(“இராமர் அவதாரம் செய்து 17 இலட்சம் ஆண்டுகள் ஆகிறது” என்கிறாரே கோமடம் சுவாமிகள் – தொடர்ச்சி)
சனாதனம் பொய்யும் மெய்யும்: 14-15
14. வருணங்கள், பிறப்பால் அமைக்கப்பட்டவை இல்லை . அவரவர் செய்யும் தொழிலால் வகுக்கப்பட்டவை என்பது சரியா?
? இந்த வருணங்கள், பிறப்பால் அமைக்கப்பட்டவை இல்லை. அவரவர் செய்யும் தொழிலால் வகுக்கப்பட்டவை. வேலை தெரிந்தவர்கள், தங்களுடைய தொழில் திறமையைத், தங்களது குடும்பத்திற்கு மட்டுமே சொல்லிக் கொடுத்ததால், அந்தத் தொழில்கள் குலத் தொழில்களாக மாறின. – இவ்வாறு இரங்கராசு பாண்டே விளக்கியுள்ளது ஏற்புடைத்தாகுமா?
இவ்வாறு ஏய்ப்பது ஆரியர்கள் வழக்கம். தங்கள் கருத்திற்கு எதிர்ப்பு வரும்பொழுது இல்லை என்று கூறித் தவறான விளக்கம் அளிப்பர். பின் தங்களின் மூலக்கருத்தின் பக்கமே நிற்பர். இந்தத் தவறான கருத்தைத் தேவைப்படும் நேரத்தில் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வர். மேலோட்டமாக இதைப்பற்றி மட்டும் அறிய வருவோர் இதனையே உண்மை என்று நம்புவர். அப்படித்தான் வருண வேறுபாடு பிறப்பால் அல்ல எனக் கூறி அதற்கு அளிக்கும் விளக்கங்களுமாகும்.
தன் குடும்பத்தினர் புரியும் தொழிலில் இருந்து மாறுபட்டு வேறு தொழிலிலும் ஒருவர் ஈடுபடலாம். இதற்குத் தடையில்லை. முடி திருத்துநர் மகன் முடி திருத்தும் தொழிலில் ஈடுபடலாம். வேறு தொழிலிலும் ஈடுபடலாம். முடி திருத்துநர் குடும்பத்தைச் சேராத வேறு பலரும் இன்று முடி திருத்தும் தொழிலில் ஈடுபடுதைப் பார்க்கிறோம். எனவே, யாரும் எப்பணியையும் பார்ப்பதற்குத் தடையில்லை.
மருத்துவரின் மகனோ மகளோ மருத்துவராகலாம், வேறு தொழிலிலும் ஈடுபடலாம். இதேபோல்தான் பிற தொழில் பார்ப்பவர்களின் பிள்ளைகளும் அவர்களின் வழி முறையினரும் எப்பணியும் பார்க்கலாம். ஆனால் பிராமணன் சத்திரியனாகவோ சூத்திரனாகவோ ஆக மாட்டான். சத்திரியனோ சூத்திரனோ பிராமணனாகவோ பிற சாதியனாகவோ ஆக முடியாது. சூத்திரன் மகனைப் பிராமணன் ஆக்கி அவனை அருச்சகராக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வருண வேறுபாடு இ்லை என்றால் அனைவரும் அருச்சகராகலாம் என்னும் தமிழ்நாட்டரசின் திட்டத்திற்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதேன்? சிதம்பரத்தில் தீட்சிதர்கள் ஆட்டம் போடுவதேன்? பிறப்பு அடிப்படையில் வருண வேறுபாட்டை வலியுறுத்துவதே சனாதனம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
கீதை விரிவுரை ஒன்றில் இது குறித்துத் தெளிவாகக் குறிக்கப் பெற்றுள்ளதையும் பார்ப்போம்.
“எல்லாருக்கும் பொதுவான புலன் அடக்கம், மனவடக்கம் முதலியவற்றைக் கடைப்பிடித்து, நல்லொழுக்கம் உள்ள நான்காம் வருணத்தவன், யாகம் செய்ய ஆரம்பித்துத் தன் வாழ்க்கையை நடத்த ஆரம்பித்தால் அவனுக்குப் பாவம்தான் ஏற்படும். முதலாவதாக, வருண ஏற்பாட்டில் சிறிது தளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், முழுமையாக அழிந்துவிட்டது என்று கூற முடியாது. இரண்டாவதாகச், சீவர்கள் முன்வினைப்பயனைத் துய்க்க (அனுபவிக்க) வேண்டும் என்று ஈசுவரன், அவர்களின் முன்வினைக் கேற்றவாறு அந்தந்த வருணங்களில் பிறப்பளிக்கிறார். பகவானின் இந்த ஏற்பாட்டை மாற்ற மனிதனுக்கு உரிமையில்லை.”
“மூன்றாவது நடத்தையை மட்டும் வைத்து இன்ன வருணத்தவர் என்று தீர்மானிப்பதும் முடியாத செயல். ஒரே பெற்றோர்களுக்குப் பிறந்த பிள்ளைகளின் நடத்தையிலேயே மிகுந்த மாற்றத்தைக் காண்கிறோம். ஒரே மனிதன் ஒரு நாளில் ஒரு சமயம் பிராம்மணன் போலவும், வேறொரு சமயம் மற்ற வருணத்தவர் போலவும் நடந்து கொள்கிறான். இந்த நிலையில் எப்படி வருணத்தை வரையறுப்பது? தாழ்வை எவர்தான் ஏற்றுக்கொள்வார்? இதனால் உணவுப் பழக்கத்திலும், திருமணம் முதலியவற்றிலும் குழப்பம் ஏற்படும். கடைசியில், வருண அமைப்பு தலைகீழாக மாறிவிடும். வருண ஏற்பாடு என்பதே குலைந்து போய்விடும். ஆகவே செயலினால் மட்டும் வருண வகுப்பைத் தீர்மானிப்பது சரியன்று.“ (சிரீமத்து பகவத்(து)கீதா (தத்(து)வவிவேசனீ – தமிழ் விரிவுரை)
இவ்வாறு கீதை வல்லுநர்கள் மிகத் தெளிவாக வருண அடிப்படையில்தான் வேறுபாடு; தொழில் அடிப்படையில் அல்ல என்று தெளிவாகக் கூறியுள்ளனர். ஆனால் கீதையின் மீது மக்களுக்கு ஏற்படும் வெறுப்பை இல்லாமல் ஆக்குவதற்காக அல்லது குறைப்பதற்காக இவ்வாறு தவறான விளக்கம் தருகின்றனர். மேலும் இத்தகைய கருத்துகளை இடைச்செருகல்களாகவும் புகுத்தி விட்டுப், பாருங்கள், பாருங்கள் யார் வேண்டுமானாலும் பிராமணன் ஆகலாம், வருண வேறுபாடு கிடையாது என்று கூவுகின்றனர்.
15. இல்லையே! வருணங்கள் செய் தொழிலால் வகுக்கப்பட்டவை என்று இரங்கராசு மீண்டும் மீண்டும் கதை அளக்கிறாரே!
அதுதான் கதை அளக்கிறார் என்று சொல்லியாகி விட்டதே! ஆனால் இவர்தான் முதலில் இவ்வாறு கதையளக்கவில்லை. வருண வேறுபாட்டிற்கு எதிர்ப்பு வலுக்கும் பொழுதெல்லாம் வருண ஆதரவாளர்கள் இவ்வாறு மக்களை ஏமாற்றப் பார்ப்பார்கள். ஒற்றை எழுத்து எழுத்தாளர்கூட இவ்வாறு மக்களை ஏமாற்றியுள்ளார். ஆனால் வருணவாதிகளே தெளிவாக இவர்கள் சொல்வதற்கு மாறாக வருணத்திற்கேற்பத் தொழில் வேறுபாடே வாழ்வியல் அடிப்படை என விளக்கியுள்ளனர்.
”சமுதாயத் துறையிலோ பிராமணர் வேறு, பிராமணரல்லாதார் வேறு. அஃதாவது ஆரியர் தவிர வேறு யாரும் பிராமணர் என்ற தலைப்பில் வரக்கூடாது என்று கருதி, இதுவரை சில சமூகங்களுக்கு இருந்து வந்த பிராமணப் பட்டமும் பிரம்மப் பட்டமும், ஆச்சாரியார் பட்டமும் சட்டப்பூர்வமாக எடுக்கப்பட்டு விட்டன” என்று 07.08.1938 குடிஅரசு தலையங்கத்தில் தந்தை பெரியார் எழுதினார்.
இராசகோபாலாச்சாரியார் பிராமணருக்கு இணையாக விசுவகர்ம சாதியார் தங்கள் பெயருக்குப் பின்னால் ”ஆச்சாரி” என்று போடக்கூடாது; ”ஆசாரி” என்றுதான் போடவேண்டும் என்று உத்தரவு போட்டார் என்பதும் வரலாறு சொல்லும் உண்மை.
“பிற சமூகத்தார், தங்கள் சமூகத் திருமணங்களைத் தாங்களே நடத்திக் கொள்ள ஆரியப் பிராமண ஆதார நூல்கள் ஒப்புக் கொள்ளவில்லை. பிற சமூகத்தார், தாங்களும் பிராமணர்கள் என்பதைக் காட்டப் பெயருக்குப் பின்னால் ”ஆச்சாரி” என்று போட்டுக் கொள்ளத் தடை விதிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தாங்களும் பூணூல் போட்டவர்கள், உயர் வகுப்பார் என்று பிற வகுப்பார் சொல்லிக் கொள்வதில் ஏதாவது பொருள் இருக்கிறதா? என்பதையும் எல்லாம் வல்ல சக்தி படைத்தது பிராமணர்கள் போட்டிருக்கும் பூணூலே என்பதையும் பூணூல் போட்டிருக்கும் பிராமணர் அல்லாதவர்கள் யோசித்துப் பார்க்கும்படி”யும் பெரியார் வேண்டினார்.
எனவே, செய்தொழிலுக்கும் வருணத்திற்கும் தொடர்பு இல்லை.
– இலக்குவனார் திருவள்ளுவன், சனாதனம் பொய்யும் மெய்யும் பக்.33-36

(மழையியல் அறிந்த மாண்பமை தமிழர்கள் அன்றே சொன்னார்கள் 10 – தொடர்ச்சி)
சனிக்குப் பிள்ளைகளால் ஆபத்து என்பதால் தனக்குப் பிறந்த பிள்ளைகளை எல்லாம் பிறந்த உடன் தின்றுவிட்டதாகவும் கதை உள்ளது.
இவ்வாறு பிற நாட்டினர் பகுத்தறிவு அடிப்படையின்றி, அறிவியல் சிந்தனையின்றிச் சனிக்கோள் குறித்துக் கூறியுள்ள காலக்கட்டத்திற்கு முன்பே தமிழர்கள் சனிக் கோளை அதன் அறிவியல் தன்மைகளுக்கேற்பப் பெயரிட்டு அழைத்துள்ளனர்.
கதிர்மகன், நீலன், காரி, முதுமகன், மந்தன், முடவன் எனப் பலப் பெயர்கள் சனிக்கு இருப்பதைப் பிங்கல நிகண்டு (சூத்திரம் 234) தெரிவிக்கிறது.
சனிக்கோளின் ஒவ்வொரு பெயரையும் ஆராய்ந்தால் இக்கோளின் அறிவியல் உண்மைகளை நன்குணர்ந்தே அப்பெயர்களைக் குறிப்பிட்டனர் எனப் புரிந்து கொள்ளலாம், எனினும் பிற்காலத்தில் ஆரியக் கதைகளால் வந்த பெயர்கள் எல்லாம் பகுத்தறிவிற்கு ஏற்றன அல்ல.
கருப்பு நிறம் கொண்ட முகிலைக் கார்முகில் என்றும் கருப்பு நிறக் கூந்தலைக் கார்குழல் என்றும் சொல்வதை அறிவோம். கார் என்பது கருப்பு நிறத்தைக் குறிக்கும். கருப்பு நிறமாக உள்ள கோளுக்குக் காரி என்று பெயரிட்டனர்.
மை என்பதற்குக் கருமை எனப் பொருள் (பிங்கல நிகண்டு 3997).சனியும் ஒரு விண்மீனே! கரு நிறமான இவ்விண்மீனை மைம்மீன் என்றும் அழைத்தனர்.
பாரியின் ஆட்சிச் சிறப்பைக் கூறும்பொழுது புலவர் கபிலர்
மைம்மீன் புகையினுந் தூமந் தோன்றினும்
தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும்
(புறநானூறு 117: 1-2)
சிறப்பான ஆட்சி நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சனி கரிய நிறமுடையதாதலின் மைம்மீனென்றார்; அவனுக்குரிய, காரி, கரியவன் முதலிய காரணக்குறியாலும் உணர்க என அறிஞர் உ.வே.சாமிநாத(ஐய)ர் விளக்கியுள்ளார்.
கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்,
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும் (சிலப்பதிகாரம்: 10 : 102 : 3)
என்பதனுரையில் அடியார்க்குநல்லார் கரியவன் என்பது சனிக்கோள் என விளக்கியுள்ளார்.
மெதுவாக இயங்குபவனை மந்த புத்திக்காரன் என்று நாம் சொல்லுவோம். மெதுவாக வேலை செய்பவனிடம், ஏன் மந்தமாக இருக்கிறாய்? சுறுசுறுப்பாக வேலை செய் என்போம். மெதுவாகச் சுற்றும் கோள் என்பதால் சனிக்கோளுக்கு மந்தன் எனப் பெயர்.
குளுமையின் அடிப்படையில் காரிக்கோளைச் சனி என்றும் அழைத்தனர். சனி நீராடு என்றால் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் எனத் தவறாகப் பொருள் கூறப்படுகிறது. குளிர்ச்சியான நீரில் குளிக்க வேண்டும் என உடல் நல அடிப்படையில் அவ்வாறு கூறப்படுகிறது.
அச்சத்திற்கு ஆட்பட்டு அறிவிற்குப் புறம்பாகப் பிற நாட்டினர் கோள்களைப் பற்றித் தவறாகப் பரப்பிய காலக்கட்டத்திற்கு முன்பே தமிழ்ப் புலவர்கள் சனிக்கோளைப் பற்றி நிறம், வேகம், தன்மை அடிப்படையில் பெயரிட்டுள்ளதைக் குறிப்பிட்டுள்ளனர். அங்ஙனமாயின் அக்காலத் தமிழ் வானறிவியலாளர்கள் அறிந்திருந்த செய்திகள் இன்னும் மிகவாக அல்லவோ இருந்திருக்கும்!
– இலக்குவனார் திருவள்ளுவன்