தமிழகத்தின் ஆண்டுக் கணக்கு முறை
— திரு. க. த. திருநாவுக்கரசு சென்னைப் பல்கலைக் கழகம்
பண்டைக் காலத்தில் நாகரிகத்தின் கொடுமுடியில் வீறுடன் விளங்கிய நாடுகள் பல. அவை ஒவ்வொன்றும் தம்முடைய நாட்டின் அமைப்பிற்கும், தட்பவெப்ப நிலைக்குமேற்ப காலத்தைக் கணக்கிட்டு வந்துள்ளன. தமிழகமும் தொன்று தொட்டு இன்றுவரையில் ஒரு வகையான காலக் கணக்கினைப் போற்றி வருகிறது, ஆனால், கடந்த காலங்கள் தோறும் அக்கணக்கு முறை மாற்றமுற்று வந்திருக்கிறது. அத்தகைய ஆண்டுக் கணக்கு முறையை நாம் இவ்வாய்வுரையில் காண்போம்.
அறுவகைப் பருவங்கள்:
தொல்காப்பியர் "ஓரையும் நாளும் (கிளவி, 44) என்று குறிப் பிடுவதனால் விண்ணில் கோள்களின் வீட்டுத் தொகுதியைப் (Signs of Zodiac) பண்டைத் தமிழர் வரையறுத்து இருந்தமை புலனாகின்றது. 'ஞாயிறு திங்கள்’ (கிளவி, 58) என்பதனுல் ஏழு கோள்களைப் பற்றிய அறிவும், அவற்றால் பெயர்பெறும் ஏழு கிழமைகளையும் நெறிப்படுத்தி இருந்தமை தெரிகிறது. ஆனால், அக் காலத்தில் ஓர் ஆண்டினை அவர்கள் அறுவகைப் பருவங்களாகப் பகுத்திருந்தனர். இன்று நாம் பன்னிரண்டு திங்கள்களாகப் பாகுபடுத்தி உரைக்கும் முறை தொல்காப்பியர் காலத்தில் வழக்கில் இருந்ததாகத் தெரியவில்லை.
நாளடைவில் திங்களின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு காலத்தைக் கணக்கிடும் முறை வளர்ச்சியுற்றது. அப்பொழுது இரண்டு திங்களைக் கொண்டது ஒரு பருவம் என்று கருதும் வழக்கம் உண்டாயிற்று. இவ்வழக்கத்தைக் கருத்தில் கொண்டு நச்சினார்க்கினியர் என்ற உரையாசிரியர் தொல்காப்பியர் காலத்தில் ஆண்டின் முதல் மாதம் ஆவணியாகவும், ஆண்டின் இறுதிமாதம் ஆடியாகவும் இருந்திருக்க வேண்டும் என்பர். இதற்கு, ஆண்டின் முதற் பருவமாகக் கார் காலத்தைத் தொல்காப்பியர் கொண்டுள்ளதைச் சான்றாக அவர் காட்டுகிறார்.
"காலவுரிமை எய்திய ஞாயிற்றுக்குரிய சிங்க ஓரை முதலாகத் தண்மதிக்குரிய கற்கடக ஓரை ஈராக வந்து முடியுந்துணை ஓர் யாண்டாமாகலின், அதனே இம்முறை யானே அறுவகைப்படுத்தி இரண்டு திங்கள் ஒரு காலமாக்கினர்" (தொல் . பொருள். அகத். 12 உரை) என்பது நச்சினார்க்கினியரின் கருத்தாகும்.
‘சிங்க ஓரை' என்பது ஆவணித் திங்களாகும். இதனை முதல் மாதமாகக் கொண்டு ஆண்டுக் கணக்கிடப்பெற்றது மிகத் தொன்மையான பழக்கம் என்பர். வான நூல் வல்லார் ஆவணி மாதத்தை ஆண்டின் முதல் மாதமாகக் கொண்டு கணக்கிட்ட வழக்கம் இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கால முதல் கி. மு. 500 வரை வழக்கில் இருந்து வந்ததாகவும், சித்திரையை ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளுவது கடந்த ஈராயிரத்தைந்நூறு ஆண்டுகளாகத்தான் வழக்கத்தில் இருந்து வருவதாகவும் கருதுகின்றனர் (தொல் எழுத்து. கா. சு. பிள்ளை முன்னுரை).
இவ்வாறு அறிஞர் பெருமக்கள் கருதினாலும், தொல் காப்பியத்தின் அகச்சான்றுகளிலிருந்து அன்றைய தமிழகத்தில் ஆறு வகைப் பருவங்களே ஒராண்டின் பகுதிகளாகக் கருதப் பெற்றன என்னும் உண்மை தெரியவருகிறது. இம்முறை சங்க இலக்கியக் காலத்திலும் தொடர்ந்து வழக்கிலிருந்தது (அகம். 68).
பன்னிரண்டு திங்கள்
சங்க இலக்கியக் காலத்தில் ஓர் ஆண்டினைப் பன்னிரண்டு மாதங்களாகப் பகுத்துணரும் பழக்கம் உண்டாயிற்று. எட்டுத்தொகை நூல்களுள் மூன்று மாதங்களின் பெயர்களே இடம் பெற்றுள்ளன. அவற்றுள்ளும் தை மாதத்தின் பெயர் பெருவழக்காகப் பயின்று வந்துள்ளதை நாம் காணுகின்றோம், (அகம். 269, ஐங்கு. 84, கலி. 59, குறுந். 59, புறம். 70 முதலியன) இத்திங்கள் தமிழர் வாழ்வில் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
இதற்கு அடுத்த திங்களாகிய மாசியைப் பற்றிய குறிப்பு பதிற்றுப் பத்தில் மட்டும் காணப் பெறுகிறது (59:2)
பங்குனி மாதத்தைப் பற்றிய குறிப்பு புறநானூற்றில் இடம் பெற்றிருக்கிறது (229:5).
கார்த்திகைத் திங்களில் சிறப்பு மிக்க விழாவாகக் கொண்டாடப் பெறும் கார்த்திகை விளக்கீட்டைப் பற்றிய குறிப்புக்கள் அகநானூற்றில் காணப்பெறுகின்றன. ஆனல், கார்த்திகை என்று மாதத்தின் பெயர் சுட்டப் பெறவில்லை. எனினும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான "கார்நாற்பதும்” (26), களவழியும் (17) சுட்டுகின்றன.
இந்நான்கு திங்கள்களைத் தவிர சித்திரை, ஆடி போன்ற மாதங்களின் பெயர்கள் சங்க மருவிய காலத்தில் தோன்றிய சிலப்பதிகாரத்தில் காணப்பெறுகின்றன. (5:64; 23; 133).
பழைய தமிழ் இலக்கியங்களுள் இந்த ஆறு மாதங்களைப் பற்றிய குறிப்புக்களே காணப்பெறுகின்றன. தேவார காலத்தில் தான் மாதங்களின் பெயர்கள் பெரு வழக்குப் பெற்றுள்ளன. திருஞான சம்பந்தரது திருமயிலைத் திருப்பதிகத்தில் ஐந்து மாதங் களின்பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார்: 1. ஐப்பசி (2, 47, 2), 2. கார்த்திகை (2 : 47 3), 3. தை (2 : 47 :5) 4. மாசி (2 : 47 :6), 5. பங்குனி (2 : 47 : 7) எனவே பல்லவர் காலத்தில் மாதப் பெயர்கள் வழக்கில் இருந்தன எனலாம்.
மாதங்கள் எவ்வாறு பாகுபாடு செய்யப் பெற்றன?’ என்பது ஆராய்ச்சிக்குரியதாகும். மதியின் இயக்கத்தை-வளர்ச்சியை யும், தேய்வையும் - அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப் பெற்ற காலமே மாதமெனப் பெயர் பெற்றது, என்பர். மாதத்தைத் "திங்கள்’ என்று குறிப்பிடுவதும் இதற்குச் சான்று பகருகிறது.
இது பண்டைக் காலத்தில் சந்திரனை நிலைக்களனாகக் கொண்டு தமிழர்கள் போற்றிப் பின் பற்றிய காலமுறையாகும். இதை வடமொழியாளர் 'சந்திரமானம்’ என்பர். ஆனால், இன்று தமிழ் நாட்டில் தமிழரிடையே நடைமுறையில் இருந்து வருவது ஞாயிற்றை அடிப்படையாகக் கொண்ட 'செளரமானம்’ என்ற கணக்கு முறையாகும். கி. பி. ஏழாம் நூற்றண்டில்-வராகமிகிரர் வகுத்துத் தந்த வானவியல் காலக் கணக்கு முறையைப் பின்பற்றி அமைக்கப் பெற்றதே சௌரமான முறை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
இம்மாதங்களின் பெயர்கள் 'தமிழ்ப் பெயர்களா?’ என்பதைப் பற்றி அறிஞர்களிடையே கருத்து வேற்றுமை இருந்து வருகிறது.
டாக்டர் கால்டுவெல், மிகப் பழங்காலத்திலேயே மாதங் களின் வடமொழிப் பெயர்கள் எளிதில் அடையாளங் காண முடியாதபடி திரிக்கப் பெற்று, தமிழில் வழங்கப் பெற்றிருக்க வேண்டும் என்று கருதுகிறார். (A Comparative Grammar of Dravidian Languages, 85).
ஆனால், தமிழ் ஆராய்ச்சியின் முன்னோடிகளுள் ஒருவரான மு. சி. பூர்ணலிங்கம் பிள்ளே அவர்கள் மாதப் பெயர்கள் அனைத் தும் தமிழ்ப் பெயர்களே என்னும் கருத்தை ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் தமிழ் மாதங்களின் பெயர் க் காரணம்’ என்ற கட்டுரை யில் தெளிவுபடுத்தியுள்ளார். (நாச்சினார்க்கினியன் தை இதழ், உருத்தோற்காரி, திருச்சி).
இவ்விரு வகையான கருத்துக்களையும் நாம் சீர் தூக்கிப் பார்க்கின்ற பொழுது தை, கார்த்திகை போன்ற சில மாதங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இருப்பதும் சித்திரை, புரட்டாசி, ஐப்பசி போன்ற மாதங்களின் பெயர்கள் வடமொழிப் பெயர்களின் திரிபாக விளங்குவதையும் நாம் பார்க்கின்றோம். இதனால் அறுவகைப் பருவங்களேக் கொண்ட காலக் கணக்கே மிகவும் தொன்மையானது என்பதும், பன்னிரண்டு திங்களாகப் பகுத்துக் கூறும் வழக்கம் பிற்பட்டது என்பதும் புலனாகின்றன.
அறுபது ஆண்டுகள்
இன்று தமிழ் நாட்டில் அறுபது ஆண்டுகளைக் கொண்ட ஒரு வகைக் கணக்கு முறை நடைமுறையில் இருந்து வருகிறது. பிரபவ முதலாக அக்ஷய ஈறாக இவ்வறுபதாண்டு வட்டம் சுழன்று வருகிறது. கடந்த சில நூற்றண்டுகளாக இவ்வாண்டுக் கணக்கு முறையே தமிழ் ஆண்டுக் கணக்கு முறையாகப் போற்றப்பட்டு வருகிறது. இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களுள் ஒன்று கூடத் தமிழ்ப் பெயராக இல்லை என்பது அறிஞர்கள் அறிந்த உண்மை. மற்றும் குறிப்பிட்ட ஓர் ஆண்டு ஒருமுறை குறிக்கப் பெற்றால், பின்னர் அறுபதாண்டுகள் கழித்து அதே பெயருடைய ஆண்டு வந்துவிடுகிறது. முந்நூறு ஆண்டுக் காலத்தில் குறிப்பிட்ட ஒராண்டு ஐந்து முறை சுழன்று வருகிறது.
இத்தகைய காலக் கணக்கு முறை கி. பி. பதினைந்தாம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் வழக்கத்தில் இல்லை! குலசேகரன் என்ற பராக்கிரம பாண்டியனுடைய செங்கோட்டைச் சிவன் கோயில் கல்வெட்டில் (யானறிந்த வரையில்) முதன் முதலாக இந்த அறுபதாண்டுக் காலக் கணக்கு முறை இடம் பெற்றுள்ளது எனலாம். இக் கல்வெட்டில் பொறிக்கப்பெற்ற காலம் கி. பி. 1545 ஆம் ஆண்டாகும் (Arch. Survey Vol I, No. VI P. 103-4) இக் கல்வெட்டில் விசுவாவசு ஆண்டுக் குறிப்பிடப் பெற்றுள்ளது. இந்த ஆண்டு அறுபது ஆண்டு வட்டத்தில் முப்பத்தொன்பதாவது ஆண்டாகும், இக் கல்வெட்டுத் தென் இந்தியாவில் விசய நகரப் பேரரசு சிறப்புற்று விளங்கிய காலத்தில் பொறிக்கப் பெற்றது. அப்பேரரசு காலத்திய கலவெட்டுக் களில் இந்த ஆண்டுக் கணக்கு முறை வழக்கத்திற்கு வந்தமை புலனாகின்றது.
இந்த அறுபதாண்டுக் கணக்கு முறைக்கு மாறாகத் தொண்ணுாறு ஆண்டுகளடங்கிய கோள்களின் சுழற்சி வட்டம் ஒன்று தென்னிந்தியாவில் வழக்கிலிருந்ததாக வீரமாமுனிவர் குறிப்பிடுகிறார், இதைப்பற்றி பிரின் சப் என்பவர் “இந்தியப் பழமைகள்' என்ற குறிப்பேட்டில்,
"90 ஆண்டுகளடங்கிய கிரகப் பரிவிருத்தி வட்டம்; அது செவ்வாயின் 25 வலஞ்சுற்று மண்டலங்கள், புதனின் 22, வியாழனின் 11, வெள்ளியின் 5, சனியின் 29 ஞாயிற்றின் 1 வலஞ் சுற்று வட்டங்கள் ஆகியவற்றின் நாள் எண்ணிக்கையின் பெருக்கமாக அமைந்தது என்று தெரிய வருகிறது. இதன் தொடங்கு கட்டம் கலியூழி 3078 ஆம் ஆண்டு முடிவில், அதாவது கி. மு. 24 இல் நிகழ்ந்தது. ஆண்டுக் கணிப்பு ஞாயிற்று முறை அல்லது வான் மீன் முறைப்படியமைந்த து எந்த மேலை யாண்டுக்கும் எதிரான இவ்வாண்டு எளிதிலே 24 ஐக் கூட்டி 90 ஆல் வகுத்துக் காட்ட முடியும். எடுத்துக்காட்டாக கி. பி. 1830க்கு 1830 உடன் 24 கூட்ட 20 வட்டங்கள் 54 ஆண்டுகள் கிடைக்கும். (Prinseps Indian Antiquities, Vol. II p. 158).
இந்த அறுபது ஆண்டுக் கணக்கிற்கும் தொண்ணுாறு ஆண்டுக் கணக்கிற்கும் இடையே உள்ள தொடர்பு யாதென்பதை இன்று ஆராய்ந்து அறிய இயலவில்லை. இந்த அறுபதாண்டு காலவட்டத்தின் ஆண்டுத் தொடக்கம் சித்திரைத் திங்கள் முதல் நாளாகக் கொள்ளப்பட்டு வருகிறது. இன்று நாம் சித்திரைத் திங்களின் தொடக்கமாகக் கணக்கிடும் நாளிலே ஒரு சிறு குறை இருந்து வருகிறது. தென்னாட்டுப் பஞ்சாங்கக் கணிப்பாளர்கள் கி. பி. ஏழாம் நூற்றாண்டில் வராகமிகிரர் வகுத்துத் தந்த காலக் கணிப்பை இன்னும் அப்படியே பின்பற்றி வருகின்றனர். அதனால் 23 நாட்கள் நம்முடைய காலக் கணக்கில் பிற்பட்டதாகி இருக்கிறது. இக்குறையை ஐம்பதாண்டுகளுக்கு முன்பே தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் சுட்டிக் காட்டியுள்ளார்: வசந்த விஷூ வானது மேஷராசியின் ஆரம்பத்தில் இருந்த பொழுது உத்தராயணம் தை மாதப் பிறப்பன்று தொடங்கியது. அதற்கு அப்பால் கணக்குத் தவறிப்போய் விட்டது. அயன விஷூ க்களின் சலனத்தை அறியாமலோ அறிந்திருந்தும் கவனியாமலோ ஸம்வத்சரத்தின் பரிமாணத்தை 20½ நிமிஷம் அதிகமாகக் கணித்து விட்டபடியால், அயன விஷூ காலங்கள் வருஷம் ஒன்றுக்கு 20½ நிமிஷம் பிந்திவருகின்றன. 80 வருஷத்திற்கு ஒரு நாள் பிந்தி விடும். மேற்படி நியமங்கள் ஏற்பட்டு இப்போது அநேக நூற்றண்டுகளாகிவிட்டன. அதனால் புண்ய காலங்கள் 20, 22 நாள் பிந்திப் போய்விட்டன (பாரதியார் கட்டுரைகள் ப. 48). எனவே தமிழ் ஆண்டுக் கணக்கினைத் திருத்த வேண்டும்.
திருவள்ளுவராண்டுக் கணக்கு முறையைப் பொங்கல் திருநாளில் தொடங்குவதே சாலவும் பொருத்தமாகும்.
தமிழகத்தின் ஆண்டுக் கணக்கு முறை, திரு. க. த. திருநாவுக்கரசு. ஆய்வுக் கோவை, தொகுப்பாளர் டாக்டர் வ. சுப. மாணிக்கம், அண்ணாமலைப் பல்கலை, 1971, பக்கம்: 376 - 381.
https://ta.wikisource.org/s/1lwe-----------------------------------------------------