மரை என்ற மானினம்

66 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jan 7, 2023, 2:52:23 AM1/7/23
to மின்தமிழ்
நன்றி - "சிறகு" இதழ் : http://siragu.com/மரை-என்ற-மானினம்/

மரை என்ற மானினம்

தேமொழி

ஜனவரி  7, 2023


Antilope 2.jpg

மானையும், அதன் இனங்களையும், விலங்கின் வளர்ச்சிக்கேற்ப, பாலினத்திற்கு ஏற்ப பல வேறு பெயர்களால் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.   மான், கலை, இரலை, புல்வாய், உழை, நவ்வி, கவரி, மரை, கடமா(ன்), ஆமா(ன்) ஆகியனவற்றை மான் என்னும் விலங்கினைக் குறிக்கும் பல்வேறு பெயர்களாகச்  சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.

மரைமான் இந்திய மண்ணின் மான்.  ஒரு காலத்தில் இந்தியாவிலும், தமிழகப் பகுதியிலும் அதிகம் இருந்த மரைமான்கள்  பொழுதுபோக்கு வேட்டையாடல் காரணமாகவும், அவற்றின் வாழிடங்கள் அழிக்கப்பட்டதாலும்  அவற்றின் இருப்பு அழிவுநிலையை எட்டியதால், இன்று பாதுகாக்கப் பட வேண்டிய இனமாக அறியப்படுகிறது. தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை (Point Calimere or Cape Calimere) பகுதியில் இருந்த மரைமான்களுக்குப் புகலிடம் அமைக்கப்பட்டதால் அவை இன்று அழிவிலிருந்து மீண்டு வருகின்றன. மரைமான் ‘கருமான்’ என்றும் ‘வெளிமான்’ என்றும் அறியப்படும்.  தமிழ்நாடு வனத்துறையின் கோடியக்கரை பகுதி ஓய்வு விடுதிக்கு 'வெளிமான் இல்லம் வன ஓய்வு விடுதி' என்றுதான் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 
Point Calimere.jpg
நன்கு வளர்ந்த ஆண் மான்களின் உடலின் மேற்புறத்தோலின் நிறம் கருமையாக இருப்பதால் ‘கருமான்’ (Blackbuck)  என்று அறியப்படுகிறது.  ஆண் மானின் கொம்புகள் புரிகளுடன் கூடிய மரை  போன்ற தோற்றத்தில் இருந்ததால் இந்த வகை மான்கள் பண்டைய நாட்களில் 'மரை' என்று அழைக்கப்பட்டன.  

dictionary.jpg
'மரை' என்பதோ 'புரி' என்பதோ இந்நாளிலும்  மக்களுக்குப்  புதிய சொற்கள் அல்ல. 'திருகாணி'  'மரையாணி'  போன்ற சொற்கள் வழக்கில் உள்ளன.  எவரேனும் பொருளற்ற வகையில் உளறினால் 'மரை' கழன்றுவிட்டதா என்று கேட்டு பகடி செய்வதையும் அறிந்துள்ளோம்.  பள்ளி நாட்களில் அறிவியல் ஆய்வகத்தில் பொருள் ஒன்றின் தடிமனைத் துல்லியமாக அளக்கப்  பயன்படுத்திய  'திருகளவி' (micrometer screw gauge) கருவியையும், அதில் 'புரியிடை தூரம்'  கணக்கிட்டதையும் நினைவு கூரலாம்.  புரி என்பது திருகு அல்லது  மரையில் உள்ள ஒரு முழுச் சுற்று (whorl).
 
screw.jpg
புரி என்பதற்கு செய்த, அறிந்த, அரண் கொண்ட ஊர் என்ற பொருளும் உண்டு.  இவை தவிர்த்து, திருகின் முறுக்கும்  ‘புரி’ எனப்படும்.  முறுக்கிய அல்லது முறுக்குண்டாற் போன்ற நிலையைக் குறிக்கும் புரி என்ற சொல்லும் இன்றுவரை முப்புரிநூல், வலம்புரிச்  சங்கு, புரிசடை, புரிகுழல், புரிமணை, வைக்கோற்புரி என்று புழக்கத்தில் உள்ளது (பார்க்க: படம்). கொம்பு தரும் தோற்றம் காரணமாக மக்களால்  ‘திருகுமான்’, ‘முருகுமான்’ என்றும்  மரைமான் அழைக்கப்படுவதாகத் தெரிகிறது.

எனவே,  திருகுக்கொம்புகளை (சுரிக்கொம்பு/ringed horns) கொண்ட மான் இனம் 'மரை' என்று பெயர் பெற்றுள்ளதை அறிய முடிகிறது.
இதற்கான இலக்கியச் சான்று;
          "புரி மட மரையான் கரு நரை நல் ஏறு"
          — மதுரைக் கண்டரதத்தன், குறுந்தொகை: 317
பாடல் வரியில்,
திருகிய கொம்புகள் கொண்ட மரை இனத்தின் இளைய கரிய பெரிய ஆண் மான் என்று மரைமானின் தோற்றத்தை மதுரைக் கண்டரதத்தன் விவரிக்கிறார்.
 Antilope 3.jpg

இவ்வாறு தெளிவாக மானின் திருகிய கொம்புகளையும் கரிய நிறம் கொண்ட தோற்றத்தையும் சுட்டிக் காட்டி விடுவதால் பிறவகை மான் இனங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்ட,  மரை என்ற சொல் பயன்பட்டது தெரிகிறது.   ஆகவே, புரிகளுடன் கூடிய திருகாணி/மரையாணி போன்று திருகிய கொம்புகளைக் கொண்ட மான் 'மரை'  என்று சுட்டப்பட்டதும்  தெளிவாகிறது.

"வலம் திரி மருப்பின் இரலை" என்ற குறிப்பால், ஆண்  மரை மானின் சுரிக்கொம்பின் சுருள் (spiral) வலம்புரியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. குதித்துச் செல்லும் மான் கூட்டங்கள் அஞ்சி ஓடுவதை, "தெறி நடை மரை கணம் இரிய" அகநானூறு பாடல் (பாடல் 224, வரி: 11) குறிப்பிடுகிறது. வில்லின் ஓசைக்கு  அஞ்சி விரைந்து  சிவந்துவிடும்  கண்களையுடையவை  இந்த மரை மான்கள் என்பதை, "சிலை ஒலி வெரீஇய செம் கண் மரை விடை" மலைபடுகடாம் பாடல் (வரி: 406) மூலம் அறிய முடிகிறது.
 
 Antilope 4.jpg
ஆதிச்சநல்லூர்  அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி ஒன்றில்,  வளமைச் சடங்கைக் குறிக்கும் வகையில் பறவையும், தாய் தெய்வமும் மரை மான் ஒன்றுடன் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறும் மான் உருவம் பதித்த மட்கலன் ஒரு தொன்மையான தொல்லியல் தரவாகக் கிடைத்தாலும் அகராதி மரைமான் எது என்பதைத் தெளிவுபடுத்தவில்லை எனத் தெரிகிறது.  சங்கப்பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பர்ட் கீழ்வருமாறு சுட்டிக் காட்டியுள்ளார்;
          மரை – A kind of deer.  The University of Madras Lexicon defines this as elk.  However, there are no elks in South India.

வைதேகி குறிப்பிடும் இப்பிழை அகராதியில் சீர் செய்யப்படல் வேண்டும்.  
மரை — மான்களில் ஒரு இனம்
(The Blackbuck  — Antilope;  Antilope cervicapra; also known as the Indian antelope)

இலக்கியச் சான்று:
"புரி மட மரையான் கரு நரை நல் ஏறு"
— மதுரைக் கண்டரதத்தன், குறுந்தொகை பாடல்: 317
‘திருகிய கொம்புகள் கொண்ட மரை இனத்தின் இளைய கரிய பெரிய ஆண் மான்’
 
Antilope 1.jpg

மரை மானின் பண்புகளில் ஒன்றாக இலக்கியங்களில் காணக் கிடைக்கும் சுவையான மற்றொரு செய்தி, மரை மான் நெல்லிக்கனியை விரும்பி உண்ணும் என்பது.  
"புரி மட மரையான் கரு நரை நல் ஏறு" என்று முன்னர் காட்டிய குறுந்தொகைப் பாடலிலேயே அச்செய்தியைக் காணமுடிகிறது.

        புரி மட மரையான் கரு நரை நல் ஏறு
        தீம் புளி நெல்லி மாந்தி அயலது
        தேம் பாய் மா மலர் நடுங்க வெய்து உயிர்த்து
        ஓங்கு மலை பைம் சுனை பருகும்
                  — குறுந்தொகை பாடல்: 317, வரிகள்:  1-4

திருகிய கொம்புகள் கொண்ட மரை இனத்தின் இளைய கரிய பெரிய ஆண் மான்
இனிய புளிப்புச் சுவையையுடைய நெல்லிக்காயைத்தின்று, அருகில் உள்ள
தேன் நிரம்பிய  அழகிய பெரிய மலர்கள் நடுங்கும்படி வெப்பப் பெருமூச்செறிந்து
உயர்ந்த மலையினிடத்துள்ள பசிய சுனைநீரைப் பருகும் (நாட்டின் தலைவன் குறித்த பருவத்தில் உன்னைக்காணத் தேடி வந்துவிடுவான், வருந்தாதே தலைவி என்று தோழி ஆறுதல் கூறும் கருத்தைக் கூறுகிறது மதுரைக் கண்டரதத்தன் எழுதிய இப்பாடல்).

மேலும், அடுத்து வரும் பாடல்களிலும் சில எடுத்துக் காட்டுகள்;
"புல் இலைப் பராரை நெல்லி அம் புளித் திரள் காய் கான மட மரைக் கணநிரை கவரும்"  — அகநானூறு 69
"மை இல் பளிங்கின் அன்ன தோற்றப் பல் கோள் நெல்லிப் பைங் காய் அருந்தி, மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம்" — அகநானூறு 399
"நெல்லி மரை இனம் ஆரும் முன்றில் புல் வேய் குரம்பை"  —  குறுந்தொகை 235
"மரை பிரித்து உண்ட நெல்லி வேலி பரல் உடை முன்றில் அம் குடி சீறூர்"—  புறநானூறு 170
இப்பாடல் வரிகள் மூலமும் மரை மான்கள் நெல்லிக் கனியை உண்ணும் வழக்கம் தெரிய வருகிறது.

தாவும் மரை:
ஒரு சொல் தனிமொழியாக வரும்பொழுது ஒரு பொருளையும்,   அதுவே தொடர்மொழியாகப் பிரிந்து ஒன்றுக்கு மேற்பட்ட பொருளையும் தந்தால் அது பொதுமொழி ஆகும் என்கிறது இலக்கணம்.  அதாவது, தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாக ஒரு சொல் வருவது பொதுமொழி.  இதற்கு எடுத்துக் காட்டாகக் கொடுக்கப்படுவது, 'தாமரை' என்ற சொல்.
தாமரை = தாமரை மலர்
தா + மரை = தாவும் மரை (மரை என்ற மானினம்)
இத்தகைய இலக்கிய நயம் கூட்டும் சொல் விளையாட்டிற்கு 'மரை' மான் இனம் உதவியுள்ளது. பலபாடல்களில் தாவும் மரை தாமரையாகக் கையாளப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக பதினொன்றாம் திருமுறையில் இருந்து ஒரு பாடல்;
          தாமரையின் தாள்தகைத்த தாமரைகள் தாள் தகையத்
          தாமரையிற் பாய்ந்துகளுந் தண்புறவில் - தாமரையின்
          ஈட்டம் புலிசிதறும் . . .
                    — பதினொன்றாம் திருமுறை, பாடல்: 46
தாமரை மலரில் தாள்களை இணைத்துக் கட்டிய மாலையை அணிந்தவர்கள்;  தங்கள் கால்கள் வலிக்கும்படியாக `அரை` என்னும் ஒருவகை மரத்தின்மேற் பாய்ந்து விளையாடுகின்ற காடு. அங்கு, தாவி ஓடுகின்ற `மரை` என்னும் மானின் கூட்டத்தைப் புலி அழிக்கின்றது  என்பது இப்பாடல் வரிகள் கூறும் கருத்து.

தமிழர் வழக்கப்படி இடங்களுக்குச் சூட்டப்படும் பெயர் அவ்விடத்தின் பண்பைக் குறிக்கும் வகையில் அமையும் என்பதை ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய 'தமிழகம் ஊரும் பேரும்' என்ற  நூல் தரும் கருத்துகள் மூலமாக அறியலாம். மரைமான்கள் திரிந்த காடு 'மரைக்காடு'.  

இன்றைய கோடியக்கரை பகுதி மரைமான்கள் வாழும் பகுதியாக இருப்பதால் 'மரைக்காடு' என்று அழைக்கப் பட்டிருக்க வேண்டும்.  பிற்காலத்தில் சைவ சமய மறுமலர்ச்சிக் காலத்தில் திட்டமிட்டோ, அல்லது அறியாமையாலோ மறைக்காடு என்று மாற்றம் பெற்று, திருமறைக்காடு என்று அழைக்கப்பட்டு, பின்னர் அதுவும் வடமொழியில்  'வேதாரண்யம்' என்று மாற்றப்பட்டுவிட்டது என அறிஞர் பெருமக்கள் சிலர் கூறுவதும், இதை மறுத்து எழும் சர்ச்சைகளும் தொடர்கதை. மரைமானுக்கும் கோடியக்கரை பகுதிக்கும் தொடர்பு உண்டு...இன்றுவரை.    ஆனால், மறை என்பதற்கும் அப்பகுதிக்கும் ஒரு தொடர்பும் இல்லை.  

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்று வேதாரண்யம். திருமறைக்காட்டுக் கோயில் சுந்தரர், அப்பர், சம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற சிறப்பைப்  பெற்றுள்ளது.  சோழ நாட்டுக் காவிரி தென்கரைத் தலங்களில் 125ஆவது சிவத்தலமாகவும் அறியப்படுகிறது. இங்குக்  கோயிலில் உள்ள  மூலவர் சிவனுக்கு வேதாரண்யேஸ்வரர், வேதவனநாதர் என்ற பெயர்களும் வைக்கப்பட்டுள்ளன. தாயாருக்கு வேதநாயகி, வேதவல்லி போன்ற பெயர்களும் சூடப்பட்டுள்ளன. சென்ற நூற்றாண்டில், குறிப்பாக 1950களுக்கு முன்னர் பிறந்த அப்பகுதி மக்களில் பலருக்கு வேதையா, வேதநாயகி, வேதவல்லி போன்ற பெயர்கள் சூட்டப்படும் வழக்கம் உண்டு.  

வேதத்திற்கும் சிவனுக்கும் யாதொரு தொடர்பு இல்லை! வேதத்தில் சிவன் பற்றிய குறிப்புகளும் கிடையாது!  இருப்பினும், மறைக்கும்  சிவனுக்கும் இல்லாத ஒரு தொடர்பைப் பொருட்படுத்தாமல் அங்கு ஒரு சிவன் கோயிலும், அந்த ஊருக்கு அதன் அடிப்படையில் ஒரு பெயரும் வைக்கப்பட்டுத் தாவும் மரை  சிவன் கரத்திற்குத் தாவிவிட்டது.  திருஆலவாய் உடையார் அருளிய பதினொன்றாம் திருமுறையின் பாடல் கூறுவது போல "சிவனும் தா மரைசேர் பாணியார்"  (தாவுகின்ற மான் பொருந்திய கையை உடையவர்  — பதினொன்றாம் திருமுறை, பாடல்: 78) ஆகிவிட்டார்.  மரைக்காட்டுப் பகுதியில் மரையூர் என்றொரு ஊரும் உண்டு. மயிலாடுதுறைக்கு தெற்கே (மரையூர் - புவியிடக் குறிப்பு: 11.069, 79.624) உள்ள அந்த ஊரும் இன்று மறையூர் என்றுதான் குறிப்பிடப்படுகிறது.

மான்களின் பெயர்களின் மீது ஒரு மீளாய்வு:
பன்னிரண்டாம் திருமுறையான சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணத்தில்  (3. இலை மலிந்த சருக்கம், 11. கண்ணப்ப நாயனார் புராணம்) இடம் பெறும் பாடல்கள் இரண்டு கீழே கொடுக்கப்படுகிறது.  இலக்கியங்களில் மான்களுக்குப் பல பெயர்கள் உள்ளன என நாம் எண்ணினாலும் ஒவ்வொரு பெயரும் ஒரு மான் இனத்தைக் குறிப்பன என்பதை இப்பாடல்கள் தெளிவாக்கும்.

          அங்கண் மலைத் தடம் சாரல் புனங்கள் எங்கும்
          அடல் ஏனம், புலி, கரடி, கடமை, ஆமா,
          வெங் கண் மரை, கலையொடு, மான், முதலாய் உள்ள
          மிருகங்கள் மிக நெருங்கி மீதூர் காலை  (பாடல்: 693)

பொருள்:
அழகிய மலைப் புனங்கள் எங்கும்
வலிய காட்டுப்பன்றியும், புலி, கரடி, கடமான், காட்டுப்பசு,
மரை, கலை, மான் முதலாகிய விலங்குகள் சென்று அழிக்கத் தொடங்கியபோது

மற்றொரு பாடல் ...
          ஊன் அமுது கல்லை யுடன் வைத்து, 'இது முன்னையின் நன்றால்;
          ஏனமொடு,  மான், கலைகள், மரை, கடமை இவை இற்றில்
          ஆன உறுப்பு இறைச்சி அமுது அடியேனும் சுவை கண்டேன்  (பாடல்: 799)

பொருள்:
ஊன் உணவை கலத்துடன்  முன் வைத்து, இது முன்னர் படைத்த உணவிலும் சிறந்த உணவு,
பன்றியிறைச்சியோடு,  மான், கலை, மரை, கடமான்  என்ற விலங்குகளில் தேர்ந்து எடுத்த  இறைச்சி சமைக்கப்பட்டுள்ளது,
நானும் சுவைத்துப் பார்த்தேன்.

இந்த வரிகள் மூலம் மானின் இனவகைகள் பாடல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன என்பதும் மான் என்பது பொதுவான பெயராகக் கொடுக்கப்படவில்லை என்பதும் தெளிவாகிறது.  இனம் என்ற கருத்துக்குச் சான்றாகக் கீழ் வரும் பாடல் வரியைக் காட்டலாம்.
          மரை இனம் ஆரும் முன்றில் புல் வேய் குரம்பை நல்லோள் ஊரே (குறுந்தொகை - பாடல்: 235)

முடிவுரை:
மான்குறித்து இலக்கியம் குறிப்பிடுவதைத் தெளிவாகப் புரிந்து கொள்வதே ஒரு சவாலாக அமைந்துவிடும் நிலை காலப்போக்கில் உருவாகி உள்ளது புரிகிறது.  
கடுமான் (விரைந்து செல்லும்), கலிமான்(எழுச்சியையுடைய), வயமான்(வலிமையையுடைய), வன்மான்(வன்மையுடைய), நன்மான்(பெண்விலங்கு), வருடை மான்(மலையாடு) என்ற வகையில்;
பண்புத் தொகையாகவோ அல்லது அடைமொழியாகவோ ஏதேனும்  முன்னொட்டு கொடுக்கப்பட்டு மான் எனக் குறிக்கப்படும் விலங்கு  மானாக இருக்கவேண்டிய தேவையும் இலக்கியத்தில் இல்லை. பாடல் சொல்லும் கருத்திற்கேற்ப அது குதிரை, யானை, புலி, சிங்கம் போன்ற வேறு ஏதேனும் ஒரு விலங்கைக் குறிக்கக் கூடும்.  
அத்துடன்;  அம்மான், எம்மான், பெம்மான், பெருமான் போன்ற சொற்களும், அதே சாயலில் அமையும் அதியமான், நெடுமான், ஓய்மான், மலையமான், நத்தமான்,சுருதிமான், சேரமான் போன்ற மான் என்று முடியும்  சொற்களும் அவை  எந்த மான் இனத்தையும் குறிக்கவில்லை என்பதைத்  தமிழறிந்தவர் அறிவர்.  

மானின் வளர்ச்சிப் பருவத்தையும் பாலினத்தையும் குறிக்கும் வகையில் அறியப்படும் சொற்கள்:
மடமான் (ஆண்/பெண் மான்,  இச்சொல் பொது), இரலை (ஆண் மான்),  விடை (ஆண் மான்), ஏறு (ஆண் மான்), பிணை (பெண் மான்),  உழை (பெண் மான்), மறி (மான் குட்டி), நவ்வி (இளமான்). ஆண் மான்கள்  கொம்புகள்  கொண்டவை. சில இனங்களில்  பெண் மானுக்கும் கொம்புகள்  உள்ளன.

இவ்வாறாக மான் குறித்துப் பொருள் அறிதலுக்குப் பிறகு;
திரி மருப்பு இரலையொடு மட மான் உகள (முல்லைப்பாட்டு - வரி 99)
அறு கோட்டு இரலையொடு மான் பிணை உகளவும் - (பட்டினப்பாலை - வரி 245)
என்ற பாடல் வரிகளைப் படிக்கும் பொழுது,
திரி மருப்பு இரலையொடு மட மான் உகள என்றால் - திருகிய கொம்புகளைக் கொண்ட ஆண் மரை மானுடன் பெண்மான் உகள (தாவித் தாவிச்  செல்ல)  என்றும்,
அறு கோட்டு இரலையொடு மான் பிணை உகளவும் என்றால் - அறல்பட்ட தோற்றம் கொண்ட, அல்லது  கவர்த்த/பிரிந்த கிளை போன்ற கொம்புகளைக் கொண்ட ஆண் கலை மானுடன்  பெண்மான் உகள (தாவித் தாவிச் செல்ல)  என்றும் புரிந்து கொள்ள முடியும்.  
சான்று:
கலைமான் தலையின் முதன்முதல் கவர்த்த - (அகநானூறு 151 - வரி 7)
"அறுமருப்பு எழிற்கலை புலிப்பால் பட்டெனச் சிறு மறி தழீஇய தெறி நடை மடப்பிணை" (புறநானூறு  23 – வரி 18).

இலக்கியத்தை மீளாய்வு செய்கையில், பாடல் வரிகளில் மான் குறித்து இடம்பெறும் சொற்களை  ஆழ்ந்து நோக்குகையில் மான், கலை , மரை என யாவும் மான் இனத்தின் வெவ்வேறு இனங்களைக் குறிக்கும் பெயர்கள் என்பது தெளிவாகிறது.  
மரை (உறுதியான திருகிய கொம்புகள்  கொண்ட மான்/Blackbuck/Antilope cervicapra),  கலை (மெல்லிய, நீண்டு கிளைத்த கொம்புகளையுடைய மான்/Chital/Axis axis), கடமான் (Sambar/Rusa unicolor), ஆமான் (தோற்றத்தில் பசு போன்ற உருவைக் கொண்ட பெரிய மான், Boselaphus tragocamelus)  என்ற வேறுபாடு தெளிவாகிறது.  

காலப் போக்கில் கலைச்சொல் என்ற நிலையிலிருந்த சொற்கள் பொதுமைப்படுத்தப்படும் நிலையைக் காண்பது வழக்கமே. எடுத்துக்காட்டாக  அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல் என்ற பூவின் ஏழு நிலைகளையும்  இன்றைய நாளில் மலர் என்று மட்டுமே சொல்லும் நிலை வந்துள்ளது. அவ்வகையில் மான்களின் வெவ்வேறு இனங்களைக் குறிக்கும் சொற்கள், வளர்ச்சிப் பருவத்தைக் குறிக்கும் சொற்கள், பாலினத்தைக் குறிக்கும் சொற்கள் எல்லாவற்றையும் "மான்" என்ற ஒரே சொல்லின் கீழ் குறிப்பிடும் நிலை உருவாகிவிட்டது தெளிவாகிறது.



மேலதிகத் தகவல் பெற:
Blackbuck: https://biologydictionary.net/blackbuck/

மரை மான் குறித்த இலக்கியத் தரவுகளுக்கு, பார்க்க:  தமிழ் இலக்கியத் தொடரடைவு —  Concordance for Tamil Literature, முனைவர்.ப.பாண்டியராஜா
http://tamilconcordance.in/

Sangam Poems Translated by Vaidehi Herbert
https://sangamtranslationsbyvaidehi.com/
 
சங்க இலக்கியத்தில் விலங்கியல் - 6 - மான், பொன்.சரவணன்.
http://thiruththam.blogspot.com/2018/02/6.html

சிவன், முனைவர் கி.கந்தன். வேத காலத்தில் சிவன் இல்லை என்பதை வேத இலக்கியங்களின் வாயிலாக அறியமுடிகிறது.
https://www.tamilvu.org/tdb/titles_cont/sculpture/html/sivan.htm

_________________________________________________

தேமொழி

unread,
Jan 20, 2023, 7:10:04 PM1/20/23
to மின்தமிழ்
Maraikadu.jpeg
ref:  https://www.facebook.com/photo?fbid=10222018714924349&set=a.4635715978312
Nana Shaam Marina
மரை மான்கள் ஓடிடும்...
திரு’மரை’க்காடு!
````````````````````````````````````````````````````

jaisree knits

unread,
Jan 29, 2023, 9:45:56 PM1/29/23
to mint...@googlegroups.com
வணக்கம் 
தேர்ந்த தகவல்களின் தொகுப்பில் சிறப்பான எழுத்து  
நன்றி தேமொழி அக்காவுக்கு 
மானின் அடிப்படையில் ஊர் பெயர் என்கிற கருத்து ஏற்க இயலவில்லை 
மறைக்கும்  ஊர் பெயருக்கும்  தொடர்பில்லை என்று எழுதப்பட்டிருப்பது போல
மரைக்கும் ஊர் பெயருக்குமான  தொடர்பினையும் மேலும் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்
  

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/30a2d233-fb97-4efe-8734-4ecd2c24fe89n%40googlegroups.com.

தேமொழி

unread,
Jan 30, 2023, 3:23:31 AM1/30/23
to மின்தமிழ்
உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி தம்பி. 
Reply all
Reply to author
Forward
0 new messages