தகவற்தொடர்புச் சாதனங்களால் சூழப்பட்ட யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு நொடியும் உங்களை அவை வந்தடைந்து கொண்டே இருக்கும். கணினி, செல்ஃபோன், டிவி, செய்தித்தாள், புத்தகம், விளம்பரப்பலகை, இசை, கலை இப்படிப் பல உருக்களில் ஏதோவொன்றை உங்களுக்குள் புகுத்த அவை படைக்கப்பட்டிருக்கின்றன. அதனை நாம் உள்வாங்குகின்றோம். புரிந்து கொள்ளப்படுகின்றது.
புரிதலில் மூன்று வகையான புரிதல்கள் உண்டு. நேரடிப்புரிதல் (literal), இடைவெட்டுப்புரிதல்(inferential), அறுதிப்புரிதல்(propositional) என்பனவாக.
நேரடிப்புரிதல்: சொற்கள், காட்சிகளைக் கொண்டு, யார், என்ன, எப்போது என்பதாகப் புரிந்து கொண்டு அப்படியப்படியே உள்வாங்கிக் கொள்வது. மேல்நிலைப் புரிதல் எனக் கொள்ளலாம்.
இடைவெட்டுப்புரிதல்: சொற்கள் நமக்குக் கடத்தும் உணர்வு, சொற்தேர்வு முதலானவை, சொல்லப்படாத ஒரு தகவலையும் உட்கொண்டிருக்கும். ஏன், எப்படி போன்ற வினாக்களுக்கான விடைகளைக் கொண்டு புரிந்து கொள்வது. இடைநிலைப் புரிதல் எனக் கொள்ளலாம்.
அறுதிப்புரிதல்: ஏற்பட்ட மேல்நிலைப் புரிதலையும் இடைநிலைப் புரிதலையும் கொண்டு, தமக்குள் இருக்கும் அனுபவம், கூடுதல் தகவற்தேடல் முதலானவற்றைக் கொண்டு தெளிவான ஒரு முடிவுக்கு வருதல். இது தேடலுக்கும் நாடலுக்கும் வழி வகுக்கும்.
துவக்கப்பள்ளியில் நீங்கள் பார்க்கலாம். ரீடிங் லெவல் எனக் குறிப்பிடுவர். புரிதலின் கூறுகளைக் கொண்டு இவை தரம் பிரிக்கப்பட்டு இருக்கும். தற்போது ஓர் எடுத்துக்காட்டினைக் காண்போம். நண்பர் ஒருவர் தகவற்துணுக்கு ஒன்றினைப் பகிர்ந்திருந்தார். ஒவ்வொரு காலகட்டத்திலும் பெட்ரோல் விலை என்பது இன்னின்ன விழுக்காடு உயர்வு என்பதாகச் சொல்லி, கடைசி பத்தாண்டு காலத்தில் முன்னை விடக் குறைவாக 30% உயர்வுதாம் என்பதாக இருக்கும் அது. இதைக்கொண்டு புரிதலின் தன்மைகளை அறிந்து கொள்வோமாக.
கொடுக்கப்பட்ட சொற்களில் பொய், தவறு உள்ளதா? இல்லை. உள்ளதை உள்ளபடியே வாங்கிக் கொண்டால், அதுதான் தகவல். குறிப்பிட்டதன்படி கடைசி காலகட்டத்தில் 30% உயர்வுதாம். முன்னைவிடக் குறைவுதான். மேல்நிலைப்புரிதல்.
இந்தத் தகவற்துணுக்கு ஏன் பகிரப்படுகின்றது? எப்படி வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது என்பதைப் பார்க்கும் போது, இந்தத் தகவலில் உள்நோக்கம் இருக்கலாம். ஆகவே இதை விட்டுத்தள்ளுவோமென்கின்ற புரிதல் ஏற்படுமாயின், அது இடைவெட்டுப் புரிதல்.
பெட்ரோல் என்பது எதிலிருந்து கிடைக்கின்றது? கச்சா எண்ணெயிலிருந்து கிடைக்கின்றது. கச்சா எண்ணெயின் விலை என்னவாக இருந்தது? 2013ஆம் ஆண்டு பீப்பாய் ஒன்றுக்கு 98 டாலர் என்பதாக இருந்து, படிப்படியாக 2020ஆம் ஆண்டு 40 டாலருக்கு வந்து, தற்போது மீண்டும் அதே 98 டாலருக்கு வந்திருக்கின்றது. ஆக, தோராயமாக 50% விலை குறைக்கப்பட்டு, மீண்டும் 2013ஆம் ஆண்டு விலைக்கே வந்திருக்க வேண்டும். எனவே 2014ஆம் ஆண்டுக்குப் பின்னர், குறைப்புக்கான 50%, உயர்வுக்கான 30%, என ஏறக்குறைய 80% விழுக்காடு உயர்வுக்கு ஆளாகி இருக்கின்றது பெட்ரோல் என்பது அறுதிப்புரிதலாக ஒருவர் கொள்ளலாம். இது ஆழ்நிலைப் புரிதல்.
Books were written to change the reader on some level. Thinking about texts at various levels deepens the understanding of the text and aids in the reader understanding and growing from what they have read. வாசிப்பின் பயனை நாம் ஓரளவுக்கு அறிந்து கொண்டோம். நம் லெளகீக வாழ்வில், எந்த அளவுக்கு பாப்கார்ன் செய்திகளுக்கு ஆட்பட்டு ஏமாற்றப்படுகின்றோம் என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன்.

அண்மையில் இடம் பெற்ற சில நிகழ்வுகளை ஒட்டித்தான் வாசிப்பற்றநிலை என்னவென்பதைப் பார்க்கப் போகின்றோம். எழுத்தாளர் எஸ்.ரா அவர்கள் குறிப்பிடுவார், “உலகம் தோன்றியதிலிருந்து என்னென்ன வளர்ச்சிகளை அடைந்திருக்கின்றதோ அத்தனையையும் விட, கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சி அதிகமானது”. அதே நேரத்திலதான் ஒரு காணொலித் துண்டு பரவல் ஆனதையும் பார்த்தோம். செய்தி காதில் விழுந்தாலும் காதில் வாங்கிக் கொள்ளாதபடிக்குப் போய் வந்து கொண்டிருப்பர் மக்கள். முன்பொருகாலம், மாலை நேரம் எஞ்சோட்டுப் பையன்களோடு விளையாடிக் கொண்டிருந்த போது, காட்டில் இருந்து வந்த ஒரு பெண்மணி, “செமதாங்கிச் சாயமரத்துக்குக் கீழ எதொ பொணம் இருக்குது”. அவ்வளவுதான், காட்டுத்தீ போலப் பரவியது செய்தி. வீதம்பட்டி, வேலூர், சலவநாயக்கன்பட்டி, பொம்மநாயக்கன்பட்டி என எல்லா ஊர்மக்களுக்கும் சாரைசாரையாகப் படையெடுத்தனர் பார்த்து வர. ஏனிந்த மாற்றம்? வாசிப்பற்றநிலைதான் காரணம்.
மேல்நிலை வாசிப்பு (skimming): மேலோட்டமாக ஆங்காங்கே இருக்கும் ஓரிரு வரிகளைப் பார்ப்பது. இது நெகடிவ் வைப், புறந்தள்ளுவோமென முடிவெடுப்பது அல்லது வெகுண்டெழுவது. நிறைய தகவல், செய்திகளை, இடையறாது உள்வாங்கிக் கொண்டிருப்பதால் மனம் நுண்மையை இழந்து போவதால்(insensitive) ஏற்படுவது. வாசிப்பு என்பது எழுத்துகளை வாசிப்பது மட்டுமேயல்ல, எந்த உருவிலிருக்கும் தகவலையும் உள்வாங்குவது என்பதேயாகும்.
முனைப்பு வாசிப்பு (active reading): மேலோட்டமாக வாசிப்பதற்கும் அடுத்தநிலையாக கவனத்தைச் செலுத்தி ஊன்றி வாசிப்பது. ஊன்றி வாசித்தாலும் கூட, வரிகளுக்கிடையே இருப்பதைக் கவனிக்கும் திறன் இல்லாமை, சொல்லாமற்சொல்லும் தகவலை உள்வாங்காமை போன்றவற்றால் முழுப்பயனையும் பெறாத வாசிப்பு.
ஆழ்நிலை வாசிப்பு ( critical reading): சொற்களையும் சொற்றொடர்களையும் நேரடியாக அப்படியப்படியே உள்வாங்கிப் புரிந்து கொள்வதற்கும் மாறாக, பகுப்பாய்வுக்கு உட்படுத்திப் புரிந்து கொள்தல். பகுப்பாய்வுத் திறன் திடமாக அமைய போதுமான பயிற்சிகள் இருந்தாக வேண்டும்.
பென்சில்வேனியா படிப்பு வட்டம் எனும் குழுவில் நண்பர் இணைத்து விட்டிருந்தார். பால்வாடிக் கதைகளைச் சொல்லி, அதை அமெரிக்கக் குழந்தைகள் எப்படி உள்வாங்கிக் கொள்கின்றன என்பதை நாள்தோறும் சொல்லி வந்தோம். நான்கு வரிக்கதைக்கு நான்கு பக்க வினாக்கள் இருக்கும். அவரவர் வாசிப்புத் திறனுக்கொப்ப புரிதல்களில் மாறுபாடுகள் இருப்பதை உணரும் விதமாக.
”Tired of seeing lot of writings with hurting, strong, painful and disrespectful words which is being going on many years from few life members. Unfortunately, nothing seems to stop them.”
மேல்நிலை வாசிப்பில் ஏற்படும் புரிதல் என்ன? இது எதொ அக்கப்போர் போல இருக்கின்றது. நெகடிவ். நமக்குத் தேவையற்றது.
முனைப்பு வாசிப்பில் தோன்றும் புரிதல்? யாரோ சில உறுப்பினர்கள், காட்டமாக எழுதுவதே பொழப்பாக இருக்கின்றனர். எங்கும் சிலர் இப்படியானவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். பொறாமை பிடித்தவர்கள். இப்படி சொற்களினின்று நேரடியாகப் பொருள் கொள்தல். அல்லது பக்கச்சார்பு(bios), முன்முடிவு (prejudice) முதலானவை கொண்டு ஒரு முடிவுக்கு ஆட்படுதல்.
ஆழ்நிலைப் பகுப்பு வாசிப்பில் என்னவாக இருக்கும்? யாரவர்கள்? எழுதுபவர் யார்? எந்த பேசுபொருளை வைத்து இப்படிச் சொல்லப்படுகின்றது? குற்றம் சாட்டுபவர், சாட்டப்படுபவர்களென இருதரப்பின் உள்நோக்கங்கள் என்னவோ? பல ஆண்டுகளாக எதிர்வினையாற்றி வருகின்றனர் என்பதால், அமைப்பில் ஏதோ பின்னடைவுகள் இருக்கலாம் போலுள்ளது. ஏக்டிவிசம் என்பதே இடையறாது போராடிக் கொண்டிருப்பதுதானே? இவர்கள் இத்தகையவர்களா? இப்படி, தத்தம் அனுபவம், படிப்பு, சிந்தனைத் திறன் முதலானவற்றால் அவரவர் தன்மைக்கொப்ப பல வினாக்கள் அவர்களுக்குள் எழும். அவற்றுக்கான விடைகளைக் கொண்டு ஒரு புரிதலுக்கு ஆட்படுவது.
தமிழ் அமைப்புகளிலே இலக்கியக் கூட்டங்கள் என்கின்றனர். புகழாளர்களை அழைத்து வந்து பேச வைக்கின்றனர். பேசுகின்றார்கள். பல்வேறு தகவல்கள் உள்வாங்கப் பெறலாம். அல்லது நிகழ்த்துகலை போன்று அந்த நேரத்தைக் களிப்பாக்கிக் கொள்ளலாம். நாடலுக்கும் தேடலுக்கும் இட்டுச் செல்லலாம். கூடவே பகுப்பாய்வு வாசிப்புப் பயிற்சி ஏற்படுகின்றதா? சிந்தனைக்கு வாய்ப்பு அமைகின்றதா? உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகின்றேன்.
ஆண்டுதோறும் புத்தாண்டு நாளன்று ஒரு குறிப்பிட்ட நண்பரின் வீட்டில் கூடுவது வழக்கம். எட்டு அல்லது ஒன்பது குடும்பங்கள் கூடுவது வாடிக்கை. இம்முறை ஓரிரு குடும்பத்தினரால் கலந்து கொள்ள இயலவில்லை. வழமையான ஆர்ப்பாட்டமின்றி எளிமையான சந்திப்பாக அமைந்தது. நண்பர் வினவினார், “பழமை, எப்படி இருக்கீங்க?”. “ரொம்ப நல்லா இருக்கன்”. “அதெப்படி? விலைவாசி உயர்வு, பங்குச்சந்தை வீழ்ச்சி, பொருளாதார மந்தத்தின் அறிகுறி இப்படின்னு எல்லாரும் பதற்றத்துல இருக்கும் போது நீங்க மட்டும்?”. “எதையுமே தெரிஞ்சிக்கிறது இல்லைங்க. ஆட்களைச் சந்திப்பதும் மிகக் குறைவு, அதுதான் காரணம்”. மிகவும் பாராட்டினார். “நானும் முயன்று பார்க்கிறன். முடியலை” என்றார்.
தகவல். அதை இருவிதமாகப் பகுக்கலாம். நாமாகத் தேடிச் சென்று ஒன்றைக் கொண்டாலோ, தெரிவு செய்து அறிந்து கொண்டாலோ அது கல்வி. அடுத்ததாக, எதிர்கொள்வதையெல்லாமும் உள்வாங்கிக் கொள்வது. எடுத்துக்காட்டாக, இந்தப் பதிவு. உங்கள் கண்களில் படுகின்றது. வணிகம், அரசியல், சமயம் இப்படி ஏதோவொன்றின் அடிப்படையிலான உள்நோக்கம் கொண்டதாக இருக்கலாமென நினைப்பீர்களேயானால், தவிர்த்து விட்டுத்தான் சென்றாக வேண்டும். எனக்கும் உங்கள் நேரத்தை வீணடிக்க யாதொரு தேவையுமில்லை. பிறகு எதற்காக எழுதுகின்றேன்? என் சிந்தனையைப் பகிர்கின்றேன். எழுத்தாற்றலைப் பயில்கின்றேன். தற்காலத்தில் வாழ முனைகின்றேன். தேவையின்றி கடந்த காலத்தில் மனம் ஒன்றியிருந்தாலோ, அல்லது அளவுக்கும் மிஞ்சிய வகையிலே எதிர்காலத்தை எண்ணிக் கொண்டிருந்தாலோ மனம் கவலை கொள்ளவே நேரிடும். விளையாட்டு, இசை, சமையல், உடற்பயிற்சி, ஓவியம், வேலை முதலானவற்றைப் போலவே சிந்தித்து எழுவதும் தற்காலத்துக்குள் நம்மைப் பணிக்கும். வருத்தங்கள், கவலைகள், துன்பவுணர்வுகள் மேலிடாது. மனம் சமநிலை கொள்ளும். ஆகவே எழுதுகின்றேன்.
தகவல் என்பதை நாம் ஏன் பகுத்துட்கொள்ள வேண்டும்? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. உகந்த அளவுக்கும் மிகுதியாகும் போது உள்வாங்கப்படும் தகவலைச் செரிக்க முடியாதநிலை ஏற்படும். மாறாக, செரிபடாமல் உணர்வுகளை மேலும் கீழுமாகச் செலுத்திக் கொண்டே இருக்கும். உணர்வுகள் உயர்ந்து தணியும் போது மெய்யுறுப்புகளின் வேதிவினைகளும் பெருத்துச் சிறுக்கின்றன. அதனாலே உடல்நலத்தில் கோளாறுகள் தோன்றுகின்றன. கற்கை என்பதைக் கடந்து, உள்வாங்கப்படுகின்ற தகவல் எல்லாமுமே ஏதோவொரு உள்நோக்கத்தைக் கொண்ட நிலைப்பாடுகள்(ஒப்பீனியன்)தாம். தற்போது நான் எழுதிக் கொண்டிருப்பதுகூட நான் முன்வைக்கின்ற என் மனம்சார்ந்த நிலைப்பாடுகளின் தொகுப்புதான். உங்களை நாடி வரும் தருணத்தில், விலக்கிச் செல்வதற்கு எல்லா உரிமையும் உண்டுதானே?
விடுப்புக்காலத்தில் குழுமியிருந்த மூன்று பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதை எட்ட நின்று வேடிக்கை பார்க்க முடிந்தது. 'in my opinion, doesn't make sense to me, to me it appears' போன்ற சொல்லாடல்களெல்லாம் தங்கு தடையின்றிப் புழங்கப்படுகின்றன. தமிழில் இவற்றுக்கு நிகரான சொல்லாடல்களே இல்லை. எப்படி இல்லாமற்போகும்? பண்பாட்டிலே அத்தகைய தன்மை தூக்கலாக இல்லாததினாலே அவற்றுக்கான தேவையும் இல்லாமற்போய் விட்டதென்றுதான் கருத வேண்டி இருக்கின்றது. இஃகிஃகி.
எண்ணிப்பாருங்கள். ஒருவர் ஒரு நிலைப்பதிவினை இடுகின்றார். அல்லது, ஏதோவொன்றைச் சொல்கின்றார். ‘இது எனக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லை, சரியாகப்படவில்லை’ என்றோ, அல்லது அதற்கு நிகராகவோ மறுமொழிகின்றோம். என்ன நடக்கும்? சொன்னவர் நல்லவிதமாய் எடுத்துக் கொண்டு, கூடுதல் விபரம் கொடுக்க முன்வரலாமாயிருக்கும். ஆனாலும் கூட, பார்க்கும் வாசகர்கள், பார்வையாளர்கள், இவன் எழவைக் கூட்டுகின்றானென்றே நினைப்பர். அவர்கள் நினைக்கின்றார்களோ இல்லையோ, நமக்குள் அப்படி ஒரு முன்முடிவு(prejudice) நிலைகொண்டிருக்கின்றது. இதனால்தாம் நம் பிள்ளைகள் தமிழிலே பேச முன்வருவதில்லை. மனத்தில் தோன்றியதைச் சொல்வது மேலைநாட்டிலே இயல்பாக்கப்பட்டவொன்று(normalized). நம்மிடத்திலே இல்லை. காரணம் என்ன? நிலைப்பாடுகள்(opinion) என்பது வேறு, உள்ளமை என்பது வேறு, தனக்கான அறம் என்பது வேறு, பொது அறம் என்பது வேறு என்பதெல்லாம் பண்பாட்டிலே நிலைகொள்ளாமலிருப்பதுதான் காரணம்.
தங்குதடையின்றிப் பேசக்கூடிய நிலை இல்லாதவிடத்திலே உரையாடல் நிகழ்வதற்கான வாய்ப்புகளே இல்லை. வெறுமனே தகவலை, உள்நோக்கமுள்ள தகவலை உள்வாங்கிக் கொண்டே இருக்க நேரிடுகின்றது. அது அகச்சிக்கலுக்கு வழி வகுக்கின்றது. மனச்சோகை மேலிடுகின்றது. வாழ்க்கைநலம் சீர்கெடுகின்றது.