மணிமேகலை கருத்தரங்கத்தில் பேசுவதற்காக இந்நூலைப் படிக்கத் துவங்கினேன். சிலப்பதிகாரம் என்ற பெரும் மாயையில் இந்நூல் அவ்வளவாக தமிழ்அறிஞர்களால் போற்றப்படவில்லை என்று கூறுகிறார்கள். பெளத்த காப்பியம் என்ற அடையாளத்தால், படிப்பார் யாரும் இல்லாமையால் அவ்வாறான
நிலை ஏற்பட்டிருக்கலாம் என்பதையும் கருத்தில் கொள்ளலாம்.
வேறெந்த மெய்யியலுக்கும் இல்லாத சிறப்பு பெளத்த தத்துவதிற்குண்டு. சற்றொப்ப, கி.மு.5ஆம் நூற்றாண்டு முதற்கொண்டு கி.பி.15ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்த மெய்யியல் கருத்தாக்கங்கள் நடைப்பெற்று வந்திருக்கின்றன. தெளிந்த நீரோட்டம் போல ஓடிக்கொண்டேயிருந்ததால், கிட்டதட்ட நூற்றிற்கு மேற்பட்ட பெளத்த பிரிவுகள் உள்ளன.
மணிமேகலையின் சிறப்பம்சமாக யான் கருதும் சில கருத்துக்களை இங்கு பகிர்கிறேன். தெரிந்தவர்கள் மேலதிக தகவல்கள் தரலாம்.
1. தமிழில் தோன்றிய ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று மணிமேகலை. இது ஒரு பெளத்த காப்பியம்.
2. இதன் காலம் - சரியாக சொல்ல முடியாவிட்டாலும், கிபி.இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டுவரை இடைப்பட்டகாலக்கட்டத்தில் எழுந்தது என்பதை யாரும் மறுப்பாரில்லை.
3. கி.பி.இரண்டாம் நூற்றாண்டு என்பது பல அறிஞர்கள் கருத்தாகவிருக்கிறது.
4. கணிகைக் குல பெண்ணொருத்தியை காப்பியத்தின் தலைமகளாகக் கொண்டிலங்கும் முதல் காப்பியமும் இதுவே.
4. இந்திய இலக்கியங்களில் முதன் முதற் சமய மெய்யியல்களை எடுத்தியம்பும் முதல் நூலும் இதுவே. (கி.பி.இரண்டாம் நூற்றாண்டு என்ற எடுகோளின் படி)
5. தானத்தின் (அன்னம்) சிறப்பை எடுத்தோதும் இலக்கியமும் இதுவே.
6. சுகபோக வாழ்க்கை கிடைப்பதையும் பொறுட்டாக எண்ணாமல், துறவு வாழ்க்கைக்கு போன இரு இளம் பெண்ணின் கதையும் இதுவாகத்தான் இருக்கும்.
இரா.பானுகுமார்,
சென்னை