ஃஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 28 October 2025 அகரமுதல
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 23: சான்றோர் பக்கமே சான்றோர்சேருவர்! – தொடர்ச்சி)
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 24
வருந்தி வருவோரிடம்
அருள் உள்ளத்துடன் நடந்துகொள்க!
“வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்,
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி,
அருள வல்லை ஆகுமதி”
புறநானூறு – 27 : 15 – 17
பாடியவர் : உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.
திணை : பொதுவியல்.
துறை : முதுமொழிக் காஞ்சி.
வல்லவர் ஆயினும், வல்லவர் அல்லர் ஆயினும் வருந்தி வந்தோரின் நிலைமையைப் பார்த்து அருள் தருபவனாக விளங்குக!
முழுப்பாடல் வருமாறு:
சேற்றுவளர் தாமரை பயந்த வொண்கேழ்
நூற்றித ழலரி னிரைகண் டன்ன
வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து
வீற்றிருந் தோரை யெண்ணுங் காலை
உரையும் பாட்டு முடையோர் சிலரே
மரையிலை போல மாய்ந்திசினோர் பலரே
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவ னேவா வான வூர்தி
எய்துப வென்பதஞ் செய்வினை முடித்தெனக்
கேட்ப லெந்தை சேட்சென்னி நலங்கிள்ளி
தேய்த லுண்மையும் பெருக லுண்மையும்
மாய்த லுண்மையும் பிறத்த லுண்மையும்
அறியா தோரையு மறியக் காட்டித்
திங்கட் புத்தே டிரிதரு முலகத்து
வல்லா ராயினும் வல்லுந ராயினும்
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள வல்லை யாகுமதி யருளிலர்
கொடாமை வல்ல ராகுக
கெடாத துப்பினின் பகையெதிர்ந் தோரே.
பதவுரை:
சேற்று வளர் தாமரை = சேற்றிலே வளரும் தாமரை; பயந்த = பெற்ற; ஒண்கேழ் – ஒளிமிகுந்த நிறம்; நூற்று இதழ் = நூற்றுக்கணக்கான இதழ்; அலரின் = பூக்களின்; நிரை = வரிசை; கண்டன்ன = காண்பதைப்போல; வேற்றுமை இல்லா = வேற்றுமை இல்லாத; விழுத் திணைப் பிறந்து = சிறந்த குலத்தில் பிறந்து; வீற்றிருந்தோரை = அரசணை (அரியணை)யில் இருந்தோரை; எண்ணும்காலை =எண்ணிப் பார்க்கும் பொழுது;
உரை = எல்லாரும் கூறும் புகழுரை; பாட்டு = புலவர்களால் பாடப்பெறும் மாண்பு; மரை யிலை = தாமரை இலை; மாய்ந்திசினோர் பலரே = பயனின்றி மாண்டுபோனோர் பலரே; புலவர் பாடும் புகழுடையோர் = புலவர்களால் பாடப்பெறும் புகழுக்குரியோர்;
வலவன் = விமான ஓட்டி; ஏவா வான ஊர்தி = விமான ஓட்டியால் இயக்கப்படாத வானூர்தி; எய்துப = பெறுவர்; செய்வினை முடித்தெனக் கேட்பல் = நல்வினை முடித்தவர்கள் இவ்வாறு பெறுவார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கலாம்;
எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி! = என் தலைவ! சேட் சென்னி என்று அழைக்கப்படும் நலங்கிள்ளி!
தேய்தல் உண்மையும் = செல்வமும் செல்வாக்கும் உடையவர்கள் அவை தேய்ந்து இல்லாமல் போகும் நிலையையும்; பெருகல் உண்மையும் = இன்மை நிலை வளமாகப் பெருகும் நிலைமையையும்; மாய்தல் உண்மையும் = பிறந்தன இறக்கும் என்ற உண்மையையும்; பிறத்தல் உண்மையும் = புத்துயிர் பிறக்கும் என்ற உண்மையையும்; அறியா தோரையும் = அறியாதவர்களையும்; அறியக் காட்டித் = அறியச் செய்து;
திங்கட் புத்தேள் = இந்நிலைமைகளால் நாளும் புதியனவாய்த் திகழும் திங்கள்; திரிதரும் உலகத்து = வானில் உலா வரும் இவ்வுலகத்தில்; வல்லா ராயினும் = ஆற்றலற்றவர் ஆக இருந்தாலும்; வல்லுந ராயினும் = சிறப்பாற்றல் பெற்றவராயிருப்பினும்; வருந்தி வந்தோர் = வேண்டி வந்தோர்; (துன்புற்று வந்தோர் என்றும் பொருள் கொள்கின்றனர்) மருங்கு நோக்கி = சுற்றத்தாருடன் நோக்கி; (பசியால் வற்றிய வயிற்றைப் பார்த்து என்றே பிறர் பொருள் கொள்கின்றனர்); அருள வல்லை யாகுமதி = அருள் வல்லவனாக ஆகுக; யருளிலர் = அருளற்றவராகவும்; கொடாமை வல்ல ராகுக = கொடுக்கும் நிலையற்றவராகவும் ஆகுக; கெடாத துப்பினின் = அழியாத உன் வலிமையை; பகையெதிர்ந் தோரே = நினக்குப் பகையாகி எதிர்த்தோர்
பாடலின் சிறப்புகள்:
சேற்றில் பிறந்தாலும் தாமரை நூற்றுக்கணக்கான இதழ்களுடன் பொலிவாகத் திகழ்வதைக் குறிப்பிடுவதன் மூலம் பிறப்பின் அடிப்படையில் தாழ்வு கற்பிக்கும் ஆரியத்திற்கு எதிராக முழங்குகிறது.
உயர்வு தாழ்வு கற்பிக்கும் வேறுபாடில்லாத பிறப்பைக் குறிப்பிடுகிறது.
நிலவின் பல்வேறு தன்மைகளைக் கூறி. ஒப்பிட்டு நிலையாமையை விளக்குகிறது.
இயக்குபவர் இல்லாமல் இயங்கும் வானூர்தி குறித்த அறிவியல் உண்மையைக் கூறுகிறது.
‘உரை’ என்ற சொல் எல்லாராலும் புகழப்படும் புகழையும் ‘பாட்டு’ என்பது புலவர்களால் பாடப்படும் புகழையும் குறிக்கும் என்று உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமி அவர்கள் வேறுபடுத்தி விளக்குவார்.
அஃதாவது பொது மக்களால் உரைக்கப்படும் புகழ் உரை; புலவர்களால் பாடப்பெறும் புகழ் பாட்டு; என்னும் வேறுபட்ட சிறப்பை நாம் உணர முடிகிறது.
“பகைவன் வறியவன் ஆகுக” என்று சொல்லாமல் “ஈகைக்கு வாய்ப்பில்லா நிலையுடையவன் ஆகுக” என்பதன் மூலம் ஈத்துவக்க வேண்டிய இன்பத்தைப் புலவர் எடுத்துரைக்கிறார்.
சங்கக்காலச் சோழ மன்னர்களில் ஒருவனாகிய சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி இப்பாடலில் குறிக்கப் பெறுகிறான்.
உதவி வேண்டி வருவோரிடம் அருள் உள்ளத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை இப்பாடல் வலியுறுத்துகிறது. நாமும்
நம்மை நாடி வருவோரிடம்
அருளுள்ளத்துடன் நடந்து கொள்வோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்