— முனைவர் க. சுபாஷிணி
வணக்கம்.
ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்கள் 16ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் யோகானஸ் குட்டன்பர்க் அவர்களால் அச்சு எந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தாள்களில் அச்சு வடிவம் பெறத் தொடங்கின. மிகக் குறிப்பாக 18ஆம் நூற்றாண்டின் இறுதி தொடங்கி 19ஆம் நூற்றாண்டு 20ஆம் நூற்றாண்டு ஆகிய காலகட்டங்கள் தமிழ் இலக்கியங்கள் ஓலைச்சுவடிகளில் இருந்து தாள் அச்சு நூலாக பரிணாம மாற்றம் அடைந்த முக்கியமான ஒரு காலமாகும்.
அக்காலகட்டத்தில் தமிழறிஞர்கள் மட்டுமன்றி ஐரோப்பிய அறிஞர்களின் முயற்சியினாலும் பல தமிழ் நூல்கள் அச்சு வடிவில் வெளிவரத் தொடங்கின. தமிழில் எழுதப்பட்ட அனைத்து நூல்களும் அச்சு வடிவம் பெறப்பட்டு விட்டதா என்றால் "இல்லை" என்பது தான் அதற்கான விடையாக அமையும்.
ஏனெனில் தொடக்க காலத்தில் ஓலைச்சுவடிகளில் இருந்த நூல்களை அச்சு வடிவிற்குக் கொண்டு வர முயற்சி செய்தவர்களது எண்ணிக்கை குறைவு. அதற்கும் மேலாக பொருளாதார பலம் பொருந்திய சூழலில் மட்டுமே இதனை சாத்தியப்படுத்த முடிந்தது. ஆகவே சில நூல்கள் அச்சு வடிவம் கண்டன, பல நூல்கள் மறைந்து போயின. இப்படி தமிழ் மக்கள் இழந்த நூல்கள் ஏராளம்.
அச்சு வடிவில் வெளிவந்து நூல்களை கைகளில் எடுத்து வாசித்த அனுபவத்திலிருந்து 21ஆம் நூற்றாண்டில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.
21ஆம் நூற்றாண்டில் கணினி அது தொடர்பான தொழில்நுட்ப வளர்ச்சி விரிவடைந்த காரணத்தினால் மடிக்கணினி, செல்பேசி போன்ற எளிமையான கருவிகளில் நூல்களை வாசிக்கும் வாய்ப்பினை அனைத்து தரப்பினருக்கும் வழங்கியது. பொருளாதாரம் இதற்கு ஒரு தடையல்ல என்ற வகையில் எல்லோரும் நூல்களை வாசிக்கக் கூடிய வாய்ப்பு இந்தக் கணினி யுகத்தில் அமைந்தது. அதன் அடிப்படையில் நூல்களை வாசிப்பது என்பதைக் கடந்து ஒலி நூல்களாகக் கேட்டு பயன்பெறும் வாய்ப்பினைத் தொழில்நுட்பம் வழங்கி இருக்கின்றது.
இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு தொடர்ந்து தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படுத்தி வருகின்றோம். அத்தகைய ஒரு பணியாக அமைவது தான் நமது ஏராளமான திட்டங்களில் ஒன்றான "சுவலி" திட்டம் (
https://suvali.tamilheritage.org/).
இத்திட்டத்தின் வழி தமிழ்நாடு அரசினால் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் நூல்களைத் தன்னார்வலர்கள் வாசித்து அந்த நூல்களுக்கு மக்களிடையே அறிமுகத்தை வழங்கக்கூடிய நல் வாய்ப்பினைத் தமிழ் மரபு அறக்கட்டளை வழங்கி வருகின்றோம்.
மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக பார்வைத் திறன் அற்றவர்கள் இத்தகைய ஒலி நூல்களைக் கேட்டு பயன்பெற முடிகின்றது. நீண்ட தூர வாகனப் பயணத்தில் இருப்பவர்கள் இத்தகைய நூல்களைக் கேட்டுக்கொண்டே நெடுதூர பயணத்தை எளிதாக்கலாம். சாலையில் நடை பயிற்சி செய்பவர்கள் காலையில் தங்கள் காதுகளில் ஒலிக்கருவியை இணைத்துக் கொண்டு இந்த ஒலி நூல்களைக் கேட்டு மகிழ்ந்தவாறு தங்கள் உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம். வீட்டில் இருந்து கொண்டு மாலை நேரங்களில் தேநீரையும் காப்பியையும் பலகாரங்களையும் சுவைத்துக் கொண்டு இந்த ஒலி நூல்களை கேட்டு பயன்பெறலாம். இப்படி பல்வேறு வகையில் ஒலி நூல்கள் பொதுமக்களுக்கு பயன் தரக்கூடியது.
தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகள் ஒவ்வொன்றும் ஆய்வாளர்களுக்கும் ஆய்வின் மீது நாட்டமுள்ள பொதுமக்களுக்கும் மிகுந்த பயனளிக்கக் கூடியவை. அனைவரும் நமது "சுவலி" வலைப்பக்கத்தில் வெளியிடப்படுகின்ற ஒலி நூல்களை கேட்டு பயன்பெற வேண்டும் என்பதே தமிழ் மரபு அறக்கட்டளையின் எதிர்பார்ப்பு.
தமிழால் இணைவோம்!
அன்புடன்