(வெருளி நோய் + படங்கள் 1016-1020 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1021-1025
இறப்பு வரும் என்ற அச்சத்தால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் சாவு வெருளி
சாதல் அஞ்சேன்; அஞ்சுவல், சாவின்
பிறப்புப் பிறிது ஆகுவதுஆயின் (நற்றிணை : 397.7)
கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது (புறநானூறு :137 : 5)
சாவா மரபின் அமரர்க்காச் சென்ற நின் (பரிபாடல் : 2:71)
(‘இறப்பு அருங் குன்றம் இறந்த யாமே’ எனக் குறுந்தொகை(209.3) அடியில் இறப்பு என்பது கடத்தல் என்னும் பொருளில்தான் வருகின்றது. பிறகுதான் உலக வாழ்வைக் கடத்தலையும் இறப்பு குறிக்கின்றது. எனவே இப்போதைய வழக்கில் இறப்பு வெருளி என்றும் சொல்லலாம்.)
மரண வெருளி(Tanatophobia) எனப் புதிய வெருளிவகைகளில் குறித்துள்ளனர். சாவு வெருளி உள்ளதால் இதனையும் அவ்வகையிலேயே குறிக்கலாம்.
நோய்வாய்ப்பட்டவர்கள் சிலர் தங்களைப்போன்ற நோய் உள்ளவர்கள் இறந்தால் தாங்களும் இறந்துவிடுவோம் என அஞ்சுவர். முதுமையாளர்கள் சிலர், யாரேனும் முதியவர் இறந்த செய்தி அறிந்ததும் தமக்கும் மரணம் வரும் எனத் தேவையற்ற பேரச்சம் கொள்வர். இத்தகையோரிடம் பிற இறப்புச் செய்திகளைச் சொல்லாமல் இருக்க வேண்டும்.
பாலுமகேந்திராவின் ‘வீடு’ திரைப்படத்தில் கதைநாயகியின் பாட்டனார் முருகேசன் தாத்தா(சொக்கலிங்க பாகவதர்). முதிய நண்பர் அந்தோணிசாமி இறந்ததாக நண்பர் ஒருவர் சொன்னதும் தனக்கும் இறப்பு வரும் என அஞ்சி இவர் இறுதி முறி எழுதுவதுபோல் காட்சி வரும். இயற்கையான ஒன்றே இது. இதுவே தேவையற்ற பேரச்சமாக மாறி வெருளியாகலாம்.
nekros என்னும் கிரேக்கச் சொல்லிற்குப் பிணம் எனப் பொருள்.
Thanatos என்னும் கிரேக்கச் சொல்லிற்கு மரணம் எனப் பொருள்.
00
சிக்கலான சொற்கள்(complicated words) குறித்த வரம்பற்ற பேரச்சம் சிக்கல் சொல் வெருளி.
நீளமான சொற்கள், நெடுஞ்சொற்கள், கலைச்சொற்கள், புதிய சொற்கள், படிக்கும் பொழுது தடுமாற்றம் தரும் சொற்கள் முதலிய சிக்கலான சொற்களைப் படிக்கும் பொழுது சிலர் அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
00
சிக்காகோ(Chicago)மாநகரம் குறித்த வரம்பற்ற பேரச்சம் சிக்காகோ வெருளி.
சிகாகோ(Chicago)மாநகரம், ஐக்கிய அமெரிக்காவின் இலினொய் மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்நகர் தொடர்பான மக்கள், பண்பாடு, உணவு வகை, தொழில்முறை, பழக்க வழக்கம் என அளவு கடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00
கதை நாயகி சிண்டிரெல்லா தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சிண்டிரெல்லா வெருளி.
சிண்டிரெல்லா தன்னைக்கவனித்துக் கொள்ளவும் தன் சொந்த முயற்சிகளால் தன் சூழ்நிலையை மாற்ற இயலாதவளாகவும் இருக்கிறாள். இது பெண் ஒருத்தி உண்மையான தன்னுரிமைக்கு அஞ்சும் உளவியல் நிலையைக் குறிக்கும். இந்த நிலைக்குத் தானும் தள்ளப்படுவோமோ முயற்சிகளில் வெற்றி காண முடியாதவளாக ஆகிவிடுவோமோ எனத் தேவையற்ற கவலையும் பேரச்சமும் கொள்வர்.
00
சிதள் மூ மா(stegosaurus) குறித்த வரம்பற்ற பேரச்சம் சிதள் மூ மா வெருளி.
சிதள் மூமா, கூரைப்பல்லி என்னும் பொருளில் அழைக்கப்படுகிறது. முதுகில் உள்ள சிதள்கள் கூரைபோல் அமைவதால் அவ்வாறு கூறுகின்றனர். அதைவிடச் சிதள் மூமா என்பது தமிழுக்கு ஏற்றதாக அமையும். .தீங்கற்றது; பயிர் உண்ணி. எனினும் படத்திலோ காட்சிப்படத்திலோ தொலைக்காட்சியிலோ இதன் தோற்றம் கண்டு தேவையற்றுப் பெரிதும் அச்சம் கொள்வோர் உள்ளனர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5