காணொளி: வாசுகி பாம்பு என்று பெயர் வைத்தது சரியா?

35 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jun 23, 2024, 5:21:58 AM (7 days ago) Jun 23
to மின்தமிழ்
வாசுகி பாம்பு என்று பெயர் வைத்தது குறித்து என்னுடைய கருத்து இந்தக் காணொளியில் ...
அறிவுச்சுடர் யூடியூப் சேனலில்
அவர்களுக்கு என் நன்றி
vasuki.jpeg
--------------------------------------------------------------------

தேமொழி

unread,
12:01 AM (13 hours ago) 12:01 AM
to மின்தமிழ்
வாசுகி பாம்பு என்று பெயர் வைத்தது சரியா?

 — முனைவர் தேமொழி

vasuki.jpg
சற்றொப்ப 47 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருந்த, சுமார் 47 அடி நீளம் கொண்ட ஒரு  அழிந்து போன பாம்பு இனத்தின் தொல் படிமம் ஒன்றை குஜராத் கட்ச் பகுதியின் சுரங்கத்தில் கண்டறிந்த ஐ ஐ டி நிலவியல் ஆய்வாளர்கள் தேப்ஜீத் தத்தா, சுனில் பாஜ்பாய்  அதற்கு வாசுகி இண்டிகஸ்  (Vasuki indicus)என்று பெயரிட்டு உள்ளார்கள், இதுதான் இதுவரை நாம்  அறியக் கூடிய பாம்புகளிலேயே மிக நீளமானதும் அதிக எடை கொண்டதும் ஆகும்.  20 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தொல்படிமம் குறித்த  ஆய்வுக்கட்டுரை அறிவியல் ஆய்விதழில் அண்மையில் வெளியானதும் சமூக வலைத்தளங்களில் விவாதங்களும் சூடு பிடித்தன. 'வாசுகி' என்பது புராணங்களில் இடம்பெறும் பாம்பின் பெயர், சிவனின் கழுத்தில் சுற்றப்பட்டு இருக்கும் பாம்பின் பெயர், இந்தப் பாம்பைக் கயிறாக வைத்து மந்திரமலையை மத்தாக வைத்து தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தார்கள் என்பது புராணக் கதை.  இந்தியாவில் இக்கதையைத் தெரியாதவர் இருக்கவே வழியில்லை.  ஆனால் இந்தியா போன்ற நாட்டில் அறிவியல் கருத்துக்களுக்குப் புராணக்கதை பெயர் சூட்டலாமா என்ற கேள்விதான்   தற்போது விவாதமாக மாறியிருக்கிறது.

 vasuki2.jpg

வாசுகி இண்டிகஸ் என்று  பெயர் வைப்பது சரியா தவறா ? இந்தக் கேள்விக்கு அறிவியல் படித்தவர்கள் குறிப்பாக விலங்கியல்  படித்த என்னைப் போன்றவரோ, அல்லது  ஆய்வுக்கட்டுரை எழுதிய ஐஐடி ஆய்வாளர்கள் போல நிலவியல் படித்தவரோ இதில் எந்தக் குற்றமும் இருப்பதாகச் சொல்லவே மாட்டார்கள்.  ஏனெனில் இவ்வாறுதான் பலகாலமாக அறிவியல்  ஆய்வாளர்கள் பெயர் சூட்டி வருகிறார்கள்.  விலங்குகளுக்கு மட்டும் அல்ல, பாறைகளுக்கும் இடங்களுக்கும் கூட புராணப் பெயர்கள் வைப்பது அறிவியல் ஆய்வாளர், தொல்லியல் ஆய்வாளர்  மரபு.  அந்தக் கண்டுபிடிப்பு அப்பகுதியின் தொன்மையான ஒன்றை நினைவூட்டலாம், அல்லது அப்பகுதியின் சிறப்பாக இருக்கலாம் என்பது மட்டுமே காரணமாக இருக்கும். அந்த அடிப்படையில் நோக்கினால் ஆய்வாளர்கள் மரபு எதையும் மீறவில்லை என்பது தெரியும்.

குறிப்பாக விலங்கியல் படித்தவர்கள் சைக்லோப்ஸ், மெடுசா என்று கிரேக்கப் புராணங்களில் வரும் பாத்திரங்களின்  பெயர்களை உயிரினங்களுக்கு வைத்துள்ளதை முதலாம் ஆண்டு கல்லூரிப் படிப்பிலேயே தெரிந்து கொண்டிருப்பார்கள்.  ஒற்றைக்கண், பாம்புகள் தொங்கும் தலை போன்ற தோற்றம் கொண்ட உயிரினங்களுக்கு இவ்வாறு கிரேக்கப் புராணப் பாத்திரங்களின் பெயர் கொடுக்கப் பட்டிருக்கிறது.  

அது மட்டுமல்ல நிலவியல் ஆய்வாளர்கள் கூட இந்த மரபைப் பின்பற்றி புராணக்கதைகளில் வருபவர்களின் பெயர்களை மலைகளுக்கு, மலை உச்சிகளுக்கு, பாறைகளுக்கு வைத்துள்ளார்கள்.  கிரேக்க ரோமானிய புராணக் கதைகளில்  வருபவர்கள் பெயர்கள் மட்டுமல்ல இந்தியப் புராணக் கடவுளர்களின் பெயர்களையும்  வைத்துள்ளார்கள்.  இந்தியக் கடவுளர்களின் பெயர்களை  அமெரிக்காவிலேயே கூட வைத்துள்ளார்கள்.

இயற்கையாக அமைந்த ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாகக் கூறப்படுவது கிராண்ட் கேன்யான் என்ற மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு. இது அமெரிக்காவின்  அரிசோனா மாநிலத்தில் இருக்கிறது என்பதை நாம் அறிவோம்.  அதன் தென் விளிம்புப் பகுதியில்  இருக்கும் 20 க்கும் மேற்பட்ட மலையுச்சி முகடு பாறைகளுக்கு உலகின் புராண தொன்மக் கதைகளில் வருபவர்களை, அக்கதைகளில்  குறிப்பிடும் பெயர்கள் தான் வைக்கப்பட்டுள்ளது.  

இந்த மரபைத் தொடங்கி வைத்தவர் அமெரிக்க இராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய கிளாரன்ஸ் டட்டான்  (Clarence Dutton) என்ற நிலவியல் ஆய்வாளர், நிலவியல் அளவையாளர்.  இவர் இராணுவப் பணிக்குப்  பிறகு 19ஆம் நூற்றாண்டில் கிராண்ட் கேன்யான் பகுதியில் நில அளவை (mapping survey) செய்யும் பணியை மேற்கொண்டார். 1870களிலேயே இவர் நிலவியல் குறிப்புகளுக்குப் பெயர் வைப்பதில் புராணக் கதைகளின் வரும்  பெயர்களைத் தேர்ந்து எடுத்தார்.  அவருக்குப் பின் அந்தப் பணியை மேற்கொண்டவர்களும் அந்த முறையையே பின்பற்றினர்.

இப்பொழுதும்  கிராண்ட் கேன்யான் பகுதியில்  இருக்கும் மலைமுகடுகள் டெம்ப்பிள்  அல்லது கோயில் என்றுதான் குறிப்பிடப்படுகிறது. இந்து சமய புராணக் கதைகளில் கூறப்படும் சிவா, விஷ்ணு, பிரம்மா ஆகியோர் பெயர்கள் முகடுகளுக்கும் பாறைகளுக்கும் சூட்டப்பட்டுள்ளது. அது போல ராமர், கிருஷ்ணர் பெயர்களும் உண்டு.  இந்தியாவின் புத்தர் பெயரும் சூட்டப்பட்டுள்ளது.  ஆனால் அவர் உண்மையில் வாழ்ந்த ஒரு வரலாற்று மனிதர்.  இருப்பினும் அனைத்துச் சமயங்களையும் சமமாகப் பாவிக்கும் நோக்கில் செய்துள்ளார்கள் என்பது இதற்குச் சான்று.  இந்து சமயப் புராணங்கள் வரலாற்று மனிதர்கள் என்று மட்டும் அல்ல கிரேக்க ரோமானிய சோரேஸ்டர் சமய கடவுளர்கள் ஜூபிடர், அப்பல்லோ, டயானா, சாலமன், குயின் ஷீபா, ஐசிஸ், கன்ஃபியூசியஸ் இப்படிப் பல சமயங்கள் சார்ந்த பெயர்களைப் பார்க்கலாம். சமய நல்லிணக்கம் போல அமைந்துள்ள பெயர்கள் இவை.  எப்படி அமெரிக்க மண்ணில் இந்தப் பெயர்களை வைக்கப் போயிற்று என்று யாரும் முணுமுணுத்ததில்லை.  அவை எல்லாம் உலக வரலாற்றில் பண்பாட்டில் நம் முன்னோர்களின் வாழ்வில் ஒரு பகுதி என்று புரிந்து கொள்வது இதற்கு அடிப்படையாக உள்ளது.  யாரும் இதையெல்லாம் எதிர்ப்பதுமில்லை, கொண்டாடுவதுமில்லை.

அயல்நாட்டிலிருந்து வருபவர்களும் நமது நாட்டையும் இங்கு மதித்துள்ளார்கள் என்று மகிழ்ச்சி அடையக் கூடும்  அவ்வளவுதான்.  மற்ற உணர்வுகள் இருக்காது. ஏனெனில்  சமயம் என்பதில் உலகில் பலர் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சி அடைந்து விட்டார்கள்.  புராணக் கடவுளரையும் அந்தச் சமயங்களையும் விட்டு விலகி நன்னெறி ஆன்மிக வழிகாட்டலுக்கு அவற்றைப் போதித்த வழிகாட்டிகளையும் அவர்களின் போதனைகளையும் பின்பற்றத் தொடங்கி விட்டார்கள்.  ஆனால் இந்தியாவில் இது போன்ற நிலை இல்லை.  மக்கள் இன்னமும் புராணக் கதைகளுக்கு அடிமை, அந்தக் கடவுளரை இன்னமும் வணங்குகிறார்கள். பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று நம்புகிறார்கள்.  அதனால் அந்த நம்பிக்கையில் மக்கள் தெய்வ பக்தி  என்று எதையும் ஆராய்வதில்லை.  சமயம் குறித்து எதைச் சொன்னாலும் உண்மை என நம்புவதையும், கேள்வி எதுவும் கேட்பது தெய்வக்  குற்றம் என்ற மனநிலையுடன், கடவுள் என்று எதைக் காட்டினாலும் வணங்கும் மன நிலையிலும் இருக்கிறார்கள்.    

அந்த நிலையில் இது போன்று இந்தியப் பண்பாட்டின் ஒரு பகுதி எனப் பெயர் வைப்பது சரியல்ல. மரபுப்படி தவறல்ல என்றாலும், இது பொறுப்புணர்வு அற்ற செயல். இதை வைத்து சமய அடிப்படையில் மக்களை ஏமாற்றும் நிலைதான் அதிகரிக்கும்.

வாசுகி பாம்பு பற்றிய செய்தி அறிவியல் தளங்களில் பகிரப்பட்ட பொழுது வாசகர்கள் வைத்த கேள்விகளையும், பொதுவான செய்தித் தளங்களில் வந்த கருத்துகளையும் ஒப்பிட்டாலே உண்மை விளங்கும்.  

அறிவியல் செய்தியாகப் படித்தவர்கள், இது நச்சுப் பாம்பா? எதை வைத்து நச்சுப் பாம்பு என்று சொல்ல முடியும், பாம்பின் தலை கிடைத்ததா? பல்  கிடைத்ததா ? என்ன உயிரினங்களை அது  சாப்பிட்டிருக்கும், தாவரம் சாப்பிடும் பாம்பா  அல்லது பிற விலங்குகளைத் தின்று இருக்குமா?  அப்பொழுது அது வாழ்ந்த பகுதியில் உணவாகக் கூடிய வகையில்   என்னென்ன சிறு விலங்குகள் வாழ்ந்தன .. இது போன்ற கேள்விகள் வாசகர்கள் பகிர்ந்து இருந்தார்கள்.

இந்திய மக்கள் இருந்த சமூக வலைத் தளங்களில். புராணத்தில் கூறப்பட்ட வாசுகி பாம்பு இருந்ததற்குச் சான்று கிடைத்துவிட்டது.  புராணங்களில் சொல்லப்பட்டது உண்மை, வாசுகி பாம்பு உண்மை என்றால், புராணங்களும் உண்மைதானே என்ற வகையில் கருத்துகள் பகிரப்பட்டு வந்தது. இவ்வாறு பெயர் வைப்பதன் பின்னணியை எவரும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. ஏற்கனவே இந்திய அறிவியல் ஆய்வுக் கருத்தரங்குகள் சர்க்கஸ் போல இருக்கிறது. புராணத்தில் ஏவுகணைகள், விமானங்கள்  பிளாஸ்டிக் சர்ஜரி, இன்விட்ரோ பெர்டிலைசஷன்  என்றெலாம் விவாதிக்கிறார்கள். இந்த அறிவியல் ஆய்வுக் கருத்தரங்குகளில் அறிவியலே இல்லை என்று நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி  வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல் இனி  இந்திய அறிவியல் கருத்தரங்கங்களில்  பங்கேற்பதில்லை என்று அறிவித்தார், அயல்நாட்டு அறிவியல் அறிஞர்களிடம் இந்திய அறிவியல் ஆய்வுக் கருத்தரங்கங்களுக்கு மதிப்பில்லாமல் போயுள்ளது.

இந்தியாவில் அறிவியல் ஆய்வாளர்களே இந்த அழகில் இருந்தால் சராசரி மக்கள் எப்படி இருப்பார்கள் ?  பள்ளியில் படிக்கும் அறிவியல் பாடங்கள் மதிப்பெண் வாங்குவதற்கு மட்டும் என்ற நடைமுறையில் உள்ளார்கள்.  உலக அளவில் அறிவியல் ஆய்வாளர்களிடம் இனி இவ்வாறு புராணப் பெயர்களை இந்தியப் பகுதி கண்டுபிடிப்புகளுக்குச் சூட்டாதீர்கள் என்று நாம் சொல்ல முடியாது. அப்படி ஒரு கோரிக்கை வைப்பதே அவமானகரமான செயல்.  அறிவியல் உலகம் நம்மைப் பார்த்துச் சிரிக்கும். நம் பள்ளியில் படிக்கு அறிவியல் மாணவர்களை ஏளனமாக   அயல்நாட்டினர் பார்க்கும்படி நாமே நடக்க முடியாது.  நம் நாட்டு அறிவியல் ஆய்வாளர்கள்தான் பொறுப்புடன் நம் நாட்டிற்கு  இந்தப் பெயர் சூட்டும் முறை ஒத்து வராது, இந்து சமய தீவிரவாதம் ஏற்கனவே அதிகரித்து வருகிறது என்று  புரிந்து செயல்பட வேண்டும்.

Article 51a (h) of India's Constitution which explains the Fundamental duties Citizens;
51A. Fundamental duties- It shall be the duty of every citizen of India- to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform (h).
இந்தியாவின் சட்ட வரையறை மக்கள் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவர்கள் கடமை என்று கூறுகிறது.  ஆனால் நாம் ஓர் எட்டுக் கூட அதை நோக்கி வைக்கவில்லை.

ஓர் எளிய வழியாக, மக்களைப் பொய்யான புராணக் கதைகளிலிருந்து விடுவிக்க, பேச்சு வழக்கில் புராணக் கதை  ஒப்புமைகளை நம்மை அறியாமலே பயன்படுத்துவதைக் கூட நாம் கவனமாகக் கைவிட வேண்டும்.  Herculean task என்று பிறர் சொன்னால் அதன் தாக்கம் எதுவும் இன்றைய இத்தாலி மக்களிடம் இருக்காது.  "Men are from Mars, women are from Venus"  என்றால் அது சொல்லும் அடிப்படைக் கருத்தாக்கம் மக்களால் புரிந்து கொள்ளப்படும். நம் நாட்டில் இன்னமும் செய்வாய் தோஷம் மீது நம்பிக்கை கொண்ட மக்கள் உள்ளார்கள். இன்னமும் அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டி பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லும் நாடு இந்தியா.   அதனால் நாம்
— வரிசை 'அனுமார் வால்' போல் நீண்டு கிட்டே போவுது
— கேட்டதைத் தரும் 'அட்சய பாத்திரம்'  
— அந்த ஆளு சரியான 'அவதாரம்'
— எனக்கு நீதான் 'எமன்'
— ஏன் 'சனியனே' உயிர வாங்குற
— எப்பப் பார்த்தாலும் 'கும்பகர்ணன்' மாதிரி என்ன தூக்கம் ?
— ஆமா, இவரு பெரிய 'கர்ண பரம்பர, யாரு  கேட்டாலும் அள்ளிக் கொடுத்துடுவாரு
— பொண்ணா இது! சரியான மூதேவி
என்பது போல இன்னும் கூட நிறைய இருக்கின்றன, உங்களுக்கும் பல நினைவிற்கு வரலாம்.
பேச்சில் எழுத்தில் கவனமாக இவற்றை நீக்கிவிட முயன்றால் அது கூட மக்களுக்குப்  புராணக் கதைகளை நினைவூட்டாமல் இடைவெளியை அதிகரிக்கக் கூடும்.  

அதாவது  எடுத்துக்காட்டாக  - இந்தக் கட்டுரைக்கு;  வாசுகி  அது இருக்கும் இடத்திலிருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே என்று தலைப்பிட்டால் அது புராணத்தை நினைவூட்டும், கருடா சௌக்கியமா? என்ற புராணக் கதை சொல்லாடலை நினைவூட்டும். அவ்வாறு  ஒப்பிடாமல் இருப்பது போன்ற முயற்சியை மேற்கொள்வதை நாம் செய்ய வேண்டும்.    

இந்த ஜூன் 2024இல்,  அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு டைனசார் தொல்லியல் படிமத்தின் வகைக்குப் பெயர் லோகிசெராடாப்ஸ் என்று பெயர் வைத்துள்ளார்கள்.  லோகிசெராடாப்ஸ் ரங்கிஃபார்மிஸ் (Lokiceratops rangiformis) என்பது அதன் பெயர்.  ட்ரைசெராடாப்ஸ்(Triceratops) என்ற டைனசார் தோன்றுவதற்கும்  சுமார் 12 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவை இவை. ட்ரைசெராடாப்ஸ் என்றால் தலையில் மூன்று கொம்புள்ள டைனசார்  என்று பெயர். அது போல இதன் பெயர் லோகிசெராடாப்ஸ். இதுவும் வாசுகி போலவே,  புராணக் கதையின் அடிப்படையில் வைக்கப்பட்ட ஒரு பெயர்தான்.  இது உலகின் வேறு பகுதி.   நார்ஸ் மக்களின் புராணக் கதையில் குறிப்பிடப்படும் தலையில் கொம்பு உள்ள கடவுளின்  பெயர் லோக்கி (Loki, a Norse God). அந்த லோக்கி என்ற நார்ஸ் கடவுள் தலையில் கொம்புடன் இருப்பது போல இந்த  டைனசாரும் அதே போன்று தோற்றத்தில்  தலையில் கொம்புடன் இருப்பதால் இதற்கு லோகிசெராடாப்ஸ் என்று பெயர் வைக்கிறார்கள் தொல்லியலாளர்கள்.  இது தொல்லியலாளர்கள் தங்கள் வழக்கப்படி  பெயரிடும் மரபுதான்.

இந்த லோக்கி என்ற  புராண நார்ஸ் கடவுள் குறித்து படங்கள் காமிக்ஸ் எல்லாம் முன்னர்  வந்திருக்கிறது, நம் ஊர் அனுமார் வைத்து திரைப்படங்கள் காமிக்ஸ் வருவது போல.  ஆனால் மக்கள் எல்லோருக்கும் தெரியும்  இந்த டைனசார்கள் மனிதர்கள் பூமியில் தோன்றும் முன்னரே பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி வாழ்ந்த உயிரினங்கள் என்று.  அதே போல நார்ஸ் மக்களின்  லோக்கி பற்றி புராணக் கதையும்  ஒரு உருவாக்கிய கட்டுக் கதை என்பதும் தெரியும், மக்கள் அதனால் ஆகா..  லோக்கி  புராணக் கடவுள் உண்மை என்று எக்காலமும் சொல்லவே போவதில்லை.

அதையே நம் நாட்டு மக்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். இந்த லோக்கிசெராடாப்ஸ் போலவே  பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்,   பூமியில் மனிதர்கள் தோன்றுவதற்கு முன்னரே தோன்றி மறைந்ததுதான்  வாசுகி இண்டிகஸ்  என்று பெயரிடப்பட்டுள்ள பாம்பும்.  சரியாகச் சொல்ல வேண்டும் என்றால்  சுமார்  47 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு  ஈயோசீன் காலத்தில் வாழ்ந்த பாம்பு அது.  இது ஹோமோ சேப்பியன்ஸ் என்ற நம் மனித இனம் தோன்றுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே  பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே அழிந்து மறைந்த பாம்பு வாசுகி இண்டிகஸ்.  

ஆனால் நம் மக்கள், பாம்புக்கு வாசுகி என்ற பெயர் வைத்தவுடன் அது உண்மையாக இருக்கும் புராணத்தில் வருவது எல்லாம் உண்மை என்று பல வலைத்தளங்களில் பேசத் தொடங்கினார்கள்.  இன்னமும் அதே புராணக் கடவுளர்கள் கொண்ட மதத்தைப் பின்பற்றிக் கொண்டிருக்கும் நம் இந்திய மக்கள் இதைப் புரிந்து கொள்ளப்போவதில்லை, அவர்கள்  தவறான திசையில் சொல்லாம் என்பதை நாம் புரிந்து கொள்ள  வேண்டும்.  நமக்கு அளவு சரியில்லாத சட்டையை நாம் போட விரும்பாதது போல, நம் நாட்டிற்கு, நமக்குப் பொருந்தாத பெயரிடும் முறை சரியில்லை என்று நாம் தவிர்த்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அது ஒரு பொறுப்பற்ற செயல்.  அடுத்த நாட்டு விஞ்ஞானிகள் போல பெயரிட முற்பட்டால்  புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது என்பது போலவோ, அல்லது கான மயிலாடக் கண்டிருந்த வான் கோழி போலவோ அதன் விளைவு இருக்கும்.

வெறும் முன்நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான்  ஹோமோ சேப்பியன்ஸ் மனித இனம் தோன்றத் தொடங்கியதாக மனிதப் பரிணாம வளர்ச்சியின் காலவரிசை கூறுகிறது. அதாவது இது ஒரு மில்லியன் என்பதைவிடவும் மிக மிக அளவு குறைவு.  இந்த மனிதர்கள் எங்கே  47 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வாசுகி பாம்பைப் பார்த்துக் கட்டுக்கதை உருவாக்க  முடியும்.  ஆனால் அறிவியல் கால வரிசை நம் நாட்டில் பலருக்குப் புரிவதில்லை. கால இடைவெளி பற்றியும் தெரிவதில்லை. எனவே, வாசுகி இண்டிகஸ் மற்றும் ஹோமோ சேப்பியன்ஸின் முதல் தோற்றத்திற்கு இடையே உள்ள  கால  வேறுபாடு தோராயமாக 46 இல் இருந்து 47 மில்லியன்.   வாசுகி இண்டிகஸின் காலத்தில், மனிதர்கள் தோன்றவே இல்லை. வாசுகி இண்டிகஸ் வாழ்ந்த காலத்தில்  பாம்புகளுடன், பூச்சிகள், ஆமைகள் மற்றும் முதலைகள் போன்ற பிற ஊர்வனவும்தான் பூமியில் வாழ்ந்தன.  ஆனால்,  மனிதர்கள் அக்காலத்தில்  இருந்ததே இல்லை என்பதுதான் அறிவியல் உண்மை.


சான்றாதாரங்கள்:
1. D.Datta & S. Bajpai. 2024. Largest known madtsoiid snake from warm Eocene period of India suggests intercontinental Gondwana dispersal. Sci Rep 14, 8054; doi:10.1038/s41598-024-58377-0
https://www.nature.com/articles/s41598-024-58377-0

2.  Vasuki indicus: உலகின் மிக நீளமான பாம்புக்குப் புராணப் பெயர் - ஆன்மிக நூல்கள் என்ன சொல்கின்றன? மு.ஹரி காமராஜ். ஏப்ரல் 23, 2024, விகடன்.
https://www.vikatan.com/spiritual/gods/vasuki-indicus-snakes-worship-in-india-and-mythological-references

3.  Loewen MA, Sertich JJW, Sampson S, O’Connor JK, Carpenter S, Sisson B, Øhlenschlæger A, Farke AA, Makovicky PJ, Longrich N, Evans DC. 2024. Lokiceratops rangiformis gen. et sp. nov. (Ceratopsidae: Centrosaurinae) from the Campanian Judith River Formation of Montana reveals rapid regional radiations and extreme endemism within centrosaurine dinosaurs. PeerJ 12:e17224 https://doi.org/10.7717/peerj.17224
---
Reply all
Reply to author
Forward
0 new messages