இணைய உலகிற்கு முந்தைய சமூகம் மாய வலையில் சிக்காமல் முகத்தோடு முகம் பார்த்து, இனிது நோக்கி, இன்சொல் கூறி, மாட்சிமை பொருந்திய வாழ்வு வாழ்ந்து இல்லறத்தில் நல்லறம் பேணினர். கணவர் குறிப்பறிந்து மனைவியும் மனைவியின் மனம் அறிந்து கணவனும் எவ்வித குறையுமின்றி இரண்டறக் கலந்து இன்புற்று வாழ்ந்தனர். ஓர் ஆடையை இரண்டு துண்டாகக் கிழித்து இருவரும் கட்டிக் கொள்பவர்களாக வறுமையில் வாழ்ந்தாலும், கவலையுறாது ஒன்றிக் கலந்து ஒத்த அன்புடையவராய் இருவரும் வாழ்ந்ததால் அவர்களின் இல்வாழ்க்கை இன்புற்றது.
ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்,
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை; அரிதுஅரோ,
சென்ற இளமை தாற்கு! (பாலைக் கலி)
இளமை ஒவ்வொருநாளும் கழிந்து கொண்டே போவது. இழந்த இளமையை மீட்டெடுக்கும் சக்தி எதற்கும் கிடையாது. ஆதலால் இளமை இன்பத்தை தலைமக்கள் சரியாகப் பயன்படுத்தி வாழ்ந்த வாழ்க்கையை வரிகளாய் விட்டுச் சென்றுள்ளனர்.
படைப்புப் பல
படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப் பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறு கை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்,
நெய்யுடை அடிசில் மெய் பட
விதிர்த்தும், (புறநானூறு 188)
மயக்குறு மக்களைப் பெற்று மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்துள்ளனர்.
இப்படி, நெருக்கமாகவும், உறவுகளுக்கிடையே ஊடாட்டமும், ஊக்கமான, கனிவான சொற்களும் வாழ்வியலோடு பின்னப்பட்டு உறவுகள் மலர்ந்தன;மகிழ்ந்தன.
காலமாற்றத்தை எதிர்கொண்ட மாந்தர் இணைய வலையில் சிக்குண்டு உறவுகளை ஒதுக்கிவிட்டு, எண்ம உலகில் மகிழ்வைத் தேடுகின்றனர். இணையர் விழாவிற்கான நாள் உறுதிசெய்யப்பட்டதுமே ஓர் ஆணும் பெண்ணும் இணைய உலகில் உலா வரத்தொடங்குகின்றனர். கைப்பேசி எண்ணைப் பரிமாரிக் கொண்டு மை பூசிய முகத்தோடு மணிக்கணக்காய் உரையாடுகின்றனர். அவ்வுரையாடல்கள் வாழ்க்கை சார்ந்ததாக இருப்பதில்லை; சமூக வலைதள மோகம் சார்ந்ததாகவே இருக்கின்றன. தடவும் தரவலும் கடாவும் விருப்பமும் திருமணத்திற்கு முன்பே பகிரப்படுகின்றன. விழா முடிந்தபின், தேக்குமரக் கட்டிலும் பகிரப்படுகிறது; தேனிலவு ஏற்பாடும் பகிரப்படுகிறது. ஊர் மக்களும் உறவினர்களும் ஒன்றுகூடி வியக்கும் வகையில் நடத்திய மணவிழா மறுவீடு வருமுன்பே முறிந்து போகின்றது.
பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பாண்மை, கூடிவாழும் பண்பு, கொடை கொடுக்கும் அன்பு, உச்சி மோந்து உபசரித்தல், பெரியோரைப் பேணல், முகம் பார்த்து மனம் விட்டுப் பேசுதல், ஒன்றாய் அடுத்து உண்ணல், நன்று பாராட்டல், குழந்தைகளோடு விளையாடிக் களித்தல் ஆகிய அனைத்தும் இணையத்தால் அழிந்து போகின்றன. அதில் பிரிவு என்பது செழித்து வளர்கின்றது. குடும்ப உறுப்பினர்கள் ஒரே வீட்டில் ஆங்காங்கே இருக்கின்றார்கள்; அந்நியர்களாய் இருக்கின்றார்கள். இவர்கள் உடலால் மட்டுமே வீட்டில் இருக்கிறார்கள். மனமானது மாய உலகில் மேய்ந்து கொண்டிருக்கின்றது.
தூரமாக உள்ளவற்றையெல்லாம் நெருக்கமாக்கிக் கொண்டு வாழும் நாம், அருகில் இருக்கும் நெருக்கமான உறவுகளையெல்லாம் தூரமாக்கிக் கொண்டிருக்கின்றோம். வளர்ச்சிப் பயன்பாடு வாழ்வு சிறப்பதற்கே, உறவுகளைப் பிரிப்பதற்கல்ல.
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.
▂ ▂ ▂
❖ யாழ்க்கோ ✍
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/7785ea62-8044-4f65-b67c-70895a9a0ba3n%40googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/CAH0WLg-JEqHjF0QfMGpwhpMFtZJ43bZ8yDObFLJeh6e8hbCEVQ%40mail.gmail.com.