1. சாதி எதிர்ப்புப் போராளி சிவகங்கை இராமச்சந்திரனாரின் முன் மாதிரிச் செயல் +++ 2. சிவகங்கை இராமச்சந்திரனாரின் 141 ஆவது பிறந்த நாள் நினைவாக .....சாதிப்பட்டத் துறப்பிற்கு வழிகாட்டிய முன்னோடி இராமச்சந்திரனார் +++ 3. வெருளி நோய்கள் 396-400 : இலக்குவனார் திருவள்ளுவன்

10 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Sep 15, 2025, 9:40:37 PM (4 days ago) Sep 15
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, Guberan Rajan, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, meen...@gmail.com, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan

வெருளி நோய்கள் 396-400 : இலக்குவனார் திருவள்ளுவன்


ஃஃஃ  இலக்குவனார் திருவள்ளுவன் 
     16 September 2025      கரமுதல


(வெருளி நோய்கள் 391-395 தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 396-400

396. உடற்காய வெருளி – Traumaphobia / Traumatophobia

உடற்காயம் குறித்த வரம்பற்ற பேரச்சம் உடற்காய வெருளி.

பெண்களுக்கும் குறைந்த கல்வி உடையவர்களுக்கும் உடற்காய வெருளி மிகுதியாக இருப்பதாகக் கூறுகின்றனர்.

பொதுவாகப்பெண்களுக்கும் கல்வியறிவு குறைந்தவர்களுக்கும் இவ்வெருளி வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

trauma என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் காயம் எனப் பொருள்.

00

397. உடற்பயிற்சி வெருளி -Exercitophobia / Drapanophobia 

உடற்பயிற்சி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உடற்பயிற்சி வெருளி.

உடற்பயிற்சியின் பொழுது இறப்பு நேர்ந்த செய்தியைப் படித்தவர்களுக்கு அதன் காரணத்தை உணராமல் உடற்பயிற்சி மீது பேரச்சம் வருவதுண்டு. சான்றாக நடிகர் முத்துராமன் உதகமண்டலத்தில் அதிகாலை நடைப்பயிற்சி சென்ற பொழுது மரணமடைந்த செய்தியைப் படித்த அல்லது கேள்விப்பட்ட உடன் நடைப்பயிற்சி மீது பேரச்சம் கொண்டவரும் கொள்பவரும் இருக்கின்றனர்.

உடற்பயிற்சிக்கான கருவிகளைக் கையாள்வது குறித்த அச்சமும் உடற்பயிற்சி வெருளியாக மாறுவது உண்டு.

cito என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் விரைவான.

Exercito என்றால் விரைவான இயக்கம் எனப் பொருள். உடலியக்கத்தை – உடற்பயிற்சியை இங்கே குறிக்கிறது.

00

398. உடற்பயிற்சிக் கூட வெருளி – Gymnasiphobia

உடற்பயிற்சிக் கூடம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உடற்பயிற்சிக் கூட வெருளி.

அளவான நேரம் உடற்பயிற்சி செய்வதால் தீமை ஏதும் இல்லை; ஆனால் மிகுதியான உடற்பயிற்சி,  உடற்பயிற்சிக்கு அடிமையாக்கி (exercise addiction) உடல், மன நலவாழ்வில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். இது சோர்வு, மன அழுத்தம், தூக்கமின்மை, காயங்கள் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். மேலே உடற்பயிற்சி வெருளியில் குறிப்பிட்டவாறு, நாள்தோறும் உடற்பயிற்சி செய்யும் நடிகர் முத்துராமன் உதகமண்டிலத்திற்கு ஒரு படப்பிடிக்குச் சென்ற பொழுது(1981) மிகுதியான நேரம் உடற்பயிற்சி செய்தார். இதனால் மயங்கி விழுந்து மாரடைப்பிற்கு ஆளானார். இதுபோல் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு என்பது உடற்பயிற்சிக்கும் பொருந்தும்.

உடற்பயிற்சிக் கூடத்தில் உள்ள பல்வேறு உடற்பயிற்சிக் கருவிகள் துணைக்கருவிகளால் கை கால்களில் காயம் ஏற்படும் என அஞ்சியும் உடற்பயிற்சிக் கூட வெருளி வருகிறது.

00

399. உடன் பிறந்தார் மகள் வெருளி – Anepsiaphobia

உடன் பிறந்தவர் மகள் மீதான அளவுகடந்த பேரச்சம் உடன்பிறந்தார் மகள் வெருளி.

உறவினர்கள் பகையாக மாறுவது இயற்கை.  சொத்துத் தகராறு, குடும்பத் தகராறு, வாய்ச்சண்டை ஏற்படும் சூழல்களில் உடன்பிறந்தார் மகள் மீது பேரச்சம் வருவது இயற்கை.

Anepsia என்னும் கிரேக்கச் சொல்லிற்கு உடன் பிறந்தார் மகள் என்று பொருள்.

00

400. உடன் பிறந்தார் மகன் வெருளி – Anipsiophobia

உடன் பிறந்தவர் மகன் மீதான அளவுகடந்த பேரச்சம் உடன்பிறந்தார் மகன் வெருளி.

உடன்பிறந்தார் மகள் வெருளியில் குறிப்பிட்டவாறு, சொத்துத் தகராறு, குடும்பத் தகராறு, வாய்ச்சண்டை ஏற்படும் சூழல்களில் உடன்பிறந்தார் மகன் மீது பேரச்சம் வருவது இயற்கை. உடன் பிறந்தவர் மகன்  மீதான அளவுகடந்த பேரச்சம் உடன்பிறந்தார் மகன் வெருளி.

Anipsio என்றால் உடன் பிறந்தார் மகன் எனப் பொருள்.

00

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்,

வெருளி அறிவியல் தொகுதி 1/5

++

சாதி எதிர்ப்புப் போராளி சிவகங்கை இராமச்சந்திரனாரின் முன் மாதிரிச் செயல்


ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன் 
     16 September 2025      அகரமுதல

பகுத்தறிவுச் சுடர் சிவகங்கை இராமச்சந்திரன் சாதிக்கு எதிராக வாய்ப்பேச்சு மட்டும் பேசவில்லை. பிள்ளைகள் சான்றிதழ்களிலேயே சாதியைக் குறிப்பிடவில்லை. தன் மகன் தியாகராசன் சான்றிதழில் அவர் சாதியைக் குறிப்பிடவில்லை. எனினும் பிராமணர் அல்லாதார்  எனக் குறிப்பிட்டுள்ளார்

 அவருடைய பள்ளி இறுதி வகுப்புச்சான்றிதழ் இதோ மேலே உள்ள சான்றிதழின்படி.



Inline image
Inline image
   
சிவகங்கை இராமச்சந்திரனாரின் 141 ஆவது பிறந்த நாள் நினைவாக .....சாதிப்பட்டத் துறப்பிற்கு வழிகாட்டிய முன்னோடி இராமச்சந்திரனார் – இலக்குவனார் திருவள்ளுவன்இலக்குவனார் திருவள்ளுவன்      13 September 2019      No Comment

சாதிப்பட்டத் துறப்பிற்கு வழிகாட்டிய முன்னோடி 
  ஒவ்வொருவரும் தத்தம் பெயர்களுக்குப் பின்னால் சாதிப் பெயர்களைப் பெருமையாக இணைத்துக் கொள்ளும் அவலமான வழக்கம் இந்தியாவில் உள்ளது. இத்தகைய போக்கு தமிழ்நாட்டை விடப் பிற மாநிலங்களில் பெரும்பான்மை இருப்பதையும் நாம் காணலாம். சான்றாக இராய், இராவ், எக்டே, ஐயர், கோசு, கௌடா, கௌர், சட்டர்சி, சர்மா, சிங், சோனி, சௌத்திரி, திரிவேதி, தேசாய், நம்பியார், நாயர், நாயுடு, பட், பட்டேல், மிசுரா, முகர்சி, மேனன், வர்மா, என ஆயிரக்கணக்கிலான சாதி ஒட்டுகளைக் கூறலாம்.

 பிற மாநிலங்களின் தலைவர்கள் சாதிப் பெயர்களாலேயே அழைக்கப்படும் நிலையும் உள்ளது. தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் என்றழைக்கப்பட்ட பெரியார் ஈ.வெ.இரா. ஆனார்; காமராசு நாடார் என அழைக்கப்பட்டவர் காமராசர் ஆனார். பொதுவாக இன்றைய தலைவர்கள் சாதிப்பெயர்களுடன் அழைக்கப்படுவதில்லை. பொது மக்களிலும் பெரும்பான்மையர் சாதிப் பெயர்களுடன் குறிக்கப்படுவதில்லை. சாதி வழக்கமும் சாதிச் சண்டைகளும் சில இடங்களில் சாதிக் கொடுமைகளும் இருப்பினும் பொதுவாக வெளிப்படையாகச் சாதியைக் குறிப்பிடும் பழக்கம் குறைவு.

  தமிழ்நாட்டில் மட்டும் இந்த மாற்றம் ஏற்படக் காரணம் என்ன? நீதிக்கட்சியின் தொண்டும் தொடர்ந்து திராவிட இயக்கங்கள் மேற்கொண்ட பரப்புரைப் பணிகளுமே இந்த நிலை மாற்றத்திற்குக்காரணம். நீதிக்கட்சியும் திராவிட இயக்கங்களும் மேற்கொண்ட அமைதிப்புரட்சியைப் பலர் உணரவில்லை.

  இத்தகைய அரும்பணிக்கு முன்னோடியாக வித்திட்ட ஆன்றோர் யார்? அவர்தாம் பகுத்தறிவுச் சுடர், தன்மதிப்பு இயக்கத் தலைவர், சிவகங்கைச் செம்மல் இராமச்சந்திரனார்.

  அனைவருக்கும் கட்டணமில்லாக் கல்வி! மாணவர்க்கு உணவு வழங்கும் திட்டம்! முதலான அவர் கொணர்ந்த தீர்மானங்கள் பல இன்றைக்குப் பகுதி அளவில் அரசுப்பள்ளிகளில் இலவசக்கல்வி, சத்துணவுத் திட்டம், என வெவ்வேறு பெயர்களில் செயலாக்கம் பெற்றுள்ளன. ஆனால், தொலைநோக்கில் இவற்றை அறிமுகப்படுத்திய ஆன்றோர் அவர்.

  “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் வள்ளுவர் வழியில் வாழ்ந்த அவர், “சாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே” என்ற அவலத்தைப் போக்க எடுத்த புரட்சிச் செயலே சாதி வால் இல்லாத் தமிழ்ப் பெயர்களைப் பார்க்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.

  செங்கற்பட்டில் தமிழ்மாகாணத் தன்மதி்ப்பு மாநாடு 1929 ஆம் ஆண்டு பிப்ரவரி 18, 19 ஆகிய இரு நாட்களும் நடைபெற்றது. இம்மாநாட்டில் வரலாற்றுச்சிறப்பு மிக்க இரு தீர்மானங்களைக் கொணர்ந்தார். அவைதாம் தமிழ் நாட்டில் பெரும்புரட்சியை ஏற்படுத்தின.

                திராவிட இயக்கங்கள் உருமாறி ஆட்சிச் சுவையில் மூழ்கியதால் இதில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இதனை ஒரு கட்சி அல்லது இயக்கத்திற்குரிய கொள்கையாகப் பாராமல், “சாதி இரண்டொழிய வேறில்லை” என்னும் தமிழ்நெறி பிறந்த மண்ணில் சாதிக் கொடுமைகளும் சாதிப்பிளவுகளும் அடியோடு அகல வேண்டும் என்னும் உறுதிப்பாட்டை அனைவரும் எடுகக்க வேண்டும். இது தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரின்பணி. தமிழ்நாட்டில் வாழும் அனைவரின் பணி.

  சிவகங்கைச் செம்மல் பெருநெருப்பாய்ப் பரவும் சிறு பொறியை விதைத்ததைப் பார்ப்போம்!

  மாநாடுகளிலும் சிறப்புக் கூட்டங்களிலும் இராமச்சந்திரனார் கொண்டு வந்த தீர்மானங்களும் தீர்மான முன்மொழிவு வழிமொழிவுச் சொற்பொழிவுகளும் ஆற்றிய தலைமை உரைகளும் சிந்தனையை வெளிப்படுத்திய சிறப்பு உரைகளும் என்றென்றும் போற்றப்படவேண்டியவையே. இருப்பினும் இந்தியா முழுவதும் வழிகாட்டியாகக் கொள்ளக்கூடிய இரண்டு தீர்மானங்களை இப்போது பார்க்கலாம்.

  சாதி வாலை வெட்டி எறியச் செய்த அத்தீர்மானங்கள் வருமாறு:

மக்கள் தங்கள் பெயர்களுடன் சாதி அல்லது வகுப்பைக் காட்டும் பட்டங்களை இன்று முதல் வி்ட்டுவிடவேண்டும் என இம்மாநாட்டின் மூலம் தமிழக மக்களைத் தீர்மான வடிவில் கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் சாதி அல்லது சமயப் பிளவுகளைக் காட்டக் கூடிய குறிகளை எதிலும் எங்கும் அணிந்து கொள்ளக் கூடாது என்பது எனது இரண்டாவது தீர்மான வடிவாகும்.
 சாதிப்பட்டங்களைத் தூக்கி எறிய வேண்டிய தீர்மானங்கள் குறித்து அன்றைக்கே அவர் பேசிய பேச்சு இன்றைக்கும் நமக்கு வழிகாட்டியாகும். அவ்வுரையின் பகுதி வருமாறு:

  “இத்தீர்மானங்களால் நாளையே நமக்கு நன்மை வந்து சேர்ந்துவிடப் போவதில்லை ஆயினும், நம் மனங்களில் ஒற்றுமை ஏற்படுத்த இது அவசியம். நம்மில் இத்தீர்மானம் சிலருக்குப் பயத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தலாம். யாரும் அஞ்ச வேண்டியது இல்லை. கோபமும் தேவை இல்லை. சுயமரியாதையைக் காட்ட வந்த நாமே நீண்ட காலமாக இந்தத் தவறுகளைச் செய்திருக்கக்கூடாது. இப்போதும் காலம் கடந்துவிடவில்லை.

   நமக்குப் பின்னால் நாடார், சேர்வை, பிள்ளை எனும் வால் பட்டங்கள் நம்மைப் பிரித்து வைத்துள்ளன. இவற்றை நாம் மறந்து விட்டால் நம்மில் வேறுபாடுகள் இருக்க வாய்ப்பில்லை அல்லவா? மக்களும் அதுபோல் நடந்து கொள்வார்கள். எதிர்காலப் பகுத்தறிவுச் சமூகம் நம்மை இதற்காக நிச்சயம் வாழ்த்திப் புகழும்.

  நாம் அனைவரும் பகுத்தறிவுவாதிகள். முதலில் நாம் ஒன்றாவோம். சாதி பேதங்களைக் களைந்து உலகக் குடிமக்கள் ஆவோம். பின்னர் இந்துக்களும் கிறித்துவர்களும் முகம்மதியர்களும் என்றே வித்தியாசப்பட்டு நிற்பர். இனிவரும் நாளில் உலகத்து மனிதர்கள் எனும் ஓர் அமைப்பிற்குள் அவர்களையும் கொண்டுவந்து சேர்க்கும் உரிமை நமக்கு வந்துவிடும்.

  மாநாட்டுத தலைவர் சௌந்தரபாண்டியன் அவர்களை ஒன்று கேட்டுக் கொள்வேன். இது முதல் இருந்த சேர்வை என்ற பட்டத்தை நான் தூக்கி எறிகிறேன். இனி நான் இராமச்சந்திரன் மட்டும்தான். என்னை யாரும் சேர்வை என்று அழைக்க அனுமதிக்க மாட்டேன். சௌந்திர பாண்டியன் அவர்களும் இனித் தனது பட்டமான நாடார் என்பதைத் தூக்கி எறிய வேண்டுகிறேன். மற்றவர்கள் அவரை நாடார் என இனி அழைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவர் கடமை. இது நாம் நம் எதிர்காலத்திற்குச் செய்யும் சேவை. சுயமரியாதைக்குத் தருகின்ற மரியாதையாகும்.”

   அன்றைக்கு இராமச்சந்திரனார் விதைத்த சிறு விதை இன்று பெரு ஆலமரமாய் தழைத்தோங்கி நிற்கிறது. எதிர்கால நோக்குடனும் சமநிலை மன்பதையை உருவாக்கும் இலக்குடனும் அவர் கொண்டு வந்த சாதிப்பட்ட ஒழிப்புத் தீர்மானங்களே இன்றைக்குத் தமிழ்நாட்டில் செயல்பாட்டாய் மலர்ந்துள்ளது.

                ஒடுக்கப்பட்டவர்களை உயர்த்துவதற்காகத் தம் உழைப்பையும் செல்வத்தையும் நல்கிய இராமச்சந்திரப் பெருமகனார், சாதிப்பற்றில் ஊறியிருந்த மக்களின் நிலையை உணர்ந்தும் அதே நேரம் முயன்றால் முடியாதது இல்லை என்ற நம்பிக்கையிலும்தான் நாளையே நமக்கு நன்மை வந்து சேர்ந்துவிடப் போவதில்லை எனப் பேசி உள்ளார். அவர் எண்ணியவாறு ஒரே இரவில் என்றில்லாமல் படிப்படியாக இன்றைக்கு அக்கனவு பெருமளவு நனவாகி உள்ளது.

   தமிழ்நாட்டில் சாதிப்பட்டங்களும் சாதி, சமயக் குறியீடுகளும் பெருமளவு குறைந்துள்ளன. ஆனால், இந்தியா முழுமையும் மக்கள் தத்தம் சாதி வாலை அறுத்தெறியும் – சாதி, சமயக் குறியீடுகளைத் துடைத்தெறியும் – நாளை விரைவில் கொணர நாம் பாடுபடவேண்டும். உச்ச நீதிமன்றத்தை அணுகி, நம் சம உடைமை அரசில் சாதிவாலுடன் உள்ளவர்கள் தேர்தலில் நிற்பதும் அரசின் பதவிகளை வகிப்பதும் அரசமைப்பிற்கு எதிரானது எனக் கூறித் தடை பெற வேண்டும். பிற மாநில அரசுகளையும் மத்திய அரசையும் இந்தியா முழுமையும் உள்ள தலைவர்களையும் அமைப்பினரையும் பொதுமக்களையும் அணுகி, மனமாற்றம் செய்து, ஒன்றே குலம் என்னும் நிலையை விரைவில் அடைய வேண்டும். இராமச்சந்திரனார் கண்ட கனவின்படி உலக மனிதர்கள் இயக்கம் என்னும் சாதி, சமய, நிற, பிற வேறுபாடற்ற உலகம் அமைய வேண்டும்.

   தமிழ்நாட்டில் கலை உலகைச் சார்ந்த இறக்குமதியாளர்கள் சாதி வாலுடன் அறிமுகப்படுத்தப் படுகிறார்கள். சில தலைவர்கள் சாதி வாலுடனே இயங்குவதைப் பெருமையாக எண்ணுகிறார்கள். சாதி வாலுடன் உழலுபவர்களைத் தூக்கி எறியும் மனப்பான்மையை நாம் பெறவேண்டும்.  “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் தமிழ் நெறிப்படி உலகம் ஒன்றே என்னும் நிலையை நாம் அடையப் பாடுபட வேண்டும். அப்பொழுதுதான் பாரெங்கும் நிகழும் படுகொலைகளை நிறுத்த இயலும். அனைவரும் இணை என்னும் நிலையை அடைய முடியும். எல்லார்க்கும் எல்லாம் என்னும் உயர்வை எட்ட முடியும்.

                புரட்டாசி 02, தி.பி. 1915 / 16.09.1884  அன்று தோன்றி மாசி 15, தி.பி. 1964 / 26.02.1933 அன்று மறைந்த இராமச்சந்திரப் பெருமகனார் வாழ்ந்த காலம் குறைவுதான். ஆனால், பகுத்தறிவுப் பாதையிலும் தன்மதிப்பு உணர்விலும் ஒவ்வொருவர் செயல்களிலும் அவர் வாழ்ந்து கொண்டுள்ளார். அவரது புவி வாழ்வு குறைவாக இருந்தாலும் புகழ் வாழ்வு என்றென்றும் தொடரும். அவரது புகழ்வாழ்வில் நம்மையும் இணைத்துக் கொள்ள சாதி என்ற சொல்லை அறியாத உலகை நாம் ஆக்குவோம்!

– இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி, 11.09.2019



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages