பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தனின் பூர்வீக கிராமம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் அருகே உள்ள திருப்பணமூர் ஆகும். இங்குள்ள சமணர் கோயிலில், அபிநந்தன் நலமுடன் நாடு திரும்ப வேண்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் மேல்சித்தாமூர் கிராமத்தில் உள்ள ஜினகஞ்சி சமணர் மடத்தின் கோயிலில், பார்ஸ்வநாத தீர்த்தங்கரர் சன்னதியில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. சமணர் ஜினாலயங்கள் அனைத்திலும் கூட்டு பிரார்த்தனைகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
அபிநந்தன் விடுவிக்கப்படுவது குறித்து பேசிய ஜினகஞ்சி மடத்தின் லட்சுமிசேன பட்டாரக மகா ஸ்வாமிகள், "கூட்டு பிரார்த்தனையின் பலனாகவும் பகவானின் ஆசியாலும் அபிநந்தன் விடுவிக்கப் படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. உலகில் போர் ஓய்ந்து அகிம்சை பரவட்டும். என்றும் அகிம்சையே வெல்லும்" என்றார்