1) இப்போது வெளிவந்துள்ள ஒரு படம் தொடர்பான மீள்பதிவு திரைத்துறையினரின் தமிழ்க்கொலைகளைத் தடுத்து நிறுத்துக! +++2. கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -3: அன்றே சொன்னார்கள்43 – இலக்குவனார் திருவள்ளுவன் +++ 3. 65. இல்லறத்தான் பணி எனத் திருவள்ளுவர்கூறுவதுவே தமிழ் கூறும் சனாதனம் – சேக்கிழான் 66. சனாதனம் என்றால் மரியாதைக்குரிய ஒழுங்கு முறை எனப் பல பொருள்கள் சொல்லப்படுகின்றன. – இவை சரித�

14 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jun 8, 2025, 5:07:38 PM6/8/25
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, Guberan Rajan, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, meen...@gmail.com, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan
இப்போது வெளிவந்துள்ள ஒரு படம் தொடர்பான மீள்பதிவு


திரைத்துறையினரின் தமிழ்க்கொலைகளைத் தடுத்து நிறுத்துக! : தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 20 : இலக்குவனார் திருவள்ளுவன்

image.png

திரைத்துறையினரின் தமிழ்க்கொலைகளைத் தடுத்து நிறுத்துக! : தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 20

(இதழ்கள் மூலமான தமிழ்க்கொலைகளைத் தடுத்து நிறுத்துக! : தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்  19-இன் தொடர்ச்சி)

மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள துறை திரைத்துறை. திரைத்துறையின் மூலம் நல்லனவும் ஆக்கலாம்; அல்லனவும் புரியலாம். திரைப்படங்களைப் பார்த்துத் திருந்தியவர்களும் உண்டு; தன்னம்பிக்கை பெற்றவர்களும் உண்டு; சீரழிந்தவர்களும் உண்டு.

கலை மக்களுக்காகத்தான். அப்படியானால் திரைக்கலை என்பது மக்கள் வளர்ச்சிகானதாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய திரைக்கலை என்பது மக்களை, மக்களின் மொழியை அழிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டியது மக்களின் கடமையும் அரசின் கடமையுமாகும்.

தமிழ்நாட்டுத் திரைப்பட நிறுவனங்களின் பெயர்கள் பெரும்பாலும் தமிழில் இல்லை. எடுத்துக்காட்டிற்காக முதலிடத்தில் இருக்கக்கூடிய நிறுவனங்களின் பெயர்களைப் பார்ப்போம். அவை வருமாறு:

 ஏவிஎம்,  லைக்கா, ரெட் செயண்டு மூவிசு, சன் பிக்சர்சு, ஆசுகார் பிலிம்சு, வி க்ரியேசன்சு. ஃச்டுடியோ கிரீன், டிரீம் வாரியர், 2d எண்டர்டைன்மெண்ட், தேனாண்டாள் பிலிம்சு, ஏஜிஎசு எண்டர்டைன்மெண்ட், மெட்ராசு டாக்கீசு, ஒண்டர் பார்  ஃபிலிம்சு, சக்தி பிலிம் ஃபேக்டரி., முதலிய பலநிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிடலாம்.

தத்தம் நிறுவனங்களின் பெயர்களைக் கூடத் தமிழில் சூட்டாதவர்கள் தங்கள் திரைப்படங்களின் பெயர்களுக்கு மட்டும் தமிழ்ப்பெயர் சூட்டுவார்களா என்ன? தங்கள்  திரைப்படங்களின் கதைப்பாத்திரங்களுக்குத் தமிழ்ப்பெயர் சூட்டுவார்களான என்ன? எல்லாமும் ஆங்கிலமாகவோ பிற மொழிப் பெயர்களாகவோ இருக்கின்றன. தமிழ்த் திரைப்படங்களின் விளம்பரங்கள் ஆங்கிலத்தில்தான் வருகின்றன. தமிழ்த் திரைப்பாடல்களை ஆங்கில எழுத்துகளில் வெளியிடுகின்றனர். தமிழ்த் திரைப்படங்களைத் தமிழர்கள் பார்க்கத்தானே வெளியிடுகின்றனர். அப்புறம் ஏன், எல்லாமே ஆங்கிலமாக உள்ளன. திரைப்படக் கதைப்பாத்திரங்களின் பெயர்கள் தமிழாக இருந்தால் வஞ்சகனாக முடிப்பார்கள். தமிழைப் போக்கும் திரைக்கலைஞர்கள் என்று திருந்துவார்கள்?

கதைப்பாத்திரங்கள் பெயர்களை இந்தி சமற்கிருதப் பெயர்களாக வைப்பவர்கள், திரைப்படத்திற்கும் இந்திப்பெயர் சூட்டும் துணிவிற்கு வந்துவிட்டார்கள். சில நாள் முன் ஒரு திரைப்படம் வந்துள்ளது. அதனை நாட்டியப்பெண் இயக்குநர்  ஒருவர் இயக்கியுள்ளார். பெண் இயக்குநர்கள் குறைவுதான். எனினும் அனைவருமே பாராட்டிற்குரியவர்களாகத்தான் உள்ளனர். இப்படத்தின் இயக்குநரையும் திரை இயக்கத்திற்காகப் பாராட்டத்தான் வேண்டும். பொதுவாக நாட்டிய இயக்குநர்கள் நடன இசைவு என்ற பெயரில் இழிகாம அசைவுகளைப் பயிற்றுவித்து அவர்கள் மூலம் அவற்றைப் பார்க்கும்  சிறுவர் சிறுமியர் உள்ளங்களையும் பாழ்படுத்துகிறார்கள். அவர்களுக்குக் கடுமையான சிறைத்தண்டனை விதித்தால் கலையுலகம் உருப்படும்; மக்களும் தீய பாதையில் செல்ல மாட்டார்கள் என்பர் மன்பதை நல ஆய்வாளர்கள்.

அத்தகைய துறையில் பணியாற்றும் இந்நாட்டிய இயக்குநர் இந்திப் பெயரைப் படத்திற்குச் சூட்டியதன் மூலம் தமிழ்க்கொலை புரிந்துள்ளார். அப்படத்தின் பெயர் ‘குமரிமாவட்டத்தின் தக்சு’ (thugs of kumari maavattam)என்பது. இப்படத்தின் மூலப்படம்  மலையாளப்படம் என இயக்குநர் சொல்லாவிட்டாலும் அந்த உண்மையைத் திரைத்துறையைச் சார்ந்தவர்களே வெளிப்படுத்தி வருகிறார்கள்.

சுவாதன்த்ரிம் அர்த்த ராத்திரியில்’  என்பதே இம்மலையாளப் படம். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் இப்போது எடுக்கப்பட்டு வெளிிடப்பட்டுள்ளது.

‘thugs’  என்னும் சொல்லின் பொருள் ‘கொலை, கொள்ளைக் கூட்டாளி’ என்பதாகும். சட்டத்திற்கு எதிரான செயல்களைச் செய்யும் மோசடிப் பேர்வழிகளையும் கொள்ளை யடிப்பவனையும் கொலை புரிபவனையும் இவ்வாறு குறிப்பிடுவார்கள். இந்திச்சொல்லான இதுதான் ஆங்கிலத்தில் குறிக்கப்படுகிறது.   மூலத்திரைப்படத்தின் பெயர் அவ்வாறு இல்லாதபோது தமிழில் அவ்வாறு சூட்டுவானேன்? தெலுங்கில் ‘கொனசீமாவின் thugs’ எனப்பெயர். கொனசீமா என்பது ஆந்திராவில் கோதாவரி ஆற்றின் கிளையாறுகளுக்கிடையே உள்ள தீவுக்கூட்டமாகும். இவ்வாறு இரு மொழிகளில்தான் இந்திச் சொல்லைப் பயன்படுத்திப் படப்பெயர்களைக் குறித்துள்ளனர். கன்னடத்தில் கதைப்பாத்திரத்தின் பெயரில் ‘சூலியட்டு 2’ எனச்  சுட்டியுள்ளனர்.

மலையாளப்படம் வந்த 2018இலேயே இந்தியில் இந்தோசுதானின் தக்சு(Thugs of Hindostan) எனப்படம் வந்துள்ளது. இந்துத்தான் என்பதைத்தான் இந்தோத்தான் என்கின்றனர். இப்பொழுது தக்சு என்ற பெயரில் மற்றொரு இந்திப்படம் வந்துள்ளது.

மக்களறியாத இந்திச் சொல்லைத் திணிக்க வேண்டும் என்பதற்காகவே தமிழ், தெலுங்கு திரைப்படங்களின் பெயர்களைச் சூட்டியுள்ளார்கள் என்று நன்கு தெரிகிறது. அவ்வப்பொழுது நம் கவனத்திற்கு வரும் ஆங்கிலப்பெயர் குறித்து எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம். “இதை மட்டும் ஏன் எதிர்க்கிறீர்கள்? அதை எதிர்க்கவில்லையா?” என்பதுபோல் சிலர் கேட்பர். உண்மையில் நாம் ஓரிரண்டைக் குறிப்பிட்டாலும் எல்லாப் பிறமொழிச்சொல் அல்லது சொற்களில் சூட்டியுள்ள எல்லாத் திரைப்படத்தையும்தான் எதிர்க்கிறோம். அவ்வப்பொழுது இவ்வாறு எழுதினால் பயனில்லை. சிலர் நம் வேண்டுகோளை ஏற்றுத் திருத்திக் கொண்டார்கள். புதியதாக வரும் உதவி, துணை, இணை இயக்குநர்கள், இயக்குநர்கள் பலர் தமிழ் உணர்வாளராக உள்ளனர். தமிழ்ப்பெயர்களையே படங்களுக்குச் சூட்டுகின்றனர். அவர்களுக்குப் பாராட்டுகள். ஆனால், இவை போதா!

எனவே, பொதுவாகவே எங்கும் தமிழ் இருக்கவும் அதன் மூலம் மொழி, இனப்படுகொலையைத் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்தமிழ்கொலைத் தடுப்புச் சட்டம் ஒன்றை இயற்றி, நம் செந்தமிழைக் காக்க வேண்டும். அரசு தரும் உதவிகள், நல்கைகள், விருதுகள், பரிசுள் முதலியன பட நிறுவனம், படம், படப்பாத்திரங்கள், பட விளம்பரங்கள், பட அறிவிப்புகள், படப்பாடல்கள், பட உரையாடல்கள், யாவும் தமிழாக இருப்பனவற்றிற்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். படப்பணி விவரங்களில் பெயர்கள் கிரந்த எழுத்துகளின்றியும் தமிழ் முதல் எழுத்துகளுடனும் இருந்தால் மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். 

சங்க இலக்கியங்கள் தோன்றிய காலத்தில்  தெற்கே குமரி முதல் வடக்கே இமயமலை வரை பரவியிருந்த தமிழ் நிலம் இன்றைக்குச் சுருங்கிப்போனதன் காரணம் என்ன?

“வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்

தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்”

பழந்தமிழ்நாட்டின் எல்லையாக இருந்ததைப் புலவர் காரிகிழார் குறிப்பிட்டுள்ளார்(புறநானூறு, 6). இந்நெடிய பரப்பை நாம் போர்க்களத்தில் இழக்கவில்லை. மொழிக்கலப்பால் இழந்துள்ளோம். தமிழ்மொழியிலிருந்து பல மொழிகள் பிறந்துள்ளன என்று பெருமை பேசிப் பயனில்லை. தமிழ் மொழி தமிழர்களின் மொழிக்கலப்பால் தன் ஆட்சிப்பரப்பை இழந்த அவலத்திற்கு உள்ளானது என்பதை உணர வேண்டும். குறுகிறய நிலப்பகுதியாக மாறிய தமிழ்ப்பரப்பை மேலும் நாம் குறுக்க வேண்டுமா என எண்ணிப் பார்க்க வேண்டும். மொழிக்கொலைகளுக்கு முற்றப்புள்ளி வைக்க வேண்டும். மொழிக்கொலைகளை விரைவுபடுத்தும் ஊடகத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும். மொழிக்கொலைகளின் முன்னோடியான திரைக்கலைத் துறையை நற்றமிழ் நாடும் நற்றுறையாக மாற்ற வேண்டும்.

மக்கள் தமிழைச்சிதைக்கும் படங்களைப் புறக்கணிக்க வேண்டும். கலைஞர்கள் அத்தகைய படங்களில் பணியாற்றுவதில் இருந்து விலக வேண்டும். பட நிறுவனங்கள் அத்தகைய படங்களை உருவாக்கக் கூடாது. அப்படி எதுவும் வந்தால் பட வெளியீட்டாளர்கள் அவற்றை வாங்கக்கூடாது. திரையரங்கினர் அவற்றைக் காட்டக்கூடாது என்று உறுதிப்பாடு வேண்டும். இயக்குநர்கள், கதையாசிரியர்கள், உரையாடலாசிரியர்கள், திரைத்துறையில் செல்வாக்கைச் செலுத்தும் நாயக நாயகிகள், தமிழ் உணர்வுடன் செயல்பட வேண்டும். இதற்கெல்லாம் வழிகாட்டியாக அரசு விளங்க வேண்டும்.  தமிழ்நாட்டு அரசாங்கம் தமிழ் காக்கும் பணிகளில் ஈடுபட்டால் இவை தாமாகவே நடந்து விடும்.

முதல்வர் மு.க.தாலின் இதில் கருத்து செலுத்தினால் அவர் புகழ் தமிழுலகம் உள்ள வரையும் நிலைக்கும். செய்வாரா?– இலக்குவனார் திருவள்ளுவன்

+++

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -3: அன்றே சொன்னார்கள்43 – இலக்குவனார் திருவள்ளுவன்



(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -2 தொடர்ச்சி)

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -3

     பழந்தமிழர்கள், மாடம் என்று பலமாடிக் கட்டடங்களையே குறித்துள்ளனர். மிகுதியாக மாடிகளைக் கொண்ட கட்டடங்கள் நெடுநிலை மாடங்கள் எனப்பட்டன. பொதுவாக 7 மாடிக்கட்டங்கள் இருந்துள்ளன.  இவற்றுள் தரைத்தளம் பொதுவாகவும் பிற பருவச் சூழல்களுக்கேற்ப வெம்மை தாங்குவன, தென்றல் வீசுவன, என்பன போன்றும் இருந்திருக்கின்றன.

 

 இளங்கோ அடிகள் அவர்கள் கோவலன், கண்ணகி ஆகிய இருவரும் நெடுநிலை மாடத்து இடைநிலத்து  இருந்துழி (இருந்த பொழுது) எவ்வாறு மகிழ்ச்சியாக இருந்துள்ளனர் எனக் குறிப்பிடுகிறார் (சிலப்பதிகாரம் : 1:2: 13). அஃதாவது 7 நிலைகளை உடைய மாளிகையின் இடைப்பகுதியான 4 ஆம் நிலையில் இருந்துள்ளதாக உரையாசிரியர்கள் விளக்கி உள்ளனர். இவற்றுள் மொட்டைமாடி என்று இப்பொழுது நம்மால் அழைக்கப்படும் மேலே உள்ள திறந்த வெளிப்பகுதிகள் முகில் கூட்டம் தவழும் வண்ணமும் நிலா ஒளியில் மகிழும் வண்ணமும் அமைக்கப்பட்டுள்ளன. நிரைநிலை மாடம் என்றும் அரமியமான சூழலைத் தருவதால் அரமியம் என்றும் பொது வழக்கில் நிலா முற்றம் என்றும் அழைத்துள்ளனர். நான்காம் மாடத்திலிருந்து நிரைநிலை மாடத்திற்கு அவ்விருவரும் சென்றதையும் இளங்கோ அடிகள்

விரைமலர் வாளியொடு வேனில்வீற் றிருக்கும்
நிரைநிலை மாடத்து அரமியம் ஏறி   (சிலப்பதிகாரம் : 1:2: 26-27)

மகிழ்ந்ததாக விளக்குகிறார். (விரை மலர் – மணம் வீசும் மலர்; வாளி-அம்பு;  வேனில் வீற்றிருக்கும் – மலர்க்கணையை உடைய  அழகன் (மன்மதன்) இருக்கும் ; அரமியம் – காதல் உணர்விற்கு உரிய அழகிய சூழல் உடைய நிலா முற்றம்)

தாய், தன் மகளும் மருமகனும் வர இருப்பதால், தன் வீட்டின் அலங்கரிக்கும் சிறப்புடைய மாண்புற்ற புறச்சுவரில் செம்மண் பூசினாள்; இல்லத்தின் முன் பக்கத்தில் மணலைப் பரப்பச் செய்தாள்; மாலைகளை வீட்டில் தொங்க விடச் செய்தாள்; மகிழ்வுடன் எதிர்பார்த்திருந்தாள் எனக் கூறும் புலவர் கயமனார்,

புனைமாண் இஞ்சி பூவல் ஊட்டி
மனைமணல் அடுத்து மாலை  நாற்றி
உவந்து இனிது அயரும்  (அகநானூறு: 195.4 )
என விளக்குகிறார்.

இப்புலவரைப் போல், வீட்டுச் சுவர்களுக்கு வண்ணம் பூசப்பட்டிருக்கும் என்பதைப் புலவர்  ஆலங்குடி வங்கனார்,  பூவல் படுவில் (புறநானூறு 319.1) என்றும் இளங்கோ அடிகள் பூவல்ஊட்டிய புனைமாண் (சிலப்பதிகாரம் : 16: 5) என்றும் சோழன் நல்லுருத்திரன் இல் பூவல்ஊட்டி (கலித்தொகை : 114) என்றும் கூறுகின்றனர்.

மனை பற்றிய குறிப்புகள் சிலவற்றை முன்பு கண்டோம்.  மேலும் பல புலவர்கள் மனைகள், மாளிகைகள், இல்லங்கள் முதலானவை குறித்துக் குறிப்பிட்டுள்ளனர்.

மனைகள் குறித்தும் மனையில் நடத்தப்பெறும் மணவினைகள், இல்லறம் குறித்தும் புலவர்கள் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் (மண மனை கமழும் கானம்-அகநானூறு: 107.21), வேம்பற்றூர்க் குமரனார் (மனைஒழிந்திருத்தல் -அகநானூறு: 157.14), கயமனார் (மனைமருண்டு இருந்த -அகநானூறு: 189.12), மதுரை அறுவை வாணிகன்இளவேட்டனார் (மனை புறந்தருதி-அகநானூறு: 230.8; இம்மனைக் கிழமை மனையறம்- அகநானூறு 230.9), மதுரை மருதனிளநாகனார் (மனைவலித்து ஒழியும் மதுகையள்-அகநானூறு 245.3; அல்குமனை வரைப்பில் -அகநானூறு 245.9), பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் (மனை பாழ் பட்ட மரை சேர் மன்றத்து -அகநானூறு: 373.2), ஆசிரியர் புலவர் உருத்திரங்கண்ணனார் (மனை சேர்த்திய வல்லணங்கு – பட்டினப்பாலை: 87), ஆசிரியர் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் (மகமுறை படுப்ப மனைதொறும் பெறுகுவிர் -மலைபடுகடாம்: 185), புலவர் இளங்கீரனார் (மனைமாண் சுடர் – நற்றிணை 3.9), புலவர் சாத்தந்தையார் (தாய்மனை – 26.4), புலவர்  பிரமசாரி (வெறிமனைநற்றிணை 34.9), புலவர்  ஓரம்போகியார் (மனைமடி துயிலே – நற்றிணை 360.11)  ஆகியோரும் குறிப்பிட்டுள்ளனர். இவற்றின் மூலம் வீடுகள் வெவ்வேறு வகைகளில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள கட்டடச் சிறப்புகளையும் காவல் சிறப்பையும் பிற சிறப்புகளையும் அறிய முடிகிறது.

நுண்ணிய முள்வேலியைச் சிறப்பாக அமைத்து அருமையான காவலை உடைய மாளிகை குறித்துப் புலவர்  தும்பி சேர் கீரனார்

மனைஉறக் காக்கும் மாண்பெரும் கிடக்கை
நுண்முள்வேலி (நற்றிணை 277.5-6) எனக் குறிப்பிடுகின்றார்.

அருமன் என்பவனின் புகழ்மிகுந்த சிறுகுடி என்னும் ஊரில் தொன்மையான வீடுகள் பல இருந்தன எனப் புலவர் நக்கீரர்
மூதில் அருமன் பேரிசைச் சிறுகுடி (நற்றிணை 367.6)
என்னும் வரியில் விளக்குகிறார்.

இவ்வாறு  வீட்டுக்கட்டடங்கள் அமைந்த சிறப்புகளைத் தொடர்ந்தும் காண்போம்.

 – இலக்குவனார் திருவள்ளுவன்

++

65. இல்லறத்தான் பணி எனத் திருவள்ளுவர்கூறுவதுவே தமிழ் கூறும் சனாதனம் – சேக்கிழான் 66. சனாதனம் என்றால் மரியாதைக்குரிய ஒழுங்கு முறை எனப் பல பொருள்கள் சொல்லப்படுகின்றன. – இவை சரிதானா? : இலக்குவனார் திருவள்ளுவன்


ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன் 
     09 June 2025      கரமுதல


(சனாதனம் – பொய்யும் மெய்யும் 63-64 தொடர்ச்சி)

சனாதனம் – பொய்யும் மெய்யும் 65-66

   ? 65  தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. (திருக்குறள்- 43)
உலக வாழ்வை நீத்த முன்னோர், கடவுள், விருந்தினர், சுற்றத்தார், தான் என ஐவகையினரையும் காப்பதே இல்லறத்தான் பணி என்கிறார் திருவள்ளுவர். இதுவே தமிழ் கூறும் சனாதனம் என்கிறாரே சேக்கிழான்.


தென்கடலில் மூழ்கிய நம்மவர்களையும் – தென்புலத்தாரையும் – பிறரையும் போற்ற வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். ஆனால் ஆரியமோ தமிழர்களையே பழிக்கிறது. அவ்வாறிருக்க இதனை எங்ஙனம் சனாதனம் என்று சொல்ல முடியும்? இப்படித்தான் ஆரியத்திற்குப் பொருந்தாத தமிழ் நெறிகளை எல்லாம் ஆரியமாகக் கூறுவது ஆரியவாதிகள் வழக்கம்.


தென்புலத்தார் என்பதற்குக் குறள்நெறி அறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார், “தென் நாட்டார் என்பதே நேர் பொருளாகும். திருவள்ளுவர் காலத்தில் வடநாட்டார் தென்நாட்டில் குடியேறிக் கொண்டிருந்தனர். அவர்களைத் தென் தமிழ் நாட்டார் போற்றி வரவேற்று அவர்கட்கு வேண்டும் யாவும் அளித்தனர். தன் நாட்டவர்க்கு உதவுதல் மறுத்தும் அவ்வாறு செய்திருக்க வேண்டும். அதனைக் கண்ணுற்ற வள்ளுவர் பெருமான் தம் நாட்டவரை தென் நாட்டவரைப் போற்றுதலைத் தலையாய கடன்களில் ஒன்றாக வலியுறுத்தியுள்ளார் என்பதே சாலப் பொருத்தமாகும்.


“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று உலகத்தையே ஒரு குடும்பமாகக் கருதி வாழ்ந்த தமிழர் தம் பகுதியினரைப் போற்றாது பிற பகுதியிலிருந்து வருபவரைப் போற்றத் தலைப்பட்டமை கண்டு வள்ளுவர் பெருமான் உளம் நொந்து நாட்டுப் பற்றுதலை வற்புறுத்தியுள்ளார். உலகப் பற்றுக் கொள்ளுமுன் தந்நாட்டுப் பற்றுக் கொள்ள வேண்டுமென்பது உலகப் பொதுமறை உரைத்த ஆசிரியரின் கருத்தாகும்.” என்கிறார். இவ்வாறு நம்மவரைப் போற்ற வேண்டும் என்னும் நெறி எங்ஙனம் நம்மவரை ஒதுக்கும் சனாதனம் ஆகும்?


இவ்வாறுதான் ஆரியவாதி சேக்கிழான் வேறு சில பாடல்கள் கூறும் 
தமிழ்நெறிகளையும் ஆரியச் சனாதனமாகத் திரிக்கிறார். பிற ஆரியவாதிகளும் இவ்வாறுதான் கூறுகின்றனர்.

66. சனாதன தருமம் என்பது சமற்கிருதச் சொல்லாகும். இந்தச் சொல்லிற்கு நிலையான தத்துவஞானம், நிலையான நம்பிக்கை, அசைக்க முடியாத நித்திய சட்டம், மரியாதைக்குரிய ஒழுங்கு முறை எனப் பல விதமான பொருள்கள் சொல்லப்படுகின்றன. – இவை சரிதானா?

இவ்வாறு சொல்லப்படுகின்றன என்ற அளவில் உண்மைதான். ஆனால், இவை தவறான விளக்கங்கள். நிலையாமை குறித்த விளக்கத்தை முன்னரே தந்துள்ளோம். ஒரு வருணத்தாரை உயர்த்திப் பிறரைத் தாழ்த்தும் சனாதனம் குறித்துப் பல இடங்களில் விளக்கியுள்ளோம். இதனை எப்படி மதிப்பிற்குரிய – மரியாதைக்குரிய – ஒழுங்குமுறை எனச் சொல்ல இயலும்? இல்லாத நல்ல கருத்துகளை எல்லாம் பொல்லாச் சொற்களுக்கு ஏற்றும் ஆரிய முறையே இது.


(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம் – பொய்யும் மெய்யும் பக். 92-94





--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages