'பேஎய் அனையம் யாம்' எனும் உவமை

44 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Sep 20, 2021, 12:12:21 PM9/20/21
to mintamil

முன்னுரை 

'பேஎய் அனையம் யாம்' என்ற  ஐங்குறுநூறு 70ம் பாடலில் உள்ள உவமை இங்கு ஆய்வுப்பொருள் ஆகிறது. ஈன்று  அணிமை வாய்ந்த மனைவி கணவனோடு ஊடித்  தன்னைத் தானே பேய் போன்றவள் என்று ஒப்பிட்டுப் பேசுவதன் காரணம்  அறிந்து கொள்ள வேண்டியதாகிறது. பொ.வே.சோமசுந்தரனார் உரையில் அவ்வுவமையின் காரணமும் விளக்கமும் இல்லை. முனைவர் க.கைலாசபதி  புறநானூற்றுப்  பேய்மகளிரைப் பிறநாட்டு மாந்திரிகப் பெண்களுடன் ஒப்பிடுகிறார். மேற்குறிப்பிட்ட உவமையை அவரது  கட்டுரை தொட்டுக் காட்டவில்லை. எனவே ‘பேஎய்’ எனும் உவமைக்கு விளக்கம் காண வேண்டும். ஐங்.70 முதனிலைத் தரவாக அமைய; பிற  தொகை இலக்கியப் பாடற்செய்திகள், உரையாசிரியர் கூற்றுகள் ஆகியன இரண்டாம்நிலைத் தரவாக அமைய; விளக்கமுறை ஆய்வாகக் கட்டுரை உருவாகி உள்ளது.


உவமை இடம்பெறும் சூழல்   

மகப்பயந்த தலைவி புறத்தொழுகிய கணவனிடம்;

"பழனப் பன்மீன் அருந்த நாரை 

கழனி மருதின் சென்னிச் சேக்கு

மாநீர்ப் பொய்கை யாணர் ஊர 

தூயர் நறியர் நின்பெண்டிர் 

பேஎய் அனையம் யாம்சேய் பயந்தனமே" (ஐங்.70) 

என்கிறாள். 'நாரை பொதுநிலமாகிய பழனத்துப்  பலவகை மீன்களையும் தின்றுவிட்டுக்  கழனியில் உள்ள மருதமர உச்சியில் தங்கும். அத்தகு வளமிக்க   ஊரின் தலைவன் நீ; யாம்  மகப்பெற்று பேய் போல் ஆகி விட்டோம். நீ நாடும் பெண்டிர் தூயராய் நறுமணம் கொண்டவர்' எனப் பொருள்படுகிறது பாடல். 'உன்னிடம் மிக்க செல்வத்தைப் பெறும் பல பரத்தையரையும்  பொழுதெல்லாம் கூடி இருந்துவிட்டுக் குலமகளாகிய நான்  இல்லறம் நடத்தும் இம்மனைக்கு வருகிறாய் என்ற உள்ளுறை பொருந்தி உள்ளது. பொ.வே.சோமசுந்தரனாரின் உரையும் இவ்வாறே அமைகிறது (ஐங்குறுநூறு, ப.107-108). 


புனிறு நாற்றமும் நறுமணமும் 

புனிறு நாறும் தன்னை விடுத்து; மணமிகத் தம்மை அழகுபடுத்திக் கொள்ளும்  பிற பெண்டிரை நாடிச் சென்றான் எனும் முரண் குறிப்பாக அவளது புலவியில் புலப்படுகிறது. இயற்கையாகவே மகப்பெற்ற பெண்டிர்  மேனி ஒருவித வாடை பொருந்தி இருக்கும். குழந்தைக்குப் பாலூட்ட அவ்வாடை மிகைப்படும். தாய் அன்றாடம் மகவைப் பேணுவதால் அவளது உடையும், தோளும்; நெய்யும் குய்யும் ஆடி; மையோடு மாசுபட்டு இருக்கும். குழந்தைக்குப் பாலூட்டுவதால் புனிறு எனும் வாடை மிகுதி ஆகி தாய்சேய் இருவரையும் ஈன்று அணிமை வாய்ந்தவர் என அடையாளம் காட்டும்.

“நெய்யும் குய்யும் ஆடி மையொடு

மாசு பட்டன்றே கலிங்கமும் தோளும்

திதலை மென்முலைத் தீம்பால் பிலிற்றப்

புதல்வற் புல்லிப்புனிறு நாறும்மே” (நற்றிணை380)

என்ற பாடல் வரிசையாகக் காரணங்களை     அடுக்குகிறது. கணவன் பிற பெண்களை நாடத்  தனது மேனியின் ‘புனிறு’ நாற்றம் காரணமாகியது என்பதை உணர்ந்து தலைவி தன்னைப் பேய் போன்றவள் என்கிறாள்.    


‘பேஎய்’; சொற்பொருள் 

தொகையிலக்கியக் காலத்தில் ‘பேஎய்’ என்ற சொல் இன்று வழங்கும் பொருளைத் தரவில்லை. பாசுபதநெறி சார்ந்த பெண்டிர் கணவனை இழந்துவிடின்; சிற்றின்பம் துறந்து; நீற்றுப்பூச்சுடன் உலகாயத இன்பநிகழ்வுகளில் இருந்து விலகி; எஞ்சிய வாழ்வைக் கழித்ததால் தெய்வத்  தன்மை பொருந்தியோர் என்னும் கருத்தில் பேய்ப்பெண்டிர் என்று பெயர் பெற்றனர்.


புண்பட்டுக் குருதிசோர இறந்தவரின் உடலைத் தீண்டிச் சிவந்த கைகளால் கூந்தலை அலைத்து அழுத பெண்கள் பேஎய்ப்பெண்டிர் என்றே பெயர்   பெறுகின்றனர்.

“பொருதுஆண்டு ஒழிந்த மைந்தர் புண்தொட்டுக்

குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி

நிறங்கிளர் உருவிற் பேய்ப் பெண்டிர்” (புறம்.62)

ஆனவர் போரில் கணவனை இழந்து ஆறாத் துயருடன் தலையில் அடித்துக் கொண்டு அழுதோர் எனக் கொள்வதே பொருந்துகிறது. ஏனெனில்;

"பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் 

காடு முன்னினனே கட்காமுறுநன்

தொடிகழி மகளிரின் தொல்கவின்" (புறம்.238) 

வாடியதென; வெளிமான் இறந்து சுடுகாட்டில் ஈமச்சடங்கு நிகழ்ந்தபோது அவனது மகளிர் தொடிகழித்தமை, பேஎய்ஆயம் எனப் பெயர்பெற்றமை இரண்டும் ஒருங்கே பாடப்பட்டுள்ளன. 

சுடலைத்தீயே விளக்காகக் கணவனை இழந்து அழுத கண்ணீரால் தாம் பூசிய சுடலைச்சாம்பலாகிய வெண்ணீறு அழிந்த பெண்டிர் பேஎய்மகளிர் என அழைக்கப்படுவதைக்  காண்கிறோம்.

“ஈமவிளக்கிற் பேஎய் மகளிரொடு...

நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர்

என்புபடு சுடலை வெண்ணீறு அவிப்ப” (புறம்.356);

என அவரது தோற்றவருணனை   அமைகிறது. இச்சுடலைச் சாம்பலோடு தொடர்புடைய சமயம் பாசுபதம் ஆகும்.  


பாசுபத நடைமுறை  

  சைவசமயத்தின் பல பிரிவுகளில் பாசுபதம் காலத்தால் மூத்தது ஆகும். குடும்பத்து இன்பநிகழ்வுகளில்  இருந்து தம்மை விலக்கிக் கொள்ளும் பாசுபதத்தார் உடலில் வெண்ணீற்றுப் பூச்சினை உடையவராய்க் காட்சி அளிப்பர் (Pashupata Shaivism is the oldest of the major Shaivite Hindu schools.... To free themselves from worldly fetters Pashupatas are instructed to...  besmearing one's own body with ashes  Pashupata Shaivism) அவர் பிணங்களை எரித்த சாம்பலையும் தம் உடலெங்கும் பூசிக் கொண்டனர். அது சிற்றின்பத்தை நாடாது முழுமுதற் பொருளாகிய சிவத்துடன் தம்மை இணைத்துக்கொண்ட    அடையாளம்  எனக் கருதப்பட்டது.  (Vibhuthi also refers to ashes from the... cremation of bodies… wear ashes on their bodies as a symbol of renunciation, detachment, dispassion, and devotion to Lord Shiva Symbolism and Significance of Vibhuthi in Hinduism) எனவே  தெய்வத்தன்மை பொருந்தியோர் என்ற பொருளுடன் ‘பேய்ப்பெண்டிர்’ எனும் தொடர் அக்காலத்தில் வழங்கியமை  தெரிகிறது. ஐங்குறுநூற்றுத்  தலைவி பாசுபதநெறி சார்ந்தவளாகவோ அன்றி அதை அறிந்தவளாகவோ இருக்க வேண்டும்.


இன்றும் நிலவும் வழக்காறு 

கணவனை இழந்த பெண்டிர் நிலையோடு தன் நிலையை ஒப்பிட்டுப் பேசுகிறாள் தலைவி. ஏனெனில் கணவனை இழந்த கைம்பெண்கள் தம்மை அலங்கரித்துக் கொள்ளவோ; பிறர்

தொடரும் 
சக 

kanmani tamil

unread,
Sep 20, 2021, 12:15:58 PM9/20/21
to mintamil

முன்னிலையில் வெளியே நடமாடவோ இயலாது; உணவுக் கட்டுப்பாடும் உண்டு. இன்றும் மகப்பெற்ற பெண்ணை ஒருமாத காலத்திற்குப் பிறர் முன் நடமாடவோ; உண்ணவோ;  பூச்சூட்டி அலங்கரித்துக் கொள்ளவோ அனுமதிக்க மாட்டார்கள். மீறினால் கண்பட்டு அப்பெண் நோயுறுவாள் என்று நம்புகின்றனர். அதுபோல்  கருவுயிர்த்த பின் மூன்றுமாத காலத்திற்கு  கணவனுடன் இன்பம் துய்க்க அனுமதியார். மீறினால் குழந்தைக்குச் சீர் தைக்கும்; அதாவது கடும் வயிற்றுப்போக்கு ஏற்படும் என்று இன்றுவரை நம்பிக்கை உள்ளது. தான் தனித்திருக்கப் புறத்தொழுகி வந்த கணவனின் நடவடிக்கையைத் தாங்கமாட்டாத தலைவி; 'கணவனை இழந்த பேஎய்ப்பெண் போலக் கூடலின்பம் இன்றி இருக்கிறேன்' எனக் குறைப்படுகிறாள்.


'பேஎ-'யும் ‘தெய்வத்தன்மையும் 

'பேஎ-' எனும் பெயரடை ‘தெய்வத்தன்மை பொருந்திய’ என்ற பொருளில்  வழங்கியது. கடல், ஆறு, மலை, நடுகல், வழிபடும் இடம், தெய்வத்திற்குரிய விழா அனைத்தும் ‘பேஎ-’ எனும் அடைமொழி பெற்றன.  

"பேஎநிலைஇய இரும்பௌவம்" (மதுரைக்காஞ்சி 76)

எனக் கடலின் தெய்வத்தன்மை போற்றப் பெறுகிறது. திருவிழா முடிந்த பின் தெய்வத்தை வழிபட்ட ஊர்மன்றம்;

"பெருவிழா கழிந்த பேஎமுதிர் மன்ற"ம் (பட்டினப் 

பாலை 255); ‘பேஎமுதிர் பொதியில்’ (அகம்.377) என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. கொல்லிப்பாவைக்கு வழிபாடு நிகழ்ந்த மலை;

"பேஎமுதிர் கொல்லி" (குறுந்தொகை 89) 

எனப்படுகிறது. வையையின் புதுவெள்ளத்தை மக்கள் பூத்தூவி வழிபட்டமையால் அப்பூக்கள் மிதந்து வந்த ஆறு; 

"தாமம் தலைபுனை பேஎநீர் வையை" (பரிபாடல் 7)

ஆயிற்று. வீரமரணம் அடைந்து மேனிலை உலகம் சென்றோரின்  நடுகல்லை  மக்கள்  வழிபட்டமையால்;

"பேஎமுதிர் நடுகல்" (அகம்.297)

ஆனது. தெய்வமாகிய முருகனுக்கு மக்கள் எடுத்த விழா; 

“பேஎவிழவு” (பரிபாடல் 5) 

ஆகும். இதனால் தலைவி கையாளும் 'பேஎய்' உவமை   'தெய்வத்தன்மை' என்ற பண்பு பொருந்தியது. 


முடிவுரை

    புனிறு நாறும் தன்னை விடுத்து; மணம் பொருந்திய பிற பெண்டிரை நாடியமை தலைவியின் புலவிக்குக்  காரணமாகிறது. தான் தனித்திருக்கப் புறத்தொழுகிய கணவனின் நடத்தையைத்  தாங்க இயலாது; 'கணவனை இழந்த பேஎய்ப்பெண் போலக்  கூடலின்பம் இன்றித்  தவிக்கிறேன்' எனக்  குறைப்படுகிறாள் தலைவி. பாசுபதம் சார்ந்த பெண்டிர் கணவனை இழப்பின்; புலன்  அடக்கத்துடன் நீறுபூசி; எஞ்சிய வாழ்வைக் கழிக்கும் தன்மையால் தெய்வத்தன்மை பொருந்தியோர் எனும் கருத்தில் பேய்ப்பெண்டிர் எனப் பெயர்  பெற்றனர். தொகையிலக்கியக் காலத்துத் தமிழகமக்களுள் பாசுபதம்  சார்ந்தோரும் இருந்தனர்.


துணைநூற் பட்டியல் 

1. அகநானூறு மணிமிடை பவளம், (2007). கழக வெளியீடு, சென்னை.

2. அகநானூறு நித்திலக்கோவை, (2008). கழக வெளியீடு, சென்னை.  

3. ஐங்குறுநூறு, (2009), கழக வெளியீடு. சென்னை.

4. குறுந்தொகை, (2007). கழக வெளியீடு, சென்னை. 

5. நற்றிணை, (2007). கழக வெளியீடு, சென்னை.

6. பத்துப்பாட்டு தொகுதி ll, (2008). கழக வெளியீடு, சென்னை.

7. பரிபாடல், (2007). கழக வெளியீடு, சென்னை. 

8. புறநானூறு பகுதி l, (2007). கழக வெளியீடு, சென்னை.

9. புறநானூறு பகுதி ll, (2007). கழக வெளியீடு, சென்னை.

10. பாசுபதம், தமிழ் விக்கிப்பீடியா, Pashupata Shaivism

11. Hindu Website.com, Symbolism and Significance of Vibhuthi in Hinduism

முற்றும்
சக
Reply all
Reply to author
Forward
0 new messages