தமிழர்களின் மரபுக்கலைகளில் பல கலைகள் இன்று மறைந்து வருகின்றன. சில கலைகள் முற்றிலும் வேறு வடிவம் கொள்கின்றன. கிராமக்கோயில்களில் கடவுளர் உருவங்களும் கடவுள்களின் வாகனங்களும் பல ஆண்டுகளுக்கு முன் சுடுமண் சிற்பங்களால் வடிவமைக்கப்பட்டன. இன்று களிமண்ணின் இடத்தை சிமென்ட் பிடித்துக்கொண்டது. ஆம், எல்லா கிராமக்கோயில்களிலும் இன்று சிமென்ட் சிலைகள் நிறுவப்படுகின்றன. இந்த மாற்றம் சுடுமண் சிற்பக்கலையை முற்றிலும் அழித்துவிட்டது. பழமையான ஒன்றிரெண்டு கோயில்களில் மட்டுமே சுடுமண் சிற்பங்கள் பராமரிப்பின்றி அழிந்து வரும் நிலையில் உள்ளன. இது தமிழகத்தின் பெரும்பானமை மாவட்டங்களில் நிலவி வரும் உண்மை.
சுடுமண் சிற்பங்கள்
களிமண்ணால் சிற்பம் செய்து பக்குவமாக உலர வைத்துச் சூளை போன்ற முறையில் சுட்டெடுத்தால் அது திடப்பட்டுவிடும். அவ்வாறு சுட்ட மண் சிற்பம் சுடுமண் சிற்பம் எனப்படுகிறது. மண்பாண்டங்களும் இம்முறையிலேயே செய்யப் படுகின்றன. இவ்வகையில் செய்யப்படும் சிற்பங்களும், பாண்டங்களும் எளிதில் தேயாது. துரு ஏறாது. அவற்றில் பல்வகை வண்ணங்களைப் பூசுவர்.
சுடுமண் சிற்பம் - தொன்மையான சுடுமண் பொருள்கள்
தமிழகத்தில் தொல்லியல் துறையினரால் பல இடங்களில் அகழ்வாய்வு செய்யப் பட்டது. அவற்றில் கண்டுபிடிக்கப் பட்ட சுடுமண் பொருட்கள் பலவாகும். மனித உருவங்கள், விலங்குகளின் உருவங்கள், விளையாட்டுப் பொருள்கள், பொம்மைகள், இலிங்கங்கள், காதணிகள், நூற்புக் கருவிகள், வளையங்கள், மட்பாண்டங்கள், சமையற் கருவிகள், உருளைகள் போன்றவை அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. இவற்றில் கலை நுட்பங்களும் காணப்படுகின்றன. இவை கைத்திறனால் செய்யப் பட்டவையாக உள்ளன. திருக்காம் புலியூரில் கண்டெடுக்கப் பட்ட ஒரு சிலையின் சிகை அலங்காரம் காந்தாரக் கலையை நினைவூட்டுகிறது. இராமநாதபுரத்திற்கு அருகில் கிடைத்துள்ள புத்தரது சுடுமண் சிற்பத்திலும் இதே போன்று சுருள்முடி அமைப்புக் காணப் படுகின்றது. இது ஏறத் தாழ 8-9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக உள்ளது.
அகழ்வாய்வில் பல காலத்தைச் சேர்ந்த சுடுமண் பாவைகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. காஞ்சிபுரத்தில் சில சுடுமண் பாவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சிற்பங்கள் யாவும் பெரும்பாலும் சங்க காலத்தைச் சேர்ந்தவை என்று தெரிகிறது. கோயம்புத்தூர் மாவட்டம் போளுவாம் பட்டி என்ற இடத்தில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த சுடுமண் சிற்பங்கள் கிடைத்துள்ளன. இங்குக் கி.பி. 5-6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இயக்கன் என்னும் சிறு தெய்வத்தின் உருவங்கள் கிடைத்துள்ளன. தமிழகத்திலேயே அகழ்வாய்வில் சுடுமண் பொம்மைகள் மிகுதியாகக் கிடைத்துள்ளது இவ்வூரில்தான். தர்மபுரி மாவட்டத்தில் குசானர் (கி.பி. 1 ஆம் நூற்றாண்டு முதல் 3 ஆம் நூற்றாண்டு வரை) கலையோடு தொடர்புடைய சிற்பம் கிடைத்துள்ளது. 12-13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பங்களும் கோவை மாவட்டத்தில் கிடைத்துள்ளன.
இராமநாதபுரம் மாவட்டம் கொந்தகை என்ற இடத்தில் 14 - 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுடுமண் சிற்பங்கள் உள்ளன. தஞ்சாவூருக்கு அருகில் இராஜாளி விடுதி என்ற இடத்தில் நாயக்கர் கால மண்பாவைகள் கிடைத்துள்ளன.
மிக அண்மையில் தமிழகத் தொல்லியல் துறையினரால் திருத்தங்கலில் நடைபெற்ற அகழ்வாய்வில் ஸ்ரீவத்ஸம் சின்னம் பொறிக்கப்பட்ட சுடுமண் செங்கல் கிடைத்துள்ளது. இது சங்க காலத்தினைச் சேர்ந்ததாகும்.
வடஆர்க்காடு மாவட்டம் பையம் பள்ளியில் சுடுமண் பொம்மைகளும், சுடுமண் விளக்குகளும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
திருச்சிக்கு அருகில் உறையூரில் நடந்த அகழ்வாய்வில் உடைந்த சுடுமண் பொம்மைகள் பலவும் கிடைத்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை மனித உருவங்களாகும், காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சுடுமண் பொம்மைகள் மற்றும் சுடுமண்ணாலான யானைத் தலை ஆகியன உள்ளன. தர்மபுரி மாவட்டம் குட்டூரில் நடத்திய அகழ்வாய்வில் சுடு மண்ணாலான விலங்குகளின் உருவங்கள், பெண்ணின் தலை, பகடைக் காய்கள், புகைக் குழல்கள் போன்றவை கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. காவிரிப் பூம்பட்டின அகழ்வாய்வில் தலைப்பாகையுடன் கூடிய மனித உருவங்கள் கிடைத்துள்ளன.
கிராம தேவதைகள்
தமிழகத்துக் கிராமங்களில் இன்றும் சுடுமண் இறை உருவங்களைக் கொண்ட கோயில்கள் உள்ளன. பொதுவாக அய்யனார், மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன், கருப்பசாமி, பைரவர், மதுரை வீரன் கோயில்களில் சுடுமண் பொம்மைகள் ஏராளமாக வைக்கப் பட்டுள்ளன. சில இடங்களில் திருவிழாக் காலத்தில் மட்டும் இறையுருவங்கள் செய்து வைத்து வணங்குவர். திருவிழா முடிந்ததும் அவ்வுருவங்களை எடுத்துச் சென்று உடைத்திடுவர்.
அய்யனார் குதிரை
இந்தியா முழுவதுமே சுடுமண் குதிரை உருவம் பிரபலமானதாகும். தமிழகத்தில் பெரும்பாலும் அனைத்துக் கிராமங்களிலும் இதனைக் காணலாம். தலைவர்கள் அல்லது நாயகர்கள் கடவுள் தன்மையை அடைந்தனர் என மக்கள் நம்பினர். அவர்கள் ஏறிச் சென்ற குதிரையும் புனிதத் தன்மை பெற்றது. யாகங்களின் சின்னமாகவும் குதிரை கருதப்பட்டது. வேண்டுதல் நிறைவேறினால் கோயில்களில் சுடுமண் குதிரை செய்து வைக்கும் வழக்கமும் இருந்து வருகின்றது. கடவுளர்களில் அய்யனாருக்குக் குதிரை வாகனம் உண்டு. எனவே அவரே கிராமங்களைக் காப்பவர் என்ற நம்பிக்கை பெருக ஆரம்பித்தது. அய்யனாரது தளபதிகளும் குதிரை மீதமர்ந்து வருவதாகக் கருதப்பட்டது. இதன் விளைவாகக் கிராமங்களின் வெளியே நீர்நிலைகள் இருக்கின்ற இடங்களில் அல்லது குளக்கரைகளில் அய்யனார் கோயில்கள் அமைக்கும் மரபு தோன்றியது. அய்யனாரும் அவரது தளபதிகளும் கிராமங்களை மட்டுமின்றி அக்கிராம நீர் நிலைகளையும் காக்கின்றனர். இது நீரின் இன்றியமையாமையைக் குறிக்கின்றது.
பைரவர் சிற்பம்
சில ஊர்களில் சிவபெருமானின் பைரவ உருவமும் சுடுமண்ணால் செய்து வைக்கப் பட்டுள்ளது. பைரவர் கிராமக் காவல் தெய்வமாகவே கருதப்படுகிறார். திண்டிவனத்திற்குக் கிழக்கே எட்டுக் கிலோ மீட்டர் தொலைவில் அய்யனார் கோயில் ஒன்றுள்ளது. அதற்கருகில் பைரவர் உருவம் வைக்கப் பட்டுள்ளது. இது சுடுமண்ணாலான மிகப் பெரிய உருவமாகும். இரண்டு நாய்கள் அருகில் வைக்கப் பட்டுள்ளன. விஷ்ணுவின் நெற்றியில் குத்தி, பிரம்மாவின் ஒருதலையை வெட்டி, அதனை விஷ்ணுவின் நெற்றியிலிருந்து வடியும் இரத்தத்தைக் குடிக்க வைத்தவர் பைரவர் என்பர். எனவே இங்கு இரத்தப் பலி நடக்கிறது.
மதுரை வீரன்
இது கிராம தேவதையாகும். பல ஊர்களில் இவருக்குக் கோயில் கட்டப் பட்டுள்ளது. இவரது உருவம் சுடுமண்ணால் செய்யப் படுவது வழக்கம். தஞ்சாவூரில் குதிரை மீதமர்ந்துள்ள மதுரை வீரன் சிலை உள்ளது.
பூதங்கள்
திருநெல்வேலி மாவட்டப் பகுதியில் பூத வழிபாடு அதிகம் உள்ளது. பெருஞ்சதுக்கத்துப் பூதம் என்று இலக்கியத்திலேயே சொல்லப் பட்டிருக்கின்றது. பூதங்களைக் காவல் தெய்வங்களாகவும், சத்திய வாக்குகளைக் காக்கும் கடவுளாகவும் வணங்குவர். இப்பூதங்களின் உருவங்கள் சுடு மண்ணால் செய்யப் பட்டவையாகும். இம்மாவட்டத்தில் உள்ள ஆறுமுக மங்கலம் என்ற ஊரில் பூத வழிபாடும் மாடன் வழிபாடும் இன்றும் சிறப்பாக நடைபெறுன்றன. ஈரோடு மாவட்டத்தில் அண்ணன்மார் கோயில்கள் உள்ளன. அவற்றிலும் சுடுமண் சிற்பங்கள் வைக்கப் பட்டுள்ளன. தென்ஆர்க்காடு மாவட்டத்தில் கன்னியம்மன் என்னும் கிராம தேவதைக்குக் கட்டப் பட்டுள்ள கோயிலில் ஏழு சகோதரர்களின் சுடுமண் சிற்பங்கள் உள்ளன.
கருப்பணசாமி
அய்யனார் கோயில்களில் துணைக் கோயிலாகவும் மற்றும் தனிக் கோயிலாகவும் கருப்பணசாமி வழிபாடு நடந்து வருகிறது. இவர் கிராம தேவதைகளின் காவல் தெய்வம் என்பர். இவரது சிற்பங்களும் பல இடங்களில் சுடுமண்ணால் செய்யப்பட்டு வண்ணம் தீட்டப் பட்டுள்ளன. இதனை மதுரைக்கு அருகே கீழக் குயில்குடியிலும், செக்கானூரணியிலும், கோச்சடையிலும், சங்கராபுரத்திலும் பிற இடங்களிலும் காணலாம்.
நேர்த்திக் கடன் உருவங்கள்
பல கிராமக் கோயில்களில் நேர்த்திக் கடனைச் செலுத்தும் பொருட்டுச் சுடுமண் உருவங்கள் செய்து வைப்பது மரபு. குதிரை, யானை போன்றவை பல கோயில்களில் இடம் பெற்றுள்ளன. குழந்தை வரம் வேண்டுபவர்கள் சுடுமண்ணால் தொட்டிலும் குழந்தையும் செய்து வைப்பர். கை, கால் சுகம் வேண்டுவோர் உடல் உறுப்புகளைச் செய்து வைப்பர். இதனை மடப்புரம், திருப்பாச்சேத்தி, கோச்சடை போன்ற இடங்களில் காணலாம். சேலத்திற்கு அருகில் சஞ்ச வாடி என்ற இடத்தில் நாகர் உருவங்கள் செய்து வைக்கப் பட்டுள்ளன. இங்குள்ள நாகர் சிற்பங்கள் பெரும்பாலும் சுடுமண்ணால் செய்விக்கப் பட்டவையாகும். இதுபோன்று பல கிராமக் கோயில்களிலும் காண முடிகிறது.
#ஆறகழூர்பொன்வெங்கடேசன்