(தோழர் தியாகு எழுதுகிறார் 219 : உரிமைத் தொகை உண்டு! உரிமைக் கல்வி கிடையாதா? – தொடர்ச்சி)
தோழர் தியாகு எழுதுகிறார்
அவலமான கல்விச் சூழல் 1/2
இனிய அன்பர்களே!
தமிழ்நாட்டின் கல்விநிலை குறித்துக் கவலைப்படுவதில் இளைஞர் அரண் தனித்து விடப்படவில்லை. சவகர் நேசன் போன்ற கல்விச் சிந்தனையாளர்கள் இந்நிலை குறித்து மிக ஆழ்ந்த கவலை கொண்டிருக்கின்றார்கள் என்பதைக் கண்டு வருகின்றோம்.
மாநிலக் கல்விக் கொள்கையில் என்ன எதிர்பார்க்கிறோம் எனபது குறித்து சூன் 10ஆம் நாள் மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கல்வியாளர்களும் பேராசிரியர்களும் புதிய கல்விக் கொள்கையில் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதைப் பொதுவில் தெளிவாக்கியுள்ளனர்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பிலிருந்து தெரிய வரும் சில உண்மைகளை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்: முதன் முதலாக 1968ஆம் ஆண்டில் ஒரு கல்விக் கொள்கை அறிவிக்கப்பட்டது. இது அவ்வளவாகப் பேசப்படவில்லை. பிறகு 1986ஆம் ஆண்டிலும் 1992ஆம் ஆண்டிலும் கல்விக் கொள்கைகள் அறிவிக்கப்பட்ட பின் நிறைய குற்றாய்வுகள் எழுந்தன. இந்தக் கொள்கைகளின் சிலபல கூறுகள் குறை கூறப்பட்ட போதிலும் முழுமையாக மறுதலிக்கப்படவில்லை. ஆனால் மோதியரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கை – 2020தான் முற்போக்குக் கல்வியாளர்களால் அறவே மறுதலிக்கப்பட்டுள்ளது. தேசியக் கல்விக் கொள்கை – 2020 எனப்படும் இந்தப் புதிய கல்விக் கொள்கைக்குத் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அனைத்திந்திய அளவிலும் பேராசிரியர்களும் மாணவர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
புதிய தேசியக் கல்விக் கொள்கையின் செயல்பாடு தற்சார்பான, புறஞ்சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு இடம் கொடுக்காது. அரசின் நோக்கங்களுக்காக ஆராய்ச்சிகள் வளைக்கப்படும்.
புதிய தேசிய கல்விக் கொள்கை இப்போதிருக்கும் ஆண்டுப் பகுப்பை உரிய காரணமே இல்லாமல் உடைத்து, பள்ளிக் கட்டமைப்பை அடியோடு சிதைத்து விடும்.
புதிய தேசிய கல்விக் கொள்கை பல்கலைக்கழகச் சேர்க்கைக்குப் பொது நுழைவுத் தேர்வை நுழைக்கிறது. இதற்குத்தான் கியூட் (COMMON UNIVERSITY ENTRANCE TEST) என்று பேர்! இது பள்ளிப் படிப்பை மதிப்பற்றதாக்கி விடும்.
ஆகவே ‘நீட்டும்’ கூடாது, ‘கியூட்டும்’ கூடாது என்பது தமிழ்நாட்டின் கோரிக்கையாக இருக்க வேண்டும்.
மக்கள் கல்விக் கூட்டியக்கம் தமிழ்நாட்டின் கல்விச் சூழலை இப்படிப் படம் பிடித்துக்காட்டுகிறது:
மாணவர்கள் மீதான ஒடுக்கு முறைகளும், ஆசிரியர்கள் மீதான சுரண்டல்களும், அடக்குமுறைகளும், தனியார் கல்வி நிறுவனங்களின் விதிமீறல்களும், பகற் கொள்ளைகளும், கல்வி வளாகங்களில் சாதிய ஒடுக்கு முறைகளும் இன்றைய சூழலில் மேலோங்கி வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கல்வித் திட்டங்களும், செயல்பாடுகளும் மக்கள் நலனுக்குப் பகையாக உள்ளதை மிகவும் கவலையுடன் கவனிக்கும் தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து, இதுகுறித்து நுணுக்கமான உரையாடல்களை மேற்கொள்ளவும், கல்வி குறித்த பல்வேறு சிக்கல்கள், அவற்றுக்கான நடைமுறைத் தீர்வுகள் பற்றி அரசுக்கு வலியுறுத்தவும் “மக்கள் கல்விக் கூட்டியக்கம்” எனும் பெயரில் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன.
தமிழகத்திலுள்ள பல்வேறு சனநாயக இயக்கங்கள், கல்வியாளர்கள், ஆர்வலர்கள் இக்கூட்டமைப்பில் இணைந்துள்ளனர். சூலை எட்டாம் நாள் சென்னை சேப்பாக்கம் செய்தியாளர்கள் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற ஒரு நாள் கலந்துரையாடல் மூலமாகக் கீழ்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
நடுவண் அரசின் தேசிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும். வெவ்வேறு பெயர்களை வைத்துக் கொண்டு ஒன்றிய அரசுக் கொள்கையின் முக்கிய அம்சங்களை நடைமுறைக்குக் கொண்டு வருவதைத் தமிழக அரசு தவிர்க்க வேண்டும்.
தமிழகத்திற்கான மாநிலக் கல்விக் கொள்கை, மக்கள் நலனை முன்னிறுத்திச் சமத்துவத்தை வலியுறுத்தும் கல்விக் கொள்கையாக இருக்க வேண்டும். பேராசிரியர் சவகர் நேசன் அவர்கள் தயாரித்து வரும் மக்களுக்கான கல்விக் கொள்கை நூலை வெளிக் கொண்டுவந்து, அதன் சிறப்பம்சங்களை மக்களிடம் எடுத்துச் செல்லலாம் எனவும் தீர்மானிக்கப் பட்டது.
பல ஆண்டுகளாகப் பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் நியமனத்திற்காகப் பெறப்பட்டுள்ள பல கோடி உரூபாய் இலஞ்ச ஊழலை விசாரிக்கத் தனிப்படை அமைத்து, ஊழல் புரிந்தவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி ஆசிரியர் நியமனத்தில் தமிழ்நாட்டில் எந்தவித இலஞ்சமும் பெறப்படாமல் தடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
மாணவர்களுக்கான கல்விக் கட்டண விகிதத்தை வெளிப்படையாக மக்கள் அறியும் வண்ணம் பல ஊடகங்களில் அறிவித்து, அதை மீறும் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கத் தனிப்பட்ட சட்டபூர்வ அதிகாரம் கொண்ட குறை தீர்க்கும் அமைப்பை உருவாக்க வேண்டும்.
சாதி மதப் பாகுபாடுகளை நீக்கக் கூடிய பாடதிட்டங்களை எல்லா நிலையிலும் அறிமுகப்படுத்த வேண்டும். ஏற்கெனவே திணிக்கப்பட்டுள்ள சாதிய மற்றும் மத கருத்துக்களைக் கண்டறிந்து அவற்றைப் பாடத்திட்டங்களிலிருந்து முற்றிலுமாக நீக்க வேண்டும். அறிவியல் சிந்தனையையும் பகுத்தறிவு கொண்ட பார்வையையும் உருவாக்கும் பாடத்திட்டங்கள் அதிக அளவில் இடம்பெற வேண்டும்.
ஒப்பந்த ஆசிரியர் என்ற நியமன முறையை முற்றிலுமாக ஒழித்து விட்டு முழு நேரப் பணியாளர்களாக ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும். சுயநிதி கல்லூரிகளில் மிகக் குறைந்த ஊதியத்திற்கு எந்தவித பணிப் பாதுகாப்பு உறுதியும் இன்றிப் பணியில் அமர்த்தப்பட்டு, உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகி வரும் பல்லாயிரக்கணக்கான பேராசிரியர்களின் நிலை மேம்பட உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்குக் கண்டிப்பான ஆசிரியர் பாதுகாப்புச் சட்டங்களை உருவாக்குவதுடன், அவற்றைத் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும். பல்கலைக் கழக மானியக் குழு பரிந்துரைத்துள்ள ஊதிய விகிதத்தைச் சுயநிதிக் கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். அரசு விதிகளை மீறும் சுயநிதிக் கல்லூரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட வேண்டும்.
அதே போல், பள்ளிக் கல்வியில் காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தனியார் மழலைப் பள்ளிகள் அனைத்தும் அரசுப் பள்ளிகளாக மாற்றப்பட வேண்டும். மழலையர் பள்ளியில் தமிழ் மட்டுமே பயிற்றுமொழியாக இருக்க வேண்டும். அதேபோல் தாய்த் தமிழ்ப் பள்ளிகள் அனைத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளகளாக மாற்றப்பட வேண்டும்.
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 249
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 53 : அத்தியாயம் 29. தந்தையார் விடைபெற்றுச் செல்லுதல் 1/2 – தொடர்ச்சி)
அத்தியாயம் 29. தந்தையார் விடைபெற்றுச் செல்லுதல் 2/2
அவ்வூரிலும் அயலூரிலும் இருந்த சங்கீத வித்துவான்கள் பாரதியாரை அடிக்கடி பார்க்க வருவார்கள். மாயூரத்தில் சாத்தனூர்ப் பஞ்சுவையர், கோட்டு வாத்தியம் கிருட்டிணையர், திருத்துறைப்பூண்டி பாகவதர், பெரிய இராமசாமி ஐயர் முதலிய சங்கீத வித்துவான்கள் இருந்தனர். வேதநாயகம் பிள்ளை முன்சீபாக இருந்தமையால் அவரிடம் உத்தியோகம் பார்த்த குமாசுத்தாக்களும் வக்கீல்களும் அவருடைய பிரியத்தைப் பெறும்பொருட்டு அவர் இயற்றிய கீர்த்தனங்களைப் பாடுவார்கள். அதற்காகச் சங்கீதம் கற்றுக்கொண்டார்கள். இவர்களெல்லாம் பாரதியாரிடமும் வந்து செல்வார்கள்.
உணவுக்கு ஏற்பாடு
என் தந்தையார் மாயூரத்தில் சில நாட்கள் தங்கியிருந்தனர். அக்காலத்தில் அந்நகரில் தமக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் சென்று என்னைக் கவனித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். அவர் அங்கே இருந்த வரையில் சிறிய தகப்பனார் வேட்டகத்தில் ஆகாரம் செய்து வந்தேன். என் சிறிய தாயாரும் அப்போது அங்கே வந்திருந்தார். எப்போதும் அந்த வீட்டில் உணவுகொள்வது உசிதமாக இராது என்று எண்ணி என் தந்தையார் வேறு ஏற்பாடு செய்யத் தொடங்கினார்.
அக்காலத்தில் மகாதானத் தெருவில் ஒரு வீட்டில் அறுபது பிராயம் சென்ற விதவை ஒருத்தி அவ்வூர் உத்தியோகசுத்தர்கள் சிலருக்கும் பள்ளிக்கூட மாணவர் சிலருக்கும் சமைத்துப்போட்டு அதனால் கிடைக்கும் வருவாயைக்கொண்டு சீவனம் செய்து வந்தாள். பள்ளிக்கூட மாணவர்களுக்குக் காலையில் பழையதும் பகலிலும் இரவிலும் ஆரோக்கியமான உணவும் அளிக்கப்படும். இதற்காக அந்த அம்மாள் மாதம் ஐந்து உரூபாய்தான் பெற்று வந்தாள். என் சிறிய தாயாராகிய இலட்சுமி அம்மாள் அக்கிழவியிடம் சொல்லி எனக்குச் சாக்கிரதையாக உணவு அளிக்கும்படி ஏற்பாடு செய்தார்.
என் தந்தையார் எனக்கு வேண்டிய பணத்தை என்னிடம் அளித்தார். பிறகு அவர் மாயூரத்தைவிட்டுச் செல்ல எண்ணித் தம் நண்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டார். புறப்படும் தினத்துக்கு முதல் நாள் இரவு முழுவதும் எனக்குப் பலவிதமான போதனைகளைச் செய்தார். நான் இன்ன இன்னபடி நடந்துவர வேண்டுமென்றும், உடம்பைச் சாக்கிரதையாகக் கவனித்துக்கொள்ள வேண்டுமென்றும், அடிக்கடி எண்ணெய் தேய்த்துக் கொள்ளவேண்டுமென்றும் பல முறை சொன்னார்.
விடை பெற்றது
புறப்படும் தினத்தன்று காலையில் அவர் என்னுடன் பிள்ளையவர்களிடம் வந்தார்.
“நான் இன்று ஊருக்குப் போகலாமென்று எண்ணியிருக்கிறேன். விடைதரவேண்டும்” என்று தகப்பனார் சொன்னார்.
“ஏன்? இன்னும் சில தினங்கள் இருந்து மாயூரநாத சுவாமி தரிசனம் செய்துகொண்டு போகலாமே.”
“அயலூரில் அயலார் வீட்டில் எவ்வளவு காலம் இருப்பது? என்னுடைய பூசை முதலிய விசயத்திற்கு இவ்வூர் சௌகரியமாக இல்லை. தவிர, இங்கே எனக்கு வேறு வேலை ஒன்றும் இல்லை. வந்த காரியம் ஈசுவரக் கிருபையாலும், உங்களுடைய தயையினாலும் நிறைவேறியது. இவனை உங்களிடம் ஒப்பித்துவிட்டேன். இவன் இனிமேல் விருத்தியடைவான் என்ற தைரியம் எனக்கு உண்டாகிவிட்டது. நான் என்னுடைய காரியங்களை இனிமேல் கவனிக்க வேண்டாமா?”
“சரி; போய் வாருங்கள். ஞாபகம் இருக்கட்டும்.”
“இவனைப் பற்றி இனிமேல் ஒரு கவலையுமில்லை என்று தெளிவாகத் தெரிந்தாலும் காரணமில்லாத துன்பமொன்று மனத்தில் உண்டாகிறது. இவனை நான் பிரிந்து இருந்ததே இல்லை. இவனுடைய தாய்க்கு இவனை ஒருநாள் பிரிந்திருந்தாலும் சகிக்க முடியாத துயரம் ஏற்படும். இப்போது இவனைப் பிரிந்து செல்வதற்கு மனம் தயங்குகிறது. தனக்கு வேண்டிய காரியங்களைப் பிறர் உதவியின்றிக் கவனித்துக்கொள்ளும் வழக்கம் இவனுக்கு இல்லை. தாங்கள் இவனைச் சாக்கிரதையாகக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தானத்தில் இருந்து இவனைக் காப்பாற்றுவது தங்கள் கடமை.”
இப்படிச் சொல்லும்போது என் தகப்பனார் கண்களில் நீர் துளித்தது. அதுகாறும் அவர் அவ்வாறு என்னைப் பற்றி வருந்தியதை நான் பார்த்ததில்லை. அவர் உள்ளத்துக்குள் மறைந்து கிடந்த அன்பு முழுவதும் அப்போது வெளிப்பட்டது. அவர் கண்களில் நீரைக் கண்டு எனக்கும் மனம் கலங்கியது; கண்ணீர் துளித்தது; துக்கம் பொங்கி வந்தது.
அவரது அன்பை நன்கு உணர்ந்த என் ஆசிரியர் புன்னகை பூத்துக்கொண்டே, “நீங்கள் இவருடைய பாதுகாப்பைக் குறித்துச் சிறிதும் கவலைப்படவேண்டா. நான் சாக்கிரதையாகக் கவனித்துக்கொள்கிறேன். நீங்கள் தைரியமாக ஊருக்குப் போய்வாருங்கள். இவரைப் பார்க்க வேண்டுமென்று எப்போது விரும்புகிறீர்களோ அப்போது இவரை உங்களிடம் அனுப்புகிறேன். நீங்களும் அடிக்கடி இந்த ஊருக்கு வந்து பார்த்துவிட்டுப் போகவேண்டும்” என்று கூறி விடையளித்தார்.
என் தகப்பனார் ஊருக்குப் புறப்பட்டார். நான் சிறிது தூரம் உடன்சென்று வழியனுப்பிவிட்டு வந்தேன். அவர் சென்ற பிறகுதான் எனக்கு ஏதோ ஒரு புதிய துன்பம் வந்தது போன்ற தோற்றம் உண்டாயிற்று. நான் முன்பு அறியாத ஒன்றை, தாய் தந்தையரைப் பிரியும் துன்பத்தை, அப்போது உணர்ந்தேன்.
மனோதைரியமும் கட்டத்தைச் சகிக்கும் ஆற்றலுமுடைய என் தந்தையாரே என்னைப் பிரிந்திருக்க வருந்தினாரென்றால், என் அருமைத் தாயார் எவ்வளவு துடித்து வருந்துவார் என்பதை நினைத்தபோது என் உள்ளம் உருகியது. குன்னத்தில் இருந்த காலத்தில் நான்கு நாள் பிரிந்திருந்து திரும்பி வந்தபோது என்னை அவர் தழுவிக்கொண்டு புலம்பிய காட்சி என் அகத்தே தோற்றியது.
நான் தந்தையாரை அனுப்பிவிட்டு வந்தவுடன் பிள்ளையவர்கள் எனக்குப் பலவிதமான ஆறுதல்களைக் கூறினார்; என்னுடைய துன்பத்தை மாற்றுவதற்குரிய பல வார்த்தைகள் சொன்னார்.
“சில நாட்களில் திருவாவடுதுறைக்குப் போகும்படி நேரும். அங்கே சந்நிதானம் உம்மைப் பார்த்து சந்தோசமடையும். நீர் இசைப்பயிற்சி உடையவரென்று தெரிந்தால் உம்மிடம் தனியான அன்பு வைக்கும்” என்று சொல்லித் திருவாவடுதுறை ஆதீன விசயங்களையும் வேறு சுவையுள்ள சமாசாரங்களையும் கூறினார். அவர் வார்த்தைகள் ஒருவாறு என் துன்பத்தை மறக்கச் செய்தன.
நாளடைவில் தமிழின்பத்தில் அத்துன்பம் அடியோடே மறைந்துவிட்டதென்றே சொல்லலாம்.
(தொடரும்)
என் சரித்திரம், உ.வே.சா