(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 94: வஞ்சியின் எழுச்சியுரை-தொடர்ச்சி)
பூங்கொடி
பூங்கொடியை அடையும்வழி
`வேங்கை நகரெனும் வியன்பெரு நகரினுள்
பூங்கொடி புகுந்து புதுமைத் தமிழிசை
ஆங்கண் வருவோர்க் கன்புடன் பயிற்றி
நின்றனள்; நீயும் சென்றவட் குறுகி
ஒன்றிப் பழகி உயர்தமிழ் இசைபயில் 235
—————————————————————
எய்யாது – சளைக்காமல், ஒய் – விரைவுக்குறிப்பு. ஒல்கா – அடங்காத, கனல – எரிக்க.
++++++++++++++++++++++++++++++++++++++++
குழுவில் இடம்பெறு, கொக்கென நடந்திரு,
பழகுறும் பாவையின் நற்பதம் நோக்கி
நழுவா வகையில் நயந்துரை மொழிந்திடு,
அழகிய அவளுடல் ஆடவன் நினக்கு
விருந்தாம் நிலையில் வென்று திரும்புதி! 240
பொருந்தா மனமும் திருந்திய தாகிப்
பொருந்தும் மணம்பெறப் பூவை தன்னொடு
திரும்புநன் னாளைத் தேர்ந்தெதிர் நோக்கிக்
கண்படை பெறாது காத்திவண் கிடப்பேன்
திண்மன முடையாய் செல்லுதி’ என்றனள்; 245
கோமகன் பூங்கொடியைச் சார்தல்
வஞ்சி உரைத்தவை செஞ்சொல் எனக்கொண்டு
எஞ்சாச் செல்வன் எளிமையை னாகி
வேங்கை நகரில் பூங்கொடி தன்பால்
தேங்கிய ஆர்வலன் சேர்ந்தனன்; ஒரு நாள்
தமியல் தானே நின்றவள் முன்னர்க் 250
குறுகினன் சென்று `கூர்விழி நல்லாய்!
ஒருமொழி நின்பால் உரைத்திட விழைந்தேன்;
திருமணங் கொள்கெனச் செப்பல்
சிறியவள் நீதான் திருமணம் பெறாஅது
துறவுளம் கொண்டு குறளகம் புக்க
காரணம் என்கொல்? கடிமணம் கொள்ள 255
ஆரணங் குன்னை அகத்தினில் நிறுத்தி
நாடொறும் தொழூஉம் ஆடவர் உளரெனச்
சேடிய ரேனும் செப்பிலர் கொல்லோ?
வாடிய இளங்கொடி வாழ்வை வெறுத்தது
முறையன் றெனினும் உரிமைஎன் றாகும்; 260
ஆயினும் பிறராம் ஆடவர் தம்மை
ஆயுள் முழுதும் அனலிடைப் புழுவென
வீயுறச் செய்வது வேல்விழி முறையோ?
சேயிழை! என்மொழி சினவா திதுகேள்!
கன்னியர் என்போர் காதலை மதிக்க 265
—————————————————————
பூவை – பூங்கொடி, தொழூஉம் – தொழும், வீயுற – அழிய.
+++++++++++++++++++++++++++++++++++++++++
முன்னுதல் வேண்டும் முரணின ராயின்
பெண்மைக் கிழுக்கெனப் பேசுமிவ் வுலகம்
எண்ணித் துணிக’ என்றனன் கோமகன்;
பூங்கொடியின் மறுமொழி
பூங்கொடி அவன்மனம் புரிந்தன ளாகி
`வீங்கிய மனத்து விறலோய் கேண்மோ! 270
மலர்தொறும் நன்மணம் மற்றவர் செயற்கையால்
நிலவுதல் இல்லை இயற்கையின் நிலைமை;
திருமண நினைவும் செயற்கையில் தோன்றி
வருவதும் இல்லை, மனத்தின் இயற்கை;
இல்லறம் ஒருபெரும் நல்லறம் இதனை 275
அல்லறம் எனநான் அயர்த்தும் புகலேன்;
தனிமை வாழ்வினும் துணையுடன் வாழ்வதே
இனிமை எனப்புவி இயம்பக் கேட்டுளேன்,
ஆயினும் பொதுப்பணி ஆற்றுவோர் சிற்சிலர்
தோயுமிவ் வின்பம் துறப்பது மேலென 280
ஆயும் புலத்தால் அறிந்துளேன் எனினும்
காவியும் மணியும் கடுவிலங் குரியும்
பூவிரி கானும் பூண்டேன் அல்லேன்,
உள்ளத் தெழூஉம் உணர்ச்சிகள் அடக்கி
உள்ளம் துறந்தேன் உலகம் துறந்திலேன், 285
(தொடரும்)
கவிஞர் முடியரசன், பூங்கொடி
(சனியின் நிறம், தன்மை, இயல்பு அறிந்த விந்தை மனிதர்கள்! – தொடர்ச்சி)
இன்றைக்கு நாம் வால்நட்சத்திரம் என்று சொல்லப்படுவதன் கிரேக்கப் பெயர் கோமெட்(kometes) என்பதாகும். இதிலிருந்தே காமெட் (comet) என்னும் ஆங்கிலப் பெயர் தோன்றியது. நீண்ட முடி என்பது இதன் பொருள். கிரேக்க அறிவியலாளர் அரிசுடாடில் (Aristotle) தலைமுடி போல் தெரிவதாகக் கூறி இதனை அப்பொருளில் முதலில் குறிப்பிட்டார். வால் போல் நீண்டுள்ள விண்பொருள் என்னும் பொருளிலேயே பலர் குறிப்பிடுகின்றனர். உலகில் பஞ்சம், கொள்ளை நோய், ஆட்சி வீழ்ச்சி, தலைவர் இறப்பு முதலான துயர நிகழ்வுகளைக் குறிக்க இது தோன்றுவதாக உலக நாடுகள் எல்லாவற்றிலும் நம்பிக்கை உள்ளது. இதனைப் பனியால் சூழப்பட்ட சிறுகோள் என்றே அயல்நாட்டார் தொடக்கத்தில் கருதி வந்துள்ளனர். அறிவியல் முன்னேற்றத்திற்குப் பின்னரே வால் போல் அல்லது முடி போல் தெரியும் பகுதி உண்மையில் வால் அல்ல என்பதை உணர்ந்தனர். இதன் முன்பக்கம் உள்ள காற்றும் பிற துகள்களும் அழுத்தம் மிகுந்த சூரியக் கதிர்களால் எதிர்ப்புறம் தள்ளப்படுகின்றன. இவ்வாறு தள்ளப்பட்டுப் புகையாகச் செல்லும் பகுதியே நமக்கு வால் போல் காட்சியளிக்கிறது. விண்ணில் இவை மிகுதியாகக் காணப்பட்டாலும் யார் யார் முதலில் இதனைக் கண்டு தெரிவிக்கிறாரோ அவர் பெயரே இதற்குச் சூட்டப்படுகின்றது.
ஆனால், பழந்தமிழர்கள் வெறும் தோற்றத்தின் அடிப்படையில் பிறர் போல் வால் நட்சத்திரம் என்று சொல்லவில்லை. வால் நட்சத்திரம் என்பது இக்காலத்தில் தவறாக வந்த சொல்லாட்சி. மேலும் இது நட்சத்திர வகைப்பாட்டிற்குள்ளும் வராது. கழிவுப் பொருள்கள் எரிந்து தள்ளப்படும் இயல்பை உணர்ந்து புகைக்கொடி என்றே அழைத்தனர். தூமம் என்றால் புகை எனப்பொருள். பின்னர் இதனைத் தூமகேது என்றும் குறிப்பிட்டனர்.
கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும் (சிலப்பதிகாரம்: 10 : 102 : 3)
என்று இளங்கோ அடிகள் புகைக்கொடி எனக் குறிப்பிட்டுள்ளதைச் சிலப்பதிகாரத்தில் காணலாம்.
முன்பு (http://natpu.in/natpu/Pakudhikal/Kural/21.php)குறிப்பிட்டவாறு
மைம்மீன் புகையினுந் தூமந் தோன்றினும்
தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும் (புறநானூறு 117: 1-2)
எனப் புலவர் கபிலர் தூமம் என்று சொல்லியுள்ளார்.
மிகச் சிறந்த விண்ணியல் அறிவு இருந்தாலன்றி வெறும் தோற்றத்தின் அடிப்படையில் அல்லாமல் – விண்ணிலுள்ள ஒளிரும் இப் பொருள் நட்சத்திரம் அல்ல என்பதை உணர்ந்து – அதன் அறிவியல் தன்மையை அறிந்து புகைக்கொடி என்று நம் முன்னோர் பெயர் சூட்டி இருக்க மாட்டார்கள்.
வானறிவியலில் தலைசிறந்து இருந்த நாம் வான்புகழ் பெற, இன்றைக்கும் வானறிவியலில் முன்னோடியாகத் திகழ வேண்டும் அல்லவா?
– இலக்குவனார் திருவள்ளுவன்
நட்பு இதழ்
சனாதனம் பொய்யும் மெய்யும்: 16
? சனாதனத்தின்படிப், பிராமணர்கள் மட்டும் பூணூல் போடுவதில்லை. பிறரும் போடலாம்; போடுகிறார்கள் என்கின்றனரே!
சிற்பிகள் முதலானோர் பூணூல் அணிவதும் உண்மைதான். அதுபோல் திருமணம் அல்லது பிற சடங்குகளின் பொழுது எல்லாச் சாதியினரும் பூணூல் அணிவது உண்மைதான். அஃதாவது சடங்குகளின் பொழுது பிராமணன் மட்டுமே தெய்வத்தை வணங்குவதற்கும் வழி படுவதற்கும் உரியவன் என்று சொல்லி அனைவருக்கும் பூணூல் போட்டுவிடுவதும் உண்மைதான். இதன் மூலம் கடவுளை வேண்டவும் பிராமணனே தகுதியானவன் எனப்படுகிறது.
“திருமணமாயினும் நீத்தார் சடங்காயினும் நம்மைப் பூணூல் அணியச் செய்யும் பொழுது அவ்வாறு அணிந்தால்தான் நாம் சடங்கிற்கு உரிய தகுதி பெறுகின்றோம் என்றும் கடவுளின் அருளுக்கு ஆளாகின்றோம் என்றும் கூறி இழிவுபடுத்தும் பொழுது நாம் அதை எதி்ர்க்காமல் ஏற்றுக்கொள்ளும் இழி தகைமை இன்றும் உள்ளது. திராவிட இயக்கப் பணிகளாலும் தன்மதிப்பியக்கச் செயற்பாடுகளாலும், இந்நிலைமை ஓரளவு குறைந்துள்ளது.” என முன்பு ஒரு கட்டுரையில் (கடவுளர் சிலைகளுக்குப் பூணூல் எதற்கு?, இலக்குவனார் திருவள்ளுவன், அகரமுதல 12.02.2017) குறிப்பிடப்பட்டது இங்கே நினைவு கூரத்தக்கது.
அவ்வாறே பிறர் பூணூல் அணிந்தாலும் அவற்றிலும் பாகுபாடு காட்டுவதே சனாதனம். பூணூல்களில் பயன்படுத்தப்படும் நூல்கள் வருணத்திற்கேற்ப மாறுபடும். பிராமணனுக்குப் பஞ்சு நூலாலும், சத்திரியனுக்கு சணப்ப நூலாலும், வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்றுவடமாகத் தோளில் பூணூல் தரிக்க வேண்டும். (மனு,அத்தியாயம் 2 : சுலோகம் 44.) இதை மறைத்துவிட்டு அனைவரும் பூணூல் அணியலாம் என்பது வருணாசிரமம் எனக் கூறுவோரைச் சட்டப்படித் தண்டிப்பதுதான் முறையாகும்.
“சித்தூர் அதலாத்துக் கோர்ட்டுத் தீர்ப்பு” என்னும் நூலில் பூணூல் அணிவது தொடர்பான வழக்கு ஒன்று குறிக்கப் பெற்றுள்ளது.
விசுவப் பிரம்ம சங்கத்தார் தங்கள் குலத்திற்கான திருமணங்களைத் தாங்களே செய்து கொள்ளலாம் என்றும் பிராமணர்கள் செய்யத் தேவையில்லை என்றும் அறிவித்தனர். பஞ்சாங்கக் குண்டையன் முதலிய பிராமணர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்த வழக்கு பஞ்சாயத்தார் முன்னிலையில் வந்தது. பஞ்சாயத்தார் பிராமணர், பஞ்சாங்கம் குண்டையன் என்பார் கேட்கிற கேள்விகளுக்கு ஆசாரி பிரிவினர் வேத பிரமாணப்படி மறுமொழி கூற வேண்டும். கூறிவிட்டால் அவர்களே தங்கள் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம்; இல்லையென்றால் பிராமணர்களை வைத்துத்தான் திருமணம் நடத்தவேண்டும் என்று கூறினார்கள். பஞ்சாயத்தாரின் விதிகளுக்கு உட்பட்டுப் பிராமணப் பஞ்சாங்கக் குண்டையன் கேட்ட கேள்விகளுக்கு மார்க்க சகாயம் ஆசாரி வேதப் பிரமாணமாக விடை அளித்தார். இரு தரப்பையும் கேட்டறிந்த பஞ்சாயத்தார், “”பண்டிதர் மார்க்க சகாயம் ஆசாரி உங்கள் புராணங்களை உள்ளங்கை நெல்லிக்கனி போல் யாவருக்கும் நன்றாக விளங்கும்படி உம்மிடத்தில் தருக்கித்ததும் மறுமொழி சொல்ல வகையில்லாமல் நீர் பிரமை கொண்டது யாவருக்கும் நன்றாகத் தெரிந்திருப்பதால், இனி விசுவப் பிரம்ம சங்கத்தார் வேத விதிப்படி விவாக முடிப்பதற்கு இந்த பஞ்சாங்கக் குண்டையன் முதலியோர் யாதொரு தடங்கல் செய்யக் கூடாதென்று” 1818 இல் தீர்ப்பு சொன்னார்கள். இத்தீர்ப்பை ஒப்புக்கொள்ளாமல் பஞ்சாங்கக் குண்டையனும் வேறு சில பிராமணர்களும் சேர்ந்து கொண்டு ஆசாரிகளுடன் அடிதடிச் சண்டையில் ஈடுபட்டார்கள்.
மனுதருமம் கூறியபடி பிராமணர்களுக்குத்தான் வேதம் ஓதுவித்தல் உள்ளிட்ட கடமைகள் செய்ய உரிமையுண்டு என்பதை மெய்ப்பிக்க இயலாமல் சண்டையில் பிராமணர்கள் இறங்கியதைச் சித்தூர் வழக்கு எடுத்துக் கூறுகிறது.
1896இல் ஃகம்பி(Hampi) ஏம கூட மடத்தில் நடந்த விவாதத்தில் தேவாங்கர்கள் பூணுல் அணிவது தம் உரிமை என மெய்ப்பித்துள்ளனர். இவ்வழக்குகள் எல்லாம் பிராமணர்களின் ஏகபோக உரிமையாகப் பூணூல் கருதப்படுவதையும் அதன் விளைவையும்தான் காட்டுகின்றன. என்ற போதும் பூணூல் மூலம் பிராமணர்களை உயர்ததுவதே சனாதனம்.
பூணூலின் முதன்மையைக் கூறவந்த மனு “பிராமணன், உபநயனஞ் செய்து கொள்ளுவதற்கு முன்பு சூத்திரனுக்கு ஒப்பானவன் (2:172)” என்பதன் மூலம் பூணூல்தான் பிராமணர்களை உயர்ந்தவர்களாக்குகிறது, மற்றவர்களை இழிவானவர்களாக்குகிறது என்று அறிவிக்கிறது. பூணூல் அணிந்த பிராமணர்களுக்குக் குமுகத்தில் இருக்க வேண்டிய உயர் நிலை பற்றிப் பேசுகின்ற மனு, “வைதீகமாக இருந்தாலும் உலகியலாக(இலெளகீகமாக) இருந்தாலும் நெருப்பு எப்படி மேலான தெய்வமாகவே இருக்கிறதோ அப்படியே பிராமணன் ஞானியாக இருந்தாலும் மூடனாக இருந்தாலும் அவனே மேலான தெய்வம் (9:317)”, ”பிராமணர்கள் கெட்ட காரியங்களில் ஈடுபட்டு இருந்தாலும் சகலமான சுபங்களிலும் பூசிக்கத்தக்கவர்கள். ஏனெனில், அவர்கள் மேலான தெய்வமல்ல வா! (9:319)” என அறிவிக்கிறது.
பூணூல் முதலிய பிராமணச் சாதிக்குறிகளைத் தரிக்கிற சூத்திரன் அங்கங்களை அரசன் வெட்டி விட வேண்டும். (மனு, அத்தியாயம் 9, சுலோகம் 224) எனச் சனாதனம் சொல்லும்போது யார் வேண்டுமானாலும் பூணூல் போடலாம் என்பது ஏமாற்று வேலைதானே.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன், சனாதனம் பொய்யும் மெய்யும் பக். 36-39