான தகவல் பரிமாற்றங்கள் இல்லாத ஒரே காரணத்தால், கோவைப்புரட்சி தோல்வியுற்றது. 1801ல், பிரெஞ்சுக்காரரான கர்னல் மாக்ஸ் வெல் தலைமையில் ஆங்கிலேயர்களை பவானி-காவிரிக்கரையில் எதிர்த்த அவர், வெற்றிக் கண்டார். அந்த வெற்றியைத் தொடர்ந்து, 1802ல் சென்னிமலைக்கும் சிவன் மலைக்குமிடையே நடந்த போரில் சிலம்பமாடி ஆங்கிலப்படையைத் தவிடுபொடியாக்கி, 1803ல் அறச்சலூரில் உள்ள கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையை கையெறிகுண்டுகள் வீசி வெற்றிக் கண்டார்.
இறப்பு
ஆங்கிலேயர்கள் பலரையும் தோல்விக்குள்ளாக்கி, அவர்களை தலைகுனியச் செய்த தீரன் சின்னமலையை சூழ்ச்சியால் வீழ்த்த எண்ணிய ஆங்கிலேயர்கள், அவரது சமையல்காரன் நல்லப்பனுக்கு ஆசை வார்த்தைகள் காட்டி, அந்த மாவீரனையும் மற்றும் அவரது சகோதரர்களைக் கைது செய்தனர். கைது செய்து அவர்களை, சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்ற ஆங்கிலேயர்கள், ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர். தம்பிகளுடன், தீரன் சின்னமலையும் வீரமரணமடைந்தார்.
நினைவஞ்சலி
தீரன் சின்னமலையின் உருவச்சிலை தமிழக அரசால் சென்னையில் அமைக்கப்பட்டது.
ஓடாநிலையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் உள்ளது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் ‘தீரன் சின்னமலை மாளிகை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் 31 ஆம் தேதி 2005 ஆம் ஆண்டில், இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை, ‘தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை’ வெளியிட்டது.
காலவரிசை
1756: ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கயம் அருகிலுள்ள மேலப்பாளையம் என்னும் ஊரில் ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி, 1756 ஆம் ஆண்டில் பிறந்தார்.
1782: டிசம்பர் மாதம் 7ஆம் தேதி, 1782 ஆம் ஆண்டில் மைசூர் மன்னர் ஹைதர் அலி மரணமடைந்ததால், அவரது மகன் திப்பு சுல்தான் ஆட்சிப் பொறுப்பேற்றார்.
1799: நான்காம் மைசூர் போரில், மே மாதம் 4 ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில் போர்க்களத்திலே வீரமரணமடைந்தார்.
1799: தனது படைகளைப் பெருக்கினார்.
1800: ஜூன் மாதம் 3 ஆம் தேதி, 1800 ஆம் ஆண்டில், கோவைக்கோட்டையைத் தகர்க்கத் திட்டமிட்டார்.
1801: பிரெஞ்சுக்காரரான கர்னல் மாக்ஸ் வெல் தலைமையில் ஆங்கிலேயர்களை பவானி-காவிரிக்கரையில் எதிர்த்து வெற்றிக் கண்டார்.
1802: சென்னிமலைக்கும் சிவன் மலைக்குமிடையே நடந்த போரில் சிலம்பமாடி ஆங்கிலப்படையைத் தவிடுபொடியாக்கினார்.
1803: அறச்சலூரில் உள்ள கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையை கையெறிகுண்டுகள் வீசி வெற்றிக் கண்டார்.
1805: ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு, சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்ற அவரையும், அவரது தம்பிகளையும், ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர்.

மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கியவர், சத்ரபதி சிவாஜி அவர்கள். இளம் வயதிலேயே திறமைப் பெற்ற போர்வீரனாகவும், சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் மற்றும் வல்லமைப்பெற்ற படைத் தளபதியாகவும் விளங்கியவர். இராணுவத்தில் சீர்திருத்தங்களை வகுத்து, போர்களில் கொரில்லா உத்திகளை பயன்படுத்தி, பல கோட்டைகளையும், பகுதிகளையும் கைப்பற்றி மராட்டியப்பேரரசு விரிவடைய வித்திட்டவர். இவருடைய ஆட்சிக்காலம் தென்னிந்திய வரலாற்றில் பொற்காலமாகக் கருதப்படுகிறது. மராட்டியர்களின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் முக்கிய காரணாமாய் விளங்கி, பிளவுபட்டு கிடந்த பகுதிகளை ஒன்றிணைத்து மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவினார். மேலும் சொல்லப்போனால் மகாராஷ்டிராவை எத்தனையோ மன்னர்கள் ஆண்டிருந்தாலும், சத்ரபதி சிவாஜியை போல் திறமையான மன்னர்கள் எவரும் இல்லையென வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இத்தகைய வீரமிக்க ‘மாமன்னன்’ சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறு மற்றும் போர் முறைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: பிப்ரவரி 19, 1627
இடம்: சிவநேரி கோட்டை, புனே, மகாராஷ்டிரா மாநிலம், இந்தியா
பணி: பேரரசர்
இறப்பு: ஏப்ரல் 03, 1680
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
‘சத்ரபதி சிவாஜி’ என அழைக்கப்படும் சிவாஜி சகாஜி போஸ்லே அவர்கள், 1627 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் நாள் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் பூனே மாவட்டதிலுள்ள “சிவநேரி கோட்டை” என்ற இடத்தில் சஹாஜி போஸ்லேவுக்கும், ஜீஜாபாயிக்கும் மகனாகப் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை
தன்னுடைய தாயின் அரவணைப்பில் வளர்ந்த சத்ரபதி சிவாஜி, இளமையிலேயே இராமாயணம், மகாபாரதம் போன்ற வீரகாவியங்கள் கற்பிக்கப்பட்டு சிறந்த வீரனாக வளர்க்கப்பட்டார். பிறகு தாதாஜி கொண்ட தேவ் போன்ற சிறப்பு மிக்க நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் படைவீரர்கள் கீழ் பயிற்சிச்பெற்ற அவர், வாள் பயிற்சி, வில் பயிற்சி, குதிரையேற்றம், யானை ஏற்றம் போன்றவற்றில் சிறப்பு பெற்று விளங்கினார்.
பேரரசை விரிவுபடுத்துதல்
1645 ஆம் ஆண்டு பீஜபூர் பேரரசிடம் இருந்து, தோர்னாக் கோட்டையைக் கைப்பற்றிய அவர், பின்னர் 1647ல் கொண்டனா மற்றும் ராஜ்காட் கோட்டையையும், 1656ல் ராய்காட் கோட்டையையும் கைப்பற்றினார். 1659 ஆம் ஆண்டு பூனாவில் பல இடங்களை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, மராட்டிய பேரரசை விரிவுபடுத்தினார்.
மொகலாயர்களுடன் போர்
1661 ஆம் ஆண்டு கொங்கன் பகுதியில், முகலாய படைதளபதி கர்தாலாப் கானுடன் நடைபெற்ற போரில் மாபெரும் வெற்றி கண்ட அவர், பிறகு சாயிஸ்தாகான் தலைமையில் மேற்கொண்ட தாக்குதலை முறியடித்து முகலாயர்களுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தினார். 1664 மற்றும் 1670 களில் இரண்டு முறை சூரத்தை தாக்கி, கொள்ளையடித்தார். இதனால் சிவாஜியின் வெற்றியைத் தடுக்க தந்திரமான முறையில் ஒரு விருந்தை ஏற்பாடுசெய்து சிவாஜியை கொலைசெய்ய அப்சல் கான் திட்டமிட்டார். ஆனால் அப்சல் கானின் திட்டத்தை அறிந்த சிவாஜி, புலி நகத்தை பயன்படுத்தி தப்பினார். அதன் பிறகு 1670-ல் முகலாய கடற்படையின் மீது தாக்குதலை தொடுத்த அவர், பல பகுதிகளை கைப்பற்றினார். போர்களத்தில் தந்திரமான முறையில் போர் செய்யும் “கொரில்லா போர்” (கொரில்லா போர் முறை என்பது தந்திரமான முறையில் நான்கு புறமும் மறைந்திருந்து தாக்குவது ஆகும்) முறையை பயன்படுத்தி எதிரிகளை வீழ்த்தினார். இதனால் பல கோட்டைகளையும், பகுதிகளையும் கைப்பற்றி தன்னுடைய ஆளுமையின் கீழ் கொண்டுவந்தார்.
சத்ரபதியாக முடிசூட்டிக்கொள்ளுதல்
1674 ஆம் ஆண்டு ஜூன் 6 ல் ராய்கட் கோட்டையில் சத்ரபதியாக முடிசூட்டிக் கொண்டார். 1676 ஆம் ஆண்டு, தென்னிந்திய பகுதிகளின் மீது தன்னுடைய கவனத்தை திருப்பிய அவர், வேலூர் மற்றும் செஞ்சி கோட்டைகளையும், ஆர்காட்டையும் கைப்பற்றி தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.
ஆட்சி முறை
சிறந்த ஆட்சியாளராக திகழ்ந்த சத்ரபதி சிவாஜி, நிர்வாக முறையில் முன்னேற்றம் காண்பதற்காகவும், ஆட்சிமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தவும், வரிவசூல் நடவடிக்கைக்காக பல சீர்திருத்தங்களை கொண்டுவந்தார். அதன் அடிப்படையில் மன்னனுக்கு ஆலோசனை கூற எட்டு அமைச்சர் கொண்ட “அஷ்டபிரதான்” என்ற அமைப்பினை ஏற்படுத்தினார். பிறகு அரசை மூன்று மாகாணங்களாக பிரித்து, ஒவ்வொரு மாகாணமும் பல பர்கானாக்களாகப் பிரிக்கப்பட்டது. இராணுவப் படை, குதிரைப்படை, கடற்படை என அனைத்திலும் பல சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டு, மன்னரின் நேரடி கட்டுபாட்டில் கொண்டுவரப்பட்டது. அதுமட்டுமல்லாமல், வரலாற்று சிறப்புமிக்க பல கோட்டைகளையும் கட்டினார். குறிப்பாக சொல்லப்போனால், சிவாஜியின் ஆட்சிக்காலத்தில் மகாராஷ்டிரா அரசு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்தது என கூறலாம்.
இறப்பு
சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் விளங்கிய சத்ரபதி சிவாஜி அவர்கள், இறுதியில் இரத்தப்பெருக்கு நோயினால் பாதிக்கப்பட்டு, 1680 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி தன்னுடைய 53 வது வயதில் காலமானார்.
தென்னிந்திய வரலாற்றில் பொற்காலம் என கருதப்படும் இவருடைய ஆட்சிக் காலத்தில், சுமார் பத்துக்கும் மேற்பட்ட கோட்டைகளைக் கட்டினார். அரசியல் நடவடிக்கையில் மட்டுமல்லாமல், சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பினையும், வலுவான படை அமைப்பினையும் கொண்டு சிறந்த ஆட்சியாளராகவும் விளங்கினார் எனப் பல வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இவர் முகலாய மன்னர்களுடன் செய்த போர் தந்திரங்களும், ஆட்சியைப் பறைசாற்ற அவர் கட்டிய கோட்டைகளும் இவருடைய வீரத்தையும், போர்த்திறமையையும், கலையுணர்வையும் இன்றளவும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
காலவரிசை
1627 – பிப்ரவரி 19 நாள் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் பூனே மாவட்டதிலுள்ள “சிவநேரி கோட்டை” என்ற இடத்தில் பிறந்தார்.
1645 – தோர்னாக் கோட்டையைக் கைப்பற்றினார்.
1664 – சூரத்தை தாக்கி கொள்ளையடித்தல்.
1674 – ஜூன் 6 ல் ராய்கட் கோட்டையில், ‘சத்ரபதியாக’ முடிசூட்டிக் கொண்டார்.
1680 – ஏப்ரல் 3 ஆம் தேதி 53 வது வயதில் காலமானார்.

மைசூர் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், திப்பு சுல்தான். தொடக்ககாலத்தில் ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக விளங்கி, கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்குப் பெரும் சவாலாக இருந்து, தன்னுடைய கடைசி மூச்சு நிற்கும் வரை ஆங்கிலேயர்களை எதிர்த்து உறுதியுடன் போராடிய மாவீரன். இளம் வயதிலேயே திறமைப்பெற்ற போர்வீரனாக வளர்ந்த அவர், சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் மற்றும் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார். ‘உயிர் பிரியும் நேரம் கூட தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும்’ என்று ஆங்கிலேயர் கூறியபோது, ‘முடியாது’ என மறுத்து, கர்ஜனையோடு “ஆடுகளைப்போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விட, புலியைப் போல இரண்டு நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என முழங்கியபடியே மரணத்தைத் தழுவியவர். இத்தகைய வீரமிக்க மாவீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஆட்சிமுறைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: நவம்பர் 20, 1750
இடம்: தேவனஹள்ளி, கர்நாடக மாநிலம், இந்தியா
பணி: மன்னர்
இறப்பு: மே 04, 1799
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
‘மைசூரின் புலி’ என அழைக்கப்படும் திப்பு சுல்தான் 1750 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள “தேவனஹள்ளி” என்ற இடத்தில் ஹைதர் அலிக்கும், பாக்ர்-உன்-நிசாவுக்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை சாதாரண குதிரைவீரனாக இருந்து, பிறகு ஒரு அரசை ஆளும் மன்னனாக உயர்ந்து, இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வெற்றிக்கண்டவர்.
ஆரம்ப வாழ்க்கை
கல்வியில் சிறந்து விளங்கிய திப்பு சுல்தான், இளம் வயதிலேயே தன்னுடைய தந்தையுடன் பல போர்க்களம் கண்டார், இதனால் தன்னுடைய பதினாறு வயதிலேயே யுத்தத்தந்திரங்கள், ராஜதந்திரங்கள் என அனைத்திலும் தேர்ச்சிப்பெற்று, சிறந்த படைத்தளபதியாக வளர்ந்தார். 1776 ஆம் ஆண்டு மராட்டியர்களுக்கு சொந்தமான காதிகோட்டையை கைப்பற்றிய திப்புசுல்தான், பிறகு 1780ல் நடைபெற்ற இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலப்படைகளுக்கு எதிராக தந்தையுடன் இணைந்து போர்தொடுத்தார். பின்னர், 1782ல் தன்னுடைய தந்தை ஹைதரலியின் மரணத்திற்குப் பிறகு, 1782 ஆம் ஆண்டு டிசம்பர் 26 நாள் தன்னுடைய 32 வது வயதில் ‘சுல்தானாக’ அரியானை ஏறினார். மைசூரின் மன்னனாக பொறுப்பேற்ற திப்பு சுல்தான் அவர்கள், ‘புலி சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை’ தன்னுடைய சின்னமாக பயன்படுத்தினார். சுமார் நான்கு ஆண்டுகள் நடைபெற்ற இந்தப் போர் 1784 ஆம் ஆண்டு மங்களூர் உடன்படிக்கையின் மூலம் முடிவுக்கு வந்தது.
மூன்றாம் மைசூர் போர்
1789 ஆம் ஆண்டு திப்பு சுல்தான் தலைமையில் ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற மூன்றாம் மைசூர் போரில் மராட்டிய பேரரசும், ஐதராபாத் நிஜாமும் பிரிட்டிஷ் படைத்தளபதி கார்ன் வாலிசுடன் இணைந்து திப்பு சுல்தானுக்கு எதிராகப் போர்தொடுத்தனர். ஆனால், சற்றும் கலங்காத திப்புசுல்தான் எதிரிகளை துணிச்சலுடன் எதிர்கொண்டார். 1792 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இந்தப் போரில் திப்பு சுல்தான் தோல்வியடைந்தார். இறுதியில் சீரங்கப்பட்டினம் அமைதி ஒப்பந்தத்தின்படி பல பகுதிகள் பிரிட்டிஷ், ஐதராபாத் நிஜாம் மற்றும் மராட்டியர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
நான்காம் மைசூர் போரும், திப்புவின் மரணமும்
‘போரில் திப்புசுல்தானை வீழ்த்தமுடியாது’ என அறிந்த பிரிட்டிஷ்காரர்கள், சூழ்ச்சி செய்து, திப்புவின் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் விலைப்பேசி, லஞ்சத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி, திப்புவை அழிக்கத் திட்டம் தீட்டினர். இந்த சூழ்ச்சிக்கு இடையில் 1799 ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காம் மைசூர் போரில், திப்பு சுல்தான் தீரமுடனும், துணிச்சலுடனும் போர்புரிந்தாலும், எதிரிகளின் நயவஞ்சக செயலினால் பிரிட்டிஷ் படைத் தொடர்ந்து முன்னேறித் தாக்கியது. இந்தத் தாக்குதலில் குண்டடிப்பட்டு கிடந்த திப்புசுல்தானிடம், ‘தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும்’ என்று ஆங்கிலேயர் கூறியபோது, ‘முடியாது’ என மறுத்து கூறிய அவர், “ஆடுகளைப்போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விட, புலியைப் போல இரண்டு நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என முழங்கியபடியே 1799 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி வீரமரணம் அடைந்தார்.
ஆட்சிமுறையும், சீர்திருத்தங்களும்
திப்புசுல்தான் மிகப்பெரிய இராணுவப் படையினைக் கொண்டிருந்தார். இதில் குதிரைப்படை, ஒட்டகப்படை மட்டுமல்லாமல், போரில் பீரங்கிகளையும் பயன்படுத்தியுள்ளார். இதைத்தவிர, கடற்பயிற்சி பள்ளிகள் உருவாக்கப்பட்டு, கடற்படையில் பீரங்கிகள் மற்றும் ஆங்கிலேயருக்கு நிகராக நவீன ஏவுகணைகளை பயன்படுத்தினார் எனக் கூறப்படுகிறது. சக்தி வாய்ந்த ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர் திப்பு சுல்தான் எனப் பல வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
திப்புசுல்தான் ஆட்சியில், பெண்களுக்கு மரியாதை கொடுத்தது மட்டுமல்லாமல், தேவதாசி முறையை முழுமையாக எதிர்த்தார். கோயில்களில் நரபலி கொடுப்பதைத் தவிர்த்து, முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினார். திப்பு, இஸ்லாமிய மதத்தில் முழு ஈடுபாடு கொண்டவராக விளங்கினாலும், அவருடைய ஆட்சியில் இந்துக்கள் மற்றும் பிற மதத்தவரும் சுதந்திரமாக செயல்பட்டனர். மக்களிடையே அமைதியை மட்டும் விரும்பிய அவர், மத ஒற்றுமையை இறுதிவரை கடைப்பிடித்தார். மக்களுக்கு கடமை, உரிமை, பொறுப்பு உள்ளதாக சட்டம் இருக்கவேண்டும் எனக் கருதி சட்டபடியான விசாரணையும், தண்டனையும் அமையவேண்டும் எனக் கருதினார். விவசாயத்தில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, தொழில் வளர்ச்சியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார்.
1782 முதல் 1799 வரை மைசூர் பேரரசை ஆட்சி செய்த திப்புசுல்தான் அவர்கள், சிறந்த படைவீரராகவும், ஆட்சியாளராகவும் வாழ்ந்தவர். தன்னுடைய கொள்கை அறிவிப்பால் மட்டுமல்லாமல், நடைமுறையில் ஆட்சியிலும், தனிப்பட்ட வாழ்விலும் மக்கள் சார்ந்த கொள்கைகளை இறுதிவரை பின்பற்றியவர். போர் வ்யூகத்திலும், படைக்கலத் தயாரிப்பிலும், இராணுவ தொழில்நுட்பத்திலும் ஆங்கிலேயரை நடுநடுங்க வைத்த மாவீரன். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு வீர வரலாறு படைத்தவர் திப்புசுல்தான் என்றால் அது மிகையாகது.
காலவரிசை
1750 – நவம்பர் 20 ஆம்தேதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள “தேவனஹள்ளி” என்ற இடத்தில் பிறந்தார்.
1776 – காதிகோட்டையை கைப்பற்றினார்.
1782 – டிசம்பர் 26 நாள் மைசூர் பேரரசராக அரியானை ஏறினார்.
1780-84 – பிரிட்டிஷாருடன் இரண்டாம் மைசூர் போர்.
1789-92 – பிரிட்டிஷாருடன் மூன்றாம் மைசூர் போர்.
1799 – பிரிட்டிஷாருடன் நான்காம் மைசூர் போர்.
1799 – மே 4 ஆம் தேதி வீர மரணம் அடைந்தார்.

சந்திரசேகர ஆசாத் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தன்னுடைய மாணவப் பருவத்திலிருந்தே பாரத நாட்டின் மீது தீவிர பற்றுடையவராகவும், சோசலிச முறையில் இந்தியா விடுதலை அடைவதை கொள்கையாக கொண்டும் போராடியவர். ஒரு துடிப்பு மிக்க இலஞனாக மட்டுமல்லாமல், இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் மாபெரும் புரட்சிவாதியாக திகழ்ந்த சந்திரசேகர ஆசாத்தின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாக காண்போம்.
பிறப்பு: ஜூலை 23, 1906
இடம்: பாப்ரா (சபுவா மாவட்டம்) உத்திரபிரதேசம், இந்தியா
பணி: விடுதலை போராட்ட வீரர்
இறப்பு: பிப்ரவரி 27, 1931
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
சந்திரசேகர சீதாராம் திவாரி எனப்பட்ட சந்திரசேகர ஆசாத் அவர்கள், 1906 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் நாள் இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் சபுவா மாவட்டத்திலுள்ள “பாப்ரா” என்ற இடத்தில் சீதாராம் திவாரிக்கும், ஜக்ராணி தேவி என்பவருக்கும் மகனாகப் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை
இவருடைய தந்தை அலிஜார்பூரில் பணியாற்றி வந்ததால், இவர் தன்னுடைய இளமைக் காலத்தை மத்திய பிரதேச மாநிலம் சபூவா என்ற மாவட்டத்திலுள்ள பாப்ராவில் கழித்தார். இவரது தாயான ஜக்ராணி தேவி, இவரை சமஸ்கிரதம் கற்க காசியிலுள்ள பெனாரசுக்கு அனுப்பினார். சந்திரசேகர ஆசாத் முறையாக வில் வித்தையும் கற்றுத் தேர்ந்தார்.
விடுதலை போராட்டத்தில் சந்திரசேகர் ஆசாத்தின் பங்கு
1919ல் நடந்த ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம்’, சந்திரசேகர ஆசாத்தினை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது எனலாம். இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல் ஆங்கில அரசு ‘ரெஜினால்ட் டையர்’ என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் வெள்ளையர் ஆட்சி மீது சந்திரசேகர ஆசாத்திற்கு வெறுப்புணர்வை அதிகரித்தது. பிறகு, பிரித்தானிய இந்தியாவில் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு தன்னுடைய 15 வயதில் கைது செய்யப்பட்டு குற்றவியல் நடுவரிடம் கொண்டு செல்லப்பட்டார். நடுவர் அவரிடம் பெயர், தந்தைப்பெயர் மற்றும் முகவரியை கேட்டபொழுது அவர் முறையே “ஆசாத் (ஆசாத் என்றால் விடுதலை), சுதந்திரம் மற்றும் சிறை” என்றார். இதனால், கோபமுற்ற நடுவர், சந்திரசேகரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கு சந்திரசேகர ஆசாத், ‘நான் அப்படிக் கூறினால்தான், நீங்கள் என்னை சிறைக்கு அனுப்புவீர்கள்’ என்றார். மேலும் கோபம் கொண்ட நடுவர், 15 பிரம்படி கொடுக்கவும் உத்தரவிட்டார். தண்டனையை வீரமுடன் ஏற்ற அவர், ஒவ்வொரு பிரம்படிக்கும் “பாரத் மாதா கீ ஜே” என குரலெழுப்பி பாரத நாட்டின் மீது கொண்ட சுதந்திரப்பற்றை வெளிபடுத்தினார். அன்று முதல், அவர் ‘சந்திரசேகர ஆசாத்’ என அழைக்கப்பட்டார்.
மகாத்மா காந்தி, ஒத்துழையாமை கொள்கையைக் கைவிட்ட பிறகும், கொள்கையில் உறுதியாய் இருந்த சந்திரசேகர ஆசாத், முழு சுதந்திரத்தை எந்த வழியிலும் அடைந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். பிறகு, இந்துஸ்தான் குடியரசு அமைப்பின் கொள்கைகளில் ஈடுபாடுகொண்ட அவர், 1925 ஆம் ஆண்டு காகோரி ரயில் கொள்ளையில் ஈடுபட்டார். இந்த ரயில் கொள்ளைக்கு பிறகு, ஆங்கில அரசு புரட்சியாளர்களை ஒடுக்க தீவிரம் காட்டியது.
சந்திரசேகர ஆசாத், பகவத் சிங், சுக் தேவ், ராஜ்குரு போன்றவர்கள் இணைந்து சோசலிச முறையில் இந்தியா விடுதலை அடைவதை கொள்கையாக கொண்டு இந்துஸ்தான் குடியரசு அமைப்பினை “இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு” என உருவாக்கினர்.
இறப்பு
1931 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் நாள் அலகாபாத்திலுள்ள “அல்ப்ரெட்” பூங்காவில் தன்னுடைய இயக்கத்தாருடன் பேசிக்கொண்டிருந்த பொழுது ஆங்கில அரசால் சுற்றிவளைக்கப்பட்டார். நீண்ட நேரம் ஆங்கில காவல் துறையினரிடம் போராடிய அவர், காலில் குண்டடிபட்டு தப்பிசெல்லமுடியாமல், துப்பாக்கியில் ஒரே ஒரு தோட்டா மீதம் இருந்த நிலையில், அவர்களிடம் சிக்கிவிட கூடாது என நினைத்து தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்.
சந்திரசேகர ஆசாத் மறைந்து விட்டாலும் அவர் விட்டு சென்ற சுவடுகள் இன்னும் மறையாமால்தான் இருக்கின்றன. அவர் பயன்படுத்திய துப்பாக்கி அலகாபாத் அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கபட்டுள்ளது. அவர் கொள்ளப்பட்ட இடமான “அல்ப்ரெட்” பூங்கா இன்று அவர் பெயரிலேயே “சந்திரசேகர ஆசாத் பூங்கா” என அழைக்கப்பட்டு வருகிறது.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், இந்தியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மதிப்பார்ந்த மாநிலமான ‘ஜான்சியின்’ ராணியாக இருந்தவர். இவர் 1857 ல் தொடங்கிய இந்தியாவின் சுதந்திரத்திற்கான முதல் போரில் மிக முக்கியமான நபர்களில் ஒருவராவார். வீரம் மற்றும் தைரியத்தின் மறுவடிவமாக இருந்த ராணி லட்சுமிபாய் அவர்களின் வாழ்க்கை வரலாறு, சாதனைகள் மற்றும் வீரச்செயல்கள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: 19 நவம்பர் 1828
பிறந்த இடம்: வாரணாசி, இந்தியா
இறப்பு: 18 ஜூன் 1858
தொழில்: ஜான்சியின் ராணி, விடுதலைப் போராட்ட வீரர்
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், 19 நவம்பர் 1828 ஆம் ஆண்டு காசியில் (இப்போதைய வாரணாசி) ஒரு மராத்தியர் குடும்பத்தில் பிறந்தார். அவரது குழந்தை பருவத்தில், அவரை ‘மணிகர்ணிகா’ என்ற பெயரில் அழைக்கப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரை அன்போடு ‘மனு’ என்று அழைத்தனர்.
ஆரம்ப வாழ்க்கை
தனது நான்காவது வயதிலேயே அவரது தாயை இழந்ததால், குடும்பப் பொறுப்புகளனைத்தும் அவரின் தந்தை மீது விழுந்தது. பள்ளிப்பாடம் படித்து கொண்டிருந்த சமயத்தில், லக்ஷ்மிபை அவர்கள் அவர் குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல் மற்றும் கத்தி சண்டை போன்ற தற்காப்புக் கலைகளை முறையாக பயிற்சி மேற்கொண்டு கற்றார்.
இல்லற வாழ்க்கை
1842 ஆம் ஆண்டு, ஜான்சியின் மகாராஜாவாக இருந்த ‘ராஜா கங்காதர் ராவ் நிவால்கர்’ என்பவரை மணமுடித்தார். திருமணத்திற்கு பின், அவருக்கு ‘லட்சுமி பாய்’ என்ற பெயர் வழங்கப்பட்டது. அவரது திருமண விழா, பழைய ஜான்சி நகரில் அமைந்துள்ள, விநாயகர் கோவிலில் நடைபெற்றது. 1851ல், அவர்கள் இருவருக்கும் ஒரு மகன் பிறந்தான். துரதிருஷ்டவசமாக, அந்த குழந்தையால் நான்கு மாதங்களுக்கு மேல் உயிர்வாழ முடியவில்லை.
1853 ல், மகாராஜா கங்காதர் ராவின் உடல்நிலை பலவீனமானதால், அவர்கள் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்தனர். இந்தத் தத்தெடுப்பின் மீது ஆங்கிலேயர்கள் பிரச்சனை எழுப்பக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்த லட்சுமிபாய் அவர்கள், உள்ளூர் ஆங்கிலேய பிரதிநிதிகளை சாட்சியாக வைத்து இந்த தத்தெடுப்பை நடத்தினார். நவம்பர் 21 ஆம் தேதி, 1853 ஆம் ஆண்டு மகாராஜா கங்காதர் ராவ் மரணமடைந்தார். அந்த காலகட்டத்தில், பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக ‘லார்ட் தல்ஹௌசீ’ என்பவர் ஆட்சியில் இருந்தார்.
படையெடுப்பு
ராணி லட்சுமிபாய் அவர்கள், தத்தெடுத்த குழந்தைக்கு ‘தாமோதர் ராவ்’ என்று பெயரிட்டார். இந்துமத மரபின் படி, அக்குழந்தையே லட்சுமிபாய் அவர்களின் சட்ட வாரிசாக இருந்தது. இருப்பினும், ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அந்த குழந்தையை சட்ட வாரிசாக ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். மறுப்பு கோட்பாட்டின் (Doctrine of Lapse) படி, லார்ட் தல்ஹௌசீ அவர்கள் ஜான்சி அரசைப் பறிமுதல் செய்ய முடிவுசெய்தார். ராணி லட்சுமிபாய் அவர்கள், ஒரு ஆங்கிலேய வழக்கறிஞரிடம் சென்று ஆலோசனைக் கோரினார். அதன்பிறகு, அவர் லண்டனில் அவரது வழக்கிற்கான ஒரு முறையீட்டை மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனு நிராகரிக்கப்பட்டது. ஆங்கிலேய அதிகாரிகள், லட்சுமிபாய் அவர்களின் அரசு நகைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், ராணி லட்சுமிபாய் அவர்களை ஜான்சி கோட்டையை விட்டு செல்லுமாறு ஒரு ஆணை நிறைவேற்றப்பட்டதால், ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், ஜான்சியிலுள்ள ‘ராணி மஹாலுக்கு’ சென்றார். அந்நேரத்திலும், லட்சுமிபாய் அவர்கள், ஜான்சி அரசைப் பாதுகாப்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.
போர்
ராணி லக்ஷ்மி பாய் அவர்களை ஜான்சியை விட்டு வெளியேறி சொல்லி பிறப்பித்த ஆணை, ஜான்சியை எழுச்சியின் இடமாக மாற்றியது. ஜான்சி ராணி அவர்கள் தனது நிலையை வலுப்படுத்த தொடங்கினார். பிறரது ஆதரவை நாடிய அவர், அவரது ஆதரவாளர்களைக் கொண்டு ஒரு தொண்டர் படையை உருவாக்கினார். அவர் உருவாக்கிய இராணுவத்தில் ஆண்கள் மட்டும் முக்கிய பங்கு வகிக்கவில்லை, அதில் பெண்களும் கூட தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது நடந்த கிளர்ச்சியில், ராணி லட்சுமிபாய், அவரது தளபதிகளுடன் இணைந்து போர் புரிந்தார்.
1857 ஆம் ஆண்டு செப்டம்பரிலிருந்து அக்டோபர் வரை இருந்து, ராணி லக்ஷ்மி பாய் அவர்கள் அவரது அண்டை நாடுகளான ஓர்ச்சா மற்றும் டாடியாவை படையெடுத்து, அந்நாட்டுப் படைகளின் மூலமாக ஜான்சியைப் பாதுகாத்தார். இதுவே, ஜனவரி 1858ல், பிரிட்டிஷ் இராணுவம், ஜான்சியை நோக்கி படையெடுத்தற்கான காரணமாகும். ஜான்சிக்கும், பிரிட்டிஷ் ராணுவத்திற்குமான மோதல் ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தது. இறுதியாக, இரண்டே வாரங்களில் ஆங்கிலேய அரசு ஜான்சி நகரத்தைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. எனினும், அவர் ஒரு ஆண்மகன் வேடம் பூண்டிருந்ததால், அவரை யாரும் அடையாளம் காணவில்லை. தனது வளர்ப்பு மகனை மடியில் ஏந்தியபடியே தப்பித்தார்.
இறப்பு
ஆங்கிலேயர் பிடியிலிருந்து தப்பித்த ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், கல்பியில் தஞ்சம் அடைந்தார். அங்கு அவர், 1857ல் நடந்த கிளர்ச்சியில் பங்கேற்ற ஒரு மாவீரரான ‘தந்தியா டோப்’ என்பவரை சந்தித்தார். ஆங்கிலேயர்களின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது. ஆங்கிலேயப் படையை எதிர்த்து, கோட்டாகி சேராய் என்ற இடத்தில் ஜான்சிராணி போரிட்டார். ஆனால், ஆங்கிலேயர்களின் நவீன போர்க்கருவிகளை எதிர்க்க முடியாமல், 18 ஜூன் 1858 ஆம் ஆண்டு ஜான்சி ராணி அவர்கள் இறந்தார். போர்க்களத்தில் அவர் மயக்கமாக இருந்த போது, ஒரு பிராமணர் அவரை அவரது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கே அவர் மரணமடைந்தார் என்றும் சிலர் கூறுகின்றனர். அவரது மரணத்திற்குப் பின், மூன்று நாட்களில், குவாலியரை ஆங்கிலேய அரசு கைப்பற்றியது.
ராணி லட்சுமிபாய் அவர்களின் வீரமும், மகத்தான முயற்சியும், அவரை ‘இந்திய தேசிய இயக்கத்தின் உருவம்’ என்று குறிப்பிட வைத்தது. தனது வளர்ப்பு மகனான தாமோதரைப் பாதுகாப்பதே ராணி லட்சுமிபாய் அவர்களின் நோக்கமாக இருந்தது. அவரது கதை எதிர்வரும் சுதந்திர போராட்ட வீரத் தலைமுறைகளுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக ஆனது என்றால் அது மிகையாகாது.
காலவரிசை
1828: ராணி லட்சுமிபாய் அவர்கள், 19 நவம்பர் 1828 ஆம் ஆண்டு காசியில் ஒரு மராத்தியர் குடும்பத்தில் பிறந்தார்.
1842: ஜான்சியின் மகாராஜா ‘ராஜா கங்காதர் ராவ் நிவால்கர்’ என்பவரை மணமுடித்தார்.
1851: அவரது மகன் பிறந்து, பின்பு நான்கு மாதங்களிலேயே காலமானான்.
1853: ஒரு குழந்தையைத் தத்தெடுத்தார்.
1853: நவம்பர் 21 ஆம் தேதி, 1853 ஆம் ஆண்டு மகாராஜா கங்காதர் ராவ் மரணமடைந்தார்.
1857: ஜான்சி ராணி அவர்கள், அவரது அண்டை நாடுகளைப் படையெடுத்தார்.
1858: ஜனவரி 1858ல், பிரிட்டிஷ் இராணுவம் ஜான்சியை நோக்கி படையெடுத்தது.
1858: ஆங்கிலேயர்களின் போர்க்கருவிகளை எதிர்க்க முடியாமல், 18 ஜூன் 1858 ஆம் ஆண்டு ஜான்சி ராணி அவர்கள் போர்க்களத்திலேயே இறந்தார்.

‘மகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். ‘சத்தியாகிரகம்’ என்றழைக்கப்பட்ட இவரது அறவழி போராட்டம் இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்திய நாடு விடுதலைப் பெறவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது. இதனால், இவர் “விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை” என இந்திய மக்களால் போற்றப்பட்டார். “அகிம்சை” என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர். இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி, விடுதலைக்குக் காரணமாக இருந்ததால், இவருடைய தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் இவருடைய பிறந்தநாளான அக்டோபர் 02 ஆம் தேதியை “காந்தி ஜெயந்தியாக” உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் பாரத நாட்டிற்காகவே அர்பணித்த மாபெரும் மனிதர் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் தியாகங்களை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: அக்டோபர் 02, 1869
இடம்: போர்பந்தர், குஜராத் மாநிலம், இந்தியா
பணி: இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல் தலைவர்
இறப்பு: ஜனவரி 30, 1948
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02 ஆம் நாள், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தாய்மொழி குஜராத்தி ஆகும். மேலும் அவருடைய தந்தை கரம்சாந்த் காந்தி, போர்பந்தரில் ஒரு திவானாக பணியாற்றி வந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக விளங்கினார். தன்னுடைய 13 ஆம் வயதிலேயே கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பதினெட்டு வயதில் ‘பாரிஸ்டர்’ எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார். தன்னுடைய வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்து, பாரதம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
இந்திய விடுதலைப் போராட்டதில் ஈடுபடக் காரணம்
பம்பாய் மற்றும் ராஜ்கோட்டில் சிறிதுகாலம் பணியாற்றிய மகாத்மா காந்தி அவர்கள், 1893 ஆம் ஆண்டு ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென் ஆப்பிரிக்காவில் பணிபுரிய பயணம் ஆனார். அன்றுவரை அரசியல் ஈடுபாடின்றி இருந்த காந்தியின் மனதில் அந்தப் பயணம் அவருக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாகவும் மாற்றியது. குறிப்பாக தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது எனப் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வும், ஒரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக, இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது, ‘வெள்ளையர் இல்லை’ என்ற காரணத்தால் பயணம் செய்ய மறுக்கப்பட்ட நிகழ்வும், அவருடைய மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், தென்னாப்ப்ரிக்காவில் கறுப்பின மக்கள் படும் இன்னலுக்கும், அங்கு குடியேறிய இந்திய மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, 1894 ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸ் என்ற கட்சியினை தொடங்கி, அதற்கு அவரே பொறுப்பாளரானார். பிறகு 1906 ஆம் ஆண்டு ஜோகர்ன்ஸ்பர்க் என்ற இடத்தில், அகிம்சை வழியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு, கைது செய்யப்பட்டு பலமுறை சிறை சென்றார். இவ்வாறு அகிம்சை வழியில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய மக்களின் பிரச்சனையில் வெற்றிக் கண்ட மகாத்மா காந்தி, இந்தியா திரும்பியதும், கோபாலகிருஷ்ண கோகலே மற்றும் ரவீந்திரநாத் தாகூர் போன்ற பெரும் அரசியல் தலைவர்களின் நட்பு ஏற்பட காரணமாக அமைந்தது.
இந்திய விடுதலைப் போராட்டதில் காந்தியின் பங்கு
இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல 1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் திவீரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார். ரவ்லத் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு குரல்கொடுக்கவும், 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும், காந்தி ஒத்துழையாமையை இயக்கத்தினை 1922 ஆம் ஆண்டு தொடங்கினார். மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லாமல் இருப்பது, வழக்கறிஞர்கள் நீதி மன்றத்திற்கு செல்லாமல் இருப்பது, பிரிட்டிஷ்காரர்கள் தயாரிக்கப்பட்ட துணி மற்றும் பொருட்களை புறக்கணித்தல் என பெரும் தாக்கத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியது. இளையத் தலைமுறை மற்றும் தேசியவாதிகளிடையே இந்த இயக்கம் பெரும் ஆதரவைப் பெற்றது மட்டுமல்லாமல், ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றியால், காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார். பின்னர் 1922 ல் உத்திரபிரதேசத்தில் சௌரி சௌரா என்ற இடத்தில் நடந்த நிகழ்வினால் இவ்வியக்கம் கைவிடப்பட்டது.
காந்தியின் தண்டி யாத்திரை
1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், ‘தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அன்னியர் வரி விதிப்பதா?’ எனக் கருதி, சத்தியாகிர முறையில் இதை எதிர்க்க முடிவு செய்து, 1930 மார்ச் 02 தேதி அகமதாபாத்திலிருந்து சுமார் 240 மைல் தூரத்தில் இருந்த தண்டியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். இறுதியில் 23 நாள் பயணத்திற்குப் பிறகு தண்டியை வந்தடைந்த அவர், அங்கிருந்த கடல் நீரில் உப்பு காய்ச்சி ஆங்கில சட்டத்திற்கு எதிராக அதை விநியோகித்தார். இந்த நிகழ்வு இந்தியாவில் பல இடங்களில் பரவியது மட்டுமல்லாமல், போராட்டம் தீவிரம் அடைந்து காந்தி உட்பட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், போராட்டம் தீவிரம் அடைவதைக் கண்ட ஆங்கில அரசு, வேறு வழியில்லாமல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் விதித்த உப்புவரியை திரும்பப் பெற்று கொண்டனர். ‘உப்பு சத்தியாகிரகம்’ என்ற இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என கூறலாம்.
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக ‘ஆகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தினை காந்தி தொடங்கி வைத்தார். காந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திரப் பிரகடனம் அரங்கேறியது. ஆனால், இந்திய – பாகிஸ்தான் பிரிவினை காந்தியை பெரிதும் பாதித்தது.
இறப்பு
அகிம்சை என்னும் வார்த்தைக்கு அர்த்தம் சொன்ன மகாத்மா காந்தி அவர்கள், 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் (அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டே) புது தில்லியில் நாதுராம் கோட்சே என்னும் கொடியவனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஆங்கில ஆட்சிக்கு எதிராகவும், இந்திய விடுதலைக்காகவும் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்பு சத்தியாகிரகம், வரி கொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பலப் போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்து நடத்தி, துப்பாக்கி ஏந்தி தன்னுடைய முரட்டுக்கரங்களால் அடக்கி ஒடுக்கிய வெள்ளையர்களை திகைக்கச் செய்தவர். பாரத நாட்டிற்காக தன்னுடைய உயிரையும் காணிக்கையாக்கிய மகாத்மாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்கள் உலக சரித்திரத்தில் எழுதப்பட்ட அழியா சுவடுகள் ஆகும்.

இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஜவகர்லால் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இந்தியாவை வழிநடத்தியவர் ஆவார். அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவரில் ஒருவராகவும், சுதந்திரப்போராட்ட வீரராகவும், இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், கல்வி முன்னேற்றம் குறித்துப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவரும், “நவீன இந்தியாவின் சிற்பி” எனவும் கருதப்படும் ஜவகர்லால் நேருவின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைப் பற்றி விரிவாக காண்போம்.
பிறப்பு: நவம்பர் 14, 1889
இடம்: அலகாபாத், உத்திரப் பிரதேசம் (இந்தியா)
பணி: சுதந்திர போராட்ட வீரர், அரசியல் தலைவர்
இறப்பு: மே 27, 1964
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
ஜவகர்லால் நேரு அவர்கள், இந்தியாவின் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அலகாபாத் மாவட்டத்தில் பெரிய செல்வந்தரும், வழக்கறிஞருமான மோதிலால் நேருவுக்கும், சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த மகனாக ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். நேருவுக்கு, விஜயலட்சுமி பண்டிட் மற்றும் கிருஷ்ணா என்ற இரு சகோதரிகள் இருந்தனர்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
இங்கிலாந்திலுள்ள ஹர்ரோவில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கிய நேரு அவர்கள், ட்ரினிட்டி கல்லூரியில் இயற்கை அறிவியல் படித்து 1910ல் “திரைபோசில்” இரண்டாவது மாணவனாகப் பட்டம் பெற்றார். கேம்ப்ரிட்ஜ் மற்றும் ட்ரினிட்டி கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த அவர், 1912ல் இன்னர் டெம்பிலில் சட்டம் பயில பதிவு செய்துக்கொண்டார். 1962 ல், வெற்றிகரமாக சட்டப் படிப்பை முடித்த நேரு தனது சட்டப் பணியைத் தொடங்க இந்தியா திரும்பினார்.
திருமண வாழ்க்கை
நேரு அவர்கள், 1916 ல் கமலா கவுல் என்ற பிராமணப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு, கமலா நேருவும் சுதந்திர இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். திருமணம் ஆன அடுத்த ஆண்டில் இந்திராபிரியதர்ஷனி என்ற மகள் பிறந்தாள் (பின்னாளில் பெரோசு காந்தியை திருமணம் செய்துகொண்ட அவர், ‘இந்திரா காந்தி’ என்றழைக்கபட்டார்). இருபது ஆண்டுகாலம் நேருவுடன் வாழ்ந்த கமலா நேரு, 1936ல் புற்று நோயால் இறந்துப்போனார். கமலா நேருவின் இறப்பிற்குப் பிறகு, கடைசிவரை தனியாகவே வாழ்ந்தார்.
அரசியல் வாழ்க்கை
1919ல் நடந்த ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம்’, நேருவை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது எனலாம். இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ஆயுதம் ஏதும் இன்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல் ஆங்கில அரசு ரெஜினால்ட் டையர் என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் வெள்ளையர் ஆட்சி மீது நேருவுக்கு வெறுப்புணர்வை அதிகரித்தது மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியில் அவரை ஈடுபடுத்திக் கொள்ளவும் காரணமாக அமைந்தது.
காந்தியின் கொள்கைகள் மீது அதிக ஈடுபாடுகொண்ட நேருவும் அவருடைய குடும்பமும் விலையுயர்ந்த மேற்கு ஆடைகள் உடுத்துவதைத் தவிர்த்து கதர் ஆடையை உடுத்தினர். காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக மாறிய நேரு, 1920ல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக 1921ல் முதன் முதலாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சில மாதங்கள் கழித்து விடுதலை செய்யப்பட்ட அவர், 1924ல் அலகாபாத்து நகராட்சித் தலைவராக தேர்தெடுக்கபட்டார். இரண்டு ஆண்டுகள் தலைமை நிர்வாகியாகியாக சிறப்பாக பணியாற்றிய அவர், 1926ல் தனது பணியை ராஜினாமா செய்தார். பின்னர் 1926 முதல் 1928 வரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளராக பணியாற்றினார். முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை காந்தியின் வழிகாட்டுதலில், 1929 லாகூர் நிகழ்ச்சியைத் தலைமையேற்று நடத்தினார். பின்னர், ஜனவரி 26, 1930ல் சுதந்திரம் கோரி இந்திய சுதந்திரக் கொடி நேருவால் லாகூரில் பறக்கவிடப்பட்டது.
1945 ஆம் ஆண்டு, ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக நேரு கைது செய்யப்பட்டுப் பின் விடுதலை செய்யப்பட்டார். பின்னர், நேரு இடைகால அரசைத் தலைமையேற்று நடத்திசெல்லும்போது மத வன்முறை அரசியல் சீரழிவு மற்றும் எதிர்க்கட்சியான முகமது அலி ஜின்னா தலைமையில் முஸ்லீம் லீகின் முஸ்லிம்களுக்கான தனிநாடு கோரியது ஆகியவற்றால் அவருடைய முன்னேற்றம் தடைப்பட்டது மட்டுமல்லாமல் வேறுவழியின்றி 1947 ஜூன் 3ல் இங்கிலாந்து வெளியிட்ட திட்டத்தின்படி இந்தியாவின் பிரிவினைக்கு ஆதரவளித்தார். ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து தனி சுதந்திர நாடாக இந்தியா விடுதலைப் பெற்றது. இந்தியா சுதந்திரம் பெற்றதும், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நியமிக்கப்பட்ட நேரு அவர்களுக்கு, ஆகஸ்ட் 15, 1947 புதுதில்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனிப்பெருமை நேருவுக்கு வழங்கப்பட்டது. அன்று முதல், சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்குத் தன்னை முழுவதுமாக அற்பணித்துக்கொண்டார்.
நேருவின் படைப்புகள்
வாழ்நாளில் ஒன்பது வருடங்கள் சிறையில் கழித்த நேரு அவர்கள், சிறையில் இருந்த நாட்களில் ஒரு சில நூல்களை எழுதினார்.
இந்தப் படைப்புகள், ஒரு எழுத்தாளராக அவருக்குப் பெருமை சேர்த்தது மட்டுமல்லாமல், நற்பெயரையும் தேடித்தந்தது.
இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக நேருவின் பணிகள்
இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியாக கருதப்படும் நேரு அவர்கள், ஆகஸ்ட் 15, 1947 முதல் மே 27, 1964, அதாவது தனது இறுதிக் காலம் வரைப் பிரதமராக பணியாற்றினார். அவரது ஆட்சியில், இந்தியாவின் வளர்ச்சிக்குப் பல திட்டங்களைத் தீட்டி, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றார் என்றால் அது மிகையாகாது. 1951ல், இந்திய திட்டக் குழுவை உருவாக்கி, சுதந்திர இந்தியாவின் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை வரைந்தார். பின்னர், 1952 ல் நடந்த தேர்தலில், நேருவின் தலைமையில் காங்கிரஸ் பெரும் வெற்றிப் பெற்றது. முதல் ஐந்தாண்டுத் திட்டம், அரசாங்கத்தின் தொழிற்சாலைகளின் முதலீடு மற்றும் விவசாயத்தை வரையறுத்தது. மேலும் தொழிற்சாலைகளை அதிகப்படுத்துதல், வருமான வரிகள் மூலம் கலப்புப் பொருளாதாரத்தை உருவாக்கி சுரங்கம், மின்சாரம் மற்றும் கனரக இயந்திரங்கள் தொழிற்சாலைகள், தனியாரிடம் போவதை தடுத்து, அரசாங்கமே நடத்தத் திட்டம் வகுத்தார். நில மற்றும் பங்கீட்டை முதன்மைப் படுத்தினார். விவசாயக் கிணறுகள், அணைகள் கட்டுதல், விவசாய உற்பத்தியைப் பெருக்க உரங்கள் உபயோகிக்கும் முறையை செயல்படுத்தியது மட்டுமல்லாமல், அணு ஆற்றலில் இந்தியா சிறந்து விளங்கவும் திட்டங்களைத் தீட்டினார்.
‘இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில் தான் இருக்கிறது’ என்பதை நன்கு உணர்ந்த நேரு அவர்கள், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய மேலாண்மைக் கழகங்கள், தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற அரசாங்க உயர் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி கவனித்து வந்தார். இலவச கட்டாய கல்வித் திட்டத்தை செயல்படுத்தி ஆயிரக்கணக்கான பள்ளிகளைக் கட்டினார். சிறந்த கிராமப்புறத் திட்டங்களை ஏற்படுத்தி, பள்ளிகளில் இலவச சத்துணவு திட்டத்தையும் அமல்படுத்தினார். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு, அரசுப்பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டினை ஏற்படுத்தினார்.
நேருவின் வெளிநாட்டு கொள்கைகள்
நேரு அவர்கள், பல பிரச்சனைகளைத் திறம்பட சமாளித்து தீர்த்ததால், உலக பார்வையில், ‘சமாதானபடுத்துவதில் மன்னர்’ என்றும் ஐக்கிய நாடுகளின் வலுவான ஆதரவாளராகவும் போற்றப்பட்டார். “கூட்டுசேராக் கொள்கைகள்” மற்றும் “அணிசேரா இயக்கங்களை” உறவாக்கி, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் நடுநிலைமை வகித்தார். மனித சமுதாயத்திற்கு அணுஆயுதங்கள் உண்டாக்கும் விளைவுகளை நன்கு அறிந்ததாலும், அவை நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் என கருதி அணுஆயுதக் கொள்கையை நேரு அவர்கள் ஆதரிக்கவில்லை என கூறப்படுகிறது. 1954 ல், நடைபெற்ற திபெத்தின் மீதான சீன-இந்திய உடன்படிக்கை, பஞ்சசீலக் கொள்கைகளின் அடிப்படையாக இருந்தாலும், பல காரணங்களால் சீன இந்திய உறவு இன்றளவும் பிளவுப் பட்டுத்தான் காணப்படுகிறது. இருந்தாலும், மிக சக்திவாய்ந்த வெளியுறவுக் கொள்கைகளால் நவீன இந்திய அரசாங்கத்தை, அரசியல் காட்சாரத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.
நேருவின் பெயரை பறைச்சாற்றும் நினைவுச்சின்னங்கள்
இறப்பு
1964 ஆம் ஆண்டு, மே மாதம் 27 ஆம் தேதி நேரு அவர்கள், மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருடைய உடல், யமுனை நதிக்கரையில் உள்ள சாந்திவனத்தில் தகனம் செய்யப்பட்டது. ஒரு சுதந்திரமான, சமத்துவமான ஜனநாயக நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நேருவின் கனவுதான் இந்தியாவிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது என்றால் அது மிகையாகாது.

பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள், எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். தமிழகத்தின் மிகப்பெரிய கழகமான திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர். பெண்விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும், திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும் எதிர்த்துப் போராடிய சமூக சீர்திருத்தத்தின் தந்தை. தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் இந்தியாவின் கண்ணிராத பகுத்தறிவு சிற்பி என்றும் போற்றப்பட்ட ஈ.வெ. ராமசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை இங்கு விரிவாக காண்போம்.
பிறப்பு: செப்டம்பர் 17, 1879
இடம்: ஈரோடு, தமிழ்நாடு(இந்தியா)
இறப்பு: டிசம்பர் 24, 1973
பணி: அரசியல்வாதி, சமூக சேவகர்.
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு:
ஈ.வெ. ராமசாமி அவர்கள், 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் நாள் வெங்கட்ட நாயக்கருக்கும், சின்னதாயம்மைக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர், ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர். இவருக்கு கிருஷ்ணசாமி என்ற சகோதரனும், கண்ணம்மா மற்றும் பொன்னுதாயி என்ற சகோதரிகளும் இருந்தனர். இவருடைய குடும்பம் வசதியான வணிக பின்னணியைக் கொண்டதாக இருந்தது.
ஆரம்ப வாழ்க்கை:
தனது படிப்பை ஐந்தாம் வகுப்புவரை முடித்துகொண்ட ஈ.வெ.ரா, அதன் பின் கல்வி பயில விருப்பம் இல்லாததால் தன்னுடைய 12 வது வயதில் தந்தையின் வணிகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தன்னுடைய இளம் வயதிலேயே, தனது பகுத்தறிவு சிந்தனையால், திராவிடத்தை சதியால் அடக்கியாண்ட ஆரியத்தை பல கேள்விகள் கேட்கத்தொடங்கினார். அவருடைய 19 வது வயதில்,13 வயது நிரம்பிய நாகம்மையாரை மணந்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு நாகம்மையார் தன்னுடைய கணவரின் புரட்சிக்கு முழுவதுமாக தன்னை அற்பணித்துக்கொண்டார். திருமணமான இரண்டு ஆண்டுகளில் ஒரு பெண்குழந்தை பிறந்தது ஆனால், அந்த குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்துவிட்டது.1902 ஆம் ஆண்டுகளில் கலப்புத் திருமணங்களைநடத்திவைத்தார். அனைத்து சமய, சாதியினருடனும் சேர்ந்து விருந்துண்டார். இதனால் இவருக்கும், இவருடைய தந்தைக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. பின்னர்,இவருடைய பகுத்தறிவு செயல்களை ஏற்கமுடியாத தந்தையின் கண்டனத்தால் துறவு பூண்டு காசிக்கு சென்றார்.
காசிக்கு பயணம்:
காசியில் அவருக்கு நடந்த நிகழ்வு அவரின் எதிர்கால புரட்சிகரசிந்தனைக்கு வித்திட்டது. பெரியாருக்கும் அவரது தந்தைக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் காசிக்கு சென்ற அவருக்கு, அங்கு பிராமணரல்லாதார் வழங்கும் நிதியில் நடத்தப்படும் அன்னசத்திரத்தில் உணவு மறக்கப்பட்டு வீதியில் தள்ளப்பட்டார். இந்த நிலைமையை எண்ணி மிகவும் வருந்தினார். பின்னர் குப்பைத் தொட்டியில் விழும் எச்சில் இலைகளின் உணவை உண்டு பசியாற்றினார். அதுமட்டுமல்லாமல், காசியில் வேசிகளின் வேசமும், திராவிடர்கள் பிச்சைகாரர்களாக இருப்பதையும் மற்றும் புனித கங்கையில் பிணங்கள் மிதப்பதையும் கண்ட அவர் அன்றிலிருந்து இறைமறுப்பாளராக(ஒரு நாத்திகவாதியாக) தன்னை மாற்றிக் கொண்டார்.
ஆரம்பகால அரசியல் வாழ்க்கை:
காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் ஈடுபாடுகொண்ட பெரியார்,1919 ஆம் ஆண்டு தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றியதுமட்டுமல்லாமல் பிறருக்கும் எடுத்துக்கூறினார். வெளிநாட்டு துணிகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல் போராட்டங்களையும் நடத்தினார். 1921 ஆம் ஆண்டுகள்ளுக்கடைகளை மூட வலியிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்,தன்னுடைய தோட்டத்திலிருந்த 500 தென்னைமரங்களை வெட்டிச்சாய்த்தார். இப்போராடத்தில்,கைது செய்யப்பட்டு சிறைதண்டனையும் பெற்றார்.1921-1922-ல் ஒத்துழையாமை மற்றும் மிதமாக மதுகுடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியலில் ஈடுபாட்ட அவர், மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.1922-ல் சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். பின்னர், திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். ஆனால்,இது இனவேற்றுமையை பிரதிபலிப்பதாக அமைவதால் அன்றைய காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் ஏற்க மறுத்தனர். இதனால் பெரியார் 1925- ல் அக்கட்சியை விட்டு விலகினார்.
வைக்கம் போராட்டம்:
பெரியாருக்கு காந்தியின் கொள்கைகளில் ஒரு வலுவான நம்பிக்கை இருந்தது. கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் அரிசன மக்கள் என்றழைக்கப்படும் தலித் மக்களும், ஈழவர்களும் கோயில் இருக்கும் வீதிகளில் நடக்கவும் கோயிலுக்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. 1924 ஆம் ஆண்டு டி.கே. மாதவன் அவர்கள், இதை எதிர்த்து காந்திய வழியில் சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கினார். இப்போராட்டதில், நாடெங்குமுள்ள காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தமிழகத்தின் சார்பாக தந்தை பெரியார் கலந்துகொண்டார் பின்னர்,கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். அவருடைய துணைவியான நாகம்மையாரும் இப்போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பெரியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டபோதிலும், அவருடைய தொண்டர்கள் கைவிடாது போராட்டத்தை தொடர்ந்ததால் வெற்றியும் கிட்டியது. இந்த போராட்டதிற்கு பிறகு பெரியார் ‘வைக்கம் வீரர்’ என தமிழக மக்களால் அழைக்கப்பட்டார்.
சுயமரியாதை இயக்கம்:
1925 ஆம் ஆண்டு பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் முக்கிய கொள்கையே ‘மூடபழக்க வழக்கங்களை சமுகத்தில் மக்களிடம் இருந்து அகற்றுவதை’ நோக்கமாக கொண்டு செயல்பட்டது.தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைபிடிக்கும் பார்ப்பனியம், பெண்களை தாழ்வாக கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து குரல்கொடுத்தார். தென்னிந்தியாவில் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர் வாழ்வு சுரண்டப்படுவதையும், பெரியார் எதிர்த்தார். கைம்பெண் மறுமணம் போன்ற புரட்சி திருமணங்களை நடத்திக்காட்டியது மட்டுமல்லாமல் கலப்பு திருமணமுறையையும் இவ்வியக்கம் ஆதரித்தது. கோயில்களில் சட்டத்திற்கு புறம்பாக பின்பற்றப்படும் தேவதாசி முறையையும், குழந்தைகள் திருமணத்தையும் தடைசெய்தது.அரசு நிர்வாகப் பணி மற்றும் கல்வி ஆகியவற்றில் இடஒதுக்கீடு முறையை கடைபிடிக்க இவ்வியக்கம் வலியுறுத்தியது. பின்னர், தன்னுடைய கொள்கைகளையும் சிந்தனைகளையும் பரப்புவதற்கு “குடியரசு நாளிதழை” 1925 ஆம் ஆண்டு தொடங்கினார். சுயமரியாதை இயக்கம், வெகுவேகமாக வளர்ந்தது மட்டுமல்லாமல், மக்களின் ஆதரவையும் பெற்றது. சுயமரியாதையாளர்கள் ஈரோடு மற்றும் பிற மாவட்டங்களிலும்,மாநாடுகளும், கூட்டங்களும் நடத்தப்பட்டு மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 1929 முதல் 1932 வரை மலேசியா, ரஷ்யா, ஐரோப்பா, பிரான்ஸ், ஜெர்மனி, கிரிஸ், சிங்கப்பூர், இலங்கை, மேலும் பல வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தன்னுடைய சுயமரியாதைக் கொள்கைகளை விளக்கிக்கூறினார்.
இந்தி எதிர்ப்பு:
1937 ஆம் ஆண்டு சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றபிறகு ‘இந்தி’ கட்டாயமொழியாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் வெடித்தன. இந்தி பேசும் வடஇந்தியர்களிடமிருந்து தமிழர்களை பிரித்து இரண்டாம் தர குடிமக்களாக காட்டுவது மட்டுமல்லாமல், தமிழர்களின் முன்னேற்றத்தையும், பண்பாட்டையும் சிதைத்து விடும் என வலியுறுத்தி 1938- ல் நீதிக்கட்சியின் சார்பாக பெரியார் மற்றும் சர்.ஏ.டி. பன்னீர் செல்வம் தலைமையில் நடந்த போராட்டத்தில் பெரியாருடன் பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். 1939 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட பெரியார் “நீதிக்கட்சியின்”(1916 ஆம் ஆண்டு பிராமணர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட தென்னிந்திய நலஉரிமை சங்கம் என்ற அரசியல் கட்சி பின்னாளில் நீதிக்கட்சியாக மாறியது) தலைவராக பொறுப்பேற்றார். அவரது தலைமையில் நீதிக்கட்சி பெரும் வளர்ச்சிப்பெற்றது. இருப்பினும், நீதிக்கட்சியில் பெரும்பாலான உறுப்பினர்கள் செல்வந்தராகவும், கல்வியறிவு பெற்றவர்களாகவும் இருந்ததால், பெரியாரின் கீழ் செயல்பட மனமில்லாமல் கட்சியிலிருந்து விலகினார்.
பெரியாரின் திராவிட கழகம்:
பெரியார் அவர்கள், நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு ‘நீதிக்கட்சி’ என்ற பெயரை 1944-ல் ‘திராவிட கழகம்’ என பெயர் மாற்றினார். திராவிட கழகத்தின் கொள்கைகள் வெகு விரைவில் மக்களிடத்தில் சேர்ந்தது. திராவிடர் கழகம், சமுகத்தில் பரவிக் கிடந்த தீண்டாமையை ஒழிப்பதிலும், சுயமரியாதை, சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, இறைமறுப்பு, பெண் உரிமை மற்றும் பெண்கல்வி போன்றவற்றையும் வலியுறுத்திதொடங்கப்பட்ட ஒரு சமூக இயக்கமாகும்.‘கருப்பு சதுரத்தின் நடுவே சிவப்பு வட்டம்’ என்பதே திராவிட கழகத்தின் கொடியாக இருந்தது.
பெரியாருக்கும் அண்ணாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு:
பெரியாரின் திராவிட கழகம், சமுதாய மறுமலர்ச்சி, விழிப்புணர்வு, மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு போன்ற கொள்கைகளை சார்ந்து இருந்ததால், திராவிட கழகத்தை அரசியல் கட்சியாக மாற்ற பெரியார் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாமல்,‘திராவிடநாடு’ அல்லது ‘தனி தமிழ்நாடு’ என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். ஆனால் கா.ந. அண்ணாதுரை மத்திய அரசுடன் இணைக்கமாக இருந்து கொண்டு கூடுதல் அதிகாரங்களை கொண்ட மாநில சுயாட்சியை பெறுவதில் அக்கறை காட்டினார். இதனால் இருவருக்குமிடைய கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. திராவிட கழகத்தின் தொண்டர்களும், உறுப்பினர்களும் கழகத்திலிருந்து விலக சரியான நேரத்தை எதிர்நோக்கி காத்திருந்தபொழுது, ஜூலை 9, 1948 ஆம் ஆண்டு பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான மணியம்மையை மறுமணம் புரிந்து கொண்டதை காரணம் காட்டி, அண்ணாதுரை தலைமையிலான திராவிட கழகத்திலிருந்து விலகினார். பின்னர் கா.ந. அண்ணாதுரை தனது வழிகாட்டியான பெரியாரிடமிருந்து பிரிந்து,1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
இறுதிகாலம்:
இந்து மத மூடநம்பிக்கைகளை அறவே எதிர்த்த பெரியார்,1952-ல் பிள்ளையார் உருவ பொம்மைகளை உடைத்தது மட்டுமல்லாமல்,1956 ஆம் ஆண்டு இந்துக்களின் கடவுளாக கருதப்பட்ட ராமரின் உருவப்படம் எரிப்புப் போராட்டத்தையும் நடத்தி, கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர்,1962 –ல் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளராக கி. வீரமணியை நியமித்தார். மக்களுக்குள் சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம் ஓங்கி வளரவேண்டும் என்று கடைசிவரை போராடிய பெரியாரின் கடைசி கூட்டம் 1973 டிசம்பர் 19 ஆம் தேதி சென்னை தியாகராஜர் நகரில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ‘சாதிமுறையையும், இழிவுநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடவேண்டும்’ என்று முழக்கமிட்டு தன்னுடைய கடைசி உரையை முடித்துக்கொண்டார்.
புனைபெயர்கள்:
இவருடைய சமுதாய பங்களிப்பைப் பாராட்டி ‘யுனஸ்கோ நிறுவனம்’ ஜூன் 27, 1973 ஆம் ஆண்டு பெரியாரை ‘புத்துலக தொலைநோக்காளர்’, ‘தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ்’, ‘சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை’ என பாராட்டி விருது வழங்கியது. அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் ‘கடும் எதிரி’, ‘பகுத்தறிவு பகலவன்’, ‘வைக்கம் வீரர்’மற்றும் ‘தந்தை பெரியார்’ என பல்வேறு பெயர்களில் அழைக்கபடுகிறார்.
இறப்பு:
‘பகுத்தறிவின் சிற்பி’,‘அறிவு பூட்டின் திறவுகோல்’, எதையும் ‘ஏன்? எதற்கு? எப்படி?’ என்று கேட்கவைத்தவர், மூட நம்பிக்கையை ஒழித்துத் தன்னம்பிக்கையை விதைத்தவர், உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்தை பெரியார், டிசம்பர் 24, 1973 ஆம் ஆண்டு தனது 94 வது வயதில் காலமானார்.
பலநூற்றாண்டு கால வரலாற்றை வெறும் இருபது வருடங்களில் நிகழ்த்திக்காட்டிய வரலாற்றுத் தேடல்; மனிதகுல வரலாற்றில் தன் மக்களின் விடியலுக்காகப் போராடிய மாபெரும் விரர்; இந்திய விடுதலையில் பங்காற்றி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராயிருந்து, மதுவிலக்குக் கொள்கைகளை காந்திக்கு எடுத்துரைத்து, சுயமரியாதை இயக்கம் கட்டமைத்து, சீர்திருத்த திருமணம் என்ற ஒரு புதிய வாழ்க்கை ஒப்பந்த முறையை சட்டமாக்கி, தன் தமிழினம் தலைநிமிர்ந்து வாழ வகைசெய்த பகுத்தறிவு பகலவன், திராவிடம் என்கிற பல நூற்றாண்டு கால வரலாற்றின் ‘வெற்றி நாயகன்’என இன்னும் சொல்லிக்கொண்டே போகக்கூடிய அரும்பணியை ஆற்றிய மாபெரும் சிந்தனையாளர் ‘பெரியார்’ என்றால் அது மிகையாகாது.
காலவரிசை:
1879 – செப்டம்பர் 17 ஆம் தேதி ஈரோட்டில் பிறந்தார்.
1898 – நாகம்மையாரை மணந்தார்.
1904 – காசிக்கு சென்று ஒரு நாத்திகவாதியாக திரும்பினார்.
1919 – இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
1922 – மெட்ராஸ் ப்ரிசிடென்ஸி காங்கிரஸ் கமிட்டி தலைவரானார்.
1925 – இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.
1924 – வைக்கம் போராட்டத்தை நடத்தினார்.
1925 – சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது.
1929 – ஐரோப்பா, ரஷ்யா, மற்றும் மலேஷியா போன்ற சர்வதேச நாடுகளுக்கு பயணம்.
1929 – தன்னுடைய பேருக்கு பின்னால் இருந்த ‘நாயக்கர்’ என்ற பட்டத்தைத் துறந்தார்.
1933 – பெரியாரின் துணைவியாராகிய நாகம்மையார் மரணம்.
1938 – தமிழர்கள் வாழும் நாடு தமிழர்கே என முழங்கினார்.
1939 – நீதி கட்சி தலைவரானார்.
1944 – நீதி கட்சியின் பெயர் ‘திராவிட கழகம்’ என மாற்றப்பட்டது.
1948 – ஜூலை 9, ஆம் தேதி பெரியார் மணியம்மையை மறுமணம் புரிந்து கொண்டார்.
1949 – பெரியார் மற்றும் கா.ந.அண்ணாதுரையிடையே பிளவு ஏற்பட்டு ‘திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டது.
1973 – பெரியார் டிசம்பர் 24 ஆம் தேதி, தனது 94 வது வயதில் காலமானார்.