ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 01 January 2026 அகரமுதல
(வெருளி நோய்கள் 901-905: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 906-910
புனைவுருவான கேர்மிட்டு தவளை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கேர்மிட்டு வெருளி.
கேர்மிட்டின் பகுத்தறிவு, விரைவு, துணிச்சல் செயற்பாடு பலரையும் கவர்ந்தாலும் அதே விரைவும் துணிச்சலுமான செயற்பாடுகளே பலருக்கு வெருளி விளைவிப்பதாக உள்ள்து.
தவளை வெருளி(Ranidaphobia), போன்மை வெருளி (Automatonophobia) உள்ளவர்களுக்குக் கேர்மிட்டு வெருளி வரும வாய்ப்பு உள்ளது.
00
கேலிச்சித்திரப் பாத்திரம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கேலிப் பாத்திர வெருளி.
கேலிப்படங்களில் இடம் பெறும் தனித்துவத் தோற்றம் காரணமாகச் சிறுவர்களுக்கு அச்சம் வருகிறது. வஞ்சன்(வில்லன்) பாத்திரத்தால் பாதிக்கப்படுவதைப் பார்க்கும் சிறுவர்கள் கெட்டகனவுகளுக்கும் உள்ளாகிறார்கள். இதனால் ஏற்படும் பாதிப்பும் வெருளியை உண்டாக்குகிறது. இவை கதைப்பாத்திரங்களே நேரில் வரா எனச் சிறுவர்களுக்கு அறிவுறுத்தி இவ்வச்சத்தைப் போக்க வேண்டும்.
பெரியவர்களுக்கும் கேலிப் பாத்திர வெருளி வரும வாய்ப்பு உள்ளது. சிறுவர்கள் வளர வளர சிறு அகவையில் ஏற்பட்ட வெருளியும் வளரும் வாய்ப்பு உள்ளது.
00
கேள்விக்குள்ளாதல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கேள்விக்குள்ளாதல் வெருளி.
மாணாக்கர்களிடம் ஆசிரியர்கள் வினா தொடுப்பது குறித்த அச்சம் வேறு வகை. அமைப்பின் பொறுப்பாளர்கள், அரசியல் வாதிகள், பிறரால் அல்லது கட்சியினரால் தம் செயல்பாடுகள் குறித்துக் கேள்வி கேட்பர் என்ற எதிர்பார்ப்பு அல்லது கேள்வி கேட்கப்படுதல் போன்ற சூழலில் ஏற்படும் பேரச்சம் இது.
00
கை உலர்த்தி(hand dryer) குறித்த வரம்பற்ற பேரச்சம் கை உலர்த்தி வெருளி.
கை உலர்த்தி இயங்கும் பொழுது ஏற்படும் ஒலியைக் கேட்டுச் சிலர் அஞ்சுகின்றனர். அதிலிருந்து வரும் வெப்பக்காற்றால் கைகள் தீய்ந்து விடும் அல்லது கைகளுக்குத் துன்பம் நேரும் எனச் சிலர் அஞ்சுகின்றனர். இவற்றால் கை உலர்த்தி வெருளிக்கு ஆளாகின்றனர்.
கையை உலரவிடுதல் என்னும் பொருள் கொண்ட Manussiccus என்னும் இலத்தீன் தொடரிலிருந்து உருவானது. கையை உலரவிடும் கருவி கை உலர்த்தி என்றாயிற்று.
00
கை விலங்கு குறித்த வரம்பற்ற பேரச்சம் கை விலங்கு வெருளி.
முன்னரே தளையிடப்பட்டவர்கள், குற்றவாளிகள், ஏதேனும் சூழலில் குற்றச்சாட்டிற்கு ஆளான அப்பாவிகள் ஆகியோருக்குச் சிறையிடப்படுவோம் என்ற அச்சத்தால் கைவிலங்கு வெருளி வருகிறது.
பிணைப்பு வெருளி (Merinthophobia) உள்ளவர்களுக்குக் கைவிலங்கு வெ்ருளி வரும் வாய்ப்பு உள்ள்து.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5