சங்கப் புலவர்கள் பொன்னுரை – 33: பகுத்துண்டும் நோயின்றியும் நெடுங்காலம் வாழ்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

5 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
May 5, 2026, 10:41:32 AM (19 hours ago) May 5
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore, Guberan Rajan, Dr. Ku.Muthukumar

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 33: பகுத்துண்டும் நோயின்றியும் நெடுங்காலம் வாழ்க! – இலக்குவனார் திருவள்ளுவன்



(மிகுதியான எதுவும் அற வழிக்குத் தடையாகும்!: சங்கப் புலவர்கள் பொன்னுரை – 32  – தொடர்ச்சி)

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 33

பகுத்துண்டும் நோயின்றியும் நெடுங்காலம் வாழ்க!

***

தீதுசேண் இகந்து நன்றுமிகப் புரிந்து 

கடலும் கானமும் பலபயம் உதவப்

பிறர்பிறர் நலியாது வேற்றுப்பொருள் வெஃகாது

மைஇல் அறிவினர் செவ்விதின் நடந்துதம்

அமர்துணைப் பிரியாது பாத்(து)உண்டு மாக்கள்

மூத்த யாக்கையொடு பிணிஇன்று கழிய

பாடியவர் : ஆசிரியர் பாலைக் கௌதமனார்

பதிற்றுப்பத்து : 22

அடிகள் 5 – 10 (பாடலின் மொத்த அடிகள் 38)

பெயர் – கயிறுகுறு முகவை (14)

துறை – வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு

தூக்கு – செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்

வண்ணம் – ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்

பதவுரை :

தீது=தீமைகள்; சேண்=தொலைவில்; இகந்து=ஒதுக்கி (தீமைகளை இல்லாமல் ஆக்கி); நன்று=நன்மைகளை; மிகப் புரிந்து=மிகுதியாகச் செய்து;

கடலும் கானமும்=கடல் சார்ந்த இடங்களும் (நெய்தல்), காடு சார்ந்த இடங்களும் (முல்லை/குறிஞ்சி); பலபயம் உதவப்=(மீன், முத்து, விறகு, தேன் போன்ற) பல்வேறு பயன்களைத் தந்து உதவ;

பிறர் பிறர் நலியாது=பிறரை வருத்தவோ, துன்புறுத்தவோ செய்யாமல்; வேற்றுப்பொருள்=மற்றவரின் பொருளுக்கு; வெஃகாது=ஆசைப் படாமல்;

மை இல்=குற்றமற்ற; அறிவினர்=அறிவுடையவர்கள் / தூய அறிஞர்கள்; செவ்விதின்=நல்வழியில்;நேர்மையாக; நடந்து=நடந்து கொண்டு; தம்=தங்களின்;

அமர்துணைப்=அன்பிற்குரிய வாழ்க்கைத் துணையை; பிரியாது=பிரியாமல்; பாத்து=பகுத்து; உண்டு=உண்டு; மூத்த=முதுமையுற்ற; யாக்கையொடு=உடலோடு;

பிணி இன்று=நோய் இன்றி: கழிய = வாணாள் கடந்து செல்லும் வகையில் உயிர் வாழ்க.

தெளிவுரை:

தீமைகளெல்லாவற்றையும் நம்மை நெருங்காதபடிக்கு நீக்கி, நன்மையான வற்றையே மிகுதியாக ஆற்றி, நெய்தல், முல்லை, குறிஞ்சி, நிலப்பகுதிகளில் இருந்து கிடைக்கும் மீன், முத்து, விறகு, தேன் போன்ற பல்வேறு பயன்களைத் தந்து உதவ,

நாட்டு மக்கள் எல்லாரும் பிறரை வருத்தாமலும், பிறருக்கு உரித்தான பொருளைத் தாம் விரும்பாமலும் குற்றமல்லாத தூய அறிவுடைய வராகச் செவ்வையாக நடப்பவர்களாய்த், தம்பால் அன்பு செய்து வாழ்கின்ற துணைவரைப் பிரியாமல்,

தம்மை நாடி வந்தோருக்குத் தம்மிடமுள்ளதைப் பகுத்து உண்டு, முதுமை பெற்ற யாக்கையும் நோயும் இல்லாதவராய்த் தம் வாழ்நாளைக் கழித்திடுக.

பல்யானைச் செல்கெழு குட்டுவனின் முன்னோர் அறநெறி பிழையாது ஆட்சிச் சக்கரம் தடையின்றி உருளும் வகையில் ஊழி ஊழியாக நல்லாட்சி புரிந்துவந்தனர்.

அவர்களின் ஆட்சியில் தீமைகள் விலக்கப்பட்டன. நல்லனவற்றை மிகுதியாக ஆற்றினர்.

கடல் வளமும், மலைக் காட்டு வளமும் உறுதுணையாக உதவ நல்லாட்சி புரிந்தனர்.

நாட்டில் யாரும் எவரையும் துன்புறுத்தாவண்ணம் பார்த்துக்கொண்டனர். மக்களும் மாற்றாரின் பொருளை விரும்பாமல் வாழ்ந்தனர்.

குற்றமற்ற அறிவுடையவர்களாய் நல்வழி பிறழாமல் வாழ்ந்து வந்தனர். தம் மீது விருப்பம் கொண்டவர்களைப் பிரியாமல் அவர்களுக்கு உறுதுணையாக வாழ்ந்து வந்தனர்.

தாம் பெற்ற உணவுப் பொருள்களைப் பிறருக்குப் பகுத்துத் தந்து உண்டு மகிழ்ந்தனர்.

இதனால் முதிர்ந்த யாக்கையோடு பிணி இன்றி ஊழி ஊழியாக வாழ்ந்தனர்.

இவ்வாறு புலவர், பல்யானைச் செல்கெழு குட்டுவனின் முன்னோரின் செம்மையான ஆட்சித்திறம் குறித்துக் கூறுகிறார்.

இவ்வாறு நெடுங்காலம் ஆட்சி செலுத்திய, அறிவும் ஆற்றலுமுடைய பேரரசர்களின் வழித்தோன்றல் எனப் புலவர் குறிப்பிடுகிறார்.

இவ்வாறு பேரரசர்களின் சிறப்பைக் கூறுவதன் மூலம் மக்களும் தீமை புரியாமல் நன்மை ஆற்றி, பகுத்துண்டு, நோயின்றி நெடுங்காலம் வாழ வேண்டும் என வலியுறுத்துகிறார்.

தமிழ் நெறியை வழி வழி வந்த புலவர்கள் வழியில் பாரதியாரும்,

இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!

நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக

என்கிறார்.

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்

தீப்பிணி தீண்டல் அரிது.

(திருவள்ளுவர், ௨௱௨௰௭ – 227)

குறள் மூலம் திருவள்ளுவர், பகுத்து உண்பவனைப் பசிப்பிணி தீண்டலரிது என்கிறார்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

(திருக்குறள், ௩௱௨௰௨ – 322)

என்னும் குறள் மூலம் திருவள்ளுவர் பகுத்துண்ணுதல் நூலோர் அறமாகச் சொல்வனவற்றுள் எல்லாம் தலைசிறந்த அறம் என்கிறார்.

ஒளவையார், “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்கிறார்.

வள்ளலார் முருகக் கடவுளிடம், “நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்” என வேண்டுகிறார்.

இப்பாடலில் சங்கப்புலவர் பாலைக் கௌதமனார் கூறிய பொன்னுரைகள் காலந்தோறும் வழி வழியே போற்றப்படுகின்றன என்பதை உணரலாம்.

நாமும்,

பகுத்துண்டும் நோயின்றியும் நெடுங்காலம் வாழ்வோம்!

– இலக்குவனார் திருவள்ளுவன்

தாய், 05.05.2026   


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages