இலக்கிய நடையில் எனது மீள்பார்வை - 1
வெகுநாள்களுக்கு முன்னர், நான் மதுரையில் இருந்தபோது , சென்னையிலிருந்து என் பேத்தி யாழினி எனக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார். அப்போது அவர் ஒரு பள்ளி மாணவி. அப்போது மதுரையில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்கு சென்று சில புத்தகங்கள் வாங்கிவர முடியுமா என்று கேட்டு ஒரு நாலைந்து புத்தகங்களின் பெயரைக் குறிப்பிட்டிருந்தார். எல்லாம் ஆங்கில நாவல்களின் எளிய பதிப்புகள் (Abridged version).
அவற்றை வாங்கிக்கொண்டு , நம் பங்குக்கு ஏதாவது நல்ல தமிழ்ப் புத்தகங்கள் வாங்கிக்கொடுக்கலாமே என்று தேடியலைந்தேன். சங்க இலக்கியங்களில், பள்ளி மாணவர் புரிந்துகொள்ளும்படியான எளிய நடைப் புத்தகங்களைத் தேடினேன். அப்படியான புத்தகங்கள் ஒன்றும் சிக்கவில்லை.
மிக்க வருத்தத்துடன் வீடு திரும்பும் வழியில், ‘மற்றவர்கள் எழுதாவிட்டால் என்ன, நீ ஏன் எழுதக்கூடாது?’ என்று எனக்குள் ஒரு குரல் என்னைக் கேட்டது.
வீடு திரும்பியபின் அந்த வேலையில் மும்முரமாக இறங்கினேன்.
“சிறுவர்க்கான பத்துப்பாட்டு’ என்ற தலைப்பில் திருமுருகாற்றுப்படையை எழுத ஆரம்பித்தேன். பத்துப் பக்கங்கள் எழுதியபின்னர், எனக்கு மனநிறைவு ஏற்படவில்லை.
சங்க இலக்கியம் ஒரு concentrated syrup. அதை சிறுவர்க்கு எழுத வேண்டுமென்றால், அதில் நிறைய தண்ணீர் ஊற்றி dilute பண்ணவேண்டியிருந்தது. அதனால், அது மிகவும் நீர்த்துப்போய்விட்டது.
எனவே, எழுதியதைக் கிழித்துப்போட்டு, ‘இளைஞருக்கான பத்துப்பாட்டு’ என்று தலைப்பிட்டு, சங்க இலக்கியச் சாரம் குறையாமல் , பத்துப்பாட்டில் உள்ள ஐந்து ஆற்றுப்படை நூல்களைப் பற்றி எழுதினேன்.
எழுதியதை என்ன செய்வது? முதலில் அது தரமானதுதானா என்று பார்க்கவேண்டும். யாரிடம் காட்டுவது?
எனக்கு, என் கல்லூரியைச் சேர்ந்த தமிழ்த்துறை நண்பர்கள் உண்டு. அவர்களிடம் காட்டினால், என் முகத்தாட்சணியத்திற்காக, ஏதோ பாராட்டிச் சொல்வார்கள். எனக்குத் தெரியாத ஒரு தமிழறிஞர் வேண்டும்.
அப்போது மதுரையில் மிகச் சிறந்த ஒரு தமிழறிஞர், முனைவர்.தமிழண்ணல் என்பவர். மதுரைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத்தலைவராக இருந்து ஓய்வுபெற்றவர். அவரை எனக்கு முன்பின் தெரியாது.
ஒரு நண்பர் மூலம் அவர் தொலைபேசி எண்ணைப் பெற்று அவரிடம் பேசி அவரைச் சந்திக்க நேரம் கேட்டு அவரிடம் என் மனைவியுடன் போனேன்.
என்னைப் பற்றி அறிமுகம் செய்து என் வேண்டுகோளை முன்வைத்தேன்.
அவர் என்னை ஏற இறங்கப் பார்த்தார்.
நீங்கள் ஓய்வுபெற்ற கணிதப் பேராசிரியர். பத்துப்பாட்டைப் பற்றி எழுதியிருக்கிறீர்களா என்று வியந்தார்.
தனக்கு முன்னால் இருந்த மேஜையைக் காண்பித்தார்.
அதின்மேல், சில புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.
“இவையெல்லாம் என் அணிந்துரைக்கு வந்த புத்தகங்கள். எல்லாம் தமிழ்ப்பேராசிரியர்கள் எழுதியவை.” என்று கூறிவிட்டு அமைதிகாத்தார்.
பின்னர், “ஐயா, ஓர் அரைப்பக்கம் எழுதித்தந்தால் போதுமா? அதுவும் பத்துநாள் ஆகும்” என்றார்.
“ஐயா, உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ, ஒரு வரி மட்டும்கூட எழுதித்தந்தால் போதும்” என்று சொல்லிவிட்டுத் திரும்பினோம்.
இரண்டே நாள்களில், அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
“ஐயா, இன்று மாலை வரமுடியுமா?” என்று கேட்டார்.
“வருகிறேன், ஐயா” என்று சொல்லிவிட்டு, அன்று மாலை படபடக்கும் இதயத்துடன் அவர் வாசலைத் தட்டினேன்.
அவரே வந்து கதவைத் திறந்தார்.
அவரது மேஜையில் அந்தப் புத்தகங்கள் அடுக்கியபடியே இருந்தன. பக்கத்தில் என் புத்தகம் விரித்துவைக்கப்பட்டிருந்தது.
அவர் கையில் ------ (தொடரும்)