செருப்பு

152 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 13, 2023, 11:44:01 PM9/13/23
to மின்தமிழ்
சங்க காலத்துத் தமிழ்நாட்டில் சனாதனம் இருந்ததா?
சங்க இலக்கியங்களுள் ஒன்றான பெரும்பாணாற்றுப்படை என்ற நூலில் ஒரு காட்சி.
ஒரு பெரும்பாணன் தன் குடும்பத்துடன் தன்னை ஆதரிக்கும் ஒரு வள்ளலையோ, அரசனையோ தேடிப் புறப்பட்டுச் செல்கிறான்.
வழியில் இன்னொரு பெரும்பாணன் அவனைப் பார்க்கிறான். அவன் தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனிடம் பரிசில் பெற்றுத் திரும்புகிறவன். அவன் இந்தக் குடும்பத்தைப் பார்த்து, நீங்களும் அவ்விடம் சென்றால் பரிசில் பெற்று வரலாம் என்று ஆற்றுப்படுத்துகின்றான்.
அவர்கள் செல்லவேண்டிய வழியையும், ஆங்காங்கே அவர்கள் காணும் காட்சிகளையும், அவர்களுக்குக் கிடைக்கும் உணவுகளையும் பற்றிக் கூறுவதே ஆற்றுப்படுத்தல்.
அப்படிக் கூறிவருகையில், அவர்கள் பார்ப்பனர்கள் வசிக்கும் இடத்திற்குச் சென்றால் அங்கு அவர்களுக்குக் கிடைக்கும் விருந்தோம்பல் பற்றியும் கூறுகிறான்.
இதோ அவன் கூறுவதைப் பாருங்கள்.
செழும் கன்று யாத்த சிறு தாள் பந்தர்
பைம்_சேறு மெழுகிய படிவ நன் நகர்
மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது
வளை வாய்க் கிள்ளை மறை விளி பயிற்றும் 300
மறை காப்பாளர் உறை பதி சேப்பின்
பெரு நல் வானத்து வட-வயின் விளங்கும்
சிறு_மீன் புரையும் கற்பின் நறு நுதல்
வளைக் கை மகடூஉ வயின் அறிந்து அட்ட
சுடர்க் கடை பறவைப் பெயர் படு வத்தம் 305
சேதா நறு மோர் வெண்ணெயின் மாதுளத்து
உருப்பு-உறு பசும் காய் போழொடு கறி கலந்து
கஞ்சக நறு முறி அளைஇப் பைம் துணர்
நெடு மரக் கொக்கின் நறு வடி விதிர்த்த
தகை மாண் காடியின் வகைபடப் பெறுகுவிர் (பெரும்பாணாற்றுப்படை 297 - 309)
இதன் உரை
கொழுத்த கன்றைக் கட்டின சிறிய கால்களையுடைய பந்தலினையும்,
பசிய சாணக் கரைசலால் மெழுகிய வழிபடும் தெய்வங்களையுடைய நன்றாகிய அகங்களையும்,
மனைகளில் தங்கும் கோழிகளுடன் நாயும் அருகே வராமல்(இருக்கும்),
வளைந்த வாயினையுடைய கிளிக்கு வேதத்தின் ஓசையைக் கற்பிக்கும் 300
வேதத்தைக் காக்கின்றோர் இருக்கின்ற ஊரிடத்தே தங்குவீராயின் -
பெரிய நல்ல விசும்பில் வடதிசைக்கண் நின்று விளங்கும்
சிறிய விண்மீனாகிய அருந்ததியை ஒக்கும் கற்பினையும், மணமுள்ள நெற்றியினையும்,
வளையலை அணிந்த கையினையும் உடைய பார்ப்பனி இடமறிந்து ஆக்கிய
ஞாயிறு பட்ட காலத்தே (மாலையில்), பறவையினது பெயரைப் பெற்ற கருடன் சம்பா என்னும் நெல்லின் சோற்றையும், 305
சிவலைப் பசுவின் நறிய மோரில் (கடைந்த), வெண்ணெயில் (வெந்த)மாதுளையின்
வெம்மையுற்ற பசிய காயின் வகிரோடு, மிளகுப்பொடி கலந்து,
கறிவேப்பிலை மரத்தின் நறிய இலை(யைக் கிள்ளிக்)கலக்கிவிட்டு, பசிய கொத்துக்களையுடைய
நெடிய மரமாகிய மாவின் நறிய வடுவினைத் துண்டாக்கிப்போட்ட,
ஊறவைத்தல் நன்கமைந்த ஊறுகாயோடும் வகை வகையாகப் பெறுவீர்
பல ஊர்களைக் கடந்து அழுக்கடைந்த உடைகளுடனும், புழுதி படர்ந்த மேனியுடனும் தான் அந்தப் பாணர் குடும்பம் சென்றுகொண்டிருக்கிறது என்பதை மனதில் கொள்ளுங்கள்.
அவர்களுக்கு மறை காப்பாளர் உறை பதியில் (அக்ரகாரம்) உள்ள, சிறு_மீன் புரையும் கற்பின் நறு நுதல் வளைக் கை மகடூஉ அளிக்கும் விருந்துபசாரத்தைப் பார்த்தீர்களா?
இதுதான் நம் வரலாறு. என்று நுழைந்தது இந்தச் சனாதனம்?

பெரும்பாணாற்றுப்படையும் சின்னமனூர் அக்ரகாரமும்
1960 மே மாதம். நான் B.Sc முதலாம் ஆண்டு முடித்திருந்தேன்.
நானும் என் அப்பாவும் தேனிமாவட்டம் சின்னமனூரில் ஒரு பரபரப்பான தெருவில் நடந்துபோய்க்கொண்டிருந்தோம்.
அப்போது நான் அஞ்சலகம் போகவேண்டும் என்று கூறினேன்.
அப்பா, “சுத்திப்போகணும். பரவாயில்ல. இப்படியே போகலாம்” என்று ஒரு தெரு வழியே கூட்டிக்கொண்டு போனார்.
அது மிக மிக அகலமான தெரு. ஆள் நடமாட்டமே இல்லை. தெரு ஓரத்தில் மரங்கள் இருந்தன. ஆனால் தெருவில் நல்ல வெயில்.
தெருவை ஒட்டி ஒவ்வொரு வீட்டிலும் திண்ணைகள். அவற்றுக்குப் பின்னார் உயரம் இல்லாத வாசல் கதவுகள் அமைந்த வீடுகள்.
நான் அப்போது ஹவாய் சப்பல்ஸ் எனப்படும் ரப்பர் செருப்பு அணிந்திருந்தேன். மெதுவான ரப்பரால் செய்யப்பட்ட அடிப்பகுதி. தலைகீழான V போன்ற பட்டை மூன்று இடங்களில் செறுகப்பட்டிருக்கும். காலில் மாட்டிக்கொண்டு நடந்தால் டப் டப் என்று சத்தம்போடும்.
அமைதியான அந்தச் சூழ்நிலையில் எனது டப் டப் சத்தத்தைக் கேட்டு அப்பா குனிந்து பார்த்தார். சிரித்தார்.
“என்னப்பா?” என்றேன்.
“நீ காலேஜ்ல படிக்கும்போது இப்படி நடந்து போற. நான் ஸ்கூல் படிக்கும்போது எப்படிப் போகணும் தெரியுமா?” என்றார்.
பின்னர் அவரே தொடர்ந்தார்.
“இது அக்ரகாரம். ஐயர்கள் மட்டுமே இங்க குடியிருக்க முடியும். இந்தப் பக்கம் யாரும் நடக்கக்கூடாது. ஏதாவது அவசரத்துக்கு நடக்கணும்னா, தலையில உருமா கட்டியிருக்கக்கூடாது. தோள்ல துண்டு போடக்கூடாது. எடுத்துக் கையில வச்சிருக்கணும். வேட்டிய மடிச்சுக் கட்டக் கூடாது. இறக்கி விட்டிருக்கணும். முக்கியமா, கால்ல செருப்புப் போட்டிருக்கக்கூடாது. கையில எடுத்து வச்சுக்கணும்”
”ஏன்? போட்டிட்டு நடந்தா?”
நான் கேட்டேன். அப்பா சொன்னார்.
”அங்கங்க திண்ணையில இருந்து சத்தம் வரும்.”
“என்ன சத்தம்?” நான் கேட்டேன்.
“டேய், யார்டா அவன் அக்ரகாரத்தில செருப்புப்போட்டு நடக்கிறவன்? - அப்படீன்னு”
“மீறி செருப்புப்போட்டு நடந்தா?” நான் கேட்டேன்.
“அப்படிச் செய்ய அன்னிக்கு யாருக்கும் தைரியம் இல்ல”
நீண்ட நாள்களுக்குப் பின்னர் நான் பெரும்பாணாற்றுப்படையின் அந்த அடிகளைப் படிக்கும்போது ஏனோ என் அப்பா சொன்னது எனக்கு நினைவுக்கு வந்தது.

ஒரு தன்னிலை விளக்கம்.
சனாதனத்தைப் பற்றி பல இடுகைகள் வந்தவண்ணம் இருக்கின்றன.
பொதுவாக மனிதருக்குள் ஏற்றத்தாழ்வினை அது போதிக்கிறது என்பது பலர் கூற்று.
அந்நிலையில் பெரும்பாணாற்றுப்படையில் ஒரு பார்ப்பன வீட்டில் சாதாரணப் பாணன் உபசரிக்கப்படும் அடிகளைக் கூறியிருந்தேன். சங்ககாலத் தமிழ்நாட்டில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்று குறிப்பிடத்தான் அதனைக் கூறினேன்.
ஆனால் அதே நேரத்தில் சின்னமனூர் நிகழ்ச்சியில் என் தந்தை கூறியதையும் நினைத்துப்பார்த்தேன். அப்படியிருந்த தமிழகம் இப்படி மாறிப்போனதைக் குறிப்பிட்டிருந்தேன்.
அது 1940-இல் நடந்ததை, 1960-இல் என் அப்பா கூறியது
அது உண்மை நிகழ்ச்சி. மறுக்கமுடியாதது.
ஆனால் இப்போது நிலைமை எவ்வளவோ மாறியிருக்கிறது என்பதுவும் உண்மை.
அதே ஏற்றத்தாழ்வு சமுதாயத்தில் வேறு பல இடங்களில் இன்னும் காணப்படுவதுவும் உண்மை.
மனிதருக்குள் ஏற்றத்தாழ்வு எங்கே இருந்தாலும், எந்த வடிவத்தில் இருந்தாலும் அதனை எதிர்ப்பவன் நான்.
எனக்குள் வெறுப்பு அரசியல் இல்லை.
நான் ஒரு தமிழ் ஆர்வலன்.
மனிதரை நேசிப்பவன் - அது யாராயிருந்தாலும்.

ப.பாண்டியராஜா
முனைவர் ப. பாண்டியராஜா

தேமொழி

unread,
Sep 13, 2023, 11:54:13 PM9/13/23
to மின்தமிழ்

"உடை மேட்டிமை" யும் ( Sartorial Superiority) "செருப்பு அரசியலும்"
-----------------------------------------------------------
இன்று முகநூலில் ஆறகழூர் வெங்கடேசன் பொன் அவர்களின் பதிவு ஒன்றைப் படித்தேன்.‌
இடைக்காலத் தமிழ்நாட்டில் கொங்குப் பகுதியில் செருப்பு அணிவது உள்ளிட்ட உரிமைகள் சில கைவினை வகுப்பினருக்கு‌ மறுக்கப்பட்டிருந்தை வெங்கடேசன் பின்வருமாறு பதிவு செய்கிறார்:
"ஈரோடு மாவட்டம்,பவானி வட்டம் அந்தியூரில் உள்ள செல்வீசுவரர் கோயிலில் மேற்கு சுவரில் உள்ள கல்வெட்டு இந்த தகவலை நமக்கு சொல்லுது.
கொங்கு நாட்டில் இருந்த கம்மாளர்கள்(பஞ்ச கம்மாளர்கள் எனப்படும் ஐந்து வகை ஆசாரியர்கள்) காலுக்கு செருப்பு போடவும்,வீட்டுக்கு காரை பூசவும், நன்மை,தீமைகளுக்கு இரட்டை சங்கு ஊதவும், பேரிகை கொட்டிக்கொள்ளவும் உரிமை இல்லாமல் இருந்திருக்காங்க.
கி.பி 1275 ஆம் ஆண்டு கொங்கு பாண்டியன் வீரபாண்டியன் என்ற மன்னன் இந்த தடைகளை நீக்கி அவங்களுக்கு உரிமை கொடுத்திருக்கார்."
( இது தொடர்பாக அவர் இணைத்திருக்கும் கல்வெட்டுச் சான்றை இப்பதிவுடன் இணைத்திருக்கிறேன்).

inscription 1.jpg
inscription 2.jpg
இதில் எனது கவனத்தை உடனடியாகக் கவர்ந்தது "மீட்டுத் தரப்பட்ட‌" செருப்புரிமை தான்!
ஏனெனில் சங்க இலக்கியங்களில் தேவைக்கு தக்கபடி செருப்பு அணிந்திருந்த சாமானியர்கள் பலரை நாம் சந்திக்கிறோம்.‌
காலில் செருப்பு அணிவது; அதிலும் எந்த வகையான செருப்பை அணிவது என்பது அன்றாட வாழ்வியல் தொடர்பான தேவை ஆகும்.‌
" வண்ணச் சீரடி மண்மகள் அறிந்திலள்" என்று "வெயிலுக்கு தெரியாம" வளர்க்கப்படுபவர்களுக்கு "காலணிகள்" ஆடை அணிகலன்களில் ஒன்றாக இருக்கலாம்.‌ ஆனால் காட்டிலும் மேட்டிலும் வெயிலில் இறங்கி வேலை பார்ப்பவர்களுக்கு செருப்பு ஒரு முக்கியத் தேவை!
முதலில் சங்க இலக்கியங்களில் செருப்பு அணிந்த சாமானியர்களைச் சந்திப்போம்.
அகநானூறு 129
-------------------------------
"கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர்
செருப்பு உடை அடியர் தெண் சுனை மண்டும் அரும் சுரம்" ( அகம் 129)
அடர்ந்த காட்டுவழியில் கொழுப்பான மாட்டுக்கறியைத் தின்ற‌‌, கூர்மையான ஆயுதம் ஏந்திய, கால்களில் செருப்பணிந்த மழவர் தங்களது தாகம் தணிக்க தெளிந்த சுனைநீரை வேண்டுமட்டும் குடிக்கிறார்கள்.
புறநானூறு: 257
-----------------------------
அவன் காட்டுப்பகுதியில் வசிக்கும் சாமானியன் தான்.‌ சொந்த ஊரை விட்டு அதிகம் எங்கும் போகாதவன்.‌ தன்னைச் சுற்றி "பாதுகாப்பாக இருக்கட்டும்" என்று காடுகளை வளைத்துப் போடாதவன். ஆனால், பகைவர்களைப் பொறுத்தவரையில் அவன் "செருப்புக்கு இடையே நுழைந்த சிறிய கல்லைப்" போன்றவன். திரண்ட கால்களையும், அழகிய வயிற்றையும், விரிந்து அகன்ற மார்பையும் உடையவன். குச்சுப்புல்லை வரிசையாக வைத்தது போல குறுந்தாடி வைத்தவன்; வில் ஏந்தியவன் என்று ஒருவனை காட்சிப்படுத்துகிறது சங்க இலக்கியம்.‌
செருப்புக்கு இடையே புகுந்த சிறிய கல் போன்று பகைவனுக்கு தொந்தரவு தரக்கூடியவன் என்று உவமை சொல்லுவதென்றால் செருப்பின் பயன்பாடு எவ்வளவு பரவலாக இருந்திருக்க வேண்டும் அப்போதே!
"செருப்பு இடை சிறுபரல் அன்னன் கணை கால் அம் வயிற்று அகன்ற மார்பின் பைம் கண் குச்சின் நிரைத்த குரூஉ மயிர் மோவாய் செவி இறந்து தாழ்தரும் கவுளன் வில்லொடு யார் கொலோ அளியன் தானே" ( புறம்: 257)
அகநானூறு 191
-----------------------------
உப்பு வணிகர்களை இப்படி வர்ணிக்கிறது அகநானூறு.
"தோல் புதை சிரற்று அடி கோல் உடை உமணர்" ( அகம். 191)
செருப்பு அணிந்து ஒலிக்கின்ற அடியினையும் எருதுகளை அடிக்கும் கோல்களையும் உடைய. உப்பு வணிகர்கள்.
தோல் செருப்புக்குள் புதைந்த பாதங்கள் நடக்கும் போது ஒலி எழுகிறது. ! அப்படி என்றால் அது " பூட்ஸ்" போன்ற‌ தோல் அணியாக இருக்குமோ என்று தோன்றுகிறது! உப்பளத்திலும் பயன்பட்டிருக்குமோ?
அகநானூறு: 368
------------------------------
"தொடு தோல் கானவன் சூடு உறு வியன் புலம்" (அகம்: 368)
காலில் செருப்பைத் தொடுத்துக் கட்டிய குறவன் செடிகொடிகளை வெட்டிச் சுட்டெரித்த அகன்ற கொல்லையில்...
இந்தப் பாடலில் காலில் தொடுத்துக் கட்டிய செருப்பு பேசப்படுகிறது. தோல்வாரோடு ( strap) கூடிய செருப்பு பற்றிய குறிப்போ என்று தோன்றுகிறது.
அகநானூறு 101
--------------------------------
சினத்தில் சிவந்த கண்களையுடைய மழவர் தீ மூட்டும் சிறிய கோல், வில், மத்துக்கட்டை ஆகியவற்றை கையில் எடுத்துச் செல்கிறார்கள் . நடக்கும் போது ஒலி எழுப்பும் செருப்பை அணிந்து இருக்கிறார்கள்.‌
"...... செங்கண் மழவர்.......
தீப்படு சிறு கோல் வில்லொடு பற்றி
நுரை தெரி மத்தம் கொளீஇ' நிரைப் புறத்து
அடி புதை தொடுதோல் பறைய ஏகி
கடி புலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர்" ( அகம் 101)
பதிற்றுப்பத்து 21
--------------------------------
சங்க இலக்கிய நிலப்பரப்பில் பூழியர் என்ற‌ மரபினர் ஆண்ட‌ பகுதியில் செருப்பு என்ற‌ பெயரில் ஒரு மலை இருந்தது! இது ஒரு தொன்மையான மலைப்பெயர்.‌ ஆனால் சங்க இலக்கியம் ஆவணப்பதிவு செய்யப்பட்ட காலத்திலேயே செருப்பு என்றால் காலில் அணியும் மிதியடி என்ற‌ சொற்பொருளாக்கம் நிலைபெற்று விட்டது. அதனால் "செருப்பு" என்ற மலைப்பெயர் குழப்பத்தை ஏற்படுத்திவிடக் கூடாதே என்ற அக்கறை சங்க இலக்கியத்திற்கு இருக்கிறது.‌ அதனால் செருப்பு என்ற மலையை "மிதிபடாத செருப்பு" என்று நயம்படக் கூறுகிறது.
மிதி அல் செருப்பின் பூழியர் கோவே ( பதி.21- 23)
மிதிக்கும் செருப்பு அல்லாத செருப்பு என்னும் மலையினையுடைய பூழியரின் அரசே!
செருப்பு அணிந்தால் கோபப்படும்
--------------------------------------------------------------
ஆதிக்கச் சாதியினர்
------------------------------------------
இவ்வாறு சாமானியர்கள் செருப்பு அணிந்த அன்றாட நிகழ்வுகளை ஆவணப்பதிவு செய்யும் சங்க இலக்கியம் ஒருபுறம். இன்னொருபுறம் இதே தமிழ்நாட்டில் செருப்பு அணியும் உரிமையை மீண்டும் வழங்கிய மன்னன் பற்றிய 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு.‌ இடையில் நடந்தது என்ன?
இன்னொருவர் நல்ல உடை உடுத்துவதை; தூய்மையாக இருப்பதை; செருப்பு அணிவதை; நல்ல உணவு உண்பதை வெறுப்புணர்வுடன் தடை செய்த வக்கிரத்தின் தொடக்கப்புள்ளி எது என்ற கேள்விக்கு " மனுதர்ம சாஸ்திரம்" ( மனுஸ்மிருதி) என்பது தான் ஒற்றை விடை. பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் மூடத்தனத்தை சமூகவியலாக்கிய சதியின் ஊற்றுக்கண்.
மகாராஷ்டிரத்தில் பேஷ்வாக்களின் ஆட்சிக்காலத்தில் சூத்திரர்கள் மீது; தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட சாதியக் கொடுமைகள் பற்றி " Social Staus of Dalits and Women: In the Light of Manusmriti" என்ற‌கட்டுரை ( IJCRT: Volume 6; Issue 4 October 2018) பதிவிடுகிறது.‌ ( இணையத்தில் படிக்கலாம்).‌ குடை பிடிக்கக் கூடாது; நகை அணியக்கூடாது; செருப்பு அணியக்கூடாது; நல்ல துணி, கிழியாத துணி அணியக்கூடாது என்ற தடைகளும் இந்தக் கொடுமைகளில் அடங்கும்.‌
மோஜ்டி ( Mojdi ) என்ற நுனியில் கூர்மையாக மேல் நோக்கி வளைந்த காலணி ( Shoes) அணிந்த 13 வயது தலித் சிறுவனை உயர்சாதியைச் சேர்ந்த நான்கு பேர் அடித்துத் துன்புறுத்திய சம்பவம் 2020 இல் குஜராத்தில் நடந்தது ( The Statesman, September 11, 2020).
"The changing fabric of Dalit life" என்ற தலைப்பில் Mint இதழில் Aswaq Masoodi எழுதிய ஒரு கட்டுரையை படிக்க நேர்ந்தது.‌ சிறந்த பதிவு. பரிந்துரைக்கிறேன்.‌
காலம் காலமாக உயர்சாதி ஆதிக்கத்தின் ஓர் ஆயுதமாக உடை மேட்டிமை ( Sartorial Superiority) எவ்வாறு கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது என்பதை இந்தக் கட்டுரை ஆராய்கிறது.
அண்ணல் அம்பேத்கார் நீல வண்ணத்தில் சூட் - கோட் சிவப்பு வண்ண "டை" அணிந்து; நேர்த்தியாக பின்னோக்கிச் சீவப்பட்ட சிகை; வானோக்கி உயர்ந்த வலதுகை ஒருவிரல்; அரசியல் சாசனத்தை இறுக்கிப்பிடித்த இடதுகை - நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான அம்பேத்கர் சிலைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள இந்த வடிவமைப்பு ஒரு அரசியலை முன் எடுக்கிறது; அது ஒரு சமூக அரசியல் எதிர்வினையின் குரல்; உடை உடுத்த விதிமுறை அமைத்த சாதியக் கொடுமையை மறுதலிக்கும் குறியீடு என்ற‌ கோணத்தில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. உண்மை தான்.
உடுத்தும் உடை; தலை சீவப்படும் விதம்; மிதியடி அணிய; சைக்கிள் ஓட்டிச் செல்ல தடை போன்ற அநீதிகளுக்கு இந்திய கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆளாகியுள்ளனர்.‌ தோள் சீலை போராட்டம்; "முலை வரி" போன்ற கொடுமைகளை காலம் இன்னும் மறக்கவில்லை.‌
பேராசிரியர் Emma Tarlo எழுதிய "Clothing Matters: Dress and Identity in India" என்ற நூலை வாங்கி வாசிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.
தான் என்ன மாதிரி உடை உடுத்த வேண்டும் என்று இன்னொருவன் தீர்மானிப்பான் என்பது போன்ற‌ அடக்குமுறைகள் ஏற்படுத்திய ஏற்படுத்தும் சமூக உளவியலின் ஆறாத காயங்களை மாறாத வடுக்களை எப்படி சரிசெய்யப் போகிறோம்?
காலம் மாறிவருகிறது.‌ ஆனால் இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம். 2001- 02 இல் 11 மாநிலங்களில் 565 கிராமங்களில் நடத்தப்பட்ட கள ஆய்வு இத்தகைய சாதிய அடக்குமுறை கொடுமைகள் பத்தில் ஒரு கிராமத்தில் இன்னும் தொடர்வதை வெட்ட வெளிச்சமாக்கியது. இந்த இருபது ஆண்டுகளில் நிலைமை மாறி இருக்கக்கூடும்.‌ ஆனால் முற்றிலும் ஒழிந்ததாக தோன்றவில்லை.‌
இறந்தவர் உடையை உடுத்த நிர்பந்தம் செய்த கர்நாடகா சம்பவம் ( 2017); லுங்கியை மடித்துக்கட்டி நடந்து சென்ற இளைஞரை அடித்து உதைத்த தமிழ்நாடு சம்பவம் ( 2015); வெள்ளைச் சட்டை அணிந்ததற்காக அடித்த ஹரியானா சம்பவம் ( 2012) ஜீன்ஸ் டீ சர்ட் அணிந்ததற்காக அடித்த ராஜஸ்தான் சம்பவம் ( 2007) என்று பல நிகழ்வுகளை கட்டுரையாளர் சுட்டிக்காட்டுகிறார்.
மீள்நினைவுகளில் நான். 1994- 98 காலகட்டத்தில் ஒன்றிய அரசுப்பணியில் பட்டியல் இன மக்கள் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் தென் மண்டல இயக்குநராக நான் சென்னையில் பணியாற்றிய போது "இரட்டை குவளை முறை" உள்ளிட்ட பல சாதிய கொடுமைகள் பற்றி கள விசாரணை மேற்கொண்டு அறிக்கைகளை சமர்ப்பித்த நினைவுகளில் மீண்டும் பயணிக்கிறேன்.
பள்ளிக்கூடங்களில் காலை உணவை சமைத்தது யார் என்ற கேள்வி பேசுபொருளாகும் காலகட்டம் இன்னும் தொடர்கிறது என்பது வேதனையாக இருக்கிறது. அந்த பெண் ஊழியரின் வேதனை/ அவமானம் என்னை வருத்துகிறது. வெட்கித் தலை குனிய வேண்டும் நாம்.
சங்க இலக்கியக் காட்சிகள் மனதில் நிழலாடுகின்றன. நமது வேர்கள் எவை விழுதுகள் எவை என்ற புரிதல் இல்லாவிட்டால் நாம் நமது குழப்பங்களில் இருந்து ஒருபோதும் மீளவே முடியாது.
சங்க இலக்கியங்களில் வறுமை இருந்தது; ஆனால் பகிர்தல் அறமும் பசிப்பிணி மருத்துவமும் முன்னிறுத்தப்பட்டது. வேற்றுமை தெரிந்த நாற்பால் இருந்தது; ஆனால் "அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்" என்ற ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் தெளிவும் இருந்தது. "இந்நான்கு அல்லது குடியும் இலவே" என்பதில் இணக்கம் தான் தெரிகிறது; வேர்களுக்கான வணக்கமும் விளங்குகிறது.
தீண்டாமைக் கொடுமைக்கான யாதொரு சான்றும் சங்க இலக்கியங்களில் இல்லை. கல்விப் பரவலாக்கம் இருந்தது. பெண்களுக்கு கல்வி மறுக்கப்படவே இல்லை.
அவ்வாறாயின் பிறப்பால் பேதம் கற்பித்து "செருப்பு அரசியல்" செய்யும் வெறுப்பு மனப்பாங்கை எங்கிருந்து கற்றோம்? "அணிநடை எருமை" என்றும் "அண்ணல் ஏறு" என்றும் நாம் பெருமையுடன் பாடிய எருமையின் மீது எமனை எப்போது யார் அமர வைத்தது? அதை நாம் எப்படி அனுமதித்தோம்?
சங்க இலக்கியம் கூறும் "தொடுதோலும்" "செருப்பும்" கல்வெட்டு குறிப்பிடும் "பாதரட்சையான" பரிதாப நிகழ்வு எப்போது நிகழ்ந்தது?
தொடர்ந்து பேசுவோம்.

ஆர்.பாலகிருஷ்ணன்
ஆர் பாலகிருஷ்ணன் இ ஆ ப
https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid0MZuMNpLcqSJQy6AiEW4uWYECghFVLDyeDhQPmPvMnvc7yqkfVkZZSRcmiupDaBtzl&id=100011737148867
Reply all
Reply to author
Forward
0 new messages