1. பூங்கொடி 2 – கவிஞர் முடியரசன்: புகழ்மாலை ++ 2. தோழர் தியாகு எழுதுகிறார் 131 : திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் – அ

53 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jun 13, 2023, 5:34:14 PM6/13/23
to thiru thoazhamai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Dr. Ku.Muthukumar, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, limra...@gmail.com, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, antony louis, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, rajendran krishnan, raman kannusamy, Guberan Rajan, பூங்குழலி Poonkuzhali, Batchaa Thiruchi, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, meen...@gmail.com, Dr. Namadhu MGR, H...@ammkitwing.in, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan s, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, chitr...@gmail.com

பூங்கொடி 2 – கவிஞர் முடியரசன்: புகழ்மாலை

 ஃஃஃ    இலக்குவனார் திருவள்ளுவன்      14 June 2023      அகரமுதல



(பூங்கொடி 1 – கவிஞர் முடியரசன் – தொடர்ச்சி)

புகழ்மாலை

(பூங்கொடி வெளியீட்டு விழாவில்-1964)

இன்று நாட்டிலுள்ள நிலையை-தமிழுக்குத் தொண்டாற்றிய புலவர்களை, பேராசிரியர்களை, அரசியல் தலைவர்களை, அறிஞர்களை, நாவலர்களை, கலைஞர்களை வெவ் வேறு பெயர்களால் காட்டுகிறது. பூங்கொடி.

  • பண்டாரகர் அ. சிதம்பரநாதனார் எம்.ஏ.,பி.எச்.டி.

தமிழ் வாழ, தமிழர் குறிக்கோள் வாழ வழி காட்டுகிறது பூங்கொடி.

  • பண்டாரகர் மா. இராசமாணிக்களுர் எம்.ஏ.,பி.எச்.டி.

ஆற்றொழுக்கனைய கவிதை யோட்டமும் ஆழ்ந்த கருத்துச் செறிவும் நிறைந்த காப்பியம் பூங்கொடி. அறப்போர்க்கும் மறப்போர்க்கும் விளக்கங்கரும் வரிகள் இதனை உறுதிப்படுத் தும். ஆருயிர் கொடுப்பது அறப்போர் ஆகும், வேறுயிர் எடுப்பது மறப்போர் ஆகும்”.

– பண்டாரகர் மு. வரதராசனர் எம்.ஏ.,பி.எச்.டி.

தாய்மொழிக்காகப் போராடிச் சிறை செல்வோரையும், பேரிடரைத் தாங்கிக் கொள்ளும் தலைவர்களையும் நினைவூட்டு கிறது இப் பூங்கொடி. இஃது உலக ஒருமைப்பாட்டுக் காப்பியமே என்பதற்கு அகச் சான்றுகள் பல உள.

  • பண்டாரகர் தமிழண்ணல்எம்.ஏ.,பி.எச்.டி.

உலக மொழிகளில் தேசியக் காப்பியம் என்று கூறத்தக்க நூல்கள் மூன்று. அம்மூன்றனுள் ஒன்று பூங்கொடி.

-பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் எம்.ஏ.

தமிழன், யார் வேண்டுமானலும், எது வேண்டுமானலும் வரட்டும் என்று சொல்லும் பரந்த மனப்பான்மை படைத்தவன். அதற்காக எந்த மொழியாவது வந்து நம்மிடம் அமர்ந்து குழப்பம் செய்தால் கிளர்ந்கெழுவோம் என்று கூறுகிறாள் பூங்கொடி. -செல்லபாண்டியனார் பி.ஏ.பி.எல்,

சட்டமன்ற அவைத்தலைவர்-தமிழ்நாடு

எப்பக்கம் சுவைத்தாலும் இனிப்பது கற்கண்டு; எப்பக்கம் படித்தாலும் இனிப்பது பூங்கொடி.

-உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை

பாரதியார் என்ற வித்திலிருந்து முளைத்தது பாரதிதாசன் என்ற செடி. அச் செடியிலிருந்து தழைத்தது முடியரசன் என்ற கொடி. அக்கொடி பூங்கொடியாகி எங்கும் படர்ந்து மணம் பரப்புகிறது.

– பேராசிரியர் க அன்பழகன் எம்.ஏ.

இப்புதிய காப்பியப் படைப்பு, தமிழுக்கு மறுமலர்ச்சி அளிக்கும் ஒரு சீரிய பணியாகும். பூங்கொடி தமிழகப்பெண்டிர்க்கு நல்ல வழிகாட்டியாக அமைந்துள்ளாள். இக்காப்பியம் இலக்கிய இலக்கண வளஞ் செறிந்து, உவமை நலத்தாற் சிறப்புற்று விளங்குகிறது. பண்டைத் தமிழ்க் காப்பியங்களைப் போல் பிற்காலத்தில் தமிழில்புதுக்காப்பியங்கள் தோன்றிற்றில. அக்குறைபாட்டினை நீக்குமுறையில் இற்றைநாள் பூங்கொடி’ தழைத்துள்ளாள். .

-செந்தமிழ்ச் செல்வி, சனவரி 1965

சித்திரத்தில் பார்ப்போம்; சிலை செய்து கும்பிடுவோம் என்னும்படியாகத் திகழும் இப்பூங்கொடி நல்லாளாகிய நம் உடன்பிறப்பாட்டி, தன்னைத் துறந்து, தமிழைக் காக்கின்ற செயல் செறியே இவள் நமக்கு உணர்த்திச் செல்லும் தத்துவ மாகும.

-தமிழ்ப்பாவை 7-1-1965 .

தமிழ்த் தெய்வ வணக்கத்துடன் தொடங்கித் தமிழணங்கின் உணர்ச்சி மொழிகளுடனும் விடுதலை மொழிகளுடனும் முடிவு பெறுகின்றது இந்நூல். புதுமை வழிகளில் செல்லாது பண்டைத்தமிழ் மரபை ஒட்டி அமைந்திருக்கும் இந்நூலும் இன்றைய தமிழுக்கு ஒரு நல்ல அணிதான்.

– “ -சுதேசமித்திரன் (பி-சிரீ.) 16-6-1965 –

துள்ளும் நடையில் எழுதப்பட்டுள்ள சுவை நிறைந்த இக் காவியம் (பூங்கொடி) படிக்கப் படிக்க இன்பம் ஊட்டுகிறது.

-வீரகேசரி 8-8-1965

இக் நூலினுள் உவமைகள் பாங்குற எடுத்தாளப்பட்டுள்ளன. ஒசை நயம் மிகுந்த பகுதிகள் பல் இந்நூலகத்து உண்டு. இயற்கைக்காட்சி வருணனைகள் எழிலுறத் தரப்பட்டுள்ளன.

-திருச்சி வானொலி நிலையம் 4-9-1965

இந்தக் கவிஞரின் அகவலில் ஒர் இன்பம் பெருகுகின்றது. சிறந்த  சொல்லாட்சி மிளிர்கின்றது. கவிதை உள்ளம் பேசுகின்றது. ஆனால், தமிழ்ப் பெருமையைப் பரப்புவதற்கே உற்ற கருவியாய் இத்தக் காப்பியம் அமைந்து விட்டது. தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறும் என்பதற்கு ஐயம் இல்லை. அந்தி மாலைச் சிறப்பைப் பற்றி இவர் தரும் சித்திரம் நம் மனத்தை விட்டகலாது. இந்த இலக்கிய யாழ் முழுவதும் இன்பமாய் ஒலிப்பது நம் தமிழணங்கின் தெய்வக் குரல்தான். அக் குரலினுக்குச் செவி சாய்த்துத் தமிழ்த் தேவியை நாம் வணங்கு வோமாக.

-தினமணி (இரா. சிரீ. தேசிகன்) 26-10-1965

இருபதாம் நூற்றாண்டில் எழுந்த புதிய காப்பியங்களில் இதற்குத் தனியிடம் உண்டு. ஒரு நாற்பதாண்டுக் காலத் தமிழ் நாட்டின் வரலாற்றை அது சுவைபட எடுத்துக் காட்டுகிறது. இக் காப்பியம் தமிழுக்குக் கிடைத்த ஒரு பெறற்கருஞ் செல்வம் எனலாம்.).

-‘தாமரை’யில் எழில் முதல்வன், ஏப்பிரல் 1967

காவிய நயத்துடனும் கவிதை மணத்துடனும் அமைந்துள்ள இந்நூல் முடியரசனைக் கவியரசனுக்குகிறது. ஒரு முறை படித்து பிறகு, நயத்துக்காகவும் சொல்லழகிற்காகவும் இன்னொருமுறை படிக்க வேண்டுமெனத் தோன்றுகிறது.

-முத்தாரம் 1-5-1968

This is the Summary of the story in 31 Kathais or chapters in a chaste Flowing style with clear discriptions and picturesque situations. A close imitation of a master-piece of literature in all its parts in the same language can become stale. Otherwise the work which seems to be meant mainly in praise of the Tamil language is one which is laudable on its several Fronts.

THE HINDU 24–1–1965

(தொடரும்)

கவிஞர் முடியரசன்பூங்கொடி

++

தோழர் தியாகு எழுதுகிறார் 131 : திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் – அ

 


ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்      14 June 2023      அகரமுதல


(தோழர் தியாகு எழுதுகிறார் 130 : வடவர் வருகையும் தமிழ்நாடும் 5 தொடர்ச்சி)

திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் –  

நீதிபதியிடம் ஒரு கேள்வி

இவற்றை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்ப்போம். அதற்கு முன் நீதிபதியிடம் ஒரு கேள்வி: இந்த ஏழு குறைபாடுகளையும் மீறித் தானே முதல் எதிரி சுப்பிரமணியனுக்கு 323, 324 பிரிவுகளில் குற்றத் தீர்ப்பும் தண்டனையும் கொடுத்துள்ளீர்கள்? முதல் எதிரிக்கும் மற்றவர்களுக்கும் எதிரான பிற குற்றச்சாட்டுகளை மெய்ப்பிப்பதற்கு மட்டும் இந்தக் குறைபாடுகள்(?) எப்படித் தடையாகும்?

தாமதம் ஏன்?

வழக்கிற்குக் காரணமான முதல் நிகழ்ச்சி 2002 மே 20ஆம் நாள் நடைபெற்றது. மே 30ஆம் நாள்தான் முறையீடு தரப்பட்டது. இந்தப் பத்து நாள் தாமதத்திற்கு என்ன காரணம்?

வஞ்சிக்கப்பட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கருப்பையா தப்படித்து அறிவிப்புச் செய்துள்ளார். ஆனால் அதற்காக, சுப்பிரமணியனும் மற்றவர்களும் எடுத்த நடவடிக்கை அவரை மிரளச் செய்து விட்டது. மறுநாள் அவர் இலால்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஆனால் காவல்துறைக்குத் தெரியப்படுத்தவில்லை. ஊர் திரும்ப அஞ்சி கிளியனூரில் உள்ள மாமனார் வீட்டுக்குப் போய்விட்டார். ஒரு வாரம் கழித்து விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த செல்வராசு, செல்வம், கொடியரசு, சக்திவேல் ஆகியோர் அவரை அணுகிக் காவல்துறையில் முறையீடு செய்யும்படி அறிவுரை கூறிய போதும் அவர் மறுத்து விட்டார். இரத்தினம், அலெக்குசு, செபசுட்டியன் ஆகிய மூன்று வழக்குரைஞர்கள் அங்கு வந்து அவரைப் பார்த்து, முறையீடு செய்வதற்கு இணங்கச் செய்துள்ளனர். அவரது முறையீட்டை செபசுட் டியன் எழுதி உள்ளார். மாவட்ட ஆட்சியரிடம் அம்முறையீடு தரப்பட்டது.

தைரியமூட்டிய விடுதலைச் சிறுத்தைகள்

தாமதத்திற்கான இந்தக் காரணம் இரண்டாம் வழக்கிற்கும் பொருந்தும். சூடு போடப்பட்டு மலம் தின்ன வைக்கப்பட்டதில் முருகேசனும் இராமசாமியும் அச்சத்தாலும் அவமானத்தாலும் ஒடுங்கிப் போய் அவரவர் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கும் செல்லவில்லை. காவல் நிலையத்துக்கும் செல்லவில்லை. வீட்டுக்குள்ளேயே தாய்மார்கள் அவர்களுக்கு மருத்துவம் செய்தனர். விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவர்களைச் சந்தித்துத் தைரியமூட்டினர். இரத்தினம், அலெக்குசு, செபசுட்டியன் ஆகிய வழக்குரைஞர்கள் அவர்களை வந்து பார்த்து நடந்தவற்றைக் கேட்டனர். அவர்களை செபஸ்டியன் இல்லத்திற்கு அழைத்துச் சென்று முறையீடு ஒன்றை அணியப்படுத்தினர். கருப்பையாவோடு கூட அவர்களும் மாவட்ட ஆட்சியரிடம் சென்று முறையீடு தந்தனர்.

கருப்பையா, முருகேசன், இராமசாமி ஆகிய மூவரின் முறையீடு குறித்தும் மாவட்ட ஆட்சியர் காவல்துறைக்குத் தெரிவிக்க, காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் இந்த வழக்கில் புலனாய்வு மேற்கொண்டார்.

சரிநிகரான தனிமனிதர்களா?

முறையீடு செய்வதில் ஏற்பட்ட 10 நாள் தாமதத்திற்கான இந்த விளக்கத்தை நீதிபதி இராமமூர்த்தி ஏற்றுக்கொள்ளவில்லை. சமூகத்தில் சரிநிகரான தனிமனிதர்களிடையே ஒரு தாக்குதல் நிகழ்ச்சி நடைபெற்றிருக்குமானால், அது குறித்து முறையீடு செய்வதில் தாமதம் ஏற்படத் தேவையில்லை. அப்படித் தாமதம் ஏற்படுமானால் அது வேறுவிதமான ஐயங்களுக்கு இட்டுச் சென்று வழக்கையே பாதித்து விடக் கூடும்.

ஆனால் இங்கு தாக்கியவர்கள் ஆதிக்கச் சாதியினர், தாக்கப்பட்டவர்கள் அடிமைச் சாதியினர். அவர்கள் தீண்டாதவர்கள், இவர்கள் தீண்டப்படாதவர்கள். அவர்கள் நிலமுடையவர்கள், இவர்கள் நிலமற்ற கூலித் தொழிலாளர்கள், அவர்களைச் சார்ந்து பிழைத்துக் கிடப்பவர்கள். இந்தப் பின்னணியில், தாக்கப்பட்டவர்கள் உடனுக்குடன் முறையீடு செய்திருந்தால்தான் வியப்படைய வேண்டும். தங்களுக்காகப் போராடுகிற அமைப்பைச் சேர்ந்தவர்களும் வழக்குரைஞர்களும் தேடிவந்து பார்த்துத் தெளிவும் துணிவும் ஊட்டிய பிறகே அவர்களால் நடந்ததை வெளியில் சொல்லவும் மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு செய்யவும் முடிந்தது என்பது முற்றிலும் நம்பத்தக்கதாகவே உள்ளது.

ஆனால் நீதிபதி இராமமூர்த்திக்கோ இது நம்பும்படியானதாக இல்லை. ஏன்? அவர் தன் தீர்ப்பில் எழுதுகிறார்:

“The careful perusal of the evidence of witnesses would show that there was no discrimination prevails in the village. It is also not the case of the prosecution that the village people have been practising untouchability against the SC and ST people in that village.” (தீர்ப்பின் பக்கம் 73).

சாதியை ஒழித்த எழுதுகோல்

இதிலுள்ள ஆங்கில இலக்கணப் பிழையை மன்னித்து விட்டு (தமிழ் தெரிந்த நீதிபதி ஆங்கிலத்தில் தீர்ப்பெழுத வேண்டுமா? என்பது தனிக்கேள்வி) கருத்துப் பிழையை மட்டும் கவனத்தில் கொள்வோம். திண்ணியம் ஊரில் சாதிப் பாகுபாடு ஏதும் இல்லவே இல்லையாம்! இந்த வழக்கில் சாட்சிகள் அளித்துள்ள சாட்சியத்தைக் கவனமாகப் படித்து நீதிபதி இதனைக் கண்டுபிடித்தாராம்! அந்தச் சிற்றூரில் அட்டவணைச் சாதியினர்/அட்டவணைப் பழங் குடியினருக்கு எதிராகத் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக அரசு தரப்பும் சொல்லவில்லையாம்!

திண்ணியத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றச் சமுதாயத்தினரோடு சமமாக நடத்தப்படுகிறார்களாம்! கூட்டாக வாழ்கிறார்களாம் (equal treatment and joint living). தீண்டாமை இம்மியளவும் இல்லவே இல்லையாம்!

நீதிபதி இராமமூர்த்தியின் எழுதுகோல் ஒரே ஒரு தீர்ப்பின் மூலம் திண்ணியத்தில் சாதியை ஒழித்து விட்டது! அதற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். சாதியொழிப்பு வீரர் விருது என்று யாராவது தருவதாய் இருந்தால் அவருக்குத்தான் தர வேண்டும்.

திண்ணியத்தில் தீண்டாமை கிடையாது, சாதிப் பாகுபாடு கிடையாது என்பதற்கு நீதிபதி இராமமூர்த்தி காட்டும் காரணங்கள் என்னவாம்? ஊர்க்கோவிலில் திருவிழா நடைபெறும் போது சாதி இந்துக்களில் ஒருவரும் தாழ்த்தப்பட்டவர்களில் ஒருவரும் காப்புக் கட்டிக் கொள்ள வேண்டும். இந்த வழக்கில் தாக்கப்பட்டவரான கருப்பையா “என்னிடம் வாங்கிய இரண்டாயிரத்தை மீட்டுக் கொடுக்கவில்லை என்றால் காப்புக் கட்டிக் கொள்ள மாட்டேன்” என்று கூறியதாக சாட்சியம் உள்ளது. இதை வைத்து கோவில் திருவிழாவில் இரு தரப்பினருக்கும் சமத்துவம், சம மரியாதை நிலவுவதாக முடிவு செய்கிறார் நீதிபதி.

(தொடரும்)
தோழர் தியாகுதாழி மடல் 106



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages