(வெருளி நோய்கள் 1346 -1350 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1351 -1355
தென்னசி மாநிலம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தென்னசி வெருளி.
தென்னிசி மாநிலம் ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது; எட்டு அமெரிக்க மாநிலங்களுடன் எல்லைகளைக் கொண்டுள்ளது.இம்மக்களின் வணிகம், நாகரிகம்,பண்பாடு,நடைமுறை மீது தேவையற்ற பேரச்சம் கொள்வோர் வெருளிக்கு ஆளாகின்றனர்.
00
தேடு பொறி குறித்த வரம்பற்ற பேரச்சம் தேடு பொறி வெருளி. தேடுபொறிகள் மூலம் நமது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் என்ற பேரச்சத்தால் தேடுபொறிகளை வெறுப்போர் உள்ளனர்.
கூகுள், யாஃகூ முதலான பல்வேறு தேடுபொறிகள் உள்ளன. சிலருக்கு எல்லாத் தேடுபொறிகள் மீதும் பேரச்சம் இருக்கும். சிலருக்கு குறிப்பிட்ட ஒரு தேடுபொறி அல்லது சில தேடுபொறிகள் மீது மட்டும் பேரச்சம் இருக்கும். எனவே, கூகுள் வெருளி என்று சொல்லாமல் பொதுவாகத் தேடுபொறி வெருளி எனக் குறிக்கப்பட்டது.
00
தேட்டகம்(hope chest/ dowry chest / cedar chest /trousseau chest/glory box) குறித்த வரம்பற்ற பேரச்சம் பெட்டக வெருளி.
பெண்கள் சிறிது சிறிதாகச் சேமித்து வைப்பதைச் சிறுவாடு என்பர். தேட்டம் என்றும் இதனைக் குறிப்பர். திருமணம் ஆகும் முன்னர் மகளுக்கு வேண்டிய துணி மணிகள், அணிமணிகள் முதலியவற்றைச் சேமித்து வைக்கும் பழக்கம் பல நாடுகளில் உள்ளது. இவ்வாறு சேமித்து வைக்கும் பெட்டியையே – பெட்டகம் என்பதுபோல் – தேட்டகம் எனக் குறித்துள்ளேன்.
நம்பிக்கையுடன் காக்கப்படும் தேட்டகம், பிறரால் திறக்கப்படலாம், பாதுகாப்பாக இருக்கும் என வைக்கப்பட்ட பொருள்கள் திருடுபோகலாம், திருமண வாய்ப்பு தள்ளிப்போகும் பொழுது, சில துணிகள் நைந்து போகலாம் என்பன போன்ற தேவையற்ற அச்சங்கள் சிலருக்கு வரும்.
00
புனைவுரு மாயாவி தேண்ணி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தேண்ணி வெருளி.
தேண்ணி பேந்தன்(Danny Phantom) பேய்களை எதிர்கொள்ளும் பாத்திரம். இதனால் தானும் அரைப்பேய்நாயகன்போல் விளங்கும். பேய்கள் மீதான அச்சம் உள்ளவர்களுக்குப் பேய் நாயகன் மீதும் அச்சம் வருவது இயற்கைதானே.
தேனியல் என்பதன் சுருக்கப் பெயர்தான் தேண்ணி.
00
தேநீர் ஆக்குவது, கலப்பது தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தேநீர் ஆக்க வெருளி.
வெண்தேநீர்(White tea), பசுந்தேநீர் (Green tea), மஞ்சள் தேநீர்(Turmeric Tea), கருந்தேநீர்(Black tea) முதலான தேநீர்வகைகள் பல உள்ளன. மிகச்சிலருக்குப் பல முறைகளும் தெரியும். சிலருக்கு ஏதேனும் ஒரு முறை அல்லது இரு முறை தெரியும். பொதுவாக எந்த முறை தேநீர் ஆக இருப்பினும் அதைச் செய்யும் முறையை முன்னரே அறிந்திருந்தாலும் புதிதாக அறிந்து கொண்டிருந்தாலும் நன்றாகச் செய்வது குறித்துப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
காண்க: தேநீர் வெருளி(Sagiouphobia)
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5
(குறட் கடலிற் சில துளிகள் 44: புகழைத் தருவது நற்றுணையே- தொடர்ச்சி)
குறட் கடலிற் சில துளிகள்
45. இன நலமே பாதுகாப்பு!
மனநலம் நன்குடையர் ஆயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்பு உடைத்து
(திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௮ – 458)
மனம் நன்னலமாக இருப்பினும் சான்றோர்க்கு இனநலமே பாதுகாப்பானது.
பதவுரை:
மன-மனத்தின்; நலம்-நன்மை; நன்கு-மிகுதியும்; உடையர்-உ்டையவர்கள்; ஆயினும்-ஆனாலும்; சான்றோர்க்கு-அறிவு, ஒழுக்கம் முதலியவற்றில் சிறந்து விளங்கும் பண்பாளர்க்கு; இனநலம்-இனத்தின் நன்மை; ஏமாப்பு-வலிமை, பாதுகாவல்; உடைத்து-உடையது.
கருத்துரைகள்
மன நலம் இருப்பினும் சிற்றினம் சேராமல் நல்லினத்துடன் சேர்ந்து வாழ்தலே பாதுகாப்பு உடையது என்கிறார் திருவள்ளுவர்.
மணக்குடவர் உரை:
மன நன்மை மிக வுடையராயினும் இன நன்மை யுடைமை சான்றோர்க்குக் காவலாதலையுடைத்து.
இஃது இனநலம் அல்லாராயின் பிறரா லிகழப்படுவராதலான் இனநலம் இகழ்ச்சி வாராமற் காக்குமென்றது.
பரிமேலழகர் உரை:
மனநன்மையை முன்னை நல்வினையால் தாமே உடையராயினும்; சான்றோர்க்கு இனநன்மை அதற்கு வலியாதலையுடைத்து
முந்தைய நல்வினையால் மனநலம் உடையவராக இருப்பதாகப் பரிமேலழகர் கூறுவதுபோல் சிலரும் அவர் வழியில் இவ்வாறே கூறுகின்றனர்.
உள்ளத் தூய்மை மிகக் கொண்டவரே ஆனாலும், சான்றோர்க்கு அவரைச் சேர்ந்தவர்களும் நல்லவர்களாக இருப்பது மன வலிமை கெடாது காக்கும்.
சான்றோர்கள் உறுதியான மனவளம் கொண்டவர்கள். அவர்களும் சிற்றினத்துடன் சேர்க்கை கொண்டால், அவர் மனம் தளர்ச்சி யடைந்து உள்ளத்தை மாசுபடுத்தி விடும். நல்ல இனத்தாருடனனான பழக்கம் அத்தகைய தளர்ச்சிக்கு வழி வகுக்காமல் பாதுகாப்பாக இருக்கும்.
சான்றோர்க்கே இனநலம் பாதுகாப்பாக இருக்கும் என்றால் பிறருக்கு மிகுதியும் இனநலம் தேவை என்பதை உணரலாம்.
நல்லினத்தைத் துணையாகக் கொண்டால் தீமையிலிருந்து காக்கவும் அழிவு வராமல் தடுக்கவும் நற்பயன் விளைவிக்கவும் பாதுகாவலாக இருக்கும். எனவே, நாம் இன நலனில் கருத்து செலுத்த வேண்டும். பல நாட்டுப் போராளிகளும் இனநலத்துடன் செயற்பட்டமையால்தான் மக்களை அடிமைத்தளையிலிருந்து மீட்டு, அந்நாட்டு விடுதலைக்கு வழிவகுத்தனர். ஈழத்திலும் விடுதலைப்புலிகளும் இன நலத்துடன் செயற்பட்டமையால்தான் அந்நாட்டு மக்களுக்கு எழுச்சி ஏற்படுத்தி இனப்படுகொலைகள் நிகழும் வரை – வாணாள் வரையும் நல்லாட்சியும் புரிந்தனர்; தம் நாட்டவர்க்குப் பாதுகாப்பாகவும் இருந்தனர். ஆனால், இனநலமற்றவர் ஊடுருவலாலும் தமிழ்நாட்டு மக்கள் இனநலனில் கருத்து செலுத்தாததாலும் நூறாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலையாயினர். கைகளில் விழுந்த விடுதலைக்கனி பறிக்கப்பட்டு இறந்தவர்கள் தவிர இருப்பவர்களும் உறுப்புகள் இழந்தும் உடைமைகள் இழந்தும் இன்னலில் சிக்குண்டுள்ளனர். உலகெங்கும் உள்ள தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க நாம் இனநலம் பேணுவோரைத் துணையாகக் கொள்ளவேண்டும். இவ்வாறு பல நாடுகளிலும் இனநலமுடையாரைச் சார்ந்திருப்போர் பாதுகாப்பாக உள்ளனர். அவ்வாறில்லாதார் பாதுகாப்பு இழந்து துயருறுகின்றனர்.
எனவே தூய மனமுடையவராக இருப்பினும் இன நலத்தைப் பாதுகாப்பாகக் கொள்வோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
00