ஆய்வுப் பேரறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் எழுதிய "மகேந்திரவர்மன்" (1955) என்ற நூலில் இடம் பெற்றுள்ள "ஓவியங்கள்" என்ற கட்டுரையில் சித்தன்னவாசல் குகைக் கோயிலின் "அரசன் அரசி" ஓவியம் குறித்து கீழ் வருமாறு குறிப்பிடுகிறார்: மகேந்திரவர்ம பல்லவன் காலத்துச் சித்திரங்கள் பெரும்பாலும் மறைந்துவிட்டன. நற்காலமாக இப்போது கிடைத்திருப்பவை, காலப்பழமையினால் வண்ணங்கள் மங்கிப்போய் அரைகுறையாக அழிந்துபட்ட நிலையில் சித்தன்னவாசல் குகைக்கோயிலில் காணப்படுகிற ஓவியங்களே. சித்தன்னவாசல் குகைக் கோயிலில், மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்ட சமணக்கோயில் ஆகும். அங்குக் காணப்படுகிற சுவர் ஓவியங்கள் முக்கியமாக நான்கு. அவற்றில் முதலாவது, அரசன் அரசி ஆகிய இருவரின் ஓவியங்கள். இவை மார்பளவு வரையில் காணப்படுகின்றன. கிரீடங்களுடன் காணப்படும் இவை ஓர் அரசன் அரசியின் ஓவியங்களைக் குறிக்கின்றன. உண்மையில் இந்த ஓவியம் மகேந்திரவர்மனையும் அவனுடைய பட்டத்தரசியையும் குறிக்கிறது என்பதில் ஐயமில்லை; என்கிறார் மயிலை சீனி வேங்கடசாமி.
சித்தன்னவாசல் குடைவரைக்கோயிலின் ஓவியங்கள் :சித்தன்னவாசல் குடைவரைக்கோயிலின் ஓவியங்கள் பல்லவர் காலத்து ஓவியம் என்று இதன் கலைப் பண்பின் செழுமையையும் இதில் காணும் பல்லவர் பாணியின் தாக்கத்தினையும் கண்டு வரலாற்று ஆய்வாளர் பலரும் எண்ணி இருந்தனர். மகேந்திர பல்லவன் கல்வெட்டுகள் திருச்சி மாவட்டத்தில் காவிரிக் கரையோடு நின்றுவிடுகின்றன என்பதாலும், மகேந்திர வர்மனின் கல்வெட்டு என்று உறுதியாகக் கூறும் கல்வெட்டுகள் காவிரிக்குத் தெற்கே இல்லை என்பதாலும் மகேந்திர வர்மன் ஆட்சியில் இல்லாத புதுக்கோட்டை மாவட்டத்துச் சித்தன்னவாசல் குடைவரைக் கோயிலை மகேந்திர வர்மன் காலத்தது என்று கருதுவது பொருத்தம் அற்றது என்பது இக்காலத்து வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து.
மேலும்; பாண்டிய மன்னன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் ஆதரவுடன் மதுரை ஆசிரியரான இளங்கௌதமன் என்ற சமண முனிவர் சித்தன்னவாசல் அறிவர் கோயிலின் அகமண்டபத்தைப் புதுப்பித்து முகமண்டபத்தை எடுத்ததாகக் குடைவரையில் பொறிக்கப் பட்ட பாடல் வடிவில் உள்ள கல்வெட்டு கூறுகிறது.
"திருத்திய பெரும்புகழ்த் தைவ தரிசனத்
தருந்தவ முனிவனைப் பொருட்செல்வன்
அறங்கிளர் நிலைமை இளங்கௌ தமனெனும்
வளங்கெழு திருநகர் மதிரை ஆசிரியன்
அவனேய் பார்முழுதாண்ட பஞ்சவர் குலமுத
லார்கெழு வைவேல் அவநீப சேகரன்
சீர்கெழு செங்கோல் சிரீவல்லவன்
என்றிப் பலவுங் குறிகொள் இனிதவை . . . . . . . . .
பண்ணவர் கோயில் பாங்குறச் செய்வித்து
அண்ணல்வாஇ லறிவர் கோஇன்
முன்னால் மண்டகம் கல்லால் இயற்றி . . . . . . . . . . . .
அழியா வகையாற் கண்டனனே . . . . . . . . . . . .
சீர்மதிரை ஆசிரியனண்ண லகமண்டகம்
புதுக்கி ஆங்கறிவர்கோயில் முகமண்டக
மெடுத்தான் முன்"இக்கல்வெட்டுச் செய்தியின் அடிப்படையில், சித்தன்னவாசலிலுள்ள ஓவியங்கள் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு மன்னரான அவனி சேகரன்
என்ற பாண்டியன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் (கி.பி.815 - கி.பி.860) காலத்தவை என்று கருதப்படுகிறது. இவை வெண்சுதையின் மீது பொருத்தமான மூலிகை வண்ணங்கள் கொண்டு வரையப் பட்ட பாண்டியர் காலத்து ஓவியங்களாகும். முகமண்டபத்து இடப்புறத் தூணில் எட்டுப் பட்டைக் கொண்ட இடைப்பகுதியில் உட்புறத்தில் கிரீட மகுடத்துடன் அரசனினும் அவனது அரசியும் சமணத் துறவி ஒருவருடன் காட்சியளிக்கின்றனர். இவர்களில் சமணத் துறவி இவ்வோவியங்கள் உருவாவதற்கும் குடைவரை புதுப்பிக்கப் படுவதற்கும் காரணமாக இருந்த இளங்கௌதமனாக இருக்க வேண்டும் என்றும், அரசன் அரசியின் உருவங்கள் சமண முனிவர்க்கு ஆதரவளித்த பாண்டியன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் மற்றும் அவனது தேவியின் உருவங்களாக இருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது.
அடிக்குறிப்புகள்:https://www.tamilvu.org/courses/diploma/d061/d0612/html/d0612663.htmhttps://tamildigitallibrary.in/Articles/வரலாற்றுச்%20சின்னம்-86-சித்தன்னவாசல்%20குடைவரை-சித்தன்னவாசல்%20மலை