திருக்குறளை எரித்தார் பாண்டித்துரை தேவர்

106 views
Skip to first unread message

Kumaran Malli

unread,
Oct 12, 2008, 11:08:37 PM10/12/08
to minT...@googlegroups.com
பாண்டித்துரை தேவர் திருக்குறள் நூற்களை வாங்கி அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தினார் என்று ஒரு நண்பர்  முன்பொரு பதிவின் பின்னூட்டத்தில் சொன்னதைப் படித்தபோது மிக்க வியப்பாக இருந்தது. அதனால் அந்த நிகழ்ச்சியைப் பற்றித் தேடிப் படித்தேன். நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற தமிழ்ப்புலவர் வாழ்ந்த மதுரையில் பிழை மலிந்த திருக்குறள் பதிப்பு என்றால் அவற்றை எரித்ததும் பொருத்தமான தமிழ்த் தொண்டே.

மதுரையில் வாழ்ந்த ஸ்காட் துரை என்ற ஒரு ஆங்கிலேய வழக்கறிஞர் தமிழ்மொழியில் ஆர்வம் கொண்டு தமிழ் இலக்கணத்தைக் கொஞ்சம் கற்றுக் கொண்டு தமிழ் இலக்கியங்களையும் படிக்கத் தொடங்கினார். தமிழ் அணி இலக்கணம் பேசும் எதுகை மோனைகளில் பெரும் ஈடுபாடு கொண்டு திருக்குறளில் எதுகை மோனை சரியாக அமையாத இடங்களில் அவற்றைத் திருத்தி இவரே ஒரு புதிய திருக்குறள் பதிப்பை வெளியிட்டார். 'சுகாத்தியரால் (ஸ்காட்டால்) திருத்தியும் புதுக்கியும் பதிப்பிக்கப்பட்ட குறள்' என்பது அந்த புதிய திருக்குறள் நூலுக்கான தலைப்பு.

ஒரு முறை நான்காம் தமிழ்ச்சங்கம் தந்த வள்ளலாம் பாண்டித்துரை தேவரை இந்த ஸ்காட் துரை சந்தித்து தாம் செய்த இந்த 'அரிய' பணியைப் பற்றிச் சொல்லி தாம் பதிப்பித்த நூலின் ஒரு பிரதியையும் கொடுத்தார். அந்தப் பதிப்பில் இருந்த குறைபாடுகளைக் கண்டு மிகவும் மனம் நொந்தார் பாண்டித்துரை தேவர்.

திருக்குறளின் முதல் குறட்பா இப்படி திருத்தப்பட்டிருந்தது.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
உகர முதற்றே உலகு


இப்படியே நூல் முழுக்க நெடுகவும் பெரும்பிழைகள் இருந்தன. தன் சினத்தை மறைத்துக் கொண்டு தேவர் ஸ்காட்டிடம் இந்த நூலின் பிரதிகள் மொத்தத்தையும் தாம் வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். ஸ்காட்டும் தேவர் தன் அரிய பணியைப் பாராட்டி அதில் மகிழ்ந்து எல்லாவற்றையும் வாங்குவதாக எண்ணிக் கொண்டு தன்னிடம் இருந்த எல்லா பிரதிகளையும் கொண்டு வந்து கொடுத்தார். முன்னூற்றுச் சொச்சம் பிரதிகளுக்கு பிரதி ஒன்றிற்கு ஒரு ரூபாய் வீதம் விலை கொடுத்து எல்லாவற்றையும் வாங்கிய தேவர், இராமநாதபுரம் சென்ற பின் அந்த புத்தகக் கட்டை கொண்டு வரச் செய்து எல்லாவற்றையும் தம் கண் முன் தீயிட்டுக் கொளுத்த வைத்தார்.

'இப்பித்துக்கொள்ளியிடம் எஞ்சியிருந்த முன்னூறு பிரதிகளும் அறிஞர் பாற் சென்று மனத்துன்பம் விளைக்காதிருப்பதற்கும் அறியாதார் திருக்குறளை தாறுமாறாக பாடமோதாமல் இருப்பதற்கும் இது தான் தக்க பரிகாரம்' என்று எல்லோரிடமும் சொல்லி மகிழ்ந்தார் தேவர்.

***

இந்த நிகழ்ச்சியைப் படித்தவுடன் சில எண்ணங்கள் தோன்றின. ஸ்காட் துரையின் தமிழார்வம் மெச்சத் தகுந்ததே. அந்த ஆர்வத்தால் தமிழ் கற்றுக் கொண்டது பாராட்டத் தகுந்தது. அது போல் தற்காலத்தில் மக்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டும் என்று பதிவர்கள் பலரும் கொள்ளும் ஆர்வமும் அதில் அவர்கள் செலவிடும் நேரமும் மெச்சவும் பாராட்டவும் தகுந்தவை. எதுகை மோனைகளை மட்டும் கற்றுக் கொண்டு அதிலேயே தமிழ் இலக்கியம் எல்லாமும் முடிந்துவிட்டதாக எண்ணி திருக்குறளை பொருட்குறை தோன்ற திருத்தினார் ஸ்காட். அதே போல் தான் இந்தப் பதிவர்களும் தாங்கள் படித்த சில உண்மைகளையும் பல திரிக்கப்பட்ட உண்மைகளையும் தன் கண்முன் காண்பவை சிலவற்றையும் கொண்டு சில கருத்துகளைச் சொல்லி வருகிறார்கள். அவையே முடிந்த முடிபு என்பது போல் ஒரு தோற்றத்தையும் ஏற்படுத்துகிறார்கள். இந்தக் கட்டுரைகள் ஸ்காட் துரையின் திருக்குறள் பதிப்பைப் போல் தான் இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்தார் இல்லை. ஸ்காட்டிடம் கேட்டிருந்தால் மிகத் தெளிவாக விளக்கியிருப்பார் 'அகர என்று வந்ததால் உகர என்று வருவதே எதுகைக்குப் பொருத்தம். உலகு என்று வந்ததால் உகர என்று வருவதே மோனைக்குப் பொருத்தம். அது மட்டும் இல்லாமல் பொருளிலும் தவறு ஒன்றும் இல்லை. எழுத்துகள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன. உலகு என்ற சொல் உகரத்தில் தொடங்குகிறது. இது தான் வள்ளுவர் சொன்னது' என்று அடித்துச் சொல்லியிருப்பார். திருக்குறள் அறியாதவர் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்வதும் நடந்திருக்கும். ஆகா ஓகோ என்று புகழ்வதும் நடந்திருக்கும். அவர் ஒரு ஆங்கிலேயர் என்பதும் அந்த புகழ்ச்சிகளுக்கு ஊட்டம் கொடுத்திருக்கும். அதே போல் தான் பதிவர்கள் எழுதும் கட்டுரைகளுக்கும் நடக்கிறது. அவற்றில் எழுதியதை மிக நன்கு விளக்கிக் கூற அந்த கட்டுரையாளர்களால் முடிகிறது. அந்த விளக்கத்தை பலர் ஏற்றுக் கொண்டு ஆகா ஓகோ என்று புகழ்வதும் நடக்கிறது.

தேவர் செய்ததைப் போல் அந்தப் பிரதிகளை வாங்கி எரிக்க இந்தக்காலத்தில் முடியாது. இப்போது முடிவதெல்லாம் அந்தக் கட்டுரைகளில் இருக்கும் பிழைகளைத் தகுந்த முறையில் எடுத்துக்காட்டி மாற்றுக்கட்டுரைகள் வரைவதே. அதனையே செய்ய வேண்டும். ஸ்காட் துரையோ மாற்றார். அதனால் தேவர் அவர்கள் அவரிடம் விளக்க முயலவில்லை போலும். ஆனால் இங்கு கட்டுரை எழுதுபவர்கள் நம்மவர்கள். அதனால் கருத்துப் பரிமாற்றம் நன்கு நிகழவேண்டும். நிகழட்டும்.

Narayanan Kannan

unread,
Oct 13, 2008, 12:44:00 AM10/13/08
to minT...@googlegroups.com
ஐயா! குமரா!
அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா!
எங்கே காணோம் என்று கண் பூத்துக்கிடந்தேன்.

என்ன அருமையான கட்டுரையுடன் மீண்டும் வந்துள்ளீர்கள்!!

குமரன், நீங்கள் நன்கு அறிந்தது போல், வலைப்பதிவு என்பது அளப்பரிய
எழுத்துச் சுதந்திரத்தின் குறியீடு.
முன்னெப்போதுமில்லாத அளவில் 'எழுத்துத்தமிழ்' மின்வெளியில் உருவாகி
வளர்ந்திருக்கிறது. வலைப்பதிவின் எளிமையும் வீச்சுமே அதற்குக்காரணம்.
நான் அறிந்து, உற்சாகப்படுத்தி எத்தனை எழுத்தாளர்கள் மின்வெளியில்
உருவாகியுள்ளனர்! இது வரவு!

செலவுக்கணக்கை நீங்கள் காட்டியுள்ளீர்கள். சுதந்திரம் என்பது கவனமுடன்
கையாள வேண்டிய உரிமை. அது பொறுப்பை வளர்க்க உதவும் சாதனம். மின்வெளி
எழுத்தர்கள் பொறுப்பைக் கற்றுக்கொள்வர் என்று நம்புவோம்.

என்னைப் போன்ற சிலருக்கு வலைப்பதிவு ஓர் sounding board. எனது உரத்த
சிந்தனைகளின் வெள்ளோட்ட வெளி. ஓர் பள்ளியறை. பின்னூட்டத்தில் என் தவறுகள்
சுட்டிக்காட்டப்பட்டால் நான் கற்றுக்கொள்வதுடன், நன்றியும் காட்டுவேன்.

மின்வெளி ஓர் தத்துவ குருகுலம். இங்கு 'அகப்பாடு' (ஈகோ) குறைவாய் உள்ளோரே
காலத்தை வென்று தழைக்க முடியும். அதிக அகப்பாட்டு உள்ளோர் முட்டி, மோதி,
மனமுடைந்து அகல வேண்டியதுதான். 'நான்' எனும் அகப்பாடு அகன்று, கற்றது
கைமண் அளவு என்று தெள்ளத்தெளிவாய் காட்டும் உத்தம குருகுலம் மின்வெளி.

மின்வெளி கணக்கு கொண்டு நடப்பதால் கணியன் (பூங்குன்)வெளியாகிறது...

பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

கண்ணன்

devoo

unread,
Oct 13, 2008, 1:50:43 AM10/13/08
to மின்தமிழ்


On Oct 13, 8:08 am, "Kumaran Malli" <kumaran.ma...@gmail.com> wrote:

// இந்தக் கட்டுரைகள் ஸ்காட் துரையின் திருக்குறள் பதிப்பைப் போல் தான்
இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்தார் இல்லை.//

உரிய தருணத்தில் வெளியான ஒரு பயனுள்ள பதிவு.
உட்கருத்தைப் பதிவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தேவ்


Kumaran Malli

unread,
Oct 13, 2008, 12:16:37 PM10/13/08
to minT...@googlegroups.com

கண்ணன் ஐயா.

இன்னும் பாரி/கபிலர் கதையை நிறைவு செய்யவில்லை. வேலைப்பளுவால் அடுத்த பகுதிகளை இன்னும் எழுத முடியாமல் இருக்கிறது. விரைவில் எழுதி இடுகிறேன்.

நன்றிகள்.

அன்பன்,
குமரன்.

Kumaran Malli

unread,
Oct 13, 2008, 12:19:04 PM10/13/08
to minT...@googlegroups.com
நன்றி தேவ் ஐயா. பதிவர்கள் மட்டுமின்றி எல்லோருக்குமே இந்த வேண்டுகோள் உண்டு. தமிழறிஞர்கள் என்று அறியப்படுபவர்களில் சிலருமே தவறான செய்திகளை உண்மையென எடுத்துச் சொல்லும் போது வருத்தமாகத் தான் இருக்கிறது.
Reply all
Reply to author
Forward
0 new messages