மாற்றம் தேடும் மாற்றுச் சிந்தனைகள்

102 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 4, 2021, 10:46:16 PM9/4/21
to மின்தமிழ்


ராஜாதி ராஜ முதல் மிஸ்டர் மேடம் வரை…

அ. குமரேசன்

கம்பம் ஊன்றுவது போல மேலிருந்து கீழே புகுத்தப்படுவது அதிகாரம். விதை முளைப்பது போலக் கீழிருந்து மேலே விரிவது நாகரிகம். நவீனங்களின் குடியிருப்பு நகரங்கள் என்றாலும், முற்போக்கான மாற்றங்கள் கிராமங்களில் வேர் பிடித்தால்தான் தழைத்து ஓங்கும். அரசியல், பொருளாதாரம், சமூகம் என எல்லாத் தளங்களுக்கும் இது பொருந்துமானாலும், பண்பாட்டுத் தளத்தில் இவ்வாறு வேர் பிடித்து வளர்வது மிகமிகத் தேவையானது.

அப்படியொரு மாற்றத்துக்கான முயற்சியை விதைத்திருக்கிறது மாத்தூர் என்ற கிராமம். கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் இருக்கிறது இந்தக் கிராமம். பொதுவாகவே அரசு நிர்வாகக் கட்டமைப்பில் கிராம ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கூடுதல் அதிகாரங்களை உறுதிப்படுத்தி வலிமையளித்திருப்பது மலையாள மாநிலம். அத்தகைய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டுள்ள மாத்தூர் கிராம ஊராட்சி மன்றம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொரு தீர்மானத்தை கடந்த ஆகஸ்ட் 31 அன்று ஒருமனதாக நிறைவேற்றியிருக்கிறது. எந்த மாநிலத்தையும் விட்டுவைக்காமல் தொற்றிப் படர்கிற கொரோனா விரைவில் பட்டுப்போய் ஒழிய வேண்டும். இந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கமோ எல்லா மாநிலங்களையும் காலப்போக்கில் பற்றிப் பரவ வேண்டும்.

இப்படியொரு தீர்மானம்!
ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வருகிற பொதுமக்கள் இனிமேல் அங்குள்ள யாரையும் “சார்” என்றோ ”மேடம்” என்றோ அழைக்கத் தேவையில்லை! தங்களது கடிதங்களிலும் மனுக்களிலும் அவ்வாறு குறிப்பிட வேண்டியதில்லை! மன்றத் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள், அலுவலர்கள் எவரானாலும் பெயர் சொல்லியே விளிக்கலாம்!

எத்தனையோ தலைமுறைகளாகத் தொடரும் பழக்கம், எளிதில் கைவிடப்படுமா? அலுவலகத்துக்கு வருகிற மக்கள், மரபாகத் தொடரும் பண்பாட்டின் காரணமாக, வயதில் மூத்தவர்களையாவது மரியாதையாக அழைக்க விரும்புவார்களே? அது குறித்தும் ஆலோசித்து நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் ஒரு மாற்று வழியையும் காட்டுகிறது. வேண்டுமானால் மூத்தவர்களை “சேட்டா” என்றோ, “சேச்சி” என்றோ அழைத்துக்கொள்ளலாம், கட்டாயமில்லை.

மன்ற அலுவலகத்துக்குக் கடிதம் அல்லது கோரிக்கை மனு கொடுக்கிறவர்கள், “தயைகூர்ந்து நிறைவேற்றித் தருமாறு தாழ்மையோடு வேண்டுகிறேன்” என்றோ, “பணிவுடன்” என்றோ முடிக்க வேண்டியதில்லை. கோரிக்கையை நிறைவேற்றித்தருமாறு கேட்டுக்கொள்வதாக மட்டும் எழுதினால் போதுமானது.

தீர்மானத்தை நிறைவேற்றிய கையோடு, ஊராட்சி மன்ற வாயிலில் ஒரு பொது அறிவிப்பையும் வைத்துவிட்டார்கள்: அலுவலகத்தில் யாரேனும் தங்களை மரியாதையோடு அழைக்காததால் அல்லது மனுவில் குறிப்பிடாததால், மக்கள் நாடி வந்த பணியைச் செய்துகொடுக்க மறுப்பார்களானால், அது குறித்துப் புகார் செய்யலாம்! புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!

ஜனநாயக நாகரிகம்
அந்த ஊராட்சியில் 16 உறுப்பினர்களுடன் ஆளுங்கட்சியாக இருப்பது காங்கிரஸ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏழு உறுப்பினர்களும், பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஒருவருமாக அனைவரும், மன்றத் துணைத்தலைவர் முன்மொழிந்த தீர்மானத்துக்கு ஒரு மனதாக ஆதரவளித்து நிறைவேற்றியிருக்கிறார்கள். ஆக, இப்படியொரு தீர்மானமே சிறந்ததொரு முன்னுதாரணமாகிறது என்றால், கட்சி வேறுபாடின்றி எல்லோருமாகச் சேர்ந்து அதை நிறைவேற்றியிருப்பது மற்றொரு நல்ல முன்னுதாரணமாகிறது. பாராட்டுக்குரியவர்கள் அவர்கள் மட்டுமல்லர், அவர்களைப் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்த மாத்தூர் மக்களும்தான்.

“தங்களுடைய தேவைகளுக்காக ஊராட்சி அலுவலகத்துக்கு வருகிற பொதுமக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகள், அலுவலர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை இணைப்பதுதான் இந்த நடவடிக்கையின் மையமான நோக்கம். அலுவலகத்தில் ஒரு நட்பான, இணக்கமான சூழலை ஏற்படுத்துவதில் எங்கள் ஊராட்சியில் எல்லோருமே, கட்சி மாறுபாடுகளுக்கு அப்பால் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார்கள். சார், மேடம் போன்ற மரியாதைச் சொற்களைப் பயன்படுத்துவது, எங்களுக்கும் தங்கள் பிரச்சினைகளுக்காக எங்களை நாடிவருகிற மக்களுக்கும் நடுவே ஓர் இடைவெளியை ஏற்படுத்துகிறது என்ற உணர்வு எங்கள் எல்லோருக்குமே இருந்தது” என்றார் தீர்மானத்தை முன்மொழிந்தவரும் துணைத்தலைவருமான பி.ஆர்.பிரசாத்.

இந்த கௌரவச் சொற்கள் கடந்தகால காலனியாட்சியின் மிச்சசொச்சங்கள் என்ற உணர்வும் உறுப்பினர்களுக்கு இருந்தது. “ஜனநாயகத்தில் மக்கள்தான் எசமானர்கள். மக்களின் பிரதிநிதிகளும் அலுவலர்களும் அவர்களுக்கு சேவை செய்வதற்கே இருக்கிறார்கள். தங்களுடைய தேவைகளுக்காக அவர்கள் எங்களை வேண்டிக்கொள்ள வேண்டியதில்லை, மாறாக எங்களது பணியை வலியுறுத்த முடியும். ஏனென்றால் அது அவர்களுடைய உரிமை” என்றும் அவர் கூறினார்.

விமர்சனத்தில் வெளிப்படும் மனசு
“சார், மேடம் என்று சொன்னால் என்ன, சொல்லாவிட்டால் என்ன? முறைகேடுகள் இல்லாமல் நிர்வாகத்தை நடத்துவதுதான் முக்கியம். இதெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய மக்களைத் திசை திருப்புகிற உத்திதான்” என்று இதைச் சுண்டித் தள்ளிவிட முயன்றார் ஒரு விமர்சகர். பெரியவர்களையும் பொறுப்பில் உள்ளவர்களையும் மரியாதையாக அழைப்பது நம் கலாச்சாரம். சார், மேடம் போன்ற காலனியாட்சி வார்த்தைகளை நீக்குவது சரி, அவற்றுக்கு மாற்றாக நமது மொழிகளில் உள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தலாமே” என்றார் மற்றொரு நண்பர். இவ்வாறு வாதிடுகிறவர்களின் வாய்மொழிகளைத் தாண்டித் தோண்டிப் பார்த்தால், கொஞ்சத்துக்குக் கொஞ்சமாவது எந்தவொரு முற்போக்கான மாற்றமும் நிகழ்வதை ஏற்க மறுக்கிற மனம் வெளிப்படும்.

அதிகார பீடத்தில் இருக்கிறவர்களை அண்ணாந்து பார்க்கிறவர்களாகவே எளிய மக்கள் இருக்க வேண்டும் என்ற கருத்தியல் கட்டமைப்போடு தொடர்புள்ள அடிமைக் கலாச்சாரமே இவ்வாறு கௌரவமாக விளிக்க வேண்டும் என்பது. காலனியாட்சிக் காலத்தில் படிநிலைகளுக்கான சொற்களும் கட்டாயப்படுத்தப்பட்டன. “ஹிஸ் எக்ஸலன்சி”, “யுவர் ஹைனஸ்” என்பன உள்ளிட்ட சொற்கள் பதவியோடு பதிக்கப்பட்டன. உயரதிகாரிகளைக் கீழ்நிலை அலுவலர்களும் பொதுமக்களும் அந்தச் சொற்களாலேயே குறிப்பிட வேண்டும், இல்லாவிட்டால் காரியம் நடக்காது. சில நேரங்களில் மரியாதைச் சொல்லைத் தவறவிட்டுவிட்டால், வேண்டுகோள் நிராகரிக்கப்படும், வேண்டுமென்றே இழுத்தடிக்கப்படும்.

எடுத்துக்காட்டாக, காவல்துறையில் இதன் தாக்கம், நாட்டின் விடுதலைக்குப் பிறகும் தொடர்ந்தது. காவல்துறை உயரதிகாரியைக் காவலர்கள் “துரை” என்று அழைக்கிற பழக்கம் நீடித்தது. மிகப் பிற்காலத்தில்தான் சார், மேடம் என்று குறிப்பிடுவது நடைமுறைக்கு வந்தது. அந்தக் கோணத்தில் பார்த்தால் எல்லா மட்டத்திலுமான அதிகாரிகளையும் இவ்வாறு குறிப்பிடலாம் என்பதால், ஒப்பீட்டளவில் சார், மேடம் கூட ஓரளவுக்குப் பொதுத்தன்மையோடு இருக்கின்றன எனலாம்.

அலுவலகக் கையேட்டிலேயே…
ஒன்றிய - மாநில அரசுகளின் வழிகாட்டல் நெறிமுறைகளிலேயே கீழ்நிலை அலுவலர்கள் மேல்நிலையர்களை எவ்வாறு குறிப்பிட வேண்டும் என்பதற்கான விதிகள் இருக்கின்றன என்று தெரிவிக்கிறார் ஒரு மூத்த வழக்குரைஞர். மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் இதற்கான கையேடுகள் பராமரிக்கப்படுகின்றன. மேலதிகாரிகளுக்கு அனுப்பும் கடிதங்களில், “ஐ சப்மிட்” – அதாவது “கீழ்ப்படிதலுடன் சமர்ப்பிக்கிறேன்” என்றே கீழ்நிலை அலுவலர்கள் குறிப்பிட வேண்டும். இப்படிக் கீழ்ப்படிதலுடன் சமர்ப்பிக்கிற ஒருவர் பதவி உயர்வு பெற்று மேலதிகாரியாக அமர்வாரானால், அவர் தனக்கு மேலே அமர்ந்துள்ள அதிகாரிக்கு அனுப்பும் ஆவணங்களைக் கீழ்ப்படிதலுடன்தான் “சப்மிட்” செய்தாக வேண்டும். “இது கூட பிற்காலத்து மாற்றம்தான். முன்பு ‘ஐ பெக் டு சப்மிட்’ (தங்களிடம் இறைஞ்சிக் கேட்டு சமர்ப்பிக்கிறேன்) என்று எழுதிய பிறகுதான் கையெழுத்துப் போட வேண்டிய நிலைமை இருந்தது” என்றார் வழக்குரைஞர்.

வழக்குரைஞர்கள் நீதிமன்றங்களில் வாதாடும்போது, நீதிபதிகளை “யுவர் ஹானர்” என்றோ, “மை லார்ட்” என்றோ விளிப்பது இப்போது மாறியிருக்கிறதா? “பெரிதாக மாறிவிடவில்லை. பல நீதிபதிகளே நொந்துபோய், ‘இதெல்லாம் வேண்டாமே, எங்களை சார் அல்லது மேடம் என்றே சொல்லுங்கள், இல்லையேல் மிஸ்டர் அல்லது மிஸ் என்பதோடு பெயரைச் சேர்த்துப் பேசுங்களேன்’ என்று கேட்டுக்கொண்டதுண்டு. ஆனால் இப்படியே பழகிப்போன வழக்குரைஞர்களால் இதை மாற்றிக்கொள்ள முடியவில்லை. அவர்களைப் பார்த்து வாதாடப் பழகுகிற இளைய தலைமுறையினரும், எதற்கு வம்பு என்று “மை லார்ட்” என்றே அழைக்கத் தொடங்குகிறார்கள். மாற்றம் அவ்வளவு எளிதல்ல என்றும் அந்த மூத்தவர் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் “கனம் மினிஸ்டர்” “கனம் ஸ்பீக்கர்”, நீதிமன்றத்தில் “கனம் கோர்ட்டார்” என்று குறிப்பிடுகிற பழக்கம் சில காலத்துக்கு இருந்தது. திமுக முதன்முறையாக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, முதலமைச்சர் அண்ணா மேற்கொண்ட நடவடிக்கையால் இது வெளியேற்றப்பட்டு, தமிழில் “மாண்புமிகு”, “மாண்பமை” என்று குறிப்பிடுகிற நடைமுறை கொண்டுவரப்பட்டது. இன்றளவும் தொடர்கிற இந்தப் பழக்கம் பண்பாட்டுத் தளத்தில் ஒரு முக்கிய நகர்வுதான். இந்த “மாண்புமிகு”, “மாண்பமை” போன்ற சடங்குப்பூர்வமான மரியாதைச் சொற்கள் இனிமேலும் தொடரத்தான் வேண்டுமா? இந்தக் கேள்வி உடனடிக் கவனத்துக்கான பிரச்சினையாக உரக்க ஒலிக்காவிட்டாலும், வருங்காலப் பரிசீலனைக்கான கேள்வியாக ஒலி குறைந்தாவது கேட்கப்படுகிறது.

“ராஜ கம்பீர…”
காலனியாட்சி பரவியிருந்த நாடுகளில் எல்லாம் இந்தப் பழக்கங்கள் ஒட்டியிருக்கக்கூடும். மேற்குலக நாடுகளில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அமெரிக்காவில் நாடாளுமன்றத்திலும் வெளி நிகழ்வுகளிலும் “மிஸ்டர் பிரசிடென்ட்” என்று பதவியை, “மிஸ்டர் பைடன்” என்று பெயரைச் சொல்லி அழைத்துப் பேசலாம். சிங்கப்பூரில் அரசு அலுவலர்கள் சார்/மேடம் என்ற ஒட்டுகள் இல்லாமல் பெயர் சொல்லியே அழைக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கிறார் இங்கிருந்து அங்கே சென்று ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிற நண்பர்.

வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால், மேலே இருப்பவர்களுக்குக் கீழே இருப்பவர்கள் தாழ்ந்து பணிந்து மரியாதை செலுத்த வேண்டும் என்பது மன்னராட்சிக் காலத்திலேயே இறுகிப் போயிருந்ததைப் பார்க்கலாம். அரசனைத் தலைமையமைச்சரும், தலைமையமைச்சரை மற்ற அமைச்சர்களும், அமைச்சர்களை மற்றவர்களும் புகழ்ந்தோதிவிட்டுப் பேச்சைத் தொடங்குகிற காட்சிகளை நாடகங்களிலும் திரைப்படங்களிலும் பார்த்திருக்கிறோம். அந்தப் புகழ்ச்சிகள் வசனகர்த்தாக்களின் கற்பனை என்று சொல்லிவிட முடியுமா?

‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தில் அரண்மனைக் கொலுமண்டபத்துக்கு மன்னர் வருவதை அறிவிக்கும் சேவகன், “ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜகுல திலக…. பராக் பராக் பராக்” என்று சொல்வான். வேகமாக நடந்து வந்துகொண்டிருந்த மன்னன் வரவேற்பு முழக்கத்தில் ஒரு அடைமொழி விட்டுப்போனதைக் கண்டுபிடித்துத் தண்டனையளிப்பான். வடிவேலுவின் அட்டகாச நடிப்பில் அந்தக் காட்சி சிரிப்போடு சிரிப்பாக மன்னராட்சி மனநிலையைக் காட்டியது. நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு உருவானதோடு வளர்ந்த மனநிலை அது. உலகின் எல்லாப் பகுதிகளிலும் இப்படியே நடந்திருக்கிறது. அதிகாரத்தில், செல்வக்குவிப்பில் மேல்தட்டுக்காரர்களை கீழ்த்தட்டுக்காரர்கள் வணங்கி நிற்கவைக்கிற விதிகளில் ஒன்றாகக் கட்டப்பட்ட மனநிலை. இந்தியச் சமுதாய அமைப்பில் கூடவே சாதியப் படிநிலையும் சேர்க்கப்பட்டுவிட்டது. உயர்மேடைகளில் உட்கார்ந்துகொண்டவர்களுக்கு தாழ்தளங்களிலும் தரையிலும் நிற்பவர்கள் மரியாதை செலுத்தியாக வேண்டும்.

திரு... திருமதி... திருமிகு...
நிலப்பிரபுத்துவக் கலாச்சாரத்தின் இன்னொரு பரிமாணமாக, ஆணுக்குப் பெண் மரியாதை கொடுத்தாக வேண்டும் என்ற ஆணாதிக்க நியதி சேர்ந்துகொண்டது. பெண்ணைப் பொறுத்தவரையில் தாய் என்ற தகுதி வந்தால்தான் மரியாதை. ஆணைவிடவும் பல ஆண்டுகள் வயதில் இளையவளான பெண்ணைத் திருமணம் செய்துவைத்து, கணவன் என்பதற்காக மட்டுமல்லாமல், வயதில் மூத்தவன் என்பதற்காகவும் அவனுக்கு மரியாதையோடு பணிவிடை செய்ய வேண்டிய கட்டாயம் மனைவிக்கு ஏற்படுத்தப்பட்டது. ஆணோ, பெண்ணோ அவர்களது அனுபவ முதிர்ச்சிக்காக, வழிகாட்டும் திறனுக்காக மதிக்கப்படுவது என்றில்லாமல், வயது மூப்புக்காக மரியாதை கொடுப்பது ஒரு மரபாக்கப்பட்டது. வாய்மொழி மரியாதையோடு நிற்காமல், உடல்மொழியாகவும் – காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெறுகிற மரியாதைப் பழக்கம் ஒரு கிளையாக உருவானது. அது முற்றிப்போய் காலில் விழுந்து பதவி பெறுகிற அரசியல் சரிவுக் கலாச்சாரமாகவும் மாறியது.

பெயருக்கு முன்னால் மிஸ்டருக்கு மாற்றாக “ஸ்ரீ” என்றும், அதற்கு மாற்றாக “திரு” என்றும் குறிப்பிடுகிற மாற்றங்கள் நிகழ்ந்தன. இதிலேயும் கூட, பெண்ணுக்குத் தனி மரியாதைச் சொல் இல்லாமல் ஸ்ரீமதி என்றும் திருமதி என்றும் குறிப்பிடப்பட்டது. அதிலும், திருமணம் ஆகியிருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆணுக்கு “திரு” என்ற முன்னொட்டு உறுதி. பெண்ணுக்கோ, திருமணமாகியிராவிட்டால் “செல்வி”, ஆகியிருந்தால் “திருமதி” என்ற முன்னொட்டுகள். மேற்குலகில், நெடுங்கால பாலின சமத்துவப் போராட்டத்தின் ஒரு வெற்றியாக, திருமணமாகாத பெண்ணை “மிஸ்” (Miss) என்றும் திருமணமான பெண்ணை மிஸ்டரோடு சேர்த்து “மிஸஸ்” (Mrs) என்றும் குறிப்பிட்டுவந்த பழக்கம் மறுக்கப்பட்டு, திருமணம் ஆகியிருந்தாலும் ஆகாவிட்டாலும் பெண்ணை ‘ம்(மி)ஸ்” (Ms) என்று எழுதுவது நடைமுறைக்கு வந்து பரவிக்கொண்டிருக்கிறது. தமிழில் “செல்வி”, “குமாரி”, “திருமதி” ஆகியவற்றுக்கு மாற்றாக எந்தப் பெண்ணையும் “திருமிகு” என்று குறிப்பிடுவது சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. பாலின சமத்துவம் முழுமையாக நிலைநாட்டப்படும் வரையில் இது தொடரும். ஆயினும், இப்படி திரு, திருமிகு என்ற முன்னொட்டுகளும், அவர்களே, ஜீ என்ற பின்னொட்டுகளும் கூட எதிர்காலத்தில் பின்பற்றப்பட வேண்டுமா என்ற சிந்தனையை ஏற்படுத்துகிறது மாத்தூர் தீர்மானம்.

இப்படியொரு தீர்மானமே அதிரடிப் புரட்சியாகிவிடாதுதான். ஆனால், நாடு முழுக்க, சமுதாயம் முழுக்க, பண்பாட்டுத்தளத்தில் அடிவைத்து அடிவைத்துப் படிப்படியாகப் பரவ வேண்டிய அடிப்படையான நகர்வு இது. வேர் பிடித்து விரியட்டும்.

வயது மூப்பு, ஏற்றுக்கொண்ட பொறுப்பு என்ற அடிப்படையில் கௌரவப்படுத்தி மரியாதை கொடுப்பது நல்ல பண்புதானே என்று கேட்கலாம். ஒருவரது அனுபவ முதிர்ச்சியும் கடமைப் பங்களிப்பும் நிச்சயமாக மதிப்புக்கு உரியவைதான். மதிப்பு வேறு, மரியாதை வேறு. சுயநலமும் அதிகார ஆணவமும் அடிமைப் புத்தியும் ஒட்டுகிறபோது அந்தப் போலித்தனம் செயற்கையான மரியாதைச் சொற்களுக்குள் பதுங்குகிறது. கௌரவ ஒட்டுச் சொற்கள் இல்லாமலே, அனுபவ வழிகாட்டல்களையும் கடமை நேர்மைகளையும் ஏற்கிறபோது அந்த மதிப்பு இயற்கையாக வெளிப்படும்.




தேமொழி

unread,
Sep 10, 2021, 11:36:45 PM9/10/21
to மின்தமிழ்
அன்றும் இன்றும் கூடவே வருகிறான் பாரதி

 -- அ.குமரேசன் 

காலங்கள் மாறினாலும், பார்வைகள் மாறினாலும் என்றும் நம்முடன் இருப்பதே பாரதியின் மகத்தான சாதனை. காலாவதியாகாத கலைஞன் பாரதி.

ஹைலைட்ஸ்:
பாரதியின் ‘சின்னச்சங்கரன் கதை’, ‘பாஞ்சாலி சபதம்’ இவையெல்லாம் கடவுள் மறுப்பைத் தாண்டி பிற தளங்களிலும் வெளிச்சம் தந்தன.
இன்றைக்கும் தயக்கமின்றி எழுத்திலும் பேச்சிலும் பயன்படுத்திக்கொள்ள பாரதியின் கவிதைகள் தோழமையோடு துணை வருகின்றன.
மதப்பற்றுடன் இருக்கிற சக மக்களோடு உரையாட பாரதியைப் பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.
பாரதி பற்றி யோசிக்கிறபோது முதலில் ஏற்படுகிற சிந்தனை, மாறும் யுகத்தின் இணைப்புக் கண்ணியாக இருந்தான் என்பதுதான். அன்று கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தியே புதிது புதிதாய்த் தேடித் தெரிந்துகொண்டவன், புதுக்கவிதை எனப் பின்னாளில் அடையாளம் பெற்ற வடிவத்தை வசனகவிதையாக அறிமுகப்படுத்தியவன், இந்திய இதழியல் உலகத்தில் முதன் முதலாக அரசியல் கருததுப்படம் (கார்ட்டூன்) தானே வரைந்து வெளியிட்டவன், விடுதலை லட்சியப் பாடல்கள் மக்களைக் கிளர்ச்சியடையச் செய்கின்றன என்று ஆங்கிலேய அதிகாரிகளாலேயே குறிப்பிடப்பட்டு அதற்காக வேட்டையாடப்பட்டவன் என்று பலவற்றைச் சொல்லலாம்.

விடுதலைப் போராட்டம் என்பது சமூக மாற்றத்திற்காகவும்தான் என்ற புரிதல் ஏற்பட்டதன் விளைவாக சாதி வேற்றுமைமையை வெறுத்துத் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகக் கொந்தளித்தவன் பாரதி. இதைக் குழந்தைகள் மனதில் பதிய வைப்பது முக்கியம் என உணர்ந்து முனைந்தவன். விடுதலை வேட்கையின் மற்றொரு பரிமாணமாகப் பெண்ணடிமைத்தனத்தைச் சாடியதோடு அவ்வாறு சாடுகிற தகுதியை வளர்த்துக்கொள்ளத் தனக்குள்ளேயே போராடியவன். புரட்சியில் வெற்றி கண்ட உருசியாவை வாழ்த்தி மாகாளி கடைக்கண் வைத்தாள் என்று அத்தகையதோர் எழுச்சி இந்த மண்ணிலும் மலராதோ என்ற பேராசையை வெளிப்படுத்தியவன்.

இப்படியெல்லாம் பாட்டெழுதியதோடு கடமை முடிந்துவிட்டதாகக் கருதாமல் இயக்கத்தில் ஈடுபட்டவன், மாற்றத்திற்கான சிந்தனைகளாலும் முயற்சிகளாலும் தானே ஓர் இயக்கமாகத் திகழ்ந்தவன்…

நீ விரும்பும் மாற்றமாக நீயே இரு
கொல்கத்தா சென்று, விவேகானந்தரின் சீடர் சகோதரி நிவேதிதையைச் சந்திக்கிறான், மனைவியை அழைத்து வரவில்லையா என்று விசாரிக்கிற அவரிடம், பெண்களுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும் என்று கேட்கிறான், பெண்களை அடிமையாக வைத்துக்கொண்டு நாட்டுக்கு விடுதலை பெறக் கிளம்பிவிட்டீர்களா என்று நிவேதிதை கேட்க, பாரதியின் பார்வை அடியோடு மாறுகிறது. எந்த அளவுக்கு என்றால் மனைவி செல்லம்மாவிடம் மன்னிப்புக் கேட்கிற அளவுக்கு. ஆண் புத்தியோடு எதையோ சொல்லப்போக, ஊருக்குத்தான் பெண் சமத்துவம் பற்றிப் பேசுவீர்கள் போல என்று இடித்துக்காட்டிய செல்லம்மாவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான் என்ற ஒரு பதிவு உண்டு.

சமூக மாற்றம் குறித்த சிந்தனை மாற்றத்தைத் தனது தோற்றத்திலும் வெளிப்படுத்தும் நோக்கத்தோடு குடுமியை மழித்து, பூணூலை அகற்றி, அடர் முறுக்கு மீசை வளர்த்து, முண்டாசு கட்டிக்கொண்டதில் தொடங்கி, வைதிகர்கள் வைது குவிக்க அதைப் பொருட்படுத்தாத பாரதி, ஒதுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவருக்குப் பூணூல் மாட்டிவிட்டது வரையிலான கலகங்களைத் தனியே தொகுக்கலாம். தேசத்து மக்கள் பட்டினியின்றி வாழச் சுதந்திரம் தேவையெனக் கருதியவனின் வீட்டில் அடுத்த வேளை சமைப்பதற்கு அரிசி இருந்ததில்லை என்பதையும், “அவருக்குக் கொடுக்கும் உணவில் முக்கால் பகுதியை அவருடைய தோழர்களான காக்கைகளும் குருவிகளும் சாப்பிட்டுப் போவதைத் தாங்கிக்கொள்ள முடியாதவளாகத்தான் இருந்தேன்” என்று பிற்காலத்தில் செல்லம்மா சொன்னதையும் இணைத்து எவ்வளவோ பேசலாம்.

முக்காலத் தோழமை
ஆயினும், அவனுக்கும் எனக்குமான ஒரு “முக்காலத் தோழமை” பற்றி இங்கே பகிர்வது பொருத்தமாக இருக்கும். பள்ளிப்பருவத்தில் ஆசிரியர்கள் சொன்னதைச் செய்த காலம், தீவிர கடவுள் நம்பிக்கையாளனாகத் தேங்கிப்போயிருந்த காலம், அதிலிருந்து விடுபட்டுப் புறப்பட்டுப் பகுத்தறிவையும் சமத்துவத்தையும் வரித்துக்கொண்ட காலம் ஆகிய மூன்று காலகட்டங்களிலும் பாரதி என் தோழனாகவே இருந்து வந்திருக்கிறான்.

எங்கள் பள்ளியில் காலை இறைவணக்கப் பாடல் பாடுவதற்கென்று சில மாணவர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவில் இடம் பெற்ற எனக்கு, பாரதியின் வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் பாட்டும், தூயபெருங்கடல் சுப்பிரமணியனை நேயத்துடன் பணிந்தால் நெருங்கித் துயர் வருமோ என்று கிளியிடம் கேட்கும் பாட்டும் மிகவும் பிடித்துப்போனவை. அந்தப் பாடல்களை நான் தமிழ்ச் சொற்களுக்கான தெளிவோடு பாடியபோது ஆசிரியர்கள் தட்டிக்கொடுத்துப் பாராட்டினார்கள். வீட்டுப்பாடம் எழுதாமல் வருவது போன்ற குற்றங்களுக்காக ஆசிரியர்கள் தண்டனையளிக்காமல் விட்டதற்கு இந்தப் பாடல்களை நான் ஈடுபாட்டுடன் பாடியது ஒரு முக்கியமான காரணம்.

இரண்டாவது காலகட்டம், கடவுள் நம்பிக்கையில் தீவிரமாகச் சிக்கியிருந்த, அதனாலேயே பல முனைப்புகளை நானே முடக்கிக்கொண்ட ஆண்டுகள். வாழ்க்கை நிலைமைகளால் மனதில் துயரம் வாட்டிய நாட்களில் வீட்டில் சாமிப் படங்களுக்கு முன்பாகவும், மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் சில குறிப்பிட்ட சாமி சிலைகளுக்கு முன்பாகவும் அமர்ந்து பாரதியின் வேறு பல தெய்வப்பாடல்களை நெக்குருகப் பாடுவேன். காரணம் நீங்காமல் துயரம் விலகாது என்றாலும் அந்தப் பொழுதின் மன அழுத்தம் குறைந்ததாகக் கருதிக்கொண்டு எழுந்து செல்வேன். நண்பர்கள் வீடுகளில் நடக்கும் வழிபாட்டு நிகழ்வுகளில்கூட என்னிடம் பாரதி பாடல்களைப் பாடுமாறு சொல்வார்கள், அது மிகப் பெரிய பெருமித உணர்வைத் தரும்.

கடவுள் உண்டா இல்லையா என்று கடிதப் பரிமாற்றங்களில் விவாதிக்கிற கட்டத்திற்கு வந்தபோது ஒரு கட்டத்தில், “தன்னம்பிக்கை இல்லாததுதான் கடவுள் நம்பிக்கைக்குக் காரணம்,” என்று ஒரு நண்பன் எழுத, “இல்லை, தன்னம்பிக்கையின் ஒரு வடிவம்தான் கடவுள் நம்பிக்கை,” என்று அடுத்த கடிதத்தை எழுதத் தொடங்கியவன், அந்தக் கருத்து இடிப்பதாக ஒரு சிந்தனை தோன்ற அப்படியே கடிதத்தை நிறுத்திக்கொண்டேன். இப்படியாகக் கடவுள் இல்லை என்ற தெளிவுக்கு நான் வந்த பிறகு, அப்போதும் என் கூடவே வரத் தொடங்கினான் பாரதி.

அவனுடைய ‘சின்னச்சங்கரன் கதை’, ‘பாஞ்சாலி சபதம்’ இவையெல்லாம் கடவுள் மறுப்பைத் தாண்டி பிற தளங்களிலும் வெளிச்சம் தந்தன. பொது மேடைகளில் மார்க்சிய இயக்கத் தலைவர்களும் அறிஞர்களும் பாரதியின் வார்த்தைகளையும் வாழ்க்கையையும் பேசியபோது, அவன் அரசியல் விடுதலைக்காக மட்டும் பாட்டெழுதியவன் அல்ல என்ற புரிதல் ஏற்பட்டது. அந்தத் துணிச்சலில்தான், அவனுடைய ”புதிய ஆத்திச் சூடி” பற்றி ஒரு கட்டுரைத் தொடர் எழுதத் தொடங்கினேன். அறம் செய விரும்பு, ஆறுவது சினம், தையல் சொல் கேளீர் என்ற பழைய ஆத்திச் சூடிகளிலிருந்து மாறுபட்டு, அச்சம் தவிர், ஆண்மை தவறேல், இளைப்பது இகழ்ச்சி, ஊண் மிக விரும்பு, சோதிடந்தனை இகழ், தையலை உயர்வு செய்…. என்று வழிகாட்டும் சொற்களுக்கு, நடப்புக் கால எடுத்துக்காட்டுகளோடு அந்தத் தொடர்கட்டுரையை எழுதினேன்.

ஏதோ ஒரு துணிவில் எழுதத் தொடங்கிவிட்டேனே தவிர, ஒவ்வோரு வாரமும் புதிய ஆத்திச்சூடியின் புதிய வரிகளை எடுத்துக்கொள்கிறபோதெல்லாம் பகுத்தறிவுக்கும் சமத்துவத்திற்கும் மாறான போதனைகள் ஏதாவது வந்துவிடுமோ என்று மனதுக்குள் ஒரு பதைப்போடுதான் படிப்பேன். இறுதிவரையில் என்னைக் கைவிடவில்லை பாரதி.

புதிய ஆத்திச்சூடிக்கான முன்னுரையில் மட்டும், அன்றைய மரபில் நின்று அந்த “வெள்ளைத்தாமரைப் பூவில் இருப்பாள்” பாட்டை எழுதியிருப்பான். அது தனியொரு பாட்டாகத்தான் மக்களிடையே சென்றது. ரௌத்திரம் பழகவும், வெடிப்புறப் பேசவும், இழிவான போக்குகளை நையப்புடைக்கவும் சொல்லும் ஆத்திச் சூடி வரிகள் எதிலும் எந்தச் சாமியும் மதமும் இருக்காது. ஆகவேதான் அதில் “ஒற்றுமை வலிமையாம்” என்ற சொற்கள் உண்மையுடன் ஒலிக்கின்றன. இன்றைக்கும் தயக்கமின்றி எழுத்திலும் பேச்சிலும் பயன்படுத்திக்கொள்ள அவனுடைய கவிதைகள் தோழமையோடு துணை வருகின்றன.

பாரதியின் கவிதைகளோடு நின்றுவிடாமல் அவருடைய கட்டுரைகள், கதையாக்கம் என உள்ளே இறங்கினால், நீண்ட பல கனவுகள் நனவாகுமா ஆகாதா என்ற கேள்வியோடு 39 வயதில் கதை முடிந்துபோனவனின் பன்முகப் பரிணாமங்களும் பங்களிப்புகளும் தெரியவரும். பாவி, திருவல்லிக்கேணியில், அந்தக் கோயில் யானைக்குப் பக்கத்தில் போகாமல் இருந்திருந்தால், இன்னும் பல மடங்கு அவனைப் பற்றித் தெரிந்துகொள்கிற வளர்ச்சிகள் ஏற்பட்டிருக்குமே என்ற ஏக்கம் எஞ்சியிருக்கும்.

விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவனா?
அரசியல் – சமூகப் பார்வைகள் விரிவடைய விரிவடைய பாரதியை ஒற்றைப் பரிமாணத்தில் மட்டும் பார்க்கக் கூடாது என்ற புரிதலும் ஏற்பட்டது. கவிதைகளில் சுதந்திரத்தை வலியுறுத்தியும், மதவேற்றுமையை எதிர்த்தும், பாலின சமத்துவத்தை முன்வைத்தும் எழுதினான் என்றாலும், கட்டுரைகளில் ஆணாதிக்கச் சிந்தனைகளும் பிராமணியக் கருத்துகளும் பொதிந்திருப்பதைப் புதிய விமர்சகர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள். “தந்தையர் நாடெனும் போதினிலே…” என அவன் எழுதியதில், “தாய்நாடு” என்று வழக்கமாகச் சொல்லப்படுவதை மாற்றிச் சொன்னால் என்ன என்ற கவிமுனைப்பும் இருக்கிறது, அதே வேளையில் “ஃபாதர்ஸ் லேண்ட்” என்று குறிப்பிடும் மேற்கத்தியத் தாக்கமும் இருக்கிறது, அத்துடன் உள்நாட்டு ஆணாதிக்கக் கலாச்சாரப் பிடிப்பும் இருக்கிறது என்ற விமர்சனத்தை ஒதுக்கிவிட வேண்டியதில்லை. பாடல்களில் பிராமணியத்தைத் தூக்கிப்பிடிக்கும் வெளிப்பாடுகளேகூட இருக்கின்றன. இன்று மதவாத அரசியல் செய்வோருக்கு உதவிசெய்யக்கூடிய கருத்துகளையும் பாரதியின் கட்டுரைகளில் காண முடியும்.

இதற்குப் பிறகும்கூட அவன் என் கூடவே வருகிறான். பாரதியின் குடும்பச் சூழல், அன்றிருந்த வாய்ப்புகள், கட்டாயங்கள் இவற்றோடு அந்தச் சிந்தனைகளை அவன் வெளிப்படுத்திய கால நிலைமைகள், அற்பாயுசில் முடிந்துபோன பயணம் என்பதையெல்லாம் பொருத்தியே பார்க்க வேண்டியிருக்கிறது. படைப்புகளில் மிகுதியாக வெளிப்படுவது எது, மக்களிடையே வெகுவாகத் தாக்கம் செலுத்திய படைப்புகள் எவை என்று ஒப்பிட்டுப் பார்க்கிறபோது முற்போக்காளர்களின் நண்பனாகவே அவன் வந்திருப்பான் என்று ஊகிக்கலாம்.

“சாதி மதங்களைப் பாரோம், உயர் ஜென்மம் இத்தேசத்தில் எய்தினராயின்” என்று சொன்னதன் மூலம், மதவாத அரசியல் செய்கிறவர்களை விமர்சிக்கிறான். அறிவார்ந்த விமர்சனப் புலத்தில் அவனது சறுக்கல்கள் பற்றிப் பேசிக்கொண்டே, சமூகம் சார்ந்த வினைத்தளத்தில் அவனது வார்த்தைகளையும் வாழ்க்கையையும் துணையாகக் கொள்ள முடியும். நவீன வசதிகளும் வாய்ப்புகளும் பல்கிப் பெருகிவிட்ட இன்றைய காலத்திலேயே இறை நம்பிக்கையுடனும் மதப்பற்றுடன் இருக்கிற சக மக்களோடு உரையாட பாரதியைப் பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

நன்றி: 'சமயம்' 

----

தேமொழி

unread,
Sep 15, 2021, 6:17:55 PM9/15/21
to மின்தமிழ்
தெருப்பூசணிக்காய் முதல் பொதுப்போராட்டம் வரை - சமூக அக்கறையின் நிலை 

-- அ. குமரேசன்
 செப்டெம்பர்  15, 2021

புதிதாகக் கட்டப்படுகிறது ஒரு வீடு. கட்டி முடிக்கப்பட்ட பிறகு புதுமனை புகுவிழாவில், பெரிய கண்களும் மீசையும் வரையப்பட்டிருக்கும் அந்தப் பூசணிக்காய் தெருவில் போட்டு உடைக்கப்படுகிறது. அத்துடன் அந்தப் புதுவீட்டின் மீது, தெருவில் அந்த வழியாகப் போனவர்கள் வந்தவர்களின் கண்களிலிருந்தும், விழாவுக்கு வந்துவிட்டுச் சென்றவர்களின் கண்களிலிருந்தும் விழுந்திருந்த காழ்ப்புப் பார்வைகள் (திருஷ்டிகள்) சிதறித் தொலைகின்றன. தெருவில் போகிறவர்கள் வருகிறவர்களையும் விழாவுக்கு வந்துசெல்கிற உற்றார்கள் உறவினர்களையும் பொறாமைக்காரர்களாகச் சிறுமைப்படுத்துகிறது இந்தப் பழக்கம். அத்துடன், அந்த உடைந்து கிடக்கும் பூசணிக்காய்த் துண்டுகள், சம்பந்தமே இல்லாமல் அவ்வழியாக வருகிறவர்களின் இருசக்கர வண்டிகளைச் சரியவைத்து முட்டிக்கால்களை உடைத்து அனுப்புகின்றன. 

மற்றவர்களின் திருஷ்டிப் பார்வையால் தீங்கு ஏற்படும் என்பதாக சமூகத்தில் ஊறிப்போயிருக்கிற நம்பிக்கை அவர்களை அவமதிக்கிறது. திருஷ்டிப் பரிகாரமாக சமூகத்தில் பின்பற்றப்படுகிற பூசணி உடைப்புச் சடங்கு மற்றவர்களுக்குத் தீங்கு ஏற்படுத்துகிறது. உண்மையிலேயே யாராவது பொறாமைப்படுவார்களானால், அவர்கள் அந்த வீடு கட்டப்பட்டதில் சட்ட விதி மீறல் ஏதாவது நடந்திருக்குமானால் அதை அதிகாரிகளிடம் போட்டுக்கொடுப்பது போன்ற இடையூறு ஏற்படுத்துகிற செயல்களில் இறங்கினாலன்றி, அவர்களுடைய பார்வையால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டுவிடாது. ஆனால் பூசணியோ சாலையில் செல்லும் எல்லோருக்குமே பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆகவேதான், இவ்வாறு பூசணியைத் தெருவிலே போட்டு உடைக்காதீர்கள் என்று அரசாங்கம் வேண்டுகோள் விடுக்கிறது. 

"செய்வினை" தடுப்பதற்காகப் பூசணியை வண்ணம் பூசித் தொங்கவிடுவதைப் பற்றியே ஒரு பாட்டெழுதினார் புரட்சிக்கவி பாரதிதாசன். அதனைக் கறிசமைத்து உண்டதாகக் கூறி, "பொய்வண்ணப் பூசணிக்காய,... உன் கைவண்ணம் அங்கு கண்டேன், கறிவண்ணம் இங்கு கண்டேன்," என்றார். இலக்கிய நிகழ்வுகளில் அந்தப் பாட்டு ரசிக்கப்படுகிறது. அபராத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறபோது மட்டும் அரசாங்க வேண்டுகோள் பின்பற்றப்படுகிறது. 

சமூக அக்கறை: 
இது எதைக் காட்டுகிறது? தானும் தன் வீடும் பாதிப்பில்லாமல் இருக்க வேண்டும் என்கிற அக்கறை இருக்கிறவர்களுக்கு, மற்றவர்கள் பாதிகப்படக்கூடாது என்கிற அக்கறை இல்லை. தன்னுடைய ஒரு செயல் அல்லது செயலின்மை மற்றவர்களுக்கு என்ன விளைவை ஏற்படுத்தும் என்று அக்கறை கொள்வதுதான் "சமூக அக்கறை" (சோசியல் மைண்ட்ஃபுல்னெஸ்) எனப்படுகிறது. மற்றவர்கள் என்றால் தனக்கு அடுத்தாற்போல இருக்கிற மற்றவர்கள், தெருவிலும் ஊரிலும் இருக்கிற மற்றவர்கள், நாட்டிலும் ஒட்டுமொத்த சமுதாயத்திலும் இருக்கிற மற்றவர்கள் என அனைத்து வகையான மற்றவர்களும் வருகிறார்கள். அவர்களைப் பொருட்படுத்துவதுதான் "சமூக அக்கறை" என்று விரித்துச் சொல்லலாம். 

அப்படியெல்லாம் பொருட்படுத்தத் தவறுவது சமூக அக்கறையின்மை. கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால், அரசாங்கம் எவ்வளவு கேட்டுக்கொண்டும் பொறுப்பில்லாமல் தெருவில் பிளாஸ்டிக் கழிவுகளை வீசுவது முதல், அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளால் பொதுச் சமூகத்திற்கு ஏற்படக்கூடிய பாதகங்களைப் பொருட்படுத்தாமல் கட்சி சார்பு அடிப்படையில் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது வரையில் சமூக அக்கறையின்மைதான். நடப்புக் காலத்தோடு பொருத்திச் சொல்வதென்றால், கொரோனாவால் செத்துப்போனவர்கள் மீது மரியாதையே இல்லாமல், பொதுவழிபாடு நடத்துவதற்குத் தடை விதிப்பதா என்று பேசித் தூண்டிவிடுகிறவர்களின் தூண்டிலில் சிக்கிக்கொள்வது கூட சமூக அக்கறையின்மைதான். 

அன்றாட வாழ்க்கையில் பார்ப்பதென்றால் தெருவில் குழந்தைகள் நடமாடுவது பற்றிய கவலையே இல்லாமல் வண்டிகளை வேகமாக ஓட்டிப் பறப்பது, நடைமேடையில் எதிரே வருகிறவர்களுக்கும் பின்னால் வருகிறவர்களுக்கும் இடைஞ்சலாக கைகோர்த்துக்கொண்டு நடப்பது, காலில் செருப்பின்றி வருகிறவர்களை இளக்காரமாகக் கருதி சிகரெட்-பீடியை அணைக்காமல் கீழே போடுவது, வீட்டின் முகப்பில் செடிவளர்ப்பு என்ற போர்வையில் இரண்டடி அகலமாவது உள்ள பொதுஇடத்தை ஆக்கிரமிப்பது, கடைவாசலில் விற்பனைப் பொருள்களையும் விளம்பரங்களையும் வைத்து மக்கள் நடப்பதற்கான பாதையைத் தடுப்பது, பொதுமருத்துவமனையில் கழிப்பறையைப் பயன்படுத்திய பின் தண்ணீர் விடாமல் வருவது .... இப்படியான பல காட்சிகள் சமூக அக்கறையின்மையின் சாட்சிகளாகின்றன. (பல நேரங்களில் பொது மருத்துவமனைக் கழிப்பறைக் குழாய்களில் தண்ணீரே வருவதில்லையே என்கிறீர்களா? அது நிர்வாகத்தின் அல்லது அதிகாரிகளின் சமூகப் பொறுப்பின்மைதான்). பொது நீர்நிலைகளில் சிகிச்சைக் கழிவுகளைக் கொட்டுவது தனியார் மருத்துவ நிறுவனங்களின் சமூக அலட்சியம்தான். 

இதற்காக ஒரு ஆய்வு: 
இப்படியான பொது சமூக அக்கறையின்மை பற்றிய ஆய்வு ஒன்று அக்கறையோடு நடத்தப்பட்டுள்ளது. அந்த அக்கறை குறைவாக உள்ள சமுதாயங்களில் ஒன்றாக இந்தியா இடம்பிடிக்கிறது என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. நெதர்லாந்து நாட்டின் லேய்டன் பல்கலைக்கழக சமூக உளவியல் துறை சார்பில், உதவிப் பேராசிரியர் நைல்ஸ் வான் டோசம் தலைமையிலான குழு பல நாடுகளிலும் இந்த ஆய்வை நடத்தியிருக்கிறது. 

குழுவினரின் ஆய்வறிக்கை 'புரொசீடிங்ஸ் ஆஃப் தி நேஷனல் அகடமி ஆஃப் சயின்ஸஸ்' என்ற அறிவியல் ஏட்டில் வெளியிடப்பட்டிருப்பதைத் தெரிவிக்கிறது 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி. குழுவோடு இணைந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 65 ஆராய்ச்சியாளர்கள் 12 வகையான தலைப்புகளின் கீழ் பல கேள்விகளை உருவாக்கி ஆய்வை நடத்தியிருக்கிறார்கள். மொத்தம் 8,354 பேர் ஆய்வுக்குத் தங்களை உட்படுத்திக்கொண்டு பதிலளித்திருக்கிறார்கள். 

மற்றவர்களுக்கு என்ன விளைவு ஏற்படும் என்ற சமூக அக்கறையுடன் முடிவுகளை எடுப்பதில் ஜப்பானியர்கள் முதலிடம் பிடிக்கிறார்கள். அவர்கள் எடுக்கிற முடிவுகள் பெரும்பாலான நேரங்களில் (72 சதவீதம்) சமூக அக்கறையோடு இருக்கின்றன. 
அவர்களுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரிய நாட்டவர்கள் (69 சதவீதம்),
அதற்கடுத்து மெக்சிகோ மக்கள் (68 சதவீதம்) வருகிறார்கள். 
பிரிட்டன் நாட்டவர்கள் 64 சதவீதம் என்ற நிலையில் நான்காவது இடத்திலும், 
சீன மக்கள் 62 சதவீதம் என்ற புள்ளிகளோடு ஐந்தாவது இடத்திலும்,
அமெரிக்கர்கள் ஆறாவது இடத்திலும் (58 சதவீதம்) இருக்கிறார்கள். 
கனடா 57 சதவீத அளவோடு இருக்கிறது. 
மிகக்குறைவான சமூக அக்கறையைத் தங்களின் முடிவுகளில் வெளிப்படுத்துகிறவர்கள் இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்தவர்கள் - 46 சதவீதம்தான். அவர்களை விடக் கொஞ்சம் முன்னேறியிருப்பவர்கள் துருக்கி மக்கள் (47 சதவீதம்). 

ஆய்வறிக்கையின்படி கீழேயிருந்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. இங்கே தனி மனிதர்கள் முடிவெடுப்பதில் 50 சதவீதம் அளவுக்கே சமூக அக்கறை இருக்கிறது என்று அறிக்கை கூறுகிறது. 

ஆய்வு ஏற்கத்தக்கதுதானா? 
ஐக்கிய நாடுகள் அமைப்பு மதிப்பீட்டின்படி உலக மக்கள்தொகை இப்போது 790 கோடி. நாடுகளின் ஆட்சி முறைகள், சமுதாய மரபுகள், பொருளாதார நிலைகள், கல்விச் சூழல்கள், பண்பாட்டுப் பின்னணிகள் போன்றவற்றில் கூர்மையான வேறுபாடுகள் இருக்கின்றன. அரசின் மதச்சார்பின்மை மாண்பு ஓங்கியுள்ள நாடுகள், ஆட்சிபீடத்தில் ஏதோவொரு மதம் உட்கார்ந்திருக்கிற நாடுகள், குடிமக்களிடையே மதங்களுக்கும் சமூக வேறுபாடுகளுக்கும் செல்வாக்கு உள்ள நாடுகள், பயங்கரக் கட்டுப்பாடுகளோடு பழமைவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள், வறுமையோடு போராடிக்கொண்டிருக்கிற நாடுகள், சமத்துவ வாய்ப்புகளை நிலைநாட்டியுள்ள நாடுகள், மக்களின் கருத்துச் சுதந்திரத்தில் முன்னணிக்கு வந்துள்ள நாடுகள், அதில் பின்தங்கிய நாடுகள் என்ற வேறுபாடுகளும் உள்ளன. 

இந்த நிலையில், ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையைக் கூடத் தொடாத, பத்தாயிரத்தைக் கூடத் தாண்டாத 8,354 பேரின் பதில்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு துல்லியமான கணிப்புக்கு வர முடியுமா? அதை வைத்துக் குறிப்பிட்ட நாட்டினரின் அல்லது சமுதாயத்தினரின் சமூக அக்கறை இவ்வளவுதான் என்று மதிப்பிடுவது பொருத்தமாக இருக்குமா? இப்படியான பல கேள்விகள் இனி புறப்படும். 

ஒருவேளை ஏற்கெனவே இத்தகைய கேள்விகள் வந்துவிட்டனவோ என்னவோ, ஆய்வுக்குழு தலைவர் நைல்ஸ் வான் இவ்வாறு கூறுகிறார்: "முக்கியமாக, இவ்வாறு தரவரிசைப்படுத்தப்பட்டிருப்பது தொடர்பான மதிப்பீட்டுத் தீர்ப்புகளுக்குச் செல்ல வேண்டியதில்லை. நாடுகளின் மட்டத்தில் சமூக அக்கறையில் வேறுபாடுகள் இருப்பதை நாங்கள் கண்டறிந்திருக்கிறோம், இதுவரையில் அது குறித்து ஆராயப்பட்டதில்லை என்பதுதான் இங்கே முக்கியமானது. இந்த வேறுபாடுகள் குறித்து விளக்கமளிப்பதற்கு நாங்கள் இன்னும் வெகுதொலைவு செல்ல வேண்டியிருக்கிறது." 

தள்ளிவிடக்கூடாத: 
ஆக, விளக்கங்கள் இல்லாத புள்ளிவிவரங்கள் மட்டுமே இப்போதைக்கு இந்த ஆய்விலிருந்து நமக்குக் கிடைத்திருக்கின்றன. இதிலிருந்து ஒரு திட்டவட்டமான சமூக மதிப்பீட்டிற்கு வந்துவிட முடியாது என்றாலும், சில நடைமுறை உண்மைகள் இந்த ஆய்வின் சதவீதக் கணக்குக்குத் துணையாகவே இருக்கின்றன. எடுத்துக்காட்டாக ஒன்றே ஒன்றைக் கூறலாம். ஒரு பொதுப் பிரச்சினைக்காக ஒரு அடையாளப் போராட்டம் நடத்தப்படுவதாக வைத்துக்கொள்வோம். மறியல், முற்றுகை போன்ற, கைது நடவடிக்கைகளுக்கு இட்டுச் செல்லாத, காவல்துறையிடமிருந்து முறைப்பட ஒப்புதல் பெற்று, ஓரிடத்தில் கூடிநின்று, அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் கோரிக்கை முழக்கங்களை மட்டும் எழுப்பிக் கலைகிற ஆர்ப்பாட்டமாக அது இருக்கும். 

அனைவரையும் பாதிக்கக்கூடிய ஒரு பிரச்சினைக்குத் தீர்வு கோரி நடத்தப்படுகிற அந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்துகொள்கிறார்களா? பொதுமக்களில் பெரும்பாலானவர்களாவது கலந்துகொள்கிறார்களா? அதை நடத்துகிற ஒரு கட்சி அல்லது அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமை போலக் கலந்துகொண்டு, தொண்டை கிழிய முழக்கங்களை எழுப்பிவிட்டு, ஒரு சிலர் உரையாற்றிவிட்டுச் செல்கிறார்கள். பொது சமூக அக்கறை இருந்தால் மக்கள் பெருவாரியாகத் திரண்டு வந்து கலந்துகொள்ளத்தானே செய்வார்கள்? ஆனால், ஒரு பெரும்பிரச்சினை தீர்க்கப்படாமல் தொடர்கிறது என்றால், "இந்தக் கட்சிக்காரங்கெல்லாம் என்னதான் செய்றாங்க," என்று அலுத்துக்கொள்வார்கள்! 

இணையத்தில் ஆய்வறிக்கைச் செய்திகளைப் படித்தபோது, எதிர்வினைகளையும் காண முடிந்தது. பொதுவாக இந்த நிலைமை குறித்த கவலைகளைப் பகிர்ந்துகொள்வதாகப் பல பதிவுகள் உள்ளன. சிலர், அரசு அதிகாரத்தில் மதம் வீற்றிருக்கிற நாடுகளில், குறிப்பாக இஸ்லாமிய அரசுகள் உள்ள நாடுகளில் இந்த அக்கறை குறைவாக இருக்கிறது என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். பல்வேறு வகையிலும் சக மனிதர்கள் மீதான அக்கறையை வலியுறுத்துகிற மார்க்கம் இது என்று இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லிவருகிறார்கள். அவர்கள் மேற்கண்ட கருத்துக் குறித்து என்ன சொல்லப் போகிறார்கள்? 

அரியணையில் எந்தவொரு மதம் கோலோச்சுமானாலும் இப்படிப்பட்ட நிலைமையே சம்பந்தப்பட்ட நாடுகளில் இருக்கும் என ஊகிக்கலாம். அரச அதிகாரத்தில் இல்லையென்றாலும், சமுதாயத்தில் மதத்தின் பிடிப்பு உள்ள நாடுகளில் இதே போன்ற நிலைமை நிலவக்கூடும். அவரவர் இன்ப துன்பங்கள் ஏற்கெனவே எழுதி இறுதிப்படுத்தப்பட்டுவிட்ட விதிக்கு உட்பட்டே தீர்மானிக்கப்படுகிறது என்ற தத்துவம் கெட்டிப்பட்டுள்ள சமுதாயங்களில், பிறருக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றிய அக்கறை எந்த அளவுக்கு இருக்கும்? 

தேசப்பற்ற்றின் பெயரால், நாட்டைக் குறைத்து மதிப்பிட்டுக் காட்டுகிறது என்று ஆய்வறிக்கையைத் தள்ளுபடி செய்துவிடலாகாது. அதை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதும், உண்மை நிலவரங்களோடு ஒப்பிட்டு மாற்றங்களுக்கு முயல்வதுமே பொது சமூக அக்கறையின் வெளிப்பாடாக இருக்கும்.


தேமொழி

unread,
Sep 21, 2021, 4:29:27 PM9/21/21
to மின்தமிழ்
நான் ஏன் குடிக்கிறேன்?

-- அ.குமரேசன்
செப்டெம்பர் 21, 2021
 
குடிக்காமலிருக்க முடியாது என்கிற அளவுக்கு அதன் பிடியில் தன்னை ஒப்படைத்துக்கொள்கிற தனி மனித மனநிலை பற்றிப் பேச வேண்டியிருக்கிறது.
 
 - இந்தியாவில், 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களிடையே கிட்டத்தட்ட 88 சதவீதம் பேர் மதுவை வாங்குகிறவர்கள் அல்லது குடிக்கிறவர்கள்.
 - குடியின் மடியில் தலை புதைக்கிறவர்கள் குடியைத் தொடர்வதற்கான காரணங்களைக் காட்டிக்கொண்டே இருப்பார்கள்.
 - குடியர்கள், குடும்பத்திற்கோ மற்றவர்களுக்கோ ஏற்படும் அவமதிப்புகளைப் பொருட்படுத்தாத தன்னலமிகள்.

குடிப் பழக்கத்தால் குடல் வெந்து மரணம், மது போதையால் சாலையில் ஆடையவிழ்ந்து அவமானம், குடிவெறியில் குற்றச்செயல்… 
இப்படியான தகவல்கள் மிகச் சாதாரணமாகிவிட்டன. சமூகத்தில் புகழ்பெற்றவர்கள் முதல் நெருக்கமாகப் பழகியவர்கள் வரையில் பலரும் கண்ணாடிக் கோப்பைகளிலும் பிளாஸ்டிக் குவளைகளிலும் கதை முடிந்தவர்களாக மறைந்து போயிருக்கிறார்கள். மக்களுக்குப் பிடித்தமான திரைப்படக் கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், முன்னணிக்கு வந்திருக்க வேண்டிய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் – இப்படி எத்தனையோ பேரை மது வெள்ளம் மூழ்கடித்திருக்கிறது. சமுதாய முன்னேற்றத்திற்கு துணையாகியிருக்கக்கூடிய அறிஞர்கள், ஆய்வாளர்கள், திறமையாளர்கள், உழைப்பாளிகள் என ஏராளமானோரின் பங்களிப்பை நாடு இழந்திருக்கிறது.

அண்மையில்கூட, அன்பர்களின் பரவலான நேசத்தைப் பெற்ற கவிஞரின் மறைவுச் செய்தியை விட, மது அமிலத்தால் அவரது குடல் சரிப்படுத்த முடியாத அளவுக்குக் குதறப்பட்டுவிட்டது என்ற தகவலே பலரையும் கலங்கவைத்தது. குடிக் கிறக்கத்தோடு வண்டியோட்டிச் சென்ற பல இளைஞர்களைச் சாலை விபத்துகளில் குடும்பங்கள் பறிகொடுத்துக் கதறியிருக்கின்றன. அந்த வீடுகளின் துக்கத்தில் பங்கேற்க வந்திருக்கிற நண்பர்களிடம் பெரியவர்கள், “டேய் உங்களாலதான் இவனுக்கு இப்படி ஆச்சு. நீங்களாவது குடிக்காம இருங்கடா,” என்று ஆற்றாமையோடு சொல்வதைக் கேட்கலாம். காவல்துறை விசாரணை உட்பட இறுதிச் சடங்குகள் முடிந்தபின் அந்த நண்பர்கள் தங்களுடைய வழக்கமான இடத்திற்குப் போய் பாட்டில்களைத் திறப்பார்கள். கேட்டால், நண்பனை இழந்த துக்கத்தை மறப்பதற்காக என்பார்கள்.

இளைஞர்களின் மதுப் பழக்கம்;
இந்தியாவில், 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களிடையே கிட்டத்தட்ட 88 சதவீதம் பேர் மதுவை வாங்குகிறவர்களாக அல்லது குடிக்கிறவர்களாக இருக்கிறார்கள் என்ற ஒரு பகீர்த் தகவலைத் தெரிவிக்கிறது ஓர் ஆய்வு. 2016ஆம் ஆண்டில் 538 கோடி லிட்டர் மது நுகரப்பட்டது. ஒவ்வோர் ஆண்டாக இது அதிகரித்துக்கொண்டே வந்து, 2020ஆம் ஆண்டில் 653 கோடி லிட்டர் குடித்து அழிக்கப்பட்டிருக்கிறது என்று, புள்ளிவிவர சேகரிப்பு அமைப்பான ஸ்டேட்டிஸ்டா இந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. இந்த 653 கோடி லிட்டரில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்தியச் சாராயம் (ஐஎம்ஐஎல்), இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டுச் சாராயம் (ஐஎம்எஃப்எல்) இரண்டு வகையறாவும் உண்டு. கள்ளச்சாராயம் இந்தக் கணக்கில் வருகிறதா என்று தெரியவில்லை.

“குடியைத் தடுக்க வேண்டிய அரசாங்கம் மதுக்கடைகளுக்கு உரிமம் அளித்து வருவாய் ஈட்டுவது சரிதானா? அரசாங்கமே மதுக்கடை நடத்துவது முறைதானா?” இப்படியான வினாக்கள் நியாய விமர்சனத்தோடு வருகின்றன. “உயிரையே பறிக்கும் விஷச் சாராயத்தையும் பல ஆபத்தான கலவைப்பொருள்களோடு சேர்த்து விழுங்கவைக்கிற கள்ளச் சாராயத்தையும் தடுக்க இதுவே வழியாக இருக்கிறது. கடந்த காலத்திலும் இன்றைக்கும் ஒன்றிய அரசின் நிதிக் கொள்கை மாநிலக் கருவூலத்திற்குப் பற்றாக்குறையை ஏற்படுத்துவதாக இல்லாமலிருந்தால் அதை ஈடுகட்ட இப்படியொரு மாற்று வழி தேவைப்படாமலே போயிருக்கும்.” இப்படியான விளக்கங்களும் நியாய வாதத்தோடு வருகின்றன.

இவையெல்லாம் அரசின் கொள்கை, நிதி இருப்பு மட்டுமல்லாமல் பொதுச் சமூகத்தில் குடி ஏதோவொரு வகையில் ஏற்கப்பட்டதாக இருப்பதையும் சார்ந்திருக்கின்றன. அதே வேளையில், குடியை நாடுகிற, விடாமல் தொடர்கிற, குடிக்காமலிருக்க முடியாது என்கிற அளவுக்கு அதன் பிடியில் தன்னை ஒப்படைத்துக்கொள்கிற தனி மனித மனநிலை பற்றிப் பேச வேண்டியிருக்கிறது.

எப்போதெல்லாம் குடிக்கிறார்கள்?
கே. பாலச்சந்தர் இயக்கிய ஒரு திரைப்படத்தில், வி.எஸ். ராகவன் குடியில் விழுந்தவராக நடித்திருப்பார். “மனசுக்குக் கஷ்டமா இருந்தா குடிக்கிறேன், மனசு சந்தோஷமா இருந்தா குடிப்பேன்….” என்று, குடித்துக்கொண்டே இருப்பதற்கான காரணங்களை அவர் அடுக்குவார். குடியின் மடியில் தலை புதைக்கிறவர்கள் குடியை நிறுத்த மாட்டார்கள், அதை நிறுத்தாமல் தொடர்வதற்கான காரணங்களை மட்டும் காட்டிக்கொண்டே இருப்பார்கள், தேவைப்பட்டால் புதிய காரணங்களையும் தேடிப்பிடிப்பார்கள். என்று தெரியவரும்.

ஏதோவொரு கட்டத்தில், குறிப்பாக இளமைப் பருவத்தில் நண்பர்கள் அல்லது சொந்தக்காரர்கள் உடனிருப்போடும், ஒருவர்க்கொருவர் தூண்டிவிடுவதோடும், “அடிக்ட் ஆகுறதுதான் தப்பு, லிமிட்டா இருந்தா ஒரு பிரச்சினையும் இல்லை” என்ற ஊக்கச் சொற்களால் தயக்கங்கள் உடைபடுகின்றன. இதுவல்லாமல், வீட்டிலேயே தகப்பனோ, வேறொரு பெரியவனோ குடித்துவிட்டு வருவதையும், குடும்பத்தில் அது அனுமதிக்கப்படுவதையும் பார்த்துத் தாங்களும் அதைத் தழுவ முடிவு செய்கிறார்கள். குடித்துவிட்டுத் தெருவில் ரகளை செய்கிறவர்களைக் கண்டு மற்றவர்கள் ஒதுங்குவதைப் பார்த்து அதுவொரு நாயகத்தனம் போல என்று கருதித் தானும் அவ்வாறே நடந்துகொள்கிறவர்கள்… இப்படியாகப் பழக்கம் தொடர்கிறது. கண்களின் முன்பாகக் காட்சிகள் கனவுபோல் கலக்கமாகத் தெரிவதையும், உடலே இலேசாகி மிதப்பது போன்ற ஒரு மிதப்பு தோன்றுவதையும் அனுபவிக்கிற தொடக்க நாட்களின் பரவசம் தொடர்ந்து அதை நாடுகிறபோது போதைப்பழக்கமாக மாறுகிறது. அது இல்லாமல் வாழவே முடியாது என்ற நிலைக்குப் பலரை அடிமைப்படுத்துகிறது. ஆண்களானால், மீசை முளைப்பதிலும், சிகரெட்டை உதடுகளில் பற்றிக்கொண்டு புகை விடுவதிலும் ஆணெனும் பெருமிதம் நிறுவப்படுவதாக நினைத்துக்கொள்வது போல இதிலேயும் பெண்ணைக் கவர்கிற ஒரு வேதிச்செயல் இருப்பதான கற்பனை சேர்ந்துகொள்கிறது. ஒப்பீட்டளவில் ஆண்களை விட மிகக் குறைவான பெண்களே குடிக்கிறார்கள் என்றாலும், அவர்களுடைய தொடக்கம் என்பதும் அந்தப் பரவச உணர்வைப் பெறுவதாகவும், ஆணுக்குச் சமானமாக அனுபவிக்கிற உரிமையாகவும் நண்பர்களின் கூட்டில் ஒரு துறுதுறுப்பாகவும் அமைகிறது. அவர்களிலும் ஒரு பகுதியினர் குடிக்கு அடிமையாகிறார்கள். இவை போன்று, குடிக்குள் குடிபுகுவதற்குக் கதவைத் திறந்துவிடுகிற வேறு பல சூழல்களும் இருக்கக்கூடும்.

இப்படிப்பட்டவர்களுக்குத், தாங்க முடியாததாக ஏற்படக்கூடிய ஒரு சோகமும் கூட, அந்தப் பொழுதில் பாட்டிலைத் திறப்பதற்கான ஒரு சாக்காகிவிடுகிறது. அதிலேயே ஊறிப்போய்விடுவதால், அந்தச் சாக்குகளை உண்மையென்று அவர்களே நம்புகிற போக்கும் ஏற்பட்டுவிடுகிறது.

தொழிலில் ஏமாற்றிவிட்டார்கள், கடினமாகப் படித்தும் தேர்ச்சியடையவில்லை, உலக சினிமாவையே புரட்டிப்போடுகிற கதை தன்னிடம் இருந்தும் ஏற்கப்படவில்லை, தனது அறிவார்ந்த வாதங்களை யாரும் மதித்துக் கேட்கவில்லை… என்று காரணங்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். நல்ல வாய்ப்புகள் அழைக்கிறபோது, போதையோடு போய் நின்று அந்த வாய்ப்புகளை இழந்தவர்கள் உண்டு.

திறமைசாலியான ஒருவருக்கு நண்பர்களின் பரிந்துரையால் நல்லதொரு வேலை கிடைத்தது. அந்த நிறுவனத்திடமிருந்து முறைப்படி அவருடன் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்கள். அப்போது அவர் போட்டிருந்த சரக்கின் நெடி தொலைபேசியிலேயே மூக்கைத் துளைத்திருக்கிறது. மறுபடி அழைப்பார்களா என்ன? “சரியான வேலை கிடைக்க மாட்டேனென்கிறது, என் திறமைக்கு ஏற்ற சம்பளம் தர மறுக்கிறார்கள். அதனாலதான் குடிக்கிறேன்…” என்று இப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

முன்னணியில் பத்துக் காரணங்கள்:
“நான் காலையிலே குடிக்கிறதில்லை,” 
“நான் தினமும் குடிப்பதில்லை,” 
“நான் வேலைக்குப் போகிறேனே,” 
“குடி மறப்பு சிகிச்சை எடுத்துக்கொள்ள நேரமே இல்லை,” 
“என் நண்பர்கள் எல்லோரும் குடிக்கிறார்கள்,” 
“என்னுடைய பணிச்சூழலால் ஏற்படும் மன அழுத்தத்திற்கு இதுதான் மருந்து,” 
“இது எனது (உடல்/மன) வலியை மறக்க உதவுகிறது,” 
“இது இல்லாமல் எனக்குத் தூக்கம் வராது,” 
“நான் மட்டமான ஸ்பிரிட் சரக்குகளைக் குடிப்பதில்லை,” 
“நான் எப்போது நினைத்தாலும் நிறுத்திவிடுவேன், விரும்பும்போது மட்டும் மறுபடியும் கொஞ்சம் குடிப்பேன்,” 
– இவையெல்லாம் குடியாளர்கள் சொல்கிற சாக்குகளில் முதல் பத்து இடங்களில் இருப்பவை என்று ‘லைஃப் ஒர்க்ஸ்’ என்ற அமைப்பு பட்டியிலிட்டிருக்கிறது. 
குடியைக் கைவிடுவதற்கு ஆலோசனைகள் கூறி வழிகாட்டுகிற அமைப்பு இது.
“நான் குடிப்பதுண்டு, ஆனால் ஒருநாளும் கைக்காசைச் செலவழிப்பதில்லை. ஏதாவது ஃபங்ஷனில் பரிமாறப்பட்டால் குடிப்பேன், கூட வருகிறவர்களின் செலவில்தான் குடிப்பேன்,” 
“நான் போதையில் விழவைக்கிற விஸ்கி, பிராந்தியைத் தொடுவதில்லை, பீர் மட்டும்தான் சாப்பிடுவேன்,” 
என்ற விளக்கங்கள் சொல்வோர், இந்தப் பத்து போக மீதியுள்ள காரணங்களுக்குள் வரக்கூடும்.

குடிப்பழக்கம் மண்ணின் மரபிலேயே இருக்கிறது, நட்பாக இருந்த மன்னர்களும் புலவர்களும் சேர்ந்து மது அருந்திய காட்சிகள் இலக்கியத்தில் இருக்கின்றன. உடலுக்கும் உள்ளத்திற்கும் மறு ஊக்கமளிக்கிற அளவுக்கு இதைத் தொட்டுக்கொள்வதில் தவறில்லை என்று வரலாற்றுச் சான்றுகளை முன்வைக்கிறவர்களும் உண்டு. அவர்களும் ஒரு ரசனை மட்டத்திலான பழக்கமாக வரலாறைத் துணைக்கு அழைத்துக்கொள்கிறார்களேயன்றி போதையில் மூழ்கிப் பொறுப்பற்றவர்களாகிப் போவதை ஆதரிப்பதில்லை. வீட்டில் தரமான மது வைத்திருந்து, இரவு உணவின்போது குடும்பமாகச் சேர்ந்து அளவோடு எடுத்துக்கொண்டு பேசிவிட்டுப் படுக்கைக்குச் செல்கிறவர்கள் இருக்கிறார்கள்.

கல்லூரிக் காலத்தில், ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுப்பதற்காக எங்களின் ஆங்கில ஆசிரியரைச் சந்திக்கச் சென்றபோது கேக், முறுக்குகளைப் பரிமாறிவிட்டு அவர் “எங்கள் வீட்டிலேயே தயார் செய்தது” என்று சொல்லி ஒரு அழகான சிறிய கண்ணாடிக் கோப்பையில் ஒயின் கொடுத்தார். “இது பற்றி சமூகம் அரைகுறைப் புரிதலுடன் ஏற்படுத்தியிருக்கிற குற்றவுணர்வு தேவையில்லை,” என்று அவருடைய தமக்கை எங்களிடம் பேசினார். உடன் வந்தவன் முழுதாகக் கோப்பையைக் காலி செய்ய, எனது தயக்கத்தைப் பார்த்துவிட்டு, கோப்பையை முக்கால்வாசி காலி செய்து, “அந்த கேக்கைத் தொட்டுச் சாப்பிடுங்கள். பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடுங்கள்,” என்றார்கள். வெளியே வந்த பிறகு, கேக்கில் ஊறி நாக்கைத் தொட்டுக் குடலுக்குச் சென்ற சில சொட்டு ஒயின், ஒரு மந்தகாசமான உணர்வைத் தருகிறதோ என்று நினைத்தேன். ஆனால் அப்போது வெயில் ஓய்ந்து மாலைப்பொழுதின் மஞ்சள் வெளிச்சமும் குளுமையும் சூழ்ந்திருந்ததே அதற்குக் காரணம் என்று பின்னர் கண்டுபிடித்தேன். நண்பர்களின் உற்சாகத் தூண்டலில் அவ்வப்போது ருசி பார்க்கத் தொடங்கி, பின்னொரு கட்டத்தில் சட்டென ஒரேயடியாக அதை ஒதுக்கித்தள்ள முடிந்த அனுபவம் இது பற்றிப் பேசுகிற தகுதியைக் கொடுத்தது!

பலர் நீண்டநேர இடையறாத பணிக்குவியலிலிருந்து விடுபட்டு வீடு திரும்பி, குடும்பத்தினரோடு அன்பாக அளவளாவிய பிறகு அளவாக “ஒரே ஒரு பெக்” எடுத்துக்கொண்டு அமைதியாகக் கட்டிலில் மல்லாக்கச் சாய்ந்துவிடுவார்கள். உண்மையிலேயே அந்த பெக் அவர்கள் உறங்குவதற்கு உதவுகிறதா அல்லது வேறு எதிர்காலத் தொந்தரவுகளுக்குத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறதா?

இவர்கள் உள்ளிட்ட விதிவிலக்கான சிலரைத் தவிர, ஆகப்பெரும்பாலான நிறைக்குடியர்கள், தங்களது குடும்பத்திற்கோ மற்றவர்களுக்கோ ஏற்படும் அவமதிப்புகளைப் பொருட்படுத்தாத தன்னலமிகளாகவே இருக்கிறார்கள். போதை முற்றிப்போய் மருத்துவர்களே கைவிடும் நிலையில் இத்தகையவர்களின் நிலைமை வெறுப்பைத் தாண்டிப் பரிதாபத்துக்கு உரியதாகிவிடுகிறது. ஒரு கட்டத்தில், உடலின் நோவும், குடலின் ஓயாத பேரிரைச்சலுமாக செத்துப்போனால் நல்லது என்ற முடிவுக்கே வருகிறார்கள். சாவை அழைக்கும் ஏற்பாடாகவும் தொடர்ந்து குடிக்கிறார்கள். குடும்பத்தினரும் நண்பர்களும்கூட “இவனுக்குச் சாவு வந்தால் நல்லதுதான்,” என்று வேதனையோடு கருதுகிற நிலைமையும் ஏற்படுவதுண்டு.

நிதானம் தவறாதவர்கள்:
ஒன்றைக் கவனிக்க முடியும், அரிதாக ஓரிரு நிகழ்வுகளைத் தவிர்த்து, குடியர்கள் பலரும் முற்றிலுமாக நிதானம் இழப்பதில்லை. நடைமேடையில் வேண்டுமானால் கிடப்பார்களே அல்லாமல், வேகமாக வண்டிகள் ஓடிக்கொண்டிருக்கிற சாலையில் படுப்பதில்லை. போகிற வருகிற வண்டியோட்டிகளை அச்சுறுத்தி மகிழ்கிறவர்கள் அந்த வண்டிகளில் அடிபடுவதில்லை. “ஃபுல்லாக” ஏற்றிக்கொண்டு ரயில் நிலையம் வருகிறவர்கள் சரியாகத் தங்களது பெட்டியைப் பார்த்து ஏறத் தவறுவதில்லை. வீட்டு முன்னால் ஓடுகிற சாக்கடையில் உருண்டிருப்பார்களேயல்லாமல் கழிவுநீரில் மூழ்குவதில்லை. மனைவியை அடிப்பதற்கு தனது நிதானமற்ற நிலையைத் துணைக்கு அழைத்துக்கொள்ளத் தயங்குவதில்லை. அட, குடித்துவிட்டு ஆடி ஆடி நடந்து போகும்போது, எதிரில் வருகிற காவலருக்கு ஒரு சல்யூட் வைக்கவோ, அல்லது நல்ல பிள்ளையாய் மாறி ஆட்டமின்றி ஒதுங்கி நடக்கவோ மறப்பதில்லை.

கால் நூற்றாண்டுக்கு முன், மதுரையில் வசித்த நாட்களில் நகரப் பேருந்தில் பார்த்த ஓர் அனுபவம் இங்கே நினைவுகூரத்தக்கது. இரண்டு பேர் “நல்ல” போதையோடு ஏறினார்கள். ஒரு இருக்கையில் அமர்ந்தார்கள். ஆபாசத்தின் எல்லைக்கே சென்று வாயாடினார்கள். பெண்கள் புகார் செய்ததைத் தொடர்ந்து அவர்களிடம் சென்ற நடத்துநர் வாயை அடக்கி நிதானமாக இருக்குமாறு கோபமாகக் கூறினார். பேருந்திலேயே சிலர், “அவங்யதான் குடிபோதையிலே இருக்காங்யல்ல… அவங்யளுக்கு என்னா தெரியும்,” என்று பேசினார்கள். இந்த ஆதரவுக் குரலைக் கேட்டதும் அந்த இருவரும் பல மடங்கு வக்கிரமான சொற்களைக் கொட்டினார்கள்.

அப்போது அவர்களின் முன்பாக வந்து நின்றார் உயரமான, கட்டுக்கோப்பான உடல்வாகு கொண்ட ஒருவர். “வாயை மூடுறீங்களா இல்லையா,” என்று ஓங்கிய குரலில், ஒரு கைவிரலை நீட்டிய நிலையிலும், இன்னொரு கையை ஓங்கிய நிலையிலும் வைத்துக்கொண்டு உரக்கக் கேட்டார் அவர். இப்படி அவர் கேட்டது சாலையில் கடந்துகொண்டிருந்த மற்ற பேருந்துகளில் சென்றவர்களுக்கே கூடக் கேட்டிருக்கும்! தலையை உயர்த்தி அவர் முகத்தைப் பார்த்த அந்த இருவரும் அப்படியே அமைதியானார்கள். அவர்களுடைய நிறுத்தம் வந்ததும் இயல்பாக இறங்கிப் போனார்கள். அவர்களுடைய போதையை அல்ல, போதையில் இருந்தால் எப்படியும் பேசலாம் என்ற மமதையை இறக்கிவிட்டவர், பின்னாளில் மதுரைத் தொகுதி மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் பி.மோகன்.

எத்தனை பேருந்துகள் ஓடுகின்றன, எத்தனை போதை வக்கிரர்கள் சூழலை அருவருப்பாக்கிக்கொண்டிருக்கிறார்கள்…. எத்தனை மோகன்கள் தேவைப்படுகிறார்கள்? திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று பாட்டெழுதினார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். குடியை ஒழிக்கக் குடியராய்ப் பார்த்துத் திருந்துவது முக்கியத் தேவை.

தேமொழி

unread,
Sep 26, 2021, 10:00:19 PM9/26/21
to மின்தமிழ்
கனவு காணலாம்தான் – உறங்கவிட்டால்தானே?

-- அ.குமரேசன்

ஒரு கனவு என்னவெல்லாமோ செய்யும். இனிமையான கனவு உண்மை வாழ்வில் உற்சாகத்தை ஊட்டும். கசப்பானதொரு கனவு அவநம்பிக்கையை ஏற்படுத்தும். பரவசமான கனவு கலைகிறபோது அடடா எல்லாம் கனவுதானா என்ற இன்ப ஏமாற்றம் நுழையும். பயங்கரமானதொரு கனவிலிருந்து விழிக்கிறபோது ஆகா, எல்லாம் கனவுதான் என்ற நிம்மதிப் பெருமூச்சு வெளியேறும். நனவுலகில் இது பலித்தால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கத்தைத் தருகிற கனவு வருவதுண்டு. அய்யய்யோ இது பலித்துவிடக் கூடாது என்ற அச்சத்தைத் தருகிற கனவும் வருவதுண்டு.

செப்டம்பர் 25 – ‘உலகக் கனவு நாள்’ என்ற தகவலைப் படித்தபோது கனவுகள் பற்றி எழுதுவதற்கான இந்த முன்னுரை கிடைத்தது. இப்படியொரு நாளைக் கொண்டாடுவது தொடங்கி ஒன்பது ஆண்டுகள்தான் ஆகின்றன. 2012இல், கொலம்பியா பல்கலைக்கழக ஆசிரியரான ஓஸியோமா எக்வோன்வு இந்த நாளுக்கான கருத்தாக்கத்தை உருவாக்கி முதல் கொண்டாட்டத்தையும் நடத்தினார். சமூக மாற்றத்துக்கான களப்பணியாளராகவும் செயல்பட்டு வருகிறவர் அவர். உலக மகளிர் தினத்துக்கான பாடல் ஒன்றை உருவாக்கியவர், ஜார்ஜ் ஃபிளாய்ட் ஒரு வெள்ளை போலீஸ் அதிகாரியின் முழங்காலில் கழுத்து நெறிபட்டு இறந்தபோது ‘பொருட்படுத்தப்பட வேண்டிய கறுப்பர் உயிர் முதல் எங்கும் அநீதிக்கான முடிவு வரையில்’ என்ற கட்டுரையை எழுதியவர். உலகம் முழுவதும் இயங்கிவருகிற மனித உரிமை அமைப்புகளோடு தொடர்புள்ள பல பல்கலைக்கழக அரங்குகளில் உரையாற்றியிருக்கிறார்.

மனித குலத்தை ஈர்க்கிற, வலிகளிலிருந்து குணப்படுத்துகிற பணிகளுக்கு உதவுகிற ஒரு நாளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கனவு கண்ட ஓஸியோமா ‘உலக கனவு நாள்’ என்றே உருவாக்கினார். பல நாடுகளிலும் உள்ள தன்னார்வத் தொண்டுக் குழுக்கள் இந்நாளைக் கொண்டாடத் தொடங்கின. 2013ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அமைப்பு இந்தக் கொண்டாட்டத்தில் இணைந்துகொண்டது என்றாலும், இது ஐநா அங்கீகாரம் பெற்ற ஓர் உலக தினமாக இன்னும் அறிவிக்கப்பட்டுவிடவில்லை. அந்த அங்கீகாரத்துக்காக உலகம் குரல் கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கனவுப் பயிர்:
“எனக்கொரு கனவு இருக்கிறது” என்று மார்ட்டின் லூதர்கிங் (ஜூனியர்) தனது உரையில் கூறிய வாசகம் உலகம் முழுவதும் இனப் பாகுபாடுகளுக்கு எதிராகவும், சமூகநீதிக்கு ஆதரவாகவும் நடைபெறும் இயக்கங்களில் திரும்பத் திரும்ப மேற்கோள் காட்டப்படுகிறது. “கனவுகள் முதலில் அசாத்தியமானவையாகத் தோன்றுகின்றன. பின்னர் நிறைவேற வாய்ப்பற்றவையாகத் தோன்றுகின்றன. இறுதியாக நம்மை ஒப்படைத்துக்கொள்கிறபோது அவை தவிர்க்கவியலாதவையாகின்றன” என்றார் காந்தி. ‘கனவு காண்’ என்று இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் விண்வெளி ஆராய்ச்சியாளருமான அப்துல் கலாம் சொன்னது நாடு முழுவதும், குறிப்பாக இளைஞர்களை ஈர்க்கிற சொற்பதமாக அமைந்தது.

அரசியல், அறிவியல், கலை, இலக்கியம், தொழில் என எந்தத் துறையானாலும் அதில் வெற்றிக்கொடி நாட்டியவர்கள், அந்தக் கொடியை உயர்த்துவது பற்றித் தங்களுக்கு இருந்த கனவுகளைச் சொல்லியிருக்கிறார்கள். பத்திரிகைத் துறையில் நடைபோட வேண்டுமென்பது சிறுவயதிலிருந்தே எனது கனவு. பலவகை அனுபவப் பயணங்களுக்குப் பிறகு அந்தக் கனவை நனவில் அடைய முடிந்தது.

எல்லோருக்கும் கனவுகள் நிறைவேறிவிடுவதில்லைதான். மேலே குறிப்பிட்டுள்ள எந்தவொரு துறையிலும் கனவுகள் நிறைவேறிய வெற்றியாளர்கள் சிலரைத் தவிர மற்றவர்கள் – அவர்கள்தான் மிகப் பெரும்பாலானவர்கள் - வேதனைமிகு தோல்வியைச் சந்தித்தவர்கள்தான். வேறு வேறு துறைகளில் இறங்க வேண்டிய வாழ்க்கைக் கட்டாயத்தில் தங்கள் கனவுகளையே மறந்தவர்கள்தான். கனவு காண்பதையே நிறுத்திக்கொண்டவர்களும் உண்டு.

பகல் கனவு பலிக்காதா?:
அரசியல் பதவி, தேர்தல் வெற்றி, தொழில் சாதனை என நிறைவேற வாய்ப்பில்லாத ஆசைகளை வெளிப்படுத்துவோர் ‘பகல் கனவு காண்கிறவர்கள்’ என்று மற்றவர்களால் எளிதில் புறந்தள்ளப்படுகிறார்கள். பகல் கனவு நிறைவேறாது என்ற கருத்திலிருந்து இவ்வாறு தள்ளப்படுகிறது. உழைக்கப் போகாமல் பகல் பொழுதைத் தூங்கிக் கழித்தால் எப்படி கனவு நிறைவேறும் என்ற பொருளில் வேண்டுமானால் இதை எடுத்துக்கொள்ளலாம். மற்றபடி, இரவுக் கனவுகள் மட்டும் நிறைவேறிவிடும் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?

மேலும், கனவு என்ற மூளைச் செயல்பாடு நிகழ்வது, ஒருவருக்குத் தூக்கம் தொடங்கவிருக்கிற நேரத்திலும், தூக்கம் கலையவிருக்கிற நேரத்திலுமே என்று அறிவியல் ஆராய்ச்சிகள் தெளிவுபடுத்திவிட்டன. வேதிப்பொருள்கள் ஒன்றுடனொன்று கலக்கிறபோது ஒளி, ஒலி, கடுமையான வாசம், வெப்பநிலை மாற்றம் என்று நிகழ்வது போல மூளையின் வேதிப்பொருள்களிலும் நிகழ்கிறது. அதுவே உறக்கம் என்கிறது அறிவியல். தூக்கம் தழுவுகிற தொடக்க நொடிகள் அல்லது நிமிடங்களுக்குப் பிறகும், தூக்கம் விடைபெறுகிற கடைசி நொடிகள் அல்லது நிமிடங்களுக்கு முன்பாகவும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறபோது, மூளையில் கனவாகப் பதிவாகும் வேதியல் செயல்பாடு முற்றிலுமாக நின்றுவிடும்.

அந்தச் சிறிது நேரக் கனவுக் காட்சிகள் ஏற்கெனவே மூளையில் பதிவான வெளித் தகவல்கள் பற்றிய சிந்தனையின் வெளிப்பாடுதான். அது ஒருவரது காதல், குடும்பம், அரசியல் ஈடுபாடு, தொழில் போட்டி, கலைத் தாகம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பிறர் சொல்லக் கேட்பது, என்னவெல்லாமோ பார்ப்பது, எதிலிருந்தாவது படிப்பது, எதையாவது தொட்டுணர்வது உட்பட வாழ்க்கையில் எந்த வழியிலும் ஏற்கெனவே கேள்விப்பட்டிராத, அறிந்திராத ஒன்றைப் பற்றி எவரொருவராலும் சிந்திக்க முடியாது. ஆகவே, கொஞ்சமும் தொடர்பில்லாத, முழுக்க முழுக்கப் புதிய கனவு என வராது. ஆகவேதான், சிலருக்கு அவர்களுடைய வாழ்க்கைச் சிக்கல்களுக்குத் தீர்வளிக்கக்கூடிய சில யோசனைகள் அவர்கள் காணக்கூடிய கனவிலிருந்து கிடைக்கக்கூடியதாக இருக்கின்றன. அதுவும் எப்போதாவதுதான் நிகழும்.

கணித மேதை ராமானுஜம், வேதியல் மூலங்களை ஒழுங்குபடுத்தும் அட்டவணையைத் தயாரித்தளித்த டிமிட்ரி மென்டிலீவ், பரிணாம வளர்ச்சியில் இயற்கைத் தேர்வின் பங்களிப்பு பற்றிச் சொன்ன ஆல்ஃபிரட் ரஸ்ஸல் வாலஸ், நவீன அறிவியல் பகுப்பாய்வு முறையை வகுத்தளித்தவர்களில் ஒருவரான ரேன் டெஸ்கார்ட்டிஸ் என நிறைய அறிவியலாளர்கள் தாங்கள் தேடிக்கொண்டிருந்த பல வினாக்களுக்குத் தங்களின் கனவுகளில் விடை கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது, வேறு தொந்தரவற்ற நேரத்தில், தூக்கம் கலையவிருந்த நேரத்தில் அல்லது தொடங்கவிருந்த நேரத்தில் ஏற்பட்ட சிந்தனையால் அல்லது மூளையில் அந்த வேதிச்செயல்பாட்டால் கிடைத்த கருத்துகளைப் பிறகு முறைப்படுத்திப் புதிர்களுக்கான விடைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். பல எழுத்தாளர்களுக்கு இத்தகைய நேரத்தில்தான் தங்கள் படைப்புகளின் அடுத்த கட்ட நகர்வுக்கான கற்பனைகள் பிடிபட்டிருக்கும். சுயநல அரசியல்வாதிகளுக்குக் குறுக்கு வழிகள் கூட அகப்பட்டிருக்கும்.

இவை போன்ற செய்திகளை முதலீடாக்கிக்கொண்டு கனவுகளுக்குப் பலன் சொல்வதையே சிலர் தொழிலாகச் செய்கிறார்கள். மற்றவர்களின் உளவியல் சார்ந்த நம்பிக்கையைப் பயன்படுத்திக்கொண்டு தங்களுடைய பணயீட்டும் கனவுகளை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். ராசி பலன், ஜாதக பலன், பல்லி கத்தும் பலன், வாஸ்து பலன் போன்றதே இது. கனவில் சாப்பாடு வந்தால் வாழ்க்கையில் என்ன நடக்கும், யானை வந்தால் என்ன நடக்கும், காடு வந்தால் என்ன நடக்கும், மலக்குவியல் வந்தால் என்ன நடக்கும், ஆவி வந்தால் என்ன நடக்கும், ஆண்டவன் வந்தால் என்ன நடக்கும் என்றெல்லாம் கணித்துச் சொல்கிற அளவுக்கு வல்லுநர்கள் வலம் வருகிறார்கள்.

கனவை நிறைவேற்ற வழி:
முயற்சி எனும் உழைப்பு இல்லாமல் எந்த நேரத்துக் கனவானாலும் அது கனவாகவே கலைந்து போய்விடும் என்று உத்தரவாதமாகச் சொல்லலாம். தனிமனிதக் கனவு மட்டுமல்ல, ஒரு குழுவாக, அமைப்பாக, இயக்கமாகக் காண்கிற கனவுகளுக்கும் இது பொருந்தும். சிறைக்கம்பிகளுக்கும், குண்டாந்தடிகளுக்கும், துப்பாக்கிகளுக்கும் அஞ்சாமல் லட்சக்கணக்கானோர் விடுதலைப் போராட்டக் களத்தில் இறங்கியதால் அல்லவா இந்திய சுதந்திரக் கனவு மெய்ப்பட்டது?

சுதந்திர இந்தியாவிலும் அதிகார அடக்குமுறையற்ற கருத்துரிமை, பாகுபாடற்ற கல்வி, முழுமையான சமூக நீதி, பாலின சமத்துவம் ஆகியவை கனவுகளாகவே தொடர்கின்றன. சாதி வேலிகளை அறுக்கும் வல்லமை வாய்ந்த காதல் கனவுகள் நவீன ஒப்பனைகளோடு அலையும் ஆணவக் கொலை அரிவாள்களால் வெட்டப்படுகின்றன. உயர்கல்விக் கனவுகள் நுழைவுத்தேர்வுச் சல்லடைகளால் வடிகட்டப்படுகின்றன. கவுரவமான வருவாய்க்கான வேலைக் கனவுகள் கிடைத்த வேலைகளின் தொகுப்பூதியத்துடன் நிறைவடையும்படி கலைக்கப்படுகின்றன அல்லது வேலையின்மைத் தீயில் பொசுக்கப்படுகின்றன. ஆரோக்கிய வாழ்க்கைக் கனவுகள் மருத்துவ வணிக உலகத்தால் தொற்றவைக்கப்பட்ட ரத்தசோகையில் இளைத்துப்போகின்றன.

ஆயினும், மாற்றத்துக்கான கனவுகள் ஒருபோதும் பின்வாங்குவதில்லை. இன்றைக்கும் விவசாயிகள் தங்களுடைய கனவுகள் எல்லாம் பொய்த்துப்போன ஆதங்கத்தோடும், தங்களின் ஒன்றுபட்ட இயக்கமே நம்பகமானது என்ற உறுதியோடும், போராட்டத்தில் அயராமல் ஈடுபட்டிருக்கிறார்கள். லட்சியக் கனவுகளோடு புறப்படுகிறவர்களுக்கு நம்பிக்கையளிக்கிறார்கள்.

கனவு காணச் சொன்ன அப்துல் கலாம், “உங்களின் உறக்கத்தில் வருவதல்ல, உங்களை உறங்கவிடாமல் செய்வதே நல்ல கனவு” என்றும் கூறினார். கனவு உறங்க விடாமல் செய்கிறதோ இல்லையோ, உலகின் கொரோனா நிலவரங்கள், கொரோனாவைப் பயன்படுத்திக்கொண்ட சாமர்த்தியங்கள், ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தி வலுப்படுத்தும் கொள்கைகள், பொது ஆவேசத்தைத் திசைதிருப்பும் உத்திகள், வாழ்க்கை நம்பிக்கைகளைச் சிதறடித்திருக்கும் நிலைமைகள்… இவை உறங்கவிடுவதில்லை. ஆயினும் “கனவு காண் கனவு காண்” என்ற அறிவுரையைத் தலைதலைமுறையாக வழங்கிக்கொண்டேதான் இருக்கிறார்கள். 

என்னவோ மக்களுக்குக் கனவு காணும் விருப்பம் இல்லை என்பதாக அனுமானித்துக்கொண்டு இவ்வாறு கனவு காணச் சொல்கிற அருளுரைகள் வருகிறபோதெல்லாம் ஒன்றைச் சொல்லி வந்திருக்கிறேன்: “முதலில் எங்களை நிம்மதியாக உறங்க விடுங்கள்.”

ஆம், கனவுகள் நிறைவேறுவதற்கு மட்டுமல்ல, கனவு காண்பதற்கே கூட எத்தனை எத்தனையோ தடைக்கற்கள். வர்க்கம், இனம், நிறம், குலம், மதம், பாலினம், சாதியம், உலக ஆக்கிரமிப்பு வணிகம், உள்நாட்டுப் பொருளாதாரம் என்று பலப்பல வண்ணங்களில் பாதையை மறித்துக் கிடக்கும் அந்தத் தடைக்கற்களை அகற்றுகிற கனவோடு மானுடம் தன் கைகளை உயர்த்தட்டும்.


2021-09-25

தேமொழி

unread,
Sep 29, 2021, 3:20:56 AM9/29/21
to மின்தமிழ்
ஆன்மீகமும் அறிவியலும் 

-- அ.குமரேசன்

தனிமனித வாழ்க்கையில், உலகத்தில், பேரண்டத்தில் விளக்கப்படாத நிகழ்வுகள் ஏராளமாய் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் விளக்கம் கிடைக்காத நிகழ்வுகள்தான். விளக்கமே இல்லாத, விளக்கவே முடியாத நிகழ்வென எதுவும் கிடையாது.

விளக்கங்கள் கிடைத்துவிட்ட பல நிகழ்வுகளுக்கு முன்பு வேறு வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. அதுவே போதுமென்பது ஆன்மீகம். விளக்கங்கள் கிடைக்கும் வரையில் விடாமல் முயல்வது அறிவியல். 

விளங்காமல் தவிக்கும் மனங்களுக்கு நிச்சயமாக ஆறுதலான அரவணைப்பைத் தருகிறது ஆன்மீகம். அதைக் கடந்து யோசிக்கவிடாமல் போதுமென்கிறபோது நம்பிக்கையாகிறது. அதை மட்டுமே வற்புறுத்துகிறபோது மதமாகிறது. மனதின் சுதந்திரம் முடங்குகிறது. 

ஒரு முறை சொன்ன விளக்கத்தோடு ஒருபோதும் நிற்பதில்லை அறிவியல். கேள்விகளோடு தொடரும் தேடலில் முந்தைய விளக்கம் மேலும் தெளிவாகிறது. இதுவரை விளக்கப்படாத நிகழ்வுகளுக்கான விளக்கம் கிடைக்கிறது. மனம் மேலும் மேலும் சுதந்திரமடைகிறது.

ஆன்மீகம் என்றால் வழிபாடுகளும் சடங்குகளும் அல்ல, ஆன்மாவின் இலக்கைத் தேடுவதே என்றும் சொல்லப்படுகிறது. அறிவியல் என்றால் ஆராய்ச்சிக் கூடங்களும் அங்கிருக்கும் கருவிகளும் அல்ல, வாழ்க்கைப் புதிர்கள் அனைத்தையும் புரிந்துகொள்ள முயல்வதே. 

ஆழமாக நம்பியும் கூட சோதனைகளும் துயரங்களும் தாக்குகிறபோது நிம்மதியிழக்கிறது “ஆன்மா.” காரணங்கள் இவையெனும் அறிவால் மாற்றத்திற்கான முனைப்புகளில் அமைதியாய்த் தொடர்கிறது அறிவியல் மனம். உலக சமுதாயத்தின் அறிவியல் மனப்பான்மை வளர வளர புதிர்களுக்கான விளக்கங்கள் விரைவாகக் கிடைக்கும்.

[ஓர் இலக்கிய உரையாடலில், “சில புதிரான நிகழ்வுகளை விளக்க முடியாது, உணரத்தான் முடியும்” என்ற கருத்து கூறப்பட்டது. அதிலிருந்து தோன்றிய சிந்தனை இது.]

-குமரேசன்

தேமொழி

unread,
Oct 7, 2021, 10:28:15 PM10/7/21
to மின்தமிழ்
தலைவன் தோழன்
ஆசிரியன் மாணவன்
என்று வராமல்
தலைவி தோழி
ஆசிரியை மாணவி
மட்டுமே வருகையில்
தலைவர் தோழர்
ஆசிரியர் மாணவர்
ஆக மாற்றுகிறது.

தாத்தனை அப்பனை
மாமனை அண்ணனை
அவனென்று சொல்லாமல்
பாட்டியை அம்மையை
அத்தையை அக்காளை
அவளென்று சொல்வது
உறவின் உரிமை
எனப்படுவதை மறுத்து
அவரென்று திருத்துகிறது.

மனுசியும் பூமியில்
எழுந்ததை மறைத்து
எல்லோருமாய் எழுந்தும்
பழக்கத்தின்பெயரால்
மனிதன் எழுந்தான்
என்றே கூவிடும்
வழக்கத்தை மாற்றி
மனிதர் எழுந்தாரென
சரிப்படுத்த முயல்கிறது. 

எழுத்துப் படிகளில்
பிழை திருத்துகையில்
என் கை
கொஞ்சம் மிகை?

-அ.குமரேசன்

VEERAKUMAR P

unread,
Oct 7, 2021, 11:01:27 PM10/7/21
to mint...@googlegroups.com
அருமை ஐயா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/ad5ca596-e8da-46a3-8b46-c21530d2822en%40googlegroups.com.

VEERAKUMAR P

unread,
Oct 7, 2021, 11:02:08 PM10/7/21
to mint...@googlegroups.com
அருமை ஐயா

தேமொழி

unread,
Oct 8, 2021, 10:38:05 PM10/8/21
to மின்தமிழ்
பறிக்கப்பட்ட சாதிச் சான்றிதழ், மீட்டுக் கொடுத்த நீதிமன்றம்


-- அ.குமரேசன் 

இந்து தலித் குடும்பத்தில் பிறந்த ஒருவர் வேறு மதத்தவரைத் திருமணம் செய்துகொண்டதால் அவருக்குரிய சாதிச் சான்றிதழை மறுக்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
 
 - கிறிஸ்தவரைத் திருமணம் செய்துகொண்ட முனீஸ்வரி பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்று உறுதியளிக்கிற சான்றிதழை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 2013இல் விலக்கிக்கொண்டது
 - அரசியல்வாதிகளைவிட, அதிகாரவர்க்கக் கட்டமைப்பில் இருப்பவகள்தான் ஆரோக்கியமான மாற்றங்களுக்குத் தடைபோடுகிறார்கள்
 - மதம், சாதி, பாலினம், மொழி என அனைத்திலும் சமத்துவம் இன்றளவும் மறுக்கப்படுவதற்கான ஏராளமான சாட்சியங்களில் ஒன்றுதான் முனீஸ்வரி வழக்கு

“ஒரு திரைப்பட நட்சத்திர நடிகரின் ரசிகர் மன்ற உறுப்பினராக இருப்பவரேகூட அவ்வளவு எளிதில் வேறு நடிகரின் ரசிகராக மாறிவிடுவதில்லை. அப்படியிருக்க, ஒருவர் தான் பிறந்து வளர்ந்த மதத்தை மாற்றிக்கொள்கிறார் என்றால் எவ்வளவு யோசித்து, கனத்த மனதுடன் அந்த முடிவை எடுத்திருப்பார்?” - தமிழகத்தில் 2002இல் மதமாற்றத் தடைச்சட்டத்தை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு கொண்டுவந்ததை எதிர்த்து நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய பேராசிரியர் அருணன் இவ்வாறு கேட்டார்.

மதமாற்றம் பற்றிய திட்டவட்டமான வரையறைகளோ விளக்கங்களோ இல்லாமல், மதமாற்றங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும் என்று ஆணையிட்ட, முறையாகப் பதிவுபெறாத நிலையில் மதம் மாற்றியவர், மாறியவர் இருவருக்குமே சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்க வழிசெய்த அந்தச் சட்டத்தை விலக்கிக்கொள்ள வேண்டுமென சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தோர் மட்டுமல்லாமல், மதத்தைத் தேர்வு செய்வது அவரவர் உரிமை என்ற எண்ணம் கொண்டிருந்த பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்தோரும் வலியுறுத்தினார்கள். அரசமைப்பின் மதச்சார்பின்மைக் கோட்பாட்டில் உறுதிப்பாட்டோடு இருந்த ஜனநாயக இயக்கங்களும் அந்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. மக்களின் உணர்வு அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அடைந்த படுதோல்வியாக வெளிப்பட, 2004இல் அந்தச் சட்டத்தை விலக்கிக்கொண்டார் ஜெயலலிதா.

மதமாற்ற உரிமையை மறுக்கும் அந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு 19 ஆண்டுகளும், அது விலக்கிக்கொள்ளப்பட்டு 17 ஆண்டுகளும் ஓடிவிட்டன. இருந்தபோதிலும், அந்தக் கருத்தரங்கில் கேட்கப்பட்ட கேள்வி இன்றைக்கும் பொருத்தமானதாக இருக்கிறது. ஏனெனில் இன்றைக்கும் மதமாற்ற உரிமையை மறுக்கும் வாதங்கள் தொடர்கின்றன, பாஜக ஆளும் சில மாநிலங்களில் சட்டம் கொண்டுவரப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் செய்திகளும் வருகின்றன.

மருத்துவர்களாக உள்ள பெற்றோர்களுக்குப் பிறந்ததாலேயே ஒருவர் மருத்துவராகிவிட மாட்டார், ஆசிரியர்களுக்குப் பிறந்ததாலேயே ஆசிரியராகிவிட மாட்டார். வழக்குரைஞர், நீதிபதி, அறிவியலாளர், தொழிலாளர், உழவர், எழுத்தாளர், கலைஞர் என அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த பெற்றோர்களுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் இது பொருந்தும். ஏன், ஒரு அரசியல்வாதியின் வாரிசு கூட, இயக்கச் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டாலன்றி அரசியல்வாதியாக அங்கீகரிக்கப்படுவதில்லை. ஆனால், ஏதோவொரு மதத்தைப் பின்பற்றுகிற பெற்றோருக்குப் பிறந்தவர், அவரது கருத்தைக் கேட்காமலே, அதே மதத்தைச் சேர்ந்தவராக அறிவிக்கப்படுகிறார். அதே போல், குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறக்கிறவர் அதே சாதிக்காரராக அடையாளப்படுத்தப்படுகிறார்.

வழக்கும் தீர்ப்பும்:
இந்தக் கட்டாய ஏற்பாட்டில் ஒருவர் தனது மதத்தை மாற்றிக்கொள்வதற்குக் கூட உரிமை இருக்கிறது, சட்டப்பூர்வ வழியும் இருக்கிறது. தடைச்சட்டம் உள்ள மாநிலங்களில் கூட, பதிவு செய்யப்படாமல் இருப்பதற்கும், கட்டாயப்படுத்தி மதம் மாற்றுவதற்கும் தடை என்ற சொற்களோடுதான் நியாயப்படுத்தப்படுகிறதேயன்றி, மதம் மாறுவதற்கு நேரடியாகத் தடை இல்லை. ஆனால், எவரும் இங்கே சாதி மாற முடியாது! பெயர் சூட்டுவது, பூப்புனித நீராடுவது, திருமணத்திற்குத் தாலி செய்வது, இறுதி நிகழ்வு என ஒவ்வொரு சடங்கிலும் உறுதிப்படுத்தப்படுவது சாதி அடையாளம்தான். இவ்வாறு கட்டப்படும் சாதிப் பெருமைதான் ஆணவக் கொலை வரையில் கொண்டுபோய் நிறுத்துகிறது.

இத்தகைய சூழலில்தான், எதிர்கால முக்கியத்துவமும் வாய்ந்ததொரு தீர்ப்பை இப்போது அளித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். இந்து தலித் குடும்பத்தில் பிறந்த ஒருவர் வேறு மதத்தவரைத் திருமணம் செய்துகொண்டதால், அந்த மதத்தின் வழிபாட்டுத் தலத்திற்குச் செல்வதால், வீட்டில் அந்த மதத்தை அடையாளப்படுத்தும் பொருள்களை வைத்திருப்பதால் அவருக்குரிய சாதிச் சான்றிதழை மறுக்க முடியாது என்று தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி துரைசாமி ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வு தீர்ப்பளித்திருக்கிறது. இவ்வாறு அறிவித்ததோடு, இதை ஒரு வழக்காகத் தாக்கல் செய்த பெண்ணுக்கு உடனடியாக சாதிச் சான்றிதழை வழங்கவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆணையிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் முனீஸ்வரி. இந்து தலித் குடும்பத்தில் பிறந்தவர். பின்னாளில் ஒரு கிறிஸ்துவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களது பிள்ளைகள் கிறிஸ்துவர்களாகவே வளர்கிறார்கள். இந்நிலையில், இவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்று உறுதியளிக்கிற சான்றிதழை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 2013இல் விலக்கிக்கொண்டது. இதை எதிர்த்து முனீஸ்வரி 2016இல் நீதிமன்றத்தை நாடினார், இந்த நடவடிக்கை செல்லாது என்று அறிவிக்கவும், தனக்கான சான்றிதழைத் திரும்பவும் ஒப்படைக்க ஆணையிடவும் கோரினார்.

வழக்கு விசாரணைக்கு வந்த அதிகாரிகள் தங்கள் நடவடிக்கைக்குக் கூறிய காரணம், ‘பராசக்தி’ பட வசனம் போல, நீதிமன்றம் சந்தித்திருக்கக்கூடிய எத்தனையோ விசித்திரமான வழக்குகளில் ஒன்றாக இதை மாற்றியிருக்கிறது. அதிகாரிகள் முனீஸ்வரியின் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது அங்கே சுவரில் ஒரு சிலுவை தொங்கிக்கொண்டிருந்ததாம்! ஆகவே அவர் கிறிஸ்துவராக மதம் மாறிவிட்டார் என்ற முடிவுக்கு இவர்கள் வந்தார்களாம்! அந்த அடிப்படையிலேயே சாதிச் சான்றிதழை வைத்திருக்கிற தகுதியை விலக்கிக்கொண்டார்களாம்!

அதிகாரிகளின் வாக்குமூலப் பத்திரத்தில் எங்குமே முனீஸ்வரி தனது நம்பிக்கையைக் கைவிட்டுவிட்டார் என்றோ, கிறிஸ்துவத்தைத் தழுவிவிட்டார் என்றோ குறிப்பிடப்படவில்லை. இதைக் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், “குடும்பத்தில் ஒருவர் என்ற முறையில் அவர் தனது கணவரோடும் குழந்தைகளோடும் தேவாலயத்தின் ஞாயிறு நிகழ்ச்சிகளுக்குச் சென்றிருக்கக்கூடும். ஆனால், தேவாலயத்திற்குச் செல்கிறார் என்பதாலேயே ஒருவர் தான் பிறந்த மதத்தை முற்றிலுமாகக் கைவிட்டுவிட்டதாக அர்த்தமாகாது,” என்று கூறியுள்ளனர். சான்றிதழ் ஆய்வுக் குழு அதிகாரிகள் விசாலமான மனதோடு இதை அணுக வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கடவுளையும் மதத்தையும் சாதியையும் மனதில் துடைத்துப் போட்டுவிட்டவர்கள்கூட, குடும்பத்தினர், உறவினர், நட்பினர் மகிழ்ச்சிக்காக அவர்களோடு கோவில்களுக்கும் தேவாலயங்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும் செல்வதுண்டு. சொல்லப்போனால் நம்பிக்கையோடு அங்கெல்லாம் செல்கிறவர்களை விடவும் அந்த வழிபாட்டுத் தலங்களில் வரலாறுகளை இவர்கள் நிறையவே தெரிந்து வைத்திருப்பார்கள். அதற்காக இவர்களெல்லாம் மதம் மாறியவர்கள் என்று சொல்லிவிட முடியுமா?

சட்ட விதியா, சமூக நியதியா?
மதமாற்ற உரிமையை மறுத்து அரசியல் செய்கிறவர்களை விட, அதிகார வர்க்கக் கட்டமைப்பில் இருக்கக்கூடிய விசால மனம் இல்லாத அதிகாரிகள்தான் ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழ்வதற்குத் தடைக்கற்களைப் போடுகிறார்கள். சட்டத்தின் பிரதிநிதிகளாக விதிகளைச் செயல்படுத்துவதற்கு மாறாக, சமூகத்தின் பிரதிநிதிகளாக நியதிகளைச் செயல்படுத்துகிறார்கள். சட்டத்தில் இல்லாத ஒரு வரையறையை வகுத்துக்கொண்டு, உரிய ஆதாரமோ ஆவணமோ ஏதுமின்றி, இவ்வாறு சான்றிதழை விலக்கிக்கொள்வது, அந்தப் பெண்ணின் மதமாற்ற உரிமையை மட்டுமல்லாமல், அவரது மூல மத அடையாளத்தையேகூட மறுக்கக்கூடும். நுட்பமாகப் பார்த்தால், சாதிச் சான்றிதழ் அடிப்படையிலேயே அவர் மருத்துவம் பயின்று பட்டம் பெற்றிருப்பாரானால், அதிகாரிகளின் இந்த நடவடிக்கை அவர் இனி மருத்துவராக நோயாளிகளுக்கு சேவை செய்வதையே கூடத் தடுக்கக்கூடும்.

தகப்பன் அல்லது கணவனின் மத அடையாளம் அணிவிக்கப்படுவது பெண்ணின் சுயத்தை அவமதிக்கிறது. 

சட்டத்தில் அப்படியெல்லாம் இல்லை என்றாலும், சட்டத்தைச் செயல்படுத்துகிறவர்கள் இப்படி நடந்துகொள்வது, சமூகம் இன்னமும் கரடுதட்டிப் போயிருப்பதையே காட்டுகிறது. விடுதலை பெற்ற இந்தியாவின் அரசமைப்பு சாசனத்தை உருவாக்கிய குழுவில் 1949ல் நிறைவுரை நிகழ்த்திய குழுத்தலைவர் அம்பேத்கர், “அரசியலில் சமத்துவம் பெற்றிருப்போம். சமுதாய, பொருளாதார வாழ்வில் நம்மிடையே சமத்துவம் இருக்காது. அரசியலில் ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு; ஒரு வாக்குக்கு ஒரே மதிப்பு என்கிற கொள்கையை ஏற்று இருப்போம். சமுதாய மற்றும் பொருளாதார வாழ்வில், நம்முடைய சமுதாய, பொருளாதாரக் கட்டமைப்பின் காரணமாக ஒவ்வொரு மனிதரும் ஒரே மதிப்பு உடையவர்தான் என்கிற கொள்கையை ஏற்க மறுப்பவர்களாகவே இருப்போம். இத்தகைய முரண்பாடுகள் கொண்ட வாழ்நிலையை இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கவிடப் போகிறோம்? இன்னும் எவ்வளவு காலத்துக்குச் சமுதாயத் சமத்துவத்தையும் பொருளாதாரச் சமத்துவத்தையும் மறுக்கப் போகிறோம்? இன்னும் நீண்டகாலத்துக்கு இவற்றை மறுப்பது என்பது நம்முடைய அரசியல் சனநாயகத்திற்கே ஆபத்தானதாக முடியும்,” என்று கூறினார். அது எவ்வளவு தெளிவான தொலைநோக்கு! மதம், சாதி, பாலினம், மொழி என அனைத்திலும் சமத்துவம் இன்றளவும் மறுக்கப்படுவதற்கான ஏராளமான சாட்சியங்களில் ஒன்றுதான் முனீஸ்வரி வழக்கு.

கடவுளை மாற்றிக்கொள்ள முடியும், அதாவது கடவுளின் பெயரால் இயக்கப்படும் மதத்தை மாற்றிக்கொள்ள முடியும், ஆனால் ஒருபோதும் சாதியை மாற்றிக்கொள்ள முடியாது என்பதும், இன்னும் எத்தனை காலத்திற்குத் தொடரப்போகிறோம் என அம்பேத்கர் கேட்கிற முரண்பாடுகளில் ஒன்றுதான். சாதியும் மாறுவதில்லை, சாதிய இழிவும் நீங்குவதில்லை. ஆகவேதான் மதம் மாறிய தலித்துகளுக்கும் இட ஒதுக்கீட்டு உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற முழக்கங்கள் ஒலிக்கின்றன. அந்த மாற்றத்திற்குமான இயக்கங்களுக்கு வலுச்சேர்க்கிறது சென்னை உயர் நீதிமன்றத்தின் மேற்படி தீர்ப்பு.


நன்றி: தமிழ் சமயம் 

Reply all
Reply to author
Forward
0 new messages