கொடையளித்த அரசி - இரா. கலைக்கோவன்

80 views
Skip to first unread message

தேமொழி

unread,
Mar 31, 2024, 2:27:23 AM3/31/24
to மின்தமிழ்
கொடையளித்த அரசி

-- இரா. கலைக்கோவன், வரலாற்றாய்வாளர்


தமிழ்நாட்டுக் கலை வரலாற்றில் சிறப்பிடம் பெற்றிருந்தபோதும் பொது வெளிச்சத்திற்கு வராத  பெண்ணரசிகள் பலராவர். அவர்களுள் பூதி ஆதித்தபிடாரி குறிப்பிடத்தக்கவர். 'கொடும்பை' என்று சிலப்பதிகாரத்தால் சுட்டப்படும் கொடும்பாளூரையும் அதன் சுற்றுப்பகுதிகளையும் தம் ஆட்சியின் கீழ்க் கொண்டிருந்த வேளிர் மரபின் குலக்கொழுந்து இவர். 

முதற் பராந்தகர் சோழநாட்டின் ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாம் ஆண்டிலேயே கொடும்பாளூர் அரசர் மறவம்பூதியின் மகளாகவும் பராந்தகரின் மருமகளாகவும் அவரது புதல்வர்களுள் ஒருவரான அரிஞ்சய சோழரின் தேவியாகவும் கல்வெட்டு வெளிச்சம் பெறும் இவ்வம்மையே சிராப்பள்ளிக் குழித்தலைப் பெருவழியில் காவிரியின் தென்கரையிலுள்ள திருச்செந்துறைக் கோயிலைக் (சந்திரசேகரசாமி கோயில்) கற்றளியாக்கிய பெருமைக்குரியவர்.

ஆதித்தபிடாரி, இரண்டு தளங்கள் பெற்ற இணையகமும் அதன் முன் முகமண்டபமும் எனத் தம்மால் எழுப்பப்பெற்ற திருச்செந்துறைக் கோயிலை, 'நான் எடுப்பித்த கற்றளி' என்று கல்வெட்டுப் பொறித்து அடையாளப் படுத்தியுள்ளார். இத்தகு மொழிதல்கள் இல்லாமற் போனதால்தான் தமிழ்நாட்டுக் கோயில்கள் பல யாரால், எக்காலத்தே உருவாக்கப்பட்டன என்பதை அறியமுடியாதுள்ளது.

பொ. ஆ. 910இல் பூதி ஆதித்தபிடாரியால் கற்றளியான இக்கோயிலில் 59 கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள், ஏறத்தாழ நான்கில் ஒரு பங்குக் கல்வெட்டுகள் இக்கோயிலுக்கும் இங்குப் பணியாற்றிய ஊழியர்களுக்கும் அவ்வம்மை கருதிச்செய்த ஏற்பாடுகளைச் செவ்வனே பதிவு செய்துள்ளன. இறைவனுக்கான வழிபாடு, படையல்கள், மலர்த் தேவைகள், விளக்குகள் ஆகியவை எக்காலத்தும் குறைவின்றி அமையச் செந்துறை வாழ் மக்களிடமும் அவ்வூரை நிருவகித்த ஊராட்சியினரிடமும் பல நிலத் துண்டுகளை விலைக்குப் பெற்று கோயில் ஆட்சியரிடம் ஒப்புவித்ததுடன், உரியவைப்புத் தொகையை ஊராட்சிக்குச் செலுத்தி அந்நிலத்துண்டுகளை வரியற்றவையாக்கியவர் இவ்வம்மை.

இறைவனுக்கு அளிக்கப்படும் நிலம் தேவதானமாகவும் வரி நீக்கப்பட்ட நிலையில் அது இறையிலித் தேவதானமாகவும் கல்வெட்டுகளில் சுட்டப்படுகிறது.  இந்நில  வாங்கல்-வழங்கல்களால் சோழர் கால நிலவிற்பனைநிலஞ்சார் வரியினங்கள், ஆவண நடைமுறைகள் ஆகியவற்றை அறியமுடிவதுடன், ஆட்சியாளரின்  வருவாய்த் துறைச் செயற்பாடுகளையும் விளங்கிக்கொள்ள முடிகிறது.

கொடும்பாளூர் இளவரசி எடுப்பித்த கோயில் என்பதால் கொடும்பாளூர்க் குடும்பமே இக்கோயிலில்  ஈடுபாடுகொண்டிருந்தது. மறவம்பூதி, அவர் தேவி நக்கன் விக்கிரமகேசரி, மகன் பூதி ஆதித்தபிடாரன், அவர் மகன்களான ஆதித்தன் பூதி, ஆதித்தன் ஒற்றி எனப் பலரைக் கல்வெட்டுகள் அடையாளப்படுத்துகின்றன. தாங்கள் பிறந்த நட்சத்திரங்களில் திங்கள்தோறும் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நிகழ்த்தப் பூதி ஆதித்தபிடாரரும் ஆதித்தன் பூதியும் நிலமளிக்க, தம் திருமணக் கொடையாக ஆதித்தன் ஒற்றி அளித்த நிலவிளைவால் 12 நந்தாவிளக்குகள் இக்கோயிலில் ஒளிர்ந்தன. ஆதித்தன் பூதி தம் மகனான பூதி பராந்தகனுக்கு முதற்சோறு ஊட்டிய நாளில் இக்கோயில் இறைவனுக்கு நான்கு வேலி நிலமளித்தார். அதன் விளைச்சல் ஒரு வேலிக்கு நூறு கலம் நெல்லாக இக்கோயில் செயற்பாடுகளுக்கு உதவியது.

கோயிலை எழுப்பிய ஆதித்தபிடாரி இறைவனையும் வழிபாட்டையும் பற்றி மட்டுமே சிந்தனை கொள்ளாது, கோயில் ஊழியர்களின் நலத்தையும் கருதிச் செயற்பட்டதைக் கல்வெட்டுகளால் அறியமுடிகிறது. செந்துறைக் கோயிலில் உழைத்த பல்வகைப் பணியாளர்களுக்கும் வாழிடம் உருவாக்க விழைந்த அவ்வம்மை, அதற்காகவே ஊர்மக்களிடம் விலைக்குப் பெற்ற நிலத்துண்டுகளை இணைத்துக் கோயிலருகே, 'மடவிளாகம்' ஒன்றை அமைத்தார்.

செந்துறையில் தோல், காற்று, நரம்பு, கஞ்சக்கருவிகளுடன் வாய்ப்பாட்டும் சேர்ந்தமையும் இசைப் பெருக்கை ஐம்பேரொலியாக எழுப்பிய கலைஞர்களுக்கு வாழ்வூதியமாக ஊரவையாரிடமிருந்து தாம் விலைக்குப் பெற்ற நிலத்துண்டுகளைத் தட்டழிப்புறம் என்ற பெயரில் வழங்கி மகிழ்ந்தவர் ஆதித்தபிடாரி.   சோழர் காலத்தில் ஐம்பேரொலியுடன் வழிபாடு நடைபெற்ற கோயில்கள் மிகச் சிலவே. அவற்றுள் செந்துறையும் ஒன்றென்னும் பெருமை ஆதித்தபிடாரியால் விளைந்தது.

கோயிற் செயற்பாடுகளுக்காகவும் கோயிலில் ஒளியூட்டிய விளக்குகளுக்காகவும் திருவிழா முதலிய கொண்டாட்டங்களுக்காகவும் தம்மாலும் பிறராலும் ஊரவையாலும் கோயிலுக்கு அளிக்கப்பெற்றிருந்த நிலங்களை உழுது பயிரிட்டுக் கோயிலுக்கு வளம் சேர்த்த உழு குடிகளையும் பிடாரி மறந்தாரில்லை. அவர்களுக்கு இல்லிருக்கை அமைக்கப் பல நிலத்துண்டுகளை விலைக்குப்பெற்று உதவியவர், அந்நிலங்களின் மீது பின்னாளில் உரிமைச் சிக்கல்கள் நேரிடக் கூடாது என்பதற்காகவே, 'நான் பெற்ற பரிசே குடுத்தேன்' என்று நிலத்தின் மீதான உரிமைகளையும் தெளிவுபடுத்திக் கல்வெட்டாக்கினார்.

கோயில் நிலங்களையும் ஊர் நிலங்களையும் பழுதின்றி அளக்கக் கோயில்களில் அந்நாளில் அளவுகோல்கள் வெட்டப்பட்டிருந்தன. அவற்றுள் புகழ்வாய்ந்த இரண்டு அளவுகோல்களை இக்கோயிலில் அமைத்த பெருமை ஆதித்த பிடாரிக்கே உரிய.  இது 'குழிக்கோல்' என்ற எழுத்துப் பொறிப்புடன் இறையகத் தாங்குதளத்தின் மேல் வெட்டப்பட்டுள்ள 90 செ. மீ. அளவுகோல் அரிதினும் அரிதான சோழர் காலப் பொறிப்பாகும். முகமண்டபத் தென்பகுதியில் இரண்டு கூட்டல் குறிகளுக்கு இடையில் வெட்டப்பட்டுள்ள 4 மீ. நீள அளவுகோலை அங்குள்ள எழுத்துப் பொறிப்பு 'நிலமளந்த கோல்' என்கிறது.

செந்துறையில் ஆதித்தபிடாரியின் காலத்தில் வெட்டப்பட்ட இக்கோல்களுள் ஒன்றான நிலமளந்த கோலை, செந்துறையிலிருந்து 4 கி. மீ. தொலைவிலுள்ள அந்தநல்லூர் வடதீர்த்தநாதர் கோயில் கல்வெட்டொன்று சுட்டுகிறது. ஆதித்த பிடாரியால் கற்றளியான இக்கோயிலின் தலமரமான பலாவும் இங்குள்ள கல்வெட்டொன்றில் இடம்பெற்றுள்ளமை கூடுதல் சிறப்பாகும். இம்மரத்தின் கீழிருந்து கோயிலாரும் கொடையாளரும் சான்றாளர் முன்னிலையில் ஓர் அறக்கட்டளை தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொண்டதை இக்கல்வெட்டு வழி அறியநேர்கையில் தலமரங்களுக்கு மக்கள் அளித்த பெருமையை உணர முடிகிறது.

தமிழ்நாட்டில் பல பெண்ணரசிகள் கோயில்கள் எடுத்துப் புகழ் வளர்த்திருந்தாலும் நங்கை பூதி ஆதித்தபிடாரி வரலாற்றில் அழுந்தப் பதிவாவது கோயிற் குடிகளின் நல்வாழ்வில் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த அக்கறையால் தான். அளவில் சிறியதாக இருந்தாலும் அழகுணர்வுடன் எடுக்கப்பெற்றிருக்கும் செந்துறைக் கோயில் சோழர் காலப்பொருளாதாரம், சமூக நடைமுறைகள், கலைகள் சார்ந்து கல்வெட்டுகளும் சிற்பங்களும் கொண்டு பொலிவது நங்கைபூதி ஆதித்தபிடாரியின் பெயரைக் காலங்கடந்தும் வாழவைக்கும்.


நன்றி:
இந்து தமிழ் திசை நாளிதழ் - மார்ச் 31, 2024
Dr Kalaikovan- The Hindu Tamil - 31 Mar 2024.pdf

Anbarasu Jayakanthan

unread,
Apr 1, 2024, 2:12:39 AM4/1/24
to mint...@googlegroups.com
அன்புள்ள தேமொழி ,
 'மடவிளாகம்' ஒன்றை அமைத்தார்.

மடவிளாகம் என்றால் என்ன??

அன்புடன்
அன்பரசு

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/ed2ee4e5-f0d9-42e2-a12d-50e0c0d78a57n%40googlegroups.com.

தேமொழி

unread,
Apr 1, 2024, 2:30:42 AM4/1/24
to மின்தமிழ்
மடவிளாகம் என்பது படை வீரர்கள் இருக்கும் இடத்தையும், கோயிலின் மடங்கள் இருக்கும் இடத்தையும் குறிக்கும். இங்கே, கோயில் மடம் இருந்துள்ளது. அந்த மடம் ஒரு பாசுபத மடமாகும். பாசுபதம், சைவத்தின் ஒரு நெறி. சைவத்தின் ஒரு பிரிவு.
https://groups.google.com/g/mintamil/c/R7yQikut-lk/m/JppfbJZ2CgAJ
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், தரும் விளக்கம் 

தேமொழி

unread,
Apr 1, 2024, 2:47:33 AM4/1/24
to மின்தமிழ்
கோவில் பணியாளர் குடியிருப்பு (நிலம் கையகப்படுத்திய பின் கட்டப்பட்டது)
(similar to residential quarters built for organization's employees)

விளாகம் களஆய்வும் அதன் பொருண்மை விளக்கமும்
பார்க்க: https://drsivaramakrishnan.blogspot.com/2020/08/blog-post_17.html


- August 17, 2020
முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்
உதவிப்பேராசிரியர்                                
வரலாற்றுத்துறை                                  
குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி  
தஞ்சாவூர்        


[...]

விளாகம் என்பதன் விளக்கம்

  தமிழகத்தில் விளாகம் என்ற பெயர் கொண்ட ஊர்கள் பல உள்ளன. விளாகம் என் பதற்கு போர்களம் சூழ்ந்தவிடம் என்று மதுரைத் தமிழ்ப் பேரகராதி விளக்கம் தருகிறது. சங்க இலக்கியங்களில் விளா, வளாகம் என்ற சொற்கள் மட்டுமே உள்ளன. ஆனால் விளாகம் என்ற சொல் இலக்கியப் பயன்பாட்டில் இல்லை. மாறாக கல்வெட் டுக்களில் விளாகம் என்ற சொல் அதிக அளவில் கையாளப்பட்டுள்ளதை காணமுடி கிறது. திருக்குறுங்குடியிலுள்ள முதலாம் வரகுண மகாராஜரின் கல்வெட்டே விளாகத் தைச்சுட்டும் முதல் கல்வெட்டாகக் கொள்ளப்படுகிறது. கோயிலுக்குரிய நிலத்தின் எல்லைகளைக் குறிக்கும்பொழுது ‘’வைகுண்ட விளாகத்துக்கே போன பெரு வழி‘’ என சுட்டுகிறது. இங்கு ‘’வைகுந்த விளாகம்‘’ என்பதை ஊராக கொள்வதற்கு இடமுள்ளது காரணம் போன பெருவழி என்பதை இவ்வூர்வழியாக போகின்ற பெரு வழியாக கொள்வதற்கும் இடமுள்ளது. பல்லவ மன்னரான மூன்றாம் நந்திவர்மரின் திருவைகாவூர் கல்வெட்டில் நந்தாவிளக்குக்கு, அமுதுபடிக்கும் கொடையாகத் தரப் பட்ட இறையிலியாக வழங்கப்பட்ட நிலத்தை விளாகம் எனக் குறிப்பிடுகிறது. இங்கு விளாகம் என்ற சொல் இறையிலி நிலத்தை சுட்டுகிறது. சோழர் கல்வெட்டுக்கள் அதிக இடங்களில் விளாகங்களைப் பற்றிப் பேசுகின்றன. திருவிளக்குடியிலுள்ள முதலாம் இராசராசனுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் பரகேசரியின் கல்வெட்டில், ‘’கல்லுவிச்ச ஸ்ரீகரணப் பெருவிளாகம்’’ என்று புதியதாகப் பயன்பாட்டிற்கு கொண்டுவரப் பட்ட நிலத்தை விளாகம் என்ற சொல்லால் குறிப்பிடுகிறது. திருவெண்காட்டிலுள்ள முதலாம் இராஜாதிராஜனின் கல்வெட்டொன்று பாழாயிருந்த பண்படுத்தப்பட்ட நிலத் தைக் ‘’கல்லித் திருத்தின பிச்ச தேவவிளாக நிலம்‘’ எனசுட்டுகிறது. அச்சிறுபாக்கத் திலுள்ள ஸ்ரீமூலஸ்தானத்து இறைவனுக்கு வேண்டிய நிவந்தங்களுக்காக மண்ணை கொண்ட சோழப் பல்லவரையன் என்ற அதிகாரி பயன்பாட்டில் இல்லாத நிலத்தை விளைச்சலுக்குக் கொண்டுவந்து அதை ‘’தெக்ஷணாமூர்த்தி விளாகம்‘’ என்ற பெயரில் கொடையாக அளித்ததை வீரராஜேந்திரன் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

   திருவரங்கத்திலுள்ள முதலாம் குலோத்துங்க சோழனின் எண்பத்து மூன்று கல் வெட்டுக்களில் இருபத்தொன்பது கல்வெட்டுக்கள் விளாகங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கின்றன. முதலாம் குலோத்துங்கனின் முப்பத்தொன்பதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு பாண்டிநாட்டைச் சேர்ந்த கண்ணகருமாணிக்கமான வளவ விச்சாதிரப் பல்ல வரையர் தம் பேரால் வைத்த திருநந்தவனத்தைக் கண்ணகருமாணிக்க விளா கம் என்று குறிப்பிடுகிறது. விளாகம் பற்றிப் பேசும் அனைத்துக் கல்வெட்டுக்களுமே பயன் படுத்தப்படாமலிருந்த நிலத்தை விளைச்சல் நிலமாக்கியதை பற்றியே குறிப்பி டுகின்றன. ‘’சுரபி விளாகமாகத் திருத்தும் நிலம்’’,‘’கஸ்தூரி சாத்துவதற்கு புதுவிளாக மாகக் கொண்ட திருத்தி’’, ‘’இராமதேவி விளாகமாகக் கல்லி, விளாகமென்னும் பெய ரில் திருத்தி’’, ‘’திருத்துவித்த கண்ட நாராயண விளாகம்’’, ‘’திருமல்லிநாத விளாக மென்று பேர் கூவப்பட்ட நிலம் வேலியும் திருத்தி’’ என்ற கல்வெட்டுத் தொடர்களால் திருத்திச் சீரமைக்கப்பட்ட விளைநிலப் பகுதியையே கல்வெட்டுக்கள் விளாகம் என்ற பொதுச் சொல்லல் அழைப்பதைக் காணமுடிகிறது. மேலும் ‘’மதுராந்தக விளாகம் என்று பேர்கூவப்பட்ட நிலம் முக்காலும் ஆக நிலம் ஒன்றையும் திருத்தித் தான் வேண்டும் பயிர் செய்து கொள்ளவும் என்ற வரியின் மூலம், விளாக நிலத்தால் பய னடையும் பயனாளிகள் தாம் விரும்பும் பயிர்களை செய்துகொள்வதற்கான உரிமை கொடுக்கப்பட்டிருந்ததையும் அறியமுடிகிறது. குலோத்துங்கனைத் தொடர்ந்து வந்த பிற சோழ மன்னர்களின் காலத்திலும் விளாகங்கள் பற்றியக் குறிப்புகள் காணமுடிகி றது. திருவானைக்காவில் ‘’மறித்துலகங்காத்தான் விளாகம்’’,‘’திருப்புதியூர் விளாகம்’’ எனும் இரண்டு விளாகங்கள் இருந்தன. திருவெண்காட்டில் உள்ள முதற் குலோத் துங்க சோழனின் கல்வெட்டு ஒன்று ஊர் கீழ் இறையிலியாக விடப்பட்ட பல்வேறு விளாகங்களிருந்து வரியாகப் பெறப்பட்ட காசுகள் பற்றிய விரிவான தகவல்களைத் தருகிறது. மேற்கண்ட தரவுகளின் மூலம் புதிய நிலப்பரப்பைத் திருத்தி விளை நில மாக்கப்பட்டப் பகுதியே விளாகம் என சுட்டப்பட்டதை அறியமுடிகிறது. இந்த விளா கங்கள் பின்னாளில் ஊராக்கம் பெற்றதை திருமழப்பாடி மற்றும் மன்னார்குடி கல்வெட்டுக்களில் ‘’ஸ்ரீகுலோத்துங்க சோழச் சதுர்வேதிமங்கலத்து பிடாகையான குலோத்துங்க சோழ விளாகமும்’’, ‘’கண்டராதித்தசோழச்சதுர்வேதிமங் கலத்துப் பிடாகையான உல குய்யவந்த சோழநல்லூரிலிருந்து வேறு ஊராகப் பிரிக்கப்பட்ட பொன்னார் மேனி விளாகம்’’ போன்றவை சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.

  விளை நிலங்களைக் குறிக்கப்பயன்படுத்தப்பட்ட விளாகம் என்ற சொல்லுடன் முன் முன்னொட்டாக மடை என்ற சொல்லைச் சேர்த்து மடை விளாகம் என அழைக்கப் பட்டதை பல கல்வெட்டுக்களில் காணமுடிகிறது. கோயிலுடன் தொடர்புடைய பணியாளர்களின் குடியிருப்புப் பகுதியையே மடைவிளாகம், திருமடைவிளாகம் எனும் சொற்கள் குறிக்கின்றன என்பது கல்வெட்டுக்கள் மூலம் அறியப்படும் உண்மையாகும்.

  முதலாம் ஆதித்தனின் கல்வெட்டில் திருஎறும்பியூர்க் கோயிலைக் கட்டுவித்த வேதிவேளான் என்பவன் மடை விளாகம் அமைக்க கண்டராதித்த சதுர்வேதிமங்கலத் துச் சபையோரிடம் நிலம் விலைக்கு வாங்கியதைக் கூறுகிறது. குத்தாலம் கோயி லைக்கட்டிய செம்பியன் மாதேவியார் கோயில் தொடர்பான பணிகளுக்கு நிலம் ஒதுக்கும் போது மடை விளாகத்திற்கும் நிலம் ஒதுக்கிய தகவலை கல்வெட்டின் மூலம் அறியப்படு கிறது. இது போன்ற மடைவிளாகங்களில் திருக்கோயிலுடையார்கள், உவச்சர்கள், ஸ்ரீகாரியம் செய்பவர்கள், அடிகள்மார், கவரிப்பிணாக்கள், தபஸ்யர் ஆகி யோரின் குடியிருப்புக்களும் அமைந்திருந்தன. இவர்களைத் தவிர இவ்விளாகத் தில் மன்றாடிகளும் மற்றும் வணிகர், கைக்கோளர், தேவரடியார், உவச்சர், இடையர் போன்றோர் வாழ்ந்ததாக கல்வெட்டுகள் சுட்டுகின்றன.

       திருமடை விளாகத்தில் மடங்கள் இருந்ததற்கான குறிப்புகளும் உள்ளன . திருவா னைக்காவில் திருஞானசம்பந்தன் மடமும், கொமரலிங்கத்தில் திருநீறிட்டான் திருமடமும், திருவீழிமிழலையில் திருத்தொண்டத் தொகையார் திருமடமும், திருஞான சம்பந்தன் திருமடமும் இருந்துள்ளன. திருக்கச்சூரில் உள்ள இரண்டாம் இராஜாதிராஜரின் கல்வெட்டு திருமடை விளாகத்தில் செக்கிட்டு ஆட்டப்பட்டதாகக் கூருக்கிறது. கோயிலுக்கு தேவையான எண்ணெய்க்காக இச்செக்கு பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். மக்கள் வரி தரமுடியாமல் ஊரைவிட்டு ஓடிபோய் விட்டதாகவும் அதனால் திரு மடைவிளாகம் பாழ்பட்டு இறைவனுக்குப் பூசைகள் நடத்தப்படாமல் கோயில் மூடப் பட்டது. அதனால் மடைவிளாகத்தில் மீண்டும் மக்களைக் குடியேற்றித் தறியும் இடப் பெற்ற தகவலை அரியண்ன உடையாரின் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

 காளத்திக் கோயில் மடவிளாகம் முதலாம் இராஜேந்திரனின் காலத்தில் ஓர் ஊராகவே அமைந்திருந்ததை மடவிளாகமான சிவபாதசேகரமங்கலம் என்ற கல்வெட்டு வரி உணர்த்துகிறது. கோயில் கட்டப்பட்ட காலத்திலேயே மடவிளாகமும் கட்டப்பட்ட தகவல் துறையூரிலுள்ள மூன்றாம் இராஜராஜனின் கல்வெட்டில் கிடைத்துள்ளது. நிலம் ஒன்றரையில் ஸ்ரீகோயிலும் திருமடைவிளாகமும் தீர்த்தக் குளமும் அமைக் கப்பெற்றன. திருமடை விளாகத்தில் யார், யார் எந்தெந்தப் பகுதியில் குடியிருந்தனர் என்பது பற்றியும் அவர்கள் வாழ்ந்த மனைகள் பற்றியும் கல்வெட்டுக்களில் குறிப்புக் கள் கிடைக்கின்றன. மடை விளாகத்தின் கிழக்கில் திருப்பூத் தொண்டர்களுக்காக நிச்சயித்த பகுதியில் இருந்த திருஞானசம்பந்தப் பிச்சன் மனை கோனேரிராஜபுரம் கல் வெட்டில் எல்லையாகக் குறிக்கப்பட்டுள்ளது. திருநெடுங்களம் மடைவிளாகத்தில் இருந்த தில்லையுளார் மனையும் கல்வெட்டொன்றில் எல்லையாகச் சுட்டப்பட்டுள் ளது. திருக்கண்ணபுரத்து மடைவிளாகத்தில் மாளிகைகளும் அமையப் பட்டிருந்த தக வலை அறியமுடிகிறதுகிறது. திருக்கோடிக்கா கல்வெட்டுடொன்று மடைவிளாகத்தில் இருப்பவர் களுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக வைத்திய விருத்தியாக சத்துருமானி யன் ஆளப்பிறந்தான் என்பார்க்கு நிலம் கொடையளிக்கப்பட்டதை கூறுகிறது . திரும டைவிளாகத்தில் குடியிருந்தவர்கள் தறியிறை, தட்டாரப்பாட்டம் போன்ற வரிகளைக் காசாகவோ நெல்லாகவோ தந்ததாகவும் அது இறைவனின் திருப்பணித் தேவை களுக்குப் பயன்படுத்தப் பட்டதாகவும் திருக்கழுக் குன்றம் கல்வெட்டு சுட்டுகிறது.

 விளைந்தறியா இயல்புடையதாக இருந்து திருத்திச் சீர்செய்து விளைவுக்குக் கொணரப்பட்ட நிலப்பகுதியை குறிக்கப்பயன்பட்டதுடன், மடை எனும் முன்னொட்டை ஏற்று கோயில் சார்ந்தவர்களின் குடியிருப்பைச் சுட்டும் சொல்லாக வளர்ந்த நிலையையும் காணமுடிகிறது. மடை எனும் சொல் சமையல் தொழிலைக் குறிப்பதாகும். கோனே ரிராஜபுர கல்வெட்டில் மடையர்கள் என்று சமையற் காரர்களைக் குறிப்பதை நோக்கும் பொழுது மடைவிளாகம் என்பது முதலில் கோயிற்சார்ந்த அடுக்களைப் பணியாளர்க ளுக்காக உருவாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதியாக இருந்து, பிறகு கோயிற் பணியா ளர் அனைவருக்குமான குடியிருப்புப் பகுதியாக வளர்ந்து பணியாளர்கள் எண்ணிக் கையில் பெருக்கம் ஏற்படவே விளாகம் என்பது முழு ஊராக்கம் பெற்றதாகக் கொள்ளலாம். இதனை முன்னொக்காகக் கொண்டே விளாகம் குழவித்தோப்புப் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு நடத்தப்பட்ட ஆய்வில் கிடைத்த சிலைகள், கோயிலின் கட்டுமானப்பகுதிகள், குடியிருப்புபகுதிகள், கட்டுமானகிண றுகள், பானை ஓடுகள், பிற கலைபொருட்கள் போன்றவை கி.பி.12-13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். கோயிலின் கட்டுமானங்கள் கிடைத்த இடத்திலிருந்து கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகள் பண்டையகால மக்களின் வாழ்விடப்பகுதி இருந்துள்ளது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் கோயில் வளாகம், ஏழு ஏக்கர் பரப்பளவில் மக்கள் வாழ்விடப்பகுதி போன்றவை மண்ணில் புதையுண்டதற்கு காரணம் வீராண ஏரியின்கரை உடைபால் ஏற்பட்ட வெள்ளப்பாழாக இருக்கலாம். இப்பண்பாட்டுப் பகுதியை ஒட்டி உருவாகி உள்ள புது விளாகத்தில் வேளான்குடியி னர், மட்பாண்டகலைஞர்கள், தச்சர், கம்மாளர், செட்டியார், நெசவுதொழில் செய்வோர், பொற்கொல்லர், வண்ணார், கோயில்பணி செய்வோர் போன் றோர் வசித்து வருவது ஆய்விற்குரிய ஒன்றாகும்.  
[...]

Anbarasu Jayakanthan

unread,
Apr 2, 2024, 1:39:57 AM4/2/24
to மின்தமிழ்
தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி

அன்புடன்
அன்பரசு



Reply all
Reply to author
Forward
0 new messages