அறிவியல் நோக்கு: தரை வீழ்ந்த விண்மீன் துகள் — தேமொழி

17 views
Skip to first unread message

தேமொழி

unread,
Dec 10, 2024, 9:11:36 PMDec 10
to மின்தமிழ்
தரை வீழ்ந்த விண்மீன் துகள்

  — தேமொழி



சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் வேண்டுகோளுக்கு இணங்கி, எட்டுத்தொகையில் உள்ள ஐங்குறுநூறு என்னும் நூலைத் தொகுத்ததாகக் கூறப்படுபவர் புலவர் கூடலூர் கிழார்.  இவர் வானவியலில் வல்லவராகவும் இருந்தார் என்பதை இவர் பாடிய புறநானூற்றுப் பாடல் (229) மூலம் நாம் அறிய முடியும்.   ஒரு பங்குனித் திங்களில், சேர மன்னனின் இறுதி நாட்களில், வானிலிருந்து ஓர் எரிமீன்  தீப்பிழம்புபோல் ஒளியுடன் எரிந்து விழுந்தது. அதை 'ஒருமீன் விழுந்தன்றால் விசும்பினானே' என்று குறிப்பிடும் புலவர், மன்னனின் உயிருக்குக் கேடு விளையும் என்பதற்கான ஒரு தீய நிமித்தமாக இந்நிகழ்ச்சியைக்  கருதிக் கலங்கினார். அவர் அஞ்சியது போலவே மன்னனும் அடுத்த சில நாட்களில் உயிர் நீத்தான் என்பதை இப்புறப்பாடலின் கருத்து தெரிவிப்பதுடன், வானில் மற்ற கோள்கள் விண்மீன்கள் ஆகியவற்றின் நிலை பற்றிய குறிப்பையும் தருகிறது.

     பங்குனிஉயர் அழுவத்துத்
     தலைநாள்மீன் நிலைதிரிய,
     நிலைநாள்மீன் அதன்எதிர் ஏர்தரத்,
     தொல்நாள்மீன் துறைபடியப்,
     பாசிச் செல்லாது ஊசி முன்னாது
     அளக்கர்த்திணை விளக்காகக்
     கனைஎரி பரப்பக் கால்எதிர்பு பொங்கி
     ஒருமீன் விழுந்தன்றால் விசும்பினானே (வரிகள்: 5-12)
 
எரிமீன்கள் வீழ்வது கேட்டுக்கு அறிகுறி என்ற கருத்தை மற்றொரு புறநானூற்றுப் பாடலிலும்  (பாடல்-41) காண முடிகிறது. இப்பாடலைப் பாடிய புலவர் கோவூர் கிழார். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் வீரத்தைப் புகழ்ந்து பாடும் அவர்,  சோழனின் பகைவர்களுக்கு அழிவுக் காலம் தொடங்கிவிட்டது என்பதைக் குறிக்க, உன் எதிரிகளின் நாட்டில், எட்டுத் திசைகளிலும் வானத்திலிருந்து எரிமீன்கள் (உற்கம்) எரிந்து விழுகின்றன என்கிறார்.  
     வேல்ஈண்டு தானை விழுமியோர் தொலைய,
     வேண்டிடத்து அடூஉம் வெல்போர் வேந்தே!
     திசைஇரு நான்கும் உற்கம் உற்கவும் (வரிகள்: 2-4)
எரிகல்  என்பது விண் வீழ்கொள்ளி, எரிகொள்ளி, உற்கம், வீழ்மீன் என்றும்  இலக்கியங்கள் கூறப்படுகின்றது.

வானத்திலிருந்து தங்கள் வாழ்க்கைக்கான செய்திகளை மக்கள் அறிய முயலும்  'ஆரூடம்' என்ற துறை 5000 ஆண்டுகளுக்கு முன்னர் பாபிலோனியாவில் தோற்றம் கண்டதாக  வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. தொலைநோக்கிக் கருவி கண்டுபிடிக்கப்படும் காலம் வரை வானவியலின் வளர்ச்சியும்,  பயனும் நிமித்தங்களை  அறியும் நிலைப்பாடு என்ற அளவில்தான் இருந்தது.  தொலைநோக்கிக் கருவிக்குப்  பிறகே வானவியல் ஆரூடக் கணிப்பு  என்பதிலிருந்து விலகி, அறிவியல் என்ற திசையில்  நகர்ந்து இன்றைய நாளில் வியத்தகு வளர்ச்சி அடைந்துள்ளது.  

இருப்பினும் வாழ்க்கைப் போராட்டத்தில்  மன அமைதி இழந்த மக்களிடையே ஆறுதலுக்காக ஆரூடம் பார்க்கும் வழக்கமும் இன்றும் தொடர்கிறது. விண்கலங்களை நல்லநாள் நல்ல ஓரை என்றெல்லாம் கணித்து விண்ணில் ஏவும் அளவிற்கு இவ்வழக்கத்தை அறிவியலாளர்களும் கொண்டிருப்பது  'கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக' என்பதைக் கைவிட்ட நிலை எனலாம்.  

எரிமீன்(meteor) விழுவது, வால்மீன்(தூமகேது/comet) தோன்றுவது, சந்திர சூரிய கிரகணங்கள் (eclipses) ஏற்படுவது, கோள்கள் நேர்கோட்டில் அமைவது (planetary alignments), அவை அடுத்தடுத்து அருகில் இருப்பது (celestial conjunction) என எது நிகழ்ந்தாலும் அவை எல்லாம் வரப்போகும் கேட்டின் அறிகுறிகள்,  கெட்ட நிகழ்ச்சிகளின் முன்னறிவிப்புகள் என்று அறிவியல் அறியாத தொல்மாந்தர் கொண்டிருந்த அதே அச்சம் கொண்ட மனப்பான்மை இக்கால மக்களிடமும் இருக்கிறது.

எரிமீன், எரிநட்சத்திரம் என்று (ஆங்கிலத்திலும் ஷூட்டிங் ஸ்டார்) அழைக்கப்படுபவை விண்மீன்கள் அல்ல,  அவை வளிமண்டலத்தில் நுழையும் விண்கற்கள். சில நேரங்களில் புவிக்கு அருகே பயணிக்கும் சில விண்கற்கள் புவியின் ஈர்ப்பு விசையால் புவியின் வளிமண்டலத்தில் வேகமாக நுழையும்போது, உராய்வு விசையால் தீப்பற்றி எரிந்து, வானத்தில் ஓர் ஒளியை உருவாக்கி வீழ்கிறது என்பதுதான் எரிமீன் என்பதற்கான அறிவியல் விளக்கம்.  

வானிலிருந்து பல்லாயிரக் கணக்கான எரிமீன்கள் நாளும் விழுந்த வண்ணமே உள்ளன. சில காலங்களில் இவை எரிமீன் பொழிவாகவும் (meteor shower) கொட்டுவதுண்டு. டிசம்பர் 4 மற்றும் டிசம்பர் 20 க்கு இடையில் நிகழும் ஜெமினிட் எரிமீன் பொழிவின் உச்சக்கட்டமாக,   டிசம்பர் 13, 14  ஆம் தேதி இரவுகளில் மணிக்கு 15 எரிமீன்கள் விழலாம் என்று கணிக்கிறார்கள்.

நமது சூரியக் குடும்பத்தில் உள்ள பெரும்பாலான சிறுகோள்கள் அளவிலான விண்கற்கள் பெரும்பான்மையும் செவ்வாய் மற்றும் வியாழன் இடையே உள்ள விண்கற்கள் கற்றையில் (asteroid belt) காணப்படுகின்றன. ஜூன் 30ஆம் நாள் பன்னாட்டு விண்கற்கள் நாளாக (International Asteroid Day) ஒவ்வொரு ஆண்டும்  கடைப்பிடிக்கப்படுகிறது.

எரிமீன்கள்  வால்மீன்கள்  என்பதிலிருந்து வேறுபட்டவை. எரிமீன்கள் விண்கற்கள். வால்மீன்கள் சூரியனைக்  கோள்கள் போலச் சுற்றுபவை. எனவே  குறிப்பிட்ட கால  இடைவெளியில் அவை மீண்டும் தோன்றுபவை . இதற்கு எடுத்துக்காட்டு ஹேலியின் வால்மீன்(Halley's Comet).  வால்மீன்கள்  கற்கள்  அல்ல அவை தூசிகளாலும் பனியாலும் ஆனவை. சூரியனை நோக்கி ஈர்க்கப்பட்ட நிலையில் வால்மீன் சுற்றும் பொழுது பனியும் தூசும் பின்னோக்கித்  தள்ளப் படுவதால், வால்மீனுக்குப் பின்புறமாக அது நீண்டு வால் போலத் தோற்றமளிக்கும்.

பெரும்பாலும் எரிமீன்கள் விண்ணிலே எரிந்து  துகள்களாகி மறைந்துவிடும். சற்று பெருங்கல்லாக இருப்பின் முற்றிலும் எரியாத நிலையிலும் சில விண்கற்கள் (meteorite) புவியின் தரையில் விழுவதுண்டு. புவியின் பல்வேறு இடங்களில் இவ்வாறான விண்கற்கள் கிடைத்துள்ளன. எரிமீன்களும் வால்மீன்களும் சூரியக் குடும்பம் உருவானபொழுது விடுபட்ட எச்சங்கள்.  சுமார் 4.6 நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு நமது சூரியக் குடும்பத்தின் ஆரம்ப நாட்களில்  உருவானவை. சிதைந்த விண்கற்களும் வால்மீன்களும் எரிமீன்களாகப் புவியில் விழுகின்றன. அவை வேறுபட்ட வேதியியல் பண்புகள் காரணமாக வெவ்வேறு வண்ணம் கொண்டவையாக எரிந்து விழும். ஆகவே, பல்வேறு வகையான விண்கற்களை ஆராய்வதன் மூலம் பிற கோள்கள் மற்றும் நமது சூரிய மண்டலத்தின் பிற பகுதிகளைப் பற்றி மேலும் நாம் அறிய முடியும்.  

நன்றி: உலகத்தமிழ் இதழ் #262 , 11.12.2024, பக்கம் 26-27
----
262-1.jpg
--
262-2.jpg
-------
Reply all
Reply to author
Forward
0 new messages