I. கடைச் சங்கத்தின் இறுதிக்காலம்
தமிழ் இலக்கிய வரலாறு
(கி.பி. 250-கி.பி. 600)
பாண்டியரது தலைநகராகிய மதுரையம்பதியில் நடைபெற்ற கடைச்சங்கத்தின் இறுதிக்காலத்திற்குப் பின்னரும் சைவ சமய குரவர்களாகிய திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் தோன்றிய காலத்திற்கு முன்னரும் அமைந்த ஒரு காலப் பகுதியே தமிழ் இலக்கிய வரலாற்றில் இருண்ட காலம் என்று கூறப்படும். அது, கி. பி. 250 முதல் கி.பி. 600 வரையில் அமைந்த ஒரு காலப் பகுதியாகும். மதுரையிலிருந்த கடைச் சங்கம் கி. பி . மூன்றாம் நூற்றாண்டின் முதற் பகுதியில் முடிவெய்தியிருத்தல் வேண்டும் என்பது ஆராய்ந்து கண்டதோர் உண்மையாயினும், அதுபற்றி அறிஞர்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆகவே, அதனை ஈண்டு ஆராய்வதும் இன்றியமையாததொன்றாம்.
----------
I. கடைச்சங்கத்தின் இறுதிக்காலம்
கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இடையில், பல்லவர் என்னும் ஓர் அரசர் மரபினர் தமிழகத்தின் வடபகுதியைக் கைப்பற்றிக் காஞ்சியைத் தலைநகராகக்கொண்டு, அதனைச் சூழ்ந்த பகுதியையும் வடக்கே கிருஷ்ணை என்ற பேராறு வரையிலுள்ள பகுதியையும் ஆட்சி புரியத் தொடங்கினர்.[1] அவர்கள் தமிழ்நாட்டின் வடபகுதியை வென்று கைப்பற்றியபோது சோழமன்னரோடும் பிற சிற்றரசரோடும் நிகழ்த்திய போர்கள் பலவாதல் வேண்டும்: அப்பல்லவரின் தமிழ்நாட்டுப் படையெழுச்சியையாதல் அவர்கள் தமிழகத்தில் நடத்திய போர்களையாதல் கடைச்சங்கப் புலவர்கள் தாம் இயற்றியுள்ள பாடல்களில் யாண்டும் கூறவில்லை. வட வேந்தரான மௌரியர் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த செய்தியையும்[2] முடியுடைத் தமிழ் - வேந்தர் மூவரும் தமிழ் நாட்டுக் குறுநில மன்னர்களும் ஒருவருக்கொருவர் பகைமை கொண்டு ஆங்காங்கு நிகழ்த்திய போர்களையும் தம் பாடல்களில் குறித்துள்ள கடைச்சங்கப் புலவர்கள், பல்லவர் தமிழ்வேந்தரோடு புரிந்த போர்களுள் ஒன்றையாவது குறிப்பிடாமை ஊன்றி நோக்கற்பாலதொன்றாம். அன்றியும்,
பல்லவர் என்ற பெயரே சங்கத்துச் சான்றோர் பாடல்களில் காணப்படவில்லை. இவற்றை யெல்லாம் நுணுகியாராயுங்கால், கி. பி. மூன்றாம் நூற்றாண்டினிடையில் பல்லவர் தமிழகத்திற்கு வந்து காஞ்சியைக் கைப் பற்றுவதற்கு முன்னர் மதுரைமாநகரில் நிலவிய கடைச் சங்கம் முடிவெய்தியிருத்தல் வேண்டுமென்பது நன்கு வெளியாதல் காண்க.
அன்றியும், கடைச்சங்கத்திறுதிக் காலத்தில் இயற்றப்பெற்ற சிலப்பதிகாரத்தில் இலங்கை வேந்தனாகிய கயவாகு என்பான் ஆசிரியர் இளங்கோவடிகளால் கூறப்பெற்றுள்ளனன். இவ்வடிகளின் தமையனாகிய சேரன் செங்குட்டுவன் என்பவன், கடைச் சங்கப் புலவராகிய பரணரால் பதிற்றுப்பத்தினுள் ஒன்றாகிய ஐந்தாம் பத்தில் பாடப்பெற்றவன். இவன் தன் தலைநகராகிய வஞ்சியில் கட்டுவித்த கண்ணகிதேவியின் கோயிலுக்குக்
கடவுண் மங்கலம் நிகழ்த்திய நாட்களில் இலங்கையரசனாகிய அக் கயவாகும் அங்கு வந்திருந்தான்.[3] அவன் தன் நாட்டிற்குத் திரும்பிச் சென்ற பிறகு சேரன் செங்குட்டுவனைப்போல் பத்தினிதேவியாகிய கண்ணகிக்கு அங்குக் கோயிலொன்று அமைத்து வழிபாடு புரிந்தான்.[4] இச் செய்திகள் எல்லாம் ஆசிரியர் இளங்கோவடிகளால் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டிருத்தல் அறியத்தக்கது. எனவே, கடைச்சங்கத்தின் இறுதிக்காலத்திலிருந்தவன் கடல் சூழ் இலங்கைக் கயவாகுமன்னன் என்பது நன்கு தெளியப்படும். இலங்கையில் கயவாகு என்ற பெயருடன் இரண்டு அரசர்கள் ஆட்சி புரிந்துள்ளனர் என்பது அந்நாட்டு வரலாற்றாராய்ச்சியாளர் கண்ட முடிபாகும். அவ்விருவருள்
முதல் கயவாகு, கி. பி. 171 முதல் கி. பி. 193 வரையில் அரசாண்டவன்.[5] இரண்டாம் கயவாகு என்பான், கி. பி. 1137 முதல் கி. பி. 1153 வரையில் ஆட்சிபுரிந்தவன்.[6] இவ்விரண்டாங் கயவாகு சோழ இராச்சியத் தில் இரண்டாங் குலோத்துங்க சோழன் அரசாண்ட காலத்தில் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டினிடைப்பகுதியில் இருந்தவனாதலின், இளங்கோவடிகளால் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப் பெற்றவன் முதற் கயவாகுவே யாதல்வேண்டும் என்பது நன்கு துணியப்படும். எனவே, அம் முதற் கயவாகுவின் காலமாகிய கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மதுரைமாநகரில் கடைச்சங்கம் இருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். அச் சங்கப்புலவர்கள் பல்லவரையாதல் அன்னோர் தமிழகத்தில் நிகழ்த்திய போர்களையாதல் தம் பாடல்களில் யாண்டுங் கூற வில்லை என்பது முன்னர் விளக்கப்பெற்றது. எனவே, அவர்கள் தமிழ்நாட்டின்மீது படையெடுத்து வந்து அதன் வட பகுதியைக் கைப்பற்றிய காலத்தில் மதுரையம்பதியில் கடைச்சங்கம் இல்லை என்பது தெள்ளிது. பல்லவர் தமிழ் நாட்டிற் புகுந்து ஆட்சி புரியத் தொடங்கிய காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியேயாம் என்பது வரலாற்றாராய்ச்சியில் வல்ல அறிஞர்களது கருத்து.[7] ஆகவே, மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் மதுரையில் கடைச்சங்கம் இல்லை என்றும் அதற்கு முன்னரே அஃது அழிந்திருத்தல் வேண்டும் என்றும் ஐயமின்றிக் கூறலாம். எனவே, கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் முதற் பகுதியில் அச் சங்கம். முடிவெய்தியிருத்தல் வேண்டும் என்பது நன்கு வலியுறுதல் காண்க.
இனி, கடைச்சங்கத்தின் இறுதிக்காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டாகும் என்று சில ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். [8] அன்னோர் கொள்கை பொருந்துமா என்பது ஈண்டு ஆராய்தற் குரியதாகும். அவர்கள் தாம் கண்ட முடிபிற்கு இரண்டு ஆதாரங்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். அவற்றுள் ஒன்று கங்கைக்கரையிலுள்ள பாடலிபுரம் என்னும் மாநகர் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் வெள்ளப்பெருக்கால் அழிவுற்ற செய்தியைக் கடைச்சங்கப் புலவருள் ஒருவராகிய மாமூலனார் என்பார்,
'பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீ இக் கங்கை .
நீர்முதல் கரந்த நிதியங் கொல்லோ ' (அகம். 265)
என்ற அகநானூற்றுப் பாடலில் குறிப்பிட்டுள்ளனர் என்பது ; பிறிதொன்று, சமுத்திரகுப்தன் - என்பான் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் [9] தமிழ் நாட்டின் மீது படையெடுத்த நிகழ்ச்சியை அப்புலவர் பெருமானே,
'முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர்
தென்றிசை மாதிர முன்னிய வரவிற்கு
விண்ணுற வோங்கிய பனியிருங் குன்றத்
தொண்கதிர்த் திகிரி யுருளிய குறைத்த
அறையிறந் தவரோ சென்றனர் ' (அகம். 281)
என்ற மற்றோர் அகநானூற்றுப் பாடலில் கூறியுள்ளனர் என்பது. கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் நிகழ்ந்த இவ்விரு நிகழ்ச்சிகளையும் தம் பாடல்களில் குறித்துள்ள மாமூலனார் நிலவிய கடைச்சங்கத்தின் இறுதிக்காலமும் அவ்வைந்தாம் நூற்றாண்டாகவே இருத்தல் வேண்டும் என்பது அன்னோர் கொள்கையாகும்.
அவர்கள் தம்முடிபிற்கு ஏதுவாக எடுத்துக்காட்டிய அக நானூற்றுப் பாடற்பகுதிகள் இரண்டனுள், 'பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்-சீர்மிகு பாடலிக்குழீ இக், கங்கைநீர்முதல் கரந்த நிதியங் கொல்லோ' என்ற பகுதியின் பொருள் , 'பல் வகைப் புகழ் நிறைந்த போர் வெல்லும் நந்தர் என்பார், சிறப்பு மிகுந்த பாடலிபுரத்தில் திரண்டிருந்து கங்கையாற்றின் நீரின் கீழ் மறைத்துவைத்த நிதியமோ' என்பதாம். ஆகவே, அது, பாடலிபுரத்தில் ஆட்சிபுரிந்த நந்தர் என்பார் கங்கைப் பேராற்றின் கீழே பெருநிதியம் ஒளித்துவைத்திருந்த செய்தியை உணர்த்துகின்றதேயன்றி அவர்கள் கருதுவதுபோல் நந்தரது பாடலிபுரம் கங்கை வெள்ளத்தால் அழிந்ததை உணர்த்தவில்லை என்பது நன்கு தெளியப்படும். எனவே, மாமூலனார் பாடலிபுரம் ஆற்றுப் பெருக்கால் அழிந்த நிகழ்ச்சியைக் கூறவில்லை என்பது - தேற்றம். அம் மாநகரில் வீற்றிருந்தரசாண்ட நந்தர், மோரியர்க்கு மற்பட்டவராவர். அவர்கள் ஆட்சிக்காலம் கி.மு. 413-க்கும் கி. மு. 322-க்கும் இடைப்பட்டதென்பது ஆராய்ச்சியாளர்களது. கருத்து.[10] ஆகவே, கடைச்சங்ககாலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டெனக் கோடற்குக் காட்டப்பெற்ற ஆதாரங்களுள் ஒன்று வலியற்றொழிந்தமை காண்க.
இனி, 'முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர் - தென்றிசை மாதிர முன்னிய வரவு' என்று மாமூலனார் மற்றோர் அகநானூற்றுப் பாடலில் கூறியிருப்பது, வடுகரைத் துணையாகக்கொண்டு மோரியர் தென்னாட்டின் மேல் படையெடுத்த செய்தியைக் குறிப்பிடுகின்றதேயன்றி அவ்வாராய்ச்சியாளர் கருதுவதுபோல் சமுத்திரகுப்தன் [11] படையெழுச்சியை உணர்த்த வில்லை என்பது தேற்றம். மோரியர் படையெழுச்சியைக் குப்தர் படையெழுச்சி என்று அன்னோர் தவறாகக் கருதிவிட்டமையால் கடைச்சங்ககாலம்பற்றி அத்தகைய பிழைபாடு நேர்ந்தது எனலாம். குப்தர் காலத்திற்கு ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டவர் மோரியர் என்பது வரலாற்றாராய்ச்சியாளர் யாவரும் அறிந்ததொன்றாம்.[12]
குப்தர் என்னும் பெயரே கடைச்சங்க நூல்களில் யாண்டுங் காணப்படாமை குறிப்பிடத்தக்கது. ஆகவே, கடைச்சங்க காலத்திற்கு அவர்கள் காட்டியுள்ள பிறிதோர் ஆதாரமும் தவறாகப் போயினமை அறியற்பாலது. எனவே, கடைச்சங்ககாலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டெனக் கூறுவது எவ்வாற்றானும் பொருந்தாமை காண்க.
இனி, கடைச்சங்க காலம் கி. பி. எட்டாம் நூற்றாண்டென்பர் ஒரு சிலர்[13]. அன்னோர் தம் கொள்கைக்கு ஆதாரமாக எடுத்துக்காட்டுவன, சிலப்பதிகாரத்தில் இரண்டு இடங்களில் காணப்படும் காலக்குறிப்புக்களும் அவற்றுள், ஒன்றிற்கு அடியார்க்கு நல்லார் எழுதியுள்ள உரைக்குறிப்புமேயாம். அவை,
'வான் கண் விழியா வைகறை யாமத்து
மீன்றிகழ் விசும்பின் வெண்மதி நீங்கக்
காரிரு ணின்ற கடைநாட் கங்குல்' (சிலப். நாடுகாண். 1-3)
'ஆடித் திங்கட் பேரிருட் பக்கத்
தழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று
வெள்ளி வாரத் தொள்ளெரி யுண்ண
வுரைசான் மதுரையோ டரசுகே டுறுமெனு
முரையு முண்டே நிரைதொடி யோயே' (சிலப். கட்டுரை. 133-7)
'அந்தச் சித்திரைத்திங்கட் புகுதிநாள்- சோதி ; திதி மூன்றாம் பக்கம், வாரம்--ஞாயிறு. இத்திங்கள் இருபத்தெட்டிற் சித்திரையும் பூரணையுங் கூடிய சனிவாரத்திற் கொடியேற்றி 'நாலேழ் நாளினும் ' என்பதனான் இருபத்தெட்டு நாளும் விழா நடந்து கொடியிறக்கி வைகாசி இருபத்தெட்டினிற் பூருவபக்கத்தின் பதின்மூன்றாம் பக்கமும் சோமவாரமும் பெற்ற அனுடத்தில் நாட்கடலாடி ஊடுதலின் வைகாசி இருபத்தொன்பதிற் செவ்வாய்க்கிழமையும் கேட்டையும் பெற்ற நாசயோகத்து நிறைமதிப் பதினாலாம் பக்கத்து வைகறைப் பொழுதினிடத்து நிலவுபட்ட அந்தரத்திருளிலே யென்றவாறு, அது பூருவபக்கமென்பது தோன்றக் காரிருணின்ற கடைநாட்கங்கு' லென்றார்" என்பனவாம்.
இவற்றில் காணப்படும் சோதிடக் குறிப்புக்களைக் கணித்துப் பார்த்த காலஞ்சென்ற திரு. எல். டி. சாமிக்கண்ணுப் பிள்ளை அவர்கள் மதுரை மாநகர் எரியுண்ட.து கி. பி. 756-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 23-ஆம் நாளாகும் என்றும் ஆகவே, கடைச்சங்க காலமும் அதுவேயாதல் வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.[14] அவ்வறிஞரே அடியார்க்கு நல்லார் உரையில் காணப்படும் சோதிடக் குறிப்புக்கள் சிறிது தவறுடையன என்பர். எனவே, தவறாகவுள்ள குறிப்புக்களின் துணைகொண்டு கணிக்கப் பெறும் காலமும் தவறுடையதேயாம் என்பது திண்ணம். அவ்வுரைக் குறிப்புக்களைக்கொண்டு கடைச் சங்க காலத்தை ஆராய்ந்த திரு. கே. ஜி. சங்கரையர் என்ற அறிஞர், கி. பி. முதல் ஆண்டு முதலாக ஆயிரத்து நானூறாம் ஆண்டு வரையில் ஓராண்டாவது அவற்றோடு முழுவதும் பொருந்தி வரவில்லை என்றும், ஆகவே அடியார்க்கு நல்லார் உரையிற் காணப்படும் சோதிடக் குறிப்புக்கள் தவறுடையனவேயாம் என்றும், அவற்றின் துணைகொண்டு திரு. எல். டி. சாமிக்கண்ணுப் பிள்ளை அவர்கள் ஆராய்ந்து கண்ட முடிவு ஒப்புக்கொள்ளத் தக்கதன்று என்றும் மிக விரிவாக ஆராய்ந்தெழுதியிருப்பது[15] ஈண்டுக் குறிப்பிடுதற்-குரியதாகும்.
இனி, சைவசமய குரவருள் ஒருவராகிய அப்பரடிகள் தம்முடைய பாண்டி நாட்டுத் திருப்புத்தூர்ப் பதிகத்தில் ‘நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக் கிழிதருமிக் கருளினோன் காண் '[16] என்று கடைச்சங்க கால நிகழ்ச்சி யொன்றைக் கூறியுள்ளனர். அன்றியும், அவ்வடிகள் காலத்தில் நிலவியவரும் சமயகுரவருள் முதல்வானாகிய திருஞான சம்பந்த சுவாமிகள் தம் திருப்பாசுரத்தில் 'அந்தண்மதுரைத் தொகையாக்கினானும்........ பெற்றொன்றுயர்த்த பெருமான் '[17] என்று மதுரையம்பதியிலிருந்த கடைச்சங்கத்தைக் குறித்துள்ளார். இப்பெரியார் இருவரும் கி. பி. ஏழாம் நூற்றாண்டின் முதல்- இடைப்பகுதிகளில் நம் தமிழகத்தில் விளங்கியவர்கள் என்பது வரலாற்றாராய்ச்சி யாளர்களால் ஐயமின்றித் துணியப் பட்ட செய்தியாகும்.[18] எனவே, கடைச்சங்க காலம் கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாதல் வேண்டும். ஆகவே, அச் சங்ககாலம் கி. பி. எட்டாம் நூற்றாண்டென்பார் கூற்றுச் சிறிதும் பொருந்தாமை காண்க.
இதுகாறும் ஆராய்ந்தவாற்றால் கடைச்சங்ககாலம் கி. பி. . ஐந்தாம் நூற்றாண்டெனவும் கி. பி. எட்டாம் நூற்றாண்டெனவும் கூறுவோர். கொள்கைகள் தக்க ஆதாரங்களின்றித் துணியப்பெற்றவை என்பது நன்கு தெளியப்படும். ஆகவே, முதலில் ஆராய்ந்து கண்டவாறு, மதுரைமாநகரில் நிலை பெற்றிருந்த கடைச்சங்கம், கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் முதற் பகுதியில் தான் அழிவெய்தியிருத்தல் வேண்டும். என்பது பல்வகையாலும் உறுதிபெற்று நிற்றல் உணரற்பாலதாம்.
-----
[1]. Administration and Social Life under the Pallayas by Dr. C Minakshi pp. 2 and 6.
[2]. அகம். 69, 251, 281; புறம். 175.
[3]. சிலப்பதிகார்ம், வாந்தருகாதை, அடிகள் 160-164.
[4]. இலங்கையிலிருந்து கிடைத்த கண்ணகியின் செப்புப்படிமம் ஒன்று, லண்டன் மாநகரில் பிரிட்டிஷ் பொருட்காட்சிசாலையில் இருந்தது. அது கி. பி.1830 ஆம் ஆண்டில் அங்குக் கொண்டுபோகப்பட்டதாம். முதற் கயவாகு தன் நாட்டில் எடுப்பித்த பத்தினிக் கோட் டத்தில் எழுந்தருளுவித்த கண்ணகிதேவியின் படிமமாகவே அஃதிருத்தல் வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். அஃது இப்போது இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுவிட்டது என்று தெரிகிறது. (Selected Examples of Indian Art, Plate 33)
[5]. The Mahavamsa or the great Chronicle of Ceylon, translated by Wilhelm Geiger, Ph. D. Intr. p. 33.
[6]. Epigraphia Zeylanica, Vol III, No. 1 A Chronologilcal Table of Ceylon Kings.
[7]. (a) The Successors of the Satavahanas in Lower Deccati by D. C Sirkar, p. 175. (b) The Pallavas by G. J. Dubreuil, p. 10.
(c) Administration and Social Life under the Pallavas! pp. 6 & 10
[8] திருவாளர் ராவ்சாகிப் மு. இராகவையங்கார் அவர்கள் எழுதிய சேரன் செங்குட்டுவன் என்ற நூலில் செங்குட்டுவன் காலம் என்பதைப் பார்க்க,
[9] . சமுத்திரகுப் தனது தென்னாட்டுப் படையெழுச்சி கி. பி. நான்காம்
நூற்றாண்டின் இடையில் நிகழ்ந்தது என்பது சரித்திர ஆசிரியர்களின் கருத்து.
[10]. The Early History of India by Vincent A. Smith, (4th Edition) p. 51
[11]. சமுத்திரகுப்தன் என்பான் குப்தர் மரபினனேயன்றி மோரியா - மரபினன் அல்லன் என்பது அறியத்தக்கது.
[12]. மோரியர் என்பார், கி. மு. 322-க்கும் கி.மு. 185-க்கும் இடையில் ஆட்சிபுரிந்தோர் ஆவர். குப்தர்களோ கி. பி. 320 முதல் கி.பி. 455 வரையில் அரசாண்டவர்கள். (The Early History of India by Vincent A. Smith, pp. 206, 207 ang 295.) எனவே குப்தர்க்கு ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகட்டு முற்பட்டவர் மோரியர் என்பது தெள்ளிது,
[13]. An Indian Ephemeris, Vol. 1, part I, pp.459-468.
[14]. An Indian Ephemeris by Diwan Bahadur L. D. Swamikannu Pillai Vol. 1, part I, pp. 459-468.
[15]. செந்தமிழ்த் தொகுதி 15.
[16]. திருப்புத்தூர்த் திருத்தாண்டகம், பா. 3.
[17]. திருப்பாசாம், பா. 11
[18]. Tamilian Antiquary, No. 3. Date of Gnana Sambandar
-------------
தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600):
ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை. சதாசிவ பண்டாரத்தார்
நன்றி: