""இலக்கியம் ""---அது ஒரு மஹா வார்த்தை. அதை நான் நெருங்கியவனும் இல்லை. நெருங்கத் துடிக்கவும் இல்லை. பரிச்சயம் உண்டு என்பதே மிகச் சரியான சொல்லாடல் ஆகும். அதில் வாசம் செய்ததில்லை.
வாசனை தெரியும். கற்பூர வாசனை தெரியுமா என்று கேட்டு விடக்கூடாது அல்லவா!! எல்லோரையும்போல் பள்ளி, கல்லூரிகளில் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்வேன். அந்த அளவே என் செயல் பாடுகள்.
1977, சிதம்பரத்தில் ஹிந்தி கற்கப் போனேன். ராமன் ஹிந்தி வித்யாலயம் அது. அங்கே பாரதி விழாவில் கவிதைப் போட்டி வைத்தார்கள். பாரதி பக்தன் அல்லவா நான். அதற்கு நியாயம் செய்ய, நானும் போட்டியில் கலந்து கொண்டேன். பின் விடுமுறையில் கோவைக்கு சென்று விட்டேன். திரும்பி வந்தபோது அறிந்தேன், எனக்கு முதல் பரிசாம். அந்த வயதில் அது பெருமிதம்தான்.
அடுத்து வித்யாலயம் ஒரு இலக்கியப் பட்டி மன்றம் நடத்தியது ஆறுமுக நாவலர் பள்ளியில். கொடியவள் யார் கைகேயியா,சூர்ப்பநகையா என்று. சூர்ப்பநகையே என்று பேசிய நான்
கைகேயி தன் மகன் அரசாள வேண்டும் என்று நினைத்தது தாய்ப் பாசமே. ஜனநாயக நாட்டிலேயே நடக்கும்போது ( அப்போது ராஜிவ் அரசியல் நுழைந்த சமயம், அதை லேசாக கோடி காட்டினேன் ) மன்னாராட்சியில் அது தவறில்லை என்றேன். இப்படிப் பேசியது வித்யாலய
முதல்வர் R. வெங்கட்ராமன் அவர்களுக்கு சற்று வருத்தம். அவர் பழுத்த காங்கிரஸ்காரர். எமெர் ஜென்சி முடிந்த நேரம் வேறு அது.
பாரதி விழா கொண்டாடிய வித்யாலயத்தில் அடுத்து ஒரு முறை பாரதிதாசனுக்கும் விழா எடுத்தனர். தமிழ்க் கவிஞர்கள் என்ற பாகு பாடெ ல்லாம் இல்லை. நானும் பேசினேன். அப்போது பாரதிதாசன் கவிதைகளுள் ஒன்றான
""பஞ்சமில்லாக் கோயிலுக்கு பஞ்சாமிர்தமா!!
படையல் அஞ்சாறு தரமா!
அந்தக் கருங்கல் சிலை கேட்டதா
காசு பணமப்பா!!
முறிந்த உள்ளங்கள் ஏ ந்தும் கைகளைக்
கொஞ்சம் திரும்பிப் பாரப்பா ""--
அந்த சூழ்நிலைக்கு சற்று முரண் பட்ட கவிதையென்றாலும், புரட்சிக் கவிஞர் வரிகள் என்பதால் சுட்டிக் காட்டினேன்.
அந்த வித்யாலயத்திலேயே எனக்கு சம்ஸ்க்ரிதம் போதித்த துரைசாமி ரத்தின தீட்சிதரும் அங்கிருந்தார். அவர் மிகவும் gentleman type. என் மீது அன்பாயிருப்பார். எங்கள் மாரியப்பா நகர் வீட்டுக்கும் வந்திருக்கிறார். அவரும் என் பேச்சை ரசித்தார்.
இப்படிஇருக்கையில் ஒரு நாள், திரு RV அவர்கள், உங்களுக்குத் தமிழ் ஆர்வம் நிறைய இருக்கிறது.நீங்கள் ஏன் ப்ரவேஸிகா மாணவர்களுக்குத் தமிழ் வகுப்பு ( ஒரு பேப்பர் தமிழ் உண்டு )எடுக்கக் கூடாது என்று கேட்டார்.
கரும்பு தின்னக் கூலியா!!! உடனே ஏற்றுக்கொண்டேன்.
""தொடுக்கும் கடவுட் பழம் பாடல்
தொடையின் பயனே!!
நறை பழுத் த துறைத் தீந்தமிழின்
ஒழுகு நறும் சுவையே!!....."
என்ற மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் பாடலும், இதர பாடங்களும் ஆர்வமுடன் சொல்லிக் கொடுத்தேன்.
இதே ஹிந்தி வித்யாலயத்தில் எனக்கு நண்பனாகவும் ஹிந்தி ஆசிரியராகவும் இருந்தவர் சீனி.மோகன். அவருடனான அனுபவங்கள் சுவையானவை.
சீனி மோகன்,எனது நண்பர் (ன் ). எனக்கு வித்யாலாயத்தில் ஹிந்தி ஆசிரியரும் கூட. கொஞ்சம் வித்தியாசமான சிந்தனைகள், புரட்சி கரமான சிந்தனைகள். கம்யூனிஸ்ட் என்றும் கூறிவிட முடியாது. அந்த கால கட்டத்தில், அந்த தத்துவத்தில் ஈடுபாடு உடையவர். இவர் என்னையும் இன்னும் ஓரிருவரையும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு அறிமுகப் படுத்தினார். 1979 ல் சிதம்பரத் தில் ஒரு தெரு முனைக் கூட்டம். வடக்கு வீதியும், கிழக்கு வீதியும் சந்திக்கும் இடத்தில், கீழ வீதியில் நடந்தது. அதில் நான்
""சங்ககாலமும் இலக்கியமும் " என்ற தலைப்பில் பேசினேன். காலம் சென்ற எனது நண்பர்கள் ஜகுபர் சாதிக் ம், பிரிய குமாரனும் கவியரங்கத்தில் பங்கேற்பு.
ஜகுபர் சாதிக் குறுந்தாடி வைத்திருப்பார். எந்த கவியரங்க மேடையிலும் தமிழ்த்தாயை விளித்து, "இந்த தாடி வைத்த சிறுவனுக்கு நற் கவிதை தாடி!"""-- எனத் துவங்குவார்.
பிரிய குமாரனோ ""ஏசு நாதா, எனக்கு பேச நா தா ""-- என்று துவங்குவார்.
சாதிக் தபால் துறையிலும், பிரிய குமாரன் தரங்கம்பாடி மாணிக்கம் லூதரன் கல்லூரியிலும் பின்னர் பணி புரிந்தனர். இந்த நிகழ்வு புலவர் தணிகைச் செல்வன் தலைமையில், அஸ்வ கோஷ், முத்தையா முன்னிலையிலும் நடந்தது. இந்த கூட்டத்துக்கு நகரெங்கும் எங்கள் பெயரோடு தட்டி போர்டு கள் வைக்கப் பட்டிருந்தது கண்டு உவகை அடைந்தேன். இந்த கூட்டத்தில் பேசிய மூன்றாம் நாள் என் தந்தை என்னிடம் (அவர் அண்ணாமலைப் பல்கலைக் கழக வேளாண்துறைத் தலைவர்-dean) நேற்று ஒரு நிருபர் ( தினகரன் என்று நினைவு) உங்கள் மகன் கம்யூனிஸ்ட் டா என்று கேட்டாரடா என்றார்.
இது என்ன வம்பாப்போச்சு, ஒரு கூட்டத்தில் இலக்கியம் பேசினால் கூட வா இப்படி கட்சி முத்திரை குத்துவார்கள் என்று நொந்து போனேன். அப்போ என் வயது 22 தான். பாவம் சிறுவன். அடுத்து, நானும் சீனி மோகனு ம் ஒரு கையெழுத்துப் பிரதி துவங்கிய கதை சொல்கிறேன்.
சீனி மோகன், நான், நண்பன் சேது மாதவன், இன்னும் அவ்வப்போது சேரும் நண்பர்கள் மாலை நேரம் ஒன்று கூடும் இடம், சிதம்பரம் கீழ வீதி, மீரா காபி பார். எங்கள் அறிவான, அர்த்தமற்ற எல்லா உரையாடல்களும் அங்கேதான்.
ஒரு மாலை அப்படி நான்கைந்து நண்பர்கள் தேநீருடன் உரையாடிக் கொண்டிருந்தோம். எங்களைப் போல் பலர் அங்கே கடையில். திடீரென ஒரு போலீஸ் வேன் அங்கு வந்து நின்று, திபு, திபுவென சில காவலர் அங்கு டீ குடித்துக் கொண்டிருந்த அனைவரையும் விரட்டினர். நானும், நண்பர்களும், அருகே இருந்த, என் ஹிந்தி வகுப்பு நண்பி,பத்மவல்லி வீட்டில் சென்று அமர்ந்துவிட்டோம். பத்மவல்லியின் அத்திம்பேர், தில்லை கோவிந்தராஜர் கோயில் பட்டாச் சாரியார். அவர்கள் எங்களிடம் நன்கு பழகிய குடும்பம்தான். பிறகு மீண்டும் மீரா காபி பார் சென்று எங்கள் சைக்கிள் எடுத்துக் கொண்டு சென்றோம்.
அப்போதுதான் ஏற்பட்டது ஒரு கசப்பு, இந்திரா காங்கிரஸ் மீதும், emergency மீதும்..இப்போது காங்கிரஸ் மீதான பார்வை வேறு. இன்றைய அரசியல் சூழல் வேறு.
எப்படியும் ஒரு கையெழுத்துப் பத்திரிகை கொண்டு வந்துவிடவேண்டும் என்ற வேகம். சீனி மோகனும், நானும் எதையாவது எழுதி விடுவோம். அது பெரிதில்லை. நட்பு வட்டத்தில் இருப்பவர்களிடம் கதையோ, கட்டுரையோ, கவிதையோ எழுத ஊக்கப் படுத்தி வாங்கி விடவேண்டும் என்று தீர்மானித்து செயல்படுத்தினோம். சுமார் 15 articles தேறின. A4 பேப்பர் மாதிரி, வண்ண வண்ணக் காகிதங்களில் தொகுத்து bind பண்ண தீர்மானித் தோம். இந்த பத்திரிகைக்கு விஷய தானம் செய்தவர்கள் சாரதி தாசன் என்ற பன்னீர் செல்வம், செந்தமிழ் செல்வன், BV ரேவதி, கல்பனா, ராஜி இன்னும் பலர்.
இது ஒரு புறமிருக்க, பத்திரிகைக்கு பெயர் வைக்கணுமே. எனக்கு" உதயஞாயிறு " என்று பெயர் சூட்ட ஆசை. ""ஒளி இழந்த நாட்டிலே நின்றேறும் உதய ஞாயிறொ ப்பவே வா வா வா ""-- பாரதியின் வரிகளோடு. இந்த நிலையில் பத்து நாள் விடுமுறையில் கோவை வந்துவிட்டேன்.
மோகனிடமிருந்து கடிதம் வந்தது பத்திரிகை ரெடி என்று. சிதம்பரம் திரும்பியபின் ஆர்வமுடன் பார்த்தேன். நல்ல finishing. மனதிற்கு திருப்தி.
பத்திரிகையின் பெயர் பார்த்தேன்.
"விடிவெள்ளி" கூடவே ஒரு அடர் சிவப்பு வண்ணத்தில் ஒரு நட்சத்திரம் படம். அதுவும் சரிதான்.
தொடரும் . . .
ச.சபாரத்தினம்
புவியியலாளர், கோவை.
https://www.facebook.com/saba.rathinam.547