1. எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 24. இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -1: இலக்குவனார் திருவள்ளுவன் ++ 2. வெருளி நோய்கள் 1366 -1370: இலக்குவனார் திருவள்ளுவன்

5 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
May 4, 2026, 6:30:18 PM (2 days ago) May 4
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore, Guberan Rajan, Dr. Ku.Muthukumar

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 24. இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -1: இலக்குவனார் திருவள்ளுவன்

 ஃஃஃ     அகரமுதல  இலக்குவனார் திருவள்ளுவன்      05 May 2026      



(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 23. எத்தனை, எத்துணை, எவ்வளவு வேறுபாடு தொடர்ச்சி)

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 24. இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -1

கோப்புகளில் உள்ளவற்றைப் பார்ப்பதற்குச் சிறிது இடைவெளிவிட்டு இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் குறித்துப் பார்ப்போம்.

தமிழைக் கொலை செய்வதில் ஊடகங்கள் முதலிடம் வகிக்கின்றன. தமிழ் ஆர்வம் மிக்க ஊடகத்தினர் இருந்தாலும் பெரும்பான்மையாகக் கொலைகாரர்களே உள்ளனர். இவர்களுக்கெல்லாம் கடுந்தண்டனை விதித்தால்தான் தமிழ் வாழும். எனவே, இனியாவது ஊடகத்தினர்  கொலைகாரர்களாக இல்லாமல் தமிழை வாழ வைப்பவர்களாக இருக்க வேண்டும்.

இதைப் படிப்பவர்களாவது உணர்வு பெற்று ஊடகத்தினரைத் திருத்துவார்களாக!

இப்பொழுது நாம் இதழ்களில் இடம் பெறும் பிழை மலிந்த செய்திகள் சிலவற்றைப் பார்ப்போம்.

 கட்டுரைகளிலும் செய்திகளிலும் இலக்கிய வரிகளை மேற்கோளாகக் காட்டுவது வரவேற்கத்தக்கது. ஆனால் அவற்றில் பிழைகள் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சான்றுக்கு ஒன்று.

“பாரதிதாசனின் “கண்ணீரின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஒரு கடுகாம்” என்ற கருத்தை ஒட்டியே தான் இதை எழுதியதாக விளக்கம் கொடுத்தேன்” என்கிறார் செய்தி எழுத்தாளர். ஆனால்,

“கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்

மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்”

என்பதுதான் சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ள நயம் மிகுந்த வரிகள். கண்ணைக் கண்ணீராகக் காட்டிவிட்டார் செய்தி எழுத்தாளர். இதைப் பாடலாசிரியர் தவறாகச் சொன்னாரா? அல்லது செய்தியாளர் தவறாக எழுதிவிட்டாரா என்று தெரியவில்லை. எனினும் அச்சில் வரும்பொழுது சரியாக வருவதில் கருத்து செலுத்த வேண்டாவா?

“இந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது.”  என்றொரு செய்தி.

டிரெண்டு என்பதைத் தமிழிலேயே குறிக்கலாமே!

 trend என்பதற்குப் போக்கு, நாட்டம், பாங்கு, பான்மை எனப் பொருள்கள். எனினும் பெருமளவு வரவேற்பைப் பெற்றுப் பரவலாவதால் “இக்காணுரை இப்போது பரவலாகி வருகிறது” எனலாம்.

பலரும் தமிழ்ச்சொற்களை அறிந்திருந்தும் ஒலிபெயர்ப்புச் சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.

சான்று சில:

“சார்கோல் மூலம் இயங்கும் இசுத்திரி பெட்டிகளையே நம்பியிருக்கிறார்கள்.”

அடுப்புக் கரியை அறியாதவரா செய்தியாளர்? ‘சார்கோல்’ என ஒலிபெயர்ப்பில் குறிப்பிட்டதற்குக் ‘கரி’ என்றே குறிக்கலாமே!

சாமீன் நிபந்தனையாக பாசுபோர்ட் முடக்க முடியாது’… அதிகாரிக்கு மட்டுமே அதிகாரம் உண்டு; ஐகோர்ட்

என்பது மற்றொரு செய்தி.

(ஞ்)சாமீன் என்னும் பாரசீகச் சொல்லின் முதன்மைப் பொருள் பிணை என்பதாகும்.

பிணை, பிணையம், பிணையாளி, பிணைக்கைதி முதலான பொருள்களில் இடத்திற்கேற்பப் பயன்படுத்தப்படுகின்றது. உத்தரவாதம், முன்பேறு, சான்று, சான்றாவணம், சான்றிதழ், நற்சான்று, சான்றுரை முதலாய பொருள்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

பிணை என்னும் நல்ல தமிழ்ச்சொல் இருக்க சாமீன் என்னும் அயற்சொல் எதற்கு? கடவுச்சீட்டு என்பது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகையில் பலரறிந்த தமிழ்ச்சொல்லைப் புறக்கணிப்பது ஏன்? உயர்நீதிமன்றம்தான் தமிழைப் புறக்கணிக்கிறது என்றால் உயர்நீதிமன்றம் என்று தமிழில் குறிக்கத் தயக்கம் ஏன்? “கடவுச்சீட்டை நிபந்தனையாக முடக்க முடியாது.  … அதிகாரிக்கு மட்டுமே அந்த அதிகாரம் உண்டு. – உயர்நீதிமன்றம்”  எனக் குறிக்கலாமே!

“ஆராகி கையெழுத்திடும் நிபந்தனை”  என்று ஒரு செய்தி.

 ஃகாசிர்(Hazir) என்பது அரபு மொழியில் இருந்து உருது, இந்தி, துருக்கி மொழிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல். இதுவே ஆசர் ஆனது. ஆயத்தமாக, கிடைக்கக்கூடிய, பணியில் இருத்தல், தோற்றம், வருகை புரிதல், ஒருவர் அல்லது ஒரு குழுமுன் தோன்றுதல், முன் நிற்றல், நேர் நிற்றல் என இடத்திற்கேற்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.

எனவே, வருகை புரிந்து கையெழுத்திடும் நிபந்தனை எனக் குறிக்கலாம்.

இந்தக் கிழவனை தலையணை வைத்துக் கொள்ளுங்கள்” என்றும்

சிலிண்டரை பற்ற வைத்து இந்தக் கிழவனைக் கொள்ளுங்கள்” என்றும் செய்திகள் இடம் பெற்றுள்ளன.

வைத்துக் கொள்ளுதல், எடுத்துக் கொள்ளுதல் என்பன போன்று பொருள் வரும் வகையில் தலையணை வைத்துக் கொள்ளுங்கள் என்பது சரிதானா? உயிரைப் பறித்தல் என்னும் பொருளில் உயிரை எடுக்கும் கொல்லுதலைக் கொள்ளுதல் என்பது சரியாகுமா? இதனைத் தவறாக இடம் பெற்ற எழுத்துப் பிழையாகக் கருதுவதா? அல்லது பொருள் புரியாமல் பயன்படுத்தும் சொற்பிழையாகக் கருதுவதா?

இரண்டாம் வேற்றுமை உருபிற்கு அடுத்து வல்லினம் மிக வேண்டுமல்லவா? அப்படியானால் சிலிண்டரைப் பற்ற வைத்து என்றுதானே குறித்திருக்க வேண்டும்.

சிலிண்டர் என்பது gas cylinder என்பதன் சுருக்கம். gasoline cylinder என்றும் gas bottle என்றும் குறிப்பர். gas என்பது காற்றை அல்லது வளியைக் குறித்தாலும் இங்கே எரிவதற்குப்பயன்படுத்தப்படும் வாயுவையே குறிப்பிடுகிறது. அங்கிங்கு எனாதபடி எங்கும் வாய்த்துள்ள காற்றை வாயு என்பதும் தமிழே. எனவே, எரி வாயு, அதனால் எரிவாயு உருளை எனலாம். உருளையைப் பற்ற வைப்பது என்றால், உருளையைப் பற்ற வைப்பது அல்ல. உருளையில் உள்ள எரிவாயுவையே. எனவே, செய்தியில் எரிவாயுவைப் பற்ற வைத்து எனலாம்.

“தி.மு.க-வுக்கு கூடுதல் இடங்கள்: தந்தி டி.வி சர்வே ரிசல்ட்”

 என வந்துள்ளது.

சர்வே ரிசல்ட் என்பது இந்த இடத்தில் ஆய்வு முடிவைக் குறிக்கிறது. எனவே,

தந்தித் தொலைக்காட்சி ஆய்வு முடிவு எனலாம்.

 நான்காம் வேற்றுமை உருபிற்கு அடுத்து வல்லெழுத்து மிகும் என்பது குறித்து முன்பே குறிப்பிட்டிருக்கிறோம். ‘தி.மு.க.வுக்குக் கூடுதல்’ என வர வேண்டும்.

“நெல்லை பயணிகளுக்கு குட் நியூஸ்… சென்னையில் இருந்து சிறப்பு ரயில்; டிக்கெட் போட செக் பண்ணுங்க”

என்பது ஒரு செய்தி.

ஊர்ப்பெயர்கள் பண்புத்தொகையாக வரும்பொழுது அடுத்து வரும்சொல் க,ச,த,ப என வல்லெழுத்தில் தொடங்கினால் வல்லெழுத்து மிகும். எனவே நெல்லைக்கு அடுத்து வல்லெழுத்து மிகுந்து

நெல்லைப்பயணிகள் என்று வர வேண்டும்.

செய்தியாளர்களுக்கு (குட்) நியூஸ் என்ற சொல்லுக்கான தமிழ்கூடத் தெரியாமல் இருந்தால் அது வெட்கக்கேடு அல்லவா?

இரயில் என்பது தண்டவாளத்தைத்தான் குறிக்கிறது.எனினும் பழக்கத்தில் தண்டவாளத்தில் செல்லும் தொடர் வண்டியைக் குறிக்கிறது. இதனைச் சுருக்கமாகத் தொடரி எனலாம்.

நெல்லைப்  பயணிகளுக்கு நல்ல செய்தி (அல்லது நற்செய்தி).      சென்னையில் இருந்து சிறப்புத்  தொடரி”  எனக் குறிப்பதே சிறப்பாகும்.

ticket என்றால் பொதுவான பொருள் சீட்டு, எனினும் இடத்திற்கேற்ப இரு சொல்லாக அமைந்து பயணச் சீட்டு, இசைவுச்சீட்டு, நுழைவுச்சீட்டு, குலுக்கல் சீட்டு என்பனபோல் குறிக்கப்பெறும். இங்கே பயணச்சீட்டைக் குறிக்கின்றது.  தொடரியில் இடம் கிடைக்கிறதா இல்லையா எனச் சரிபார்க்குமாறு செய்தி தெரிவிக்கிறது. எனவே, பயணச்சீட்டு கிடைக்கிறதா எனச் சரிபாருங்கள் எனலாம். அல்லதுஇன்னும் சுருக்கமாகப் “பயணச்சீட்டு கிட்டுமா எனப் பாருங்கள்”  எனலாம்.

(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

++

வெருளி நோய்கள் 1366 -1370: இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 1361-1365: தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 1366 -1370

  1. தேனீ வெருளி-Apiphobia/ Melissaphobia/ Melissophobia / Beephobia (1)

தேனீக்கள் குறித்த தேவையற்ற பேரச்சம் தேனீ வெருளி.
தேன்(69), ஈ(6), வண்டு (189)ஆகிய சொற்கள் சங்கப்பாடல்களில் இடம் பெற்றிருந்தாலும், தேனீ இடம் பெறவில்லை.
api சொல்லின் மூலமான apis என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தேனீ.
melissa என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தேன்(ஈ).
காண்க: ஆ நிலை வெருளி – Beephobia (2)

00

  1. தைப்பி வெருளி – Staplophobia

தாள்தைப்பி குறித்த தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் தைப்பி வெருளி.
தாள்களை இணைக்கும் பொழுது தவறுதலாகக் கையில் கம்பி குத்திவிடும் அல்லது தைத்து விடும் என்று தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் கொள்வது.
Stapler என்னும் செருமானியச் சொல்லின் பொருள் அடுக்கு(stack) என்பதாகும். தாள்களை அடுக்கி வைத்துப் பிணைப்பதால் தைப்பிக்கு இப்பெயர் வந்தது.
நூலால் இணைத்தல் மட்டும் தைத்தல் அல்ல. ஆணி முதலியன அடித்தல், இலை முதலியன குத்தியிணைத்தல், பொருத்துதல், முள் முதலியன ஊடுருவுதல், கோத்தல், ஒப்பனை செய்தல், உருவாக்குதல் முதலான பல பொருள்கள் உள்ளன. கம்பியால் தாள்களை இணைப்பதால் தைப்பி எனப்படுகிறது. சிலர் பிணைப்பி என்றும் கூறுகின்றனர்.
கூர் வெருளி(Aichmophobia) உள்ளவர்களுக்குத் தைப்பி வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00

  1. தைலசு வெருளி – Tailsphobia

புனைவுரு தைலசு(Tails) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தைலசு வெருளி.
தைலசு (Tails) முள்ளம்பன்றி ஒலிப்பன்(Sonic the Hedgehog) 2 என்னும் காணாட்டத்தில் இடம் பெறும் பாத்திரத்தின் பெயர் Tails என்பதாகும். இதன்பொருள் வால்கள்தான். ஆனால் நரிக்கு இரண்டு வால்கள் உள்ளமையால் பன்மையால் ஆகுபெயராக வால்கள் எனக் குறிக்கப்பெற்றது. இவ்வாறு குறிப்பின் தவறான பொருள் வரும் என்பதால் பெயர்ச் சொல்லாகத் தைலசு எனப்பட்டது. இதன் முழுப்பெயர் மைல்சு பிரோவெர் (Miles Prower). யசுசி யமாகுச்சி(Yasushi Yamaguchi) என்பவரால் 1992 இல் உருவாக்கப்பெற்ற காணாட்டத்தில் ஒலிப்பனின் உற்ற தோழனாக உருவாக்கப்பட்ட பாத்திரம்.
00

  1. தொகு வெருளி-Editophobia

தொகுப்புப்பணி குறித்த அளவுக்கு மிகுதியான தேவையற்ற பேரச்சம் தொகு வெருளி.
இதழாக இருந்தாலும் மலராக இருந்தாலும் திரைப்படம் அல்லது தொலைக்காட்சிப்படம் அல்லது ஆவணப்படமாக இருந்தாலும் தொகுப்பு முறையாக அமைந்திருக்குமா? முதன்மையானது எதுவும் விடுபட்டிருக்குமோ? தொடர்பில்லாதது சேர்க்கப்பட்டிருக்குமோ? என்றெல்லாம் கவலைப்பட்டுப்பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
00

  1. தொடக்கப்பள்ளி வெருளி – Dimotikophobia

தொடக்கப்பள்ளி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தொடக்கப்பள்ளி வெருளி.
குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே சென்று புதியவர்களைச் சந்திக்கும் இடமாகத் தொகக்கப்பள்ளி உள்ளது. இதனால் அவர்களுக்குப் பெரிதும் அச்சம் வருகிறது. மழலையர் பள்ளிகள், இளமழலையர் பள்ளிகள் இப்போது இருப்பினும் பள்ளிக்கூடக் கட்டமைப்பில் இல்லை. சிலருக்கு மழலைநிலைப்பள்ளிகளே தொடக்கப்பள்ளி என்ற முறையில் அங்கு செல்லவும் காரணமற்றபேரச்சம் உள்ளது.
Dimotiko என்னும்கிரேக்கச்சொல்லிற்குத் தொடக்கப்பள்ளி என்று பொருள்.
00

(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5

++




--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages