(தமிழ்நாட்டில்தான் சனாதனம் உருவாகியது என ஆளுநர் இர.நா.இரவி கூறியிருப்பது சரியா? – தொடர்ச்சி)
சனாதனம் பொய்யும் மெய்யும்: 10-13
10. “இராமர் அவதாரம் செய்து 17 இலட்சம் ஆண்டுகள் ஆகிறது” என்கிறாரே கோமடம் சுவாமிகள்.
ஆரியத்தின் வழக்கமான பொய்களுள் இதுவும் ஒன்று. படித்தவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் எனக் கருதி இதை நம்பும் தமிழறிஞர்களே இதன் அடிப்படையில் தவறான கால ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடுகிறார்கள். அப்படியிருக்கப் பாமரர்கள் இவற்றை நம்பாமல் எப்படி இருப்பார்கள்.
வால்மீகி இராமாயணத்தில் பட்டமேற்பிற்காக அயோத்திக்குத் திரும்பும் இராமன், தம்பி இலக்குவனுக்குப் புத்தர் நினைவகங்களைக் காட்டுகிறான். பொதுவாகப் புதிய ஊருக்கு வருகையில் நினைவகங்களைப் பார்ப்பது வழக்கம். சென்னை வந்தால் அண்ணா நினைவகம், கலைஞர் நினைவகம், தில்லி வந்தால் காந்தி நினைவகம், நேரு நினைவகம் முதலியவற்றைப் பார்ப்பது இல்லையா? அதுபோல்தான். புத்தரின் காலம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு. அப்படியானால் இராமாயணக் காலம் அதற்கும் பிற்பட்டது என்பதுதானே உண்மை.
11. சனாதன தருமம் என்றால் இந்துமதமா?
“‘சனாதன தருமம்’ என்பது இந்து மதத்தைக் குறிப்பிடுவதற்கான வார்த்தை என அருத்தம்” என்று விக்கிபீடியா சொல்வதாக இரங்கராசு பாண்டே கூறுகிறாரே!
அவர் தன் விருப்பம்போல் மொழி பெயர்த்துள்ளார். ஆங்கிலத்தில் Santana Dharma – is an endonym used by Hindus to refer to Hinduism என உள்ளது. endonym என்றால் குழுப்பெயர். அஃதாவது, பிற குழுக்களால் வழங்கப்பட்ட பெயருக்கு மாறாகத், தங்களை அல்லது தங்களின் மொழியைக் குறிக்க ஒரு குழு அல்லது ஆட்களால் பயன்படுத்தப்படும் பெயர் என விளக்குவர். இதிலிருந்தே இதற்கு மாற்றுப் பெயர் மக்களிடையே உள்ளது எனவும் ஆரியர்கள் தங்கள் வசதிக்காகவும் நலனுக்காகவும் இவ்வாறு விளக்கமளிக்கிறார்கள் என்றும் புரிந்து கொள்ளலாம்.
மேலும், இதே விக்கிபீடியா, “இதனை ஆரிய மதம் என்றும் கூறுவர். ஏனென்றால் ஆரிய இன மக்களுக்காக வழங்கப்பட்ட மதமாகும்” என்பதை அவர் காணவில்லையா? கண்டிருப்பார். ஆனால் வசதியாக மறைத்துவிட்டார். ஆரிய இன மக்களுக்காக வழங்கப்பட்ட ஆரிய மதம் என்பது உலக மக்களுக்குப் பொதுவானதாக எப்படி இருக்க முடியும்? அடிப்படையிலேயே ஆரியத்திற்கு மாறாக உள்ளத் தமிழ்க்குடும்ப மொழியினர் அல்லது திராவிட மொழியினருக்கு எங்ஙனம் நன்மை பயப்பதாக இருக்கும்?
12. சனாதனத்தை உடைக்க முயல்வது நாட்டை பிளவுபடுத்தும் முயற்சியா?
சனாதனம் என்னும் அடிப்படையை உடைக்க முயல்வது நாட்டை பிளவுபடுத்தும் முயற்சி என்று ஆளுநர் இர.நா.இரவி குற்றம்சாட்டுகிறாரே!
உண்மையில் மக்களிடையே பிளவுகளையும் அவற்றின்வழி உயர்வுதாழ்வுகளையும் புகுத்தும் சனாதனம்தான் நாட்டைப் பிளவுபடுத்தி வருகிறது. இஃது இன்னும் தொடர்ந்தால் இந்தியா துண்டு துண்டாகச் சிதறும். பிறப்பு அடிப்படையிலும் தொழில் அடிப்படையிலும் உயர்வு தாழ்வைக் கற்பிக்காத தமிழ்நெறியே உயர்ந்த நெறி. உயர்ந்த நெறி இருக்கும் பொழுது கெடு நெறியை ஏன் போற்ற வேண்டும்?
13. வருணாசிரமம் அதிகாரப் படிநிலைதான். பாகுபாட்டைக் குறிப்பிடவில்லை என்பது சரியா?
வருணாசிரமம், இந்து மதத்தில் அதிகாரப்பூர்வமாக உள்ளது தான். மறுப்பதற்கோ, மறைப்பதற்கோ இல்லை. ஆனால், இதை ஓர் அதிகாரப் படிநிலையாகத் தான் இந்து மதம் சொல்லி இருக்கிறதே தவிர, பாகுபாடாகக் குறிப்பிடவில்லை. ஒரு கட்சியில், எப்படி, தலைவர், துணைத் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், மாவட்டத் தலைவர், நகரச் செயலாளர் என வேறு வேறு பதவிகளுக்கு, வேறு வேறு அதிகாரங்களும் உரிமைகளும் இருக்கின்றனவோ, அதுபோல நான்கு வருணங்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டன. – இவ்வாறு மேதை இரங்கராசு பாண்டே விளக்கியுள்ளது ஏற்புடைத்தாகுமா?
அறிவுபூர்வமாக விளக்குவதாக எண்ணி விடப்படும் பொய்மைக் கூற்று இது. கட்சியில் பல் வேறு நிலைகளில் பொறுப்புகள் உள்ளன. அவற்றுக்கேற்பப் பொறுப்பாளர்கள் உள்ளனர். ஆனால், இன்றைக்கு ஒரு பொறுப்பில் உள்ளவர் நாளைக்கு வேறு பொறுப்பிற்கு மாற்றப்படலாம் அல்லது தெரிவு செய்யப்படலாம். அல்லது நாளை எந்தப் பொறுப்பும் இல்லாமல் போகலாம். அதுபோல் இன்றைக்கு எந்தப் பொறுப்பிலும் இல்லாத ஒருவர் நாளைக்கு வேறு பொறுப்பிற்கு வரலாம். அஃது உயர் பொறுப்பாகவும் இருக்கலாம். ஆனால், இன்றைக்குப் பிராமணனாக உள்ளவன் நாளை சூத்திரனாக முடியுமா? அல்லது சூத்திரனனாக உள்ளவன் நாளை பிராமணனாக முடியுமா? சாதியை மாற்றிக் கொள்ள முடியுமா? இல்லையே! அப்புறம் ஏன் இந்த விதண்டை விளக்கம் – விதண்டா வாதம்? பிராமணனுக்குரிய தொழிலைப் பிறர் செய்யக்கூடாது என்றுதான் மனு தெளிவாகக் கூறுகிறதே! அப்படியானால் இந்தப் பொய் எதற்கு?
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன், சனாதனம் பொய்யும் மெய்யும் பக்.30-32