வள்ளுவமும் அன்பியலும்

21 views
Skip to first unread message

Bharathi

unread,
Nov 2, 2025, 11:51:05 AM (2 days ago) Nov 2
to மின்தமிழ்

முன்னுரை

சமூகத்துக்கும் நாட்டுக்கும் பயனுள்ள வகையில்
குடும்பம், நாடு, உலகம், என வாழ்வதற்கும், உயிருடன் உயிராக உயிர்ப்பெற்று விளங்குவதற்கும் அன்பே அடிப்படையாகும். அன்பு என்பது உலகிலுள்ள எல்லா உயிர்களிடத்திலும் செலுத்தப்படுவது. இச்சொல் இரக்கம், உதவுதல், கனிவு, ஏற்றுக்கொள்ளுதல், அர்ப்பணிப்பு போன்ற உள்ளத்தை அழகு செய்யும் உயர்ந்த குணங்களை உள்ளடக்கியது; உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் வாழ வைப்பது; அகத்தே உணரும் மென்மையான உணர்வு. அன்புதான் மனித சமுதாயத்தின் அடிப்படை. நம் வாழ்வில் இன்பம் மலர அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும். அதனால்தான், அறத்துப்பாலில் முதலாவது உடைமையாக அன்புடைமையை வைத்துள்ளார் வான்புகழ் வள்ளுவர்.

அன்பின் அலைவட்டம்

     சார்தல் என்னும் விளைச்சலுக்கு விதைக்கப்படும் வித்து அன்பு. தழுவலில் தொடங்கி தழுவலில் வளர்ந்து என்றும் இளமையாய் எங்கும் நிலைத்து நிற்பதும் அதுவே. ஓர் ஆணும் ஒரு பெண்ணும் குடும்ப உறவைத் தொடங்கி எண்ணங்களால் பின்னப்படுகின்றனர். அன்பை விளம்பி அறத்தை ஆற்றலாக்கி இல்லற வாழ்வில் இனிமை காண்கின்றனர். ஆண்டு, தன்னலத்தைத் துடைத்தெறிந்து குடும்ப உறுப்பினர்களுக்குள் அன்பின் அலைவட்டம் உருவாகின்றது. இவ்வட்டம் அயலகம், அக்கரைச்சீமை என விரிவடைந்து அளவிடவியலாத எல்லையாகத் திவளுகின்றன. எல்லாரிடமும் அன்பு செலுத்தி வாழ்வதும். உலகத்திற்கு ஏற்றவாறு வாழும் குடும்பத்தில் பிறந்திருத்தலுமாகிய இரண்டும் பண்புடைமை என்னும் நல்ல வழிகளாகும் (குறள்.992). 

     விட்டுக் கொடுத்து வாழ்வதும், விருந்தோம்பலும், நலம்பாராட்டுதலும், நன்மை புரிதலும், கலந்துரையாடுதலும், காதல் வயப்படுதலும், பகிர்ந்து உண்ணலும், பாராட்டி மகிழ்தலும், ஆர்வமொழியும் அன்பின் ஆவிர்ப்பவித்தலாகும். அன்பின் அலைகள் உள்ளத்தில் உருவானால் குடித்தனப்பாங்கு பண்புடையதாகவும் பயனுடையதாகவும் அமையும். இதனை அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை(குறள்.45) என்ற குறட்பாவின் மூலம் ஓர்ந்து  உய்த்துணர வைத்துள்ளார் வான்புகழ் வள்ளுவர்.

அன்பின் அடையாளம்

     தலைக்கை தழுவுதலும், முதற்கை கொடுத்தலும், உச்சிமோத்தலும், உரங்காட்டுதலும், தலையளியும், கனிகரமும், உவத்தலும், உழுவலும் அன்பின் அடையாளமாக இலங்குகின்றன. உள்ளத்தில் ஊற்றெடுக்கும் அன்பை யாராலும் தாழ்பாள் போட்டு அடைத்து வைக்க இயலாது. அன்புக்குறியவரின் துன்பத்தைக் காணும்போது கண்ணுருகுவதன் வாயிலாக அஃது அறிவித்துவிடும். அன்பின் ஆழத்தை வெந்துளியும் வெளிப்படுத்திவிடும் என்பதனை அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும். (குறள்.71) என்ற குறட்பா எல்லோர்க்கும் ஏற்றுகின்றது.

                பெற்றோர்களும், ஆசிரியர்களும், முதன்மைப் பணியாளர்களும், மூத்தோர்களும் வாழ்வின் ஒழுக்கத்தைப் பாடம் நடத்தி அன்புக்குரியவர்களின் மனதில் பதிய வைக்கின்றனர்; அவர்களைப் பண்படுத்துகின்றனர். இவர்களின் பகையுணர்வு கொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர்போல் பார்க்கும் பார்வையும் வெளியில் அயலர் போல் காட்டிக்கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்பவர்கள் என்பதை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும். இதனை செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர்போன்று உற்றார் குறிப்பு (குறள்.1097)    என்மனார் வள்ளுவர்.

அன்பின் மனத்தேற்றம்

     அன்பு இல்லாதவர்கள் சுயநலத்திற்குள் சுருங்கிப்போய் வாழ்பவர்கள். எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்கள். கிடைத்தற்கு அரிய செல்வம் படைத்தவர்களும் வறுமையால் இரக்கின்றவர்க்கு ஈயாமல் வாழ்கின்றனர். அவர்கள் தம் பெயரை நிலைநாட்டுவதும் இல்லை; நிலைத்த புகழைப் பெறுவதும் இல்லை; மக்களால் மறக்கப்படுகின்றனர். தூய்மையான அன்புகொண்டவர்களோ பொருள்களை மட்டுமல்ல; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பார்கள். அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.  (குறள்.72) என்று அன்பின் மேன்மையை மிளிர வைத்துள்ளார் மாதானுபங்கி. அன்பு என்னும் தாய் பெற்றெடுத்த அருள் என்னும் தொடர்புடையோர்மாட்டு உண்டாகும்‌ பற்று, பொருள் என்றுக் கூறப்படும் செல்வமுள்ள வளர்ப்புத் தாயால் வளர்வதாகும் (குறள்.757).

     நேற்று என்னைக் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னைத் தொடருமோ  என்று எண்ணி வருந்தினார் பெருந்தலைச் சாத்தனார். தன் குடும்ப வறுமையைப் போக்க குமணனைக் காணச் சென்றார். அப்பொழுது அவன் காட்டில் வாழ்ந்தான். அவன் தம்பி நாடாண்டான். குமணன் தலையைக் கொய்ய இளையவன் துடித்துக் கொண்டிருந்தான். குமணன் அன்றாள்கோவாக இல்லை. அரசிழந்து காட்டில் வாழும் வேந்தன் என்றுகூட கருதாமல் தன் வறுமைத் துயர் நீங்க குமணனிடம் இரந்து நின்றார் புலவர். தன்னை விடச் சிறந்த பொருள் இல்லை என உணர்ந்த குமணன், தன் தலையைக் கொண்டு போய் தன் தம்பியிடம் கொடுத்தால் புலவர்க்கு பரிசு வழங்குவான் என்ற உறுதியால், தன் தலையைக் கொய்து தம்பியிடம் கொடுத்து பரிசு பெறுக என வாளைப் பரிசாக வழங்குகிறான். தன்னை ஈயும் ஈகைக்கு முன் பொன்னென்ன? பொருளென்ன? நாடு இழந்ததனினும் நனி இன்னாது' என, வாள் தந்தனனே, தலை எனக்கு ஈய, (புறநானூறு.165). அன்புடையார் தன் உடலையும் பிறர்க்குக் கொடுப்பார்கள் என்பதன் சான்றல்லவா இது.

அன்பின் வழியது உயிர்நிலை

     உயிரோடு பொருந்தாத உடம்பும் சிறப்பதில்லை. அதுபோல் அன்போடு பொருந்தாத வாழ்வும் செழிப்பதில்லை. உடலோடு உயிர் பொருந்தியிருக்கின்ற உறவு அன்பு செய்தற்கு ஏற்பட்ட நெறியின் பயன் என்று அறிந்தார் கூறுவர். அகவுயிர் என்பதை எடுத்துக் காட்டுவதே அன்புதான். அந்த அன்பே உயிரின் இயல்பு; சுற்றத்தின் ஒன்றிப்பு. அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு (குறள்.73) என்று அன்பின் இயல்பை திகழ்த்துகின்றார் திருவள்ளுவர்.

     எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் சுட்டுவருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் சுட்டுவருத்தும். மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வளமற்ற பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்று நிலையற்றதாகும். உடம்பின் அகத்து உறுப்பாக அமைந்துள்ள உள்ளத்தில் அன்பு இல்லாதவர்க்கு, கண்ணுக்குத் தெரியும் அழகிய வடிவங்களாய் இருக்கும் உடம்பின் பிற உறுப்புக்களான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன அழகாக இருந்தும் எத்தகைய பயனும் ஏற்படாது எனவாங்கு சில சொற்களால்‌ பெரும்‌ பொருளை விளக்குகின்றார் முதற்பாவலர். அன்பின் வழியில் இயங்கும் உயிர் நிறைந்த இந்த உடம்பு, அன்பு மட்டும் இல்லை என்றால் வெறும் எலும்பின்மேல் தோலைப் போர்த்திய இழியுடம்பாகவே எண்ணப்படும் (குறள்.80) என்று தெள்ளிதின் உரைக்கின்றது வள்ளுவம்.

அன்பினால் உண்டாகும் நன்மை

     மாந்தர் அன்பினால் இணைந்து இனக்கட்டை உருவாக்குவதன் மூலம் தனி உயிர் விரிவடைந்து உலகத்தைத் தன் உடைமையாக்கிக் கொள்கிறது. அற்புத்தளையால் பிறர் இன்பம் தன் இன்பமாகிறது; பிறர் அன்பு தன் அன்பாகிறது; அனைவர் உள்ளத்திலும் நட்பு எனும் வான்முகடு வளர்கிறது. இதனை அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு (குறள்.74) என்று எடுத்தோதும் நான்முகனார் அன்பின் மேன்மாடத்தில் நட்பை நிலை நிறுத்துகிறார். உலகில் வாழ்க்கையின்பம் அடைந்தவர்கள் எய்துகின்ற சிறப்பு, நல்லறம் நின்று அவர்கள் மற்றவர்களிடம் அன்பு கொண்டு வாழும் வாழ்க்கையின் பயன் என்கிறது உலகப் பொதுமறை (குறள்.75).

     மக்களிடத்தில் அன்பு இல்லாமலும், வலுவான துணையும் இல்லாமலும், ஆற்றலும் அற்று செயல்படும் அரசின் மீது வன்மை மிக்க பகை வந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும் (குறள்.862). அறத்தையும் மறத்தையும் அன்பால் சமன் செய்ய வேண்டும். இல்லையெனில் நட்பிழந்து, நாடிழந்து சிறைப்பட்டுச் சாக நேரிடும்.

     ஆழமான கடலும், அழகிய நிலப்பரப்பும்‌, காற்றியங்கு திசையும்‌, விரிந்த வானும்‌ ஆகியவற்றை வரையறுத்து அறிந்தாலும்‌, நின்‌ அறிவும்‌ அன்புக்‌ கண்ணோட்டமும்‌ அளவிட்டுக்‌ கூறுவதற்கு அரியனவாகும். நின்‌ குடைவாழ்வோர்‌ சோறாக்கும்‌ நெருப்புடனே, செஞ்‌ஞாயிற்றின்‌ வெம்மையுமன்றிப்‌, போர்‌ வறுமை கிய வெம்மைகளை அறியார்‌; பகைவர்‌ மண்ணைக்‌ கைப்பற்றி வாழும்‌ தலைவனே! நின்‌ மண்ணைக்‌ கருவுற்ற பெண்டிர்‌ மசக்கையால்‌ உண்பாரே அன்றிப்‌ பகைவர்‌ ஒருபோதும்‌ கைக்கொள்ளார்‌. அத்தகைய அரிய நாடும்‌, காவல்‌ மிகுந்த அரணும்‌, அறம்‌ நிறம்பிய செங்கோன்மையும்‌ உடையவனே!  என்று அறத்தாலும் மறத்தாலும் சிறந்து விளங்கிய சேரன் இரும்பொறையின் பெருமையைப் பாடுகின்றார் குறுங்கோழியூர்‌ கிழார் (புறநானூறு.20)‌.   அன்பு செய்வார்க்கும்‌, வீரம்‌ கொண்ட மறவர்களுக்கும்‌ அன்பு மிகச்சிறந்த கருவியாகும்‌. அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று சொல்பவர் அறியாதவர்; நன்கு ஆராய்ந்து பார்த்தால் மறச்செய்கைகளுக்கும் அன்பே துணையாயிருக்கும். இதனை அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை (குறள்.76) எனத் துணிவுப் பொருள்படத் தூய மறையால் துலக்கியுள்ளார் தேவர்‌.

ஏலுதலில் அன்பு

     மக்களுக்குப் பணியாற்ற ஒருவனைத் தேர்ந்தெடுக்கும்போது அவனின் குணங்களை ஆராய்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும். மக்களோடு அன்பாகப் பழகுகின்றவனா? மக்களின் முன்னேற்றத்திற்கான செயலைத் திறம்படச் செய்யும் அறிவு பெற்றவனா? செயல்பாட்டில் நன்மை பயக்கும் சிந்தனைத் தெளிவு கொண்டவனா? மானிடச் சுயநலமாகிய மாசு என்ற மன அழுக்கற்றவனாகவும் பேராசை இல்லாமலும் தேர்ந்துசெயல்புரிவானா? என்பதனை இழைத்துணர்தல் வேண்டும். இந்நான்கு குணங்களும் நன்றாகக் கொண்டவனையே ஆட்சி செலுத்தத் தேர்வுசெய்ய வேண்டுமென்று வள்ளுவர் வகுத்துரைக்கின்றார் (குறள். 513).

     இல்லாண்மை கொண்டவன் தன் நாட்டின் மீது அன்பும், தகுதியானக் குடிப்பிறப்பும், முடிவேந்தன் விரும்புகின்ற உயர்ந்த பண்புகள் அமைதலும்  வழியுரைப்போருக்கான தகுதியான பண்புகள் என அறுதியிடுகின்றான். அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் பகைதணிவினைக்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும் என்கிறது வள்ளுவனார் வைப்பு (குறள்.682).

     மற்றவரிடம் அன்பு காட்டலும், பழிச் சொல் கூறாமல் இருத்தலும், பகிர்ந்து உண்ணும் பழக்கமும், நெடுங்காலப் பழக்கத்தாரிடம் இரக்கச் செயலாற்றலும், உண்மை பேசுதலுமாகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும். இவ்வுயர் வழியைப்  பெருநாவலர் அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால் ஊன்றிய தூண் (குறள்.983) என்று பொருள்படத் துதிக்கின்றார்.  

வள்ளுவரும் வள்ளலாரும்

     அன்பு என்பது தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்தலேயாகும். இணையாள், ஈன்றார், உற்றார், உலக மக்களென அன்பு விரிவடைகின்றது. அன்பின் அகல்வுரையை விருந்தோம்பல், இனியவை கூறல், செய்ந்நன்றி அறிதல், நடுவுநிலைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, ஒப்புரவறிதல், ஈகை என்பனவற்றால் எடுத்துப்பேசுகின்றார் வள்ளுவர்.

     தன்னைச்சுற்றி வாழும் சக மனிதர்கள் மட்டுமல்லாமல் பிற எல்லா உயிர்களிடமும் அன்பு காட்ட வேண்டும். உலக ஒருமைப்பாட்டுணர்ச்சி தோன்ற வேண்டுமெனில் அஃது அன்பு செலுத்துவதால் மட்டுமே சாத்தியமாகும். எந்த அளவிற்கு நம்முடைய மனத்தைப் பிற உயிர்களின் மீது அன்பு செலுத்த பண்படுத்துகின்றோமோ அந்த அளவிற்கு நம்மால் அமைதியான இன்பமான வாழ்க்கை வாழமுடியும் என்பதனை ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை யுளராகி உலகியல் நடத்தல் வேண்டும் என்று உறுதிபடக் கூறுகின்றார் வள்ளலார்.

     பெறுதற்கரிய மக்களுயிர்க்கு பொருந்தி வாழும் நல்லுணர்வை உண்டுபண்ணுவது அன்பே என்பதை இருவர் கூற்றும் எடுத்தியம்புகின்றன. 

முடிவுரை  

     இல்வாழ்க்கைக்கு அன்பே உயர்பண்பாகும்; அறமே நற்பயனாகும். அடைக்க முடியாத அன்பின் குறியீடு நம் கண்களிலிருந்து வெந்துளியாய் வெளிப்படும். அன்போடமைந்து வாழ்வதே உடலோடு ஒன்றிய உயிரின் தொடர்பாகும். அறத்திற்கும் அன்பு வேண்டும். அறத்தோடு கூடிய மறத்திற்கும் அன்பு வேண்டும். எலும்பில்லாத புழுக்களை வெயில் சுட்டு வருத்துவதுபோல அன்பில்லாத மாந்தரை அறம் வருத்தும். உள்ளத்தில் அன்பில்லையானால் வெளியுறுப்புகள் அழகாக இருந்தும் எந்தப் பயனும் இல்லை. உயிரின் உயர்ந்த நிலையே அன்புதான் என்று அன்பின் சிறப்பை அழகுற விவரிக்கின்றார் வள்ளுவர். அன்பின் அலைவட்டம் உள்ளத்தில் உருவானால் இல்லறமும் சிறக்கும்; இவ்வுலகமும் சிறந்து விளங்கும்.

தேமொழி

unread,
Nov 2, 2025, 5:00:28 PM (2 days ago) Nov 2
to மின்தமிழ்
அருமை, பகிர்வுக்கு நன்றி 
Reply all
Reply to author
Forward
0 new messages