(சனாதனம் பொய்யும் மெய்யும்: 17- 19 – தொடர்ச்சி)
சனாதனம் பொய்யும் மெய்யும்: 20-21
நால்வகைச் சாதியிந் நாட்டில் நீர் நாட்டினீர்
மேல்வகை கீழ்வகை விளங்குவது ஒழுக்கால்
என்றும்
குலமும் ஒன்றே குடியும் ஒன்றே
இறப்பும் ஒன்றே பிறப்பும் ஒன்றே
என்றும்
கபிலர் அகவல் கூறுவது சனாதனத்திற்கு எதிர்ப்பாகத்தானே. எனவே, தொடர்ச்சியாகச் சனாதனம் இருப்பதாகப் பெருமை பேசுநர், தொடர்ச்சியாக அதற்கு எதிர்ப்பு இருப்பதையும் உணர்ந்து அடங்கி ஒடுங்க வேண்டும்.
பூணூல் அணிந்த பிராமணர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதற்குக் காவல் துறையும் நீதித்துறையும் ஊடகங்களுமே சான்றாகும். எனினும் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
காஞ்சிபுரம் குருக்கள் தேவநாதன் கோயில் கருவறையில் பல பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டதையும் காமக் களியாட்டங்களில் ஈடுபட்டதையும் உலகே அறியும். பூணூல் அணிந்ததால் ஒழுக்கமாக இருக்க அவர் மனச்சான்று வேலை செய்ய வில்லையே.
மற்றொன்றையும் சொல்லலாம். தன்னை உலகக் குரு எனச் சொல்லிக்கொண்ட பிராமணரில் ஒரு பிரிவின் தலைவர் செயேந்திரர் எவ்வளவு ஒழுக்கக் கேடாக நடந்து கொண்டார், இறையன்பர்களுடன் தகா உறவு கொண்டார், கொலைச்செயலில் ஈடுபட்டதாக அவரிடம் பணியாற்றிய மற்றொரு பிராமணரே வெளிப்படுத்தினார் என்பதை உலகம் மறக்க வில்லை. துறவு நிலை கொண்டதாகக் கூறிக் கொண்டாலும் காம உறவால் நாட்டை விட்டே வெளியேறிய அவருக்கு ஏன் அவர் அணிந்த பூணூல் நல்லறிவு புகட்ட வில்லை. எனவே இவையாவும் பிராமணர்கள் தங்களை உயர்த்திக் கொள்வதற்காகக் கட்டவிழ்த்து விட்ட கதைகளே!
கோவிலில் நடைபெற்ற மற்றொரு கொடுமையையும் நினைத்துப் பாருங்கள்: 10.01.2018 அன்று சம்மு-காசுமீர் மாநிலத்தின் கத்துவா நகரில் எட்டுஅகவைச் சிறுமி காணாமல் போயிருந்தாள். பின்னர், நாடோடி குருசார்/குச்சர்(Gurjar/Gujjar) சமூகத்தைச் சேர்ந்த இச்சிறுமியைக் கடத்திக் கோயில் ஒன்றில் கட்டி வைத்துப் போதை மருந்தைத் திணித்துப் பல நாள்களுக்கு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிக் கொன்றமை அறிந்து உலகே அதிர்ந்தது. (பெரும்பாலான ஊடகங்கள் சிறுமி எனக் குறிப்பிடாமல் பெண் என்றே குறிப்பிட்டுக் கொடுந்துயரின் வீச்சைக் குறைக்க முயன்றன.) கோயில் பணியாளர் சஞ்சி இராம், தீபக் கசூரியா, பர்வேசு குமார், ஆனந்து தத்தா, திலக்கு இராசு, சுரீந்தர் ஆகியோருடன் சேர்ந்தே இக்கொடுமையை அஞ்சாமல் புரிந்துள்ளார். கோயில் பணியாளர் சஞ்சி இராம் தன் மகன் விசாலுடன் இணைந்தே கற்பழித்துக் கொலைபுரிந்துள்ள கொடுமையும் அரங்கேறியுள்ளது.
கோயில் கொடியவர்களின் கூடாரமாக இருக்கக் கூடாது என்று கலைஞர் மு.கருணாநிதி பரசாக்தி மூலம் முழங்கச் செய்தார். உயர் குலத்தவராகக் கற்பிக்கப்படுவோர் கோயில்களைத் தங்களின் காமஇச்சைக்குக் களமாகக் கொள்ளும் கொடுமை குறையவில்லை. குற்றமிழைத்தவர்கள் அனைவரும் இந்துக்கள் என்பதால்(தாழ்ந்த செயல் புரிந்தோர் உயர்ந்தவர் எனச் சொல்லிக் கொள்வோர் என்பதால் அதைக் குறிப்பிடவில்லை.) அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்து ஏக்குசா மஞ்சு அமைப்பு கத்துவா நகரில் பேரணி நடத்தியது. இதில் சனாதன பாசக மாநில அமைச்சர்கள் சந்திர பிரகாசு கங்கா, இலால் சிங்கு ஆகியோர் பங்கேற்றனர். இவர்களுள் இலால்சிங்கு `1947-இல் சம்முவில் நிகழ்ந்த இசுலாமியர் படுகொலைகளை மறந்துவிடாதீர்கள்’ என்று மிரட்டிப்பேசியவர்).( இவர்களுள் மூவருக்கு வாணாள் சிறைத்தண்டனையும் மூவருக்கு 5 ஆண்டுச் சிறைத்தண்டனையும் மட்டும்தான் வழங்கப்பட்டன. மரணத்தண்டனையைத்தான் மக்கள் எதிர்பார்த்தனர்.)
இதற்காக, எல்லாப் பூணூல் அணிந்தவர்களும் ஒழுக்கக்கேடர்கள் என்று சொல்லவில்லை. ஆனால், பூணூல் அணிவதாலேயே ஒழுக்கமானவர் என்ற ஏமாற்று வேலையைப் புரிந்து கொள்ள வேண்டும். பிராமணர்களிலும் நல்லவர்கள் இருக்கின்றார்கள். ஆனால், அதற்குக் காரணம் பூணூல் அல்ல.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன், சனாதனம் பொய்யும் மெய்யும் பக். 41- 44