கல்லூரி மாணவர்களுக்கு வரலாறு சார்ந்த விழிப்புணர்வு மற்றும் ஊக்கம் அளிக்கும் நோக்கத்தில் இன்று (09-12-2025) அரசு கலைக் கல்லூரி, நந்தனம், சென்னையில் அக்கல்லூரியின் வரலாற்றுத்துறை சார்பாகப் பன்னாட்டுக் கருத்தரங்கம் அரங்கேற்றப்பட்டது. இக்கருத்தரங்கத்தின் ஒரு சிறப்புரையாக "டாக்டர் சேவியர் எஸ். தனிநாயகம் அவர்களின் உலகளாவிய தமிழ் பங்களிப்பு" என்னும் தலைப்பில் முனைவர் க. சுபாஷிணி, தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு, அவர்கள் உரையாற்றினார். இவ்வுரையானது தமிழ் மரபு அறக்கட்டளையின் வெள்ளி விழா ஆண்டில் தனிநாயகம் அவர்களின் தமிழ்ப்பணிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று முன்மொழிந்த செயல்பாடுகளில் ஒன்றாகும்.
மற்றொரு சிறப்புரையாக முனைவர் கௌதம சன்னா, எழுத்தாளர் மற்றும் வழக்கறிஞர் (சென்னை உயர்நீதிமன்றம்), அவர்கள் "மனித உரிமைகள் பிரகடனமும் இந்திய மனிதனும்" என்கிற தலைப்பில் ஓர் எழுச்சியுரையை வழங்கினார். நாளை (10-12-2025) உலகமெங்கும் மனித உரிமைகள் தினமாகக் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. சன்னா அவர்களின் உரை இக்கொண்டாட்டத்தின் பின்னணியை விளக்கம் வகையாக அமைந்தது.
முன்னதாக சிறப்புரையாளர்களை வரவேற்ற கல்லூரியின் முதல்வர் முனைவர் தங்கராஜன் அவர்கள் மற்றும் வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் பீர்முகமது அவர்கள் கல்லூரியின் தொடர்ச்சியான செயல்பாடுகள் மற்றும் இம்மாதிரியான கருத்தரங்குகள் அரங்கேற்றுவதன் வழியாக மாணவர்கள் மத்தியில் கல்லூரியின் மதிப்பு உயர்கிறது என்று வெளிப்படுத்தினார்கள்.
சுபாஷிணி அவர்கள் அறிவுரையாகக் கூறும்போது கல்விதான் மாணவர்களை படிப்படியாக உயர்த்தும் என்று தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்தார். அதிலும் குறிப்பாக 20 முதல் 30 வயது வரையில் கடின உழைப்பு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எடுத்துரைத்தார். மேலும் தனிநாயகம் அவர்களை உதாரணமாகக் குறிப்பிடும்போது அவர் வழியில் அவர் செய்ததைக் காட்டிலும் இன்று நாம் அதிகமான தமிழ்ப்பணிகள் மேற்கொள்ள முடியும் அதற்கான வாய்ப்புகள் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
ஒரு முன்னால் மாணவனாகத் தான் இக்கல்லூரியில் வரலாற்றுத்துறைக்காக உரையாற்றுவது பெருமையாக உணர்வதாக சன்னா அவர்கள் நெகிழ்ச்சி அடைந்தார். மேலும் மனித உரிமைகள் பற்றிப் பேசும்போது நாம் எல்லோரும் மனிதர்கள் தான் என்று நமக்கும் நாம் ஐக்கிய நாடுகள் சபையின் வாயிலாக அடிப்படை உரிமைகளைப் பிரகடனப்படுத்துவதற்குப் பின்னால் 2000 ஆண்டுக்கால உழைப்பு இருப்பதைத் தெரியப்படுத்தினார். அவ்வகையில் அம்பேத்கர் இந்தியாவை மனிதர்கள் வாழும் நாடாக மாற்ற வேண்டும் என்பதற்காக வகுத்த சட்டத்திட்டங்களைப் பற்றி சன்னா அவர்கள் எடுத்துக்கூறினார்.
நல்ல உரையாடல்களுடன் கூடிய இக்கருத்தரங்கில் பங்கேற்றது சிறப்புரையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. பல்வேறு துறைசார்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இறுதிவரை ஆர்வத்தோடு பங்கேற்று இக்கருத்தரங்கத்தின் மூலம் சிறந்த வரலாற்றுத் தகவல்களை அறிந்து கொண்டனர்.
ஜெரின்