( தமிழ்ச்சொல்லாக்கம் 541-545 தொடர்ச்சி)
தமிழ்ச்சொல்லாக்கம் 546-550
(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
546. Secondary Education – இரண்டாங் கல்வி
547. University – பல்கலைக்கழகம்
நான் இரண்டாங் கல்வி கடந்து பல்கலைக் கழக முதல் வகுப்பைச் சேர்ந்த பின் எனக்கு விவாகம் நடந்தது. வயதிலும், அழகிலும், படிப்பிலும், அந்தசுத்திலும் எனக்கு ஒப்பான ஓர் வாலிபனுக்கே நான் வாழ்க்கைப்பட்டேன்.
நூல் : நாகரீகப் போர் (1925) அதிகாரம் : 7 – சக்தி போதம், பக்கம் 65
★
548. Treaty Ports – உடன்படிக்கைத் துறைமுகங்கள்
கீழ்நாட்டு உடன்படிக்கைத் துறைமுகங்களில் குறைந்தபட்சம் பத்து லட்சம் பெண்மக்கள் இவ்வீனத் தொழிலில் அமர்ந்திருக்கிறார்கள். இவ்வூழியத்தில் இவர்கட்கு ஒருவருடம் முதல் பத்து வருடம் வரையிலுந்தான் பிழைப்பு. இச்சாகமாட்டாப் பிழைப்புக்கு வருடந்தோறும் ஆயிரக்கணக்கில் பெண்கள் வேண்டப்படுகிறார்கள்.
நூல் : நாகரீகப் போர் (ஓர் நவீனம்) (1925)
அதிகாரம் 10 – குகய சந்தேசம், பக்கம் – 130
★
549. Film – தகடு
நான் முன்னிருந்த விடத்திற்கு இரகசியமாகச் சென்றேன். அவ்விடத்தில் எனக்கு மிகவும் ஆபத்தான நண்பரொருவர் ஒரு விளம்பரச் சீட்டை என் கையில் கொடுத்தார். அதில் இந்தியன் சினிமாவில் ‘துறவி’ என்ற ஒரு காட்சி நடப்பதாகத் தெரிவித்திருந்தது. அது அவ்வூருக்குப் புதிய தகடு என்றும் போடப்பட்டிருந்தது. அதில் ஒரு பெண்ணுருப்படம் அச்சிட்டிருந்தது.
மேற்படி நூல் : அதிகாரம் 13 கூடிப் பேசல், பக்கம் – 182
★
550. Pocket Book – சட்டைப்பைப் புத்தகம்
சத்யவிரதன் அவனிடம் சில உல்லாச வார்த்தைகளைப் பேசிவிட்டுத் தன் அங்கியிலிருந்து சட்டைப்பைப் புத்தகத்தை (பாக்கெட் புத்தகத்தை) எடுத்து அதிலிருந்து 500 டாலருக்கு ஒரு செக்கைக் கிழித்து அவள் கையில் கொடுத்தான். அவள் முன்போலவே அதை வேண்டாம், வேண்டாம் என்று சொல்லிக் கையில் வாங்கி உடைக்குள் வைத்துக் கொண்டாள். சத்யவிரதன் விடைபெற்று வெளியேறினான். –
மேற்படி நூல் : அதிகாரம் 15 – திண்ணம் விடுதலை திண்ணம், பக்கம் – 201
★
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 18 தொடர்ச்சி)
‘பழந்தமிழ்’
5. பழந்தமிழ்ப் புதல்விகள் தொடர்ச்சி
பதினேழாம் நூற்றாண்டில் (கி.பி. 1650) துஞ்சத்து எழுத்தச்சன் என்பவர் மலையாள (தமிழ்) மொழிக்கு ஆரிய மொழியை ஒட்டி எழுத்து முறைகளையும் இலக்கண விதிகளையும் அமைத்துவிட்டார். பின்னர்த் தமிழின் தொடர்பு குறைந்து ஆரியமொழித் தொடர்பு மிகுந்து தமிழுக்கு அயல்மொழியாக வளரத் தலைப்பட்டு விட்டது. மொழிக்குரியோரும் தம்மை ஆரியர்களோடு தொடர்பு படுத்திக்கொள்ள விரும்பினரே யன்றித் தமிழருடன் உறவு முறைமை பாராட்ட விரும்பினாரிலர். தம் மொழியை ஆரியத்தின் புதல்வி என்று கூறிக்கொள்வதில் பெருமையும் அடைந்தனர்.
பதினான்கு பதினைந்தாம் நூற்றாண்டுகளில் ஆரிய மொழிச் செல்வாக்கு உச்சநிலையை அடைந்திருந்தது. கொடுந்தமிழும் ஆரியமும் கலந்த மணிப்பிரவாள நடை ஆட்சியில் இருந்தது. பதினான்காம் நூற்றாண்டில் (கி.பி. 1320) வீரராகவ மன்னரால் வெட்டுவிக்கப்பட்ட கோட்டயம் செப்பேட்டில் வாயில் வாதில் ஆகவும், உண்டாக்கில் ஒண்டாயில் ஆகவும், எழுந்தருளி எழுந்நள்ளி ஆகவும் வழங்கப்பட்டு உள்ளன. இந் நூற்றாண்டில் (கி.பி. 1350) கண்ணிசப் பணிக்கரால் இயற்றப்பட்ட இராமாயணம் மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ளது. எடுத்துக்காட்டாக இந்நூலில் உள்ள பாடலை நோக்குவோம்.
கொண்டலிந் நேரிருண்டு சுருண்டு நீண்டொளி வார்ந்துதிங்ஙும்
குந்தள பாரமொடு முகில் குலத்திட மிந்நல் போலே,
புண்டரீகேக்ஷ ணந்நரிகப் பொலிந்தவள ஸீதசொந்நாள்
இப்பாடலில் குந்தளபாரம், புண்டரிகேக்ஷணன் எனும் இரண்டு வடசொற்களே பயின்றுள்ளன. இவற்றுள்ளும் குந்தளபாரம் கூந்தல் பாரம் எனும் தமிழ்ச்சொல்லின் ஆரிய மொழித் திரிபாகும். ஏனைய தமிழ்ச்சொற்களே திரிந்து வழங்கப்பட்டுள்ளன. ஆரியமொழி முறைக்கு ஏற்பத் தமிழ் எழுத்தாம் ன வை விடுத்து தமிழிலும் ஆரியத்திலும் வரும் ந ஆளப்பட்டுள்ளது.
கி.பி. 1860இல் தான் முதல் மலையாள இலக்கணம் இயற்றப்பட்டதாம். பதினைந்தாம் நூற்றாண்டில் நீலதிலகம் எனும் மலையாள மொழியைப்பற்றிய நூல் ஆரிய மொழியில் இயற்றப்பட்டுள்ளதாம். எடுத்துக்காட்டுகள் தமிழிலிருந்தும் கன்னடத்திலிருந்தும் தரப்பட்டுள்ளனவாம்.1 இந் நூலால் அறியப்படுவது மலையாளம் எனும் மொழி பதினைந்தாம் நூற்றாண்டில் தமிழாகவே இருந்தது என்பதாம். மலையாள உயர் இலக்கிய காலம் பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது என்று கூறலாம் என்பர்.2
மலையாள மொழிபற்றி அறிஞர் காலுடுவல் கூறும் கருத்துகள் மலையாளம் தமிழின் புதல்வியே என்பதை நிலைநாட்டும் தன்மையவாய் இருத்தலின் அவற்றை இங்கே தருகின்றோம். அவர் கூறுவன: வினைச்சொற்களில் விகுதிகளை வழங்க மறுத்தும், வடமொழிச் சொற்களைப் பெருவாரியாக வழங்கியும் தமிழ்மொழியோடு இன்று பெரிதும் வேறுபடும் மலையாளம், நான் கருதுமாறு தமிழிலிருந்து மிகப் பழைய காலத்தில் கிளைத்த ஒரு மொழியாதலின் அது தமிழின் கிளைமொழிகளுள் ஒன்று எனக் கருதப்படுமே யல்லது திராவிட இனத்தைச் சேர்ந்த தனித்தன்மை வாய்ந்த மொழியாகக் கருதப்படாது. தமிழுக்கும் மலையாளத்திற்கும் இடையே உண்டான பிரிவினை நனிமிகப் பழைய காலத்தில் ஏற்பட்டுவிட்டது என்றாலும், காலம் செல்லச் செல்லத் தமிழர்கள் மேற்குக் கடற்கரையில், அப் பழங்காலத்தில் பெற்றிருந்த அரசியல் செல்வாக்கின் விளைவால் தமிழின் வளர்ச்சியிலும் நாகரிகப் பண்பாட்டிலும் அது பங்கு கொண் டிருந்ததாகத் தோன்றுகிறது. தமிழர்கள் பெற்றிருந்த அவ்வரசியல் செல்வாக்கு மேற்குக் கடற்கரையில் அப் பழம் பெருங் காலத்தில் சிறந்தோங்கி விளங்கிய நெலிகியந்த என்ற பெரும்பட்டினம் தமிழ்நாட்டில் தனியரசு செலுத்தும் பாண்டியர் உடைமையாம் எனப் பெரிப்புளூசு ஆசிரியர் வெளியிடும் உண்மையால் புலனாகும். பேராசிரியர் குண்டருட்டு அவர்கள் வழியாக நான் அறிந்த அளவில் மலையாள மொழியின் மிகப் பழைய செய்யுள் ஆரியத்தைக் காட்டிலும் தமிழையே பெரிதும் ஒத்துள்ளது. தமிழ் நெடுங்கணக்கு
++
1 Literature in Indian Language, Page. 104. 2 Literature in Indian Languages, Page. 105
++
ஏற்றுக் கொண்டுள்ள முப்பத்து மூன்று எழுத்துகளில் இடம்பெறாத எழுத்துகள் அனைத்தையும் அது அறவே கைவிட்டுள்ளது. தமிழ்நாட்டில், சிறப்பாகத் தென்கோடித் தமிழகத்தில் கல்வெட்டுகளில் பயில ஆளப்படுவதும் இன்று ஆட்சியில் உள்ளதுமான மலையாள வரிவடிவே, மலையாளப் பழஞ் செய்யுள்களில் ஆளப்பட்ட வரிவடிவாம். நனிமிகத் தொன்மை வாய்ந்தது எனக் கருத இயலாதாயினும், காலத்தால் முதுமையுடையது எனக் கருதப்படும் ராம சரிதை என்ற மலையாள நூல், ஆரிய எழுத்துகளின் நுழைவிற்கு முற்பட்ட காலத்தில் எழுதப்பட்ட தாகும். யூதர்களும் சிரியன் கிருத்துவர்களும் வைத்திருக்கும் செப்புப் பட்டயங்களின் மொழி நடையினை அது அப்படியே காட்டுகிறது. இதை மனத்துட் கொண்டால், மலையாள மொழியையும் அம் மொழி இலக்கியங்களையும் ஆரிய மொழிப்படுத்தியது அண்மைக் காலத்திலேயே முற்றுப் பெற்றது என்பது குறிப்பிடத்தகும். ஆரிய மொழிப் படுத்தும் இவ் வியல்பு கடந்த இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டு காலங்களிலேயே முறையாக மேற்கொள்ளப் பட்டதாகத் தோன்றுகின்றது. இன்றைய மலையாள மொழியின் குறிப்பிடத்தக்க சிறப்பியல்பு அது பெற்றிருக்கும் அளவு கடந்த ஆரிய மொழித் தொடர்பேயாகும். திராவிட மொழிகள் ஆரிய மொழிச் சொற்களை மேற்கொண்டிருக்கும் அளவு தமிழில் நனிமிகக் குறைவு! மலையாளத்தில் நனிமிகப் பெரிது. மலையாள மொழியின் இன்றைய வடிவெழுத்துகள் தமிழ்நாட்டில் ஆரியச் சொற்களை எழுத ஆளப்படுவனவாகிய கிரந்த எழுத்துகளிலிருந்து மேற்கொள்ளப்பட்டனவாம். கூறிய இவ் விளைளவுகளால், மலையாளத்திற்கும் தமிழிற்கும் இடையில் உள்ள வேற்றுமை, தொடக்கத்தில் சிறிதே எனினும் அது மலையாளம் இன்றுள்ள நிலையில், தமிழின் கிளைமொழி களுள் ஒன்றெனக் கருதுதல் கூடாது; மாறாகத் தமிழின் உடன் தோன்றிய மொழிகளுள் அதுவும் ஒன்று என்றே கருதுதல் வேண்டும் என்ற அதன் உரிமையை மறுக்கமாட்டாத அளவில் பெரிதும் வளர்ந்து பெருகிவிட்டது. தொடக்கத்தில் அதைத் தமிழின் நங்கை எனக் கருதாது, அதன் மகள் என்றே நானும் கருதினேன். மிகப் பெரும் அளவில் வேறுபடும் கிளைமொழி (தமிழினின்றும் கிளைத்த மொழி) எனப் பொருத்தமுறப் பெயர் சூட்டலாம்.
(தொடரும்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்