பயணம் . . .

10 views
Skip to first unread message

தேமொழி

unread,
Dec 1, 2022, 11:39:19 PM12/1/22
to மின்தமிழ்
பார்க்க: https://www.facebook.com/photo?fbid=10228607118903855&set=a.10211823459802867


தும்கூரிலிருந்து பெங்களூருக்கு வரும்போது NICE புறவழிச்சாலை வழியாக பயணிப்பது Driving இன் மீது நேசமுள்ள எவருக்கும் இதமளிக்கும் அனுபவமாக இருக்கும். 10-15 கிலோமீட்டர் அதிகமாக இருக்கும், 200 ரூபாய்க்கு குறையாமல் Toll கட்டணம்.

ஆனாலும் பலர் இந்த சாலையைப் பயன்படுத்துவதற்கான காரணம் பெங்களூர் நகரின் கடுமையான நெரிசல் மிகுந்த சாலைகள். ஒருவேளை நகருக்குள் நுழைந்து கடந்து வர வேண்டுமானால் Peak Hours இல் குறைந்தது 2 மணி நேரமாகும்.

இந்த சாலையில் வந்தால் 1 மணிநேரத்தில் பீன்யாவில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டியை எட்டி விட முடியும். இரண்டாவதாக இந்த சாலையின் இருபக்கமும் இன்னும் மிச்சமிருக்கிற அடர்ந்த மரங்களும், ஏரிகளும், கிராமங்களும் மன அமைதியை வழங்கக் கூடியவை.

அழுக்கு வேட்டியோடு மாடுகளை மண்சாலையில் ஓட்டிக் கொண்டு போகிற விவசாயிகள், சைக்கிளில் பள்ளிக்கூடம் போகிற வருகிற குழந்தைகள், அரசமர நிழலில் ஆசுவாசமாக அமர்ந்திருக்கிற பிள்ளையார், அவருக்கு முன்னால் காதைப் பிடித்துக் கொண்டு உக்கி போடுகிற மனிதர்கள்.

ஏரியில் சர்ரென்று நீரைக் கிழித்துக் கொண்டு போகிற முக்குளிப்பான் பறவைகள் என்று இன்னும் மிச்சமிருக்கிற உயிர்ப்பான கதகதப்பான இளங்குளிரை அனுபவித்தபடி பயணிக்க முடிகிற சாலை.

2018 என்று நினைவு ஹாசன் நகரத்தில் இருந்து குடும்பத்தோடு அதிகாலை நேரத்தில் புறப்பட்டு மிதமான வேகத்தில் வந்து கொண்டிருக்கிறேன், வேகமாகப் போகிறவர்களுக்கு வழிவிட்டு Lane Dicipline பின்பற்றியபடி ராஜாவின் வயலின் கம்பிகளில் இருந்து Sony யின் வழியாக‌க் கசிந்துருகி வெளியெங்கும் பரவுகிற இசையைப் பின்பற்றியபடி அமைதியாகவும் தெளிவாகவும் இருக்கிற மனம்.

விசுக்கென்று கடந்து போகிறது ஒரு Wolkswagon Polo, விழித்துக் கொண்டு கொஞ்சம் எழுச்சி கொள்கிறது மனம், நெடுஞ்சாலைகளில் நீண்ட நேரம் பயணிக்கிற போது எப்போதாவது முன் செல்கிற வண்டிகளை சீண்டியபடி முந்துவது, போக்குக் காட்டுவது பரஸ்பரம் வண்டி ஓட்டுபவர்களுக்கு இருக்கிற இயல்பு.

நம்மை மீறி உறக்கம் வருகிற அதிகாலை நேரங்களில் இந்த விளையாட்டு ஓரளவு விழிப்போடு பயணிக்க உதவும். முரட்டுத்தனமான வேகமில்லை, ஒழுங்கிருக்கும். காலை நேரத்தின் அமைதியும், சீரான வேகத்தில் பயணிக்கிற போது உண்டாகும் அதிர்வும் உறக்கத்தை வரவழைக்கும் என்பதால் ஏதாவது ஒரு வண்டியைப் பின்தொடர்ந்து போவது, முந்துவது உறக்கத்தைக் கலைக்கும்.

இப்போது Polo வை விரட்ட ஆரம்பித்தேன் நான், Polo வின் ஓட்டுனர் வழிவிடுகிறவர் மாதிரித் தெரியவில்லை, ஆனால் வேண்டுமென்றே வேகத்தைக் குறைப்பது இடைவெளி குறைந்து நான் முன்னே‌ போகிற நிலை வரும்போது தடாலடியாக வேகத்தை அதிகரித்து முந்துவது என்று கொஞ்ச நேரம் போக்குக் காட்டியது Polo.

ஒரு சரக்கு லாரியைக் கடந்து போவதற்காக வேகத்தைக் குறைத்து அந்த லாரியின் பின்னால் போய்க்கொண்டிருந்த Polo வை ஒரு ஜெர்க்கடித்து முந்தி வேகத்தைக் கூட்டி முந்த முடியாத தொலைவுக்குப் போய் ரிவியூவில் பார்த்தேன், Polo வும் வேகத்தைக் கூட்டியபடி பின்தொடர்கிறது. சரி இன்னொரு‌ முறை முந்திச் செல்லவிட்டு பிந்தலாம் என்று வேகத்தைக் குறைத்தேன்.

வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு Polo இப்போது முன்னேறியது, முந்துகிற போது எதேச்சையாக Polo வின் ஓட்டுனரைப் பார்த்தேன், சாந்தமான புன்னகைக்கும் முகம், ஆனால் உறுதியும் கவனமும் கொண்ட மனம் என்பது வண்டியை இயக்கும் விதத்தில் தெரிகிறது. அதிகமானால் 22 வயதிருக்கலாம்.

ஏறத்தாழ பெங்களூரின் புறநகருக்குள் வந்தாகி விட்டது, நான் இப்போது Polo வை முந்துகிற எண்ணத்தைக் கைவிட்டு விட்டேன், நல்ல தேநீர் குடிக்கிற ஆசை வந்து விட்டது. Nice காரிடாருக்குள் நுழைந்து விட்டால் தேநீருக்கு வாய்ப்பில்லை என்பதால் மோட்டல்களைப் பார்த்தபடி வந்தேன்.

மெல்ல மெல்ல முன்னே சென்று கொண்டிருந்த Polo கண்ணில் இருந்து மறைந்து விட்டது. பாதி உறக்கத்தில் இருந்த குழந்தைகளை எழுப்பி "தேநீர் குடிக்கிறீர்களா?" என்றேன். கண்ணை உறுத்தாத ஒரு சாலையோர மோட்டலில் திருப்பி நிறுத்தியபோது பார்த்தால் பக்கத்தில் Polo.

முன்னிருக்கையில் தூக்கக் கலக்கத்தில் இருந்தாலும் மகள் இந்த Hide & Seek விளையாட்டைப் பார்த்துக் கொண்டேதான் இருந்திருக்கிறாள்

தேநீர் குடித்து விட்டு வரும்போது மகளும் Polo ஓட்டுனரைப் பார்த்து விட்டாள், என்னைப் பார்த்து மெல்ல சிரித்தாள், அமைதியாக இருந்தவள் என்ன நினைத்தாளோ "அப்பா, அந்த அக்காவ முந்தி இருக்கலாம்ல".

ஆம், Polo வின் ஓட்டுனர் ஒரு சின்னஞ்சிறு பெண், பொதுவாக நகருக்குள் மகிழுந்தில் வழக்கமாக அலுவலகம் போகிற இளம்பெண்கள் கணிசமாக அதிகரித்திருக்கிறார்கள், ஆண்களை விட மிக சிறப்பாக வண்டி ஓட்டுவார்கள். மகிழ்ச்சியாக இருக்கும்.

ஆனால், நெடுஞ்சாலைகளில் பெரிய அளவில் பெண்கள் மகிழுந்தை ஓட்டிச் செல்வது குறைவுதான், குறைவென்பதை விட அரிதென்று சொல்லலாம்.

மகளைப் பார்த்தேன், என்னிடம் இருந்து பதிலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறாள்.

"அம்மா, ஆண்டாண்டு காலமாக உரிமைகள் மறுக்கப்பட்டு அடுப்படி தான் உனது வாழிடம் என்று அறிவுறுத்தப்பட்ட அக்கா, இப்போது புத்துணர்வோடு நெடுஞ்சாலையில் மகிழுந்தை இயக்கியபடி பயணிக்கிற இடத்துக்கு வந்திருக்கிறாள், அவள் முன்னே முன்னே இன்னும் எல்லா வண்டிகளையும் முந்திக் கொண்டு வாழ்வில் பயணிக்க வேண்டும் இல்லையா?."

"அவளுக்கு வழிவிட்டு, அவளது பயணத்தை வாழ்த்தி அவளை‌ முன்னே போகச் சொல்வது என்பது நான் அந்த உறுதியான மனமும், துடுக்குத்தனமும் கொண்ட என்னுடைய இன்னொரு மூத்த குழந்தைக்கு வழங்குகிற வாழ்த்தில்லையா?"

"அவள் முன்னே போகட்டும்"

மகள் எனது தோளில் சாய்ந்து கொள்கிறாள், நாங்கள் இப்போது Nice புறவழிச்சாலை வழியாக மிச்சமிருக்கிற வனங்களின் அடர்மரங்கள் தருகிற இளங்குளிரைத் தழுவியபடி பயணிக்கிறோம்.

பத்து நிமிடங்களில் மறுபடி எங்களை முந்திக் கொண்டு போகிறது Polo, நான் கட்டை விரலை உயர்த்தி Polo வில் போகிற இன்னொரு மகளுக்கு வெற்றியைப் பரிசளிக்கிறேன். பாதுகாப்பான அவளது பயணத்தையும், வாழ்வையும் கூட....

கை.அறிவழகன்
Reply all
Reply to author
Forward
0 new messages