மொழிப்போர் தியாகி இராஜேந்திரன் பற்றிய சில செய்திகள்.
அறுபது ஆண்டுகளுக்கு முன் 1965 ல் நடந்த மொழிப்போரின் நெருப்பு நீறு பூத்த நிலையில் இருந்து வந்து, இன்று அதன் வெப்பத்தை ஈராயிரக் குழவியரும் உணரும் வகையில் கடத்தியுள்ளது. அந்த அணையா நெருப்பை உண்டாக்கிய தீக்குச்சிகளில் ஒன்றைப் பற்றி
குடும்பத்தில் ஒருவனாக நின்று நான் அறிந்த தகவல்களைப் பகிர எண்ணுகிறேன்.
முத்துக்குமார் - வள்ளி மயில் தம்பதியினருக்கு மொத்தம் ஏழு குழந்தைகள்.
1. சக்தி வேலு - எனது மாமா மற்றும் என் மனைவியின் தந்தை.
2. மேனகா. எங்களது தாய்.
3. தைலாம்பாள்.
4. சகுந்தலை.
5.இராஜேந்திரன்.
6. சந்திரசேகர்
7. கீதா.
(ஆம்! அந்தத் தீக்குச்சியின் பெயரைத்தான் எண் 5ல் குறிப்பிட்டுள்ளேன்.)
தாத்தா ஒரு ஆங்கிலேய ஆட்சியின் கடைநிலைக் காவலர். 7 குழந்தைகள். அளவற்ற வறுமை. வறுமையிலும் கல்வி ஒன்றே கடைத் தேற்றும் என்று பிள்ளைகள் எல்லோரையும் படிக்க வைத்த தாத்தா -பாட்டி! பால் மாடு, கோழி என்று வளர்த்தும் எப்போதும் கைக்கும் வாய்க்கும் பற்றாக்குறை தான்.
திரு. இராஜேந்திரன் சிறு வயதில் இருந்தே வறுமையின் எல்லாக் கொடுமைகளையும் அனுபவித்தே வளர்ந்திருக்கிறார். என் அம்மாவுக்கும் அவருக்கும் சுமார் 7 வயது வித்தியாசம் இருந்ததால் சிறு குழந்தையாக இருந்த போதிருந்தே என் அம்மாவின் அணுக்கத்திலேயே வளர்ந்து வந்துள்ளார். அவரது பதின்ம வயதுகளில் என் அம்மா வேலைக்குப் போய்விட்டதால், படிப்பு, சினிமா என்று எல்லா செலவுகளுக்கும் என் அம்மாவிடம் காசு வாங்கிவிட்டு என் பாட்டியின் கோபத்தை தவிர்ப்பாராம்.
மண்ணுக்கே உரிய நிறம், களையான முகம், சராசரிக்கும் அதிக உயரம் என்றே என் அம்மா அவரை நினைவு கூர்வார், கூடவே அந்த உயரமே அவருக்கு எமனாக வந்தது என்றும் கூறுவார். தலைமுடி எல்லாம் உறுதியாக கம்பி போல இருக்குமாம்! ரப்பர் சீப்பு கள் உடைந்து விடுவதால் இரும்புச் சீப்பு வைத்திருப்பாராம். அப்படியும் தலை கலைந்து விடுகிறது என்று செவிலியரான என் அம்மாவின் கொண்டையில் அணியும் வலையை எடுத்து அணிந்து கொள்வாராம்.திருத்தமாக உடை அணிவதில் விருப்பம் கொண்டவர்.... ஆனால் தீபாவளிக்கு வேண்டாம், பொங்கலுக்கு வாங்கித் தாருங்கள் என்றுதான் விபரமறிந்த நாள் முதலாகக் கேட்டு வாங்கிக் கொள்வாராம். பாட்டிக்கோ தீபாவளி செலவில் சற்றே குறைந்த நிம்மதி! துணிகளுக்கு இஸ்திரி பெட்டி வாங்க வசதியின்றி சிறு சமையல் பாத்திரத்தில் அடுப்பில் இருந்து எடுத்த தீக்கங்குகளை இட்டு சூடான பாத்திரத்தை வைத்து துணிகளைத் தேய்த்து அணிவாராம். அப்போது யாரும் அறியவில்லை அந்தத் தலைமுடியும், ஏதோ ஒரு பொங்கலுக்கு வாங்கிய உடையும் ரத்தச் சகதியில் தோய்ந்து சிதம்பரத்தின் சாலையோரத்தில் கிடக்கும் என்று!
அவரது அரசியல் ஈடுபாடு பற்றி அதிகம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் தமிழ் மொழி, தமிழர் பண்பாடு இவற்றின் மீது ஈடுபாடு அதிகம் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. தமக்கையர் மூவருக்கும் இவரது பதின்ம வயதுகளில் திருமணம் நடந்துள்ளது. மூவருக்கும் பிறந்த குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர்கள் வைப்பதில் காட்டிய ஆர்வமே அதற்கு சாட்சி. எனக்கும் இன்னும் இரு சகோதரர்களுக்கும் பெயர் தேர்ந்து வைத்தவர் அவர்தான். பொங்கல் வாழ்த்து அட்டைகள் வாங்கவும்.... பின்னாளில் அவற்றைக் கையாலே எழுதி வண்ணம் தீட்டி அஞ்சல் வில்லைகள் ஒட்டி அனுப்பவும் காசு கேட்டு பாட்டியிடம் திட்டு வாங்கிவிட்டு என் அம்மா இருந்த இராமநாதபுரம் வருவாராம். அப்போதும் யாரும் அறியவில்லை அந்த 1965 பொங்கலுக்கு வீட்டுக்கு வந்ததுதான் அவரது இறுதி வருகை என்று....! உயிரிழந்த உடல் கூட வீடு திரும்பவில்லையே! பாட்டி சொல்லிச் சொல்லி அழுதது - பொங்கல் விடுமுறை முடிந்து கல்லூரிக்குக் கிளம்புகிறான்... அவன் கேட்ட காசைத் தர முடியாமல் இருந்த காசையும் இடது கையால் தந்தேன்...என் மகனும் இடது கையாலேயே வாங்கிச் சென்றான்.. (ஈமக் காரியங்களில் இடதுகை முக்கியப் பங்கு வகிக்குமாம்) அம்மா இதையெல்லாம் சொல்லி அழுதுகொண்டே அவர் அடக்கம் செய்யப் பட்ட இடத்தின் பின்புறத்தில் காசுகளை புதைத்து வைத்து விட்டு வருவார்கள்! நினைவுகள்.... நினைவுகள்....! அவை தானே எஞ்சி நிற்போரின் துணை!
குடும்பத்தின் வறுமையைப் போக்க மூத்த மகன் சக்திவேலு கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டு விட்டு பெற்றோருக்குத் தெரியாமல் தரைப்படையில் சேர்ந்தார். Madras Engineering Service...! 1962 இந்திய சீனப் போரின் செய்திகள் கேட்டு மனம் பேதலித்த அன்னையின் மருத்துவத்தைக் காரணம் காட்டி இராணுவத்தில் இருந்து முன்கூட்டியே விடுவிப்பு வாங்கி வந்தார். ரயில்வேயில் சிலகாலம் பணிபுரிந்து விட்டு (கருநாகப்பள்ளி புக்கிங் கிளார்க் என்று அம்மா சொல்லுவார்) மத்திய சுங்கத்துறை அதிகாரியாக பரங்கிப்பேட்டையில் இருந்த சிறு துறைமுகத்தில் பதவி வகித்தார்.
அதே நேரத்தில் சிவகங்கை மன்னர் கல்லூரியில் புகுமுக வகுப்பு முடித்திருந்த தம்பியை புகழ்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கணிதம் படிக்க சேர்த்து விட்டார். அவரும் அப்போது அறிந்திருக்க மாட்டார் தம்பி பல்கலைக்கழக நுழைவாயிலிலேயே நிரந்தரமாக நின்றிடுவான் என்று....!
பதினெட்டு வயதில் மாண்ட, ஒரு கடைநிலை ஊழியரின் ஐந்தாவது மகனாக வறுமையில் உழன்று கல்வி கற்க கல்லூரிக்கு வந்த, ஒரு சிறுவனின் வாழ்வில் மேற்கொண்டு சொல்ல என்ன இருக்க முடியும்....செவிவழி கடத்தப்பட்ட இந்த நினைவுகளைத் தவிர! ஆனால் அவரை வரலாற்றில் நிறுத்திய நிகழ்வுகள் நடந்த நாளைப் பற்றி எழுத நிறைய இருக்கிறது.
அதற்கு முன்பாகச் சில தகவல்கள்! அந்த நாட்களை இந்நாளைய வசதிகளை, அறிவியல் முன்னேற்றங்களை மனதில் இருந்து எடுத்து விட்டு அளக்க முயலுங்கள்.
குண்டு பல்ப் எரிந்தாலே அது வசதியான வீடு. தகவல் தொடர்பு என்பது முழுமையாக தபால் அட்டைகளையே நம்பி இருந்த காலம். ஒரு செயல் நடந்து ஒரு வாரம் பத்து நாட்கள் கழித்தே அது உடன்பிறந்தோருக்கே தெரியவரும். மரணச் செய்தி மட்டுமே தந்தியில் வந்த காலம். (அந்தக் கால தகவல் தொடர்பு நிலை பற்றி அறிய ஒரு நிகழ்வைச் சொல்கிறேன்! அதுவும் அவர் சம்பந்தப்பட்ட நிகழ்வுதான். இராஜேந்திரன் மாமாவின் விடுதியில் பக்கத்து அறைக்கு வந்து போகும் ஒரு நபர்.... (அவர் மாணவரா இல்லையா என்பது கூடத் தெரியாது) இவருக்கு வரும் கடிதங்கள் எல்லாவற்றையும் படித்து விட்டு எந்தெந்தத் தமக்கையர் எந்தெந்த ஊரில் எந்த முகவரியில் வசிக்கிறார்கள் என்று எல்லாம் அறிந்து கொண்டு சிவகங்கை பாட்டி வீடு முதல் ஒவ்வொரு உறவினர் வீட்டுக்கும் வந்து ஓரிரு நாட்கள் தங்கி அவர்களிடம் விடுதியில் இருந்து வருவதாகவும்....மாமா பற்றிய விபரங்களைச் சரளமாகப் பேசி அவர்கள் நம்பிக்கையைப் பெற்று ஒவ்வொரு வீட்டிலும் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி கிடைத்த பணம், மாமா விட்டுச் சென்ற துணிமணிகள், பாடநூல்கள் என்று கிடைத்தவற்றை எல்லாம் வாங்கிக் கொண்டு போயிருக்கிறார். இதற்கு அவர் எடுத்துக் கொண்ட நாட்கள் சுமார் பத்துப் பனிரெண்டு நாட்கள். ஆனால் இவ்வாறு தாம் ஏமாற்றப் பட்டது எங்களுக்குத் தெரியவர சுமார் ஒரு மாத காலம் ஆனதாம். அதுவும் இராஜேந்திரன் மாமாவிடம் இருந்து ஒரு கடிதம் வந்த பிறகுதான் தெரிய வந்தது. இதுதான் அந்நாளைய தகவல் தொடர்பு நிலை.)
பெரிய மாமா அப்போது பணி மாற்றலாகி சென்னையில் இருந்தார். எங்கள் அம்மா இருந்தது இராமநாதபுரம். மற்ற இரு தமக்கையரும் சோழவந்தான் மற்றும் நெய்க்குப்பையில் இருந்தார்கள். தாத்தா -பாட்டி மட்டும் மீதமிருந்த இரண்டு தம்பி தங்கையுடன் சிவகங்கையில் இருந்துள்ளனர். இவ்வாறு குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்த போது அந்த 1965 ஜனவரி 27 ஒரு கருப்பு தினமாக இருக்கப் போகிறது என்பது அறியாமல் எங்களுக்கு விடிந்தது.
1965 ஜனவரி 26 ஏன் மொழிப்போரில் முக்கியமான நாள் என்று பலரும் விளக்கி விட்டனர். அன்று நிலவிய அரசியல் சூழல், எதிர்ப்பு, கைதுகள், மாணவர்கள் கைக்கு போராட்டம் சென்ற சூழல்.....இவை எல்லாவற்றையுமே பலரும் விளக்கி விட்டனர். நான் அவற்றுள் மீண்டும் புக விரும்பவில்லை.
27/1/1965 அன்று நிகழ்ந்தவை எல்லாமே மாமாவுடன் இருந்த மாணவர்கள் விவரித்தவை, செய்தித்தாள்களில் வந்தவை, எங்கள் குடும்பத்தினரிடம் அக்கம் பக்கம் இருந்தவர்கள் கூறியவை என்று திரட்டப்பட்டவைதான். இன்று போல் அன்று இணையம், சமூக வலைத்தளங்கள், கைப்பேசி கேமராக்கள், CCTV visuals என்று எதுவும் இல்லாத நாட்களில் இப்படி வாய்வழி விவரிப்பு கள்தான் விபரங்கள்.... ஆதாரங்கள்! பிழைகள் எதுவும் இருந்தால் மன்னிக்கவும்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேக்கிழார் விடுதியில் மாமா இருந்திருக்கிறார். 26/1/65 இரவில் அடுத்த நாள் செல்ல வேண்டிய ஊர்வலத்திற்கு வேண்டிய முழக்கங்கள் எழுதியிருக்கிறார். ஏந்தப்பட வேண்டிய பதாகைகளை எழுதியும் ஒட்டியும் ஏற்பாடு செய்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் இருந்து கிளம்பிய மாணவர் ஊர்வலம் சிதம்பரம் நகரை நெருங்கிய போது இடையில் இருந்த ரயில்வே கேட்டை மூடிவிட்டு போலீசார் மாணவர்களைத் தடுத்துள்ளனர். சிறிது நேரத்தில் தடியடி, கல்வீச்சு என்று நிலமை கைமீறிப் போகிறது. கண்ணீர்ப்புகை குண்டு வீசினால் அதை எதிர்கொள்ள வெங்காயம் தேடி வைத்துள்ளனர். இடித்து ஓரிரு துளிகள் கண்களில் விட்டால் பெருகும் கண்ணீரில் கண் எரிச்சல் குறைந்து கண்கள் தெரியுமாம்!
ஆனால் வந்ததோ துப்பாக்கிக் குண்டுகள். பெருகியதோ செந்நீர்!
என் அம்மாவின் வார்த்தைகள் - " இடது நெற்றியின் மேல்புறத்தில் ஒரு புளியங்கொட்டை அளவுக்குக் காயம் இருந்தது. ஆனால் சுழன்று சென்ற தோட்டா பிடறியில் வெளியேறிய இடத்தில் உள்ளங்கை அளவுக்கு பள்ளம் இருந்தது".
திரைப்படத்தில் சித்தரித்தது போல யாரும் தூக்கிக் கொண்டு மருத்துவ உதவி தேடிப் போக இயலவில்லை.
என்ன வலியை உணர்ந்தாரோ...
யாரை நினைத்தாரோ...
அன்னையை...தந்தையை...சகோதரரை...தமக்கையரை....உடனிருந்த நண்பர்களை..... எவராலும் உதவிக்கு வர இயலவில்லை. ஒரு புளியமரத்தின் அடியில் குப்புற விழுந்து, கையும் காலும் மடங்கி, அத்தனை ஆசைகளும்.... கனவுகளும் குருதி வழியே வெளியேற, பதினெட்டு வயதில் இறுதி மூச்சு நிறுத்தினார்.
கண்ணெதிரே ஒரு உயிர் போனதும் சிதறியது மாணவர் கூட்டம். வேறு இருவருக்கு தோட்டா துளைத்த காயங்கள் மட்டுமே! அதன் பின்னர் அங்கே நடந்தவற்றைக் கூற யாருமே இல்லை. அமளி அனைத்தும் ஓய்ந்த பிறகு மாமாவின் உடலை யாரையும் நெருங்க விடவில்லை காவல்துறை. உடலை எடுத்துக் கொண்டு பல்கலைக்கழகம் நோக்கியோ, நகரை நோக்கியோ ஊர்வலமாகச் செல்ல எத்தனித்தால் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தவும் தயாராக இருப்பதாக அறிவித்தனர்.
சூழ்நிலை மேலும் கொந்தளிப்பாக மாறாமல் இருக்கவும், மாணவர் போராட்டம் மேலும் தீவிரமடையாமல் தடுக்கவும் உடலை தன்வசம் வைத்திருக்க எண்ணி, காவல் துறையே உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு உடற்கூராய்வு செய்ய அனுப்பி விட்டனர்.
பல்கலைக்கழகப் பதிவேடுகளில் உள்ள முகவரியைத் தேடி சிவகங்கைக்குச் செய்தி செல்கிறது. பரங்கிப்பேட்டை சுங்கத்துறை வழியாக சென்னைக்கு பெரிய மாமாவைச் செய்தி சென்றடைகிறது. இதற்குள் 27/1/65 பொழுது சாய்கிறது. பிற உறவினர்களைச் செய்தி சென்றடைய இருள் கவிகிறது.... எங்கள் குடும்பத்தினரின் மனங்களைப் போல! கிடைக்கும் ரயில்களில் தொற்றிக்கொண்டு ஒவ்வொருவராக சிதம்பரத்தை அடைகிறார்கள்.
மீண்டும் காவல்துறை தன் அடக்குமுறையைக் காட்டுகிறது.... உடலை இங்கேயே அடக்கம் செய்ய வேண்டும் என்று கண்டிப்பு காட்டுகிறது. உடல் சிவகங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டால் போராட்டம் மாநிலமெங்கும் தீவிரமாகும் என்பதால் உடனே அடக்கம் செய்ய வைக்க எண்ணுகிறது.
1938 முதல் 1964 வரை இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நிகழ்ந்த உயிர்த்தியாகங்கள் எல்லாமே தீக்குளிப்பு.... விசம் அருந்துதல்.... என்று தன்னுயிர் ஈதலாகவே இருந்தன. முதன் முதலாக அரசின் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி அதில் ஒரு உயிர் பிரிந்தது என்பதே தமிழ் நாட்டில் பெரும் போராட்டமாக மாறியது. போராட்டம் வன்முறையாக மாறியது. அதன் முத்தாய்ப்பாக பொள்ளாச்சி கலவரம் அமைந்தது. சரியாகச் சொல்வதானால் Trigger point.
உடலைப் பெற்றுக் கொண்டால் வைத்து அழவோ, உறவினர்கள் வந்து முகம் பார்க்கும் வரை வைத்திருக்கவோ இடமில்லாத கையறு நிலை! யாரும் இடங்கொடுக்க முன் வந்தாலும் காவல்துறை தடுக்கிறது.... மிரட்டுகிறது!பெரியவர்கள் தவித்து நின்ற நிலையில் உதவ முன்வந்தார் பெரிய மாமாவின் நண்பர் ஒருவர். பரங்கிப்பேட்டையில் சைக்கிள் கடை வைத்திருந்தார். வெள்ளையர் என்று அறியப்பட்ட திரு சுப்பிரமணியன் என்ற சாமானியர். காவல்துறையின் மிரட்டலை மீறி துணிச்சலாக எதிர்கொண்டு உடலைத் தன் வீட்டில் வைக்க பெற்றுச் சென்றார். அப்படித்தான் பரங்கிப்பேட்டை எங்கள் குடும்பத்தினர் இன்றும் செல்லும் புனித இடமானது. இராஜேந்திரன் மாமாவுக்கும் ஓய்வெடுக்க ஒரு இடம் கிடைத்தது. ஆனால் அதனால் திரு வெள்ளையர் தன் சைக்கிள் கடையை இழந்தார். சிறைக்கும் சென்றாராம்.
உடல்...உடல்... என்று மீண்டும் மீண்டும் குறிப்பிட்டாலும் கிடைத்தது என்னவோ முகம் மட்டுமே தெரிந்த ஒரு மூட்டை தான். அதுவும் நீண்ட நேரம் வைத்திருக்க இயலாத நிலை! அதுவும் ஒரு காரணம்.
அன்றில் இருந்து இன்று வரை சமாதி அவரது குடும்பத்தினர் பாதுகாப்பில் தான் இருந்து வருகிறது. மூன்றாம் தலைமுறையாக நாங்களும் நினைவு நாளுக்கு வருகிறோம். ஒவ்வொரு ஜனவரி 27 ம் அவர்கள் வீட்டுச் சாப்பாடும் உச்சரிப்பும் தான் எங்களுக்கு! மூன்று தலைமுறைக்கு முந்தைய இருவரின் நட்பு இன்று வரையிலும் தொடர்கிறது. இடையில் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் தனியார் சொத்தாக மாறி, பிற சமாதிகள் இடித்து அகற்றப்பட்ட போதும், மாமாவின் சமாதி தப்பிப் பிழைத்தது. அதற்கு முழுமுதற் காரணம் திரு வெள்ளையர் அவர்களின் மகனான திரு இளங்கோ அவர்கள். (இவரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர். பல்கலைக்கழகத்தின் பளு தூக்கும் வீரர்). கைம்மாறு செய்ய முடியாத உதவி இவை எல்லாம். என்றும் நன்றியுடன் எண்ணிப் பார்க்க வேண்டியவை!
ஒற்றை துப்பாக்கிக் குண்டு சிதறடித்தது எத்தனையோ விசயங்களை!
பாட்டி மனநிலை பாதித்து தொடர் மருத்துவ சிகிச்சைக்கு உள்ளானார். தாத்தா அரசை எதிர்க்கும் விதமாக காவல் பணியை ராஜினாமா செய்து விட்டு துப்பாக்கி சூட்டை விசாரிக்க வழக்குத் தொடர்ந்தார். அரசாங்கக் கோழி முட்டை அம்மியையே உடைத்த காலகட்டம் அது! வழக்கின் முடிவைச் சொல்லவும் வேண்டுமா! (கூட்டத்தைக் கலைக்க துப்பாக்கி சூடு என்றால் ஏன் முழங்காலுக்கு கீழ் குறி வைக்கவில்லை என்று வாதம் செய்ததற்கு அன்றைய அரசு 'அவன் கல்லை எடுக்கக் குனிந்த போது தலையில் குண்டு பட்டது' என்று பதில் அளித்ததாம். எந்தக் கோணத்தில் குனிந்த நிலையில் நெற்றியில் குண்டு துளைக்கும் என்று யாருக்கும் தெரியவில்லை). தாத்தாவும் பாட்டியும் சிவகங்கையை விட்டு பெரிய மாமாவுடன் சென்னைக்கு நீங்கினர். சிவகங்கையுடன் இருந்த தொடர்பும் விட்டுப் போனது.
எனக்கு அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் நிழலாக நினைவில் நிற்கிறது. பாட்டி அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் எதிரில் அமர்ந்து கதறி அழுதது நினைவில் தெரிகிறது. பல்கலைக்கழக மாணவர்கள் ஊர்வலமாக வந்து மலர்வளையம் வைத்தனர். பெரிய அளவில் அன்னதானம் வழங்கப்பட்டது.
அவருடன் படித்த.... அந்தக் காலகட்டத்தில் பல்கலைக்கழகத்தில் வேறு துறைகளில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் படிப்புக் காலம் இருந்த மட்டும் நினைவு நாளன்று பரங்கிப்பேட்டை வருவார்கள். பிறகு அந்த எண்ணிக்கை குறைந்தது. அவரைப் பற்றி.... அந்த நிகழ்வு பற்றி அறிந்த தலைமுறை இருக்கும் வரையில் பொதுமக்கள் நினைவு தினத்தில் வந்து அஞ்சலி செலுத்துவார்கள். பிறகு மெதுவாக அன்றைய அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது பொதுநிகழ்வு என்ற நிலையில் இருந்து குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் குடும்ப நிகழ்வாகவே மாறிப் போனது!
1967 ல் நான் சென்னை தேனாம்பேட்டையில் ஒரு மாண்டிசோரி பள்ளியில் (பட்டம்மாள் மாண்டிசோரி) சேர்ந்தேன். அது தேர்தல் நேரம். மாமாவின் இறப்பு குறித்த சுவரொட்டிகள் நினைவில் உள்ளன! (மாணவர் இராஜேந்திரனை சுட்டுக் கொன்றது எந்தக் கட்சி!!!! அது எங்கள் கட்சி - என காங்கிரஸ் சொல்வது போல ஒரு சுவரொட்டி). தேர்தல் முடிவுகள் வந்த அன்று மாலை அறிஞர் அண்ணா வீட்டுக்கு வந்து பாட்டிக்கு மாலை போட்டார். அடுத்த நாள் காலையில் தினத்தந்தி வெளியிட்ட 'கருத்துப்படம்' கூட நினைவில் உள்ளது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு காட்சிகள் மாறின. பல்கலைக்கழக வளாகத்தில் இராஜேந்திரன் மாமாவின் முழு உருவச் சிலை அப்போதிருந்த மாணவர் குழுவால் அமைக்கப்பட்டது. திறந்து வைத்தவர் அன்றைய முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி. கலைஞரை அணுகிய போதெல்லாம் பரிவு காட்டினார். பல உதவிகள் செய்துள்ளார். மொழிப்போர் தியாகிகள் ஓய்வூதியம் உண்டாக்கினார். தாத்தா 1998 ல் காலமான செய்தியை முதல்வர் அலுவலகத்திற்குச் சொன்ன போது, மறுநாள் அரசு சார்பில் மரியாதை செலுத்தினர். திரு எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் ஆட்சியிலும் மொழிப் போர் தியாகிகள் ஓய்வூதியம் தொடர்ந்தது. இரண்டு முறை நிதி திரட்டி தியாகிகளின் குடும்பங்களுக்குப் பகிர்ந்தளித்தார். தற்போதும் மாமாவின் நினைவிடத்தை அரசே ஏற்று மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களிடம் வைத்தோம். கோரிக்கை ஏற்கப்பட்டு நினைவிடம் பொலிவு பெறவுள்ளது.
இரண்டு கழகங்களின் ஆட்சிகளிலும் அனுசரனையான அரவணைப்பே கிடைத்தது. தாத்தாவும் பாட்டியும் இருந்தவரை கட்சி பேதமின்றி மாமாவின் பெயரை அரசியல் கலப்பின்றியே பேணி வந்தனர். அதனாலேயே தற்போது ஆங்காங்கே எழும் அரசியல் சார்ந்த விவாதங்கள்/ குற்றச்சாட்டுகள் இவற்றுக்குள் நுழைவதில்லை. பதிலுரைப்பதுமில்லை. குடும்பத்தில் பலரும் அரசுப் பணியில் இருந்ததால் அரசியல் சார்பு எடுத்ததில்லை. எவரும் மாமாவின் உயிர்த்தியாகத்தை ஏணியாக்கி அரசியலில் ஈடுபடவும் விரும்பியதில்லை. ஆகவே தேர்தல் அரசியலோ, அதன் மூலம் கிடைக்கும் அரசியல் பதவிகளோ குடும்பத்தினரின் இலக்காக இருந்ததும் இல்லை.
அவரது கல்லறையில் உள்ள வரிகள் கவிஞர் ஆலங்குடி சோமு அவர்கள் வடித்தவை.
"முத்தமிழுக்கு உயிர் தந்து,
முதல் மகனாய் தமிழகத்தில்,
மூண்டுவிட்ட மொழிப்போரில்,
முடிந்தாயே சிதம்பரத்தில்!"
எதிர்வரும் காலத்திலும் இந்தப் புகழ் வரிகள் அவருடைய தியாகத்தைச் சொல்லும். தமிழ் வெல்லும்!
ஆதிக்கமோ திணிப்போ எந்த வழியில் வந்தாலும் அதை எதிர்க்கும் எண்ணம் இயல்பாகவே தமிழ்ச் சமுதாயத்தில் பரவி நிற்பதற்கு இது போன்ற தியாக வரலாறுகளே காரணம்! அணையா நெருப்பைப் பற்ற வைத்த தீக்குச்சி கருகியிருக்கலாம்! தீ அணையவில்லை! தேவை ஏற்படின் 'தீ பரவட்டும்' !
அனைத்து மொழிப் போர் தியாகிகளுக்கும் வீரவணக்கம்!