வள்ளுவமும் எண்ணியலும்

18 views
Skip to first unread message

யாழ்க்கோ

unread,
Jan 14, 2026, 12:11:14 PM (yesterday) Jan 14
to மின்தமிழ்
வள்ளுவமும் எண்ணியலும்
===========================

     எண்கள் என்பது மனித வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் இன்றியமையாத ஒரு பகுதியாகும். நம் தொல்குடிகள் கரங்களையும், கால்களையும், விரல்களையும், விழிகளையும் எண்களைக் கையாள்வதற்கான அடிப்படை மூலங்களாய்ப் பயன்படுத்தியுள்ளனர். எண்களை எண்ணத்தின் வைப்பகத்தில் தொகுத்து வைத்தனர். தொகுத்தவற்றையெல்லாம் எழுத்தால் தொடுத்துச் சொல்லாக்கினர். இதனையே எண்ணென்ப ஏனை எழுத்தென்ப (குறள் 392)  என்னும் குறட்பாவில் எண்களின் முக்கியத்துவம் எக்காலத்திற்கும் பொருந்தும்படி எழுதுண்ட மறையில் எடுத்துரைக்கின்றார் வள்ளுவர். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் (கொன்றை வேந்தன்.7) என்ற ஒளவையார்  வாக்கும் வள்ளுவன் சிந்தனையை உறுதிப்படுத்துகிறது. எண்ணுப் பெயர்களை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, நூறு, ஆயிரம், கோடி எனத் தமிழில் வழங்குவதுண்டு. இத்தகைய எண்ணுப் பெயர்களில் ஒன்பது மட்டும் திருக்குறளில் இடம்பெறவில்லை. ஏனைய 12 எண்ணுப் பெயர்களையும் முதற்பாவலர் முப்பாலில் குறிப்பிட்டுள்ளதை தெரிந்துகொள்வதிலே நாம் இன்பம் அடையலாம்.

 உத்திரவேதத்தில் ஒன்று

     மாமிசப் பிண்டங்களாக மண்ணில் பிறந்த நாம் உன்னதம் நோக்கி நம்முடைய வாழ்வை உயர்த்திக் கொள்ள வேண்டும். அறிவையும், அனுவத்தையும் பெருக்கிக் கொண்டு நிகழ்த்தக்கூடிய சாதனைகள் மூலம் ஒருவனுக்கு வந்துசேர்வதுதான் புகழ். புறநானூற்றுப் பாடல் ஒன்றில் மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம் புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே; என்று பாடியுள்ளார் பெருந்தலைச் சாத்தனார். நிலைபெறாத இவ்வுலகில் நிலைபெற நினைத்தவர்கள், தம் புகழை நிலைநாட்டி இறந்தனர் என்று பொருளுணர்த்தும் பாடல் இது. அ.ப.ஜை. அப்துல் கலாம் அவர்கள் தன்னம்பிக்கையாலும், விடாமுயற்சியாலும் படிப்படியாக முன்னேறி எழுச்சி நாயகனாக எல்லோராலும் போற்றப்பட்டார். தன்னுடைய அறிவியல் ஆராய்ச்சியால், இந்தியாவை வல்லரசாக மாற்றி உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தினார். இந்தியாவின் உயரிய பதவியில் இருந்தபோதும் எளிமையின் அடையாளமாகவும், தன்னடக்கத்துடனுமே திகழ்ந்தார். தன்னலம் துறந்து மண்நலம் சார்ந்து பணியாற்றிய அவரது உடலை மண்ணில் புதைத்துவிட்டோம். அவரது புகழை மனத்தில் இருத்திக் கொண்டோம்.  இதனை 
     ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் 
     பொன்றாது நிற்பதொன் றில்.
(குறள் 233)    
என்றோதுகிறார் வான்புகழ் வள்ளுவர். ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லைபென்பதனை இக்குறள் அழகுற அளிக்கிறது. வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், ஒரு நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள் என நேரமேலாண்மையின் மகத்துவத்தை 
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்

வாளது உணர்வார்ப் பெறின்.
   (குறள் 334) என்ற குறட்பாவில் ஒன்றின் பொருளை உலகிற்கு உரைக்கிறார் முதற்பாவலர். உத்திரவேதத்தில் பயன்படுத்தப்பட்ட எண்ணுப் பெயர்களில் எண் ‘ஒன்று 51 இடங்களில் வந்துள்ளன. அவற்றை பின்வரும் குறட்பாக்களில் வான்புகழ் வள்ளுவர் அழகுற அளிக்கின்றார். குறள் எண். 1, 109, 111, 118, 128, 148, 155, 156, 221, 232, 233, 251, 253, 259, 281, 291, 300, 334, 344, 397, 398, 400, 438, 454, 609, 661, 773, 805, 835, 836, 838, 871, 875, 932, 971, 974, 1006, 1007, 1023, 1026, 1052, 1095, 1146, 1196, 1197, 1202, 1266, 1269, 1273, 1274, 1275.

இரண்டில் இரண்டு

     ஏடும் எழுத்தாணியும் கொண்டு இரண்டு அடியில் எழுதப்பட்ட திருக்குறளை விஞ்சுவதற்கு இதுவரை எந்த நூலும் எழுதப்படவில்லை. மனிதர்கள் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய விழுமியக் கருத்துக்கள் யாவற்றையும் ஒருங்கே கூறம் நூல் திருக்குறள். இரண்டடி அறிவுத்திரட்டுக்களாய் திருக்குறள் தனிச் சிறப்புப் பெற்று விளங்குவதால், நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி (பெருந். 1128), பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில் (தனிப். 68) என்பன சான்றோர் வாக்குகள். இதனால் திருக்குறள் இரண்டு எனச் சிறப்புப் பெயர் பெற்றுள்ளது. திருக்குறளில் பயன்படுத்தப்பட்ட எண்ணுப் பெயர்களில் எண் ‘இரண்டு’ 18 இடங்களில் வந்துள்ளன. எண் இரண்டு பற்றிக் கூறும் குறட்பாக்கள்: குறள் எண். 19, 374, 392, 393, 402, 455, 581, 662, 674, 760, 875, 920, 992, 1022, 1091, 1108, 1196, 1247.

முப்பாலில் மூன்று

     உலக அளவில் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருவதால், நிலப்பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக விரிவாக்கம் பெறுகின்றன; மரங்கள் அழிக்கப்படுகின்றன; வறட்சியால் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் உணவுப் பற்றாக்குறை ஏற்படுகின்றது. சுற்றுச் சூழல் சீர்கேடுகள் ஏற்படுகின்றதன. பல்வேறு நோய்கள் எளிதில் பரவுகின்றன. சுகாதாரப் பிரச்சினையும் வேலையின்மையும் நாட்டை நலிவடையச் செய்கின்றன. அனைவருக்கும் தரமான கல்வி என்பது கேள்விக் குறியாகின்றது. இவற்றையெல்லாம் சீர்படுத்துவதற்காக மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தி பல நாடுகள் தீவிரம் காட்டிவருகின்றன. அளவான குடும்பமே வளமான வாழ்வுக்கும் ஆளும் அரசுக்கும் அடிப்படையென்பதனை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தன் குறட்பாவில்,     மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று. (குறள் 941)  என்றோதுகிறார் முதற்பாவலர். ஒருவனுடைய உணவும் செயல்களும் அளவுக்கு மேல் கூடினாலும், குறைந்தாலும், மருத்துவ நூலோர் வகுத்த மூன்றும் நோயைச் செய்யும் என்று எடுத்துக் கூறுகிறது இக்குறள். சமகாலப் பிரச்சினைகளையும் அவற்றிற்கான தீர்வுகளையும் திருக்குறள் உள்வாங்கியிருப்பதுதான் விந்தையிலும் விந்தை. முப்பாலில் பயன்படுத்தப்பட்ட எண்ணுப் பெயர்களில் எண் ‘மூன்று’ 10 இடங்களில் வந்துள்ளன. அவற்றில் உள்ள விழுமியக் கருத்துக்களை பின்வரும் குறட்பாக்களில் அறியலாம்.   குறள் எண். 41, 360, 383, 589, 682, 684, 688, 941, 952, 1085.

திருமறையில் நான்கு

     மக்களாட்சியில் மக்களை வழி நடத்தும் ஆட்சியாளர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்; ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய மக்கள் கருத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள் எவை என்பன பற்றிய தேர்தல் விழிப்புணர்வுகளை தேர்தல் ஆணையம் அவ்வப்போது வாக்களர்களுக்கு வழங்கிக் கொண்டே வருகிறது. அறத்தைக் காக்க உறுதியாகவும், பொருள் வகையில் நாணயமாகவும், இன்பத்திற்கு மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருக்கும் ஒருவனை வாக்களித்துத் தேர்வு செய்ய வேண்டும். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவனால்தான் பொதுப் பணியில் ஊழலற்ற நிர்வாகத்தைத் திறம்படச் செயல்படுத்த முடியும். இதனை, தான் தோன்றிய காலத்திற்கு மட்டுமல்லாமல் எக்காலத்திற்கும் ஏற்புடையதாக
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்   
திறந்தெரிந்து தேறப் படும்.
(குறள் 501) என்னும் குறட்பாவில் பெருநாவலர் பாங்குறப் பகிர்கின்றார். திருமறையில் பயன்படுத்தப்பட்ட எண்ணுப் பெயர்களில் எண் ‘நான்கு’ 11 இடங்களில் வந்துள்ளன. அவற்றில் உள்ள ஆழ்ந்த பொருளைக் கூறும் குறட்பாக்கள்: குறள் எண். 35, 146, 382, 390, 501, 513, 605, 743, 766, 950, 953.

வான்மறையில் ஐந்து

     காடுகளுக்குள் ஆடிய சூதாட்டம், அடுத்த கட்டமாக அரண்மனைக்குள் வந்தது; வியர்வை சிந்தாக் காலங்களில் வீதிகளுக்குள் வந்தது;விஞ்ஞான வளர்ச்சியால் தற்பொழுது வீட்டிற்குள்ளேயே வந்துவிட்டது. சூது மயக்கத்தில் குடியை இழந்தார்கள்; கோலோச்சிய நாட்டை இழந்தார்கள். இப்பொழுது இணையத்தளத்தில் சூது விளையாடி இன்னுயிரையும் மாய்த்துக் கொள்கிறார்கள். அவற்றிலிருந்து பலர் மீள முடியாமல் செல்வம், புகழ், கல்வி அனைத்தையும் தவறவிட்டு, வாழ வழியின்றி வாடிநிற்கின்றனர். இதனை உணர்த்தும் வகையில் 
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும் 
அடையாவாம் ஆயங் கொளின்.
(குறள் 939)   என்ற குறளில் ஒருவன் சூதாடுதலை மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும் என்று சுட்டுகிறார் தெய்வப்புலவர். இன்றைய 5ஜி அலைக்கற்றை சேவையில் விளையாடும் சூது அபாயத்தை, எழுத்தாணி முனையில் எச்சரித்துள்ளார் பொய்யாமொழிப் புலவர்.
     வான்மறையில் பயன்படுத்தப்பட்ட எண்ணுப் பெயர்களில் எண் ‘ஐந்து’ 14 இடங்களில் வந்துள்ளன. ஐந்தின் மகத்துவத்தை கூறும் குறட்பாக்கள்: குறள் எண். 6, 24, 25, 27, 43, 126, 271, 343, 632, 675, 738, 939, 983, 1101.

பொருளுரையில் ஆறு

     வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆகிய ஆறும் நாட்டை ஆளும் அரசுகளில் சிங்கம் போன்றதாகும் என்கிறது குறள். (குறள் 381)

எழுதுண்டமறையும் ஏழும்

     ஏழு என்ற எண்ணிற்கும் எழுதுண்டமறைக்கும் உள்ள தொடர்புகள்  நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. முப்பாலில் குறட்பாக்களின் எண்ணிக்கை 1330. இதன் கூட்டுத்தொகை ஏழு ஆகும். குறள் வெண்பா ஏழு சீர்களைக் கொண்டது. திருவள்ளுவர் என்பதும் ஏழு எழுத்துகளால் ஆன சொல்.  வள்ளுவர் வாய்மொழியின் சொற்சுருக்கத்தினையும் பொருட்பெருக்கத்தினையும் விளக்கும் வகையில் கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் என்று இடைக்காடரும், அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் என்று ஒளவையாரும் புகழ்ந்து பாடிய வள்ளுவமாலையில் வரும் சீர்களின் எண்ணிக்கையும் ஏழு ஆகும். ஏழு என்ற எண்ணிற்கும் எழுதுண்டமறைக்குமான தொடர்பை விவரித்துக் கொண்டே செல்லலாம். எண் ஏழு பற்றி கூறும் குறட்பாக்கள்: குறள் எண். 62, 107, 126, 398, 538, 835, 1269, 1278.

குறளமுதில் எட்டு

     கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் (குறள்.9) என்ற குறளில் தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கி நிற்றல், இயற்கை உணர்வினன் ஆதல், பேரறிவுடைமை அல்லது முற்றறிவுடைமை, வரம்பில்லாத ஆற்றல் உடைமை, வரம்பில்லாத அருள் உடைமை, வரம்பில்லாத இன்ப வடிவினன் ஆதல் ஆகிய எட்டு குணங்களைப் பற்றிப் பகிர்ந்துள்ளார் மாதானுபங்கி.

பொதுமறையில் பத்து

     குறள் எண் 450 - இதில் எண் பத்து இடம்பெற்றுள்ளது.
     பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த     தீமைத்தே நல்லார் தொடர்கை விடல். 

பலரோடும் பகைத்துக் கொள்வதை விட, நல்லோருடன் கொண்ட தொடர்பைக் கைவிட்டு விடுதல் என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும் என்மனார் வள்ளுவர்.  

திருமறையில் நூறு

     ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று எண் நூறைப் பயன்படுத்தி விளக்கிய குறள்.932 ஆகும்.

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோர் ஆறு. 

பெறுவோம் என்னும் ஆசையால் நூற்றுக்கணக்காக இழந்து வறியவராகும் சூதருக்கு, வாழ்க்கையில் நலம் ஏற்பட வழி ஏது? என்று எச்சரிக்கின்றார் தெய்வப்புலவர்.

அறம் கூறும் ஆயிரம்

     குறள் 259 - உயிரின் உன்னதத்தை எண் ஆயிரம் கொண்டு எடுத்துரைக்கும் குறள்.

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. 

அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும், ஒன்றன் உயிரைக் கொன்று, அதன் உடலைத் தின்னாமலிருத்தல் மிகவும் நன்மையானதாகும் என்று எல்லோருக்கும் எடுத்தோதுகின்றார் நாயனார்.

குறளமுதில் கோடி

     உலகப் பொதுமறையில் எண் கோடி இடம்பெற்ற குறட்பாக்கள்: குறள் 337, 377, 639, 816, 817, 954, 1005, 1061.

முடிவுரை

     உலகில் இன்புற்றும் துன்புற்றும் வாழந்து இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று நம்மால் கூற இயலாது. அதுபோல உண்மையாகவே பற்றுகளைத் துறந்தவர்களின் பெருமையையும் நம்மால் அளவிடவே முடியாது  குறள் எண் 22 (துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.) என்று எண்ணிக்கைக்கு முடிவில்லை என்பதை அனைவருக்கும் உணர்த்துகிறது.  வள்ளுவரின் எண்ணத்தில் தோன்றிய எண்களைப் பற்றிச் சுருக்கமாகவே விளக்கத்தைத் தந்து, சுருக்கி விரித்து நிறைவு செய்யப்படுகின்றது.
Picture1.1.png

Reply all
Reply to author
Forward
0 new messages