(குறள் கடலில் சில துளிகள் 27. அறமறிந்த அறிவு உடையவரைத் துணையாகக் கொள்க! – தொடர்ச்சி)
குறட் கடலிற் சில துளிகள்
28. துன்பம் வந்ததை நீக்கி,
வருவதிலிருந்து காப்போரைத் துணையாகக் கொள்க!
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், குறள் எண்:௪௱௪௰௨ – 442)
பதவுரை: உற்ற-நேர்ந்த; நோய்-துன்பம்; நீக்கி-விலக்கி; உறாஅமை-வராத வண்ணம்; முன் – (வரும்)முன்னால்; காக்கும்-காப்பாற்றும்; பெற்றியார்-தன்மையுடையார், இயல்புடையர்; பேணி-நலன்பாராட்டி,; கொளல்-கொள்க.
பொழி்ப்புரை: வந்த துன்பம் நீக்கி, வர உள்ள துன்பத்திலிருந்து முன்னதாகவே காக்கும் பெரியோர் துணை கொள்ள வேண்டும்.
மணக்குடவர்: அரசர் தமக்குற்ற நோயை விடுவித்துப் பின்பு துன்பமுறாமல் முன்னே காக்கவல்ல தன்மையுடையாரை விரும்பிக் கொள்க. பெற்றியாரென்று பொதுப்படக் கூறினமையால், இது மந்திரிகளைக் கூட்டுமாறு கூறிற்று.
பரிமேலழகர்: உற்ற நோய் நீக்கி – தெய்வத்தானாக மக்களானாகத் தனக்கு வந்த துன்பங்களை நீக்குமாறு அறிந்து நீக்கி ; உறாமை முற்காக்கும் பெற்றியார் – பின் அப்பெற்றியன வாராவண்ணம் முன் அறிந்து காக்கவல்ல தன்மையினையுடையாரை; பேணிக்கொளல் – அரசன் அவர் உவப்பன செய்து துணையாகக் கொள்க. (தெய்வத்தான் வரும் துன்பங்களாவன: மழையினது இன்மை மிகுதிகளானும், காற்று தீ, பிணி என்ற இவற்றானும் வருவன. அவை கடவுளரையும் தக்கோரையும் நோக்கிச் செய்யும் சாந்திகளான் நீக்கப்படும். மக்களான் வரும் துன்பங்களாவன: பகைவர், கள்வர், கற்றறிந்தார், வினை செய்வார் என்றிவர்களான் வருவன. அவை சாம பேத தான தண்டங்கள் ஆகிய நால்வகை உபாயத்துள் ஏற்றதனால் நீக்கப்படும். முற்காத்தலாவது: தெய்வத்தான் வருவனவற்றை உற்பாதங்களால் அறிந்து அச்சாந்திகளால் காத்தலும், மக்களான் வருவனவற்றை அவர் குணம், இங்கிதம், ஆகாரம், செயல் என்பனவற்றுள் அறிந்து, அவ்வுபாயங்களுள் ஒன்றால் காத்தலும் ஆம் ; ஆகவே புரோகிதரையும் அமைச்சரையும் கூறியவாறாயிற்று. இங்கிதம் – குறிப்பால் நிகழும் உறுப்பின் தொழில். ஆகாரம் – குறிப்பின்றி நிகழும் வேறுபாடு. உவப்பன – நன்கு மதித்தல் முதலியன.)
பரிமேலழகர் வான் வழி இயற்கை இடர்களை முன்கூட்டி அறிதல் என்றதும் தம் சாதிப்பற்றால் புரோகிதர் எனக் கூறிவிட்டார். வான் வழி இடர்களைக் கணித்து அறியும் வானியலறிஞர்களையும் நில நடுக்கம் போன்ற புவியியல் இடர்களை எதிர்நோக்கி அறியும் புவியியல் அறிஞர்களையுமே திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வறிவியலறிஞர்களின் துணை இருப்பின் வர உள்ள இடர்களை அறிந்து அவற்றைத் தடுக்கும் அல்லது ஏற்படும் துன்பங்களை மட்டுப்படுத்தவும் துன்பத்தைக் குறைக்கவும் முடியுமல்லவா? எனவேதான் திருவள்ளுவர் இத்தகையோரையும் உள்ளடக்கிப் பெற்றியார் பேணிக் கொளல் வேண்டும் என்றார்.
பரிப்பெருமாள்: அரசர்க்கு உற்ற நோயை விடுவித்துப் பின்பு துன்பமுறாமல் முன்பே காக்கவல்ல தன்மையுடையாரை விரும்பிக் கொள்க. (நோய் = துன்பம்)
பரிதி: ஒரு விதனம் வருமுன்னே விதனம் வராமல் காத்து அப்படிக்கு விதனம் வந்தால் அந்த விதனத்தை நீக்கும் உபாயஞ் செய்யும்பெரியோரைப் பேணிக்கொள்வான். (விதனம் = துன்பம்)
காலிங்கர்: வேந்தரானவர் தாம் யாதானும் ஒருவழியால் உற்றது ஓர் இடர் உளராயின் மற்று அதனையும் துடைத்துப் பின் ஓர் இடர் உறாதவாறு முன்னுறத் தேர்ந்து காக்கும் பெரியோரைப் பேணித் துணையாக கொள்க.
சி இலக்குவனார்: தமக்கு வந்துள்ள துன்பத்தை நீக்கிப், பின் அவை தம்மை வந்து அடையாமல் முன் அறிந்து காப்பாற்றவல்ல இயல்பினை உடையாரை விரும்பித் துணையாகக் கொள்ளுதல் வேண்டும்.
மழையின்மை, அதனால் ஏற்படும் வறட்சி, பெருமழை, அதனால் ஏற்படும் பெரு வெள்ளம், கடுங்காற்று, புயல், கொள்ளைநோய்/தொற்றுநோய், நிலநடுக்கம், நிலச்சரிவு, கடல்கோள் முதலியன இயற்கைப் பேரிடர்கள் ஆகும். இவை வருவதை உணர்ந்து தடுக்க முயன்றாலும் இவற்றால் ஏற்படும் விளைவுகளைத் தடுக்க இயலாது. ஆனால் அவற்றை மட்டுப்படுத்த இயலும். அவற்றால் பாதிக்கப்பட்டோர்க்குத் துயர் தணிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும்.
இயற்கையாலும் மனிதர்களாலும் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் ஏற்படும் தீங்குகளிலிருந்து காக்க வல்ல பேரிடர் மேலாண்மையர்கள் துணை தேவை. இவற்றுக்கான நோயியல் அறிஞர்கள், போரியல் வலலுநர்கள், வேளாண் அறிஞர்கள், தொழிற்துறை வினைத்திறனாளர்கள் முதலியவர்கள் துணை இருந்தால்தான் இத்தகைய இடர்களிலிருந்து மக்களைக் காக்க இயலும். இப்போது பாக்கித்தான் ஆதரவாளர்களால் ஏற்பட்ட குண்டு வீச்சுக் கொலைகள், அவ்வப்பொழுது கலகக்காரர்களும் கொள்ளைக்காரர்களும் காம வெறியர்களும் போலிச் சாமியார்களும் மூடநம்பிக்கை பரப்புநர்களும் உண்டாக்கும் இன்னல்கள் மனிதர்களால் உண்டாகும் தீங்குகளாகும். ஊழல் அதிகாரிகளாலும் பணியாளர்களாலும் ஏற்படும் அவர்களின் செய்ய வேண்டிய செய்கைகளைச் செய்யாப் போக்குகளையும் செல்வமும் செல்வாக்கும் உடையர்களுக்கு அடிபணிந்து பொதுமக்களுக்கு இடர்கள் ஏற்படுத்துவதையும் நாம் மனிதர்களால் ஏற்படும் தீங்குகளாகக் கருதலாம். சாலைப் பணிகளில் குறைபாடு, நோய்த்தடுப்பில் உரிய செயற்பாடுகளின்மை, விதிமுறைகள் மீறி ஊர்திகளுக்கு உரிமம் வழங்கல், கட்டடங்களுக்கு இசைவு தருதல், கல்வி நிறுவனங்களுக்கு இணைப்பு தருதல் போன்ற பலவற்றால் ஏற்படும் நேர்ச்சிகள்(விபத்துகள்), இடிபாடுகள், தரமற்ற கல்வி முதலியனவும் மனிதர்களால் ஏற்படும் இடர்களே. எனவே, பெற்றியார் என்பதில் நேர்மையான செயற்பாடு உடையவர்களின் துணையையும் உள்ளடக்கிக் கொண்டு பொருள் காண வேண்டும்.
திருவள்ளுவர் வழியில் கம்பரும் இதனைப் பின்வரும் பாடலில் விளக்குகிறார்.
உற்றது கொண்டு, மேல்வந்து
உறுபொருள் உணரும் கோளார் ;
மற்றுஅது வினையின் வந்தது
ஆயினும், மாற்றல் ஆற்றும்
பெற்றியர் ; பிறப்பின் மேன்மைப்
பெரியவர் ; அரிய நூலும்
கற்றவர் ; மானம் நோக்கின்,
கவரிமா அனைய நீரார்.
(கம்பராமாயணம், அயோத்தியா கண்டம், மந்திரப் படலம், 1409)
தொடர்பான அரிய துறைநூல்களைக் கற்றறிந்தவர் களையும் கம்பர் குறிப்பிடுகிறார். நூலறிவும் பட்டறிவும் இருந்தால்தான் துன்பம் துடைக்கவும் துன்பத்திலிருந்து காக்கவும் இயலும். அதுபோல் கவரிமா போன்ற மான உணர்வுள்ளவர்களையும் குறிப்பிடுகிறார். அவர்கள்தாமே குற்றம் வராமல் விழிப்புடன் செயற்படும் உணர்வுடையவர்களாக இருப்பார்கள். (கவரிமா என்பது கவரிமான் அல்ல. நீண்ட மயிர்க்கற்றைகளைக் கொண்ட இமயமலைப் பகுதிகளில் காணப்படும் ஒரு விலங்கினம் என்பதற்கு இப்பாடலும் ஒரு சான்றாகும்.)
பொதுவாக உரையாசிரியர்கள், நாடு, அரசர், அரசு, அரசாட்சி என்ற கண்ணோட்டத்திலேயே உரை எழுதியுள்ளனர். இக்குறள் தனியருக்கும் பொருந்தும். ஆட்சிப்பொறுப்பில் இல்லாதவர்களும் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட இன்னல்களிலிருந்து நீங்கச் செய்யவும் வந்த துன்பங்களைத் தணிக்கவும் நீக்கவும் இனி வரும் துயரங்களிலிருந்து எதிர்நோக்கிக் காக்கவும் வல்ல பெரியோர் துணை கொள்ள வேண்டும். குடும்பச் சிக்கல்கள், பணிச்சிக்கல்கள், தொழில் சிக்கல்கள் முதலானவற்றில் துணையாக வருவோர் துணையை ஒவ்வொருவரும் கொள்ள வேண்டும்.
எனவே, நல்லாட்சிக்கும் நல் வாழ்விற்கும்
துன்பத்தில் நெறிப்படுத்தும் பெரியோர் துணை கொள்க!
– இலக்குவனார் திருவள்ளுவன்