தமிழோடு ஓர் இன்மாலைப்பொழுது!

20 views
Skip to first unread message

இ.பு. ஞானப்பிரகாசன்

unread,
Jun 27, 2024, 7:00:53 AM (3 days ago) Jun 27
to மின்தமிழ்

With MuthuNilavan Aiya.jpeg

நேற்று (24.06.2024) இதே நேரம் சுவைத்த அந்தத் தித்திப்பு இன்னும் கூட இனித்துக் கொண்டே இருக்கிறது நெஞ்சில். ஆம், தமிழறிஞர் நா.முத்துநிலவன் ஐயாவுடன் கழிந்தது நேற்றைய இன்மாலைப் பொழுது!

தமிழ் வலைப்பூக்கள் திசையெட்டும் மணம் பரப்பிக் கொண்டிருந்த 'தமிழ்மணம்' காலத்திலிருந்தே ஐயாவுடன் பழக்கம் உண்டு. என்றாலும் கடந்த சில ஆண்டுகளாகத்தான் அந்தப் பழக்கம் அடிக்கடி தொலைபேசும்  வழக்கமாயிற்று. குறிப்பாக, போன ஆண்டு 'இந்து தமிழ் திசை' நாளேட்டில் அவர் எழுதிய, இன்னும் மிகச் சில நாட்களில் புத்தகமாக வெளியாக இருக்கிற 'தமிழ் இனிது' தொடர் எங்களை இன்னும் நெருக்கமாக்கியது.

இந்தச் சிறுவனையும் மதித்து, அந்தத் தொடரை எழுத இருப்பதை மகிழ்வுடன் அவர் பகிர்ந்து கொண்டது மட்டுமில்லாமல் அதன் மூன்றாம் வாரத்தில் என்னுடைய கட்டுரையைப் பற்றியும் என் பெயருடன் குறிப்பிட்டிருப்பதை முன்கூட்டியே சொல்லி என்னை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்தார்! அதுவும் போதாதென்று ஒவ்வொரு வாரமும் கட்டாயம் படித்துக் கருத்துரைக்க அழைப்பு விடுத்தார்.

சில வாரங்களுக்கு மேல் என்னால் குறிப்பிட்ட நாளில் இதழை வாங்க இயலாமல் போக, "நான் வாரந்தோறும் படமெடுத்து அனுப்பி வைக்கிறேன், நீங்கள் படித்துக் கருத்துச் சொல்லுங்கள்" என்றதெல்லாம் அவர் பெருந்தன்மையன்றி வேறென்ன?

ஒவ்வொரு வாரமும் நாளிதழ் கைக்கு வந்த உடனே, எல்லாருக்கும் முன்னதாக எனக்குப் படமெடுத்து அனுப்பி வைப்பார். நான் ஒரு கருத்துச் சொல்ல, அவர் அதற்கு விளக்கம் சொல்ல, அது என் மரமண்டைக்கு எட்டாமல் போனால் தனது மும்முரமான எழுத்து - சமுகப் பணிகளுக்கு இடையிலும் என்னை அழைத்து அது பற்றிப் பேசியும் புரிய வைப்பார்.

இப்படி நாங்கள் தமிழ் இனிது தொடர் பற்றி எழுதிய கருத்துரையாடல்களைத் தொகுத்தாலே அது ஒரு குட்டிப் புத்தகம் அளவுக்கு வரும். அவ்வளவும் காலத்தால் அழிந்து விடாமல் என் வாட்சாப் கணக்கில் உடுக்குறியிட்டு உறங்குகின்றன.

இதையடுத்து ஒரு இனிய நாளில் தன் நூல்களுக்குப் பிழைதிருத்தமும் செய்து தர ஐயா அழைத்தார். கூடவே, கரும்பு தின்றால் மட்டும் போதாது கூலியும் வாங்கிக் கொண்டே ஆக வேண்டும் என்றார். கசக்கவா செய்யும்? இதோ, அந்தப் பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

இப்படி ஒரு சூழலில்தான் நேற்று இந்தச் சந்திப்பு! சிறு வயதில் லியோனியின் பட்டிமன்றங்களிலும் இணைய வலைக்காட்சிகளிலும் மட்டுமே பார்த்தவரை நேற்றுத்தான் முதன் முதலாக நேரில் பார்க்கிறேன்! "வணக்கம்! வணக்கம்!!" என்று இரு கை கூப்பி வருகை தந்தவர் சட்டென எனக்கு அருகில் அமர விரும்பித் தரையிலேயே உட்கார்ந்து கொண்டதும் திக்கென்றது! மெத்திருக்கையிலோ நாற்காலியிலோ உட்காரச் சொல்லி எவ்வளவோ வற்புறுத்தியும் கேட்காத அவரது எளிமை என்னை வியப்பிலாழ்த்தியது!

வந்து அமர்ந்தவுடன் என் இரு கைகளையும் வாஞ்சையுடன் பற்றிக் கொண்ட அவருடைய தமிழ்க் கரங்களின் கதகதப்பு இன்னும் நீங்கவில்லை!

என்னென்னவோ பேசினோம்!

சகா மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்களின் கவிதை...

எங்கள் இருவரைப் போலவே  இன்றும் விட்டுக் கொடுக்காமல் வலைப்பூ எழுதி வரும் தோழர் Kasthuri Rengan அவர்களின் கணினித் திறமை...

புதுக்கோட்டை கணினிப் பயிற்சிப் பட்டறையில் இவர்கள் இளைய மகள், எங்கள் அன்புச்செல்லம் மகிமா கலந்து கொண்டது...

புகழ் பெற்ற நாளிதழில் அண்மையில் பாராட்டப் பெற்ற நம் அன்புக் கவிஞர் ரேவதி ராம்...

வீதி கலை இலக்கியக் களம் முதற்கொண்டு பல நல்ல முயற்சிகளுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்து விட்டு இன்று சென்னையில் உயர்பதவியில் வீற்றிருக்கும் நா.அருள்முருகன் ஐயா...

ஐயாவின் நூல்களுக்கு அட்டைப்படம் முதல் திரைப்படக் காட்சிகளின் வரைகலை வரை அனைத்திலும் தமிழோவியம் தீட்டும் டிராட்ஸ்கி மருது அவர்கள்...

அரசியல் தலைவர்கள்...

அரசு அதிகாரிகள்...

அரசு இயங்கும் விதம்...

தமிழ்...

எனக் கிடைத்த கொஞ்ச நேரத்தில் நிறையப் பேசினோம்! இன்னும் இருக்கிறது பேசவும் இணைந்து பயணிக்கவும் நிறையவே!

நனி நன்றி ஐயா!😊💖💐

இணைப்பு - https://agasivapputhamizh.blogspot.com/2024/06/blog-post.html

Reply all
Reply to author
Forward
0 new messages