(வெருளி நோய்கள் 406-410 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 411-415
411. உணர்ச்சி வெருளி – Animotophobia
உணர்ச்சி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உணர்ச்சி வெருளி.
மகிழ்ச்சி சார்ந்த அல்லது துயர உணர்வுகள் எதுவாயினும் அதற்கு ஆட்பட்டுப் பேரச்சம் கொள்வர்.
உணர்ச்சிவய வெருளி(Emotaophobia) உள்ளவர்களுக்கு உணர்ச்சி வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00
உணர்ச்சிவயம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உணர்ச்சிவய வெருளி.
உணர்ச்சி வெருளி(Animotophobia) உள்ளவர்களுக்கு உணர்ச்சிவய வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00
உணவு விடுதிபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் உணவு விடுதி வெருளி.
உணவகங்களில் தரப்படும் உணவு நலஆதாரமற்று(சுகாதாரமற்று) இருக்கும், தூய்மையற்ற சூழலில் சமைக்கப்படும், கலப்பட உணவாக இருக்கும், கலப்படப் பொருள்களில் உணவை ஆக்கியிருப்பர், தரமற்ற பொருள்களில் சமைத்திருப்பர், பணியாளர்கள் அழுக்குடையுடன், அழுக்கு உடம்புடன் சமைப்பர், வேறு எங்கோ சமைத்ததைத இங்கே கொண்டுவந்து விற்பர் என்பன போன்ற பல ஐயங்கள் ஏற்பட்டுப் பெருங்கவலையும் இவற்றால் வயிற்றுப்போக்கு, உடல் நலக்குறைவு ஏற்படும் என்று பேரச்சமும் கொள்வர்.
தமிழ்நாடு உணவு விடுதிகள் சட்டம்-1958 பிரிவு – 2(1)இன் படி, பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் உணவகம் அல்லது தங்கும் வசதியுடன் உணவு வழங்கும் தொழில் இடங்கள் போன்றவை உணவு விடுதிகள் எனப்படும். சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்படி பதிவு பெற்ற சங்கங்களால் நடத்தப்படும் உணவகங்கள், சிற்றுண்டி விடுதிகள் போன்றவையும் உணவு விடுதிகள் எனப்படும். ஆனால் கல்வி நிறுவனங்கள் நடத்தும் உணவகங்கள் இச்சட்டத்தின் கீழ் உணவு விடுதி என்னும் வகைப்பாட்டில் வரா.
பொதுவாக நாம் வழக்கில் உணவுப்பொருள் விற்பனை நிலையத்தையே உணவு விடுதி(Hotel) என்கிறோம். ஆனால் ஆங்கிலத்தில் தங்கும் வசதி உள்ள உணவு விடுதியையும ‘Hotel’ என்றே சொல்கின்றனர். எனவே, தமிழில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே, தங்கும் வசதி யுள்ள உணவு விடுதியை உறைவகம் என வேண்டும். உணவகம் என்றால் உணவு மட்டும் தரும் இடம். உறைவகம் என்றால் உணவும ்தங்குமிட வசதியும் தருமிடம். விடுதி என்பது தங்குமிட வசதி மட்டும் உள்ள இடம்.
00
உணவு குறித்த வரம்பற்ற பேரச்சம் உணவு வெருளி.
அரைகுறையாய்த் தெரிந்து கொண்டு இன்னின்ன உணவு ஒவ்வாமையானது, இன்னின்ன உணவு வயிற்றுப் புண்ணை அல்லது வாய்ப்புண்ணை அல்லது இரண்டையும் உண்டாக்கும்; வளி(வாயு) முதலிய மூன்றை உண்டாக்கும்; கை கால் மூட்டு வலிகளைப் பெருக்கும்; நீரிழிவை உண்டாக்கும் அல்லது பெருக்கும்; இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் அல்லது கூட்டும்; எனப் பலவகையாகக் கவலைப்பட்டுப் பேரச்சம் கொள்வர். மருத்துவர்களின் அறிவுரைக்கிணங்க உணவுக் கட்டுப்பாட்டைப் பேண வேண்டும்.ஆனால் தேவையற்ற பேரச்சம் கொள்ளக் கூடாது.
பசியற்ற உளநோய்(anorexia nervosa) என்பதுடன் இதை ஒப்பாகக் கருதக்கூடாது என்கின்றனர்.
அனோரெக்சியா நெர்வோசா என்னும் சொல் 1873 ஆம் ஆண்டில் விக்டோரியா அரசியின் தனிப்பட்ட மருத்துவர்களில் ஒருவரான் வயவர் வில்லியம் குல் என்பவரால் உருவாக்கப்பட்டது. orexis என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் பசி. முதல் எழுத்து அ(a) என்பது இன்மையைக் குறிக்கும் முன்னடை. n இரண்டு உயிர் எழுத்துகளின் இணைப்பைக் குறிக்கிறது. எனவே, பசியின்மை என்ற சொல் மூலம் உண்பதற்கு விருப்பமின்மை என்னும் பொருள் வழங்குகிறது. என்றாலும் பசியற்ற உளநோய்கூட நாளடைவில் உணவின் மீது வெறுப்பை உண்டாக்கலாம் அல்லவா?
பொதுவாகவே உண்பதில் சிலருக்குப் பேரச்சம் இருக்கும். சிலருக்குச்சிலவகை உணவுமீது மட்டும் பேரச்சம் இருக்கும். சிலருக்கு வெளியூர்களில் அல்லது வெளிநாடுகளில் உண்பதற்குப் பேரச்சம் வரும். பழக்கமில்லாத உணவை உண்பதற்கும் பேரச்சம் கொள்வர்.
sîtos என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் கோதுமை வெதுப்பம் எனப் பொருள்.
cibus என்னும் இலத்தீன் சொல்லிற்கு உணவு எனப் பொருள்.
cibo என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் உணவு.
sîtos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கோதுமை, உரொட்டி. இங்கே பொதுவாக உணவைக் குறிக்கிறது.
Sitophobia என்றால் உண்ணும் வெருளி என்னும் பொருளில் தனியாகச் சிலர் குறிக்கின்றனர். உண்ணும் வெருளியும் உணவு வெருளியும் ஒன்றுதான். எனவே இணைத்து இங்கே தரப்பட்டுள்ளன.
அயல்நாட்டு உணவுகள் பட்டியலில் இருந்து உணவைத் தெரிவுசெய்வது தொடர்பான பேரச்சம் (அயலக)உணவுத்தெரிவு வெருளி.
அயல்நாட்டு உணவுப்பெயர்கள் அயல்மொழியில்தான் இருக்கும். அதனைத் தம்மொழி ஒலிவடிவில் படிக்கும் பொழுது புரியாமல் ஒத்துக் கொள்ளாததை அல்லது உணவுப்பழக்கத்தில் இல்லாததை அல்லது விரும்பாததைத் தெரிவு செய்து விடுவோம் என்று குழப்பத்தில் ஆழ்ந்து பேரச்சம் கொள்வர் இத்தகையோர்.
அன்றாடப் பயன்பாட்டில் தமிழைத் தொலைத்துக் கொண்டிருக்கும் தமிழர்கள் வாழும் தமிழ் நாட்டில் உணவகங்களின் உணவு நிரல் ஆங்கிலத்தில்தான் உள்ளன. அரிதாக எங்கேனும் தமிழ், ஆங்கிலம் என இரு மொழியில் இருந்தாலும் அயற்சொற்களைத்தான் தமிழ் வரிவடிவில் காணலாம். இச்சூழலிலும் வெருளி வருகிறது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5