(சமற்கிருதத்திற்கு கூடுதல் நிதி- சரிதானே!?- 2: தொடர்ச்சி)
சமற்கிருதத்திற்கு கூடுதல் நிதி- சரிதானே!?
உரையின் எழுத்து வடிவம் 3
மனுநூல் ,அருத்த சாத்திரம், சுக்கிர நீதி போன்ற நூல்கள் எல்லாம் மக்களைப் பாகுபாடுப்படுத்தக் கூடியவை. வருண வேறுபாடுகளைப் புகுத்துபவை ஆக உள்ள இந்த இலக்கியங்களுக்குப் பணம் கொடுக்கிறவன்தான் வருண வேறுபாட்டுக்கு உயிர் ஊட்டுகிறவன்.” பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று திருவள்ளுவத்தைப் போற்றுகிற நாம் இந்த இரண்டு இலக்கியங்களுக்கு – இலக்கியங்கள் என்று சொல்லக்கூடாது இழிகாம நூல்களுக்கு – அஃதாவது ஆபாச நூல்களுக்கு – நாம் முதன்மைத்துவம் கொடுக்கலாமா? ஆனால் அப்படித்தான் செய்து கொண்டிருக்கிறோம் நாம், இதன் காரணம் என்ன? நமக்கு உண்மையிலேயே இதைப் பற்றி நடைமுறை அறிவோ திட்டமோ இல்லை. படித்திருக்கலாம்; பெரிய பெரிய பட்டங்கள் பெற்றிருக்கலாம்; ஆனாலும் கூட சமற்கிருதத்தை எந்த அளவிலெல்லாம் திணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்களுக்குத் தெரியவில்லை.
நீங்கள் பார்த்தீர்கள் என்றால் இந்தியாவிலேயே மிகுதியான சமூக நலத்திட்டங்கள் தமிழ்நாட்டில்தான் நிறைவேற்றப்படுகின்றன. இவற்றை நிறைவேற்றியவர்களுள் முன்னோடியாக நாம் கலைஞர் அவர்களைத்தான் குறிப்பிட வேண்டும். திமுகவும் சரி அதிமுகவும் சரி, தமிழ் மொழிக்கும் சேர்த்து பல்வேறு நலத் திட்டங்களைத் செயற்படுத்திக் கொண்டு இருக்கின்றன. பாராட்டக்கூடியதுதான், ஆனாலும் கூட அவை முழுமையாக இல்லை. அடுத்தபடியாகச் சொல்ல வேண்டும் என்றால் ஓர் ஒப்பீடு கூடப் பார்ப்போம். சில திட்டங்களுக்குத் தமிழ்நாடு அரசு ஒதுக்கக்கூடிய நிதி மிகக் குறைவாகவும் ஒன்றிய அரசு அளிக்கக் கூடியது கூடுதலாகவும் உள்ளன. அதில் ஒன்றுதான் நலிவுற்ற கலைஞர்களுக்குத் திங்கள் தோறும் தமிழ்நாடு அரசு 3000 உரூபாயும் 100 உரூபாய் மருத்துவப் படியும் தருகிறது. ஒன்றிய அரசு திங்கள் தோறும் 6 ஆயிரம் உரூபாய் தருகிறார்கள்.இவ்வாறு பல திட்டங்கள் பார்க்கலாம்.
சமற்கிருதம் முன்பே தொடங்கப்பட்டது என்று சொன்னேன் அல்லவா? 1957 இலேயே சமற்கிருத ஆணையம் பரிந்துரைத்து, சமற்கிருத வாரியம் ஒன்றை ஒன்றிய அரசு அமைத்தது. இதற்கு இராசுட்டிரிய சமற்கிருத சன்சங்கு என்று பெயரிட்டார்கள். பின்பு 1960 ஆவது சட்டத்தில் தன்னாட்சி அமைப்பாக மாற்றி அட்டோபர் 15, 1970 இல் நிறுவினார்கள். இஃது இந்திய நாடாளுமன்றத்தின் நிறுவப்பட்ட சட்டத்தின் மூலம் ஏப்பிரல் 2020இல் மத்திய சமற்கிருதப் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டது. அது மட்டுமல்ல நாளடைவில் சமற்கிருதக் கல்வி நிறுவனங்கள் எல்லாம் கருது நிலை பல்கலைக்கழகங்களாக (Deemed University) மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் முதன்மையான தமிழ்க் கல்லூரிகள் இருக்கின்றன. மதுரையில் உள்ள செந்தமிழ்க் கல்லூரி, செம்மொழிக்காகத் தீர்மானம் இயற்றிய தஞ்சாவூர் கரந்தைக் கல்லூரி, காரைக்குடி இராமசாமி கல்லூரி என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இதையெல்லாம் நிகர் நிலை பல்கலைக்கழகங்களாக மாற்றலாமே, தமிழ்நாடு அரசு நிதி உதவி கொடுக்கலாம் ஒன்றிய அரசிடமும் கேட்கலாம்.
செம்மொழி நிறுவனத்தின் தலைவர் யார்? தமிழ்நாட்டின் முதல்வர் தான். அந்த முறையிலும் கூட பல்வேறு நிதி உதவிகளைக் கேட்கலாம் எந்த ஒரு திட்டமும் நாம் கொடுப்பது கிடையாது.ஏதோ கருத்தரங்குகள் நடத்துவதுதான். கருத்தரங்குகளும் பாதி சரியாக நடக்காது. ஏனென்றால் கருத்தரங்கிலே தமிழுக்கு எதிராகப் பேசுவார்கள். சங்க இலக்கியம் பற்றிய கருத்தரங்கிலே பேசுபவர் சங்க இலக்கியத்தைப் பிற்பட்டதாகப் பேசிக்கொண்டு இருப்பார். இதுதான் கொடுமை. ஆக இப்படிப்பட்ட மோசமான கருத்தரங்கு தான் நடந்து கொண்டு இருக்கிறது. அவ்வாறு இல்லாமல் உண்மையான ஆய்வுகளுக்குச் செலவழிக்கலாம் அல்லவா? பல திட்டங்கள் தீட்டித் தரலாம் அல்லவா? நாம் இத்தகைய திட்டங்களைத் தீட்டித் தந்துவிட்டு இத்தகைய திட்டங்களுக்கு ஒன்றிய அரசு பணம் தரவில்லை என்று கண்டித்தால் பொருளுண்டு. இவர்கள் ஒன்றிய அரசுக்கு மடல் எழுதினாலே கண்டு கொள்வதில்லை. எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை. எத்தனையோ மீனவர் படுகொலைக்கு மடல் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிலர் ஒன்றிய அரசிற்குக் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், கண்டனத்தைப்பற்றி ஒன்றிய அரசு கவலைப்படாது. ஏன்? இஃது ஒரு பொம்மலாட்டம் என்று வேடிக்கையாக விட்டு விட்டுச் சென்று விடுவார்கள். இதனாலெல்லாம் ஒன்றும் பயன் கிடையாது.
இவர்கள் சொல்வார்கள்; பிறகு மறந்து விடுவார்கள்; அதற்குள் அடுத்த சிக்கல் வந்துவிடும்; இவ்வாறு அடுத்தடுத்த சிக்கலுக்குத் தாவி விடுவார்கள்; இந்த நம்பிக்கையில் தமிழ்நாட்டு அரசின் கவலை குறித்து ஒன்றிய அரசினர் கவலைப்பட மாட்டார்கள்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
இணைய வழி உரையின் எழுத்தாக்கம்
13.07.2025
(வெருளி நோய்கள் 579-583: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 584-588
585. ஓநாயன் வெருளி – Lupophobia / lycophobia/ Lukophobia
ஓநாய்/ஓநாய்மனிதன்/ஓநாயன் (werewolf)பற்றிய பெருங் கவலையும் பேரச்சமும் ஓநாயன் வெருளி.
ஓநாய் குறித்த பேரச்சத்தையும் இவ்வகையில்தான் சேர்த்துள்ளனர்.
ஓநாய்போன்ற மனிதன் எனவே, ஓநாயன் எனப்படுகிறான்.
lupus என்னும் இலத்தீன் சொல்லின் பொருளும் lykos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருளும் ஓநாய்.
00
586. ஓமர் வெருளி – Homerphobia
புனைவுரு ஓமர் (Homer Simpson) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஓமர் வெருளி.
அமெரிக்க அசைவூட்டத் தொலைக்காட்சித் தொடரான சிம்பசன்னின் முதன்மைப் பாத்திரம் ஓமர் சே சிம்பசன்.00
587. ஓய்வறை நீங்கு வெருளி – Abcellophobia
கழிவறையில் இருக்கும் பொழுது மேல் அலுவலர் உள்ளே நுழைவதான ஒலி கேட்கும் பொழுது எவ்வாறு வெளியேறுவது என அளவுகடந்த பேரச்சம் கொள்வது ஓய்வறை நீங்கு வெருளி. மேல் அலுவலர் வெளியேறும் வரை கழிவறைக்குள்ளேயே இருப்பர்.
கழிவறை நாற்றம், துப்புரவின்மை போன்றவற்றிற்குக் காரணமாகத் தன்னை நினைப்பர் என்ற கவலையால் வரும் பேரச்சமே இது.
கழிவறையை இடக்கர் அடக்கலாகக் குறிக்க வேண்டும் என்பதற்காகப் பிரெஞ்சுச் சொல்லான ஆயத்த அறை அல்லது ஒப்படனை அறை(toilet room) பயன்படுத்தப்பட்டது. பிரித்தானியர் வாய்ப்பு நல அறை(convenience room) எனப்பயன்படுத்தினர். வட அமெரிக்கர்கள் ஓய்வறை (rest room) என்று பயன்படுத்தினர். இச்சொல்லே இப்போது நிலைத்து விட்டது.
தமிழில் மலங்கழித்தல் என்று சொல்லாமல், ‘கொல்லைக்குப் போதல்’ என்றனர். அதுவும் இடக்கர் அடக்கல் என்னும் நிலை மாறி வெளிப்படைச் சொல்லாக மாறியது. பின்னர், ஆலந்து மொழிச் சொல்லான கக்கூசு பயன்படுத்தப் பெற்றது. தமிழ்ச்சொல்லாக இல்லை என்பதால் நீரடி என்பது பயன்படுத்தப் பெற்றது. இப்போது தமிழ்நாட்டிலும் பொதுவிடக்கழிப்பறை ஓய்வறை என்னும் சொல்லால் குறிக்கப் பெறுகிறது.
இலத்தீனில் Ab என்றால் விலகி இருத்தல் (அறையை விட்டு நீங்கி யிருத்தல்) cellula என்றால், சிற்றறை என்று பொருள்.
காண்க: கழிவறை வெருளி
00
588. ஓய்விருக்கை வெருளி – Lechophobia
ஓய்விருக்கை(couche) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஓய்விருக்கை வெருளி
Lecho என்னும்இசுபானிய மொழிச்சொல் பொருள் படுக்கை. இதன் பிரெஞ்சு பொருள் couche என்பதாகும். இதன் பொருள் படுத்து இருத்தல் / கீழேஇருத்தல் / உறங்குதல் எனப் பொருள்கள்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5