அண்ணா என்னுமோர் அற்புதம்

233 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 15, 2022, 1:21:19 AM9/15/22
to மின்தமிழ்

anna-art.jpg

அண்ணாவை வாசிக்கத்தொடங்கிய பிறகு, ஏற்பட்ட பிரமிப்பு என்பது விவரிக்க இயலாதது. இன்னமும் மக்களின் நலன் சார்ந்த, இனம், சமூகம், பண்பாடு, சமுதாயம், தலைமைப் பண்பு, பணிவு, எளிமை, தொலைநோக்குப் பார்வை, ஜனநாயகத்தன்மை, மொழி, கலை, எழுத்து, பொதுவாழ்வு, மேடைப்பேச்சு, சட்டமன்றம், நாடாளுமன்றம், விவாதம், கவியரங்கம், கலந்துரையாடல், சொற்பொழிவு, ஆட்சி நிர்வாகம், கட்சி, பத்திரிக்கை, பிரச்சாரம், வெற்றி தோல்விகள், கொள்கைத் தெளிவு, கொள்கை சார்ந்த நிலைப்பாடுகள், கனிவு, தம்பிகளுடனான உறவு மற்றும் அரவணைப்பு என்று திரும்பும் திசையெல்லாம் அண்ணா ஓர் பாடமாக இருக்கிறார். அவர் மீதான பிரமிப்பு இன்னும் குறைந்தபாடில்லை.
   
தமிழ்நாட்டை எப்படிக் கட்டமைக்க வேண்டும் என்று எண்ணினாரோ, அதற்கான அடித்தளத்தை எவராலும் பின்னர் ஆட்டுவிக்க இயலா வண்ணம், பலமாகப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார். இன்னும் அவர் போட்ட பாதைதான் தமிழ் 'நாட்டிற்கு' வெளிச்சம் காட்டிக் கொண்டிருக்கிற, காட்டப் போகிற பாதை.

ஒரு மனிதன் எந்த நிலையிலும் தடுமாறாமல், எப்பேர்ப்பட்ட இடர் வரினும் துவளாமல், எதிர்த் தரப்பினரையும் நேசித்து, மாண்பு காத்து, பொறாமையோ, வஞ்சமோ இல்லாமல், தனக்குப் பிறகான தலைமையை உறுதிபடுத்த தம்பிகளுக்கு நாளும் தான் கற்ற அறிவை அவர்களும் பெற வேண்டுமென எடுத்துரைத்து, " தம்பி வா! தலைமை ஏற்க வா" என்று ஒரு தலைவன் கூறினாரென்றால், எப்பேற்பட்ட மனம் வேண்டும் அதற்கு!!! அப்படி ஒரு பண்பட்ட மனம் அண்ணாவுக்கு! அவரின் பரந்துபட்ட படிப்பு அத்தகைய நிலைக்கு அவருக்கு உறுதுணையாக இருந்தது. அண்ணாவின் வாசிப்புப் பழக்கத்தைப் பற்றிப் படிக்கும் போதே எனக்கு பொறாமையாக இருக்கும். அத்தனை தூரம் புத்தகத்தை நேசித்திருக்கிறார். ஒரு நல்ல புத்தகத்தைப் போல சிறந்த நண்பனோ, உறவினரோ எனக்கு வேறு இல்லை என்றிருக்கிறார்.

தன்னுடைய தேடலில் சற்றும் மனதளராத, தன் அறிவின் மீதும், தன் கற்றலின் மீதும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட ஒருவனே மற்றவருக்கும் எந்த வித அழுக்காறும், கோபமும் இல்லாமல் தான் கற்றதை கற்பிப்பான். அவர்களும் மேலே வர வேண்டுமென எண்ணுவான். அத்தகையவனே தனக்குப் பின்னான நல்ல தலைமையை உருவாக்குவான். அண்ணா அந்த வகையில் ஆகச்சிறந்த தலைவர்.

அண்ணாவின் அனைத்துப் பண்புகளுக்கும் இங்கே ஆயிரம் உதாரணங்கள் கூற முடியும். அவர் எழுதிய எழுத்துக்கள் தான் நம் தமிழகத்தைப் பண்படுத்தின. பேசிய பேச்சு மக்களை அரசியல் மயமாக்கியது. அவர் எழுதிய நாடகங்களும், கதைகளும் சாமானியர்களின் நிலையை திரையில் பேசின. ஒரு நாடகத்தில் சிதம்பரத்திற்குச் சென்று நடராஜரை தரிசித்து விட்டு வந்த பக்தனின் வாயினாலேயே அந்த நடராஜரைக் 'கல்' என்று சொல்ல வைத்ததெல்லாம் அவரின் அறிவுக்கூர்மைக்கு சீரியதோர் எடுத்துக்காட்டு.

சாமானியர்களைக் கொண்டு கட்சி தொடங்கி, அவர்களை வைத்தே ஆட்சி அமைத்து, மிட்டா மிராசுகளாக அப்போதிருந்த காங்கிரஸ்காரர்களைத் தமிழக அரசியலில் இருந்து அப்புறப்படுத்தி, இன்று வரை, இன்னும் இரு நூற்றாண்டுகளுக்குத் தேவையான வளர்ச்சிக்கான  பாதையை அப்போதே வகுத்துக் கொடுத்து, அந்தப் பாதையில் தமிழகத்தையே நடைபோடச் செய்தார். அதிகார மட்டத்தில் அனைத்துச் சமூக மக்களையும் பங்குபெறச் செய்தது, ஆட்சியினருக்கும், மக்களுக்கும் இடையேயான தொடர்பினை வலுப்படுத்தியது, மக்கள் குரலை கட்சியினரின் மூலமாக அதிகாரிகளின் காதுக்குக் கொண்டு வருவது என்று அத்தனை நாட்களாக இருந்த அதிகார வர்க்கத்திற்கும், மக்களுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைத்தவர்.

தமிழ் மக்களின் மனங்களை அறிந்தவர். தமிழின் செழுமையை, அழகை உணர்த்தியவர். துணைத் தேசியம் எனும் பிராந்தியப் பார்வையை, இந்தியாவுக்கே எடுத்துரைத்த முன்னோடி. தமிழ்நாடு என்று தாய்க்குப் பெயர் வைத்த தனயன். ஒரு முழு ஜனநாயகவாதி. அண்ணா அரசியல் தளத்தில் அடியெடுத்து வைக்காமல் போயிருந்தால், பெரியாரின் சமூக சீர்திருத்தக் கருத்துகள் சட்டமாவதற்கு இன்னும் கூட காலம் பிடித்திருக்கலாம். ஆட்சி அதிகாரம் தான் நமக்கான உரிமையை மீட்டுத்தரும் என்றவர்.

பிரிவினை கேட்ட நாடுகளெல்லாம் ஆயுதத்தை ஏந்திப் போராடிய வேளையில், "ஏடா தம்பி! எடடா பேனா" என்று அறிவூட்டிய ஆசான். அறிவாயுதம் ஏந்தி வெற்றி பெறச் சொன்னவர். அதைச் செய்தும் காட்டியவர்.

"ஆரியம் ஆரியரிடம் மட்டும் இல்லை தம்பி! திராவிடரிடமும் அது புகுத்தப்பட்டிருக்கிறது. எனவே தம்பி, ஆரியத்தை அறிவுச்சுடர் கொண்டு கொளுத்த வேண்டுமேயொழிய, அக்ரகாரத்தில் தீ மூட்டுவதால் அல்ல" என்று பார்ப்பனியத்தை, ஆரியத்தை வரையறுத்துக் காட்டியவர். அனைவருக்குமான ஜனநாயத்தைத்தான் அண்ணா விரும்பினார். அவர் விருப்பம், தமிழன் யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல் சமத்துவத்துடன் வாழ வேண்டும் என்பதே! அண்ணாவை நெஞ்சில் ஏந்தி அவ்வழி நடப்போம்.

#பேரறிஞர்_அண்ணா
#வாழ்க_அண்ணா
#Anna114
#HBDAnna

https://www.facebook.com/dhans.sekar1
நன்றி - முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி.

தேமொழி

unread,
Sep 15, 2022, 1:25:09 AM9/15/22
to மின்தமிழ்

https://www.facebook.com/photo?fbid=5157829957565449&set=a.518455534836271


தன்மான வாழ்வில் ஒரு பொன்மனச் செம்மல்

anna-art.jpg
ஈராயிரம் ஆண்டுகள் விதைத்த இருட்டைப்
போராடி வீழ்த்திய ஈரோட்டுப் போர்வாள்!
அடுக்கு மொழிகளை அள்ளித் தெளிக்கும்
கிடுக்கிப் பிடியென கிழட்டுச் சிந்தனை!
நாவினில் இனிமை; நடத்தையில் வாய்மை;
கூவிலின்பம் தந்த கோடிமலர்க் கொட்டகை!
திகைத்து வீழ்ந்தன கொடும்படைக் கூட்டம்,
நகைப்பைச் சிந்தின நற்றமிழ்க் கண்கள்!
உலகத் தமிழர் உணர்வில், நெஞ்சில்
திலகமாய்த் திசையாய்த் திகழ்ந்தவர் அண்ணா!
தன்மான வாழ்வைத் தமிழருக் களித்த
பொன்மனச் செம்மல் புகழோடும் வாழ்கவே!

முனைவர் சிவ இளங்கோ புதுச்சேரி

தேமொழி

unread,
Sep 15, 2022, 1:40:37 AM9/15/22
to மின்தமிழ்


திராவிடன் ஸ்டாக்... திராவிடன் மாடல்!
————————————
தமிழக ஆட்சியில் அதிகப் பெரும்பான்மையுடன் அமர்ந்து தி.மு.க அரசு பொறுப்பேற்றுள்ளது.  மக்களின் மனவோட்டத்தின்படி திராவிட மாடல் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சும் செயல்பாடும் உள்ளது. .
திரவிடியன் ஸ்டாக்,  திரவிடியன் மாடல்,  அதன் அணுகுமுறை அதாவது திராவிடனுக்கே உரிய மரபு, கொள்கையைப் சற்று பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அச்சகம் 1938 - இல் வெளியி்ட்ட H.G.RAWLINSON  என்பவர் எழுதிய A CONCISE HISTORY OF  THE INDIAN PEOPLE   என்ற ஆங்கில வரலாற்று நூலில்  சொல்லப்பட்டிருக்கிறது திராவிடியன் ஸ்டாக் என்ற சொல்லாடல். பேரறிஞர் அண்ணா காஞ்சிபுரம்சட்டமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக நாடாளுமன்றத்துக்குச் செல்கிறார். அங்கு  ஏப்ரல் 1962- இல்  ஆற்றிய கன்னிப் பேச்சில்  “I BELONG TO DRAVIDIAN STOCK. I AM PROUD TO CALL MYSELF A DRAVIDIAN” என்றார்.அதாவது, ``நான் திராவிட இனத்தைச்  சார்ந்தவன், திராவிடன் என்று சொல்லிக்கொள்வதில் மிகுந்த பெருமை கொள்பவன்’’ என்று அவையில் உரையாற்றினார். திராவிடியன் ஸ்டாக் என்ற சொல்லாடலைப் பயன்படுத்தினார்.
anna-2.jpg
திராவிடம் என்று சொல்லுக்கு எதிர்வினையாக  சிலர் பேசி வருவது ஆரோக்கியமனது அல்ல. இந்த எதிர்வினக்கு கோட்பாட்டுரீதியாக தக்க பதில்கள் உள்ளன. இனம் என்று எடுத்துக் கொண்டால், உலகம் முழுவதும், தொடக்கத்தில் மரபினங்கள் இருந்தன. பிறகு அவை தேசிய இனங்களாகப்  பரிணாம வளர்ச்சி பெற்றன. இந்த அடிப்படையில் அவர்கள் வாழ்கின்ற பூமியை நிலத்தை அவர்களுடைய மரபுரீதியிலான மாநிலமாகவும் நாடாகவும்  அரசியல்ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. நம் பழைய மரபினத்தின் பெயர் ‘திராவிடர்’ என்பது. ஆனால் இன்று ‘திராவிடம்’ என்னும் சொல், மொழியை, இனத்தை, நாட்டைக் குறித்ததிலிருந்து விடுபட்டு, ஒரு கருத்தியலை, ஒரு சித்தாந்தத்தைக் குறிக்கும் சொல்லாக மாற்றம் பெற்றுள்ளது. இதற்கு ஆதிச்சநல்லூர், கீழடி என பல களங்கள் சாட்சியாகவும் நம்மிடையே இருக்கின்றன.  
ஆதிசங்கரர், காஷ்மீர் பண்டைய இலக்கியம் எனத் துவங்கி பக்தி இலக்கியங்கள், தாகூர், கால்டுவெல், ஜி.யு.போப்,சுந்தரனார் என வையாபுரி பிள்ளை வரை பலர் வழிமொழிந்ததுதான் திராவிடம்.  
திராவிடன் ஸ்டாக் என்பது தொன்மையான தமிழை தாய்மொழியாகக் கொண்ட  தமிழ்நாடு மட்டுமல்லாமல்,  தமிழிலிருந்து பிறந்த தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் இன மக்களின் கலாசாரமும் புவியியலும் ஒன்றோடொன்று பின்னி இணைந்ததாகும். ‘வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறது’ என்று சொன்ன அண்ணா, தமிழ் மக்களின் உரிமைகளையும் தனித்தன்மையையும் உரிமையோடு போற்றிப் பாதுகாக்க மாநில சுயாட்சியும் அவசியம் என தனது உயிலாக ‘காஞ்சி’ ஏட்டில் எழுதினார்.
மாநில சுயாட்சி என்பது, திராவிட இயக்கத்தின் குரல் மட்டுமல்ல, திலகர் பூர்ண சுயராஜ்ஜியம் என்று குறிப்பிட்டதிலிருந்தே அது  தொடங்குகிறது. காங்கிரஸின்  லக்னோ உடன்படிக்கை, மோதிலால் நேரு தலைமையிலான காங்கிரஸ் காரிய கமிட்டியின் அறிக்கை மற்றும் பல்வேறு குழுக்கள் மாகாண சுயராஜ்ஜியம் என்று கூறியுள்ளது. அதுவே மாநில சுயாட்சியாகும்.  இந்நிலையில் ‘காஞ்சி’ இதழின் தைத்திருநாள் சிறப்பு மலரில் மாநில சுயாட்சியைப் பற்றி விரிவான கட்டுரையை அண்ணா எழுதி வெளியிட்டார். இதை ஆங்கிலத்திலும் அண்ணா  எழுதியுள்ளார். இதுவே அவரின் இறுதி உயிலாகும்.
திராவிடம் என்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக, நலனுக்காக, உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பதே! இதன் அடிப்படையில் உருவானதே மாநில சுயாட்சி. அண்ணாவின் உயிலை நடைமுறைப்படுத்தும் வகையில் தலைவர் கலைஞர் மாநில சுயாட்சிக்காக ராஜமன்னார் குழுவை அமைத்து, அதன் அறிக்கையை 1974- இல் பெற்று, அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பிவைத்தார். மாநில சுயாட்சியை தலைவர் கலைஞர் முன்னெடுத்து சுவிட்சர்லாந்து போன்று மாநிலங்களுக்குத் தனிக்கொடி, முதல்வர்கள் அந்தந்த மாநிலத்தில் விடுதலை நாளான ஆகஸ்ட் 15- இல் கொடியேற்றும் உரிமை என்பதை முன்னெடுத்தார்.
இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றும் மாநிலத் தனித்தன்மையுடனும், மாநில சுயாட்சியுடனும் கூட்டாட்சித் தத்துவத்துக்கு ஏற்ற வகையில் செயல்பட வேண்டும் என்பதே அண்ணாவின் நோக்கமாக இருந்தது. இதைத்தான் ஆங்கிலத்தில் `DIRAVIDIAN STOCK’ என்று குறிப்பிடுவர். அதுமட்டுமல்ல, சமூகநீதி, தமிழ்மொழி பாதுகாப்பு, இங்குள்ள தமிழர்கள் மற்றும் உலகு எங்கும் உள்ள தமிழர்களின் பாதுகாப்பு, தமிழ் கலாசாரம், தமிழக உரிமைகள் ஆகியவற்றுக்கு தனித்தன்மையோடு  உரிமைக்குக் குரல் கொடுக்கக் கூடிய கொள்கை, கோட்பாடுகள், தத்துவங்களே திராவிடன் ஸ்டாக் எனப் பொருள்படுகின்றது.
இதேபோன்று `DIRAVIDIAN MODEL’  பற்றியும், தமிழகப்பொருளாதாரம் வளர்ந்த விதம்  பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, இன்றைய  அரசியல் களத்தில் அவசியமானதாகிறது. அதாவது இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் சமச்சீரான வாய்ப்பை வழங்க வேண்டும். ஒரு மாநிலத்தைச் செழிப்புறச் செய்து, வேறு ஒரு மாநிலத்தை மாற்றாந்தாய்ப் போக்கில் இந்திய அரசு நினைப்பதை அறவே ஒழித்திட வேண்டும். அனைத்து  மாநிலங்களுக்கும் சமன்பாடான நிதியை ஒதுக்கி, இந்தியத் திருநாட்டின் அனைத்துப்  பகுதிகளும் சமச்சீரான வகையில் வளர்ந்திடுவதற்கான வழிமுறைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். மாநிலங்களிடையே பாகுபாடற்ற  நடைமுறைகளே உண்மையான  கூட்டாட்சிக்கும்  மாகாணங்களின்  வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
.
இந்திய அரசியல் சாசனம் உலகிலேயே அதிகப் பக்கங்களும் பிரிவுகளும் கொண்டது. இதுவரை சுமார் 110 திருத்தங்கள் 75 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன. இதில் 105 திருத்தங்கள் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்றுள்ளன. இவற்றில் சில, திருத்த மசோதாக்களாக நிலுவையில் உள்ளன.  ஏறத்தாழ 125 முறை பிரிவு 356 - ஐப் பயன்படுத்தி மாநில அரசுகள் கலைக்கப்பட்டுள்ளன.
இந்திய அரசு தென் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியின் அளவு நிறைவாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், தி.மு.க ஆட்சிக் காலத்தில் இத்தனை தடங்கல்களையும் தடைகளையும் தாண்டி, தமிழகம் பொருளாதாரரீதியில் முன்னேற்றப் பாதையில் சென்று, முன்னோடி மாநிலமாக விளங்கிக்கொண்டிருக்கிறது என்றால், இதுதான் `திராவிட மாடல்’ என்று தெளிவாகக் குறிப்பிடலாம். இதற்கு, தலைவர் கலைஞருடைய நிர்வாகத் திறமை மேலும் வலுவூட்டியது.
அதேசமயம், திமுக இந்திய ஒருமைப்பாட்டிற்கும், பாதுகாப்பிற்கும் முன்னோடியாகவும் திகழ்கிறது. சீனப் போர், பாகிஸ்தான் போர், வங்கதேசம் உதயம் காலத்தில் திமுக போர் நிதியாகவும், மத்திய அரசுக்கு ஆதரவாகவும் இருந்தது. தலைவர் கலைஞர் இந்திய குடியரசுத் தலைவர்கள் மற்றும் பிரதமர்களை சரியாகத் தேர்வு செய்தும் உள்ளார். தமிழகம் மற்றும் புதுவையைப் பொருத்தவரையில் மக்களவை மற்றும் மாநிலங்களையில் மொத்தம் 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் நமது மாநிலப் பிரச்சனைகள் குறித்து குரல் எழுப்ப வேண்டும். அதன் மூலம் அம்மாநிலங்களுக்குத் தேவையான நிதி, திட்ட செயல்பாடுகளை  மேம்படுத்த வேண்டும். உதாரணமாக, நதிநீர் பிரச்சனையை எடுத்துக்கொண்டால், காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என்று மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம். மறுக்கவில்லை. இவை உயிர்நாடியான பிரதான பிரச்சனைகள்தாம். ஆனால், தமிழகத்தின் 20க்கு மேல் இன்னும் நதிநீர் பிரச்சனைகளைப் பேசத் தவறிவிட்டோம்.
இப்படி தமிழகத்தின் தொன்மைமிக்கப் பிரச்சனைகளை எல்லாம் தெளிவாக நாடாளுமன்றத்தில் விளக்கி விரைவான தெளிவு பெறும் வகையில் சபையில் உரையாட வேண்டும். அதுதான் திரவிடியன் ஸ்டாக்.
இந்தியாவில் மக்களுக்குத் தேவையான வாழ்வாதாரத் திட்டங்களை திராவிட ஆட்சியாளர்களே அதிகம் கொண்டுவந்துள்ளனர்.
சமீபத்தில் விவாதத்தில் எழுந்த இலவசங்கள் வேறு, நலத்திட்டங்கள் வேறு.  பொதுவாக கல்வி, மருத்துவம், விவசாயம் போன்ற துறைகளில் வளர்ச்சிக்காக இலவசமாக வழங்கினால் அது ஃபிரீபீஸ் என்று சொல்லக் கூடிய இலவசங்கள் என்று சொல்ல முடியாது. இது நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் நல அரசு வழங்குகின்ற திட்டங்கள்தாம்.
இந்தியாவிலேயே முதன்முதலாக அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம், கை ரிக்சா ஒழிப்பு (மேற்குவங்கத்தில் இன்னும் கைரிக்சா உள்ளது), குடிசை மாற்று வாரியம், சமச்சீர் கல்வி, எல்லா கிராமங்களுக்கும் பாதுகாப்பான குடிநீர் 1974 - இலேயே முழுமைப்படுத்திவிட்டனர்.  மற்ற மாநிலங்களில் 2010 - இல்தான் முழுமையடைந்தது.பள்ளி மாணவர் இலவச உணவுத்திட்டம் போன்ற பல முன்னோடியான மாதிரியாக பல திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டுகின்றன. இதுவே திராவிட மாடல்.
தமிழகத்து மக்களின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும் என்ற நிலையில் கொண்டு வருவதுதான் திராவிடியன் மாடல் என்பது. திராவிடியன் ஸ்டாக் என்பது நம் உரிமைகளை நாடே கேட்க உரக்க எடுத்துரைத்து, உரிமைகளைப் பெறுவது. அதாவது, உரிமைக்குக் குரல்கொடுப்போம்… உறவுக்குக் கை கொடுப்போம். திராவிடியன்  மாடல் என்பது  நம் வாழ்நிலையை உயர்த்திக் கொள்வதற்கான கடப்பாடுகள் என்ன, திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளும் வழிவகைகள் என்ன என்பதை ஆய்ந்தறிந்து கொள்வது.
தமிழக அரசில் ஏறத்தாழ 34 துறைகள் உள்ளன. இதில் சமூகநலத்துறை, புள்ளிவிவரத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, ஆதி திராவிடர் நலத்துறையிலிருந்து பெரிய வருமானங்கள் மாநில அரசுக்கு வருவதில்லை. மற்ற துறைகளிலிருந்துதான் தமிழக அரசு வருவாயை ஈட்ட வேண்டும். ஏற்கெனவே ஜிஎஸ்டி வகையிலும் தமிழகத்திற்கு வர வேண்டிய பங்கு வராமல் இருக்கின்றது.
திராவிடன் ஸ்டாக், திராவிட மாடல் ஆகியவற்றை கொள்கைரீதியாக, அறிவியல்ரீதியாக பலவகையாகப் பகுக்கலாம். இதுதான்  அண்ணா வகுத்துத் தந்து, தலைவர் கலைஞர் முன்னெடுத்த திராவிடத் தத்துவம்

திராவிடம் வழியே மக்கள் நலப் புரட்சியை ஏற்படுத்துவோம்...
 
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
 
-அரசியலார்.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்   இன்று,15-9-2022  ‘’திராவிடன் ஸ்டாக்... திராவிடன் மாடல்!’’ என்ற எனது சிறப்பு கட்டுரை இன்றைய தினமணியில்…..
#KSR post
15-9-2022.

anna-1.jpg

தேமொழி

unread,
Sep 15, 2022, 12:35:08 PM9/15/22
to மின்தமிழ்
source - https://www.facebook.com/photo/?fbid=10225187597529750&set=a.2709102159487


anna-2.jpg
அண்ணா இலக்கியவாதியா?

என் வாழ்க்கையில் முதன்முறையாக இறப்பொன்றில் கலந்து கொண்டது பேரறிஞர் அண்ணா அவர்களுடைய இறுதி ஊர்வலத்தில். மூன்றரை வயது. என் அத்தை தனது இடுப்பில் என்னைத் தூக்கிக் கொண்டு அந்த துயர ஊர்வலத்தில் கலந்து கொண்டதாகப் பலமுறை சொல்லிக் கேட்டிருக்கிறேன். மூளையில் பதிவாக்கிக் கொள்ள முடியாத வயது.

யாராவது கை பிள்ளையைத் தூக்கிக் கொண்டு போவார்களா? என் அத்தை கடிந்து கொள்ளப்பட்டதும் உண்டு. தம்பி மகனை விட அண்ணா முக்கியமானவராக உணரப்பட்டார்.

அண்ணா என்பது ஒருவருடைய பெயர் என்பதை நான் பல ஆண்டுகளுக்குப் பின்னால் தான் தெரிந்து கொண்டேன்.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது எங்கள் ஆசிரியர் ஒருவர் அண்ணாதுரை என்கிற பெயரைக் கிண்டல் அடிப்பார். அண்ணாவாம் அண்ணா? யாருக்கு அண்ணா? பெரிய வெள்ளைக்கார துரை என்று கேலி பேசுவார். என்னைக் கூட 'அது என்னடா ஒலி, எலி' ன்னு எரிச்சலுடன் கேட்பார்.

அண்ணா மீது அத்தகைய வெறுப்பு ஏன் உமிழப்பட்டது என்பதே என்னுடைய முதல் கேள்வியாக அமைந்தது.

அப்பா, பச்சையப்பன் கல்லூரியில் பொருளாதாரத்தில் எம் ஏ படித்தவர். அத்தகைய படிப்பைப் படிக்க, சற்றும் பொருந்தாத சூழலில் அவரது குடும்பம். இருந்தாலும் பெரும் கனவு கண்டு கொண்டு இருந்தார், படித்து விட வேண்டும் என. அண்ணா அவர்களும் பச்சையப்பன் கல்லூரியில் எம் ஏ படித்தவர்.

உன் அப்பா இன்றைக்கு எம் ஏ படித்திருக்கிறார் என்று சொன்னால் அதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தது 'அண்ணா' என்றார்.

அண்ணாவைப் போலவே முதுகலையில் பொருளியலில் படித்தோம், அதுவும் அதே பச்சையப்பன் கல்லூரியில் என்பதை வாழ்வில் பெருமிதமாகக் கொண்டவர்.

'உனக்கெல்லாம் படிப்பே வரல. நீ ஏண்டா இங்க வந்து என் உயிரை எடுக்குற. எங்கேயோ போய் மாடு மேய்க்க வேண்டியது தானே'.

அப்பாவுக்கு ஒரு பக்கம் பள்ளியில் இப்படி ஏச்சு.

இன்னொரு பக்கம்

'ஒழுங்கா கடையில் உட்கார்ந்து வேலை பார்க்கலாம் இல்ல'. இன்னொரு பக்கம் வீட்டில் அழுத்தம்.

மனமுடைந்து சில சமயங்களில் சைதாப்பேட்டை வழியாகச் செல்லும் ரயிலில் பாய்ந்து விடலாமா என்று கூட யோசித்தாராம் அப்பா.

சாமானியனையும் கல்வி அறிஞராக்கலாம் என இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அண்ணா அகத் தூண்டுதலை அளித்தார். என் அப்பா போன்றவர்களுக்கு அவர் ஏற்படுத்திய தாக்கம் கொஞ்சம் நஞ்சமல்ல.

கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை என்பதை உணர்த்தியவர்.

அண்ணாவின் எழுத்துக்களைப் படிக்கும் போது அவருடைய உரைகளை அறியும் போதும் வியப்பின் உச்சிக்குச் சென்று விட்டேன்.

அண்ணா எழுதிய காலம், அப்பொழுது எழுதிக் கொண்டிருந்தவர்கள் என்ன எழுதினார்கள், எதைப்பற்றி எழுதினார்கள், அவர்களால் இந்த சமூகத்தில் என்ன பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது என்பதை எல்லாம் மனதில் நிலை நிறுத்தி ஆராயத் தொடங்கினால் மட்டுமே அவருடைய எழுத்தாளுமையைப் புரிந்து கொள்ள முடியும்.

ரைட் சகோதரர்கள் முதல் முதலாகப் பறந்த விமானத்தை தற்போது வானில் பறக்கும் நவீன தலைமுறை விமானத்தோடு ஒப்பீடு செய்வது போலச் சிலர் அண்ணாவின் எழுத்தை ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் மட்டும், தங்கள் உயிரைப் பணயம் வைத்து, முயலாமல் இருந்தால், இன்றைக்கு நாம் அந்தத் தொழில்நுட்பத்தை விரைந்து பெற்றிருக்க முடியாது.

சமூகத்திலே நிலவுகின்ற பிரச்சினைகளை, மக்களின் அறிவையும் மானத்தையும் கேள்விக்குறியாக்கும் விஷயங்களைக் குறித்து எழுதாமல், அதைக் குறித்து கிஞ்சிற்றும் அக்கறை இல்லாமல் படைக்கப்படும் எந்த இலக்கியமும் உணர்ச்சிகளை உசுப்பி விடலாம். ஆனால், கால வெள்ளத்தில் கரைந்து போய்விடும்.

படைப்புலகில் அதிகமாகப் பேசப்படும் நாவல் லியோ டால்ஸ்டாயின் அனா கரீனினா. மேம்போக்கில் பார்த்தால், ஆண் பெண் இடையேயான கள்ள உறவைப் பற்றி எழுதப்பட்டதாகத் தோன்றும். சற்று ஆழமாகப் படித்தால் 19 ஆம் நூற்றாண்டில் இரஷ்யாவின் அரசியல் பொருளாதார சமூக அமைப்புகளை விளக்கும். மேலும் மேற்கிலிருந்து, அதாவது ஐரோப்பாவிலிருந்து பரவும் தொழில் நுட்பமும் அதனால் விவசாயத்தில் ஏற்படும் மாற்றங்களும் குறித்து விளக்கமாகப் பேசும். இன்னும் நுட்பமாக ஆராயும் போது சில கதாபாத்திரங்கள் வழியே டால்ஸ்டாய் அன்றைய அரசியலைச் சாடுவார்.

கட்டுரையாக எழுதினால், எழுத்தாளன் கைது செய்யப்படுவான். கொலை செய்யப்பட வாய்ப்பும் உண்டு. ஆனால் நாவலில் கதை மாந்தர்களின் வழியாகப் பேசும்போது தப்பித்துக் கொள்கிறான். அப்படித்தான் பல கால கட்டங்களில் பல எழுத்தாளர்கள் செய்தார்கள். அதனால்தான் இன்றைக்கும் அத்தகைய எழுத்து காலத்தைத் தாண்டி நிற்கிறது.

தன் எழுத்தின் காரணமாகச் சிறைக்குச் சென்ற ஒரு சில தமிழ் எழுத்தாளர்களில் அண்ணாவும் ஒருவர். உண்மையான இலக்கியவாதிக்கு இதைவிட அங்கீகாரம் வேறென்ன தேவை..

அண்ணாவின் எழுத்துக்கள் ஒரு பெரும் சமூகத்தைப் புரட்டிப் போட்டு விட்டது என்றால் மிகையாகாது. அதைத் தானே ஒரு எழுத்து செய்ய வேண்டும்.

அண்ணா - அண்ணாதுரை என்ற பெயரின் சுருக்கம் அல்ல. அறிவாற்றலின் பெருக்கத்திற்கு அடையாளம்.
---

தேமொழி

unread,
Sep 15, 2022, 12:58:35 PM9/15/22
to மின்தமிழ்
source  - https://www.facebook.com/Ezhilvanan.Arunachalam/posts/pfbid0aKAGvnXsGT2NcUS7fqEE3qrGvvkE7u4vTF2MjWLtZuKYZ9DPiVres43XsVVGdUFXl


👉🏾பேராசான் அறிஞர் அண்ணா - ஓர் வரலாறு📜
அண்ணாவின் 114 பிறந்தநாள் சிறப்பு கட்டுரை
ஐந்து நிமிட வாசிப்பு⏳ஆலடி எழில்வாணன்.

🥇வாசிப்பு - பேச்சு - எழுத்து மூன்றிலும் மூத்தவர்,
🎓தமிழக முதல்வர்களில் அதிகம் படித்தவர்,
🧑🏽‍💼இளைஞர்களை அரசியலுக்கு ஈர்த்தவர்,
💝தன்னலம் கருதாது தமிழின் நலம் காத்தவர்.
👉🏾காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை
Conjeevaram Natarajan Annadurai👉🏾

1909’ செப்டம்பர் 15ஆம் நாள் மேற்சொன்ன பெயருக்கு உரியவர் காஞ்சிபுரத்தின் எளிய நெசவாளர்🧵குடும்பத்தில் பிறந்தபோது பக்கத்துத் தெருவுக்குக்கூட அது செய்தியாக இல்லை. நடராஜன் - பங்காரு அம்மாள் இணையருக்கு மகனாக, மிக எளிய குடும்பத்தில் பிறந்த அண்ணா தமது சித்தி ராஜாமணி என்பவராலேயே👦🏻வளர்க்கப்பட்டார். 1969’ பிப்ரவரி 3ஆம் தேதி அண்ணா இறந்தபோது இறுதி ஊர்வலத்துக்காக சென்னையில் குவிந்தவர்கள் எண்ணிக்கை 1.5 கோடி👍🏾என்று மதிப்பிடப்பட்டது. இது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் பதிவானது. மாநிலத்தலைவர்🌏உலகத்தலைவரானார்.

யார் இந்த👉🏾அண்ணா?
சுயமரியாதை,
சமூக நீதி,
மாநில உரிமை,
மொழி உரிமை
தொடர்பான🧠சிந்தனையாளர், அந்த சிந்தனையை வெற்றிகரமாக அரசியல் படுத்தியவர். அப்படி அரசியல் படுத்துவதற்காக மேடை, பத்திரிக்கை, நாடகம், சினிமா, நூல்கள்📚என்று எல்லா ஊடகங்களையும் கையில் எடுத்து அதற்குப் புதிய தோற்றமும், உள்ளடக்கமும் தந்தவர். முதற்கட்டம், இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டம்📊எனத் தனது தம்பிகளைக் கட்டமைத்தார்.

காங்கிரசு அல்லாத கட்சி ஒன்றின் சார்பில் இந்தியாவில் முதலமைச்சரான👑இரண்டாவது தலைவர். தமிழ்நாட்டில் 1967 முதல் இடையறாமல் நடைபெறும் 55+ ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு அடித்தளம் இட்டவர். எல்லாவற்றுக்கும் மேலாக உலகில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு நிலப்பரப்புக்கு அதன் முகவரியாக விளங்கும் 'தமிழ்நாடு' என்ற பெயரை சூட்டியவர்👏🏽 அண்ணா. தங்களை ஒரு தனித்த தேசிய இனமாக உணரத் தொடங்கிய தமிழர்களின் அரசியல் அடித்தளத்தில் அசைக்கமுடியாத ஓர் அங்கீகாரமாகிவிட்டது இந்தப் பெயர்👉🏾 “அண்ணா”.

பச்சையப்பன் கல்லூரி🏛தந்த திருப்புமுனை!
காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த அண்ணா சென்னை பச்சையப்பன் கல்லூரியில்🏛இன்டர்மீடியேட் படிப்பை முடித்தார். அண்ணாவுக்கு இந்த பச்சையப்பன் கல்லூரி வாழ்க்கையே திருப்புமுனையை ஏற்படுத்தியது. அங்கே அவர் சந்தித்த ஆங்கிலப் பேராசிரியரும்👨🏻‍🏫நீதிக்கட்சியில் செயல்பட்டவருமான வரதராஜன்தான் அரசியலின் பக்கம் அண்ணாவின் கவனத்தைத்⤴️திருப்பியவர்.
அண்ணாவுக்கு மேற்கொண்டு பட்டப்படிப்பு படிக்க🤷🏻‍♂️முடியாத குடும்பச் சூழ்நிலை நிலவியது. பச்சையப்பன் கல்லூரி முதல்வராக இருந்த சின்னத்தம்பி பிள்ளை, அவரை பி.ஏ. ஆனர்ஸ் படிக்கும்படி📚 வலியுறுத்தி உதவியும் செய்தார். அண்ணா 1931ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. ஆனர்ஸ் படிப்பில் சேர்ந்தார். இதற்கு ஓராண்டு முன்பே 21 வயதில் அண்ணாவுக்கும், ராணி அம்மையாருக்கும் சம்பிரதாய முறைப்படி திருமணம்🤝நடந்தது.
கல்லூரியில் தவறாமல் வகுப்புகளுக்குச் செல்கிற அண்ணா தீவிரமான📖படிப்பாளி. நீண்ட நேரத்தை நூலகங்களில் செலவிடுகிறவர். கல்லூரிக் காலத்திலேயே தமிழ் மற்றும் ஆங்கிலப் பேச்சுப்போட்டிகளில்🏅 பங்கேற்றவர். கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த அண்ணா 1931ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர் பேரவையின் பொதுச் செயலாளராகத் தேர்வு🗳செய்யப்பட்டார். படித்து முடித்தவுடன் காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தராக 6 மாதம் பணி செய்தார். பிறகு சென்னை கோவிந்தப்ப நாயக்கன் நடுநிலைப்பள்ளியில் 👨🏻‍🏫தமிழாசிரியராக சிறிது காலம் பணியாற்றினார்.

நீதிக்கட்சியில்⚖️அண்ணா!
பிராமணர் அல்லாதார் அரசியல் இயக்கமாக இருந்த நீதிக்கட்சி⚖️செயல்பாடுகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டார் அண்ணா, அது நீதிக்கட்சி தன்னுடைய செல்வாக்கை இழந்துகொண்டிருந்த காலம். ஆதி திராவிடர்கள் உள்ளிட்ட பிராமணர் அல்லாதார் நலனுக்கான👍🏾திட்டங்களை நீதிக்கட்சி அரசுகள் செயல்படுத்தியிருந்தன. அரசுப் பணிகளில் பிராமணர் அல்லாதவர்களை அமர்த்துவது, கல்வியைப் பரவலாக்குவது ஆகியவற்றில் அவர்கள் கவனம் செலுத்தினர். ஆனால், நீதிக்கட்சி தலைவர்கள் பலர் நிலவுடைமையாளர்கள், பிரிட்டிஷ் அரசின் பதவி, பட்டங்களைத்🕵🏻‍♂️ தாங்கியவர்கள், இது அவர்களை எளிய மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தியது. அண்ணாவின் நீதிக்கட்சி தொடர்பு அவருக்கு ராஜாக்களோடும், பெரும் பணக்காரர்களோடும், கனவான்களோடும் பழகும்🤝வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.

பெரியாரோடு🔎சேர்ந்த அண்ணா!
சாமானியர்களைப் பற்றிய கவலைகளோடு சமூகப் பாகுபாடுகளை அகற்றப் பாடுபட்டுவந்த, அலங்காரங்கள் இல்லாமல் கடும் மொழியில் பேசிவிடக்கூடிய🔎 பெரியார் ஈ.வெ.ராமசாமியை அண்ணா தலைவராகத் தேர்ந்தெடுத்தார்.
1935ஆம் ஆண்டு திருப்பூரில் நடந்த செங்குந்த இளைஞர் மாநாட்டில் பெரியாரை முதன்முதலாக சந்தித்தார்🤝அண்ணா. அப்போது நடந்த உரையாடலை, 1949ஆம் ஆண்டு நடந்த திமுக🌅தொடக்க விழாவில் அண்ணா இப்படி நினைவு கூர்ந்தார்:
"பெரியார் என்னைப் பார்த்து, என்ன செய்கிறாய்? என்று கேட்டார். “படிக்கிறேன், பரீட்சை எழுதியிருக்கிறேன்” என்றேன். "உத்தியோகம் பார்க்கப் போகிறாயா?" என்று கேட்டார். “இல்லை, உத்தியோகம் விருப்பமில்லை, பொது வாழ்வில் ஈடுபட விருப்பம்” என்று பதில் அளித்தேன். அன்று முதல் அவர் என் தலைவர் ஆனார்; நான் அவருக்கு சுவீகாரப் புத்திரன்🔥ஆகிவிட்டேன்".
1937ஆம் ஆண்டு ஈரோடு சென்ற அண்ணா அங்கு பெரியாரின் குடியரசு📰மற்றும் விடுதலை நாளிதழ்களில் துணை ஆசிரியராக 60 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 28. இளைஞரான அண்ணாவின் திறமையைக் கண்டு வியந்த பெரியார், அதே ஆண்டு துறையூரில் நடந்த சுயமரியாதை இயக்க மாநாட்டைத் தலைமையேற்று👑நடத்தும் பொறுப்பை அண்ணாவுக்கு அளித்தார்.

கம்ப ராமாயணம், பெரிய புராணம்🔥எதிர்ப்பு!
கம்ப ராமாயணம், பெரிய புராணம் ஆகிய நூல்கள் திராவிடர்கள்🖤மீது 'ஆரியர்கள்' ஆதிக்கம் செலுத்த வழி செய்வதாகவும் மற்றும் அவை அறிவுக்குப் புறம்பாக இருப்பதாகவும் பெரியாரும், அண்ணாவும் தீவிரமாகப் பிரச்சாரம்📣செய்தனர். இவர்களின் கருத்துகளால் ஏராளமான இளைஞர்கள் ஈர்க்கப்பட்டனர். கம்ப ராமாயணம், பெரிய புராணம் என்ற இரண்டு நூல்களையும் தீயிட்டுக்🔥கொளுத்தவேண்டும் என்று அண்ணா வாதிட்டார்.
இந்தக் கருத்தை எதிர்த்த🚫தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகிய இருவரோடும் 1943ஆம் ஆண்டு அண்ணா தனித்தனியாக நேருக்கு நேர் விவாதத்தில்🎙ஈடுபட்டார். இரண்டு தரப்பும் மிகவும் மரியாதையான முறையில் நாகரிகமாக தங்கள் கருத்துகளை முன்வைத்து வாதிட்டன. இந்த விவாதம் 'தீ 🔥பரவட்டும்' என்ற பெயரில் நூலாக வெளியாகி பிரபலம் அடைந்தது.
மொழி நடை, அழகிய சொற்கள் ஆகியவற்றைத் தேடுகிறவர்கள்🔍 கம்ப ராமாயணம், திருவாசகம் ஆகியவற்றைப் படிக்கலாம் என்று கூறிய அண்ணா “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு”👏🏽என்றார். எதிரிகளின் நேர்மறைப் பண்பை ஏற்கவேண்டும் என்று சொல்வதற்கு அண்ணாவின் இந்த வாசகம் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. மாற்றுக் கருத்துடையவரையும் ஈர்க்கும்🧲அண்ணாவின் சொல்லாடல் சிறப்பு.

பெரியாருடன்💔முரண்பாடு!
திராவிடர்🏴கழகத்தினர் கட்டாயம் கருப்பு சட்டை அணியவேண்டும் என்று பெரியார் கொண்டு வந்த தீர்மானத்தை அண்ணா விரும்பவில்லை. இதனால், சுயமரியாதை இயக்கத்தினர் சமூகத்தில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று🤔 அண்ணா கருதினார். சில கூட்டங்களுக்கு அண்ணாவே வெள்ளை சட்டையில் வந்து பேசியது பெரியாருக்கு எரிச்சலூட்டியது. அண்ணாவின் புகழ் காரணமாக அவர் புறக்கணிக்கப்பட முடியாதவராக இருந்தார். எதையும் வலுவாக ஆனால், நாசூக்காகப் பேசும்🗣அண்ணாவின் திறமை காரணமாக மாற்றுக் கருத்து உடையவர்களையும் கவரும் ஆற்றல் அவருக்கு இருந்தது. இப்படி பல விடயங்களில் கொஞ்சம் கொஞ்சமாக பெரியார் - அண்ணா இடையே விரிசல்💔 அதிகமானது.
இந்நிலையில் 70 வயதைக் கடந்த பெரியார் தன்னைவிட சுமார் 40 வயது குறைந்தவரான மணியம்மையை💍திருமணம் செய்ய முடிவெடுத்தது திராவிடர் கழகத்துக்குள் பெரும் புயலைக் கிளப்பியது. இது கட்சிக்கு அவப்பெயரைக் கொண்டுவரும் என்று விமர்சனம் எழுந்தது. இது வெறும் திருமணம் மட்டுமல்ல, பெரியார்🔎தனக்குப் பிறகு தனது மனைவியை தலைவராக்கப் பார்க்கிறார் என்ற விமர்சனமும் வந்தது. இந்நிலையில் அதிருப்தியாளர்கள் கூடி, 1949’ செப்டம்பர் 17ஆம் தேதி வட சென்னை ராபின்சன் பூங்காவில்🖤திராவிட முன்னேற்றக் கழகத்தை❤️துவக்கினர். அண்ணா அதன் பொதுச் செயலாளர் ஆனார். பெரியார் இந்தப் புதிய கட்சியை கடுமையாக விமர்சித்தார்.

🖤திராவிட முன்னேற்றக் கழகம்❤️
முதலில் திராவிடர் கழகத்தைப் போலவே🗳தேர்தல் அரசியலில் ஈடுபடாத இயக்கமாகவே திமுக இருந்தது. பிறகு 1957ஆம் ஆண்டு நடந்த இரண்டாவது பொதுத் தேர்தலில் பங்கேற்று 15 எம்.எல்.ஏ.க்களை வென்றது. காஞ்சிபுரத்தில் அண்ணா வெற்றி பெற்றார். இரண்டு எம்.பி.க்களும் வென்றனர்.
1962ஆம் ஆண்டு நடந்த அடுத்த தேர்தலில் திமுக 50 தொகுதிகளை வென்றது. ஆனால், அண்ணா தோல்வி👎🏾அடைந்தார். இதையடுத்து திமுக எம்.எல்.ஏ.க்களால் நாடாளுமன்ற மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்ற அவையில் அண்ணாவின்🗣பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததோடு மட்டுமல்லாது பல மாநிலத் தலைவர்களுக்கு நம்பிக்கையளித்தது.

🎥திரைப்படங்கள்!
1948ஆம் ஆண்டு ‘நல்ல தம்பி’ 🎞படத்துக்கு வசனகர்த்தாவாக அண்ணா திரைத்துறையில் நுழைந்தபோது அது திராவிட இயக்கத்துக்கும், திரைத்துறைக்குமே முக்கியமான திருப்பு முனையாக, பண்பாட்டு மாற்றமாக இருந்தது என்கிறார்📽திரைப்படம் குறித்து முனைவர் பட்டம் பெற்ற தமிழ் பேராசிரியருமான இரா.முருகன். "நல்ல தம்பிக்கு அண்ணா வசனம் எழுதியிருந்தாலும், 1949ஆம் ஆண்டு அண்ணாவின் கதை - வசனத்துடன்✍🏽 வெளியான ‘வேலைக்காரி’ படம்தான் உண்மையில் திரைத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. தெய்வீகமான🕉, காவியமான பெயர்களைத் தாங்கியே படங்கள் வந்துகொண்டிருந்த நிலையில் ‘வேலைக்காரி’ என்ற பெயரே அந்தக்காலத் திரைத்துறையில் 🖤புரட்சிகரமானது" என்கிறார் பேராசிரியர் முருகன்.

ஆட்சிக்கு🗳வந்தது எப்படி?
திராவிட நாடு🏴கோரிக்கை கைவிடப்பட்டாலும் அந்தக் கோரிக்கைக்கான காரணம் அப்படியே இருப்பதாகத் தெரிவித்தார்👉🏾அண்ணா. திராவிட நாடு கோரிக்கை, மாநில சுயாட்சிக் கோரிக்கையாக மாற்றம் பெற்றது. மாநிலங்களுக்குக் கூடுதல் உரிமை💪🏾 வேண்டும் என்று வாதிட்டார் அண்ணா. "மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி" என்பது அண்ணாவின்👏🏽புகழ் பெற்ற முழக்கம்.
1965ஆம் ஆண்டு நடந்த இந்தி📛எதிர்ப்புப் போராட்டத்தில் அண்ணா தலைமையிலான திமுக தீவிரமாக ஈடுபட்டது. போராட்டம் வன்முறையாக மாறியபோது அண்ணா👉🏾போராட்டத்தை நிறுத்தினாலும்கூட அந்தப் போராட்டம் திமுக ஆட்சிக்கு வருவதற்கான உந்து விசையாக மாறியது. அத்துடன் விலைவாசி உயர்வு📈போன்ற வாழ்வாதாரப் பிரச்சினைகள் பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரசு ஆட்சிக்கு எதிராக அதிருப்தி🤦🏻‍♂️அலையை உருவாக்கியிருந்தன.
ராஜாஜி தலைமையிலான சுதந்திரா கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன்🤝கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட திமுக பெரும் வெற்றி பெற்றது. 1967’ மார்ச் 6ஆம் தேதி அண்ணா👑முதல்வரானார். அண்ணாவும், அமைச்சர்களும் இறைவனின் பெயரால் பதவி ஏற்காமல் 'உளமார' 💗உறுதி கூறி பதவி ஏற்றனர். வெற்றி பெற்ற பிறகு, 18 ஆண்டு காலப் பிரிவுக்குப் பின் பெரியாரை🔎சென்று பார்த்தார் அண்ணா. தங்கள் தேர்தல் வெற்றியை பெரியாருக்கு சமர்ப்பிப்பதாகவும் அவர் கூறினார். அதன் பிறகு திமுக மற்றும் அண்ணா மீதான பகையை விட்டார்🙏🏽பெரியார்.

அண்ணாவின்👉🏾ஆட்சியில்
சென்னை மாகாணத்துக்கு🙏🏽 ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியது மற்றும் புரோகிதர்கள் இல்லாமல் நடக்கும் சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் சட்டம் நிறைவேற்றியது அவரது குறுகிய கால ஆட்சியின் மிகப்பெரும் சாதனைகள். தமிழ்நாட்டில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடத்தியது அண்ணாவின் மற்றொரு🏆சாதனை. இதையடுத்து தமிழ்நாடு அரசின் கொள்கையாக இருமொழிக் கொள்கையையும் அண்ணா கொண்டுவந்தார். சிக்கன💰நடவடிக்கையாக அமைச்சர்களின் ஊதியம் பாதியாகக் குறைக்கப்பட்டது. அண்ணா சென்னை நுங்கம்பாக்கத்தில் தமது எளிமையான🏠வீட்டிலேயே வாழ்ந்தார்.

அண்ணாவின்👉🏾இறுதி காலம்
1968 ஏப்ரல் மாதம் அமெரிக்காவின்🇺🇸யேல் பல்கலைக்கழகத்துக்கு சென்று அங்கு உரையாற்றினார் அண்ணா. அதே ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகம் அண்ணாவுக்கு கௌரவ டாக்டர் 🎓பட்டம் அளித்தது. அதே ஆண்டு செப்டம்பரில் அண்ணாவுக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. சிகிச்சைக்காக🩺அண்ணா செப்டம்பர்’ 10ஆம் தேதி அமெரிக்காவுக்கு கிளம்பினார். அவரை நேரில் வந்து கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தார் பெரியார்.
சிகிச்சை முடிந்து அண்ணா சென்னை🛬 திரும்பிய பிறகும் அவரது உடல் நிலை மிகவும் பலவீனமாகவே இருந்தது. 1969’ சனவரி இறுதியில் அண்ணாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பிப்ரவரி’ 3ஆம் தேதி அதிகாலை 12.20க்கு அண்ணா⚰️ இறந்தார்.

தமிழும் அண்ணாவும்👉🏾
தற்காலத் தமிழ் மொழி மீது அண்ணா செலுத்திய தாக்கம்⚡️அளப்பரியது.
'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல' என்ற தொடரைப் பலரும் பழமொழி என்று கருதியிருக்கலாம். ஆனால், இது அண்ணாவின்👌🏾சொல்லாட்சி. 'உறுப்பினர்' என்ற சொல் தமிழுக்கு அண்ணாவின் கொடை. தமிழ் சமூகத்தின் புதிய தேவைகளுக்கு ஏற்ப தனித்தமிழ் சொற்களைப் படைத்து அதை மேடையில்🎤 பேசி, பிறகு பேச்சு மொழியாகவும் ஆக்கியது திராவிட இயக்கத்தின் சாதனை என்றால் அந்த சாதனைப் பயணத்தை தொடக்கியவர் 👉🏾அண்ணா.
பஞ்சாயத்து சமிதி🔁ஊராட்சி ஒன்றியம் ஆனதும், காரியக் கமிட்டி செயற்குழு ஆனதும், மந்திரி அமைச்சர் ஆனதும், அக்கிரசேனார் அவைத்தலைவர் ஆனதும், சட்டசபை சட்டப் பேரவை ஆனதும் அண்ணா தொடங்கிய பேச்சுமொழிப்புரட்சி🗣செய்த சில வினைகள்.

அண்ணாவின்👉🏾தமிழ் சொல்லாடல்களில் நான் ரசித்து வியந்த பத்து.
1.ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.
2.தன்னை வென்றவன் தரணியை வெல்வான்.
3.மாதமோ சித்திரை; மணியோ பத்தரை; உங்களைத் தழுவுவதோ நித்திரை;
மறக்காது இடுவீர் எமக்கு (திமுக) முத்திரை!” எழுந்த கரவொலியில் வானமே அதிர்ந்ததாம்!
4.கடமை, கண்ணியம், கட்டுப்பாடு.
5.விதியை நம்பி மதியை இழக்காதே!
6.நான் “தேங்காயும் உடைப்பதில்லை; பிள்ளையாரும் உடைப்பதில்லை” என்பதே அண்ணாவின் கொள்கையாக இருந்தது.
7.நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்;
இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
8.சட்டம் ஓர் இருட்டறை; வக்கீலின் வாதம் ஓர் விளக்கு; அப்பிரகாசமான விளக்கு எளியோர்க்குக் கிடைப்பதில்லை.”
9.“கத்தியைத் தீட்டாதே, புத்தியைத் தீட்டு!”
10.ஒரு சிறந்த புத்தகத்தைப் போல சிறந்த தோழனும் இல்லை.

எப்படி தமிழையும், தமிழ்நாட்டையும்🖤பிரித்துப் பார்க்க இயலாதோ அது போலத்தான் சுதந்திர இந்தியாவில் அண்ணாவும், தமிழக🙏🏽அரசியலும். தமிழக அரசியலை கிமு - கிபி போல் கால நிர்ணயம் செய்தால் அமு – அபி, அண்ணாவுக்கு முன், அண்ணாவுக்கு பின் என்பதே திராவிட📜இயக்க வரலாறு.
நான் போற்றி, வணங்கிப்🙏🏽பின்பற்றும் தலைவர்களில் முதலிடம் எனது பேராசான் அண்ணாவுக்கே. அவர் வாழ்ந்த காலத்தில் நான் வாழவில்லையே🤷🏻‍♂️என ஏங்க வைத்த ஆளுமை. “அவர் இன்னும் பல ஆண்டுகள் உடல்நலத்தோடு வாழ்ந்திருந்தால்…” இந்த அளப்பரிய கற்பனையை அவர் கற்றுத்தந்த பகுத்தறிவு🖤தடுக்கிறது, அண்ணா மீதான வியப்பு இன்றும் தொடர்கிறது.

அண்ணாவின் தொண்டன்
ஆலடி எழில்வாணன்.
நன்றி
பிபிசி தமிழ், அ.தா.பாலசுப்ரமணியன் கட்டுரை.
பிபிசி தமிழ், அகத்தியலிங்கம் சு.பொ, கட்டுரை
தமிழ் இந்து - மாபெரும் தமிழ் கனவு
anna-3.jpg
anna-4.jpg
anna-5.jpg
anna-6.jpg
anna-7.jpg

தேமொழி

unread,
Sep 15, 2022, 11:18:07 PM9/15/22
to மின்தமிழ்
302.jpg
திசைக் கூடல் - 302 [செப்டெம்பர் 15, 2022]
அறிஞர் அண்ணா: தமிழக அரசியல் வரலாற்றின் திருப்புமுனை!
 - வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
-----

Reply all
Reply to author
Forward
0 new messages