நச்சினார்க்கினியர் — மு. அண்ணாமலை

81 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jul 2, 2024, 11:36:13 PMJul 2
to மின்தமிழ்
நச்சினார்க்கினியர்
— மு. அண்ணாமலை
தமிழ் விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.
Nachinarkiniyar image.png
நச்சினார்க்கினியர், மு. அண்ணாமலை, பழனி பிரசுரம், 1956
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0033572/ACL-TNAL_01281_நச்சினார்க்கினியர்_1956.pdf
பக்கம்: 5-9 

நச்சினார்க்கினியர் யார்?

1. உரையாசிரியர்.
நச்சினார்க்கினியர் பழைய உரையாசிரியர்களில் ஒருவர்.பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவக சிந்தாமணி முதலியவற்றிற்கு உரை வகுத்துள்ளார். குறுந்தொகை இருபது பாடல்களுக்குப் பேராசிரியர் உரை வகுக்காமற் போகவே எஞ்சிநின்ற அவைகட்கு நச்சினார்க்கினியர் உரை எழுதினார் என்று கூறப்படுகிறது. தொல்காப்பியம் முழுமைக்கும் உரை கண்டவர். தொல்காப்பியத்தில் எழுத்து. சொல், பொருள் முன் ஐந்தியல், செய்யுளியல் முதலியனவற்றிற்குரிய உரை இப்பொழுது அச்சிலே கிடைக்கின்றன. இலக்கணம் இலக்கியம் ஆகிய இரு துறையினும் வல்லவராயினும் அவரை ஓர் இலக்கிய உரைகாரராக வைத்துக் காண்பதே பொருந்தும்.

கலித்தொகை, பத்துப்பாட்டு முதலிய நூற்களுக்குச் சொல்லுக்குச் சொல் பொருள் கூறியும் ஆங்காங்கே விளக்கம் காட்டியும் செல்கிறார். சீவக சிந்தாமணியிலே சில பாடல்களுக்கு உரையே எழுதாமலும், சில பாடல்களுக்கு வினைமுடிபு மட்டும் காட்டியும், சீல பாடல்களில் சில சொற்களுக்கு மட்டும் விளக்கம் செய்தும், சில பாடல்களில் ஒரு சொல்லையும் வீடாமல் விரிவுரை செய்தும் செல்கிறார். ஒரு விரிவான காவியத்திற்குச் சுருக்கமாகவும், அழகாகவும், திட்பமாகவும், உரை செய்வதெப்படி என்பதற்குச் சீவக சிந்தாமணி உரை முன் மாதிரியாக அமைந்திருக்கிறது.

2. ஊர், சாதி, சமயம்.
நச்சினார்க்கினியர் மதுரையில் பிறந்து வாழ்ந்தவர். பாரத்துவாச கோத்திரத்தைச் சேர்ந்த ஸ்மார்த்த பிராமணராவர். தொல்காப்பியத்தின் ஒவ்வோர் இயல் முடிவிலும் "மதுரை ஆசிரியர் பாரத்துவாஜி நச்சினார்க்கினியர் செய்த காண்டிகை உரை முற்றிற்று" எனக் காணப்படுகிறது. பத்துப்பாட்டு உரை முடிவிலும், உரைச்சிறப்புப்பாயிரங்களிலும் அவ்வாறே கூறப்படுகிறது. எனவே மேற்கண்ட முடிவை நாம் ஏற்றுக் கொள்ளலாம். வைணவர், ஸ்மார்த்தர், மாத்துவர் ஆகிய மூவரிடத்தும் பாரத்துவாச கோத்திரம் காணப்படுகிறது.
       "வேண்டிய கல்வி யாண்டு மூன்றிறவாது"
          [தொல் -கற்பு-47 ]
என்ற நூற்பாவிற்குக் கல்வி குறித்துப் பிரியும் பிரிவின் கால அளவு மூன்று யாண்டுக்கு மேல் மிகாது என்பது பொருளாகும். இக்கருத்தினையே இளம்பூரணரும் உரைத்தனர். நம்பி அகப்பொருள்காரரும் "ஓதற் பிரிவு ஒரு மூன்றியாண்டே" என்று கூறினர். நச்சினார்க்கினியர் கல்விக்காகப் பிரியும் பிரிவிற்குக் கால எல்லை கூற உடன்படாராய் வேறு பொருள் உரைத்தனர். இறவாது என்ற சொல்லை இரண்டிடத்தும் கூட்டி கல்வி வேண்டிய யாண்டு இறவாது என்றும், மூன்று இறவாது என்றும் கொண்டார்.

"இஃது 'ஓதலும் தூதும்' என்னும் சூத்திரத்திற்
கூறிய ஓதற்பிரிவிற்குக் காலவரையறை இன்றென்பதும்
அவ்வோத்து இதுவென்பதும் உணர்த்துகின்றது" என்று
நுதலிய பொருள் கூறி,
     "துறவறத்தினைக் கூறும் வேதாந்தம் முதலிய கல்வி வேண்டிய யாண்டைக் கடவாது; அக் கல்வியெல்லாம் மூன்று பதத்தைக் கடவாது"
     மூன்று பதமாவன அதுவென்றும் நீ என்றும் ஆனா என்றும் கூறும் பதங்களாம். அவை பரமுஞ் சீவனும்      அவ்விரண்டும் ஒன்றாதலும். ஆதலின் இம்மூன்று பதத்தின் கண்ணே தத்துவங்களைக் கடந்த பொருளை உணர்த்தும் ஆகமங்களெல்லாம் விரியுமாறு உணர்ந்து கொள்க" [தொல்-கற்பு-47-உரை.]
என்று அவர் எழுதிச் சென்றார்.

அவருடைய உரை 'தத்துவமஸி' சொற்றொடரைக் குறிக்கிறது. தத்துவமஸி  மகாவாக்கியம் சாந்தோக்ய உபநிஷத்தில் தந்தை மகனுக்குச் சொல்வதாக அமைந்திருக்கிறது. இது எல்லோர்க்கும் பொதுவானாலும் அத்வைதிகளோடு மிகுந்த தொடர்பு கொண்டது. விசிட்டாத்துவைதிகளான வைணவர்களும் துவைதிகளான மாத்துவர்களும் ஸ்ரீமந் நாராயணனையே முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுபவர்கள். அத்வைதிகளான ஸ்மார்த்தர்கள் மகேசுவர பூசை செய்பவர்கள். வட மொழியில் ஈசுவர நாமம் சிவனுக்கே உரியதாகும்.

நச்சினார்க்கினியர் சைவர், அவரது பெயர் சிவனாரின் திருநாமங்களுள் ஒன்றாகக் காணப்படுகின்றது. 'நச்சினார்க்கினியாய் போற்றி' என்றும் 'நச்சுவார்க்கினியர் போலும் நாகவீச்சுவரனார் தாமே'என்றும் திருநாவுக்கரசர் தேவாரங்களில் பயின்று வருகின்றமையான் அறியலாம்.
     "தூய ஞானம் நிறைந்த சிவச்சுடர்
     தானே ஆகிய தன்மை யாளன்"
என்று வரும் 'உரைச் சிறப்புப்பாயிரத் தொடர்களால் அவர் சிவனை வழிபட்டவர் என்பதனையும், 'சிவச்சுடர் தானே யாகிய என்பதனுள் நிற்கும் அத்வைதக் குறிப்பினையும் உணரலாம். மற்றும் டாக்டர் உ. வே.சா. அவர்கள் நச்சினார்க்கினியர் சைவர் என்பதற்குரிய சான்றுகள் பல காட்டியுள்ளார்கள். தொல் எழுத்ததிகார மொழிமரபில் ஒரெழுத்தொருமொழி (12) என் னும் நூற்பாவின் விளக்க உரையில் திருச்சிற்றம்பலம், பெரும்பற்றப் புலியூர் எனத் தில்லையம்பதியின் வேறு பெயர்களை ஆறெழுத்தொரு மொழிக்கும் ஏழெழுத்தொரு மொழிக்கும் எடுத்துக் காட்டுக்களாக நல்கியிருக்கிறார். தத்துவக் கருத்துக்களை விளக்கத் திருவாசகம், திருக்கோவையார், திருக்கைலாய ஞான உலா முதலிய நூல்களிருந்து அடிக்கடி மேற்கொள்கள் காட்டுவர்.

அவர் வைதிக பிராமணராயினும், சிவனை வழிபடுபவராயினும் சமயக் காழ்ப்பில்லாதவர். சமண காவியமான சீவக சிந்தாமணிக்கு உரை எழுதியுள்ளமை இதனை நன்கு விளக்கும். 'அருளொடு புணர்ந்த அகற்சி' என்ற தொல்காப்பியத் தொடருக்கு துறவு என்று பொருள் எழுதி அவ்வருட் துறவுக்குப் புத்தன் துறவையே எடுத்துக் காட்டாக நல்கினார்.

கருவீன்று கிடந்த பெண்புலியொன்று எல்லைமீறிய பசியால் தான் ஈன்ற குழவியையே தின்னத் தொடங்கியது. புத்தனின் அருள் உள்ளம் அதனைக் கண்டு துடித்தது. பசியோடு கிடக்கும் பெண்புலிக்கு இரங்குவதா? தன் தாய்வாயிலேயே உயிரை இழக்க இருக்கும் மகவிற்காக வருந்துவதா? அதன் கூரிய பற்களுக்கிடையே புகுந்து தன்னையே இரையாகக் கொடுத்த புத்தனின் அருள் உள்ளத்தை என்னென்று வியப்பது! புத்தர் எத்துணை எத்துணையோ பிறவிகள் எடுத்தார். எப்படி எப்படி யெல்லாமோ உயிர்கட்கு உதவினார். இந்த விவரங்களைத்தான் புத்தர் ஜாதகக் கதைகள் கூறுகின்றன. அந்த ஜாதகக் கதைகளில் ஒன்றுதான் மேற் குறிப்பிட்ட கதையுமாகும். இக்கதை யாரோ ஒரு தமிழ்க்கவிஞனின் உள்ளத்தைக் கவர்ந்திருக்கிறது. அதனால் பாடலாக மலர்ந்திருக்கிறது'. அப்பாடலால் ஈர்ப்புண்ட இனியர் அதனை மேற்கோளாகக் காட்டியுள்ளார்.

     'புனிற்றுப் பசிஉழந்த புலிப் பிணவு தனாஅது
     முலை மறாஅக் குழவி வாங்கி வாய்ப்படுத்து
     இரையெனக் கவர்ந்தது நோக்கி ஆங்கவ்
     ஏரிளம் குழவி முன்சென்று தான் அக்
     கூருகிர் வயமான் புலவுவேட்டுத் தொடங்கிய
     வாள் எயிற்றுக் கொள்ளையில் தங்கினன் கதுவப்
     பாசிலைப் போதி மேவிய பெருந்தகை
     ஆருயிர் காவல் பூண்ட
     பேரருட் புணர்ச்சிப் பெருமை தானே!
வீரசோழிய உரைகாரரும் இதனையே மேற்கோளாகக் காட்டி
யுள்ளனர்.

3. காலம்.
நச்சினார்க்கினியர் பதினான்காம் நூற்றாண்டின் இறுதியிலாவது பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியிலாவது வாழ்ந்திருக்கலாம். இறையனார் களவியல் உரைகாரர், உரையாசிரியராகிய இளம்பூரணர், பேராசிரியர் சேனாவரையர் முதலிய உரையாசிரியர்களை இவர் தம் உரையில் ஆங்காங்கு குறித்தும் மறுத்தும் செல்கிறார். எனவே அவர்களுக் கெல்லாம் இவர் பிந்தியவராவார். சேனாவரையர் 'எம்மண்டலமும் கொண்டருளிய மாறவர்மன் குலசேகர பாண்டியன்' (கி.பி. 1268-1311) காலத்தைச் சேர்ந்தவர்என்பதை மு. இராகவையங்கார் அவர்கள் தம் 'சாசனத் தமிழ்க்கவி சரிதம்' [1] என்ற நூலிலும் திரு. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் தம் இலக்கிய வரலாற்றிலும் [2] குறித்துள்ளனர். சேனாவரையர் கி.பி. 13ம் நூற்றாண்டின் இறுதியிலும் 14ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவராதலின் நச்சினார்க்கினியர் பதினான்காம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவர் என்று ஒருவாறு முடிவு செய்யலாம்.

1. பக்கம் 113
2. பக்கம் 36.
__________________________________________________
*இந்நூலின் இறுதியில் உரைச் சிறப்புப்பாயிரம் சேர்க்கப்
பட்டுள்ளது. அப்பழம்பாடலிலிருந்தே இக்கட்டுரையின் திரண்ட
பிண்டம் தொகுக்கப்பட்டுள்ளது.
_____________________________________________________________________

தேமொழி

unread,
Jul 4, 2024, 3:41:17 AMJul 4
to மின்தமிழ்
நச்சினார்க்கினியர்
— மு. அண்ணாமலை
தமிழ் விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.
Nachinarkiniyar image.png
நச்சினார்க்கினியர், மு. அண்ணாமலை, பழனி பிரசுரம், 1956
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0033572/ACL-TNAL_01281_நச்சினார்க்கினியர்_1956.pdf
பக்கம்: 10 - 12 

இந்நூலின் நோக்கம்
__________________________

இலக்கிய ஆசிரியர்களின் உள்ளத்தைத் தெரிந்து கொள்ள எப்படி முயலுகிறோமோ அப்படியே உரையாசிரியர்களின் உள்ளத்தையும் தெரிந்து கொள்ள முயல வேண்டும். அப்பயிற்சி இலக்கியப் பயிற்சிக்கு உற்ற துணையாக நிற்கும்.

ஒரு பாட்டை எடுத்துக் கொண்டு சொல்லுக்குச்சொல் உரை சொல்லுவதைமட்டும் தமிழ் உரையாசிரியர்கள் மேற்கொள்ளவில்லை. கவிஞர்களின் உள்ளத்தைக் கண்டுபிடிக்கவும் முயன்றிருக்கிறார்கள். அதில் முழுக்க முழுக்க வெற்றியடைந்திருக்கிறார்களா? அது வேறு கேள்வியாகும், திறமையுள்ள உரையாரிசிரியர் உரை எழுதப் புகுந்தால் அவ்வுரை இலக்கியத்திற்கு நிகராகிவிடுகிறது. நிகராகிவிடுவது மட்டுமில்லை சில சமயத்தில் அதுவே இலக்கியமாகவும் ஆகிவிடுகிறது. இலக்கண உரையாசிரியர்களும் இலக்கண ஆசிரியர்களாகவே திகழ்கின்றனர்.

நச்சினார்க்கினியர் பரந்த நூற் புலமையுள்ளவர். அவருக்கு நிகரான புலமையுடையவராக வேறு எந்த உரையாசிரியரையும் குறிப்பிட முடியாது. அப்படிப்பட்ட புலமையாளரின் உரையில் குறைகளும் பல உண்டு. இவ்விருபதாம் நூற்றாண்டில் இணையற்ற அறிஞரேறாக வாழ்ந்த மறைமலை அடிகளார் தம் முல்லைப் பாட்டுப் புத்துரையில் நச்சினார்க்கினியரை மிக வன்மையாக மறுத்துள்ளார்.

"சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் அப்போது யாம் தமிழாசிரியராய் இருந்து மாணாக்கர்க்குத் தமிழ் நூல் அறிவுறுத்தி வந்தமையால் இம்முல்லைப்பாட்டிற்கும் உரை விரித்துரைக்கலானேம். இச்செய்யுட்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையையும் கூடவே விளக்கிவருகையில் செய்யுளியற்றிய ஆசிரியர் கொண்ட பொருண்முறை ஒரு பக்கமாகவும், உரைகாரர் கொண்ட பொருண்முறை மற்றொரு பக்கமாகவும் ஒன்றோடொன்று இணங்காதாய் மாறுபட்டு நிற்றல் கண்டு மாணாக்கர் பெரிதும் இடர்ப்படுவாராயினர். அதுவேயுமன்றி ஆக்கியோன் அமைத்த சொற்றொடர் நெறியைச் சிதைத்துச் சொற்களையும் அடைமொழிகளையும் ஒரு முறையுமின்றிப் பிரித்துக் கூட்டிப்பொருள் உரைக்கும் நச்சினார்க்கினியர் உரை சிறிதும் ஏலா உரையேயாம் என்றும் அவர் கருதுவாராயினர்."
(பக்கம் 8)

இவ்வாறு மறைமலை அடிகளார் முல்லைப்பாட்டு முன்னுரையில் குறித்துள்ளார்கள். நூலாசிரியர் ஒன்று நினைக்க உரையாசிரியர் ஒன்று நினைக்கிறார்; நூலாசிரியன் வைத்த சொல்லமைப்பைச் சிதைக்கிறார்-இவையே அடிகளாரின் குற்றச் சாட்டுக்கள்.

அடிகளாரின் கருத்தை யாரும் மறுப்பதற்கில்லை. நானும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன். என்றாலும் நச்சினார்க்கினியர் பக்கத்தில் நின்று அனுதாபத்தோடு சிந்தித்தால் அவரது உள்ளம் இனிது புலப்படும். ஆசிரியன் உள்ளம் எவ்வழி செல்கிறதோ அவ்வழி உரையும் செல்லவேண்டும். அப்படியிருக்க அதற்கு மாறானதொன்றை நச்சினார்க்கினியர் தெரிந்து செய்கிறாரா? அல்லது தெரியாமலேயே செய்கிறாரா? சொற்றெடர் நெறியை ஏன் சிதைக்கிறார்? என்ற கேள்விகளுக்கெல்லாம் அனுதாபத்தோடு விடையளிக்க முயலுவதே இந்நூலின் நோக்கமாகும். அனுதாபம் என்றால் அத்தனையும் ஒத்துக் கொள்வது என்று பொருளல்ல. அவரோடு உடன்படாத இடங்களும் உண்டு. நிறைநோக்கும் குறைநோக்கும் என்ற தலைப்பில் அவரிடம் அமைந்த நிறையையும் குறையையும் ஓரளவு எடுத்துக் காட்டியுள்ளேன். நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்கள் பார்க்கும் கோணத்திலே நின்று அவர் பார்க்கும் நச்சினார்க்கினியர் இப்படிப்பட்டவர் என்பதையும் அதற்குரிய காரணத்தையும் காட்டியுள்ளேன். ஒரு விமரிசகர் உரையாசிரியர் வடிவில் வெளிப்படும்போது எப்படித் தடுமாற்றம் நிகழ்கிறது என்பதை ஆங்காங்கே இந்நூலில் காட்டியுள்ளேன்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கூடிய கீழ்த்திசைக் கலைத்துறை மாநாட்டில் தமிழ்ப்பகுதித் தலைவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் தலைமையில் இந்நூலின் சில பகுதிகளைப் படித்துக் காட்டினேன். இவற்றை நூல்வடிவில் ஆக்கித் தரவேண்டும் என்று என்பால் அன்புடைய மாணவர் சிலர் வேண்டினர். அந்நல்லவர்களின் ஆர்வத்தாலேயே இந்நூல் உருவாயிற்று.

__________________________________________________

தேமொழி

unread,
Jul 9, 2024, 2:48:02 AMJul 9
to மின்தமிழ்
நச்சினார்க்கினியர்
— மு. அண்ணாமலை
தமிழ் விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.
Nachinarkiniyar image.png
நச்சினார்க்கினியர், மு. அண்ணாமலை, பழனி பிரசுரம், 1956
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0033572/ACL-TNAL_01281_நச்சினார்க்கினியர்_1956.pdf
பக்கம்: 13  - 18

நச்சினார்க்கினியர்
நிறைநோக்கும் குறைநோக்கும்

1. விரைந்த செய்தி
பல்லவ நாட்டரசன் தேசிகப் பாவையின் ஆடல் கண்டு மகிழ்ந்துகொண்டிருந்தான். சீவகனும் அங்கே அவள் ஆடல் நலத்தில் ஈடுபட்டிருந்தான். அப்பொழுது திடீரென்று பணியாள் ஒருவன் ஓடோடியும் வந்து பதறியபடி இளவரசியான பதுமையைப் பாம்பு கடித்துவிட்டது என்ற செய்தியைச் சொல்ல முற்பட்டான்.
      *ஊனுகுக் கின்றவைவேல் ஒருமகன் உருமிற்றோன்றிக்
      கானுகுக் கின்றபைந்தார்க் காவலர்த் தொழுதுசொன்னான்
            1266 -சீவக சிந்தாமணி.
__________________________________________________
* வை=கூர்மை; உரும்=இடி; பைந்தார்=பசியமாலை,
__________________________________________________

வேலொடு வந்தான்; இடிபோலத் தோன்றினான்: கைதொழுது சொன்னான். இவ்வளவு பரபரப்பாக வந்தவன் எப்படி அந்தச் செய்தியைச் சொன்னான்? பாம்பு தீண்டிவிட்டது என்பதை முதலில் சொல்லாமல் பதுமை செடி கொடி வளர்த்த செய்தியை ஏழு பாடல்களில் கூறி எட்டாவது பாடலில் கூறவேண்டியதைக் கூறினான்.

பதுமை பொதிய மலையிலிருந்து முல்லைக் கொடியையும் மல்லிகைக் கொடியையும் வரவழைத்துத் தோட்டத்திலே நட்டிருந்தாள். இமயமலைச் சாரலிலிருந்து கருப்பூரக் கன்று ஒன்றைக் கொண்டு வரச் சொல்லிவைத்திருந்தாள். இவைகளுக்கெல்லாம் மணி நீரும் மதுவும் ஊற்றி வளர்த்தாள். இவ்வாறு செடிகொடிகள் வைத்து வளர்த்து அழகு பார்ப்பதிலே விருப்பமுள்ள பதுமை ஒரு முல்லைக் கொடிக்குத் தன் தாயின் பெயரைச் சூட்டி வளர்த்துவந்தாள். தாய் பெயரைத் தாங்கிய அக் கன்னி முல்லை அன்றுதான் புதிதாகப் பூப் பூத்தது. அந்தச் செய்தியைத் தோழி ஒருத்தி 'கொம்பலர் நங்கை பூத்தாள்' என ஓடோடி வந்து ஆவலோடு கூறினாள். அதனைப்பார்க்க விரைந்தாள் பதுமை. வழியிலே குராமரம் எழில் பெறப் பூத்துக் குலுங்குவதைக் கண்டாள். என் தோழி பூத்துக் குலுங்குகிறாள் என்று சொல்லிக் கொண்டே ஒரு பூப்பறிக்கக் கைநீட்டினாள். அதிலிருந்த அரவம் அவளைத் தீண்டிவிட்டது. இதுதான் அந்த வீரன் சொன்ன செய்தியின் சுருக்கம். எவ்வளவு வேகமாக வந்தானோ அவ்வளவு வேகமாகச் செய்தியைச் சொல்லவில்லை. 'ஐயையோ பாம்பு கடித்துவிட்டதே' என்று தானே அவன் முதலில் கூறியிருக்க வேண்டும். அங்கிருந்தவர்கள் எப்படிக் கடித்தது? எங்கே கடித்தது? என்ன? என்று விபரம் கேட்ட பின்னர் அவள் செடி, கொடி வளர்த்தமையையும் அவற்றுள் பூப் பூத்த முல்லையைக் காணச் சென்றமையையும், அங்கே பாம்பினால் தீண்டப்பட்டமையையும் கூறியிருக்கலாம். ஆனால் திருத்தக்கதேவர் அப்படி எழுதவில்லை. இந்தப் பரபரப்பான வேளையில் முல்லைக் கொடியை எங்கிருந்து வரவழைத்தாள்? அதற்கு நீர் மட்டும் ஊற்றினாளா? மதுக்கலந்தூற்றினாளா? எதனால் வேலி கட்டியிருந்தாள்? அதனைச் சுற்றிக் கற்களைப் பதித்திருந்தாளா? முத்துக்களைப் பதித்திருந்தாளா? என்ற கேள்விகளுக்கெல்லாம் எங்கே இடம்இருக்கிறது? அப்படியானால் தேவர் இவற்றை யெல்லாம் விடாமல் ஏன் சொல்லுகிறார்!

சீவக சிந்தாமணியில் பதுமையார் இலம்பகத்தில் பதுமையை அங்கேதான் தேவர் படிப்பவர்களுக்கு முதன் முதலாக அறிமுகப் படுத்துகிறார். பதுமையின் திணை கடந்து செல்லும் அன்பைப் படிப்பவர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கடப்பாடு தேவருக்குள்ளது. செடி கொடிகளிடம் உறவு தோற்றி உயர்திணையையும் அஃறிணையையும் வேறுபாடுகடந்து ஒன்றாகப் பிணைக்கும் அன்பின் ஆற்றலைத் தேவர் இவ்விடத்திலேயே கூறிவிடுகிறார்.

இவை கூறப்பட வேண்டுமா? வேண்டாமா? என்பதில் நச்சினார்க்கினியர்க்குக் கருத்து வேற்றுமை இல்லை.

எது முன்னால் கூறப்பட வேண்டும்? எவை பின்னர் கூறப்பட வேண்டும் என்பதில் அவருக்கும் நூலாசிரியருக்கும் வேறுபாடு எழுகிறது. தேவர் தம் விருப்பம் போலவே நூலைச் செய்தார். உரையாசிரியர் அவர் விருப்பம்போலவே உரை எழுதினார்.

'ஏனய்யா நச்சினார்க்கினியரே எட்டாம் செய்யுள் முதல்வரியைத் தூக்கி முதல் செய்யுளின் மூன்றாவது வரியோடு மாட்டி உரை செய்யலாமா' என்று கேட்டால் நச்சினார்க்கினியர்.

      *"இங்ஙனம் மாட்டுறுப்பாகக் கூறாது செவ்வனே கூறிற்
      பாம்பு கடித்தமை கடுகக் கூறிற்றாகாமை உணர்க"
             [சிந்தாமணி - 1273 - உரை]
______________________________________________
*வைவேல் ஒருமகன் கைதொழுது பாம்பு தீண்டிற்றென்று உருமிற் சொன்னான்.

எட்டாவது பாட்டில் பாம்பு தீண்டிற்றென்றலும் என்ற தொடரில் நிற்கும் உம்மை கூட இம்மாட்டேற்றால் பயனற்றுப் போகிறது என்றாலும் இதனை இவ்வாறு கூறாமல் இருக்க நச்சினார்க்கினியரால் முடியவில்லை இங்கே நாம் காணவேண்டுவது நிகழ்ச்சி அமைப்பைப் பற்றியும் அவற்றின் பொருத்தம்பற்றியும் எவ்வளவு சிந்திக்கிறார் என்பதேயாகும்.
______________________________________________
என்று கூறுவதைக் காணலாம். இங்கே மற்றொன்று காணவேண்டும்.   செவ்வனே கூறுதல் - மாட்டுறுப்பாகக் கொண்டு கூறுதல் ஆகிய இரண்டினையும் எண்ணி ஒரு பயன் நோக்கியே மாட்டுறுப்பைத் தாம் மேற்கொள்வதாகத் தம் செய்கைக்குத் தாமே அமைதி கூறுவதைப் பார்க்கிறோம்.

இக்காலத்து இலக்கிய ஆய்வாளர்களாயிருந்தால் ஆசிரியரின் நூலாக்கத்தில் நேர்ந்த குறைபாடாகவே இதனைக் காட்டியிருப்பர். அவ்வாறு காட்ட விரும்பாதவர் ஆசிரியர் செய்தது சரி என்பதற்கு விளக்கம் ஒன்று சொல்லியிருப்பார். இக்காலத்திய ஆய்வுக்கும் அக்காலத்து விமரிசனத்திற்கும் ஒரு குறிப்பிட்ட வேறுபாடு உண்டு.
பழங்கால உரை ஆசிரியர்க்கு நல்ல ஆய்வுள்ளம் இருந்தது என்பதில் ஐயமில்லை. அவர்கள் அக்கருத்துக்களை வெளியிட்ட முறைகளில்தான் வேறுபாடு உண்டு. அவர்கள் வெளியிட்ட முறையை நாம் இப்பொழுது ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் அந்த உயரிய திறமை இருந்தது என்பதைக் கண்டு போற்றிச் செல்ல வேண்டும். நூலாக்கத்தின் 'நெளிவு சுளிவு' எல்லாம் அவர்களுக்குத் தெரிந்தது. சிறப்பும் தெரிந்தது: தளர்ச்சியும் தெரியாமல் இல்லை. அவர்களது ஒரே நம்பிக்கை தாம் எடுத்துக் கொண்ட நூலின் ஆசிரியரை எக்காரணம் பற்றியும் குறை சொல்வதில்லை. ஓர் உரையாசிரியர் மற்றொரு உரையாசிரியரை வன்மையாக மறுப்பார்: கண்டிப்பார்; ஆனால் நூலாசிரியரை மறுக்கமாட்டார். குறை சொன்னால் நூலின் 'பூரணத்துவம்' அதாவது முழுமை கெட்டுவிடுகிறதாகக் கருதினார்கள்.

அப்படியானால் நூலாசிரியனுக்காகத் தங்கள் கருத்துக்களை விட்டுவிடலாமா? அதுவும் கூடாது. நூலாசிரியன் பெருமையையும் தாழவிடக் கூடாது. உரை செய்யும் உரிமை தங்களிடம் இருக்கும் போது சும்மா இருப்பார்களா? உரை வன்மையால் அவ்விடரைத் தீர்த்துக்கொண்டனர். தங்கள் கருத்தும் நூலாசிரியன் கருத்தும் இணையாவிட்டால், 'நூலாசிரியன் நினைப்பது இதுதான்' என்று தங்கள் கருத்தையே வலியுறுத்திச் சொன்னார்கள். விடாப்பிடியாகச் சாதித்தனர். நூலாசிரியன் உள்ளத்தையே மறைத்து விட்டார்கள்.

இளம்பூரணர் போன்ற உரையாசிரியர்கள் நூலாசிரியன் சொன்ன சொற்களுக்கும் கருத்துக்கும் முரண் ஏற்படாமல் உரை செய்தால் அதுவே போதும் என்று உரையாசிரியன் கடமையை உணர்ந்து நடந்து கொண்டனர். ஆனால் தனக்கென்ற கருத்தும் தன் கருத்தையே சாதிக்க வேண்டும் என்ற நினைப்பும் கொண்டிருந்தவர்களில் உறுதியானவர் நச்சினார்க்கினியர். தொல்காப்பியர் 'அகர இகரம் ஐகார மாகும்' என்று நூற்பா செய்திருக்க, அகர இகரம் ஐகாரம் ஆகாது என்று உரை எழுதுகிறார் அவர். 'இந்தத் துணிவு நச்சினார்க்கினியர்க்குத்தான் இருந்தது.
_________________________________________________________________
* இப் பகுதியைப் படித்துக் காட்டியபோது திரு வெள்ளை வாரணனார் அவர்கள் நச்சினார்க்கினியர் உரை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறினார்கள். அதற்கு வேறு விளக்கமும் உரைத்தார்கள்.அதனை நான் ஈண்டு எழுதப் புகவில்லை. ஆராய எடுத்துக்கொண்ட பொருளும் அதுவன்றாதலின் நெடுநாளாகத் தமிழாசிரியர்கள் எவ்வாறு அவ்வுரைக்குப் பொருள் கொண்டார்களோ அப்பொருளையே மேலே குறித்துள்ளேன். சிவஞானமுனிவர் தம் தொல்காப்பிய முதற் சூத்திர விருத்தியில் எழுதியுள்ளதை நோக்குங்கால் நச்சினார்க்கினியர் உரைக்கு அவரும் அவ்வாறே பொருள் கொண்டுள்ளார் என்பது புலனாம்.

"அகர இகரம் ஐகாரமாகும்" என்புழி ஆதும் என்றதனால் ஆகாது என விலக்கப்படும் என்பாரை. "பன்னீருயிரும் மொழி முதலாகும்" என்புழியும் ஆகும் என்பதனாற் பன்னீருயிரும் மொழிமுதல் ஆகா என விலக்கப்படும்போலும் எனக் கூறி மறுக்க."
[தொல் - முதற் பாயிரவிருத்தி - சிவஞானமுனிவர்
_________________________________________________________________

இப்படி எழுதும் அளவுக்குத் தான் காணும் உண்மை வலிவுடையதென்று அவர் கருதுகிறார். துணிவிருந்தாலும் வழிவழி மரபுப்படி தான் எடுத்துக்கொண்ட 'நூலாசிரியனை எக்காரணம் கொண்டும் குறையுடையவனாகக் காட்ட அவர் முற்பட்டதே இல்லை. தான் உரை செய்யும் வன்மையால் எதனையும் செய்ய முடியும் என்ற அசையாத நம்பிக்கை உடையவர். இந்த நம்பிக்கையும் துணிவும் தான் பல சமயங்களில் அவரைத் தோல்வியடையச் செய்தன.

இவரிடம் காணப்படும் இந்தத் துணிவும் நம்பிக்கையும்தான் சிவஞான முனிவருக்குப் பிடிவாதமும் செருக்குமாகக் காட்சியளிக்கின்றன. சிவஞான முனிவர் தம் தொல்காப்பிய முதற் சூத்திர விருத்தியில்,
      "நச்சினார்க் கினியார் முதலியோர் போல
      யாம் பிடித்ததே சாதிப்பேம் என்னும் செருக்கால்
      யாண்டும் மயங்காமையின்"
என எழுதுவாராயினர். ஆனால் அதே நேரத்தில் அவைதாம் அவர் நூலாசிரியர்க்கு நிகரான புலமையும் தானே சிந்திக்கவல்ல திறமையும் உடையவர் என்பதை நிறுவிக்காட்டின.

__________________________________________________

தேமொழி

unread,
Jul 11, 2024, 7:26:38 PMJul 11
to மின்தமிழ்

நச்சினார்க்கினியர்
— மு. அண்ணாமலை
தமிழ் விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.
Nachinarkiniyar image.png
நச்சினார்க்கினியர், மு. அண்ணாமலை, பழனி பிரசுரம், 1956
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0033572/ACL-TNAL_01281_நச்சினார்க்கினியர்_1956.pdf
பக்கம்: 19  - 20

நச்சினார்க்கினியர்
நிறைநோக்கும் குறைநோக்கும்

2. கள்ளும் தேனும்
சீவக சிந்தாமணி இலக்கணையார் இலம்பகத்தில் கீழ்க்கண்ட வரிகள் காணப்படுகின்றன.

      கள்ளும் தேனும் ஒழுகும் குவளைக்
      கமழ்பூ நெரித்து வாங்கிக்
      கிள்ளை வளைவாய் உகிராற் கிள்ளி ...... "
[கிளியின் மூக்குப்போன்ற நகத்தால் குவளைப் பூவைக் கிள்ளினாள், கள்ளும் தேனும் ஒழுகும் குவளை; உகிர்= நகம்; வளைவாய்=வளைந்த மூக்கு.]

'கள்ளும் தேனும் ஒழுகும் குவளை' என்ற தொடருக்கு உரை யெழுதும் நச்சினார்க்கினியர் கள் - தேன் ஆகிய இரண்டினையும் பற்றிச் சிந்திக்கிறார். 'கள்ளவிழ்கோதை' என்று வந்தால் தேன்வழியும் பூமாலை என்று பொருளுரைக்கிறோம். இங்கே குவளையில் ஒழுகுவதாகச் சொல்லும் தேன் வேறு, கள் வேறா! கள்ளும் தேனும் ஒன்றென்றே கொண்டால் பயனின்றிக் கவிஞர் இரண்டு சொல் பெய்துவைத்தார் என்றாகும். உம்மை கொடுத்து எண்ணியதும் தவறாக முடியும். இரண்டனுக்கும் உரிய வேற்றுமை நமக்கு இப்பொழுது புலப்படவில்லை. கவிஞர் என்ன கருதியிருப்பார் என்பதும் தெரியவில்லை. நச்சினார்க்கினியர் பல முறை சிந்தித்த பின்னர் 'கள்ளும்' என்ற சொல்லை இடம் விட்டு இடம் பெயர்த்து விடுகிறார். பிறிதோரிடத்தில் அதனை இணைத்துப் பொருள் செய்கிறார்.

      *கிள்ளை வளைவாய் கள்ளும் உகிர்.
[செய்யுளில் நின்றபடி கொண்டால் கள்ளும் என்பது பெயர்ச்சொல்; மாற்றியுள்ள முறைப்படி பெயரெச்சம் அதாவது வினைச் சொல்]

கிளியின் மூக்குப் போன்றது உகிர் என்பதே கருத்து. 'கிள்ளை வளைவாய் உகிர்' என்று செய்யுளில் நின்றவாறே கொண்டால் கிளியின் மூக்கிற்கு உயர்வு கிடைத்துவிடுகிறது. நச்சினார்க்கினியரின் உரைப்படி மங்கை நல்லாளின் நகம் உயர்ந்துவிடுகிறது.

அவளுடைய உகிரின் தன்மையைக் களவாடிக் களவாடித்தான் கிளிதன் வளைவாயிலே வைத்துக் கொண்டிருக்கிறதாம். இங்கே உரையாசிரியரும் கவிஞராகி விடுகிறார். ஓர் இலக்கியத்திற்கு உரை காணுபவர் அவ்விலக்கியத்தில் தன்னை மறந்து தானும் ஓர் இலக்கிய கர்த்தாவாக ஆகிவிடுகிறார்.

கவிஞன் நிறுத்திய முறையைச் சிதைத்துச் சொற்களை மாற்றிக் கொண்டு கூட்டிப் பொருள் செய்வது சரியா? அது மொழி யியல்பைக் கெடுக்காதா? என்று கேட்கக்கூடும். ஒத்துக் கொள்ளுகிறேன்.

ஆனால் இப்படிப் பட்ட இடங்களை நோக்கும் போது அவர் கொண்டு கூட்டிப் பொருள் செய்வது கூட நியாயமாகவேபடுகிறது.
_______________________________________________________

* கிள்ளை வளைவாய்தான் தன் தன்மையைக் கள்ளும் உகிரால் ......
கள்ளும் களவுகாணும்; கள்ளத்தால் கள்வேம் எனல்
(குறள் 282)
2439-நச்சினார்க்கினியர் உரை.
_______________________________________________________

தேமொழி

unread,
Jul 15, 2024, 1:58:10 AM (12 days ago) Jul 15
to மின்தமிழ்
நச்சினார்க்கினியர்
— மு. அண்ணாமலை
தமிழ் விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.
Nachinarkiniyar image.png
நச்சினார்க்கினியர், மு. அண்ணாமலை, பழனி பிரசுரம், 1956
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0033572/ACL-TNAL_01281_நச்சினார்க்கினியர்_1956.pdf
பக்கம்: 21- 23

நச்சினார்க்கினியர்
நிறைநோக்கும் குறைநோக்கும்

3. ஒரு பொருள் இரு சொல்
ஒரே பொருளுடைய இரண்டு சொற்கள் ஓரிடத்தில் வந்துவிட்டால் நச்சினார்க்கினியர் அவற்றைப் பயனின்றி நிற்பனவாகக் காட்டாமல் அவற்றிற்குப் பொருள் வேறுபாடு காட்டிப் புதிய ஆற்றல் கொடுத்து அழகுபடுத்துவதைக் காணலாம்.

பாலைக் கலியில் (17) 'வகை எழில் வனப் பெஞ்ச' என்ற தொடரொன்று வருகிறது. அதில் வனப்பு, எழில் என்ற இரு சொற்களும் அழகு என்ற பொருளையே உணர்த்துகின்றன. ஆனால் இரு சொல்லுக்குமே 'அழகு' 'அழகு' என்று பொருள் எழுதினால் சொல்லுக்குச் சொல் பொருள் சொல்லும் தமிழாசிரியருக்கும் நச்சினார்க்கினியர்க்கும் என்ன வேற்றுமை? வகை என்ற சொல் அவருக்கு ஒரு குறிப்பை நல்குகிறது. வகை எழில் என்பதற்கு உறுப்பழகு என்றும் வனப்பு என்பதற்குத் தோற்றப் பொலிவு என்றும் பொருள் எழுதினார்.

சிலர் பொதுவாகப் பார்ப்பதற்கு எடுப்பாகவும் அழகாகவும் இருப்பார்கள். தனித்தனியாக அவர்களது உறுப்பினை நோக்கினால் அவை மிக மிக அழகானவை என்று சொல்ல முடியாமல் இருக்கும். மிக உயர்ந்த உறுப்புக்கள் வடிவு பெறாவிட்டாலும் எடுப்பான தோற்றப்பொலிவைப் பெற்றிருப்பார்கள், சிலருக்கு உறுப்புக்கள் அனைத்துமே அழகாக அமைந்துவிட்டாலும் அவற்றை ஒருசேர நோக்கும்போது கவர்ச்சியான ஒரு பொதுப் பொலிவு தோன்றாமல் போய்விடும். ஒவ்வொரு உறுப்புக்களின் அமைப்புக்கும் அழகுக்கும் ஏற்ப பிற உறுப்புக்களும் அமைந்து கவர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். எனவே தோற்றப் பொலிவும் இன்றியமையாதது. அதனை சமுதாய சோபை என்பர். சமுதாயம் என்ற சொல்லுக்குக் கூட்டம் என்பது பொருள். சோபை அழகாகும்.

சிலரைப் பார்த்தவுடனே "ஆகா யாருக்கும் இல்லாத கண்; அந்தக் கண்கள்தாம் கண்கள்: அழகு மூக்கு: சிற்பம் போலக் கைவிரல்கள்" என்றெல்லாம் கூறத் தொடங்கி விடுகிறோம். இதுதான் உறுப்பழகு. 'தோள் கண்டார் தோளே கண்டார்' என்று வரும் கம்பன் பாடல் இந்த உறுப்பழகையே வியந்துரைப்பதாகும். இதனை அவயவசோபை என்பர். அவயவம் என்ற சொல்லுக்கு உறுப்பு என்பது பொருள். இப்படித் தோற்றப் பொலிவும் உறுப்பழகும் ஆகிய இரண்டுமே சேர்ந்து அமைந்துவிட்டால் அப்புறம் கேட்க வேண்டுமா? அவள் அழகின் தெய்வமாகிவிடுகிறாள். கவிஞன் தலைவியை அழகின் தெய்வமாக ஆக்கினானோ இல்லையோ நச்சினார்க்கினியர் ஆக்கிவிடுகிறார்.

கவின் நலம் முதலிய தொடர்களுக்கும் இவ்வாறே பொருளுரைக்கிறர். மற்றோரிடத்தில் (கலி 24) 'இன்தீங் கிளவியாய்' என்ற தொடரொன்று வருகிறது. அதில் இன் தீம் என்ற இரு சொற்களுக்கும் இனிய தீவிய என்பன பொருளாம். நச்சினார்க்கினியர்.

     இன் கிளவி = பின்பு காரியத்தால் இனிய கிளவி
     தீங் கிளவி =கேட்ட காலத்தில் இனிய கிளவி
என வேறுபாடு காட்டி உரைப்பதைக் காணலாம். சிலர் பேசும்போது இனிக்க இனிக்கப் பேசுவார்கள். மலையைப் புரட்டி உனக்காகக் கடலில் வைக்கப் போகிறேன் என்பார்கள். நீதான் உயிர் என்பார்கள். கடைசியில் பார்த்தால் ஒன்றும் இராது. சிலருக்குத் திறமையாகச் சொல்லத் தெரியாது; செய்வார்கள். ஆனால் சிலரால் மட்டுமே இனிமையாகச் சொல்லவும் அதேபோல் செய்யவும் முடியும். திறமையும் உண்மையும் சேர்ந்து சிலரிடம் பொலிவு பெறும். இந்தக் கருத்தை இங்கு காட்டி உரைசெய்வது பாராட்டத் தக்கதாம்.
_______________________________________________________

தேமொழி

unread,
Jul 23, 2024, 8:09:53 PM (3 days ago) Jul 23
to மின்தமிழ்
நச்சினார்க்கினியர்
— மு. அண்ணாமலை
தமிழ் விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.
Nachinarkiniyar image.png
நச்சினார்க்கினியர், மு. அண்ணாமலை, பழனி பிரசுரம், 1956
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0033572/ACL-TNAL_01281_நச்சினார்க்கினியர்_1956.pdf
பக்கம்: 24 - 29

நச்சினார்க்கினியர்
நிறைநோக்கும் குறைநோக்கும்

4. நச்சினார்க்கினியர் காணும் காமக் கடவுள்.
காம உணர்ச்சியைத் தூண்டுபவன் மன்மதன் ஆவான். நல்லவர்கள் உணர்ச்சியைத் தூண்டுபவனும் அவனே: செய்யத்தகாதன செய்தொழுகும் தீயோர்கள் உணர்ச்சியைத் தூண்டுபவனும் அவனே. அப்படியானால் காமனை நல்லவன் என்று சொல்லுவதா? கெட்டவன் என்று சொல்லுவதா? காமனை வெல்ல வேண்டும் வெல்லவேண்டும் என்று அடிக்கடி பெரியோர்கள் வற்புறுத்துகிறார்களே அதன் பொருளென்ன?
 **"மீனேறுயர்த்த கொடிவேந்தனை வென்றபொற்பின் ஆனேறனையான்" என்று சீவகன் புகழப்படுகிறானே: அங்ஙனமாயின் காமனை வென்றுயர்தலும் ஒரு சிறப்பாகத்தானே கூறப்பட்டுள்ளது?

மன்மதனைக் கற்பனை செய்த முன்னோர்களின் அறிவுசான்றாண்மை மிக்க நுண்ணறிவாகும். காம உணர்வை எவை எவை தூண்ட வல்லனவோ அவற்றையெல்லாம் அவனுக்கு அம்பாகவும் வில்லாகவும் நாணாகவும் ஆக்கிக்கொடுத்தனர். திங்கள் குயில் அனைத்தையும் அவனோடு தொடர்பு படுத்தினர். அனங்கனின் வேலை உயிர்கள் அனைத்திற்கும் காம உணர்வை ஊட்டுவதேயாகும். எல்லா உயிர்கட்கும் அவ்வுணர்வை ஊட்டுவானே யன்றித் தான் எக்காலும் ஊட்டப்படான். அதனினும் மேலாக மற்றொன்று கருதுதற்குரியது. மன்மதனைப் படைத்தவர்கள் அவனைத் 'தம்பதி சமேதராக'வே காட்டியிருக்கின்றனர். எனவே காமக் கடவுள் இல்லறநெறியினன்: நெறியில் நீங்கா நிலையினன். வரன்முறைக்குட்பட்டு நெறி பிறழாது வருகின்ற இன்பத்தையே அவன் விரும்பி ஓம்புபவனாவான். ஒழுக்கத்தோடு இயைந்து வளர்ந்த உள்ளமே மன்மதக் கற்பனையை முழுமை செய்தமைத்திருக்கிறது.

கண்ணில்லாமல் காமக் கடவுளைப் படைத்த மக்கள் உண்டு. அவர்கள் நினைப்புப்படி காமம் கண்ணுடையதன்று என்று பொருள்படும். அப்படிப் பொருள்படுமாயின் அவர்கள் நினைந்த காமம் விலங்குகளின் காமமேயாகும். பொருந்தாத பெருந்திணைக் காமத்திற்குத்தான் கண் கிடையாது. நெறியுடைய காமத்திற்கு மிக விளக்கமான கண் உண்டு. எனவே அக்கடவுளர் பிழைபட்ட காமத்தை எடுத்துக் காட்டுபவராகும். ஆனால் நம்மவர்கள் நினைந்துகொண்ட மன்மதன் கண்ணுடையவன். பிற பெண்டிரை நினைந்து காமுறாதவன். அழகோடு ஒழுக்கம் இணையவேண்டும். அவ்வாறு இணையாத அழகு சூறையாடத் தொடங்கி உலகை அழிவுப் பாதையில் திருப்பிவிடும்.

பௌத்த சமயத்தில் மாரன் என்பவன் அடிக்கடி குறிப்பிடப்படுகிறான். அவன் கொடியவன் என்றும் உணர்ச்சிகளைத் தூண்டுகிறவன் என்றும் பேசப்படுகிறான். அவன் நாம் குறிப்பிடும் மன்மதன் இல்லை. அங்கே ரதி என்பவள்தான் காமக் கடவுளாவாள். அவள் கொடியவனாகிய மாரனின் மகள் என்று கூறப்பட்டுள்ளாள். ஆனால் நம்முடைய மாரனோ இறைவனின் மகனாகச் சொல்லப்படுகிறான். நாம் காமத்தின் தலைமை நிலையை ஆண்மையிடம்தான் ஒப்புவித்துள்ளோம்.

இக்கருத்தினைத் தமிழ்க் கவிஞர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். "காமனும் விரும்பும் காமர் சேயிழை"- [பெருங்கதை] என்பதன்கண் உள்ள உம்மை உயர்வு சிறப்பும்மையாகும். இங்கு உம்மை குறிக்கும் உயர்வு யாது? அழகின் உயர்வா? அன்றி உறுதியாகிய உயர்வா? அழகுமிக்க காமனும் என்று பொருள் எழுதுவதா? அன்றேல் உறுதிமிக்க காமனும் என்று பொருள் எழுதுவதா? நச்சினார்க்கினியர் திருவுள்ளப்படி எழுதினால் பிற பெண்டிரை நோக்காத உறுதியுடைய காமனும் இவ்வழகு நலமுடையாளைக் காணப்பெறின் உறுதி நெகிழ்ந்து காம வயப்படுவன்" என்று எழுதவேண்டும். எழில் மிக உடையாரைக் காணினும் காமுறாத ஒருவனுக்கு எடுத்துக்காட்டாக மன்மதனைக் கூறுவதே ஈண்டு நோக்கத்தக்கது. சீவக சிந்தாமணிக்கு உரையெழு துங்கால் நச்சினார்க்கினியர் இக் கருத்தினை மறவாமல் அங்கங்கே நயம்பட உரைத்துச் செல்கிறார்.

சீவகன் பல்லவ தேயத்திலே நுழைந்தபோது திறந்த வெளியிலே சந்தனக் காவிலே அமைந்த ஆடரங்கத்தில் தேசிகப் பாவை என்ற பரத்தை ஆடிக் கொண்டிருந்தாள். அந்த ஆடலைச் சீவகனும் சென்று காண்கின்றான். புதியனாக வந்த அவனைப் பார்த்த மக்கள் அவன் அழகு நலத்தில் ஈடுபட்டு வியக்கின்றனர். 'இத்தகைய அழகன் யார்?' என்று ஐயுறுகிறார்கள்.
     "கைவளர் கரும்புடைக் கடவுளா மெனின்
     எய்கணை சிலையினோடு இவன்கண் இல்லையால்"
               -1263. சிந்தாமணி.
"இவன் ஒரு வேளை மன்மதனாக இருப்பானோ; மன்மத னென்றால் கையில் வில்லைக் காணவில்லையே" என்று கேட்கிறார்கள் மக்கள்.

'கைவளர் கரும்புடைக் காமன்' என்பதற்குப் பொருள் கூறினால் 'கையிலே வளர்ந்த கரும்பினை வில்லாக உடைய காமன்' என்று உரைக்கலாம். இப்படி உரைத்தால் மிகுந்த பொருட் சிறப்பு ஏற்படாமையை உணர்ந்த நச்சினார்க்கினியர் கை என்பதற்கு ஒழுக்கம் என்று பொருளுரைத்து "இல்வாழ்க்கை வளர்தற்குக் காரணமான கரும்பையுடைய காமன்" என்று எழுதிச் செல்கிறார். காமவேளின் பெருமையைப் புலப்படுத்துவதன் மூலம் நச்சினார்க்கினியர் சீவகன் பெருமையை ஈண்டு ஒரு படி உயர்த்திக் காட்டுகிறார்.

அனங்கமாலை ஆடுவதற்கு அரங்கேறினாள். தேவர் கூறுவது போல ஆடவர் நெஞ்சமென்னும் அரங்கிலே ஆடவந்தாள். ஒரு பெருமகன் அரங்கேறி ஆடுமகளை ஒப்பனை செய்வது வழக்கம். அனங்கமாலைக்கு ஒப்பனை செய்யுமாறு சீவக நம்பி அழைக்கப்பட்டான். ஆடை திருத்தினான்; நுதற்பட்டம் கட்டினான்; வளையல் அணிந்தான்; சந்தனம் பூசினான்; வளமலர் சூட்டினான். இப்படி ஒன்றொன்றாகத் தீண்டித் திருத்தினான். நச்சினார்க்கினியர் இச் செயலை நினைந்து பார்க்கிறார்.

சீவகன் இப்பொழுதுதான் முதன் முதலாக ஒரு பெண்ணைத் தொடுகிறான். அவனுக்கு இன்னும் ஒரு திருமணம் கூட நடக்கவில்லை. பிரமச்சாரியாக இருக்கும் அவன் ஒரு பெண்ணைத் தொட்டு. அவள் காலைத் தீண்டிக் காற்சிலம்பு அணிந்து, சாந்து பூசி, அழகு நலம் செய்கிறானே என்று நச்சினார்க்கினியர் தன்னைத் தானே கேட்டுக் கொள்கிறார்.

காந்தருவதத்தை சீவகனைக் கண்டு காதல் கொண்டபோது அவனை இதுவரை எந்த மகளும் காதலித்து உரிமையாக்கிக் கொள்ளவில்லை என்பதையும் அவனும் யாரையும் காதலிக்கவில்லை என்பதையும் நினைத்து. அதனைப் பொறுத்தவரை தனக்கே பெரும்பேறு வாய்த்திருக்கிறது என்றும் கருதி உவகை கொள்ளுகிறாள். இக் கருத்தைக் கூட அவள் மிக வெளிப்படையாகக் கூறிவிடவில்லை. நச்சினார்க்கினியர்தான் கண்டுரைக்கிறார்.

     "தீங்கரும் பெருத்தில் தூங்கி ஈயின்றி இருந்த தீந்தேன்
     நாம் கண்ணாற் பருகியிட்டு நலனுணப்பட்ட நம்பி"
என்பது காந்தருவதத்தையின் வாசகம். "கரும்பின் கழுத்திலே தூங்குகின்ற தேனீ மொய்க்காத தேனடை" என்று குறிப்பிடுகிறாள். இதற்கு விளக்கம் எழுதுங்கால் நச்சினார்க்கினியர்,
     "இதற்கு முன்பு ஒருமகளிரும் இவனை நுகராதிருந்தமை
     உணர்ந்து, 'ஈயின்றி இருந்த தீந்தேன்' என்றாள்.
     எனவே பிரமசரியம் கூறினார்."
என்று எழுதுகிறார். இதன் மூலம் தேவர் சீவகனின் பிரமசரியம் கூறியதாகக் குறிப்பிடுகிறார். காந்தருவதத்தைதான் அவன் முதல் மனைவி. அவளை மணப்பதற்கு முன்னர்தான் அனங்கமாலையைச் சந்திக்கிறான்.
     "பரியகம் சிலம்பு செம்பொற் கிண்கிணி பாதம் சேர்த்தி
     அரிவையை அரம்பை நாண அணிந்தனன்  அனங்கன் அன்னான்"

தேவலோகத்து அரம்பையே நாணும்படியாக ஒப்பனை செய்த இளவலை மறக்க முடியாமல் காதலால் துடிக்கிறாள் அனங்கமாலை. சீவகனின் பிரமசரியம் இவ்விடத்தில் கெடாமல் இருந்தமையைக் காட்டத் துடிக்கும் நச்சினார்க்கினியருக்குச் செய்யுளிலே அனங்கனன்னான் என்ற சொற்றெடர் கிடைத்துவிடுகிறது. அரிவையை [அனங்கமாலையை] அரம்பை நாண அனங்கனன்னான் அணிந்தான் என்று தேவர் கூறுவதைக்கொண்டு உரையாசிரியர் 'பிரமசரியத்தை' மாசுபடாமல் ஆக்கிக் காட்டுகின்றார்.

"இவளைத் தீண்டவும் வேட்கை நிகழாமையின் அனங்கனன்னான் என்றார். 'சிலைவல்லான் போலும் செறிவினான்' [கலி 143] என்றார் பிறரும்" என்பது அவர் உரை.

சீவகன் அனங்கமாலையைத் தொட்டான்; திருத்தினான். ஆனால் தொட்டவன் மனத்திலே எந்தவிதமான மாறுபாடும் நிகழவில்லை. தொடப்பட்டவள் மாறுபாட்டிற்குள்ளானாள். அனங்கமாலையால் அந்த 'ஸ்பரிச' சுகத்தை மறக்கமுடியவில்லை. அதிலே ஈடுபட்டுத் தன்னை மறந்துவிடுகிறாள். சீவகன் உள்ளம் மருப்படாமலேயே இருக்கின்றது. உள்ளத்தின் வழி இயங்குவது உடலாகலின் அவனுடைய பிரமசரியம் மாசுறாமலேயே இருக்கிறது. அதனால் அவன் உறுதியுடைய காமக் கடவுளுக்கு நிகராகிவிடுகிறான்.

நச்சினார்க்கினியர் 'அனங்கனன்னான்' என்பதைச் சீவகனின் பெயர்களில் ஒன்றாகக் கருதிக் கூறும் இடங்களும் உண்டு.
______________________________________________________________________
**மீனேறுயர்த்த கொடிவேந்தன் = மீன்கொடியுடைய மன்மதன்;
வென்றபொற்பு=வென்ற மேன்மை;
ஆன் ஏறு அனையான் =காளையை ஒத்த சீவக நம்பி.

Reply all
Reply to author
Forward
0 new messages