நன்னன் என்னும் வேளிர் இருவர்!

254 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Dec 20, 2008, 6:28:10 PM12/20/08
to Min Thamizh
குறுநில மன்னருட் சிலர் "வேளிர்" என்று அழைக்கப்பெற்றனர்.
 
நன்னன் என்ற பெயருடைய இருவேளிர் தமிழகத்தின் இருவேறு பகுதிகளை ஆட்சி புரிந்துள்ளனர் என்பதைச் சங்கப் பாடல்கள் மூலம் அறிய முடிகின்றது.
 
அவ்விருவருள்;
  • ஒருவன் கொண்கான நன்னன் வேள்மான்
  • மற்றொருவன் செங்கண்மாத்துவேள் நன்னன் சேய்நன்னன்
கொண்கான நன்னன் பற்றிய செய்திகளை,
  • அகநானூறு
  • நற்றிணை
  • குறுந்தொகை

ஆகிய தொகை நூல்களில் இடம் பெற்றுள்ள அகப்பாடல்கள் வாயிலாக அறிய முடிகிறது. நன்னன் சேய் நன்னன், இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார் இயற்றிய "மலைபடுகடாம்" என்னும் கூத்தர் ஆற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் ஆவான். இவன் தந்தையும் நன்னன் என்ற பெயரைப் பெற்றிருந்தமையால், இவன் நன்னன் சேய் நன்னன் என்று அழைக்கப் பெற்றான் போலும்.

கொண்கான நன்னன் இன்றைய மலையாளப் பகுதியின் மேற்பால் மேலைக் கடலோரத்திலுள்ள பூழிநாட்டை ஆண்ட ஒரு சிற்றரசன். இவன் "நன்னன் உதியன்" எனக் குறிப்பிடப்படுவதால் சேரன் பரம்பரையினன் எனலாம். இந்நன்னனது பூழிநாடு கொண்கான தேசமெனவும் கூறப்படுமென்பதை "பொன்படு கொண்கான நன்னன்" (நற்-391) என்பதால் அறிய முடிகின்றது. பெருவாயில், பாரம், பிரம்பு, வியலூர் என்பன இவனுடைய ஊர்கள். ஏழில்மலை, பாழிச் சிலம்பு என்பன இவனுடைய மலைகள்.

இந்நன்னன் சிறந்த கொடையாளி; இரவலர்க்கு யானை முதலியவற்றைப் பரிசாக அளிப்பவன். இவன் தன் ஆற்றலால் பிண்டனோகும் பிற மன்னரோடும் போர் செய்து அவரைக் கொன்று அவர் உரிமை மகளிரைப் பற்றி வந்து அம்மகளிர் தலைகளைச் சிரைத்து, அக்கூந்தலைக் கயிராகத் திரித்து அக்கயிற்றினால் பகையரசர்களின் யானைகளைப் பிணித்து வந்தான் (நற் 270-பரணர்). அம்மன்னரிடமிருந்து கைப்பற்றிய பொருளைப் பாழி என்ற நகரில் சேமித்து வைத்திருந்தான்.

வீரச் சிறப்பும், வெற்றிச் சிறப்பும் மிக்க இவனே "பெண்கொலை புரிந்த நன்னன்" எனப் பரணரால் பழித்தும் பேசப்படும் நிலைக்கு ஆளாகிறான். நீரில் அடித்து வரப்பட்ட மாங்காயை ஒரு பெண் எடுத்துத் திண்றாள் என்ற குற்றத்திற்காக நன்னன் அவளுக்குக் கொலை தண்டனை விதிக்கிறான். அக்குற்றத்திற்காக அவள் தந்தை 81 களிறுகளையும், அவளின் எடையளவுள்ள பொன்னாலான ஒரு பாவையையும் கொடுப்பதாகச் சொல்லியும் அதனை ஏற்றுக் கொள்ளாது அவளைக் கொலை புரிந்து பெரும்பழி எய்துகிறான் (குறு-292-பரணர்).

நன்னன் படைத் தலைவனாக விளங்கியவன் "மிஞிலி" என்ற மாவீரன். அக்காலத்துச் சேரநாட்டை ஆண்ட களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரலின் படைத் தலைவன் ஆய் எயினன் என்பவன். மிஞிலி ஆய் எயினனோடு பொருது அவனைக் கொன்றான். ஆய் எயினன் போரில் மாண்ட செய்தியறிந்த நார்முடிச் சேரல் நன்னனுடன் போரிட்டான். இப்போரின் இறுதியில் சேரன் படைக்கு ஆற்றாது வீழ்ந்து நன்னன் இறந்துபட்டான் (அகம்-199-கல்லாடனார்).

இந்நன்னன் சேய் நன்னனது நாடு பல்குன்றக் கோட்டம். இது தொண்டை நாட்டின் ஒருபகுதி. இந்நாட்டின் தலைநகரம் செங்கண்மா. இதனைச் செங்கம்மா எனவும், செங்கைமா எனவும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. தற்போது செங்கம் என்னும் பெயரால் வழங்கும் இவ்வூர் திருவண்ணாமலைக்கு மேற்றிசையில் உள்ளது. இந்நாட்டிலுள்ள மலை - நவிரமலை. இது தற்போது "சவ்வாதுமலை" எனப் பெயர் பெறும். மலைத் தொடரின் தெற்கில் சேயாற்றில் தென்கரையிலும் அமைந்துள்ள ஊர் செங்கண்மா. நவிரமலையில் உற்பத்தியாகும் ஆறு சேயாறு. இது தற்போது "செய்யாறு" எனப் பெயர் பெறும். நவிரமலையில் உறையும் இறைவன் காரியுண்டிக் கடவுள். தற்போது இறைவன் பெயர் "காளகண்டேஸ்வரர்."

இந்நன்னன் பகைப்புலத்தைப் பாழ்படுத்தும் கிட்டுதற்கரிய வலிமை உடையவன். கேட்டினை நினையாது ஆக்கமே கருதுபவன். விற்றொழில் பயின்ற கையினையுடையவன். தன்கெடாத புகழ் உலகம் உள்ளளவும் நிற்குமாறு பல மன்னரைப் புறங்கண்டவன். அவர்கள் திறையாகத் தந்த அணிகலன்களைப் புலவர்க்கு மழைபோல் வழங்குபவன். தன்னை இகழ்வாரைப் பிணிக்கும் ஆற்றலுடையவன். தன்னைப் புகழ்ந்துபாடும் கலைஞர்க்கு, தான்வெற்றி கொண்ட அரசு முழுவதும் கொடுத்தாலும் நிறைவடையா வளத்தினன். மழையை மிகுதியாகப் பொழியும் பருவம் பொய்யா மேகம் பின்னரும் பெய்யுமாறு போல மாறாமல் கொடை வழங்கிய வண்ணம் அரசவையில் வீற்றிருப்பவன். இருள் நீக்கும் ஞாயிறு போன்று பகையிருள் நீக்கும் பண்பினன்.

நன்னன் தான் வாழும் நாட்கள் புகழுடன் கழிவதாக எனக் கருதுபவன். வான் போன்ற விரிந்த நெஞ்சினன். பரிசிலரை முகத்தால் அமர்ந்து இனிது இன்சுவை உணவும் தந்து மகிழ்விப்பவன். அவர்கள் விடை பெறுங்கால் கூத்தர்க்குப் பொற்றாமரையும், விறலியர்க்குப் பொன் அணிகலன்களும் வழங்குபவன். மேலும் அவர்க்குத் தேர்களையும் யானைகளையும் குதிரைகளையும் பசுக்களையும் வழங்கி மகிழ்பவன்.

 
கொண்கான நன்னன் பெண்கொலை புரிந்து அழியா வசைக்கு ஆளாகிறான். நன்னன் சேய் நன்னன் வசையில் சிறப்புடை இசைமேந்தோன்றலாக விளங்குகிறான்.
 
முனைவர் ப.சுப்பிரமணியன்
 
நன்றி: தமிழ்மணி (தினமணி)

Reply all
Reply to author
Forward
0 new messages