ஜெர்மனியின் ஹாலே (Halle an der Saale) நகரில் அமைந்துள்ள பிராங்கே கல்வி நிறுவனம் (Franckesche Stiftungen) 1698 ஆம் ஆண்டு ஜெர்மானிய இறையியலாளரும் கல்விச் சீர்திருத்தவாதியுமான ஆகஸ்ட் ஹெர்மன் பிராங்கே (August Hermann Francke, 1663–1727) அவர்களால் நிறுவப்பட்டது. கல்வி, சமூகநலம், அறிவியல், ஆன்மிகம், மனிதநேயச் சேவை ஆகியவற்றை ஒருங்கிணைத்து சமுதாய முன்னேற்றத்தை உருவாக்குவதே இந்நிறுவனத்தின் முதன்மை நோக்கமாக இருந்தது. ஐரோப்பாவின் மிக முக்கியமான கல்வி, ஆராய்ச்சி மையங்களில் ஒன்றாக வளர்ந்த இந்நிறுவனம், உலகின் பல பகுதிகளுடன் அறிவு, பண்பாட்டுத் தொடர்புகளை உருவாக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க அமைப்பாக விளங்குகிறது.
1705 ஆம் ஆண்டு டென்மார்க் மன்னர் நான்காம் பிரெடெரிக் (King Frederick IV of Denmark), இந்தியாவில் இருந்த தனது டேனிஷ் குடியேற்றமான தரங்கம்பாடியில் (Tranquebar) கிறிஸ்தவப் பணியை முன்னெடுக்க முடிவு செய்தார். அதற்காக ஹாலே பிராங்கே கல்வி நிறுவனத்தின் பரிந்துரையின் பேரில் பார்தலோமியுஸ் சீகன்பால்க் (Bartholomäus Ziegenbalg), ஹெய்ன்ரிக் ப்ளூட்சாவ் (Heinrich Plütschau) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் 1706 ஆம் ஆண்டு தரங்கம்பாடியை அடைந்து, இந்தியாவில் முதல் முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட புராட்டஸ்டண்ட் மறைப்பணியைத் தொடங்கினர். சீகன்பால்க் தமிழ்மொழியைக் கற்று, தமிழில் நூல்களை வெளியிட்டதுடன், பைபிளின் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்த்து, அச்சுத்தொழில், கல்வி வளர்ச்சி ஆகியவற்றுக்கும் பெரும் ஊக்கமளித்தார். இச்செய்திகள் எனது ”ஜெர்மானியத் தமிழியல்”(காலச்சுவடு பதிப்பகம், 2018) என்ற நூலில் விரிவாக இடம்பெற்றுள்ளன.
பிராங்கே கல்வி நிறுவனத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான உறவு புராட்டஸ்டண்ட் கிறிஸ்தவப் பணியை மட்டுமே சார்ந்ததல்ல. கடந்த மூன்று நூற்றாண்டுகளாக இந்நிறுவனம் தமிழ் மொழி, இலக்கியம், கல்வி, சமூக வரலாறு, பண்பாட்டு ஆய்வு ஆகிய துறைகளுடன் ஆழமான தொடர்பைப் பேணிவருகிறது. தரங்கம்பாடி வழியாக உருவான இத்தொடர்பு, தமிழ் ஓலைச்சுவடிகள், பழைய அச்சு நூல்கள், கடிதங்கள், அகராதிகள், இலக்கண நூல்கள், சமூக வரலாற்று ஆவணங்கள் ஆகியவற்றைப் பாதுகாத்து ஆய்வு செய்வதற்கும் வழிவகுத்தது. இதன் மூலம் தமிழ்மொழி, தமிழரின் சமூக வரலாறு, கல்வி, இலக்கிய வளர்ச்சி ஆகியவை தொடர்பான உலகளாவிய ஆராய்ச்சிகளுக்கு பிராங்கே அறக்கட்டளை இன்றளவும் அரிய ஆதாரங்களையும் குறிப்பிடத்தக்க அறிவியல் பங்களிப்புகளையும் வழங்கி வருகிறது.
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பும், ஜெர்மனியின் ஹாலே நகரில் அமைந்துள்ள பிராங்கே கல்வி நிறுவனமும் கடந்த சில ஆண்டுகளாக ஆராய்ச்சி, ஆவணப் பாதுகாப்பு, பண்பாட்டு வரலாற்றுத் துறைகளில் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இவ்விரு நிறுவனங்களின் இணைந்த செயல்பாடுகள், தமிழரின் வரலாறு, மொழி, இலக்கியம், ஐரோப்பாவுடனான வரலாற்றுத் தொடர்புகள் குறித்த ஆய்வுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு, ஜெர்மனியில் வாழும் தமிழர்களைப் பிராங்கே கல்வி நிறுவனத்திற்கு அழைத்துச் சென்று, தமிழ்நாட்டுக்கும் ஹாலேவுக்கும் இடையே கடந்த நானூறு ஆண்டுகளாகத் தொடரும் வரலாற்றுத் தொடர்பை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து ஏற்பாடு செய்து வருகிறது. அங்குப் பாதுகாக்கப்பட்டுள்ள பாதிரிமார்களின் கையெழுத்திலான தமிழ் ஓலைச்சுவடிகள், கையெழுத்து ஆவணங்கள், பழைய அச்சு நூல்கள், கடிதங்கள், அவற்றின் வரலாற்றுப் பின்னணி, அவற்றை மையமாகக் கொண்டு தற்போது நடைபெற்று வரும் ஆய்வுப் பணிகள் ஆகியவை பங்கேற்பாளர்களுக்கு விரிவாக விளக்கப்படுகின்றன.
நேற்று நடைபெற்ற நிகழ்வில், எர்லாங்கன் தமிழ்ச் சங்க அமைப்பைச் சேர்ந்த 40 பேர் பிராங்கே கல்வி நிறுவனத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணக் காப்பகத்தையும், நானூறு ஆண்டுகளாகத் தொடரும் தமிழ்–ஜெர்மன் அறிவியல், பண்பாட்டுத் தொடர்புகளையும் நேரில் அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட பெரியோரும் சிறார்களும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று, பல்வேறு கேள்விகளை எழுப்பி, பிராங்கே அறக்கட்டளையின் வரலாறு, அதன் ஆய்வுப் பணிகள், தமிழுடன் கொண்டிருக்கும் ஆழமான தொடர்பு ஆகியவற்றைத் தெளிவாகப் புரிந்துகொண்டனர். இத்தகைய நிகழ்வுகள் தமிழரின் உலகளாவிய பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முக்கியமான அறிவியல், பண்பாட்டுப் பாலமாக அமைகின்றன.
இந்த நிகழ்வில் என்னுடன் இதன் ஏற்பாட்டில் இணைந்த ஜோசபின் ரம்யா, சுரேஷ் இருவருக்கும் மற்றும் எர்லாங்கன் தமிழ்ச்சங்க ஜெய்வேல் அவர்களுக்கும் பாராட்டுகள். இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துச் செயல்படுவதில் ஒத்துழைப்பு நல்கிய பிராங்கே கல்வி நிறுவனத்தின் ஃப்ரீடா லிப்போல்ட் அவர்களுக்கு நன்றி.
முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு